Author: HK Arun
•10:27 AM
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் "பறை" எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில...

"பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்


பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

"பறைசாற்றுதல்" எனும் சொல்லும் "பறை" எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. இவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த "பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்


தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த "பறை" எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்


அதேவேளை "பறை" எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற" என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான "பறையர்" எனும் தமிழ் சொல், சிங்களத்தில் "பெறவா" என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த "பெறை" இசைக்கருவியை அடிப்பவர்களை "பெறக்காரயா" என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த "பறை" எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் "பெறக்காரயா" என்பதில் உள்ள "காரயா" எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள "காரன்" எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட "பறை" எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த "Pariah" வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாக்கம் நான் விக்கிப்பீடியாவில் எழுதியதன் மீள்பதிவாகும்.

நன்றி!
This entry was posted on 10:27 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On December 20, 2011 at 2:51 PM , ந.குணபாலன் said...

மனவருத்தமான ஒரு கதை என்னவென்றால், தமிழோடு ஒட்டுறவு இல்லாத நொர்ஸ்க் மொழியில் கூட paria (பறியா) என்றால் விலக்கப்பட்ட என்ற கருத்துடன் ஒரு பிறமொழிச் சொல் அமைந்துவிட்டது. அவ்வளவுக்கு சாதிக்கொடுமை கண்டங்கள் தாண்டி கனகாலத்துக்கு முன்பே பிற மொழிகளுக்கும் அறிமுகமாகி விட்டது .

 
On December 20, 2011 at 8:24 PM , HK Arun said...

@ ந.குணபாலன்

ஓம் இன்று "பறை" எனும் சொல் குறிக்கும் பொருள் சக மனிதரை தரம் தாழ்த்தும் அல்லது சாதிய அடிப்படையில் வேறுபடுத்தும் இழிவழக்கில் ஒரு வருத்தமான பயன்பாட்டிலேயே பரவியுள்ளது.

அதேவேளை நொர்ஸ் மொழியில் மட்டுமல்ல உலகில் பல மொழிகளிலும் இந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலம் தமிழில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் இந்த "Pariah" வும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
On December 21, 2011 at 12:54 AM , கானா பிரபா said...

அருண்

விரிவான பதிவை இட்டமைக்கு மிக்க நன்றிகள்

 
On July 30, 2012 at 6:53 AM , HK Arun said...

நன்றி! கானா பிரபா