•2:43 AM
கடிதம் எழுதி, உறையிலிட்டு, முத்திரை ஒட்டி, முகவரி எழுதி, ஒரு செய்தி அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.
பதிலுக்காகக் காக்கி உடையோடு சைக்கிளில் வரும் தபாற்காரருக்காகக் காத்திருந்த காலங்களும் போயின.
பதிலுக்காகக் காக்கி உடையோடு சைக்கிளில் வரும் தபாற்காரருக்காகக் காத்திருந்த காலங்களும் போயின.
தந்தி, தபாலட்டை, ஏரோகிறாம் முதலியன தொடர்பு ஊடகத்தின் ஆரம்ப கால செயல் பாட்டில் முக்கிய பங்கு வகித்தவை. வீட்டுக்கு வீடு தொலைபேசி இல்லாதிருந்த காலத்தில் தபாலகம் ஒன்றே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இருந்த ஒரே வழி.
இன்றய சந்ததிக்கு தந்தி என்றால் என்னவென்றே தெரியாது என்னும் அளவுக்கு அது காலாவதி ஆகி ஆயிற்று பல வருடங்கள்.தொடர்பு சாதன வளர்ச்சி இல்லாதிருந்த காலத்தில் உடனடியாக ஒரு செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அறிவிக்க இந்தத் தந்தி சேவை பயன் பட்டது. உதாரணமாக ஒரு அவசர செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்ப வேண்டி இருந்தால் அனுப்புனர் தனக்கருகில் இருக்கும் தபாலகம் சென்று மிகச் சுருக்கமாக அனுப்ப இருக்கும் செய்தியையும் பெறுனரின் முகவரியையும் தபால் அலுவலருக்குத் தெரிவிப்பார்.தபால் அலுவலர் செய்தியைப் பெற்று சொற்களுக்கும் அனுப்பப் பட இருக்கும் இடத்துக்கும் (மைல் அளவு) ஏற்ற மாதிரியான கட்டணத்தினை அனுப்புனரிடம் இருந்து பெற்று பற்றுச் சீட்டை வழங்குவார்.
பின்னர் தபால் அலுவலர் அங்கிருந்து பெறுனரின் முகவரிக்கு அருகில் இருக்கும் தபாலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியையும் முகவரியையும் தெரிவிப்பார்.அங்கிருக்கும் அலுவலர் அதனைப் பெற்று உடனடியாக அந்தப் பெறுனரின் முகவரிக்குச் உரியவரை அனுப்பி செய்தியைக் கிடைக்கச் செய்வார். இதற்குச் சாதாரண தபால் கட்டணத்தை விட சற்று மேலதிகப் பணம் அறவிடப் படும். பொதுவாக திருமணவாழ்த்துச் செய்திகள்,பாராட்டுச் செய்திகள், ஏதேனும் ஒன்றின் முடிவுகள், குறிப்பாக மரண செய்திகள் இவ்வகையில் முக்கிய இடம் வகித்தன.
ஆனால் இன்று நான் குறிப்பாகச் சொல்ல வந்த விடயம் தபாலட்டை பற்றியது. தந்தி இப்போது வழக்கொழிந்து போய் விட்டதென்றால் தபாலட்டை வழக்கொழியும் தறுவாயில் இருக்கிறது என்றே தோன்றுகிறது.( இப்போதும் தபாலட்டை இருக்கிறதா?)
ஒரு நாட்டுக்குரிய வரலாறை, அழகை, தனித்துவத்தை,இயல்பை,கலைத்துவத்தை ஒரு புறத்தே படங்களாகக் கொண்டிருக்கிற தபாலட்டைகள் ஒரு விதம். அவை இன்றும் இருக்கின்றன.இனியும் இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்தத் தபாலட்டைகள் பகீரங்கமாகச் செய்தியைக் காவிச் செல்லும். உள்ளூருக்குள் உலா வருபவை.குறிப்பிட்ட விலைக்கு அவற்றைத் தபாலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.வெள்ளை நிற மட்டை. - அதன் மறு புறம் முகவரி எழுதுவதற்கான இடம் ஒரு புறமும் மேலும் செய்தி எழுதுவதற்கான இடம் மறு பாதியுமாக இருக்கும். அவற்றுக்கு முத்திரை ஒட்ட வேண்டியதில்லை. அதனை கொள்வனவு செய்யும் போதே முத்திரைக்கான பணமும் செலுத்தப் பட்டு விடும். ஆனால் காலப் போக்கில் அச்சடிக்கப் பட்ட தபாலட்டைகள் விற்பனை செய்து முடிவதற்கிடையில் அதன் பெறுமதி அதிகரித்து விடுவதால் மேலதிக முத்திரை ஒட்டி அனுப்பும் நிலைமையும் பின்னர் இருந்தது.
குறிப்பாக வானொலியில் பாடல்களை விரும்பிக் கேட்பதற்கு,போட்டி நிகழ்ச்சிகளுக்கான வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு,(குறிப்பாகப் போட்டி வைப்போர் இலகுவாகக் கணக்கிடவும் ,கண்டு கொள்ளவும், சேகரித்து வைக்கவும், நேர மிச்சத்துக்காகவும் சகாய விலை காரணமாகவும் இவை பெரிதும் வரவேற்கப் பட்டன; பயன்பட்டன.) அந்தரங்கமற்ற விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, மேலும் எல்லோரும் பார்க்கலாம் என்று எண்ணுகின்ற விடயங்களை குறைந்த செலவில் பரிமாறிக்கொள்வதற்கும் இவை நன்கு பயன் பட்டன.
அவை ஈழத்துக் கவிஞர்களுக்கும் நன்கு பயன் பட்டிருக்கின்றது என்பது தான் புதுச் செய்தி. அவை நம்மவரின் வாழ்வியலைப், பண்பாட்டை, ஒரு கால கட்டது மன இயலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும்; அதற்குத் தபாலட்டை சிறந்த ஒரு ஊடகமாக இருந்திருக்கிறது என்பதும் தான் இன்றய ஈழமுற்றத்துச் செய்தி.
சில மாதங்களுக்கு முன்னர் “ ஓலை” ( ஜூன் 2003) என்ற கொழும்புத் தமிழ் சங்க இதழ் ஒன்று தபாலட்டைகளில் கவிஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட செய்திகளை வெளியிட்டிருக்கக் கண்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகள் இங்கே மறு பிரசுரமாகிறது. ( இவை மகாகவி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் சக கவிஞ நண்பர்களுக்கு எழுதியவை. இவற்றை அவர் தன் டயறியில் குறித்து வைத்திருந்தார் என்ற குறிப்புக் காணப்படுகிறது)
அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூட அவை சித்தரிப்பனவாக இருக்கின்றன.
அவற்றில் சில கீழே.
1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?
(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)
2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.
(வரதருக்கு; 19.07.1955)
பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.
(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)
3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!
(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)
(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)
4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!
(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)
5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.
(முருகையனுக்கு 06.05.1958)
6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.
(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)
இப்போது மின் தபால், S.M.S என்றும் தொலைபேசி என்றும் ஸ்கைப் என்றும் பல சாதனங்கள் வந்து விட்டதாலும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்டதாலும் பாரம்பரியத் தபால்களின் பண்பாட்டுப் பெறுமதி கால வெள்ளத்தோடு கரைந்து போகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வாழ்வும் நகர்கிறது............................
ஈழமுற்றத்துச் சகோதர உள்ளங்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
6 comments:
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
அருமையான பகிர்வுக்கு நன்றி சகோதரி, உங்களுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
மலைநாட்டுப் பகுதியில் வேலை பார்த்த அப்பா தாபலட்டையில் 3 நாளுக்கொரு முறையாவது ”நான் சுகம்” என்று அம்மாவுக்கு அறிவித்தபடி இருப்பாராம்.அந்த ஞாபகம் வருகிறது உங்கள் பதிவு படித்து !
நல்லதொரு பகிர்வு.இபோதுதான் படித்தேன். தந்தி உண்மையிலேயே த்ரிலிங்கான விசயம். எங்க ஊர்ல தந்தி வந்தாலே ஏதோ கெட்ட செய்தினு நினச்சு அழ ஆரம்பிசிடுவாங்க. ஆனால் உண்மையிலேயே தந்தியை கெட்ட செய்திகள் அனுப்பத்தான் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலும். தபால் அட்டை புழக்கத்தில் உள்ளது.
ரிஷ்வன்,பிரபா,ஹேமா உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மை விச்சு.
தந்தியை ஒரு சரியான இழையில் கைப்பற்றி இருக்கிறீர்கள்.எப்போதும் தந்தி என்றதும் ஒரு திகீர் உணர்வு தான் மேலோங்கி இருந்தது. உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தபால் தந்தி . தபால் காரன் அருமை பல்கலைக்கழகத்தில் இருந்த போது நன்றாக அனுபவித்தேன் ஹேமா . என்னை உடனே பார்க்கவேண்டும் என்றால் அம்மா தந்தி அடித்து விடுவார் . நானும் பதறியடித்துக் கொண்டு ஓடுவேன் . இப்பதிவு பல நினைவுகளை மீட்டியது. மிக்க நன்றி