•4:23 AM
இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பானத்துப் பேச்சுவழக்கு விஷேஷம்.
கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன.
இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்!,இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா!இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ.... என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)
அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி,ராசாத்தி,செல்லம்,குட்டி,...இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.
என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!
(நேற்றய தினம் (11.02.2012) இவ்வாறான ஒரு கருத்துத் தோய மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களின் பேச்சைக் கேட்டதன் எதிரொலி இது)
7 comments:
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள உதவும் இப்பதிவு
மறந்திருந்த ஒன்றை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். :)
ஈழ வழக்கு சொற்களை தொகுத்து ஆவணப்படுத்துகிற முயற்சியை செய்தால் காலத்தால் பயனுடையதாக கருதப்படும்.
-மெய்யே மோனை! எப்பிடி உங்கடை சுகம் பலம் எல்லாம்?
-மெய்மெய்யா எனக்கொரு வியளமும் தெரியாது.
-மெய்யேடா சிவம்! உங்கடை பக்கம் ஒரு கலம்பகமும் இல்லையே?
-மெய்யே ராசா! எத்தினை மணிக்காம் இடாக்குத்தர் வருவார்?
-மெய்யே! நானொருக்கால் வாசிகசாலைப் பக்கம் போட்டு வாறன்.
-மெய்யே மச்சான்! வல்லிறக்கோயில் தேருக்கு போவம் வாறியே?
-மெய்யேணை ஆச்சி! உதென்ன ஒறுத்த விலை வைக்கிறாய் உந்த ஒல்லித் தேங்காய்க்கு?
-மெய்யேடா! என்ன நீ?, தேருக்குப் போன இடத்திலை நாறல் மீனை பூனை பார்த்த கணக்கிலை துரையரின்ரை பெட்டையையே பார்த்தநீயாம் ?
-மெய்யேப்பா! பெரியதங்கச்சிக்கு திருநாமுவின்ரை நடுவில் பொடியைக் கேட்டுப் பார்ப்பமே?
-மெய்யே! உண்ணாணை நானும் அது பற்றி யோசிச்ச நான் தான்.
மெய்தானே? கந்சாமி அண்ணன் பெரியாசுப்பத்திரியிலையாம்?
-ஆரது? பேதிறுவே?வா, வா. மெய்தான் உன்னைப் பார்த்தாலே , நாலாம் பிறையை நாய் பார்த்த மாதிரி தான்.
-மெய்யாத்தான் அருளப்பு! உன்ரை உந்த நக்கல் நளினங்கள் ஒத்துக் கொள்ளாமல் தான் உன்ரை பக்கம் வாறதேயில்லை.
மெய்யை வைத்து இன்னும் பல மாதிரி கதை பறையலாம்.
எனக்கு கிடைத்த "versatile Blogger Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html
வியபதி,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
கலை,அப்ப நீங்கள் அப்படிக் கூப்பிடுவதில்லையா? :)வரவுக்கு நன்றி தோழி.
தீபிகா,பிரபா என்பார் இந்தக் கூட்டுப் பதிவினை ஆரம்பித்ததன் நோக்கம் அது தான் சகோதரி.பலரும் பொறுப்போடு பங்களித்தால் அதனை நிறைவேற்றலாம்.
குணபாலன், மெய்யே!யின் பல்வேறு பரிமானங்களைப் பட்டை தீட்டிக் காட்டி விட்டீர்கள். நன்றி.
விச்சு!
நல்லதொரு அங்கீகாரத்தை ஈழத்து முற்றத்துக்கு வழங்கி இருக்கிறீர்கள்!!
நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள வார்த்தையைத் தேடுகிறேன்.
கூட்டுப் பதிவுக்கு கிடைத்த இந்த விருது பற்றிய தனியான பகிர்வு ஒன்றை விரைவில் ஈழ முற்றத்தில் காணலாம்.
மகிழ்வும் பெருமிதமும் கலந்த நன்றி விச்சு!!