Author: கானா பிரபா
•11:45 PM
"அக்கா! உங்கட வீட்டிலை பெரிய "ஏதனம்" ஏதாவது இருக்குதா பொங்கல் பொங்க?

மேற்குறித்த ஈழத்துப் பேச்சாடல் அமைப்பில் வரும் "ஏதனம்" என்பதன் பொருளாக அமைவது பாத்திரம் என்பதாக அமைந்திருக்கும். அதாவது பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஏதனம் என்ற மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்துவார்கள். பாத்திரம் என்பதைத் தவிர வேறு பொருட்களுக்கு ஏதனம் என்ற சொல் அமைவதாக எனக்குத் தெரியவில்லை (தெரிந்தால் சொல்லலாம்)

"ஏதேனும்" என்ற சொற்பதம் "ஏதனம்" என்று மருவியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகராதியிலும் இந்தச் சொல் காணக்கிடைக்கவில்லை.

தமிழக வழக்கில் அண்டா என்று சொல்லும் பாத்திரத்தை ஈழத்து மொழி வழக்கில் சருவச் சட்டி என்று பயன்பாட்டு மொழியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

அலைகள் இணையத்தில் வெளிவந்த
"காய்ச்ச நேரமில்லா கனகமக்கா" என்ற கவிதையை சன்னதமாடி என்பவர் இப்படி எழுதியிருந்தார். அதை ரசித்துப் பகிர்கின்றேன்.

சோத்துச் சட்டி சருவச்சட்டி
மச்சக்கறிக்கு தனிச்சட்டி
இது பொரியல் சட்டி
அது சொதிச்சட்டி
பெரிசா இருக்கிறது குழம்புச்சட்டி
கைபிடி இல்லாதது பால்கறிச் சட்டி
மூடியுள்ள சட்டி புட்டவிக்க
பானை சட்டி பொங்கலுக்கு
மரக்கறிச்சட்டி எப்பன் பெரிசு
புளியாணச் சட்டி இஞ்சாலை
திவசச்சட்டி செற் தனி
மச்சம் மாமிசம் படையல் சட்டி
கஞ்சி வடிக்க பழைய சட்டி
சாதி கூடியவைக்கு தனிச்சட்டி
கொஞ்சம் குறைஞ்சவைக்கு இன்னொன்று
நல்லாக் குறைஞ்சவைக்கு பழைய சட்டி
வேறை சிலருக்கு எவர்சில்வர் சட்டி
கோயிலுக்கு நாலு சட்டி
விரதத்துக்கு விசேடமான சட்டி
காஸ் அடுப்புச் சட்டி புதிசு
சபை சந்திக்கு பதினாறு சட்டியள்
தோட்டத்துக்கு தண்ணி ஊத்த தனிச்சட்டி
குருவிக்கு தண்ணி வைக்க இன்னொண்டு
குடிகாரருக்கு தனிச்சட்டி
கொலக்சனுக்கு வாறவைக்கு ஒரு சட்டி
அங்கை கிடக்குது பாயாசச்சட்டி
மேசைக்குக் கீழை முற்றிலும் புதுச்சட்டி
பறணிலை பலகாரச்சட்டியள்
மேசைக்கு மேலை மூடிச் சட்டியள்
கட்டிலுக்குக் கீழை சருவச்சட்டியள்
சாமி அறையிலை புதுச்சட்டியள்
படுக்கையறை முழுதும் பத்து பதினைஞ்சு
பறணிலை கிடக்கு அண்டா சட்டி
இடியப்பச் சட்டி தோசைச்சட்டி
றவ்வைச்சட்டி
பொரியல் சட்டி புண்ணாக்கு சட்டி
அவியல்சட்டி துவையல் சட்டி
அடுத்தவீட்டுக்கு அனுப்பும் சட்டி
பரிசோடை வாற குடும்பத்துக்கு டிசைன்சட்டி
பரிசில்லாமல் வாறவைக்கு புறம்பான சட்டி
ஒழுங்கா வட்டி தாறவைக்கு ஒருவகைச் சட்டி
ஒழுங்கில்லா மனிசருக்கு ஓட்டைச் சட்டி
முட்டைச் சட்டி முருங்கைக்காய் சட்டி
பெட்டைக்கு சீதனம் குடுக்கும் சட்டி
அப்பச் சட்டி உறொட்டிச் சட்டி
காலைச்சட்டி மாலைச்சட்டி
இரவு நேரம் இன்னொரு சட்டி
வெளி நாட்டு காசையெல்லாம் சட்டிகளாக்கி
காய்ச்ச நேரமில்லா கனகமக்கா
இருக்க இடமில்லாமல்
வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தாள்.

நன்றி: கவிதை பகிர்ந்த அலைகள் இணையம், படம் பகிர்ந்த கூடல் இணையம்

This entry was posted on 11:45 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On January 4, 2010 at 1:08 AM , புதுகைத் தென்றல் said...

ஏனம் அப்படின்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.

சட்டியைப்பத்தின கவிதை சூப்பர் பாஸ்

 
On January 4, 2010 at 1:53 AM , ஆயில்யன் said...

யாணம் அப்படின்னு சொல்லுவோம்ல!

யம்மோவ் என்னோட சாப்பிடற யாணம் எங்கன்னு கேப்பேனாக்கும் ஊர்ல ! :)

 
On January 4, 2010 at 2:05 AM , கதியால் said...

ஏனம், ஏதனம் எங்கள் ஊர்களிலும் பாவிக்கப்படும் சொற்கள். “ஏனம் ஒண்டும் இல்லாம் பிறகேன் பிள்ளை பால் வாங்க வந்தனி..” என்று எங்கள் முதியவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு. கவிதை தலை சுத்துது தலைவா...!

 
On January 4, 2010 at 3:20 AM , கானா பிரபா said...

வருகைக்கு நன்றி புதுகைத்தென்றல், ஆயில்யன் மற்றும் கதியால்

ஏனம் எங்கள் ஊரிலும் பாவிக்கப்படுவதாக கதியால் சொல்லியிருக்கிறீர்கள், எனக்கு உது இப்ப தான் புதுச் சொல் ;)

 
On January 4, 2010 at 3:23 AM , கலை said...

'ஏதனம்' என்பதுபோல், 'இயத்து' என்ற சொல்லும் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் அது எப்படி வந்த சொல்லென்று தெரியவில்லை. மேசை, சப்பாத்து என்ற சொற்கள்போல, 'இயத்து'ம் ஏதாவது போர்த்துக்கீச, ஒல்லாந்து தேசத்தினர் அறிமுகப்படுத்திய சொல்லா என்று தெரியவில்லை. ”அந்த இயத்தை எடுத்தா, கொஞ்சம் சொதி குத்தித் தாறன்” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

 
On January 4, 2010 at 4:07 AM , Paheerathan said...

"ஏனம்" என்ற சொல் மட்டக்களப்பு பகுதியிலும் பரவலாக பாவிக்கப்படுகிறது, இன்னும்

 
On January 4, 2010 at 8:57 AM , Anonymous said...

ஏதனும் என்றால் ஏதாவது என்று பொருள். பாத்திரத்துக்கென்று சொல்லேலாது பாருங்கோ. இயத்து என்பது பாத்திரத்தைக்குறிக்கும்

 
On January 4, 2010 at 5:18 PM , Haran said...

குண்டான் எங்கே? :P

 
On January 9, 2010 at 11:44 AM , சங்கர் said...

ஏனம் எண்டா சட்டியதான் மட்டக்களப்பு பக்கம் சொல்லுவாங்க

எங்கயோ பார்த்த கவித