Author: யசோதா.பத்மநாதன்
•5:40 PM

மோனை, மோனை, மோனை முருகேசு!

என்னெணை?

கோடிப்புறத்தைக் கூட்டிக் கொண்டு நின்ற முருகேசு ஓங்கிக் குரல் கொடுத்தான்.

உவள் சினேகிதி அங்கனேக்க இங்கணேக்க நிக்கிறாளே? நாற்சார வீட்டின் உட்புறத் திண்ணையில் கால் நீட்டி இருந்தபடி முன்னர் பாவித்த சிக்கன லாம்பில் சுருட்டைப் பற்ற வைத்துப் பொக் பொக்கென்று இழுத்த படி மணியாச்சி கேட்கிறாள்.

நடு முற்றத்தில் இப்போது பொழுது புலருவது நன்றாகத் தெரிகிறது.அந்தக் கருக்கல் பொழுதும் காவோலைகளின் சரசரப்புச் சத்தமும்,குயிலின் குரலும்,யாரோ முதல் நாள் கட்டிவிட்ட பட்டத்தின் விண் கூவும் ஒலியும் கலந்த ஒரு காலை அது.

அங்கால இங்கால திரும்பிப் பார்த்து விட்டு கிணற்றடியில் தண்ணி அள்ளிக் கொண்டிருந்த சினேகிதியைப் பார்த்து 'ஆச்சி தேடுறா பிள்ளை' என்று முருகேசு சொல்வது துல்லியமாகக் கேட்கிறது.

அவளுக்கும் பேச்சுக் கால் துடங்கி விட்டுது.வெளி நாட்டு மாப்பிள்ள போல கிடக்கு.பெரும்பாலும் சரி வரும் போலத் தான் கிடக்குது. லக்ஷ்மி வாசா எண்டு பேர் வச்சு இந்த வீட்டைக் கட்டினதே அவளுக்காகத் தான்.அவளும் போயிட்டா ஆச்சி பாடு தான் கஸ்டமாப் போப்போகுது.அடிக்கொருக்கா கையுக்கை நிண்ட பிள்ளை.மூத்த பேத்தி.கூப்பிட்ட உடன முகஞ்சுழிக்காமல் ஓடி வாற பிள்ளை.வலு கெட்டிக் காறி.இங்கனேக்க அவளுக்குத் தோதா ஆர் இருக்கினம்? பிரையாசையான கமக்காறப் பொடியன் ஒண்டு தேடி வந்தது. அவள் வேண்டாம் எண்டிட்டாள்.இப்ப எல்லாப் பொடியளும் வெளி நாடெண்டு ஓடி விட்டாங்கள்.அயல் அண்டைக்கே பாருங்கோவன் எண்டு மோனுட்டச் சொன்னா என்னில ஏறி விழுறான்.

'பேசாமல் கிடவணை உனக்கென்ன தெரியும்' எண்ணுறான்.

முகம் கை காலக் கழுவி விட்டு வந்த சினேகிதி 'ஆச்சி குடியணை' என்று மூக்குப் போணிக்குள் கோப்பி கொண்டு வந்து நீட்டினாள். அதற்கிடையில் அடுப்பு மூட்டி தண்ணி வச்சு மாட்டில பாலெடுத்துக் கோப்பியும் போட்டிட்டாள்.

ஆச்சிக்கு முன்னால அவள் வரேக்கை பொழுது நல்லா வெளிச்சிட்டுது. முகம் கழுவி பளீச்சென்றிருந்தாள்.நீளமான பட்டுப் போன்ற கூந்தலைச் சீவித் தளர்வாக முடிந்திருந்தாள். இயல்பான கருமையிலும் சுருள் இல்லாத தன்மையாலும் அது காதில் பாதியை இயல்பாக மறைத்த வாறிருந்தது.மாசு மறுவில்லாத சந்திரனைப் போன்ற வட்ட முகத்தில் திருநீறு துலங்கிற்று.நல்ல கடும் சாயம் கலந்த பால் தேத்தண்ணி நிறம். சோளன் பொத்திக்குள் இருக்கும் நிரை நிரையான முத்துக்களைப் போல அடுக்கி வைத்த பற்கள்.தீட்சன்யமான கண்கள்.சற்றே கட்டையான தோற்றம்.கையும் காலும் எலும்புகள் தெரியாமல் மொழு மொழுவென்று இருந்தன.சீராகவும் சுத்தமாகவும் நகம் வெட்டப் பட்டிருந்தது.அரைப் பாவாடை சட்டை போட்டிருந்தாள்.ஏ.எல் ஓட பள்ளிக் கூடத்த விட்டிட்டாள்.

ஆனா பாய் பின்னுறது, ஓலை பின்னுறது, தையல் வேலை,வீட்டுச் சோடினை,தண்ணி அள்ளுறது, வீட்டு வேலை,எண்டு ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமல் இருப்பாள்.றேடியோ அவளுக்கு 24 மணி நேரமும் பாடிக் கொண்டிருக்க வேணும்.பக்கத்து வீடுகளோடையும் வலு வாரப்பாடு.முகஞ்சுழிக்கத் தெரியாத சுறுசுறுப்பான பெண்.வலு சிக்கனக் காறி.குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு.இயல்பான யாழ்ப்பாணத்து வளர்ப்பு முறை அவளில் சிறப்பாக சுவறிப் போயிருந்தது.
.
முன் வளவு, பின் வளவு கூட்டி முடித்துக் கால் முகம் கழுவிக்கொண்டு வந்த முருகேசு மீண்டும் 'அப்பனே முருகா' என்றவாறு திருநீறு பூசுகிறான்.அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம் உள்ளவன் அவன்.படுக்கையை விட்டு எழும்பும் போதும் இவ்வாறு கூறிக்கொண்டு எழும்புவது தான் அவன் வழக்கம்.படுக்கப் போகும் போது மட்டும் நீட்டி முழக்கி அவன் சொல்லும் 'அப்பனே முருகா, குருநாதா, வேலவனே நீ தான் துணை' என்பது குடும்ப அங்கத்தவர் எல்லோருக்கும் தண்ணி பட்ட பாடம்.

உப்பிடித் தான் ஆச்சியின்ர கடசி மகனிண்ட பேரன் அஞ்சு வயசு வந்தி கொழும்பில இருந்து மாவிட்டபுரம் கோயில் திருவிழாவுக்கு குடும்பத்தோட வந்து நிக்கிற காலத்தில, முருகேசு படுக்க பாய் விரிச்சு சாயத் தொடங்க முதல் வந்தி முந்தி விடுவான்.அப்ப மட்டும் சிரிச்சுக் கொண்டு ஒண்டும் சொல்லாமல் முருகேசு படுத்திடும்.பாவம் நல்லதொரு மனுசன். கனக்கக் கதையாது.கள்ளுக் குடிக்க மட்டும் காசுக்கு வந்து காதைச் சொறிஞ்சு கொண்டு நிக்கும்.எங்கட வீட்டு சுக துக்கம், நன்மை தீமை,ஏற்ற இறக்கம் எல்லாம் கண்டு பழகின மனுசன்.

போக்கிடம் இல்லாமல் வந்து சேந்ததெல்லே! இப்ப கிட்டத் தட்ட 20,25 வருசமாகுது. அந்த மனுசனால எங்களுக்கு எவ்வளவு உதவி!வீட்டு வேலை,கமத்துக்குப் போறது,ஓலை வெட்டுறது, பனையோலை கிழிக்கிறது, கிடுகு பின்னுறது,மாடு அவிட்டுக் கட்டிறது,சங்கக் கடைக்குப் போறது,தொட்டாட்ட வேலையள் எண்டு சொல்லாமலே எல்லாத்தையும் செய்து போடும்.

இப்படித்தான் மிகச் சாதாரணமாகத் தொடங்கிற்று அவர்களின் காலை.இனித் தான் கொண்டாட்டம் எல்லாம்.

இன்று புது வருஷம்.இண்டைக்குத் திகதி 14.04.2010.
விகிர்த்தி ஆண்டு, சித்திரைத் திங்கள்,முதலாம் நாள்.



அருஞ்சொல் விளக்கம்;

மோனை; மகனே
கோடிப் புறம்; வீட்டின் பின்புறம்
அங்கனேக்க; அந்தப் பக்கம்
இங்கனேக்க; இந்தப் பக்கம்
சிக்கன லாம்பு; போர்க்காலத்தில் மின் குமிழால் செய்யப்பட்ட லாம்பு
கருக்கல் பொழுது; இரவும் காலையும் சந்திக்கும் நேரம்
காவோலை; விழத் தயாரக இருக்கும் முதிர்ந்த பனையோலை.
அங்காலை;தனக்கு அந்தப் பக்கமாக
இங்கால; தனக்கு இந்தப் பக்கமாக
பேச்சுக் கால்; திருமணப் பேச்சுவார்த்தை
அடிக்கொருக்கா;அடிக்கடி
வலு கெட்டிக் காறி; மிகக் கெட்டிக்காறி
தோதா; சரியாக
அயல் அண்டை; அக்கம் பக்கம்
வாரப்பாடு; கொண்டாட்டம்/நட்புறவு
கமம்; விவசாயத் தோட்டம்
சுவறி; ஊறி
சோடினை; அலங்காரம்
பிரையாசை; முயற்சி.
|
This entry was posted on 5:40 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On April 13, 2010 at 8:53 PM , www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
On April 13, 2010 at 10:18 PM , வந்தியத்தேவன் said...

அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய சித்திரை வருட வாழ்த்துக்கள்.

மணி ஆச்சியின் எழுத்து என்னை ஊருக்கே கூட்டிக்கொண்டு போய்விட்டது. படங்கள் சோக்காக இருக்கு. உவள் சினேகிதி பக்கத்துவீட்டுக்கு வரியம் கும்பிடப்போனவள் இன்னும் திரும்பிவரவில்லை. அரியதரம் முறுக்கு எல்லாம் சாப்பிட்டுவிட்டு தலேணிச் சண்டைக்குப்போய்விட்டாளாம். பொடிச்சி சரியான ஊர் சுத்தி. எங்கடை பிரபாபோல எந்த நேரமும் உலாத்தல் தான். உவன் பிரபாவும் உள்ள கோயில் குளம் எல்லாம் வரியம் என்றால் போய்விடுவான். எல்லாம் அம்மன் தரிசனம் தான்.

அம்மன் தரிசனத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு வரியப்பலகாரங்கள் மெயில் பண்ணப்படும்.

 
On April 14, 2010 at 5:35 AM , உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

 
On April 22, 2010 at 6:38 AM , Pragash said...

புது பனையோலை வாசமும், நனைஞ்ச தென்னோலையில கிடுகு பின்னும் போது வரும் வாசமும் மூக்கை துளைக்குது. நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கிறியள்.

 
On April 22, 2010 at 6:11 PM , யசோதா.பத்மநாதன் said...

வரவு கண்டு மகிழ்ச்சி வந்தி. எங்கே ஆளைப் பல மாதங்களாகக் காணோம்?

பிரகாஷ்,உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.ஓம் ஓம். அந்த ஊற வைத்த தென்னோலையின் வாசம் தனித்துவம். மிக லாவகமாக ஓலையை அகல விரித்து பின்னும் அந்த நேர்த்தி ஒரு கலை.