பின்னை பேந்து சந்திப்பமே?
கொச்சையான பேச்சு என்றும் பிழையானது என்றும் எண்ணி எம்மில் பலரும் தங்களுடைய பேச்சுவழக்கைப் பொதுவில் பதிவதில்லை. இன்று இணையத்தினூடாகப் பல்வேறு அகராதிகளையும் கண்டு நாம் நாளாந்தம் பாவிக்கும் பேச்சுவழக்குச் சொற்கள் பலவும் தூய தமிழ்ச் சொற்களே என்று காண்கின்றோம். இருந்தாலும் வழுவுடன் ஒலிக்கும் சொற்களும் எங்களிடம் உள்ளனதான்.
சீலை, பிடவை, சாவல், கிடாய், பொக்குள், வெள்ளாப்பு/வெள்ளெண<வெள்ளென, பகிடி<பகடி இந்தச் சொற்களை எல்லாமே தூயதமிழ், அவற்றில் சில கொஞ்சம் திரிபடைந்தவை என தெரியாத மயக்கம் எமக்கு. தமிழக நூல்களில் வரும் சொற்களே எடுப்பானவை, சரியானவை என ஈழத்திலே பண்டிதர் தொட்டு எல்லோருமே ஏற்றுக்கொண்டோம். மேற்குறித்த சொற்களை முறையே
சேலை, புடவை ,சேவல்,கடா,கொப்பூழ், விடிகாலை, கேலி என்று எழுதப் பழக்கப்பழகினோம். குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் எழுதுவதே சரியான தமிழ்ச்சொற்கள் என்ற மயக்கத்தில் இருந்தோம்.
«இல்ல நீ கதைக்கின்ற கதையிலையே கனக்க நல்ல தமிழ்ச்சொல்லு இருக்கு»
என்று இணையம் இன்று காட்டுகின்றது.மேற்கூறிய நம் பேச்சுவழக்கு சொல்களை இணையத்தில் தமிழில் எழுதித்தேட அவை தூயதமிழ்ச்சொற்களே என்பதை அறியலாம்.
இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் பின்னேதான் எனக்கு «கலாய்த்தல்» என்ற சொல்லு அறிமுகமானது. ஏற்கெனவே சென்னைத்தமிழில் இருந்தது, திரைப்படங்கள் வழியாக வந்து உள்ளிட்டது. அது பலநூற்றாண்டுகளின் முன்னே பேசப்பட்டது என்று இன்று அறியக் கூடியதாக இணையம் வழி காட்டுகின்றது.
சரி சொல்லவந்த சங்கதியைச் சொல்கின்றேன்.
இன்னுமொரு வலைத்தளத்தில் வந்த என் இடுகை இது. எனது கேள்விக்கு உரிய மறுமொழியைத் தேடி இங்கும் இதை இடுகின்றேன்.
«பின்னை பேந்து வாறன்!”
«பின்னை பேந்து என்ன புதினம் உங்ஙினை?»
«பின்னை பேந்து ஆராம் மாப்பிள்ளை?»
«பின்னை பேந்து எண்டிற கதையெல்லாம் பறையாதை!»
«பின்னை பேந்து எப்ப நீ வாங்கினதைத் திருப்பித் தருவாய்?»
«பின்னை பேந்து தீவாளிக்கு ஊருக்கு வருவன்.»
«பின்னை பேந்து»இது யாழ்ப்பாணத்தமிழில் அடிக்கடி கேட்கக்கூடிய சொற்றொடர். பின்னை என்பது பின்னே என விளங்கிக் கொண்டாலும் இந்தப் பேந்து என்ற சொல்லு நம்மில் பலரையும் பேந்தப் பேந்த முழிக்க விட்டிருக்கும்.
இருந்தாற்போல ஒருக்கால் அப்பர் தேவாரம் ஒன்றின் வரிகள் எட்டி என் மனதைத் தொட்டன.
«பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்»
இவ்வரிகள் «ஓ அப்படியோ? அப்படியும் இருக்குமோ?» என என் சிந்தையைக் கிளறின.
பெயர்ந்து>>பேர்ந்து>>பேந்து???
எண்பதுகளின் பின்னை பேந்து,
வீடுவிட்டு, ஊர்விட்டு, நாடுவிட்டுப் புலம்பெயர்ந்த எம் நாளாந்தப் பேச்சில்
இடம்பேர்ந்து போனகதை கனக்க வரும்.
இடம் பெயர்ந்து என்றும் சொல்வதுண்டு.
இடம் பெயர்ந்து என்பதைக் கெதியாகச்(கதியாக, விரைவாக) சொல்லும்போது இடம்பேர்ந்து என்று வரும்.
«உங்கடை பெயரென்ன?»
என்று கேட்பதை விட
«உங்கடை பேரென்ன?»
என்று கேட்பதுதான் ஈழத்தமிழில் கூடுதல் வழக்கம்.
இடம் பேர்தல் என்ற பதத்தை விளங்கிக் கொண்டு புழங்குகின்றோம்.
காலம் பேர்தலைப் பேந்து என விளக்கமறியாமல் புழங்குகின்றோம்.
இந்தப் பெயர்ந்து என்பதே பேர்ந்து எனத் திரிந்து ,(பின்னை பேந்து)பேந்து எனவுந் திரிபடைந்திருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அப்ப பின்னை பேந்து இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
ந.குணபாலன்
0 comments: