ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
ஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த "கொண்டாடினான் ஒடியற்கூழ்" கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;
PRABU.mp3 |
ஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்
வளம் நிறைந்து வாழ்ந்திருந்த
மண்விட்டுப் புலம்பெயர்ந்தோம்.
முன்னதை இழந்தோம்.
எங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்
தங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா?
சென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்
சிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்
என்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்
இன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.
ஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்
ஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.
கூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த
கூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ
ஆசுகவி கல்லடியார் வாய்திறந்தால்
நூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ
வாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி
பேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்
நெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்
ஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்
முடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.
மெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்
கல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த
நல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து
கல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.
ஆடிக்கூழ், கொழுக்கட்டை படங்கள் நன்றி : துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
5 comments:
Most of the tamils, living in abroad, have diabetes. Anyway the thought of Aadikkuul brings me our life in 60's and 70,s in SriLanka.
Even I am a fun of MURUNKAI ILAAIK KANCHIK KOOL with pawns, I will try to have a glass of Aadikkook tomorrow after my insulin injection.
Thank for the Somasandara Pulavar´s song.
Andudan
Jeevakumaran
"பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே"
எங்கள் ஊர் கொழுக்கட்டை இதே வடிவம் தான். ஆனால் வெள்ளை நிறம். காரணம்ஈ, அரிசிமாவை மாத்திரம் பயன்படுத்தி நடுவில் தேங்காய்ப்பபூவை வெல்லப் பாகில் இட்டுச் செய்த கலவையை வைத்து அவித்தெடுப்பார்கள்.
வாங்கோ ஜீவகுமாரன்
இந்த நீரிழிவு பலரின் வாழ்வில் உலை வைத்து விடுகிறது என்றாலும் இண்டைக்காவது இனிப்பைத் தொடுங்கோ ;)
நல்ல படங்கள் சகோதரா பதிவும் நல்லயிருக்கிறது
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.