பூருதல்!
இந்தச்சொல் புகுதல் என்று திருத்தமாக சொல்லாது ஈழத்தவர் கொச்சையாக சொல்கின்றோம் என எண்ணியிருந்தேன்.
«வீடு குடிபூருதல்/குடிபூரல்»
«ஆளில்லா வீட்டிலை ஆரோ பூர்ந்து களவெடுத்திட்டான்»
«ஆடு வேலிப்பொட்டுக்குள்ளலை பூர்ந்து மேயுது»
«கறையான் புத்துக்குள்ளை பாம்பு பூர்ந்திட்டுது»
«ஐயோ, ஊருக்குள்ளை ஆமி பூர்ந்திட்டான்»
« வீடு பூர்ந்து அடிப்பன் வடுவா»
இப்படியெல்லாம் நாளாந்தம் கதைபேச்சில் சொல்வோம்.
திரு. இராம கியின் வளவு என்னும் தளத்துக்குள்ளே பூர்ந்து உலாத்தியதில்;
இல்லை அந்தச்சொல் திருத்தமானதுதான் என்று நினைத்தேன். பெரிய புளுகமாய்(புளகமாய், மகிழ்ச்சியாய்) இருக்கின்றது.
புதன்கிழமை ஓகத்து 8ந்திகதி 2007 இல்
வேங்கடத்து நெடியோன்- 1 என்று தலைப்பிட்ட இடுகையில் பின்னூட்டமாக ஓரிடத்தில் இப்படி விளக்கம் தருகின்றார். நன்றி இராம கி ஐயா!.
« சிவனை உடம்பு விரும்பும் வழிமுறை என்பது மூச்சுப் பயிற்சியாகும். [இந்த மூச்சுப் பயிற்சியின் தமிழ்வழி விளக்கத்தை இங்கு சொல்ல வேண்டும். உய் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் (ஊய்தல் வினைச் சொல் வழியே) உயிர் என்னும் சொல் பிறந்தது போல், புர் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் பூருதல் என்ற வினைச்சொல் ஊதுதல் என்ற பொருளை உள்நிறுத்தும். இது கொஞ்சம் திரிந்து, பூரித்தல் என்ற வினைச்சொல் தொனித்தல் என்ற பொருளிலும், மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளிலும் எழும். பூரி என்ற பெயர்ச்சொல் ஊது கருவியை அடையாளம் காட்டும். பூரிகை என்பதும் ஊதுகுழல் ஆகும். பூரகம் என்பது மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பூருதல் என்ற வினைச்சொல் தமிழில் அவ்வளவு பயனாகாமல், வடமொழிக்குப் போய், பூரணித்து என்று திரிந்து பின் ப்ராணிக்கும் போது உயிர்மூச்சு இழுப்பதைக் குறிக்கும். ப்ராணன், ப்ராணி என்ற சொற்களெல்லாம் எழும். பூரணனைக் கட்டுப் படுத்தும் பயிற்சியை, வடமொழியில் "ப்ராணாயாமம்" என்றே சொல்லுகிறார்கள். பூரணன் என்பது உடலெங்கும் நிறைந்திருக்கும் உயிர். யாமம் என்பது கட்டுதல். (யாப்பு என்பதும் கட்டுதலே.) பூரணக் கட்டு என்பது மூச்சுப் பயிற்சியே.]»
இங்கே பூருதல் என்ற சொல்லிலிருந்து திரிபடைந்த பூரித்தல்,பூரகம் என்ற இரு சொற்களும் மூச்சை உள்ளிழுத்தல் எனச்சொல்லப்படுகின்றது. பூருதல் என்ற வினைச்சொல்லும் உள்ளிழுத்தல் என்ற சொல்லுடன் நெருங்கியுள்ளது.
பூருதல் என்ற பேச்சுவழக்குச்சொல் உள்நுழைதல்,உள்ளிடுதல்,புகுதல் என்ற கருத்துக்களில் சொல்லப்படுகின்றது.
இப்படியாக நான் விளங்கிக்கொண்டேன்.
«பூராயம் பிடித்தல்»
இதற்கு பூர்ந்து ஆராய்தல் என்ற கருத்து. உள்நுழைந்து ஒருவரின் இரகசியங்களை அறிதல், ஒருவர் தனக்கு தேவையற்ற விதயங்களில் மூக்கை நுழைத்தல் என இது எரிச்சலை வெளிப்படுத்தும் கூற்றாகும்.
பூறுதல் என்று எழுதித்தேட இணையம் இந்தப்பக்கத்தை காட்டியது. இதிலிருந்து படியெடுத்து வெட்டி ஒட்டினேன்.tamilvu.org என்ற இணையத்தளத்தின் முகவரியின் தொடசலையும்(link)பதிந்தேன். ஆனால் அம்முகவரிக்குள் பூரமுடியாமல் இருக்கின்றது.
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=194&pno=70
புள்-புழு-புகு-புகுது-புகுரு-பூர். பூர்தல் = உட்புகுதல்.
பூர்-பூரான் = மண்ணிற்குள் புகும் நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் = உருவத்துளைத்தல். மூக்குப்பூறி-மூக்குப்பீறி. பூறு- பீறு.
ந.குணபாலன்
0 comments: