•11:27 AM
இது ஒரு சுவையான கவிதை. இதை எழுதியவர் நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் அவர்களின் மகனார் இளமுருகனார் ஆவார்.
செல்வஞ் செல்வாக்காய் வாழ்ந்த ஒரு சீமான். அவரைச் சார்ந்து வாழ வேண்டிய குமுகக் கட்டுப் பாட்டில் இருந்த பறை முழக்கம் செய்யும் ஒரு கலைஞர் .
பணத்தால் பெரியவர் மற்றவரை எதற்கோ கை நீட்டி அடித்து விட்டார். மற்றவரின் ஏலாத்தன்மை இங்கே கவிதையாகி வழிகிறது.
காரிரங்கும் கொடைமுதலி நீயொறு த்தால்
நானழுவேன், கலகமில்லை.
வாரிரங்கும் பறைமுகத்தில் வளைகோலால்
நின்மனையில் மெல்லத்தட்டில்....
ஊரிரங்கும், உறவிரங்கும், மனையிரங்கும்,
பனையிரங்கும் உண்மை ஐயா!
ஓரிரங்கலன்றி மதி, திதி தோறும்
இரங்கலெனில் யார் சமர்த்தன்?
விளக்கம்:
கொடையில் சிறந்த உம்மைக் கண்டு பொறாமை கொண்ட கருமுகில் அழும்.
அப்படிக்கொத்த இரக்க குணமுடைய குமுகத்தில் முதன்மையானவரே நீர் (ஒறுத்தால்)கோபித்தால் நான் அழுவேன், அதனால் ஒரு கலகமும் உருவாகாது.
எனது பறையை இழுத்துக் கட்டியிருக்கும் வார், நோக்காடு தாங்கேலாமல் அழுகின்றது. அப்படியான பறையின் முகத்திலே வளைந்த கோலால் நான் வந்து உமது வீட்டிலே மெல்லத்தட்டினால் ( நீர் மண்டையைப் போடும் நேரம்)............
இந்த ஊரே அழும்,
உமது உறவுகள் அழும்,
உம்முடைய வீட்டார் அழுவர்,......
ஊரழும்..சரி...
உறவு அழும்..சரி...
வீட்டார் அழுவர்..சரி..
அதென்ன பனையிரங்கும்?
பனை அழுமாமோ ?
என்ன குறளிக் கதையிது?
கேளுங்கள் புலவரின் பகடியை....
பனை கள்+நீர்=கண்ணீர் சொரியுமாம். இவர் குடிக்க வேண்டிய கள்ளுத்தண்ணி குடிப்பவர் இவர் இல்லாமல் வீணாகிச் சொரியுமாம்.
இது உண்மை ஐயா!
நீர் என்னை அடிக்க நான் அழுவது ஒருமுறை மட்டுமே.
நீர் என்னை அடிக்க நான் அழுவது ஒருமுறை மட்டுமே.
நான் பறையை அடித்தால் உம் வீட்டில் ஒருமுறை மட்டுமே ஒப்பாரிக்
குரல் கிளம்பும்? மாசாமாசம் வருகின்ற உமது செத்த திதிகளில் எல்லாம் ஒப்பாரிக் குரல் கிளம்புமே? அப்படிஎன்றால் யார் கெட்டிக்காரன்?
4 comments:
அருமையான பதிவு
நல்ல விளக்கம், நயத்துடன் உள்ள பாடல்.
அருமை
//ஊரிரங்கும், உறவிரங்கும், மனையிரங்கும்,
பனையிரங்கும் உண்மை ஐயா!//
ரசிக்கத் தக்க நல்ல நயம்!!