Author: சினேகிதி
•10:30 AM
குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி பட்டினியோடு வாழும் நம் சிறார்கள் நாளை வன்முறை நிறைந்தவர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.குண்டு, செல், துவக்கு, இரத்தம், தசைப்பிண்டங்கள், சடலங்கள், பசி, பட்டினி இவையெல்லாம் இந்தச் சிறார்களின் தினசரி வாழ்வின் அங்கங்களாக உள்ள இந்த நிலை இவர்களுக்குப் பழகிப்போனால் உயிரிழப்புகள் இனி இவர்களைப் பெரிதாகப் பாதிக்காமல் போய்விடில்......???????


வீட்டில் பசியால் துடிக்கின்ற பிள்ளைகளுக்காக வரிசையில் நின்று அரிசி கிடைத்தவரிடமிருந்து அதைக் கிடைக்காதவர் அடித்துப் பறித்துக்கொண்டதை நாங்கள் செய்தியாகப் படித்திருப்போம். மற்றவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும், குடும்பமிருக்கும் அவர்களுக்கும் பசியிருக்கும், வலியிருக்கும், உணர்வுகளிருக்கும் என்று சிந்திக்கத்தெரிந்த பெரியவர்களுக்கே இந்த நிலமை என்றால் சிறுவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பிறந்ததிலிருந்தே இந்தச்சிறுவர்களால் கைதுகளும், காணாமல் போதலும், ஆட்கடத்தல்களும், ஆயுதப்பிரயோகங்களும், பாலியல் வல்லுறவுகளும், உயிரிழப்புகளும்தான், ஐம்புலன்களிலும் உணரப்படுகிறது. ஆசையாகக் கதைசொல்லிச் சோறூட்ட அம்மா இல்லை. அரவணைக்க அப்பா இல்லை.கூட விளைாயட சகோதரர்களுமில்லை, நண்பர்களுமில்லை. குதூகலிக்க உறவினர்களுமில்லை. சத்தான சாப்பாடில்லை. உறங்கிப்போக உரிமையுள்ள வீடுமில்லை. இப்பிடி ஆரோக்கியமாக வளரவேண்டிய பிள்ளைகளுக்குத் தேவையான எதுவுமில்லாமல் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் சிறுவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்ப்போகிறது? கண்களில் சோகத்தைச் சுமக்கும் இந்தச்சிறுவர்களின் மனங்களில் ஆயிரம் கேள்விகள், ஏக்கம், கோபம்,விரக்தி, வெறுப்பு.அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி ,தங்கை ,அயலவர் ,உறவினர் இப்படி கண் முன்னாலே கொல்லப்பட்டவர்களின் கடைசி அலறல்களையும் அவலங்களையும் இன்னும் முதல்தடவையாக உணர்பவர்களாக காட்சியளிக்கும் இந்தச்சிறார்களின் மனங்களில் யுத்தத்தின் வடுக்கள் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. இதன் மறைமுகப் பாதிப்புகள் நமக்கு இப்போது விளங்காவிட்டாலும் இதன் நீண்டகாலப்பாதிப்புகள் நாமெண்ணிப் பார்க்காத அளவுக்கு கொமடூரமானதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் இப்போதிருந்தே அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஒரு வன்முறை நிறைந்த சமுதாயத்தை வரவேற்பவர்களாகிவிடுவோம் நாங்கள்.





10 வயதிலெல்லாம் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? நிச்சயமாக இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக தந்தையாகவிருக்கவில்லை. தாய் தந்தை இருவரையும் போரில் அல்லது சுனாமியில் தொலைத்துவிட்டு தன்னிளைய சகோதரர்களுக்கு குளிப்பாட்டி, உணவூட்டி, பாடசாலைக்கு அனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை.எதற்கும் அம்மாவை அப்பாவை எதிர்பார்த்துக்கொண்டும், செல்லம் கொஞ்சிக்கொண்டுமிருக்கும் விளையாட்டுத்தனமாக இருக்கவேண்டிய 10 வயதில் ஒரு தாயின், தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள். ஆதரவு தேவைப்படும் நிலையிலிருக்கும் இந்தச்சிறுவர்கள் ஆதரவு வழங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இந்தச்சுமை அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது?

ராமேஸ்வரம் படத்தில் ஒரு காட்சியில் சிறுவர்கள் சிலர் "ஆமி - புலி " விளையாட்டு விளையாடுவினம். "நாங்கள் புலி இவங்கள் ஆமி ; இது எங்கட machine gun" ஒருவன் துரத்திக்கொண்டுபோய் சுட மற்றவன் துடிதுடித்துச் சாவது போல் அவர்களது விளையதட்டுத் தொடரும்.போர் இவர்களின் வாழ்வில் ஊறியிருக்கு.இது இன்று நேற்றல்ல சில தசாப்தங்களாகவே துவக்கு செல் குண்டுச்சத்தம் டாங்கி பீரங்கி இவைகளெல்லாம் சிறுவர்களின் விளையாட்டில் முக்கிய அங்கம் பெற்றுவிட்டன. 93ம் ஆண்டென்று நினைக்கிறன். சாவகச்சேரியில் மாமா வீடு செல்களால் சல்லடையாக்கப்பட்டு வீட்டில் தனித்திருந்த மாமாவைப் பொறுக்கித்தான் கட்டி வைத்திருந்தார்கள். அன்றிலிருந்தே மச்சானின் விளையாட்டுப் பொருட்களில் அவன் பொறுக்கி வைத்திருந்த சன்னங்கள் தனித்துவமானவை.அவன் அந்தச் சன்னங்களை வைத்து நிறைய வித்தைகள் காட்டுவான். மாலைகூடக் கட்டி வைச்சிருந்தான் ஒரு விடுமுறையில். சிறுவர்களின் விளையாட்டு இப்படி இருக்கையில் சிறுமிகளின் விளையாட்டு எப்படியிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.....பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண்ணின் நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்குமோ இச்சிறுமிகளின் விளையாட்டு? கணவனை பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாயின் அவலநிலையைக் காணலாமோ இவர்களின் விளையாட்டில்? பசியில் அழும் குழந்தையின் கண்ணீரை விரட்ட வழிதேடும் தாயின் போராட்டமா இருக்குமோ? அல்லது படிக்க முடியாமல் பல நாளும் பூட்டியிருக்கும் பாடசாலையை வெறித்துநோக்கும் மாணவியின் விரக்தியைக் காட்டுவதாக இருக்குமோ?

அடிக்கடி குண்டுவெடித்து மனிதர்கள், வீடுகள், வாகனங்கள் சிதறுவதையும், கொலைகளையும், கொள்ளைகளையும், பலாத்காரங்களையும், காட்டிக்கொடுத்தல்களையும், பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்தவர்கள் ஒருநாள் இவற்றிலிருந்து விடுபட்டு எங்களைப்போல புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் பாடசாலைக்குச் செல்லும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது ஒரு சின்னச் சத்தம் கூட இவர்களுக்கு பலமான அதிர்வை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக விக்டோரியா தினம், புத்தாண்டு தினம், கனடா தினம் போன்றவற்றுக்கு நாங்கள் வெடிக்கும் வாண வேடிக்கைகளின் சத்தம் கூட ஆட்லறி செல் சத்தமாகக் கேட்கக்கூடும். பாடசாலையில் படிக்கும் பாடங்கள் விளங்காமல் காதில் குண்டுச்சத்தமும் அவலக்குரல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கலாம்.பயங்கரமான கற்பனைகள் எண்ணங்கள் தான்தோன்றித்தனமாக உருவாகலாம். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு எரிமலை வெடிக்கமுதல் எப்படி தீக்குழம்புகள் கோரநாக்கை நீட்டிக்கொண்டிருக்குமோ அப்படியிருக்கலாம் இவர்களின் மனசு. ஒருநாளைக்கு வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறக்கூடும் இவர்கள். இவன்கள் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு gangster ஆகத் தென்படலாம். ஆனால் இவர்களுடைய வன் செயல்களின் ஆரம்பப்புள்ளி நெல்லியடியின் ஒரு மூலையில் ஒரு இராணுவச்சிப்பாயின் பாலியில் இச்சையின் வடிகாலாயிருக்கலாம்.அல்லது கண்முன்னே தன் தாயோ சகோதரியோ கதறக்கதற பலாத்காரப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டவன் தான் ஒரு abuser ஆவதன் மூலம் தானிழந்த ஏதோ ஒன்றைத் திரும்பப் பெற துடிப்பது போல இந்தச்சிறுவர்களும் பிற்காலத்தில் ஒரு வன்முறையாளனாக வல்லுறவு கொள்பவனாக மாறலாம்.





இந்தச்சிறார்கள் அனைவருக்கும் உளவியல் நிபுணர்களின் உதவி மிக மிக அவசியமானதொன்று. உளவியல் நிபுணர்கள் என்றால் பைத்தியத்தைக்குணப்படுத்துபவர்கள் அவர்களின் உதவி எங்கள் குழந்தைகளுக்குத் தேவையில்லை என்பது பலரின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் கண்முன்னால் நடந்த கொடூரங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்த இந்தச் சிறுவர்கள் epilepsy , mild seizure, multiple personality disorder, split personality, antisocial personality , anxiety disorders, sleeping disorders போன்ற psychological அல்லது neurlogical disorders களால் பாதிக்கப்படக்கூடியவர்களாக, ஆக்ரோசம் நிறைந்தவர்களாக, பழிவாங்கும் உணர்ச்சி நிறைந்தவர்களாக, போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடியவர்களாக உருவாகிவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது.தற்போதைய காலகட்டத்தில் பண உதவி மட்டுமே வழங்கக்கூடியபோதும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உளவியல் நிபுணர்களிடமிருந்து இந்தச்சிறுவர்களுக்கு உதவக்கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய ஆவணங்களைப் பெற்று ஈழத்திலுள்ள உளவியல் நிபுணர்களுக்கு வழங்குவதன் மூலம் அங்குள்ள உளவியல் நிபுணர்களை ஊக்குவிக்கலாம்.அரசாங்க உதவிகளும் தேவையான மூலங்களும் (resources ) ம் இல்லாதபோது மாற்றுவழிகளைக் கண்டறியவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். மருந்துகளை விட இந்தச் சிறுவர்களுக்கு அத்தியாவசியமானது அன்பும் அரவணைப்பும்தான்.எனவே ஆதரவில்லாத குழந்தைகளுக்கு அதை வழங்குவதன் மூலம் அவர்களை உளவியல் தாக்கங்களிலிருந்து மெதுவாக மீட்டெடுக்கலாம்.குழந்தை இல்லாதவர்கள் ஆதரவு வேண்டிநிற்கும் இந்தச்சிறார்களுக்கு பெற்றோராகலாம். முகம்தெரியாத ஒரு குழந்தையை மானசீகமாகப் பிள்ளையாக தம்பியாக தங்கையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான பண உதவியை வழங்குவதே இப்போது நாம் செய்யக்கூடியதாகவுள்ளது.மாதமொரு அன்பான விசாரிப்புகள் அக்கறை அடங்கிய ஒரு கடிதம் ஒரு தொலைபேசி அழைப்பு சாப்பிட்டியா என்ற ஒரு சொல் இவைகளே அவர்களின் மனச்சிதைவைப் பாதியாகக் குறைத்துவிடும்.

பொதுவாக மனவழுத்தம் மனவிறுக்கம் போன்றவை தொடக்கம் பாரிய மனச்சிதைவால் அவஸ்தைப்படுபவர்களுக்கென்று Behavioral therapy, Cognitive therapy, psychoanalytic therapy, psychodynamic therapy இப்படிப்பலவிதமான Psychotherapy (talk therapy) பல தெரப்பிகளுண்டு. ஆனால் இவையெல்லாம் அநேகமாக என்னகாரணத்தால் உளவியல் பாதிப்பு ஏற்பட்டதென்று கண்டறிந்து அதறக்கு ஏற்றமுறையில் ஆலோசனை வழங்கப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் போரும் போரால் வந்த இழப்புகளும் பயமும் தான் மனச்சிதைவுகளுக்கு காரணம்.இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் சிரமங்களை தெளிவாக எதிர்நோக்க ஊாக்கமளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வியில் ஆர்வத்தைத் தூண்டவேண்டும். மனவழுத்தத்துக்குள்ளான பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் இனங்காணப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்த இசை பிடித்த விளையாட்டு உணவு வழங்கப்பட்டு மனதில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும். கிபிர் சத்தம் கேட்டாலே செஞ்சோலையில் இன்னும் சில குழந்தைகள் மயக்கமடைகிறார்களாம் இப்படியான பயம் போக்கப்படவேண்டும். இதெல்லாம் செய்து முடிக்க நிறைய நேரமும் ஆளணியும் தேவை.
ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய உளவியல் நிபுணர்கள் (ஆலோசகளர்கள்) தான் இருக்கிறார்கள். தற்போது யுத்தத்துக்குள் வாழப்பழகியிருக்கும் மக்களில் அநேகமாக எல்லாரும் ஏதோவொரு விதத்தில் மனச்சிதைவுக்குள்ளாகித்தானிருப்பார்கள். ஒரு சில உளவியல் ஆலோசகர்களால் எல்லோருக்கும் ஆலோசனை வழங்கமுடியாது. ஏற்கனவே வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறை, உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கான தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் மனச்சிதைவால் அல்லல்படும் மக்கள் வைத்தியசாலைகளுக்கு வருவது அதிகரித்துள்ளதென்று அங்குள்ள வைத்தியர்கள் கூறுகிறார்கள். இந்நிலமையில் எங்களால் செய்யக்கூடியது என்ன?
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உளவியல் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து எப்படி உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டோருக்கு உதவலாம் என்ற திட்டங்களை வகுத்துவிட்டுப் பின்னர் குழுக்களாகப் பிரிந்து குடும்பம் குடும்பமாகவும் தேவைப்படின் தனித்தனியாகவும் ஆலோசனை வழங்கலாம். மருந்துகளை மட்டும் நம்பியிராமல் ஒருவரையொருவர் எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்பது பற்றிக் கலந்துரையாடலாம். முக்கியமாக அன்பு ,அடையாளம் , ஆதரவு, வாழ்க்கைக்கான அர்த்தம், அங்கீகாரம், தங்களுக்காக அழ சிரிக்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை,சிந்தனைகளைப் புதுப்பிக்க தளம் இவையெல்லாம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

போரின் விளைவுகளில் ஒன்றான இந்த உளவியல் தாக்கம் ஒரு சங்கிலித்தொடர் போன்றது. அது குழந்தைகளை மட்டுமன்றி வளர்ந்தோர்களையும் இறுகக் கட்டியே வைத்திருக்கிறது.ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என எல்லோரையும்தான் பாதிக்கின்றது. கடல்கடந்து புலம்பெயர்ந்து வாழும் எங்களையும்தான் பிணைத்துவைத்திருக்கிறது. அடிப்படை வசதிகளாக உணவு உடை உறையுள் இன்றி நம்முறவினர்களும் தெரிந்தவர்களும் இறந்துபோக விட்டுவிட்டு எங்களால் நிம்மதியாக இருக்கமுடியுமா? குற்றஉணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடாது? சிந்திப்போம்.செயற்படுவோம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து மனிதராக வாழ முற்படுவோம்.

வளரும் பயிர்கள் வாடாதிருக்க
உளமும் உடலும் நோகாதிருக்க
உறவாய் உரமாய் நாமிருப்போம்


** இது பழைய பதிவுதான். தத்தக்க பித்தக்காவில் வாசித்திருப்பீர்கள் சிலர். மணிமேகலாப்பாட்டியின் பதிவைப் பார்த்ததும் இங்கு போடணும் என்று நினைச்சன்.**
|
This entry was posted on 10:30 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On August 6, 2010 at 7:38 PM , யசோதா.பத்மநாதன் said...

நிறையச் செய்ய இருக்கிறது சினேகிதி!

புலத்திலிருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிள்ளையின் எதிர்கால நலத்தை தத்தெடுத்துக் கொண்டாலே தீர்ந்து விடாதா சோகம்?

யார் பெத்த பிள்ளைகளோ? அப் பிள்ளைகள் பொருட்டுத் தாய் தந்தையர் எத்தனை கனவுகளை வளர்த்திருப்பர்?