Author: தமிழ் மதுரம்
•10:31 AM
தொடர்பாடல் என்பது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் கருத்துக்களை மேம்படுத்தவும் பயன்படுகின்ற ஒரு வழியாகும். இன்றய நவீன் விஞ்ஞான திழில் நுட்ப உலகின் வளர்ச்சியினால் தொடர்பாடல் சாதனங்கள் பல்கிப் பெருகியுள்ளதோடு நவீன முறைகளிலும் இப்போது உலகெங்கும் கிடைக்கின்றது எனலாம்.




இலங்கைத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் எனும் பகுதி இப்பொழுது வசந்தம் வீசிக் கொண்டிருப்பதாக எல்லோராலும் சொல்லப்படுகிறது. இந்த யாழ்ப்பாணம் இருண்டு போயிருந்த காலப் பகுதியில் மின்சார வசதிகளை அனுபவியாமலும் ரெலிபோன் என்றால் என்னவென்று தொட்டுப் பார்த்தறியாமலும் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்றால் யாரும் மறுத்துரைக்க மாட்டீர்கள் தானே? இதற்கு எடுத்துக் காட்டாக 1990 களின் பிற் பகுதியினைக் குறிப்பிடலாம். நானும் என் சக வயதையொத்த நண்பர்களும், ஏன் 1987களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பிற்ந்த அனைவரும் புகையிரதத்தைப் புத்தகத்தில் மட்டுமே பார்த்து வாழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியது.





ரூ.... ரூ...நகுலன்.... ஓவர்.... ஓவர்...
ஓமோம்.. ரூ.. ரூ.... செல்வன் ஓவர் ஓவர்... என்று எங்கட அண்ணயாக்கள் வோக்கி ரோக்கி மூலம் கதைத்ததைப் பார்த்ததாக ஞாபகம். இதனை அடிப்படையாகக் கொண்டு எங்களூரில் கிடத்தற்கரிய பொருளாக இருந்த தீப் பெட்டியை வைத்து ரெலிபோன் உருவாக்கிப் பேசியவர்கள் நாங்கள். இரண்டு தீப் பெட்டிகளை எடுத்து அதன் உள்ளுடனாக இருக்கும் வெள்ளைப்பெட்டியினுள் செப்புக் கம்பி அல்லது வயரினுள் வருகின்ற மெல்லிய (தண்ணிக்) கம்பியினை எடுத்து அதனைத் தீப் பெட்டிக்குள் செருகி விட்டு ந்ண்பர்கள் இருவர் சேர்ந்து ஒருவர் ஒரு பக்கத்திலும் மற்றயவர் இன்னொரு பக்கத்திலுமாக நின்று கதைத்து எமது சிறு பராயத்தைக் கழித்த காலமதுவென்று கூறலாம்.







எங்களூரின் வசந்தமும் எங்களின் வசந்தகாலமும் இப்படித்தான் ஆரம்பமாகியது.பின்னர் அண்ணயாக்கள் அனைத்துலக தொலைத்தொடர்பு சேவையினை ஆரம்பித்தார்கள். அச் சேவையானது அன்றைய காலப் பகுதியில் எங்கள் மக்களின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப எட்டாக் கனியாகவே இருந்தது. ஒரு நிமிடத்திற்கு 300 ரூபாக்கள் முதல் 600 ரூபாக்கள் வரை அண்ணையாக்கள் பணம் அறவிட்டதாக கூறுவார்கள். இதனைவிட அப்போதைய கருத்துச் சுதந்திரமாக என்ன பேசினாலும் திறந்த வெளியில் அனைவர் முன்னிலையிலேயே பேச வேண்டுமென்பது அண்ணயாக்களின் விதி முறையாக இருந்தது. இதற்கு அவர்கள் கூறும் சாட்டு பூட்டிய கூண்டிற்குள் நின்று தொலைபேசியில் பேசினால் இராணுவ ரகசியங்கள் புலனாய்வுத்தகவல்கள் இலகுவாக எதிரணிப் படைகளுடன் பரிமாறப்பட்டுவிடும் என்பதாகும்.




யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தின் வசமான பின்னர் மெது மெதுவாக செம்மணிப் புதைகுழிகளை மூடி மறைக்கும் நோக்கிலும் வசதி வாய்ப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திப் போராட்ட ஆதரவினையும் பற்றுதியையும் திசை திருப்பும் நோக்கிலும் தொலைபேசி மின்சாரம் என்பன 1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் srilanka telecom நிறுவனத்தினர் முதன் முதலாக தொலைத் தொடர்புப் பரிவர்த்தனைக் கோபுரம் அமைத்து தமது சேவையினை ஆரம்பித்தார்கள். அப்போதைய சூழலுக்கமைவாக அச் சேவைகள் பெரும்பாலும் நகர்ப்புறத்தை அண்டி வாழ்பவர்களுக்கே கிடைக்கக் கூடியதாகவிருந்தன.



எங்கள் ஊரிலிருந்தும் சரி யாழ்ப்பாணத்தின் பிற கிராமப்பகுதிகளிலிருந்தும் சரி வெளிநாட்டில் உள்ள தமது உறவுகளுடன் கதைக்க வேண்டுமாக இருந்தால் 1996ம் ஆண்டில் யாழ் நகரிற்குத் தான் செல்ல வேண்டும். இரவில் யாழ் நகரப் பகுதியிலுள்ள தொலைத் தொடர்பகத்திற்குச் சென்று தங்கியிருந்து மேலைத்தேய நாடுகளிலுள்ள தமது உறவுகளுடன் உரையாடிவிட்டுப் பின்னர் மறுநாள் வீடு வரும் உறவுகளையும் நான் கண்டிருக்கின்றேன். இரவில் ஊரடங்குச் சட்டம் என்பதால் வீடு திரும்ப முடியாத நிலமைகூடத் தொடர்பாடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது என்றால் பாருங்களேன்.




1997களின் பிற் பகுதிகளில் யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திற்கு அண்மையாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்புக் கோபுரம் மீளத் திருத்தியமைக்கப்பட்டு தொலைபேசிச் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊருக்கொரு ரெலிபோன்கடை(கொமினிகேசன்)முளைக்கத் தொடங்குகின்றது. இக் காலப் பகுதியில் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் யாழ் குடா நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால், இந்தத் தொலைபேசிகள் யாவும் சூரிய ஒளியில் செயற்படும் மின்கலத்தை (solar System) அடிப்படையாக வைத்தே இயங்கத் தொடங்கின்றன. வெளிநாட்டிற்கு ஒரு அழைப்பினை மேற்கொள்வதென்றால் ஐரோப்பிய நாட்டிற்கு ஒரு கட்டணமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிறிதொரு கட்டணமும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு வேறொரு கட்டணமுமாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினர் அறவிட்டார்கள். இதனை விட உள் வரும் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 8ரூபாவினை அறவிட்ட தொலைத் தொடர்பகங்கள் பின்னர் நிமிடத்திற்கு 5 ரூபாவினை அறவிட்டுத் தற்போது நான்கு ரூபாவினை நிமிடத்திற்கு அறவிடுகின்றன.





சமாதான காலப்பகுதி என்பது யுத்தமற்ற ஒரு பெருவாழ்வினையும் தமிழ் மக்களுக்கென்று தனியானதொரு தீர்வினையும் தருவதற்காகப் பிறந்த காலப் பகுதி என்று நாம் எல்லோரும் நம்பிய காலப்பகுதியாகும். 2002ம் ஆண்டில் A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டபின்னர் கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திலும் நிறுவப்பட்டன. யாழ் குடாநாட்டில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த கையடக்கத் தொலைபேசி நிறுவனமாக Dialog Gsm நிறுவனத்தினைக் குறிப்பிடலாம். அதன் பின்னர் Mobitel எனும் நிறுவனமும் தனது கிளையினைப் பரப்பத் தொடங்குகிறது. இன்று சி.டீ.எம்.ஏ (CDMA) போன்ற தொழில் நுட்பம் வாய்ந்த தொலைபேசிகளும் எமது யாழ் குடா நாட்டில் அறிமுகமாகிவிட்டன.





எம்மவர்களின் தொலைபேசித் தொடர்பாடல் முறைசற்று வித்தியாசமானது என்றே கூறலாம். ஆரம்பகாலத்தில் எமது யாழ்ப்பாணத் தொலைத்தொடர்பு நிலையங்களில் கதைக்கும் எம்மவர்கள் கண்ணாடிக் கூண்டிற்குள் நின்றபடி கைகளையெல்லாம் அசைத்துக் கதைப்பதனைக் கண்டிருக்கின்றேன். ஒருவர்
’’ஓம் தம்பி சொல்லடா. நான் ஏதோ இருக்கிறேன். பொயிலைக்கண்டு ராசா இப்ப இந்தளவுக்கு வளந்திட்டுது (இப்படித் தனது கைகளைக் காட்டி அவர் சொல்வது அவர் மகனுக்குத் தெரியுமோ தெரியாது) வாற மாசம் வெட்டப் போறன். உனக்கொரு பொம்பிளை பார்த்திருக்கிறன் ராசா வடிவெண்டா நல்ல வடிவுதான். இஞ்ச பாரன். எனக்கு முன்னால நிக்கிற பொட்டமாதிரி இருக்கும்’’ என்று கூறினார்.
மகனுக்கு இதைக் கேட்டதும் புரையேறியிருக்கும்.மகன் பதிலுக்கு என்ன கேட்டிருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.




இனி எங்கள் இளசுகளின் தொலைபேசி உரையாடலினைப் பார்ப்போம். இளசுகளின் கைகளில் கையடக்கத் தொலைபேசிகள் புழங்கத்தொடங்கியபோது பெரும்பாலும் வசதியுள்ள இளசுகளே கையடக்கத் தொலைபேசிகளை அதிகளவில் பாவிக்கத் தொடங்கியிருந்தார்கள்.ஒரு சிலர் தங்களுடைய தொலைபேசிக்குத் தாங்களே ஒலியினை (Alaram Set பண்ணி ஒலியெழுப்புதல்) வைத்துப் பொது இடங்களில் தங்களுக்கு தொலைபேசியழைப்பு வந்தது போன்று பேசிக் கலர் காட்டு வதனையும் நாம் கண்டிருக்கிறோம். ஒருவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிற்பார். திடீரென அவரது தொலைபேசி மணி அடிக்கத் தொடங்கும். மன்னிக்கவும் அவரது தொலைபேசியின் Alaram அடிக்கத்தொடங்கும். அவர் தனக்குத் தொலைபேசிவந்ததுபோல் பேசத்தொடங்குவார். அவரது றீலினைக் கண்டுபிடித்ததும் அவரது நண்பர்களெல்லாம் கலர் காட்டுறான் ஆள் என்று ந்க்கலடிப்பார்கள். சிலரிடம் தொலைபேசியிருக்கும் ஆனால் சிம் காட்டோ இல்லையென்றால் தொலைபேசியில் பேசுவதற்குரிய காசோ இருக்காது.ஆனால் எம்மவர்கள் சளைக்காது பேசுவார்கள் என்றால் பாருங்களேன்.





ஒரு சிலர் பேரூந்தின் பின் பகுதியில் நின்று தொலை பேசியில் பேசினார்களென்றால் பேரூந்தின் முன் பகுதியில் நிற்பவர்களுக்குக் கூட அவரது பேச்சுத் தொனி கேட்கும் என்றால் சொல்லவா வேணும்? எம்வரில் ஒருவர் தனது மாட்டினை எப்படிக் கண்டு பிடித்தார் என்று தெரியுமா?
எங்களூரில் சிவராசா என்றொரு விவசாயி தனது மாட்டினைத் தொலைத்து விட்டார். விடா முயற்சியுடன் தேடியும் மாடு சிக்கவில்லை என்பதால் சிவராசா தனது மனைவியிடம் ’’என்ரை கூட்டாளி பக்கத்து ஊரிலை இருக்கிறான். அவனிட்டை ஒருக்கால் போன் பண்ணிக் கேளன் என்று சொல்லியிருக்கிறார். அவரது மனைவியும் போனைப் போட்டிருக்கிறா. போனைப் போட்டதும் ‘’ஒப அமத்துவன்ன சந்தி கலன கட்ட. கருணாகரப் பசுவ அமத்தன்ன’’ என்று சொல்லியிருக்கிறது. உடனே தொலை பேசித் தொடர்பினைத் துண்டித்த சிவராசாவின் மனையியோ பதறியடித்தபடி
‘’ இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ... சிவராசாவின்ரை மகள் கதைச்சவா. உங்கடை கூட்டாளி கருணாகரண்ணை பசுவை அமத்திப் பிடிச்சிருக்கிறாராம். வாங்கோ மாடு ஓட முதல் பிடிச்சருவம் என்று கூறியிருக்கிறா. இப்படியும் எம்மவர்கள் தொலைபேசியில் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.




எங்கடை ஊரிலை உள்ள வயசு போனா ஆட்களிடம் ரெலிபோன் மாட்டி விட்டால் போதும். ஹலோ உதார் கதைக்கிறது? என்று தொடங்கித் தங்கள இளமைக் கால நினைவுகள் வரைக்கும் கதைத்துத் தான் ரெலிபோனை வைப்பார்கள். எங்கோ ஒரு கதையில் வாசித்ததாக ஞாபகம். யாழ்ப்பாணத்திலுள்ள பாட்டியொருவர் ரெலிபோனைக் கூப்பிடுவான் என்று அழைத்ததாக விளிக்கப்பட்டிருந்தது. கூப்பிடுவான் கூப்பிடுறான் என்றால் அவாவின் மொழியில் ரெலிபோன் அடிக்கிறது. ஓடிப் போய் எடுங்கோ என்று அர்த்தமாம்.



செய்மதி மூலம் இயங்கும் தொலைபேசிகளும் எங்களூரில் அறிமுகமாகியிருந்தன. இவற்றினைக் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒரு நாள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவ வீரர்களின் மலசல கூடத்திற்குள் இருந்து தொலை பேசி உரையாடல் கேட்டதாம். உசாரடைந்த இராணுவ வீரர்கள் கையும் களவுமாக விடுதலைப் புலிகளுக்குச் செய்மதித் தொலை பேசி மூலம் தகவல் வழங்கிய இராணுவ உளவாளியினைப் பிடித்ததா தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் இராணுவ இரகசியங்களும் இந்தச் செய்மதித் தொலை பேசி மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.




தொலைபேசி.. இதனை நாம் தொல்லை பேசியாக மாற்றாது விட்டால் நன்று.
|
This entry was posted on 10:31 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 25, 2010 at 6:03 PM , யசோதா.பத்மநாதன் said...

'கூப்புடுவான்'என்று தொலைபேசியை அழைத்தது நன்றாக இருக்கிறது.

தொழில் நுட்ப சாதனங்களுக்கும் மனித இயல்பைக் கொடுக்கும் மனித மனம்!

பதிவும் நன்றாக இருக்கிறது.

 
On April 26, 2010 at 1:05 AM , கானா பிரபா said...

வித்தியாசமான வகையில் பதிவை அமைத்திருக்கிறீங்கள், ரசித்தேன்

 
On April 26, 2010 at 7:20 AM , தமிழ் மதுரம் said...

மணிமேகலா மற்றும் கானாபிரபா ஆகியோரின் கருத்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள்.

 
On April 26, 2010 at 11:09 AM , தாருகாசினி said...

நல்லதொரு பதிவு...

//கருணாகரப் பசுவ அமத்தன்ன’’ //

நகைச்சுவை நல்லாயிருக்குது...உதையே எங்கட கம்பஸ்ல ஒரு நிகழ்ச்சியில "கருணான்ர ஆக்கள் பசுபதியை அமத்திப்போட்டினமாம்" எண்டு வேறை ஒரு கருத்தில சொன்னவங்கள்...;)