Author: ந.குணபாலன்
•2:16 AM

கிழிந்த கோமணம்! 

அயோத்தி அடைந்தேன்!

அயோத்தி அடைந்தேன்! 
ஒரு ஆரவாரம் இல்லை!
மெய்தான்! ஆரவாரம் 
மருந்துக்கும் இல்லை!
வயோதிபர் வாழ்த்தும், 
இளையோர் இசை முழக்கும் ,
தோயவார்க்கும் மலர்மழைத் தூவலும்
ஐயே! ஓர் அலங்காரமும் இல்லை.
ஊர்ச்சனம் எல்லாம் 
ஒதுங்கிப் போனது.
ஊமைக்கு நடித்தது. 
அதன் உண்மை ஆராய்ந்தால்
கார்வண்ணன் இராமன் 
கைங்கரியம் இன்னதென்று
கண்டறிவாம். கேட்டாலே 
காது கூசும். எளியார் மேல்                   (எளியார்- வலிமையற்றோர்)
சுண்டு வலிசேர் சுடு
சொல்லுடைச் சொண்டன்.                        சொண்டன்-உதட்டையுடையவன்)  

சொண்டனின் சேட்டை                          சொண்டன்-செருக்குடையவன்)
சோரமெலாம் அந்தநாளில்                            
செண்டாடும் சேடியர் 
சாதுவாக செப்பவும்                                    (சாதுவாக-மெதுவாக)
கிண்டலுடன் கீனம் 
செய்து நகையாடி                                                  (கீனம்-இழிவு
ஆண்டவனுக்கு அடுத்து மண்ணாளும்
ஆண்டவனும் ஆடல் உரிமையா ளனென
விண்ட சொல் விளைத்த தெலாம் வினையாக
வண்டுறை கானகம் மேவி வாழ்வில்
கண்ட தெலாம் பொய்யாய்க் 
கனவா யாகிடவே
வண்டி வனைந்த பிள்ளைத்தாய்ச்சி என்                     (வண்டி- வயிறு, வனைந்த-அலங்கரித்த) 
கண் டிறந்தது. கண்கண்ட தெய்வமெனக்
கொண்டவனின் கோலம் குலைந்தது.
சொண்டுரஞ்ச நான் வரவில்லை மெய்யாலும் பல         சொண்டுரஞ்சல்-வம்பு பேசுதல்) 
சொறிக்கதைச் சொந்தகாரன் இராகவன்.


முந்தின நடப்புச் சில 

இராகவன் அதிகார ஆணவத்தான். 
இட்டல் இடைஞ்சல் இளைத்தார்க்கு ஈயாது                (இளைத்தார்- எளியவர், 
இரான், ஒரு சிறு பொழுதும். எந்நேரமும்                           வல்லமை குறைந்தவர்) 
இவனுடனே  இழுபடும் இலக்குவன்
ஈரமிலா நெஞ்சன்  நஞ்சன். அண்ணன்
எள் எடுத்தால் இவன் எண்ணெய் ஆக்குவன்.
நேரம் கேட்ட நேரமதில் நஞ்சினரை
நேர்த்தி வைத்து பெற்றானே இவர் அப்பன்!


மந்தரை  

அப்பன் தசரதன் ஆயிரம் பெண்டாள்வான்.                      
அப்பனுக்கு எ(ய்)ப்பனும் 
தப்பாமல் பிறந்த மக்கள்,                                   (எப்பன்<எய்ப்பன், எய்ப்பு- தளர்ச்சி )
எப்படி இருப்பர்? எண்ணிப் பாருமே!               
எத்தனை பேர் சாவமோ?, எண்ணிக்கை தெரியா.
மந்தரையை மட்டும் சூழ்ச்சி செயும்
மாய்மாலக்காரி என வான்மீகி படம் பிடித்தான்.
எந்தளவு ஞாயம் அவள் பக்கம் உள்ளதென்றும்,
இராமனாலே உண்மையிலே அவள்பட்ட
தொந்தரவும் தொல்லையும்  கண்டானோ?
தந்திரம் பண்ணி இராமன் தனம் தொடத்                  (தனம்- முலை)
தள்ளி விட்டு மந்தரை தாவி மறைவாள்.
முந்தியவ் வீணன் அவள் முடிபற்றி மிதிப்பான்.
முந்தி விரிக்க மறுத்தாள் தன் முதுகில்
உந்தியடி வில் எறி மண்ணுண்டை உடையும்.
உத்திரம் வீழ்ந்தன்ன முள்ளந்தண்டு ஒடியும்.      (உத்திரம் - கூரையின் விட்டம்)
மந்தரையாள் உருக்குலைந்தாள்.
மனம்நோகும் கூனியென்ற நொட்டைக்கு.
சுகந்தரு சுகுமாரர் யாரும் நோக்கார்.
சுந்தரியாள் இளமை சுடுகாடு எறி நிலவென
வெந்தாள் காமம்,வெஞ்சினம் எனும் கனலிடை.
இந்தக் கதை எல்லாம் மறை செய்து
ஈனத் தனமாகக் குறை செய்து வான்மீகி                ( சாரம்- பயன், சிறப்பு, ஆற்றல்)
சந்தியிலே சாரமற்று செவியிலே சேந்தியதை          
சாற்றிடும் நுனிப்புல் மேய்ந்த ஆடு!                                       (சாற்றிடும் -சொல்லும்)

ஆட்டைக் கடித்தான். இராமன் 
மாட்டைக் கடித்தான்.
அப்பனின் ஆயிரம் பெண்டுகள் 
பால்வினை அடிமைகள்
கூட்டத்திலும் கொண்டாட உள்ளிட்டான்.         ( உள்ளிடுதல்- நுழைதல்)
கொந்தளித்த தசரதன் தன் கோவம் அடக்கி
விட்டால் இருபேருமே வீட்டை நாசம் செய்து
விடுவரென கைகேசி விளம்பியதால்
கூட்டாக இருவரையும் பெருங் கொண்டை போட்ட
கும்பல் ஒன்றின் தலைவன் விசுவாமித்திரன் எனும்
காட்டானுடன் "பம்பலாக கொஞ்சக்காலம்          (பம்பல்-களிப்பு,மகிழ்ச்சி,பொழுதுபோக்கு) 
காட்டுக்குப் போய்விட்டு வாங்கோடா!
காட்டு விலங்குக் கரைச்சலுடன் அரக்கு
நாட்டவரின் நடப்பும் கூடிப் போச்சு.
மட்டுக்கட்ட மாட்டாத மறைவிருந்து
வாட்டும் வில்வளைத்து அம்பு விடுங்கோடா!
வேட்டையாடி விளையாடி வாங்கோடா!" என
வெகு தந்திரமாய் விரட்டி வைத்தான். கை
ஊட்டமாக ஊருப்பட்ட சாராயம் சரக்கு                  (ஊருப்பட்ட< ஊரிற்பட்ட- அதிகமான) 
கேட்டு வாங்கும் கோன் கைவண்ணம் அரக்கு.         (அரக்கு- சிவப்பு)


தாடகை எனும் தாழாநகை 

அரக்கு நாட்டின் வடமேற்கே ஆள்குமித்து         (அரக்கு நாடு- மியான்மார் நாட்டின்  
பரந்தார் வடவர். வந்தார் வரத்தாரை                                             அரகன் மாநிலம்)
இரக்கமுடன் அணைக்கும் இனத்தாரை,
ஓரங்கட்டி ஒதுக்கி அவர்தம் தாய்மண்ணை
பெருங்கொண்டை விசுவனின் பேய்க்கூட்டம்
இருக்க இடம் தந்த மடத்தையே
விரும்பித் தம்மகமாக்க வெளிக்கிட்டதனால்
அரக்கு நாட்டார் அமளிக்குள் ஆட்பட்டார்.
தரமான தாய்மண்ணைக் காப்பதற்கு
திரமாக திடமாக எல்லை காத்திருந்தார்.
பேரழகுப் பெண்ணினமும் வாளா விருக்கா.
வாரணம் கவியுடன் பகை விரட்டும் புலவுக் காவல்
வீரமுடன் காக்கும், விச்சை அறி வஞ்சியர் நடுவே       (விச்சை-கல்வி)
தாரகை அன்னாள் நல்லாள் தாடகை

தாடகை தன் முகத்து நகை நாளும் தாழாள்.
தடாகத்துத் தாமரை இணை தண்மதியாள் 
அடாத செயல் செய்ததென்ன? அணங்கவள்
தடாகத்தில் நீராடும் தருணத்தில் பதிவு கண்டு
விடாய் கொண்டு விடலை ஒன்று                              (விடலை-இளைஞன், மனப்பக்குவமற்றவன்)
விளையாட வந்தால் விடுவாளோ?
அடித்தாள் இராமன் அதரம் அரத்தம் சிதறும்.
வெடித்தான் வெடுக்கன் வெஞ்சினத்தால்                            (வெடுக்கன்-கோபக்காரன்) 
அடித்தான் அம்புகொடு அல்வழியான் அஞ்சுகத்தை.      ( அல்வழி-நெறியற்றது) 
முடித்தான் முருகுடை தாடகை மூச்சு! நச்சு                     (முருகு-இளமை, அழகு) 
முள்ளிருக்கும் மூர்க்க நெஞ்சகந்தான்.

நெஞ்சகந்தான் அறைந்தழுதார் நேசமுள்ள சொந்தம்.
வஞ்சகக் கொலைமுறை வாணாளில் காணாதார்.
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிக் கூட்டம்,
வஞ்சியர் தமையும் வதைக்க வெளியூரில்
அஞ்சிலக்கம் காசு கொடுத்து ஆள் பிடிக்கும் என
கிஞ்சித்தும் கனவிலும் கண்டாரல்லர்.

கண்டாரல்லர் கேட்டாரல்லர் கரந்தடிப்பான் தந்திரம்.   (கரந்து-மறைந்து) 
விண்டார் பெருங்குரல் "வெளியே வாடா                              (கரந்தடிப்பான்-sniper)
சண்டைக்கு! சதிகாரா! சகதிக்குப் பிறந்தோனே!
பெண்டுகளைக் கொல்லும் பேய்மகனே நீ யாரடா?"
வண்டுகள் தம் கூடழித்த வன்பகை தன்னை
தண்டிக்க தவிக்கும் அன்ன அன்னார் மனதில் உரம்.

உரமிகு வீரரை உத்தமப்போர் செய்யாமல்
நேராக முன்னின்று நேர்மைப்போர் நேராமல்
கரவாக மறைந்து இலக்குவன் கைகாலொடிக்க,           (கரவு-களவு,வஞ்சனை) 
சிரமறுத்தான் இராமன், சிலை பாய்ச்சும் அம்பதனால்.          (சிலை-வில்)
வீரந்தான் என்ன சீலம்பாயுக்கு உந்த வீரம்?                    (சீலம்பாய்-வெட்கக்கேடு) 
ஈரமிலா ஈன நெஞ்சன் இளிப்பும் தீச்சரம்.                        ( இளிப்பு - சிரிப்பு)

சரந் தொடுக்கும் சரவல் இனியில்லை. விழிச்      (சரம்- மாலை, அம்பு;   சரவல்-சிரமம்) 
சரந் தொடுக்கும் சாலினியரைச் சரசத்துக்கு      (சாலினி-கள் விற்கும் பெண்) 
கரந் தடிக்க கட்டியணைப்போம், என்று கரைச்சல்
தரக்கிளம்பினரே அண்ணனுடன் தம்பியும்.
பரதேசிச் சாமி விசுவன் விசரன் பாவம்!
வேலிக்கு வைத்த முள்ளு வைத்தவன் தன்
காலுக்குத் தைத்ததென கவன்றான்.                           (கவன்றான்-கலங்கினான் )
மரந்தாவு மந்தி போல இருபேரும் விடும் சேட்டை
தரங்கெட்ட தறுதலைப் பழக்கம் எல்லாம்
ஓரங்கட்டி ஒடுக்கிடுவேன் நான் என
மார்தட்டி மானம் கெட்ட மோடன். சொந்த               (மோடன்-மூடன்)
ஊரவரின் முன்னே சீலை உரிந்த சங்கடம்.
பேரவனைப் பெருமை பழித்தார் அடுத்தவர்.

அடுத்தவர் அயலவர் வீட்டின் அரிவையர் தமை
படுக்க வாவென்று பசப்புரை, பலவந்தம்,
விடும் விழலன் மக்கள் என்று ஒரே கூப்பாடு.
குடும்பியன் விசுவன் சொந்தக் குடும்பமும்
குத்து வெட்டென்று குழம்பு நிலை.
விடுதலை கொடுத்து 
வீட்டுக்கு அனுப்பலாம் என்றால்....
அடுத்த கிழமையே திரும்பி வரும் 
அவத்தை எல்லே?
கிடுக்கியில் கிட்டிய எலியாகும் 
நோக்காட்டில் கிழவன் நொந்த மூளை.

மூளை கசங்கிட முளைத்தது ஓர் உத்தி.
சிலை காவிச் சிதம்பும் சீலத்தாரை.                              (சிதம்பும்-கெட்டுப்போகும்)   
வலை போட விசுவன் ஆசை வார்த்தை பல ஆடி;       (சீலம்-ஒழுக்கம்) 
"சிலை போலும் பெண்ணுண்டு சீதையவள் பேர்.
வலை போட்டாலும் வசப்படாத வலம்புரிச் சங்கு.
தலைமகளின் கைத்தலம் பிடிப்பதென்றால்
சிலை வளைக்கச் சனகன் செப்புகின்றான்.
செலவழிக்கவும் சீதனம் அள்ளித் தருவானாம்.         (விலை வைக்காமல்-பிகு பண்ணாமல்)            
விலை வைக்காமல் என்னுடனே வாருமே!            (என்ன சீலைக்கு -என்ன பிரயோசனத்துக்கு)
சிலை அழகுச் சீதையை இல்லை என்றால், என்ன            பவனி காட்டுதல்-பெருமையடித்தல்)     
சீலைக்கு நீரும் சிலை காவிப் பவனி காட்டுகின்றீர்?"   (வலுகலாதி- அலங்காரம், பெருங்கலகம்)     
உலைத்தீயை ஊதி விட்டான் விசுவன்.                              (வெளிக்கிடுதல்=வெளிக்கு+இடுதல்,  
வலுகலாதியாகக் கிளம்பி                                                          புறப்படுதல்)
வெளிக்கிட்டார் மிதிலைநாடி .                                          

அகலிகை

மிதிலைநாடி மிடுக்குடன் வந்தார். கால் 
மிதிபட்டு ஒருத்தி மிரண்டு நின்றாள்.
கொதியுடன் துரத்தும் ஒரு கொண்டையன்
"விதி முடிப்பேன் இந்த விலைமகளுக்கு" என்றான்.
பதியான தன்சொல் படியாதவளாம்.
குதி போட்டுச் சாவலும் கூவின சாமம்
நதியாட தான் எட்டி நடந்த நேரம்
சதி போட்ட இந்திரனுடன் சல்லாபித்தாளாம்.
மதி கெட்டவன் மானம் போனதென்றான்
கதியோடு கவன்றவன் ஆடை அரைகுறை.          ( கவன்ற-கலங்கிய) 

"அரைகுறைக் கொடுக்கன்! ஐயோ!                     (கொடுக்கன்-கொடுக்குக் கட்டியவன்) 
அவசரக் குடுக்கன்! என் பிரியன்!                         (பிரியன்< புரியன்< புரிசன்< புருசன்)
ஆரோ அறியாதவனை பிறத்தியானை
காரமாய்க் கஞ்சாப் புகையடிக்கத் தந்தவனை
தாரேந்தும் இந்திரன் சந்திரன் எனப் புலம்பி       ( தாரேந்தும்-மாலையணியும்) 
தாரமெனை தாகம் பசி தீர்த்திடு என்றான்.
தாகம் பசி, தாய் போலத் தணித்தவளை, 
நாகம் போன்ற நச்சுக்கண்ணன்,
"தாகமடி நின்மேல்!" 
எனவழைத்தானே தனித்தவளை!
தேகம் முழுதும் தேள் ஊர்வதுவாய் வட
பாகம் வதியும் பாறுவதி ஆச்சியிடம் வடைக்கறிப்
பாகம் பழகும் சாட்டில் பதுங்கினேனே.
புகைப் போதை இதுக்குப் போ மட்டும்            ( இதுக்கு-இந்த என் கணவனுக்கு) 
அகம் வர அஞ்சி ஆச்சியுடன் அலம்பினேன்.  ( அலம்புதல்-தேவையற்ற கதை கதைத்தல்)
வகை வாழ வழி வைக்காது அந்தக் கள்ளு.                                                                       

கள்ளுக்கும் கஞ்சாப் புகைக்கும் இதுக்கு
காணாது நேரம். காதலுக்கும் சுகமில்லை.
வெள்ளிடி விழுந்தாலும் விடியலிலே சாவல் கூவ
வெளிக்குப் போகும் ஒரு வழக்கம் இதுக்கு.          ( வெளிக்குப் போதல்-மலசலங்கழித்தல்) 
கள்ளனை வீட்டுக்குள் காவலுக்கு வைத்துவிட்டு
கழிக்க என்று இது கிளம்பின கதை நானறியேன்.
துள்ளி அக் காமுகன் எனைத் துடிப்புடன் தொட
பள்ளியறைச் சுகம் என் பதிக்கும் தேடுதென
உள்ளம் மகிழ்ந்தாலும் ஏதோ நெருடியது.
தள்ளிவிட்டு நான் பார்த்தால் அந்தத் தடியன்
புளிப்புக் கொண்டு புன்மகன் புன்முறுவல் பூத்தான்.        ( புளிப்பு-தன்மை கெட்டு)  
"கொள்ளி வைக்க வந்தாயோ?´ என்று நான் குழறிச்,
சள்ளையில் சவட்ட, சடுதியிலே ஓடின கள்ளமகன்.        ( சள்ளை-இடுப்பு) 

"கள்ளமகன் இதை வழி மறித்து பலகதை
அள்ளி வைத்தான் என்னைப் பற்றி.....
பள்ளியிலே படுக்க வரக் கேட்டாள்.
தள்ளி நான் நின்றாலும் தாவி அணைக்க
நள்ளினாள். நான் நன்றி புரியாது போனாலும்                (  நள்ளினாள்-விரும்பினாள்)
அள்ளி அன்னம் இட்ட வீட்டில் நன்றி கெட்டு
கள்ளத் துரோகம் உன்னவில்லை கனவிலும்.
கள்ளுத் தாகம் உமக்கு. காமத்தாகம் அவளுக்கு.
அள்ளிக் கொண்டு ஆரும் எவனும் போகாமல்
பிள்ளைவரம் தரும் கணவன் நீர் தான்,
கொள்ளை கொள்ளும் அழகான பெண்டிலின்
முள்ளைப் போலும் மோகம் தீர்க்க முயல்வீரென 
நல்ல பிள்ளைக்குப் பல நாடக வசனம் பேசிக்
கோள் மூட்டிப் போனான் கோதாரியில் போவான்.           ( கோதாரி-கொள்ளை நோய்)
எள்ளளவும் உண்மை எனக்கில்லா இந் நள்ளிரவு."

"நள்ளிரவில் நலமறுந்த சாவல் கூவினால்
எள்ளளவும் எண்ணாது எங்கே எழும்பிப் போனீர்?
வெள்ளி முளைத்த பின்னே வெளிக்குப் போனாலென்ன? "
சுள்ளெனவே சுடு சொல்லுக் கேட்பம் என வந்தவள்
கள்ளவுரை கேட்டு கலங்கி நிலம் சாய, கொதியுடன்
கொல்ல என்னைத் துரத்தும் என் கொழுநன் இவன்.          ( கொழுநன்-கணவன்) 
கொள்ளையிலே போவான் என்ஞாயம் கேளாதான்;
பள்ளியிலே படுத்தென்ன? 
பாடையிலே படுத்தென்ன?
தள்ளிப் போய் நானும் தனியாக வாழ்வேனே!"
அள்ளித் தெளித்தாள் அகலிகை தன் ஞாயம்.
கள்ளம் தெளிந்து கவலும் கொண்டைக்காரன்.

கொண்டைக்காரன் கோதமன் முகம் கூம்பினன்.
கண்டவன் நின்றவன் சொன்ன சொல் நம்பி
மண்டை கழன்று தன் மனைவியில் ஐமிச்சம்
கொண்ட பிழை கண்டான் கோதமன் .
என்றாலும் நாவால் அதரம் தடவு இராமன் 
தின்பண்டம் போல் தன் தேவி தோள் தீண்ட,
தூண்டு சினம், துடிக்கும் பயம்  தோன்ற 
தாண்டித் திசை மாறும் ஓங்கின கெண்டி.

கெண்டியில் நீர் கேட்டுத் தர, 
உண்டி தர, உடை காக்க,
பெண்டில் வேண்டுமே படுக்க, 
பெருக்க வேண்டுமே வீடு என்று
கொண்ட எண்ணம் கோதமனை 
குழப்பி அடிக்கக் கெஞ்சி
வேண்டி நின்றான் அகலிகையை 
வீட்டுக்கு வாவென்ன.
கண்டு தெளிந்த காரிகையாள் கண்மூடி
மீண்டும் படுகுழி வீழ்வாளோ? மீள்வாளோ?
" சண்டியர் உமக்குச் 
சந்தேகம் கிளம்பினால்
பெண்டில் என் சதிரம்                                                    ( சதிரம்-உடல்) 
பேய் தின்னும் பிணமாகும்.
கண்டவனை கொண்டு வந்து 
கள்மயக்கில் நீவீழ, அவனவன்
பெண்டாள வருவானே? 
பேய்க்குப் பேன் பார்க்கும் பேயனே!              (பேய்க்குப் பேன் பார்க்கும் பேயன்
கொண்டாடு நீயும் போய்க்                                -தொட்ட பழக்கத்தை விட முடியாதவன்) 
கள்ளுக்கடை வெள்ளிவிழா.                                                                                               
என்பாட்டை நான் பார்த்து 
எள்ளு விற்றுச் சீவிப்பேன்."
தன்பாட்டில் தன்னானே பாடி 
தாரகையும் நோக்கும் தாய்வீடு.

                                      (இன்னும் கிழியும்)