•10:36 PM
கமலமக்கா வீட்டில மட்டுமில்ல ஊர் முழுக்க பெரிய கொண்டாட்டம் இண்டக்கு....ஏன் எண்டு கேக்கிறியளோ...அதொண்டுமில்ல....எங்கட சின்னையாண்ணன்ர மேள் சந்தியாவுக்கு சாமத்திய வீடு.ஊர் முழுக்க சொல்லி பெரிசா செய்யினம்...
அவன் மூத்த பொடியன் கண்ணன் கனடாவிலயெல்லோ...கமலமக்காவின்ர சகோதரம் முழுக்க வெளியில தானே...அவைக்கென்ன வெளிநாட்டு காசு...ஒண்டுக்கு ரண்டு வீடியோவாம்.எங்கட பாக்கியமக்கான்ர பவானி ஏதோ நேத்தி எண்டு இந்தியாவுக்கு போனவள் தானே..அவளிட்ட தான் கூறைக்கு சொல்லி எடுப்பிச்சவவாம்.சந்தியாவுக்கு 25,000 ல கூறை...தனக்கு 15,000 ல கூறை...
கனகமக்கா நீங்கள் போகேல்லயே?எனக்கும் சொன்னது தான்...எனக்கு வயசு போனகாலத்தில என்னத்துக்கு எடுப்புசாய்ப்பு எல்லாம்..உவள் பிள்ளைய தான் போக சொல்லியிருக்கிறன்.ரியூசன்ல ஏதோ முக்கியமான சோதினயாம்..அத எழுதிப்போட்டு வந்து போறனெண்டவள்..ஆளை காணேல்ல...அதான் பாத்துக்கொண்டிருக்கிறன்.காலம் கெட்ட நேரம் இப்ப ஊர் முந்தி மாதிரி இல்ல.ஆமிக்காறன்,செக்கிங் எண்டு தொல்லையள் குறைஞ்சிட்டுது எண்டு பாத்தா ஊருக்குள்ள காவாலிப்பொடியளின்ர சேட்டை கூடிப்போச்சு.அண்டக்கு உவள் பிள்ளை சயிக்கிளில வரேக்க பின்னால வந்தவன் ஒருத்தன் தொப்பிய கழட்டிக்கொண்டு போட்டானாம்.அவள் ஆளை சரியா கவனிக்கேல்லையாம்.ஆனா உவர் தம்பு மாஸ்டரின்ர சின்னவன் பாபு மாரி தான் இருந்துதாம்...அடக்க ஒடுக்கமா இருந்த பொடியன்.எல்லாம் வயசுக்கு ஒரு குணங்கொண்டு நிக்குதுகள்.
ஓமக்கா...இப்ப கொழும்ப விட எங்கட இடம் தான் கெட்டுப்போய் கிடக்கு...இயக்கம் இஞ்சத்தயால போனதில இருந்து கேக்க ஆளில்லாம சின்னன் பெரிசு எண்டில்ல எல்லாமே கண்ட கண்ட படங்களை பாக்கிறதும் இரவிரவா ஊர் சுத்துறதும் எண்டு கொழுப்பெடுத்து திரியுதுகள்..என்னத்தச்சொல்ல...பிள்ளையாரப்பா நீ தான் எங்களை காப்பாத்தோணும்...
ஓமோம்..தண்ணி வாக்கிறதுக்கு சின்னத்தம்பியும் மனிசியும் வருகினமாம்.என்ன கொழுவல் எண்டாலும் வெளிக்கு சமாளிக்காட்டி நாளைக்கு சனம் நாலு கதை கதைக்குமெல்லே.அந்த பங்கு காணிப்பிரச்சினையோட கதக்காம விட்டவை தான்.4 வருசமா இஞ்சால் பக்கமே சின்னத்தம்பி வரேல்ல...
உவள் சந்தியா ஆள் நல்ல துடியாட்டம்.படிப்பிலயும் வலு கெட்டிக்காறி.பள்ளிக்கூடத்தில எல்லா ரீச்சர்மாருக்கும் சந்தியா எண்டா காணுமாம்.இஞ்ச ஒரு நிமிசம் வீட்ட இருக்கிறேல்ல.ஒவ்வொரு வீட்டு படலையா தட்டிக்கொண்டு திரியிறது தான் அவளுக்கு வேலை.அது தான் கமலமக்கா சொன்னவா உவளை இனி கொஞ்சம் கட்டுக்குள்ள தான் வச்சிருக்கோணும் எண்டு.அதுகள் சின்னனுகள் இப்ப விளங்காது.பிரச்சினை எண்டு வந்தாப்பிறகு யோசிக்கிறதவிட முதலே அதுக்கேற்ற மாரி நடந்தா சரி தானே.
பாவம் சந்தியா சுதந்திரமா திரிஞ்சவளுக்கு இது கொஞ்சம் கஸ்ரமாத்தான் இருக்கும்.அடுத்தடுத்த வருசத்தில அங்கால ஏயலுக்கு(A/L)போட்டாளெண்டா படிப்போடயே பொழுதுபோகிடும்..நினச்சாலும் சுத்துறேக்கு எங்க நேரம் வரப்போகுது......
சொல் விளக்கம்
மேள்-மகள்
கூறை-(அசல்)பட்டுச்சேலை
சாமத்திய வீடு-பூப்புனித நீராட்டு விழா(பெண் வயசுக்கு வருவதை கொண்டாடுவது..;))
வலு-மிகவும்,மிகுந்த
ஏயல்(A/L)-உயர்தர வகுப்பு
இஞ்சத்தயால-இங்கே இருந்து
சோதினை-பரீட்சை
இஞ்சால் பக்கம்-இந்தப்பக்கம்
6 comments:
ஊரில நிண்டு கதை கேட்ட மாதிரிக் கிடக்கு :).
நல்லாத்தான் சொல்லியிருக்கிறியள்
ஈழத்து முற்றத்தில் வரவேற்கிறோம்
//ஊரில நிண்டு கதை கேட்ட மாதிரிக் கிடக்கு :).//
மிக்க நன்றி கலை!
உங்களை ஈழமுற்றத்தில சந்திச்சதில மகிழ்ச்சி...:)
//நல்லாத்தான்
சொல்லியிருக்கிறியள்..ஈழத்து முற்றத்தில் வரவேற்கிறோம்//
உங்கட அழைப்பிதழ்,கருத்து,
,வரவேற்பு எல்லாத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...:)
நல்ல எடுப்புச்சாய்ப்போடுதான் முத்ததிற்க்கு வந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்
கொண்டாட்டம் தொடங்கி விட்டுது போல.:-)
என்னேரமெடி பிள்ள தண்ணி வாப்பு?பலகாரங்கள், பால்ரொட்டி எல்லாம் செய்தாச்சுதோ?
ஊருக்குள் போனது மாதிரியே இருக்கு.தொடர்ந்து கொண்டாட்டத்தைப் பற்றியும் எழுதுங்கோ.பல வழக்கங்கள் இப்போது மாறி இல்லாதும் போய்க் கொண்டிருக்கின்றன.
//நல்ல எடுப்புச்சாய்ப்போடுதான் முத்ததிற்க்கு வந்திருக்கிறியள். வாழ்த்துக்கள்//
;)மிக்க நன்றி வந்தி அண்ணா!
//என்னேரமெடி பிள்ள தண்ணி வாப்பு?பலகாரங்கள், பால்ரொட்டி எல்லாம் செய்தாச்சுதோ?//
அதெல்லாம் எப்பவோ செய்துவச்சாச்சு.தண்ணி வாத்து முடிஞ்சுது.உங்களை மினக்கடாம வெளிக்கிட்டு வரட்டாம்.ஆலாத்தி எடுக்க நேரம் போட்டுதாம் ....;)
//ஊருக்குள் போனது மாதிரியே இருக்கு.தொடர்ந்து கொண்டாட்டத்தைப் பற்றியும் எழுதுங்கோ.பல வழக்கங்கள் இப்போது மாறி இல்லாதும் போய்க் கொண்டிருக்கின்றன..//
மிக்க நன்றி மணிமேகலா! நானும் ஊரைவிட்டு வந்து கனகாலம் ஆச்சு..இடைக்கிடை ஒரு கிழமை ரண்டு கிழமை விடுமுறையில போய்வாறது..ம்ம்..எங்கட கொண்டாட்டங்களை பற்றி எழுதினா நிறைய எழுதிக்கொண்டே போகலாமெல்லோ ...:)