ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப் பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்!
பாதையிலே வீடிருக்க
பழனிச் சம்பா சோறிருக்க
எருமைத் தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டிச் சீமை?
எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சு நிக்கயிலே
வெட்டு வெட்டு எங்கிறானே
வேலையத்த கங்காணி!
தோட்டம் பிரளியில்லே
தொர மேல குத்தமில்லே
கங்காணி மாராலே
கன பிரளியாகுதையா!
அட்டைக் கடியும்
அரிய வழி நடையும்
கட்டை இடறுதலும்
காணலாம் கண்டியிலே!
ரப்பரு மரமானேன்
நாலுபக்க வாதுமானேன்
இங்கிலிசுக் காரனுக்கு
ஏறிப் போகக் காருமானேன்.
இது பெருந்தோட்டத்தின் கழிவிரக்கப் பாடல்களில் ஒன்று.தாயகத்தையும் தாயையும் விட்டு வந்தது பற்றியும்; வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்க அவற்றை விட்டு விட்டு வந்தது பற்றியும்;மனிதத் தன்மையற்று இருக்கும் கங்காணி பற்றியும்; நடந்து செல்வதில் ஏற்படும் இடறுபாடுகள் பற்றியும் கூறி; ரப்பர் மரத்துக்குத் தன்னை உவமிக்கிறாள் இக் கூலிப் பெண்.எப்போதும் வெட்டுக்கு இலக்காகும் ரப்பர் மரத்தைப் போல் தான் இருப்பது பற்றியும்; மற்றவர்கள் சுகத்துக்காக இருக்கும் காரைப் போல் தான் ஆகிவிட்ட சோகத்தையும் கூறும் இச் சிறிய பாடல் கண்டிப் பெண்களின் ஒரு கால கட்டத்துத் துயர நிலையை எளிமையாகக் கூறுகிறது.
அருஞ்சொல் விளக்கம்:-
இடுப்பொடிஞ்சு - மிகக் களைத்துப் போய்
கங்காணி - பெருந்தோட்டத்து மேற்பார்வையாளன்
பிரளி - பிரச்சினை
தொர - ஆங்கிலேய உத்தியோகத்தன்
வாது - (மரக்)கிளை
இங்கிலிசுக்காரன் - ஆங்கியேய உத்தியோகத்தன்.
6 comments:
பாடலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, ரசித்தேன்
மிகவும் ரசித்தேன்,,,சொல்லாடல்கள் மிக அருமை....பகிர்ந்தமைக்கு நன்றி
எனது தகப்பன் மாத்தளையில் ஆசிரியராகக் கடமையாற்றியதால் மலையகப்பாடல்கள் பல அறிந்துள்ளேன்.அப்பா அடிக்கடி பாடும் இரண்டுவரிகள் இன்னமும் மனதில் உள்ளது.
சுற்றிவரமுள்வேலி சுளண்டுவர முள்வேலி எங்கும் ஒரேவேலி எதாலபுள்ள நாவரட்டும்
பள்ளிக்குச்செல்கையில் என் துடுக்கடக்கி பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே
இந்தப்பாடல்களை முழுமையாக எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
வர்மா
பிரபா, ஆரூரன் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
வர்மா,அந்தப் பாடல்கள் பற்றி முழுமையாக எனக்கும் தெரியவில்லை.பள்ளிக்குச் செல்கையில்... என்பது நல்லதொரு பாடல்.ஆனால் அது நாட்டார் பாடல் இல்லை என்று நினைக்கிறேன்.
சிறு வயதில் பாடசாலைப் புத்தகம் ஒன்றில் படித்த இன்னொரு நாட்டார் பாடல் இருக்கிறது.தன் ஏழைக் கணவனைப் பார்த்து இரங்கி மனைவி பாடுவதாக அமைந்தது.
'......
மாடுமோ செத்தல் மாடு
வண்டியோ ஓட்டை வண்டி
மாடிழுக்க மாட்டாமல்
தானிழுத்து மாயுறாண்டி
........'
உங்களுக்குப் படித்த ஞாபகம் இருக்கிறதா?
மாடுமோ செத்தல் மாடு
வண்டியோ ஓட்டை வண்டி
மாடிழுக்க மாட்டாமல்
தானிழுத்து மாயுறாண்டி
உன் புருசன்
நன்றாக ஞாபகம் உள்ளது
அன்புடன்
வர்மா
....அடடா அடடா அண்ணாமலை
அரைக்கட்டிச் சவுக்காரம் என்னாவிலை....
என்ற பாடல், மலையகத்தில் நானிருந்த காலத்தில் என் மாணவர்கள் பாடுவார்கள்.
மீதிவரிகள் நினைவில்லை.(வயதும் போகுது).
நன்றி.