Author: ஃபஹீமாஜஹான்
•5:07 AM



யாழ்ப்பாணத்தவர்கள் தான் சரியாகத் தமிழைப் பேசுவதாக நினைத்துக் கொண்டிருப்பதைப்போலவே எங்கள் ஊர் மக்களும் தாங்கள் தான் சரியான தமிழைப்பேசுவதாக நினைத்து வெளியூர் மக்களின் தமிழை நையாண்டி செய்து கொண்டிருப்பவர்கள்.(எங்கள் பிரதேசம் எனும்போது வடமேல்மாகாணம், குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், ஹிரியால தேர்தல் தொகுதி மக்களையே குறிப்பிடுகிறேன்.)இதிலிருக்கும் முரண்நகை என்னவென்றால் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழலில் வாழும் இம் மக்கள் பேசும் தமிழ் உச்சரிப்புக்கள் சரியான தமிழ் உச்சரிப்புக்களாக இருப்பதில்லை.(இந்த அழகில் தான் தமிழைச் சரியாகப் பேசுகிறோம் என்று மற்ற மக்களைப் பார்த்து நையாண்டி செய்கின்றனர்)

ர,ண,ள,ழ உச்சரிப்புகள் இவர்களது சொல்லகராதியில் இல்லை.

ஊர் மொழியில் இதனை எழுதினேன் என்றால் இதன்பிறகு எனது பெயரைப் பார்த்தாலே ஈழத்து முற்றத்திலுள்ளவர்கள் ஓடத்தொடங்கிவிடுவார்கள் என்பதால் சில சொற்களை மாத்திரம் தருகிறேன்.

ஒவ்வொரு சொற்களாகப் பார்ப்போம்.

1.என்ன? - என்த?, ஏத்த,? (* இந்தச் சொல்லையே வேறு பிரதேசங்களில் என்தேன்? என்னதேன்? ஏதேன்? எனா? என்றெல்லாம் கூறுவர்)

2. ஏன்? - ஏ? எய்யா?

3. நுளம்பு - நெலும்பு

4. மரம் - மறம்

5. மழை - மல

6.தேநீர்- தேத்தண்ணி (இதே சொல் கிழக்கில் "தேயில குடிப்பம்" )

7.அவர் உன்னை வரச் சொன்னார்- அவறு ஒன்ன வறட்டாம் - அவறு ஒன்ன வறச் சென்னார்

8.மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து

9. ஆற்றில் குளிக்கப் போவோம்- ஆத்துக்கு முழுக பொம்.

10. எருமை மாடு - கிடாமாடு

இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(கானா பிரபாவின் நீண்ட நாள் வேண்டுகோள் இன்று நிறைவேறுகிறது)
|
This entry was posted on 5:07 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

32 comments:

On July 10, 2010 at 5:47 AM , கானா பிரபா said...

வணக்கம் சகோதரி

முதலில் வேண்டுகோளைச் செவிமடுத்து வந்தமைக்கு நன்றி, நம் முஸ்லீம் உறவுகளின் மொழிப்பயன்பாடு, கலாச்சாரப் பகிர்வுகளை இத்தளத்தில் நீங்கள் பகிர வேண்டும் என்றும் ஆவல் கொண்டிருக்கின்றேன்.

சொற்களின் அறிமுகத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி

 
On July 10, 2010 at 6:30 AM , seethag said...

மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து..

மேலே உள்ள வாக்கியம், 'நிநைவு அற்றுப் போய்விட்டது ' என்றூ இருந்திருக்குமோ?

 
On July 10, 2010 at 7:01 AM , Pragash said...

வணக்கம் சகோதரி! முஸ்லீம் சமூக மொழிவழக்குகள், பண்பாடுகள் தொடர்பில் மேலும் அறிய விரும்புகிறோம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 
On July 10, 2010 at 9:09 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் பிரபா,
"நம் முஸ்லீம் உறவுகளின் மொழிப்பயன்பாடு, கலாச்சாரப் பகிர்வுகளை இத்தளத்தில் நீங்கள் பகிர வேண்டும் என்றும் ஆவல் கொண்டிருக்கின்றேன்"

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எழுத முயற்சிசெய்கிறேன்.

நன்றி.

 
On July 10, 2010 at 9:12 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் திரு,

மேலே உள்ள வாக்கியம், 'நினைவு அற்றுப் போய்விட்டது ' என்று இருந்திருக்குமோ?

ஆம். அதே தான்.

 
On July 10, 2010 at 9:21 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் PRAKASH,

"முஸ்லீம் சமூக மொழிவழக்குகள், பண்பாடுகள் தொடர்பில் மேலும் அறிய விரும்புகிறோம்"
எல்லாவற்றையும் எங்கிருந்து தொடங்குவதென்றுதான் தெரியவில்லை.
எப்படி தொகுப்பதென்பதும் விளங்கவி்ல்லை.

அடுத்து நாம் 'தென்னை முக்கோண வலய'த்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தென்னை குறித்த சில பிரதேச வழக்குச் சொற்களைத் தர நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

 
On July 10, 2010 at 9:26 AM , soundr said...

//தேத்தண்ணி//

தமிழ் நாட்டில் கூட இப்போது இந்த சொல் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் (அனேகமாக சீனா யுத்தம் சமயம்) தமிழ் நாட்டில் தெருக்களில் பாட்டுப்பாடி விளம்பரப்படுத்தினராம் தேநீர் உபயோகத்தை. அப்போது உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை, தேத்தண்ணீர்.


http://vaarththai.wordpress.com

 
On July 10, 2010 at 10:00 AM , ராஜவம்சம் said...

மொழிப்புரியவில்லை என்றாலும் புதிதாக சொல்லைத்தெரிந்துக்கொள்கிறேன்.

 
On July 10, 2010 at 10:25 AM , ஹேமா said...

நன்றி பஹீமா.இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.உங்கள் சமையலும் வித்தியாசமாகவே இருக்கும்.சொல்லுங்கள்.நன்றி.

 
On July 10, 2010 at 4:21 PM , Anonymous said...

வணக்கம் பஹீமா,

இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?

நாங்களும் தேத்தண்ணி என்று தான் தேநீரைச் சொல்லுவோம்.

நிறைய எழுதுங்கள். அப்படியே உங்கள் பழக்க‌ வழக்கங்களையும் (சடங்குகளையும்) பற்றி எழுதுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

 
On July 10, 2010 at 8:22 PM , Unknown said...

///இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்///

இந்த விளாட்டுத்தானே வேண்டாமெண்டிறது. ஃபஹீமா ஜஹானுக்கு சொற்கள் பஞ்சமாம். நம்பீட்டம்......அதெப்படி பெரும்பாலான ஆசிரிய/ஆசிரியைகளுக்கு நகைச்சுவை உணர்வு கொட்டிக்கிடக்கிறது :))

 
On July 10, 2010 at 9:40 PM , ஆடுமாடு said...

//நுளம்பு - நெலும்பு//
இதற்கு அர்த்தம் தெரியலை.

தேத்தண்ணி- மலேசியாவுல டீக்கு தண்ணின்னே சொல்றாங்க.

//நெனவாத்துப் பெயித்து//- எங்கூர்ல நினவத்து போச்சோ ம்பாங்க.

சில வார்த்தைகளை தவிர, பெரிய வித்தியாசமில்லை.

வாழ்த்துகள் பஹிமா.

 
On July 11, 2010 at 1:42 AM , மலையவன் said...

அனாமிகா துவாரகன் said...

வணக்கம் பஹீமா,

இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?//

இந்திய மொழிகளுக்கும் இலங்கையின் இல்லாமியி பண்பாட்டுப் பேச்சு வழக்கிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இரண்டு silang உம் ஒன்று மாதிரியாகச் சொல்வது போன்ற உங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறேன்.

 
On July 11, 2010 at 1:59 AM , தமிழ் மதுரம் said...

மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து//

நாங்கள் இதனை உனக்கு நினைவில்லையோ? நெனவில்லையோ என்று பயன்படுத்துவம்.

எருமை மாடு - கிடாமாடு//

நீ என்ன எருமை மாடு மாதிரி படுத்துக் கிடக்கிறாய் என்று பேசுவதற்கு பயன்படுத்துவம்,
சிலரை எருமை மாடு என்று ‘திட்டுவதும் உண்டு.


உங்களின் பதிவின் மூலம் பல புதிய சொற்களை அறிந்தேன் சதோதரி! தொடர்ந்தும் உங்கள் ஊர் நினைவுகளைச் சுமந்து நிறைய விடயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

 
On July 11, 2010 at 2:08 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் soundr,
"பல ஆண்டுகளுக்கு முன் (அனேகமாக சீனா யுத்தம் சமயம்) தமிழ் நாட்டில் தெருக்களில் பாட்டுப்பாடி விளம்பரப்படுத்தினராம் தேநீர் உபயோகத்தை. அப்போது உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை, தேத்தண்ணீர்."
உங்கள் தகவலுக்கு நன்றி.
சிலர் தூய தமிழில் (????)'ப்ளேன்டி' என்றும் சொல்வதுண்டு.

 
On July 11, 2010 at 2:11 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் ராஜவம்சம்,
"மொழிப்புரியவில்லை என்றாலும் புதிதாக சொல்லைத்தெரிந்துக்கொள்கிறேன்"

இதுக்கே இப்படிப் பயந்தால் எங்கட ஊர் தமிழில் எழுதினேன் என்றால் நீங்க எப்பாடுபடுவீங்களோ...

 
On July 11, 2010 at 2:17 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் ஹேமா,
"இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.உங்கள் சமையலும் வித்தியாசமாகவே இருக்கும்.சொல்லுங்கள்"

எங்கள் ஊர்காரர்கள் யாரும் இணையத்தில் இல்லாதது நல்லாதாப்போச்சு. அவர்களின் "செந்தமிழை" நான் நையாண்டி பண்ணுவதாக என்னை ஒருகை பார்க்காமல் போவார்களா என்ன?

 
On July 11, 2010 at 2:29 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் அனாமிகா துவாரகன்,

"இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?"
ஆமாம். சிங்களவர்கள் தமிழ் பேசுவதைப் போல் தான் எம்மவரின் பேச்சு மொழி அமைந்துள்ளது.எங்கள் ஊரில் எவரோனும் 'ழ'வைச் சரியாக உச்சரி்த்தால் அவருக்கு விருது வழங்கலாம்."வாழைப்பழம்" எங்கள் ஊரில் "வால பலம்" :(

 
On July 11, 2010 at 3:10 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் கிருத்திகன்,
'வாத்தி வேலை' என்பதுவும் தெரிஞ்சு போச்சா? :(
கிருத்திகன், அதற்காக இப்படியெல்லாம் நக்கல் பண்ணக் கூடாது
:)

 
On July 11, 2010 at 3:10 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் ஆடுமாடு,

//நுளம்பு - நெலும்பு//
இதற்கு அர்த்தம் தெரியலை.
நுளம்பு என்றால் mosquito. இந்தியாவில் கொசு என்ற அழைப்பீர்கள்.
இங்கு ஈக்களைவிடவும் சிறிய ஒருவகைப் பூச்சிகளுக்கே கொசு என்று சொல்வோம்.சாதாரண கொசுவைவிடவும் சற்றுப் பெரிய ஒருவகைக்கு 'பனங்கொசு' என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.

 
On July 11, 2010 at 3:11 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் மலையவன்,

"இந்திய மொழிகளுக்கும் இலங்கையின் இல்லாமியி பண்பாட்டுப் பேச்சு வழக்கிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இரண்டு silang உம் ஒன்று மாதிரியாகச் சொல்வது போன்ற உங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறேன்"

இலங்கையில் 100 வீதம் தூய தமிழில் யாரும் கதைப்பதில்லை.எங்கள் பிரதேச முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் உச்சரிப்புப் பிழைகளும் சிங்களத்திலிருந்து மருவிய சொற்களும் காணப்படுகின்றன.ஆனால் முற்றுமுழுதாக கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள் என்பது பொருளல்ல.

"இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?//"

அனாமிகா துவாரகன் சொன்னது பிழையில்லை என நினைக்கிறேன்.

 
On July 11, 2010 at 3:12 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் தமிழ் மதுரம்,

"நீ என்ன எருமை மாடு மாதிரி படுத்துக் கிடக்கிறாய் என்று பேசுவதற்கு பயன்படுத்துவம்,
சிலரை எருமை மாடு என்று ‘திட்டுவதும் உண்டு."

இங்கும் அதே. கோபம் அதிகமாகித் திட்டுவதென்றால் 'எருமக் கிடா' என்றும் ஏசுவார்கள் :)

 
On July 11, 2010 at 4:25 AM , Pragash said...

பஹீமாஜஹான்! என்னட்டை ஒரு யோசினை இருக்கு. ஒரு முழுப்பதிவை உங்கள் பிரதேச பேச்சு வழக்கிலேயே பதிவிடுங்கள். வாசிப்பவர்களை கொஞ்சம் திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். பிறகு விளக்கம் தரலாம்.

 
On July 11, 2010 at 4:51 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் PRAKASH,

"என்னட்டை ஒரு யோசினை இருக்கு. ஒரு முழுப்பதிவை உங்கள் பிரதேச பேச்சு வழக்கிலேயே பதிவிடுங்கள். "

10 வயதிலிருந்து ஊருக்க வெளியே தான் எனது சகவாசம் என்பதால் பெரும்பாலான சொற்களை விட்டும் தூரமாகிவிட்டேன்.ஊர்ப்பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் பேசும் போது பிரபாவின் கோரிக்கை நினைவு வரும்.அந்தச் சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டு முழுப்பதிவொன்றைத் தர முயற்சி செய்கிறேன்.

"வாசிப்பவர்களை கொஞ்சம் திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். பிறகு விளக்கம் தரலாம்"

ஊர்த் தமிழில் பதிவிடப்போகையில்
எப்படியும் எனது கொஞ்சத் தமிழ் அறிவும் மறந்து விடுமென்பது உறுதி.

ஏற்கெனவே ஊர்ப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளோடு மல்லுக் கட்டி எனக்கிருந்த கொஞ்சக் கணித அறிவையும் இழந்து போய் நிற்பதைப் போல.

 
On July 11, 2010 at 6:41 AM , M.Rishan Shareef said...

ஆஹா..சகோதரி ஃபஹீமா ஜஹானை இங்கு எழுத வைத்தவருக்கு வாழ்த்துக்கள். :-)

ஆரம்பமே அசத்தல்..தொடருங்கள்..ஏதேனும் சந்தேகமிருப்பின் (நம் மொழிக் கொலையில்தான்) உதவுகிறேன். ;-P

 
On July 11, 2010 at 7:49 AM , ஃபஹீமாஜஹான் said...

வாங்கோ ரிஷான்,

"ஏதேனும் சந்தேகமிருப்பின் (நம் மொழிக் கொலையில்தான்) உதவுகிறேன். ;-P"

என்னதேன் செல்ர இது!
நீங்களும் எழுதுங்கே :)
(இது மாவனல்லை 'செந்தமிழ்')

( இதன் விளக்கம்: என்ன கதை இது.நீங்களும் எழுதுங்கள்)

 
On July 11, 2010 at 8:21 AM , வர்மா said...

முஸ்லிம்களின்
பேச்சுவழக்கு சற்றுவித்தியாசமானதுதான்.ஆனால் மட்டக்களப்பு, மன்னாரைச்சேர்ந்த ஒருசில முஸ்லிம்கள் இலக்கணத்தமிழில் பேசுவார்கள்.வடமராட்சியிலும் தேநீரை தேத்தண்ணி என்பார்கள்.
அன்புடன்
வர்மா

 
On July 12, 2010 at 8:28 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் வர்மா,
"ஆனால் மட்டக்களப்பு, மன்னாரைச்சேர்ந்த ஒருசில முஸ்லிம்கள் இலக்கணத்தமிழில் பேசுவார்கள்."
ஆமாம் கல்லூரிக் காலத்தில் கிழக்கைச் சேர்ந்த ஓரிரு முஸ்லிம் ஆசிரியர்கள் மாத்திரம் அப்படிப் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் , மன்னார் மற்றும் கிழக்கைச் சேர்ந்த சக நண்ப , நண்பியர் அப்படிக் கதைத்ததாக நினைவில் இல்லை.

 
On July 13, 2010 at 6:48 PM , யசோதா.பத்மநாதன் said...

வணக்கம் சகோதரி,

உங்களை ஒரு சிறந்த கவிஞையாக பல சந்தர்ப்பங்களில் கண்டு வியந்திருக்கிறேன்.

உங்களை இங்கு கண்டதில் மிக மகிழ்ச்சி.

உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்.

 
On July 14, 2010 at 3:44 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் மணிமேகலா,
"உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்"

இனி என் பாடு கஷ்டம் தான் :(

ரிஷான்........ இது உங்களுக்கும் தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

 
On July 14, 2010 at 8:13 AM , M.Rishan Shareef said...

வாங்க மணிமேகலா,

//உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்.//

ம்ம்... சகோதரி ஃபஹீமா ஜஹான் நன்றாகத் தொடர்கிறார்.. பின் தொடருவோம் :-)

 
On July 14, 2010 at 9:44 AM , mohamedali jinnah said...

அருமையான கட்டுரை .
எங்கள் பிரதேசம் குறைவான பகுதிதானா !