Author: ந.குணபாலன்
•12:00 AM

சத்துருக்கன் விட்ட வெருட்டு 

"அமைதி காணப் பறந்தன ஆண்டுகள்.
சுமை சூழ்கலி நீங்க பற்றாயின சனம்.
எமை வாழ்த்தி ஆதரித்து ஏற்பாயினர்.
அமைந்து வளர்ந்தன அறுபது கலைகளும்.
நுமை நினைந்து நோன்புகள் நோற்றனம்.
தெற்கில் இருந்து தெறித்தது சேதி. 
கற்புடை மகளுனை கடத்தினர் எவரோ.
விற்கொண்டு வீரம் விளைக்காது வீணே 
நறவுண்ட நாட்கள் ஆண்டுகளாக நகர 
கறை வளர்த்தான் இராமன் கணவன் எனும் 
நிறை நீத்தான், நெடும்பழி குலம் சேர்த்தான்.
மறை அறி ஒற்று மாந்தர் ஒற்றவும் ஓங்கி 
இறைத்த குலமானம் அள்ளி மீட்க எண்ணி 
அறைந்த போல் ஓலை அனுப்பின அரசன்.
வரைந்த வரிகள் வகுத்த சேதி கேள்!

கேள் வைதேகி! கேகயத்துப் பேரமகன் 
ஆள் வைத்து இராமனுக்கு அனுப்பிய சேதி:
வாள் கொண்டு வருவேன் வரைமுறை கேட்டு.
கள்வருக்கும் கள்வனாமே அண்ணனே நீயும்?
கள்ளடியும், களவும் நீ கற்ற அரச கலையோ?
அள்ளையூர் காட்டிலே அடியொற்றி வந்தவளை  (அள்ளை-யானை)
வெளியாள் தூக்க வாய் பார்த்த வெருளியோ?
இளித்தபடி இருந்தானோ இலக்குவன்?     (பம்பல் அடித்தல்- சிரித்து 
பலியாக பெண் போக பம்பல் அடிக்கின்றீரோ?    வீண் பொழுது போக்குதல்) 
தோளில் சிலை என்ன சீலைக்குத் தொங்குவான்?   (என்ன சீலைக்குத் தொங்குவான்  
பன்னிரண்டு ஆண்டு பழமை ஆக                        - என்ன பயனுக்கு தொங்க வேண்டும்?) 
இன்னும் மூன்று திங்கள் ஆகும். அதன் 
முன்னே மனையாளுடனே முடி சூட வந்திடு!
முன்னவர் மரபுப் பெருமை காக்க முடுகு!
இல்லெங்கில் நின் அசைவு யாவும் அறிய 
அல்லிலும் உன்னைத் தூக்க ஆள் எனக்குண்டு.
கேகயத்து மன்னராம் என் மாமனும் மச்சினனும் 
பாகம் இரண்டிலும் பாதுகாப்பு அளிப்பார்.
வேகம் கிளம்பி வந்தால் உன் விரல் ஒடிப்பேன்.
தாகம் எனக்குண்டு தாயகம் கோசலம் காப்பது!
பரதன் போலெண்ணி என்னைப் பழிக்காதே!
விரதம் கொண்டேன் உன்னை அரியணை வைத்து 
அறங்காத்து அயோத்தி காப்பேன் இது ஆணை!
யோசித்து நட! யோக்கியனாய் இரு! 
யாசித்தாலும், யாரின் காலை நீ பிடித்தாலும் 
மாசம் மூன்று மாளும் முன்னே நாடது நாடு! 
பேசுந் தெய்வப் பெண்ணுடன் வீடது சேர்!

வீடது சேர்! என்று விட்ட வெருட்டு விரட்ட 
காடு நாடெல்லாம் அலைந்தான். கலைந்தான். 
கண்டம் கடந்து கடலும் கடந்து கருத்துடனே 
பெண்ணுனைச் சேர்ந்து பெரும்பழி நீங்கினன். 
விண்ணூரும் வேக வானத்தேரேறி வீடேகினன்.
கண்மணி நீ கருத்தூன்றி காரியம் ஆற்றிட உதவு.
பண்பும், அன்பும் அரச கடமையும் பழக்குவம். 
மண்ணையும், மக்களையும் மதிக்கப் பழக்குவம்.
கொஞ்சமும் நிமிராக் கோணல் எனில்
அஞ்சு விரல் பற்றி ஆட்டும் தோற்பாவை அவனாக  
பஞ்சம், பண்பழிவு நாடதில் பரவாது 
அஞ்சுகம் நீ கோசலம் ஆள்க! அறம் காக்க!
எஞ்ஞான்றும் சத்துருக்கன் நினை ஆதரிப்பன்!"
மஞ்சு பொழி மழையாய் மனம் பொழிந்தாள்.
கொஞ்சம் குழப்பம் கொண்டாலும், உள்ளினேன் 
நெஞ்சகம் பதியும் நேர்மொழி கொண்ட வாய்மொழி.

வாய்மொழி வளம் குறைந்தது இராமன் வசம். 
காய்நகர்த்தும் சத்துருக்கன் கைவண்ணம் 
மாயம் செய்த மாண்பு கோசலம் வாழ்ந்தது.
நேசன் சில திங்கள் நேர்வழி நேர்ந்த நெறியால்  
மாசம் சில மறைய மசக்கை உற்றேன் மாது நான்.
பாசம் கைவிட்டுப் பகை பிடித்த பாதகத்தி    (குரையை வைத்தாள்
கோசலையாள் வந்து குரையை வைத்தாள்.     -சத்தம் போட்டாள், குரை-ஒலி)  
"மாசுற்று மாற்றலர் மனை கண்டு மறைவாக    (மாற்றலர்-பகைவர்) 
பேசிய பன்னிரண்டு ஆண்டின் பெரும்பாகம் 
கூசம் கெட இருந்தவளே! கூறு கெட்டவளே!
இராக்கதிரன் மகளே! ஈனப் பிறவியடி நீ!
ஆரியத்து வேந்தர் குலம் கருவறுக்க 
கருக்கொண்டது யாரெந்தக் கள்வனுக்கு? 
விருத்தி ஆகிடுமோ? விளங்கிடுமோ வமிசம்?
தெருத் திண்ணைக் குந்துரஞ்சித் தேவனமாடுவார் (குந்துரஞ்சுதல்- வம்பு கதைத்தல்,  
சிரித்துப் பகடி பண்ண சீர் சிதைந்த சீதை!                         குந்து- திண்ணையின் ஒட்டு)  
நெருப்பில் நீ நடந்து நேர்ந்த சாலம்                                (தேவனம்-சூதாட்டம்)
மருந்துக்கும் நான் நம்பேன். மடம் அல்ல நான்.
ஒருத்தருக்கும் தெரியாமல் ஊர் விட்டோடு!"

ஊர் விட்டோடி உயரப் பறக்கும் பருந்து
இறாய்ஞ்ச வர, ஓடி அஞ்சும் புறாக்குஞ்சு                    (இறாய்ஞ்சுதல் - தட்டிப் பறித்தல்) 
உருத்து வந்து காக்கும் தாய்ப் புறவின் உறவை            ( உருத்து-சினந்து) 
தவிப்புடன் தேடுதலாகும் தன்மையால்;
அவிந்த நெஞ்சை ஆறுதல் செய்வன் அன்பனென 
கவிந்த கண்ணீர் கன்னம் வழிய நோக்க, 
குவிந்த முகம் கூம்பிய அகம் கொண்ட 
பாவியின் வாயிலும் பழிச்சொல் வடிந்ததுவே! 
ஆவியை விடவோ என நான் அங்கலாய்க்க   
மேவிய மனத்து ஓர்மம் மேதினியில் நானும் 
காவியம் படைக்கும் காலம் வந்ததென ஓதும். 
அவை கூட்டி சத்துருக்கன் முன் அறைந்தேன்.


மீண்டும் அயோத்தியை நீங்குதல் 

அறைந்தேன் அனல் வீசும் என் எண்ணம்.
"இறை மீது ஆணைஇட்டேன் ஆயத்தோரே! என் 
கரு மீது ஆணையிட்டேன்! கதறி அழ மாட்டேன்!
நிறை அழிந்தவளோ? நிலம் தூற்ற நடந்தவளோ?
அறிவீர் இன்னாள் நீவிர் எவரும் என் ஆரம்பம்! 
இராக்கதிர் இனம் பிறந்து இடம் பிரிந்து 
ஆரியர் குல சனகன் மகளாய் ஆனவள் நான்!
பிறப்பால் நான் இலங்கையின் இலங்குதேவி!
சீர் மிகு வளர்ப்பால் சீதை, மிதிலாபுரி மைதிலி!
நிறை நீங்கிய சரித்திர மில்லை என்னிரு 
மறுவிலா மனையுடை பெற்றவர் பக்கலில்.
நெருப்பில் நடக்க வைத்தும் நேசம் வைத்தேன்.
அறம்பாடும் சொல் இன்று கோசலை இயற்றிட    (அறம்பாடுதல்-தீயன விளையப் பாடுதல்,  
மறுதலிக்கா மன்னன் தாளம் போடுகின்றான்.                                    திட்டுதல்)
திராவிடம் திமிர் எடுக்க ஆரியம் கருவறுக்க 
கருக் கொண்டேன் யாரோ கள்வனுக்கு என்ற 
உரை பொறுத்து உவனுடன் ஒருகணம் உறையேன்!
ஆரியமும், திராவிடமும் எனக்கிரு கண்ணே! 
சிரம் நீங்கிய சிகையான உந்தச் சீராமன் தன் 
தாரம் என்ற தரம் கெட்ட தகுதி விட்டேன். 
பாரமாகப் பெற்றோர் பக்கல் நாடேன்.
விரிகடல் உலகில் வீணான எனக்கும்
ஓரமாக ஒரு பக்கம் எங்கோ இருக்கும்.
கருத்துடன் கோசலத்து வாரிசு கலை வளரும்.
விருத் தெரியும் வயசில் விரும்பி என் மகவுக்கு        (விருத் தெரியும் வயசில் 
உரித்தான முடிசூட ஊர் மீண்டு வருவேன்.                          - விவரம் அறியும் வயசில்) 
வரும் வரை வாழிடம் தேடி ஆளிடம் போக்காதீர்!
எரிசூழ் என் மனதறிந்தீர்! என் அணுக்கம் தவிர்ப்பீர்!"   (அணுக்கம்-நெருக்கம்) 
தறைந்தேன் ஆணை. தவிக்கும் சத்துருக்கன்                (தறைதல்- ஆணியடித்தல்) 
கவிந்த மழைக் கண்ணுடன் விடை தந்தான்.
அவிந்த என் மனச றிந்தான். அடியொற்றி எவரும் 
குவிதல் கடிந்தான். காத்தான் கோசலைநாடு.


இலகூர் வாழ்வு 

கோசலைநாடு விட்டும் கோவம் விடாது 
வாசகம் எதுவும் எவர்க்கும் வாய்விடாது 
பழங்கதை மீட்டிப் படுத்தும் நினைவினால்  
கழனி விளைக்கும் கங்கைக் கரையும் 
தளர்ந்த திராவிடத் தென்னாட்டுத் தறையும்      ( தறை-தரை) 
விலக்கி விண்ணின் விளக்கம் படுக்கும் 
படுவான் திசை வழி தேடிப் படர்ந்தேன்.
நெடுநாள் நடந்து நல்லவரும், நன்மரமும்
கடும் பசி களைவரால், பேறுகாலம் அணைய  
இடுகடை ஒப்பது, இலகூர் அணைந்தேன்.       (இடுகடை-கொடையாளியின் வீட்டு வாசல்) 
ஐராவதி ஆறு  அளையும் கரையோ ரஞ்சில       (இலகூர்-லாகூர்) 
ஈரநெஞ்சினர் குசாணர் எனை ஆதரித்தாரால்.
கரந்து ஆங்கு றைந்தேன் கனகாலம்.
இராமாயணம் முழுப்பொய் இசை முழக்கும். 
வாசம் செய்ய வரை குடில் வழங்குவானாம்......   (வரை-மூங்கில்) 
பாசமுடன் வான்மீகிதன் பரிவைப் பாராட்டும்,
வேடம் அறியாத வெருளி உலகம்.
நாடகமாக நான் வாழ்ந்த வாழ்வின் 
பூடகம் புரிந்தவர் இலர் ஆங்கே.
புற்று வளர்த்த புழுகன் வான்மீகி அறியேன்.
வெற்றி வீரனாய் இராமனை வேண்டி அவன் 
பற்றி இழுத்த கதை, பாடல் ஏதும் அறியேன் 
திராவிடர் பொலிவைச் சிதைத்துத் திரித்து 
அரக்கர்,வானரர், இராக்கதிர் மாந்தர் என்ற
கருத்து உண்மை மறைத்து, கபடம் உரைத்த 
பெருங் கொண்டையர் பேச்சினால் 
"வான்வெளி மேவும் விஞ்சையன் மனையாள் யான். 
முன்னொரு நாள் முனியொருவள் முனிந்த சாவம்; 
இந்நாளில் தனித்த பிள்ளைத்தாய்ச்சியாக ஏங்க, 
வந்தேன் விரதம் வளர்க்க, ஐராவதிக் கரை  
வளர்வேன், வளர்ப்பேன் மகவு, என்றலையில் 
அளந்த அளவு அமையும் காலம் வரை" என்ன 
வழங்கிய என் வாய்மொழி வளர்த்தது அமைதி.

அமைதி சூழ ஆதரிக்கும் குசாணர் வாழ்த்தில் 
குமைந்த மனம் குளிரப், பிறந்த குருத்து ஒன்றல்ல! 
இமை போலும் இரணை மகனார் எழுகை!
இலகூர் எழுந்தானால் இலவன் என்றும்,
கலக்க முடன் வந்தாளை கைசேர்த்த அன்புக் 
குலமுடை குசாணர் நன்றியால் குசன் என்றும் 
இலக்கணமாய்ப் பெயர் இயற்றி அழைத்தேனே.
இராவாய்ப் பகலாய் இரு மதலையும் ஒலிக்கும்   
சிணுங்கலில் பால் சிந்தும் மாரணைத்து பாலூட்டி 
சாணைச்சீலை மாற்றி, நீராட்டிச் சந்தனம் பூசி,
ஓராட்டும் பாடல் வழி ஒழுக்கநெறி உரைத்துப்    
பாராட்டி வளர்த்தேன் என்னிரு பாலகரை,
ஐராவதி ஆறாடும் இலகூரார் ஆதரிப்பாரால்.

ஆதரிப்பாரால் ஆங்கே நானுமென் இளவல்களை   
ஓதலும்,எழுத்தும் அறியும் பருவத்தே கல்வியுடன் 
சாதனம் இன்னும் சாற்றிடும் கலைகள் பயிற்றும்           (சாதனம் - கருவி
ஆசானிடம் பாடம் சொல்ல அண்ணித்திட 
மாசங்கள் ஆண்டுகளாய் மறுகியோடிய காலம். 
ஆசறு கலை அறுபத்தினான்கும் எய்தியரால் 
பாசமுடன் என் பதின்மவயதின் பிள்ளைகளை 
ஆசி பெய்து அன்பு முத்தம் ஈந்து உரை செய்தேன்.
குசாணர் குலத்துக் குறைவிலா அன்புக் கூட்டின்  
வசப்பட்டும், விஞ்சைப்பெண் என்ற வாய்மொழி விடாது, 
பேச மறுத்த பெயர்ந்த காலம், பிறப்பின் பின்புலம்,  
தேசம் அகன்ற தெளிந்த என் சிந்தையின் திடம், 
பதினேழு ஆண்டில் படர்ந்த சூளுரை, விளம்பி 
சாதிக்க வேண்டிய சரித்திரம் சொன்னேன்.
பதின்மப் பருவத்து அரத்தம் பொங்கப் பதைத்தார். 
கொதி யடக்கிக் "கோக்குலத் துக்காம் நோன்பு 
பதிவிடும் பழி உணர்வு விடுத்து, பரந்தாங்கே 
பதிவிடும் மக்கள் தமை மண்ணில் ஓம்புதலே!
தடம் தவறாச் சத்துருக்கன் தான் வழி நடத்த 
கோடாது கோசலத்துக் கோவென நாளும் ஆள்வான் 
முடி துறக்கும் காலம் இராமனுக்கும் முதிர்ந்தது!
மரபு வழி மணிமகுடம் இலவன் சூடி அரசு காக்க 
அறங் காத்து குசன் அருகிருக்க அயோத்திதன் 
பிறங்கிடும் பிறங்கல் பிறங்கடையீர்! பெருகிடுவீர்!          (பிறங்குதல்-சிறத்தல்  
நிறைந்து வாழ்வீர்! நீடு வாழ்வீர்! நிலவுலகில் மாதோ!"    பிறங்கல்- அரசன் 
என்வாக்கில் வலி கண்டார். எல்லை கண்டோம்,               பிறங்கடை- வழித்தோன்றல், பிள்ளைகள்) 
நன்மனத்துச் சத்துருக்கன் நத்தும் கோசலை நாடு.         ( நத்தும்- விரும்பும், மதிக்கும்) 


தந்தை சொல் காப்பான்! 

நாடு நாடும் நம் மூவர் வரவைப்  
பாடு பார்த்துப் பறைந்த பறை. 
கொடி பறக்கும் கோட்டம் நீங்கி 
கோட்டி வந்து கும்பிட்ட ஒருவன்                           (கோட்டி-கோபுரவாசல்) 
அறிமுகம் செய்து அன்பு பெய்தான்.  
அருஞ்செல்வன் ஆவான் இவன்
அறக்காவலன் சத்துருக்கன் அரசி   
சுருதகீர்த்தி தந்த சுந்தரகீர்த்தி. 
அரமனை அழைத்து அசதி போக்கி 
கோடி உடுத்தி கொண்ட பசி நீக்க 
தேடிய என் விழித் தேடுதல் கண்டு 
அடங்கிய குரலில் அமைந்த வாறின்                        (வாறு-வரலாறு) 
படம் வரைந்தான். பொங்கிய பால்      
தண்ணீர் ஆலி தொடத் தானடங்கும்.                       (ஆலி-துளி) 
என்னுள் எரிவளர் தீயும் அவிந்து போகும்.
மின்னாமல் முழங்காமல் மினைக்கெடாமல் 
இன்னார் இனியார் என்னப் பாராமல்   
பன்னிப் பரவிய கோதாரி வருத்தம்  
கொன் றொழித்தது கோக்குலத் திலும்.
பலியான இராமன், பின் படர்ந்தார்  
தலைமுறை தழைக்கப் பிறந்த தனயர்.
பழியறியாப் பரதனும் தன் பரிசு கெட்டு                   (பரிசு-பெருமை) 
கெலித்த சிந்தையால் கெடுதல் பட்டான்.              (கெடுதல்-விபத்து) 
குலத்துக் குதவா இலக்குவன் குடிமாறி  
வலம்சேர் வான் அரர் வாழிடம் வளர்ந்தான்.           (வலம்-வலிமை, படை)
நல்லான் சத்துருக்கனும் நானில வாழ்வகலப்   
பொல்லா நோய் கண்டு போய்ச் சேர்ந்தான்.
மன்பதை காக்க மன்னவன் ஆயினன்,
மண்ணை நேசிக்கும் மகன் சுந்தரகீர்த்தி!

சுந்தரகீர்த்தி இன்னும் சொல்லுவான்,
அந்திம காலத்தில் அப்பனின் ஆசை.
என்று நான் திரும்பி வந்தாலும் எதிர்கொண்டு 
அன்புடன் என்னை அழைத்து ஆதரித்து  
என்மகனே எழில் மகுடம் ஏந்தும் 
முன்னுரிமை முதிசம் கொண்டானால் 
சொன்ன சொல் சோர்விலாது செய்க வென 
சத்துருக்கன் சாக்கிடையில் சாதிக்க சொன்ன     (சாக்கிடை- மரணப் படுக்கை) 
வித்தை விதைக்க விரும்பும் வீரமகன்.

விட்டுக் கொடுத்தல் 

வீரமகனின் மனம் விளையும் நல்லெண்ணம், 
சிரந்தாழ்த்தி சீராளன் சீராள, மனம் வாழ்த்தும். 
சிந்தையில் ஓர் எண்ணம் சிறைகொள்ள 
ஏந்தல்கள் என்னிரு மக்களையும் அணைத்து 
உந்திய என் எண்ணம் உரைத்தேன்.
"அரசனாம் சுந்தரகீர்த்தி தன் அறம்வளர்  
தரத்தால் அயோத்தியின் தலைவன் ஆயினன்!
மரபின் உரிமை மகுடம் உமக்கே ஆயினும் 
முன்பின் அறியாப்புது முகங்களாம் உம்மை 
மன்னரென ஏற்க மக்கள் மயங்குவர்.
நன்னெறிச் சுந்தரகீர்த்தியே நம்மாள் என 
உன்னிடும் உண்மையில் ஊறு செய்ய வேண்டா.
இலங்குதேவி எனை இகழ்ந்த இராமனைக் கண்டு 
இலக்கணம் ஈட்டும் இனியா ருமைக் காட்டி 
இலக்கினை நான் எய்தியதும் நிறுவிட,  
எண்ணிய என்னாசை இல்லாதொழிந்தது.
அன்பிசை பாடிடும் குசாணரை அணைந்து 
கண்ணியமாக வாழும் கருத்தால் சொல்வேன்.
என்னிரு மக்காள்! இது எமக்கழகில்லை! 
வந்த வழி திரும்பி ஐராவதி வழியும் 
இலகூர் இணைவோம். இனிது வாழ்வோம். 
நிலத்தில் நீதி நிலவிட நித்தம் செய்வோம்"

"செய்வோம் என்ற என் சொல் செயலாக்கும் 
மெய்வல்லார் என் மக்கள், என் மனசறிவார். 
பெய்த அன்பால் அறத்தால் பின்னாளில் 
எய்தினர் இணங்கிய இலகூர்த் தலைமை.  
இயற்றினர் இனிக்கும் குடும்பம் காதலில் 
நயமும், நலமும் நாடோறும் பெருகவே!
இயக்கம் கெட்டு நானும் இளைத்து வாடி 
வயோதிபம் வந்திட என் மன வரைவு காட்டித் 
தாயகமாம் இலங்கைத்தீவகம் தன்னில் என் 
போக்கும் ஆவியின் பின் பொய்யான மெய்யை,
ஆக்கைதனை முதுமக்கட் தாழியிடைப் 
பக்குவமாய்ப் புதைக்க பரிந்துரைத்தேன்.
தக்கபடி தாழியில் என் ஆக்கை தாழ்த்த தளம் 
சீதாவாக்கை ஆகுஞ் சீர் இலங்கைத் தீவகத்தில்.
ஏதோ வாழ்ந்தால் போதுமென ஏமாளியாய் 
மாது நானும் வாழ்ந்து மாளவில்லை.
சாதிக்க நினைத்தேன் சமைத்தேன் என்வழி. 
கோதுடைக் கோசலை இராமன் கோவண்ணம்             (கோது-குற்றம்) 
பாதியாய்க் கிழிந்த பக்குவம் அறிந்தாயோ?"
அதிரும் தன் மனசு ஆற்றுவார் சீதைத் தாயார்.

சீதைத்தாயார் சாற்றிடும் சீரிய வாய்மொழி 
பேதையேன் புந்தியில் மதிப்பை பெருக்கும்.
சிதைந்த வாழ்வு, சிதையாச் சிந்தை 
வாதை தரும் வார்த்தைகளை வழிகாட்டும் 
பாதையின் படிக்கட்டாய் பணித்த பண்பினள்! 
மேதினியில் மேன்மை மேவும் மாண்பினள்!  
அரைகுறையாய் அறிந்த சில சேதி அடுக்கி 
வரைந்தேன் என்னுடை வளத்திற்கு, சீதைப்
பிராட்டிதன் மனமருங்கில் பேருரை பிறந்ததென!
பெண்ணின் பெருமை எலாம் பேசும் நாம் 
புண்படுத்தி அவர்பல புன்மை பட்ட பின்னே 
மாண்புடை மாதரசி கற்புக்கரசி என்போம்.
மண்ணில் மசியாத மங்கையரை மாசு சொல்வோம்.
கண்ணிரண்டு கொண்டும் ஒரு கண்ணில்
வெண்ணெயும் மறு கண்ணில் வெஞ் சுண்ணமும் 
காணும் கலைத் திறன் காலமெலாம் களையோம். 
கோணாத கற்பு நெறி கோதையர் மட்டுக்கோ?
காணும் சுரி உழக்கிக் களியாடிப் பின் 
கண்ட வெள்ளத்தில் கால் கழுவும் 
ஆணுடை அகங்காரம் என்றுமே அலங்காரமோ?
கணியின் கண்ணால் உலகைக் காணும் காலமிது! 
பிணியான பெண்ணடிமை பீடித்த மனங் கழுவி 
உணர்க! உயர்க! பெண் பங்கு உலகில் அரை! 
               
(அரை நூற்றாண்டு    ஆகிவிட்டதொரு 
திரைப்படம் !.....)        

(சாத்து சாத்து கிழிஞ்சது காணும்)

கார் முகில் கவர்ந்து மழை கறக்கும் நேர் கொண்ட நெடு மரங்களின் உச்சியில்
நார் கொண்டு நெய்து நல்மனை நாட்டும் வான் அரர் வழி வந்தவரோ? 

korowai-tree-house-0

korowai-tree-house-8


Author: ந.குணபாலன்
•1:03 PM

ஆய்ஞநேயன் 

சிந்தையில் சீராடும் என் சீராமன் நினைப்பில்
நொந்த ஆண்டு பன்னிரண்டும் நொள்கும் நேரம்,    (நொள்கும்-சுருங்கும்) 
முந்தானை மூக்கொழுகும் நீர் துடைக்கையில்
விந்தையாக திரிசடை விழிமூடி பகற்போது உறங்க;
முந்தி ஒருநாள்;.... வானேறு தேர் ஊர்ந்த முன்னாளில்
கந்தமரம் வளர் திராவிடக் கண்டம் நீங்கிய                    (கந்தம்-சந்தனம்)
அந்தி வளர் பொழுதில் கண்ட ஒருத்தன்! 
உந்தித் தாவி உயர் மரத் துச்சியில் மனை கட்டும்
மாந்தன், திராவிடத்து வான் அரர் மரபின் ஒரு
மைந்தன் முன் வந்தான், மகிழ்வில் மலர்ந்தான்.
முந்தி என் தாதை முறை சொன்ன வகையால்,                (தாதை-தந்தை) 
"குந்தகம் விளைத்து ஊர் கொளுத்தும் கூட்டத்து
வந்தவன் இவன் என்ன வாழ்மானம் வைப்பானோ?"என
கந்தக வெடி பற்ற கடிந்து சிதறும் கற்பார் போல
அந்தரப் பட்டேன், அவன் சிரித்த முகம் கண்டு.
மந்திரம் இல்லை. அவன் கையில் என் மணாளன்
சுந்தரக் கைவிரல் மோதிரம் சுடர்விடக் கண்டேன்.

கண்டேன் கணையாழி காண்டலும்
பெண்ணாள் பொருமினேன். பெருவலி
கொண்டேன். கொன்றானோ இவன் மணங் 
கொண்ட கோமகனை? இராமனை?
செண்டாடும் பந்தாக கிறுதி சேர்ந்து          (கிறுதி-கிறுகிறுப்பு,தலைச்சுற்று) 
தொண்டை அடைத்து தூக்கி எறிந்தது.
தண் தூவல் தடவ தடங்கண் திறந்தேன்.       (தண் தூவல்-குளிர் நீர்த்துளி) 
அண்ணாந்தேன் ஆங்கவன் நின்றான்.            (ஆய்ஞனேயன்=ஆய்ஞன்+ஏயன்,
"அன்னையே நான் ஆய்ஞனேயன்!                     ஆய்ஞன்-ஆராய்பவன், ஏயன் - ஒத்தவன்) 
நின்னை நீங்கிய நாள்முதலாய்
தன்மானம் தனைக்காக்க தலைப்பட்டு
பன்னிரண்டு ஆண்டு பாதை அலைந்து
தென்திசை நாடி வருந் தேவன்
என் ஆண்டான் ஆனான் இராமன்!
உன்னைத் தேடி இங்கு அனுப்பினன்.
தன் மோதிரம் தடயம் தந்தான் காண்!
என் தோளேறு! எவரும் காணுமுன்னம் 
உன்னி எழுந்து மர உச்சி தாவுவேன்.
தன்னால் அலையும் தரங்கம் நடுவே             (தரங்கம்- அலை, கடல்) 
பின்னல் முறித்த பிட்டிகள் தொடரும்            (பிட்டி- மேடு) 
பன்னல் இலா இடிகரைச் சேதுப் பாலம்   ( பன்னல்-நெருக்கம்) 
வன்னி போல் நிலம் வலித்து தத்தி மிதித்து   (வன்னி-குதிரை)    
மின்னல் போல் மிகு வேகம் கொண்டு பாய்வேன்.
மன்னவன் முன்னிலையில் மாணிக்கம் என்ன 
என்னால் இயன்ற உன்னதக் காணிக்கை என்ன 
உன்னைக் கொண்டு சேர்ப்பேன்! உயர்வேன்!
என்னால் ஏலும் காரியம் இது காண்!
நின்று நெடுமூச்சு நீக்காதே! நம்பு
என்னை! இணைவாய் உன் இனியனை "
என்றே அசங்கிய அவதி மொழி பேசினானை
பின்னிய தமிழில் ஒரு பிடி பிடித்தேன் சிலவுரை.

சிலவுரை செப்பினேன் சின்னப் பொடியனுக்கு
"தலைவனின் ஆளாமோ? நீயோ? தளுகு தளுக்காதே!    (தளுகு-பொய் , 
கொலை பாதகக் கூட்டத்தான் நீ!அறிவேன்!                  தளுக்காதே -மினுக்காதே)
வலை போட்டு எனை வளைத்துப் பிடித்து
சிலை ஏந்தும் என் சீராமன் சீர் சிதைக்க
விலை பேசி ஆள்கடத்த வந்தாயோ?
வெள்ளை முகிலேறி வான் தொட்டு விரைந்தாயோ?
மல்லாமலை போல தானிருக்க என் மணாளன்      (மல்லாமலை<மள்காமலை
புல்லுப் பொடி மீசை அரும்பாத பொடியனைக்      -அசையாதமலை) 
கெல்லிவா வள்ளிக்கிழங்கு என கேட்டானாமோ?
நில்லாமல் ஓடிப்போ! நின்றாயானால்
பொல்லாத சீதையின் பேய்க்கோலம் பார்ப்பாய்.
இல்லை ஒருவேளை நீ உத்தமன் ஆனால்
சொல்வது எல்லாம் மெய்யானால் சுணங்காதே
செல்! சென்று என் செல்லன் இராமனிடம்
வில்லொடித்து வென்று  வேல்விழியாளை நெஞ்சில்
தெள்கி ருந்தால் தேடி வந்து தூக்கிப்போ.             (தெள்கு-தெளிவு) 
அல்லெனில் இன்றைய திகதியில் இருந்து
சொல்லி மாசம் ஒன்று சோர மைக்கா நாள்           (மைக்கா நாள்- மறு நாள்) 
வில்லில் விடுபட்ட அம்பென விண்சேரும்
மெல்லியலாள் உயிர் தான். பின்னே 
மெல்ல வந்து மேனியை அள்ளிப்போய்
பெல்லிப் பேய்க்குக் படையல் போடு என்று
சொல்வாய் போ!இந்தச் சூடாமணி சான்று வை!"
கல்மழை போல் நான் கலகலத்து முடிய
சொல்லி வைத்தவளாய் சொருகின கண்
மெல்லத் திறந்து திரிசடை மேலே பார்க்கையிலே
பல்லிளித்த பையலைப் பார்த்தலும் பயந்து               ( பையல்- பையன்) 
கொல்லெனக் குரையை வைத்தாள் "அட்டிட்டாரோ!"

இலங்குபுரி எரிப்பு 

"அட்டிட்டாரோ! தொட்டிட்டாரோ! " என்றவள்      (அட்டிட்டாரோ-(தடை இடும்)காவலரோ!      
போட்ட பேரொலி பொருப்பு போய்ப் பொருத              தொட்டிட்டாரோ - (தடைமீறி) தொட்டவரோ!)   
வட்டமாக ஆங்குற்று வளைந்த அரணத்து வீரர்        (பொருப்பு - மலை , 
கூட்டிச் சென்றார் கோசலையான் தூதனை.             பொருத - பொருந்த, மோத) 
அட்டியின்றி தூதன் என்றறிந்து அரவணைத்தார்.
எட்டத்தில் அங்கே என்ன நடந்ததோ அறியேனே.
நட்ட நடு இரவில் இலங்கைத் தீவகத் தலைநகர்
திட்ட மிட்டு இட்ட தீயில் புகைய திக்கெட்டும்
வெட்ட வெளிச்சம் ஆனதே! ஆரியர் வேள்வி
இட்ட தீயென உடல் பொருள் ஆவி பலி எடுத்து
சுட்டெ ரிந்ததே! நித்திரையில் சுருண்ட சனம்
பட்டெ ரிந்து போனதே! பாவி வான் அரத்தான்
காட்டிய அழிவு இது! கடிந்த கூத்து இது!
மாட்சியுடைப் பெருந்தச்சன் மயன் மனம் வைத்துப்
பூட்டிய தோரணம் பொற்கதவம் புனைந்து 
தீட்டிய மாடம், திக்கம் வளர் தோப்பு, தெருமூடிமடம்   (திக்கம்-இளயானை) 
காட்டமாய்க் கருகியதே எனக் கலங்காதான்.                  (காட்டம்- விறகு)
வாட்டிய தீயினில் வதங்கிய உயிர்களுக்காய்               (வெப்பிசாரம்<வெவ்விசாரம்
வெட்டும் வெப்பிசாரத்தில் வெம்பும் இலங்கையர்கோன்.   - கொடுந்துயர்) 

இலங்கையர்கோன் இரங்கி ஏத்தினான் ஈகத்தாரை.          ( 
தலம் - வீடு,காடு,இடம்,நகரம்,பூமி,
நிலம் நீத்தாரை  முதுமக்கட் தாழி நிறைத்து ஆழ்த்தி           ஆழம்,கீழ்,இலை,இதழ்,தலை,உடலுறுப்பு)
சலம் பூக் கொண்டு சாரும் தென்புலக் கடன் முடித்தான்.             
தலந் தொட்டு தரை தொட்டு முழந் தாளிட்டு மக்கள்                  
கலந் தொட்டு கஞ்சி இட்டு கண்ணீர் துடை தூயன்.          
சீலமுடையான் சிந்தை நொந்தான்."என்ன சீலம்பாயுக்கு    (சீலம்-நல்லுணர்வு,ஒழுக்கம்+  பாய்-சொரி 
குலம் கொண்ட திராவிடன் என நம்பிக் கூட்டினேன்?              சீலம்பாய்=வெட்கக்கேடு, ஒழுக்கக்கேடு)       
குணங் கெட்ட வான் அரம் விளைத்த கோட்டினால்                   ( கோடு-கொடுமை) 
பிணஞ் சுட்ட காடாயிற்றே பிறைக்குலத்தார் நகரம்!"
வானேறும் தேர் வல்லான் மனத் திடம் வரைந்தான்.        
"கணம் இது சுட்டி கட்டி எழுப்புவம் எங் கலைநகர்!                   
சுணங்குவதில்லை, பிணங்குவதில்லை சுந்தர நிலவின்                    
சொலிக்கும் சோதியில் சுழல் பூமி சொக்கி நிற்கும்           ( பழஞ்சலிப்பு- நீத்தாரை நினைந்து நல்லநாள் 
வலிந்த கோட்டங்கள் செய்குவம்! வண்ணம் பூசுவம்!         பெரிய நாட்களின் முதல்நாள் மகள்/சகோதரி 
பழஞ்சலிப்பு சொல்லி அழுது பலன் இல்லை                             /மனைவி/தாய்  ஒப்பாரி வைத்து அழுதல். 
சழக்கர் வியப்பச் சாதனை செய்து காட்டுவம்." என                   70களின் பின் மறைந்து விட்ட வழமை)  
முழங்கினன் முதுகுல இராக்கதிர் முந்தல் செய் எந்தை.      (முந்தல் செய்-முன்னேற்றும்)
சுழலும் சில நாள்!சூழும் எழில்! மீளும் நகரத்து முந்தை!      ( முந்தை- பழமை, முற்காலம்)  


முந்தைப்பிறவி முந்தூழோ? இல்லை இப்பிறவியில்  
சிந்தை இலாது யான் சீண்டிய பழியோ? அறிகிலேன்.
எந்தையர் நாட்டுக்கு என்னால் இடுக்கண் உற்றதே!
புந்தியிலே புயலடிக்க அல்லாடும் என் மனம் புலம்ப 
அந்தியிலே போர்ப்பறை அறைந்தார்! "எதிரிப்படை 
வந்த"தென! "வந்தான் என் வாழ்முதல்" என்றே 
உந்திடு உவகை எந்தன் உள்ளத்தே உள்ளிடா.
"எந்தெந்த அழிவு எய்திடுமோ இராக்கதிர் இனம்?
முந்தி வந்த மணியோசை ஆகும் மூர்க்கன் ஆய்ஞநேயன்
பந்தி வைத்தான் எரி தழலுக்குத் தலைப் பட்டினத்தை. 
பிந்தி வரும் யானை ஆகும் வான் அரர் படைப் பிரிவு.   
தந்தியதன் தாள் தரையுதைக்கும் வாழையதன் தாராக               (தந்தி-ஆண்யானை, தாள்-பாதம்) 
சிந்தும் சுடர் மணி விளக்கேற்றும் சீர்மிகு இலங்குபுரம், 
கந்தறுக்க வந்தானரோ? கடல் கரைக்க வந்தானரோ?                  (கந்தறுக்க-பற்றுக் கோடறுக்க) 
முன்வந்து போர் முனையான் இராமனும் கரந்தடிப்பானோ?"
எந்தையர் நாட்டை எண்ணுங்கால் நெஞ்சம் வெந்தேன். 

இந்தா விபீசானா! இலங்குபுரி இராச்சியம்!

வெந்தேன் பாதியுயிர்! எந்தை குலம் சதியில் வெந்ததே! 
எந்தை பட்டான்! எம்பியர் பட்டனர்!நம்பியோர் பட்டனரே!
சந்து, பொந்து, சுருங்கை, ஒழுங்கை, சகல பாதையும்,
பந்தம் பிடிப்பான் பாதகத்தால் பகை நிறைந்ததே!                        (பந்தம் பிடிப்பான்-தன்னலங் கருதி 
பந்தி விரித்தான் விபீசானன் படையல் வைத்தான்.                                            வலியாரை அணைபவர்)  
சொந்த நாட்டின் மணிச் சுரங்கம், சேர் திரவியம், 
முந்தி வந்து கடை விரித்தான் முதுகுலம் முனிந்தான்.
"இந்தா விபீசானா! இலங்குபுரி இராச்சியம்!" எனத் 
தந்த இராமன் தாள் பணியும் தரங்கெட்ட விபீசானன்! 
மீந்தேன் பாதியுயிர்! மிடுக்குடன் மின்னினான் இராமன்!
"செந்தேனே! உன்னைச் சேராது ஆண்டு பல 
நொந்தேன், நொடிந்தேன் நேரிழை நினைக்கண்ட 
இந்த நேரம் முதல் உயிர்த்தேன். இனி வாழ்வேன்!"
இந்தப்படி இன்னுரை செய்வானோ? நான் இப்படி 
அந்தத் தருணத்தே ஆசைப் பட்டேன் அல்லேன்.
வந்தென்னை வாய் வார்த்தை ஏதும் பறையாது 
நைந்த உடல் இறுக்கி  முத்தவரி நெய்வன் என 
நினைந்த என் மனம் நெருப்பில் சொரி நெய்யாக 
புனைந்தான் வலி மிகு தீப் புழங்கும் வார்த்தை.             ( மனைந்த புண் - வெளிப்பார்வைக்குத் தெரியாமல் 
மனைந்த புண் மனத்தான் அறைந்தான் அடுத்து!                                                  பெருத்துப் போன புண்) 

"அடுத்தவன் மனை உற்று ஆண்டு பல 
இடுக்கம் இன்றி நீ இருந்த இழுக்கினால்                             (இடுக்கம்-துன்பம்,   இழுக்கு- கேவலம்)
அடுக்கும் தீக்குழி அடுத்து, என் பெருமை நேராக்கு! 
மடுக்கும் மானம் சிதையாச் சீதை நீ யென!                         ( மடுக்கும்-சேர்க்கும்) 
எடுத்துக் காட்டு! எனக்குற்ற மறு விலக்கு!"
தீயன்ன சொல் மனம் தீய்க்க தேகம் தொய்ய 
மெய்ச் சொல்லோ இல்லை மாயமோ என்செவி 
மொய்த்தது என்னும் கேள்வி மண்டையில் மோத
பைய எழுந்தேன், மனம் படைத்தேன் ஓர்மம்!
பேய்க்கு வாழ்க்கைப் பட்ட பெண்டாட்டி 
பொய்யாது புளிய மரம் ஏறத்தானே வேண்டும்?
செய்து காட்டுவன் அல்லெனில் செத்து மடிவன் என
எய்திய எண்ணம் பெருக மனசும் இறுக்கி 
நெய் பெய்த தணல்சேர் குழி நேர்ந்தேன், நடந்தேன்.
தீயது தொட்ட மெய் தீயாது, மனந்தான் தீய்ந்தது.

தீய்ந்தது மனத்தின் ஆவல். தீயது செய்தான், 
தூய்நிலை கண்டும், கண் தூக்கி நோக்கான்.
சாய்ந்த தன் மானம் சரிசெய்த செருக்கில் 
இயக்கினன் என்னை கைவிரல் அசைவு காட்டி. 
இயமானன் பின்னே ஏகும் நாய் என இழுவுண்டேன்.
நயமுடன் அப்போதும் ஒரு நப்பாசை என்னகத்தே.
"புயலடித்த பின் சேரும் புது அமைதி போலப் போர்த் 
தியக்கம் தீரத் தேவி எனைத் தேடி வருவான்" என                 (தியக்கம்-மயக்கம், களைப்பு) 
மயக்கு ஊட்டும் மனசு மறை முழங்கும். இராமன் 
காய்ந்த முகம் காட்டும் சிறு கலக்கம். விபீசானன் 
இயற்றிடும் வெற்றி விழா ஏற்கான். அக்கணமே 
தயங்காது தடக்காது தாயகம் நாடிடும்   
தியானம் தலைப்படத் திரும்புவன் தேசம். 

 சத்துருக்கன் 

தேசம் அணித்தோம் வானேறு தேர் தந்த 
நீச நெஞ்சின் விபீசானன் நியமத்தால்.
பேச மறந்து பேயடித்த முகத்து இராமனும்,
வாசம் கெட்டு வதங்கிய மலராய் நானும் 
நீசன் இலக்குவன் நிலம் நோக்கு முகத்தனும் 
கோசலை நாட்டுக் கோட்டம்  தொட்டோம்.
வாசலில் வந்தவன் வணங்கிடும் பரதன் அல்லன்.
அசைந்து ஆட்டங் கண்ட கோசல நாட்டை 
இசை பெருக்கி ஒழுக்கம் ஓம்பிப் பன்னிரு ஆண்டில்    
வசையறு வாழ்வும், மற வீரமும் வளர்த்த வள்ளல் 
மாசிலா சத்துருக்கன் மன்னவன் ஆனவன்.
ஆசி கேட்டு என்னடி பணிந்து நல்வரவு உரைத்தான்.
பேசிட திறந்த என் வாய் பேசவுமில்லை.
பேசாது பிளந்த வாய் மூடவுமில்லை. 
பாசக்காரத் தம்பி பரதன் எங்கேயெனப் 
பூசல் உண்டான புந்தியில் பலவினா கூத்தாட
வாசம் செய் வளமனை சேர்ந்தேன் மாது.          

மீண்டும் கைகேயி 

மாதெனை நல்வரவு மலர்ந்து நவிலும் கைகேசி.
வாது சில முன் வைத்து வரைந்தனள் வரைமுறை.
"எது நடப்பினும் எமக்கிடர் இல்லையேல் 
பதுமையாய்ப் பாராது நடிக்கும் பாவனை 
உதவாது உன்னத அரச தேவி நினக்கு. 
பதியைப் பாராளும் பெரு நெறியில் 
பதிக்க பல பாடுகள் பழகி பழி கேட்டு 
கொஞ்சிக் கோ மனதைக் கொள்ளை கொண்டு 
கெஞ்சிக் கூத்தாடிக் கலகம் வைத்து 
மிஞ்சினால் மிரட்டி அன்பில் கட்டி 
என்ன ஆட்டம் போட்டாலும் கணவனுக்கு 
சொன்ன கடமை சுட்டும் சொல், செயல், 
என்றும் ஓது! மக்களை ஓம்பு! அதுவே வண்ணம்!"

வண்ணம் கெட்டு வயக்கெட்டு வயசு முதிர்ந்தும் 
திண்ணம் கெடாத திடமனத்துத் தேவி சொல்லவும்; 
எண்ணத்தில் பலபடி உயர்நிலை ஏறினாளை 
கண்மழை சொரிந்து கால்பிடித்து முன்னாளில் 
புண்பட்ட சொல் புரண்டது பொறுத்தருள 
வேண்டியவளின் வேதனை துடைக்கும் தூயள்!
"ஆண்டவனாய் இராமன் அயோத்தி முடிசூடிடுக!
கண்ணியம் காண் சத்துருக்கன் கண் காணிக்க!
அண்ணனின் நைந்த மிதியடி ஆதாரம் எனக் காவி 
மண்ணில் அயோத்தியின் மதிப்பை மிதித்து  
அரியணை ஏற்றிட வந்தான், இழிவென எண்ணாதான்.  
செருப்பு ஆளுமோ? செம்மலிச் சேட்டை எல்லோ? என     (செம்மலி<செம்மாளி -செம்படவர் செருப்பு) 
துரத்திய புரட்சியர் விட்டுத் தூர எறிந்த கல்  
சிரசினில் பட சிதம்பிய சிந்தை சீரிலாதழிய   
கரவில்லாக் குழந்தையாய்ச் சிந்தை கலைந்தான்
பரதன்; பழி செய்தாயென எனைப் பழித்த என்பிள்ளை! 
புரண்ட உள்நாட்டுப் பகை எனும் புகையின் ஆதி 
ஆராய்வன் சத்துருக்கன் அமைத்தனன் அமைதி."

(இன்னும் கிழியும்)
Author: ந.குணபாலன்
•6:00 AM

இராவண்ணன் வரவு 

அற்றைநாள் இன்னும் பல உற்றன என்னிடத்தே.
புற்றுநோய் போலும் இலக்குவன் புறத்தேகலும்
முற்றிய பாசம் முழுக்கிட என் முன்தோன்றும் ஒருவன்.        
கற்றைப் புரிசடை, கருமலையன்ன திண்டோள்!
ஒற்றி ஒளி தெறிக்கும் கதிருடை ஒன்பது கல்! பாருமே!
பெற்றியுடை மணித்தீவகத்துப் பெருமான் முகம்
ஒற்றி ஒளி தெறிக்கும் கதிருடை ஒன்பது கல்!,
பற்றிக் கழுத்தினைப் படரும் மணியாரம்!
அற்றைப் பொழு தறிந்தேன் பத்துத் தலை
தோற்றிய வண்ணம். தொகை மிகை படு கதை.
பெற்றியுடை இரத்தினத் தீவகத்துப் பெம்மான்!                     (பெற்றி-பெருமை) 
ஏற்றும் வீணைக்கொடி இராவண்ணன் இவனன்றோ?!
கொற்றவனின் மணியாரத்துக் கோலம் 
தொற்றி நாம் தொடர்ந்த வழி யாவும் தொகுத்தார்
பொன்றாப் பேராசை பொங்கும் கொண்டையர்.                   (பொன்றா-அழியாத)
அன்னதனால் அறிந்தேன் இராவண்ணன் அவனை.
முன்னே கண்டறியா முதல்வன் முன்தோன்றலும்
என்னையும் மீறும் ஒரு ஈடுபாடு ஒரு வாரப்பாடு.                  (வாரப்பாடு-பாசம்) 
என்னென்று உரைசெய்வேன் என் உணர்வெலாம்
மன்னும் மிதிலை நகர் மன்னன் மகள் மைதிலி!

மைதிலி மொழி பேசும் மிதிலை இளவரசி நான்.

பதிவீடாம் அயோத்தி படர் அவதி மொழி
பாதியறி பாவை. என் பக்கல் அணைந்து
இதிவீசு இலங்கை மன்னன் இராவண்ணன்                       (இதி-ஒளி) 
ஓதிய அவதியின் உச்சரிப்பு உருத்தாலும்
மதி தொட்டது மன்னவன் உரைத்த மொழி.
விதி விளையாட வினை விளைத்த வாக்கு            
பதியவன் பெரு வாழ்வு பாழாகும் என்ன, வயிறு            (பதி- ஊர், உறைவிடம், நாற்று, கணவன்,  
பதி பிறந்த பாலகியை பால்குடிப் பருவத்தில்                     அரசன், இறக்கு, ஊன்று, ஆவணப்படுத்து)  
பதியன் கன்றாய்ப் பதி விட்டுக் கிளப்பிப் புதுப்
பதி தேடி பதமான பாத்தி நாட்டிப் பதிய வைத்தாள்
பதி வழி காத்திட பெருந்தவம் பூண் பெருந்தேவி
பதி போற்றும் பத்தினி மண்டுதாரி என்தாய். மார்பில்    (மண்டுதாரி=மண்டு+உதாரி-மிகுதி+கொடையாளி)
பதி கொண்ட முலைப் பாலூட்டும் பின்னாளில்
மதி கொண்ட முதல் மகவின் முகம் மறவா உறவால்
விதி செய் வினை எண்ணி வேக்காட்டில் விழிநீர்
நதியாடும் நாயகியாள் நல்லாள் என்தாயாள்.
மோதி என் மூளையில் பல சேதி மொய்த்திட,
ஆதி எலாம் அறிந்து நான் 
அலமர, என்தலை அன்புடன்                                                    (அலமர-மனம்வருந்த) 
கோதி எந்தை கொற்றவ இராவண்ணன்;
மீதி இன்னும் பன்மொழி மிழற்றுவன் காண்!

"காணென் மோனை! இராமன் மேல் நின் காதல்            (மோனை- மகன், அன்பு மிகுதியால்  

வீணென்று நான் விளம்பேன். வினை விளைந்ததே!                பெண் மகவையும் அழைக்கும் விளிச்சொல்) 
கண்ணில் வீழ் துரும்புக் கள்ள மனத்து இலக்குவன்!
தூண் என்றான பின் தொடர்வது துன்பமே.
நாண் விலக்கி நயந்து அவன் முகம் நேர்விழியால்
காண்கின்ற பொழுதெல்லாம் கலக்கமன்றோ?
அண்மிக்கும் தோழியர் அருகிருக்கும் அரண்மனையில்
மண்ணின் மாதவமே! மகிழ்வோடு நீ வீற்றிருப்பின்
கண்ணியம் கெட்டான் காமக் கண் நின்னைப்
புண்படுத்தும் பார்வை பூசும் பொழுது அற்பமே.
தண்பொழில் வனம் நடுவே நீவிர் மூவர் தானெனில் 
தண்டனை தான் பொழுதெல்லாம் தாங்குவாயோ?
ஆண்டுகள் பன்னிரண்டும் ஆயின பின்னே
கொண்டல் வண்ணன் கோசலம் ஏகும் நாளில்
மீண்டும் மைதிலி நீ இராமனை மேவு! அதுவரை
தீண்டா  விசும்பிடை திரியும் வானேறு தேரேறி
நீண்ட தென்கடல் நித்திலமன்ன நீர்சூழ் இலங்கை
பண்ணுடைத் தீவு படர்வாய்! பங்கப்படாமல் வாழ்வாய்!       ( பண்-இசை,நீர்நிலை,வயல்,அலங்காரம் )
கொண்டை ஆரியக் கூட்டம் திராவிடம் தனை வாழ்
கண்டம் விட்டு அறுக்கும் கருத்தினால் இராமனும்
சண்டைக்குச் சாலவும் சார்கின்றான். நீயென்
மண்டுதாரி தந்த மகள் என்பதனால் மறைப்போம் முன்கதை.

முன்கதை அறிந்தால் முகம் திரிந்து மனம் எரிந்து

உன்னை உடுத்த உடுப்புடன் கலைப்பான் காண்!
இந்த எண்ணம் எனை எதிர் மறிக்க இழியவன் 
சின்னவனின் சிறுமொழி கேட்டும் சரவலுடன்                                     (சரவல்-சிரமம்) 
உன்னியெழும் சினம் அடக்கி உறைந்து நின்றேன்.
அன்னமே! அப்பன் வீடு இசைந்து நீ ஏகும் சேதி
எந்நாளும் எவருக்கும் எட்டா வகை எடுப்போம்.
வன்மையால் வலிந்து பற்றிப் போனதாக
தன்மை செய்வாம். தாயே நின் கைவளை
மண் சிதறு! மண்ணில் மல்லுக்கட்டிய கோலம் வரை!
என்னுடனே வருக! வானேறு தேர் எழுக! வா மோனை!"
என்னச் சாலும் என் பிறவிக்கு வித்தாம் இராவண்ணன்.
தன்னாலே என்காலும் தந்தை தனைத் தொடரும்.
பின்தங்கும் என் சிந்தை பிரியனைப் பிரிய இடறும்.
வன்சொல் இளையான் வாக்கு நெஞ்சம் வந்து குதறும்.
என்னவனை எண்ணி ஏங்கி கன்னம் வடியும் கண்ணீர்.

கண்ணீர் கலைத்து என் கன்னம் தடவி தாடாற்றி

"பொன்குஞ்சு! நின் பொன்றாக் காதல் அறிவேன்.
என்செயலாம்? ஊழ்வினை தானோ? வந்து உறுத்துமே?
நன்னாள் வந்து விடியும்! நாயகனைச் சேர்க்கும்!
அந்நாள் வரை அரற்றும் நெஞ்சம் ஆறுதல் செய்!
இந்நேரம் வானேறு தேரில் இலங்கை எய்துவோம்!
நின்தாய் நித்தம் நினைந்து நீள்விழி நித்திலம் கொண்டு
கன்னம தில் கீறும் கோட்டுக் கோலம் காண்!
அன்புருவாம் அவள் அன்று தொலைத்த திரவியத்தை
இன்று கண்டு இன்புறுவள். இறுக்கி மார்ப ணைப்பள்!
உன்னிளையார் மூவர் இருக்கின்றார் மோனை!
இன்முகத்து இந்திரசித்தன், அஞ்சான் அதிகாயன்,
என்னுரு அச்சுப் போலும் அச்சுக்குமரன் அறிவாய்.
இன்னும் காணாத உடன்பிறப் புன்னை உரிமை கொள்
தன்மையினால் உள்ளங்கையில் தாங்குவர்!
பன்னிரண் டாண்டுகள் ஒரு பகலெனப் பறக்கும்!
மன்னன் மகன் மருங்கு மாதரசி நீ நெருங்கும் 
பொன்நாள் நாளை வரும்! பொறுமை புழங்கு!"
என்னும் என் தாதை ஆறுதல் தரும் வாக்கு.

முன் காணாத காட்சிகள் சில 

பறக்கும் திராவிடன் 

வாக்கிழந்த நானும் வருத்த முடன் வானேறு தேரில்
ஏக்கமுடன் ஏறும் போதில் "ஏமிலாந்தி! எங்கே                 ( ஏமிலாந்தி-திகைத்து நிற்பவன்,  வந்த
போக்கினான் பொழுது அந்த மாரீசன் பேயன்!"என              வேலை மறந்து புதினம் பார்ப்பவன்) 
திக்கெட்டும் கண்ணெறிந்து தேடின தலைவன். 
"எக்கணம் மாரீசன் இங்குத்தை இல்லை ஆக்கும்.                    (எக்கணம்-ஒருவேளை, 
இக்கணம் இலங்கை ஏகுவம்!" என்னும் இராவண்ணன்,            இங்குத்தை-இவ்விடம்) 
பக்குவமாய் வானேறு தேரைத் தென்றிசை பரந்தனன்.
நோக்கா நொடிப்போதில் இராமன் வந்தே பின்வளம்  
தாக்கிட மாரீசன், என் தாய்மாமன் தகர்ந்தானாகப்               ( படகத்தரவம்=படகம்+அத்து+அரவம் 
பக்கல் வந்த படகத்தரவம் பிந்திச் சேதி பறையும்.                     படகம்-பறை, அரவம்-ஒலி) 
போக்கும் தென் திசைப் பொன் மாலைப் பொழுதில்
தாக்கியது எதுவோ தடக்கியது வானேறு தேர்!
"மொக்கன்! கண்கடை தெரியா மோடன்!
பக்கம் பார்த்துப் பறக்க அறியாப் பதடி!
அக்கு ஒடிந்து நிலம் இழிந்தான் அவனுக்குப்                                ( அக்கு-எலும்பு) 
பக்குவமாய் பரிகாரம் பண்ணிப் பின்னேகுவம்!"
எக்கேடும் எவருக்கும் எண்ணாதான் சொன்னான்.
தேக்கம் உற்ற வானேறு தேர் தரை தொடும்.
பிக்கல் ஈதேதென பார்த்தால் முன் பின்னே
எக்காலமும் காணா அதிசயம் எதிர்கொண்டேன்.
பக்கம் இரண்டிலும் பறவைச் செட்டை தைத்து
திக்கெட்டும் திரியப்பழகும் திராவிடன் ஒருவன்!
நோக்காட்டில் நெளிந்தான். எமை நோக்கி
நக்கல், நளினம் நெளித்தான். நயந்த நல்லுதவி
முக்கரமாய் முற்றிலும் மறுத்த மூர்க்கன்.                             (முக்கரம் - பிடிவாதம்)
கக்கத்தில் இறக்கை பூட்டும் கருடக் குல மாந்தன்.
தக்கோர் நீங்கு தகுதியானைத் தரைவிட்டு
திக்கம் தன் துணையோடு திளைக்கும் தீவகப்                    ( திக்கம்- இளயானை)
பக்கம் பார்த்துப் பறந்தோம் வானேறு தேர்!

வான் அரர்  

தேர் செல்லும் தென் திசையில்
நேர் கண்டேன் இன்னும் சில நெடுமை.              ( நெடுமை - பெருமை)
கார் முகில் கவர்ந்து மழை கறக்கும்
நேர் கொண்ட நெடு மரங்களின் உச்சியில்
நார் கொண்டு நெய்து நல்மனை நாட்டும்
பேர் கண்டு "பேயோ?" என்று பிறழ்ந்தாளை           (பிறழ்தல்-நடுங்குதல்) 
தார் கொண்ட தோளன் என் தகப்பன் 
"ஓர் மோனை!" என ஒப்பிய சொல்லால்.               ( ஓர்-தெளி,ஆராய்) 
"பார் கொண்ட பழந் திராவிடத்தின்
வேர் விட்ட கிளை விளை குலம் ஒன்று.
சேர் கிலார் எம்முடன் சேட்டை மிக்கார்.
மார் கொள் மாறுபாட்டால் மாற்றலரை நாடி,               
தேர் கொண்டு வானேறும் திராவிடம் தெறிக்கும்.         (தெறிக்கும்-சிதறும்) 
ஊர் கொளுத்தி உறவறுக்கும் உன்மத்தர். மழை
வார்க் கும் வானுயர் மரம் பற்றி வாழ்தலின்
ஆர்த்து அமளி செய் கவியின் அரம் காட்டுதலின்
பேர் பெற்றார் வான் அரம் எனவே, பீடுடையார்.                (அரம் - குறும்பு) 
ஆர்க்கும் அடங்காத ஆற்றலுள்ள திராவிடம்
சேர்க்கை யின்றிச் சிதறும் செயல் உடைத்து.
ஆர் எவரும் தேவையில்லை எம்மவரை ஒடுக்க.
நார் உரித்த தடி கொடுத்து நணுகார் கையால்              ( நணுகார்-பகைவர்) 
ஊர் அறிய அடி வாங்கும் எம் திராவிடத்துத் திமிர்."
கார் முகிலினிடை கடியும் இடியாகக் கனன்று
வேர் விட்ட வேதனையச் சொன்னான் வேந்து.


இலங்கை வாழ்க்கை 

வேந்துடன் வானக வெளியூரும் தேரேறிப் 
போந்தேன். பொங்கு கடல் திரைக் கையால்
ஏந்தும், மணி தீவம் ஏற்றும்  இலங்கைத் தீவகம்.
காந்தம் என தாவி வந்து கண்டதும் முத்தம்
ஈந்தா ளில்லை எனை ஈன்ற தாய். மனமது
வெந்தேன். வேல்விழி அவள் வதனம் விடியவில்லை.
பிந்தி மெல்ல விரிந்த புன்னகையில் பிரிந்த துயர்
பந்தி வைக்கும். பாசம் இழுக்கப் பக்கம்
வந்து வாரினாள் வடிந்த காலத்தை வழித்து மடி
ஏந்தும் தவிப்பில் என்தாய். உள்மனசில்
வேந்தனுக்கு வெவ்வினை விளைக்க
வந்தாளென் மகளென்று வருந்தினளாம்.
சந்திர ஒளியினராய் அன்புச் சுடர் வீசு சகசர்                       (சகசர் -உடன்பிறந்தார்) 
இந்திரசித்து, அதிகாயன்,அச்சுக்குமரன் எம்பியர்
அந்தரப் பட்டு வந்தாளை எம் அக்கை என
சொந்தங் கொண்டாடி ஒருமனை சோடித்தனர்.

சோடித்தனர் இலங்குபுரி மாநகரத்தார். சோமனை            ( சோமன் - சந்திரன்) 

நாடித்தான் விழா அமைத்தார். நகர் வலம் செய்து
பாடியாடி பகடு மறித்தார். பகடி விரித்தார்.                       (பகடு - எருது) 
தேடிய தேட்டம் வீடு சேர்ந்தது என்று தேறல்                    (தேறல் - மது) 
அடித்துக் கபடி ஆட்டம் ஆடிக் களித்தார்.
வேடிக்கை வினோதம் வேம்பாய்க் கசந்தனவே.
வெடிக்கும் வெப்பிசாரம் விழிநீர் மடை உடைக்கும்.        (வெப்பிசாரம்<வெவ்விசாரம் - கொடுந்துயர்) 
துடிக்கும் மனசை தூவி தடவும் சொல் தூவும்                    ( தூவி-மயிலிறகு) 
மடி சுமந்த என் மாதா மண்டுதாரி பணித்தலும்
சேடியர் சேர்ந்தார் அலங்காரம் சேர்க்க. சிக்கல்
கூடிய கூந்தலைக் கோதி நறுமணம் கூட்ட.
வாடிய தேகம் மஞ்சள் வருடி வயக்கேடு விலக்க.          ( வயக்கேடு-வலிமை இழப்பு , பொலிவு இழப்பு) 
பாடிடும் மாவலி கங்கையின் படித்துறை படிந்தார்.
ஆடிய நீரில் என்ன அழுகையும் அழியவில்லை.
ஓடிய மாவலியும் எனக்காக ஒப்பாரி வைத்தழும்.
நாடிடும் மனம் நிறைந்திடும் என் நாயகன் படம்.

அசோகவனம் 

"படம் வரைந்த மாடத்தில் பதிவாகப் பதியேன்!              (பதிவாக - மனம் ஊன்றி , பதியேன் - தங்கேன்)
இடம் அமைப்பீர், எனக்கே அசோக வனத்தில்!
வடக்கே நான் விட்டு வந்த என் வாழ்முதல்
தடக்கும் வேருடைக் கானகத்திடை தடுமாற
தடங்கண் மை தடவேன். தண் சந்தனம் பூசேன்!
படச்சரம் போதும். பட்டு வண்ணம் வேண்டேன்.                   (படச்சரம்- பழம்புடைவை) 
சுடரொளி மணியாரம் சூடுகிலேன். சுந்தரனிடம்
படரும் மட்டும் பாலாகா, நெய்யாகா,பழமாகும்.
தொடரும் ஆண்டுகள் பன்னிரண்டும் தொய்விலாக் 
கடமையுடன் காத்திருப்பேன் விரதம்.
அடமீதென எண்ணாதீர்! என் தவமது அறிவீர்!"
திடமான என்னுரை கேட்டு திகைத்தாலும்
உடன்பாடு கொண்டார் என் உறவோர்.
மாடம் ஆனது மங்கை எனக்கும் அசோக மரநீழல்!
உடல் கண்ட பிணியென ஒன்றுவிட்ட தங்கை
உடன் இருந்தாள் திரிசடை எனும் கழிசடை.

கழிசடை காலமெல்லாம் கிணுகிணுக்க தாய்

மொழி அறிந்தேன். மோனத் திருந்தும் செவி
வழி வந்த வார்த்தைகளால் தமிழ் அறிந்தேன்.
தோழி திரிசடை என் துயர் தொடாள். கணவனை
இழிந்து மனம் அழிந்து அசோக வனம் நானும்                 ( இழிந்து-பிரிந்து) 
வாழுங் காலம் வாலையவள் வழியறிந்தேன்.
கொழுவி விட்டுக் கூத்துப் பார்க்கும்
பழிகாரி, பாதகஞ்செய் கெடுமதி அல்லேன்.
வழு மனத்து வஞ்சி இவள் தெளிவள், நல்ல
வழி கண்டு வாழும் வகை காண்பள் என
பழி செய்யப் பிடிக்காமல் பலியாகாமல்
தெளிந்தேன், தெய்வதம் தொழுதேன்.
புளியங் கொட்டை நட்டால் புவியில்
புன்னை மரம் முளைக்குமோ? கிளைக்குமோ?
தன்னை தாழ, தான் அரசாளும் தவனத்து                          ( தன்னை-தமையன்) 
மழித்த தலை விபீசானன் மனங்கொள்                                தவனம்- ஆசை, நினைப்பு) 
களிபெருக்கு கடை மகள் திரிசடை.                                 ( விபு- தலைவன் , 
இழிநிலை இலங்கையர்கோன் அடையவும்,                       ஈசானன்-வடகிழக்குத் திசைக்காவலன் )
அழியவும், ஆண்மக்களும் ஆவி உதிர்க்கவும்,                   
பழி பாவம் பாராது, பகை அணைந்து, பங்களித்து,
சுழித்த சூழ்ச்சியால் இலங்கை முடி சூடும்
தொழில் தொக்கு நின்ற மனம் உடையவன்.                        (தொக்கு-மறைந்து) 

உடையவன் இல்லெனில் ஒரு முழம் கட்டை ஆம்.

சடை வழித்த சழக்கன் விபீசானன், வெண்கொற்றக்
குடை நீழல் கூர்ந்த இராவண்ணன் எங்கோன்
உடை படும் ஆடியாய் அழிந்திட உள்ளுவான்.
படை உடை படு நாளில் பகைவனுக்கு விருந்தாக
கடை விரிப்பான் காணலர் வந்து களஞ்சியம் கொள்வர்.   ( காணலர்-பகைவர்) 
நடை பெறும் பின்னாள் இந்த நடப்பெலா மெனநான்
முடைந் தேனல்லேன் முன்னாள் என் சிந்தையில்.

(இன்னும் கிழியும்)

Author: ந.குணபாலன்
•4:25 PM

சந்திரநகைக்கு நேர்ந்த கொடுமை    


ஈன்றாளை ஒக்க அன்பு முத்தம் ஈந்த 
குன்றாமணி யணி கோதை சந்திரநகை. 
தேன்மொழி யன்ன தேவி நவின்றிடும்    
வாய்மொழி வாய்க்கா தென்வாய். 
தாய்மொழியும் அயற் திராவிடமும் தானறியேன்.
மாய்மாலம் செய்து என் மணாளனை 
மயக்க வந்த திராவிட மாதென 
மயங்கு மென் மனம் உடைத்து மறு.

மறுவிலா மாணிக்கம் மனந்தளராச் சந்திரநகை , 
பொறைகொடு பன்னாளும் என்மனம் 
பொருந்திட புரிந்திட போதனை உற்றாள்.                
புரிந்திடாப் பேதைமை பொறாமை கொண்டு 
அரிகண்டம் இதுவென அல்ல லுற்றேன்.                               (அரிகண்டம்-தொந்தரவு) 
தெரியாத் தனமாக இளையானிடம் தேம்பினேன்.
சுரிகுழல் இலக்குவன் சூதுடன் நோக்குவன்.
அரைகுறைத் திராவிடம் அறிந்த நாக்கவன்.
செத்தை மறைப்பில் செருக்கன் தொடவும்,                          (செத்தை-ஓலைவேலி) 
அத்தையும் அவன் செப்பட்டை திருப்பவும், வேலிப்         (செப்பட்டை-கன்னம்) 
பொட்டுக்குள் தென்படக் கண்டேன். 
பொட்டுக் கேடிது பொய்காட்சி யாமோ?                                  (பொட்டுக்கேடு-வெக்கக்கேடு) 
இரகு வமிசத்துக்கு இவன் இயற்றிட  
இன்னும் என்னென்ன உளவோ சங்கையீனம்?                    (சங்கையீனம்-மானக்கேடு) 

ஈனமுடை நெஞ்சத்து இலக்குவன், 
வானம் பூமி வசைபாடும் வலிசெய்தான். 
மான மறத்தி மனமேற்கா வதை யுண்டாள். 
கானக் குயிலின் கானமன்ன குரலாள் 
கணமேதும் கருதாப் போதிலவள் தன் 
எள்ளுப்பூ நாசியும், எழில் தகு செவிகளும் 
வள்ளிக் கொடி யென வாளால் அறுத்தான். 
எள்ளளவும் எண்ணாத அவலத்தை,
பெண்ணாள் பட்டாள், பட்டாள் பாதியுயிர்.
கண்ணால் காண்டலும் கலங்கினேன்.
வெறுத்தாலும் வேம்பெனக் கசந்து 
ஒறுத்தாலும் ஒண்ணித்தில நகையாளை                 (ஒண்ணித்தில நகை-ஒளிவீசும் முத்துச் சிரிப்பு) 
ஒருக்காலும் சிதைக்க ஓம்பட்டேன் அல்லேன்.
பின்னாளில் பிழை ஒன்றறிந்தேன்.
புன்னெறி இலக்குவன், பேதையேனை 
அண்ணன் அறியாமல் ஆளலாம் என 
கொண்ட எண்ணம் குறித்த பார்வையை 
கண்டநாள் தொட்டு கடிந்தாளை 
சண்டித்தனம் செய்து சாடிட அவன்மதி  
மிண்டின எண்ணம், மிஞ்சின வஞ்சம்.

வஞ்சம் விதைத்த இலக்குவன் செய்தான் 
வஞ்சியின் அங்கம் பங்கம் செய்த கதை. 
கொஞ்சமும் நெஞ்சம்  நாணான் கோணையன்.     (கோணையன்-வக்கிர குணமுள்ளவன்) 
அஞ்சாமல் அரைகுறைத் திராவிடம் 
அறிந்தா னுரைசெய் தான்.
"மஞ்சு தவழ் மலையேறி வா சீதை! நினக்கு 
விஞ்சையர் வியக்கும் தென்னாடு காட்டுவன். 
குஞ்சரம் ஊர் இராக்கதிரார் கோமான்   
அஞ்சுகம் உன்னை அன்புடன் போற்றுவன்.
கஞ்சல் கழிசடைக் கோசல நாட்டானை 
பஞ்சவடி இருக்க விட்டுப் பறையாமல் 
காய் வெட்டி என்னுடன் கடுகி வா வென                      (காய் வெட்டி-ஒதுக்கி)  
வாய் வெட்டில் வாசாலக்காரி தன் 
தாய்மொழி அறியா அன்னம் சீதை தடுமாற 
கைபற்றி இழுத்தாள் தென்திசை கடுகவே!
நோய் செயும் நெஞ்சத்தாளை நொடிக்க                         (நொடித்தல்-நிலைகுலைதல்) 
கைகால் தவிர்த்துக் கழித்தேன் காது மூக்கு."
தகாதது புரிந்ததைத் தக்கதென நிறுவும் தந்திரி. 
சகாவெனத் தம்பியை சமம் வைத்தானும் 
ஆகாவென ஆர்த்து வருடும் அவன் வதனம்.

கரனது கொலை 

வதனம் சிதைந்து வானதிர அழுத சந்திரநகை,  
துதை விட்டுத் துண்டான அங்கம் கையொடுக்கி,        (துதை- நெருக்கம், சேர்க்கை)           
கோதிலாத் தன் கணவன் கோயில் புக்காள்.                    (கோதிலா-குற்றமிலா) 
மதனன் படையன்ன தன் மாது 
வதை பட்டு வந்த கோலம் கண்டு 
சிதையுண் கூட்டின் சிறுகுளவி கொட்டியதன்ன
பதைத்தான் திராவிட நாடு பாலிப்பான் கரன்.
சதை ஒட்டும் சாதனம் பயில் சித்தர் பதம் நாடி               (சாதனம் - கருவி) 
மதிமுகம் நேர் செய மருத்துவம் வேண்டினன். 
கதிகலக்கம் காதல் மனையாள் காண நேர்ந்த
கதை கேட்டான். கேட்டலும் வெடித்து,
சிதை அடுக்கு சினம் பொங்கச் சீறினன். "என் 
மாதின் அங்கம் பங்கம் செய் மதத்தனை, 
சேதனர் சேர்க்காச் சண்டியனை, சோரனை,                    (சேதனர்- அறிவுடையோர்) 
சேதித்தல் செய நான் செல்வேன் அல்லெனில்               (சேதித்தல்-அழித்தல்)   
பூதலத்தில் பெண்டிலின் புகழ் காக்காத பிரியன்
கோதிவன், கொண்டவ னல்லன் எனும் பழி சூழ்க!"    (கோது-குற்றம்,சக்கை)  
கொதிக்கும் நோக் கொண்ட கணவன். 

கணவன் கரன் தன் கணம் கூட்டான்.                                     (கணவன்-தலைவன்) 
"மணங்கொள் மணாளனின் மானம் ஈது.                            (கணம் - கூட்டம்) 
இணக்குவ தில்லை கலம்பகம் இதனில்                             (கலம்பகம் -கலக்கம்) 
இனியர் என் உறவின் இனத்தர் யாரையு"மென 
மனத்திடை தனித்த முடிவு கண்டான் மன்னவன். 
"காண்டம் படிக்கும் கொண்டையர் குமிந்த 
தண்பொழில் பஞ்சவடி தனைத் தாக்கும்  
சிணியன்ன சிலர் வந்தார் சீலமிலாதார். 
பிணியென்ன நம்மைப் பீடித்தார் அவருடல் 
துணித்து நந்நிலம் தூய்மை செய்குவம்" என்ன 
தன்னந் தனிவழி தாவிப் பஞ்சவடி தலைப்படுவான்,
மணியொலி கிளப்பி செருவில் மருங்கினன்.                            
"மன அறம் அறுந்த மனிதன் எவனோ?
வானமும் மண்ணும் வசை சொல்ல
கானத்து மயிலனை என் காதலியின் 
காதும், மூக்கும் கடிந்த காதகன் எவனோ?
பெண்ணிடம் வீரம் காட்டிய பேடீ! 
ஆண்மகன் தான் நீயெனில் ஒளியாதே! 
முன்வந் தென்னுடன் மோது! மேன்மை கொள்!"
என்ற றைந்தான் சந்தியை அணித்து.

அணித்த மணியொலி அசுகை அறிந்த                            (அசுகை<அசைகை-சந்தடி,இரைச்சல்)   
துணிசிலை தூக்கும் இராம இலக்குவர் 
"அணியுடைத்து அரச மகற்கு இதுவும்" எனவும்          (அணி-ஒழுங்கு,முறை,நேர்மை) 
"கணிகன் சொல்லும் காலம் பதுங்கி இருந்து                (கணிகன்-சோதிடர்) 
தணிவோம் தருணம் தேடி அதுவரை 
வணிகத்தார் போலும் வலம் வருதலால்" எனவும்  
கேணிக் கரையதன் கேதக மரத்திடை                              (கேதகம் - தாழை) 
தூணியும், சிலையும் தூளியுள் தாழ்த்தார்.                     (தூளி-புழுதி) 
துணித்தனர், தனியனாய் தாகம் வருத்த 
கேணிநாடிக் கைத்தலம் குழிந்த திருமகனை!

திருமகன் கரனைத் தேடிக் காணார் 
பரந்து தேடல் உற்றார் பரிதவித்தார்.
ஒரு நினைவில் பஞ்சவடி உள்ளிட்டார்.
ஓரமாக உயிரற்ற உருக்கண்டார். ஓலமிட்டார்.            (சாரணர்- தேவரில் ஒரு வகையினர்) 
"சாரணர் வானில் சஞ்சரிக்கும் சதுரர் செய்                     ( சதுரன்- திறமையுடையவன்) 
மாரணத்தால் மன்னவன் மாண்டான் காணீர்!"             (மாரணம்- மந்திரத்தால் கொல்லும் வித்தை) 
வரைமுறை இல்லாப் புழுகுரை வார்த்தார்,
வரைதொடர் சிந்துக்கொச்சின் வடக்கின்                        (சிந்துக்கொச்சு=சிந்து+கொச்சு 
புரைசல் வழிப் புகுந்து திராவிடம் படர் நிலம்                சிந்து-பனி, கொச்சு-குஞ்சம் 
பரந்த ஆரியர், கூற்றம் அனைய பாவியர்.                       சிந்துக்கொச்சு-இந்துகுஷ்) 
திராவிட மாந்தர் திகைப்பு உற்றார், பேசும் 
இயக்கம் அற்றார், இளைத்த மனத்தினர்.                       (புரைசல்-பொத்தல், ஓட்டை) 
தேரதனில் திருவுடல் வளர்த்தித் திரும்பினார் ஊர்.

ஊர் திரும்பிய தலைவன் உலந்த உருக்கண்டு 
சீரதுவும் சிந்தையும் சிதைந்தாள் சந்திரநகை.
"சீர்ப் பட்ட வதனம் சீர்மறவன்றன் காதற் 
பார்வை படாதெனில் பாராதே உலகே"யெனப்
போர்வை முகம் மூடும் தவம் பொறுத்தாள். 
ஆர்முடுகிக் கடுகியது இழவுச் சேதி.                        
நீர்சூழ் இலங்கைத் தீவகத்து நிலவுவான்,  
கார்வண்ண இராவண்ண மன்னவன்  காதினில் 
சேர்ந்தது மைத்துனன் சிதறிய வியளம்.                            (வியளம்-சேதி) 
செருமும் குரலைச் செப்பம் செய்து,
பெருகும் விழிநீர் புறங்கை தள்ளி 
ஊர்ந்தனன் வானேறும் தேர் உறுதுயர் சுட.
சீர்கெட்ட கோலம் சிறைப்பட்ட முகம்   
நேர்ந்திட்ட தங்கை நெஞ்சு படுதுயர் 
பார்த்துப் பதறினானை தாடாற்றும் சந்திரநகை.        ( தாடாற்றுதல்-ஆறுதல் படுத்தல்) 

நகை இழந்து திரை நாட்டிய முகத்தினள் 
அகந் திடம் கொண்டு, நாயகன் ஆக்கையை 
இராக்கதிர் திராவிடர் இயற்கையினால் 
தரையிடை முதுமக்கட் தாழியுள் தாழ்த்தனள்.
கருக்குந் துயரம் காங்கை எனக் கடிந்தும்
நிறை கொள் நீத்தார் கடமையும் நிறைத்தாள்.
பொறையில் பூமியைப் பொருந்தும் பண்பினால் 
குறை கடியும் வன்மம் கூராதாள். இயம்பிடும் 
முறையால் முன்பெற்ற மகளின் வாழ் முறை 
அறிந்தன் எந்தை இராக்கதிர் இனத்தரையன்.               (இராக்கதிர்-சந்திரன்) 
மறித்த மச்சினன் மாரீசனை மனதடக்கி 
செறித்தனன் கை, வானேறும் தேர் சேர்ந்து.                     (செறித்தனன்-இறுக்கினான்) 
ஊறிய பிள்ளைப் பாசம் உலைக்க, உருக்க 
ஆறாச்சினம் அமர, அன்பு மீற அணுகினன், 
வெறிவண்டு துளை வேய் விளையாடுங் 
காற்றின் கானம் நிறை கானம் பஞ்சவடி.                           (கானம்- இசை, காடு) 

பஞ்சவடி பற்றிய பரதேசிக் கூட்டம் 
பஞ்சம் பிழைக்க வந்த பராரிக் கும்பல்
வஞ்சம் செய்து நிலம் வசம் கொள் வம்பலர்;                    (வம்பலர்  - புதியவர், வழிப்போக்கர்) 
கண்படின் காரியம் கைகூடாதென 
விண்ணேறும் வானத்தேர் வெற்பிடைக் குழிவில்          (வெற்பு-மலை) 
கண்படா மறைத்தார். கான் மரத்திடை மறைந்தார்.
"விண்ணெனத் தெறிக்கும் வில்லது கொண்டனம்! 
விண்ணர்! வீரர்! நாம் கரந்தடி களத்திலா"மென  
தன்னைப் புழுகி அந்தத் தரங்கெட்ட இராமன்                  (தன்னைப் புழுகி -தற்பெருமைக்காரன்) 
வன்மம், வஞ்சகம் வாழும் இலக்குவன் இருபேரும்  
அண்டையில் இருந்தால் அடிபிடியாகும் என 
உன்னிய எந்தை இருவரையும் தெல்லோட்ட                    (தெல்லோட்ட-அலைக்கழிக்க) 
பன்னிய ஆணை பணிந்த என் மாமன் மாரீசன்
தொனித்தான் துள்ளித் தாவிடும் மானதுவாக.
இனித்த மான் தின்று இரு திங்கள் ஆயிற்றென
தனித்த எனை தம்பியைக் காவல் வைத்து
குனித்த வில் கொண்டோடின என் கொழுநன்.

இலக்குவனின் ஈன நெஞ்சம் 

கொழுநன் விரைந்தான். கொழுந்தன் இருந்தான்.
பழுதுண்டே இவனும் பக்கலில் இருந்தாலென
அழுத்தும் எந்தை இராவண்ணன் ஆணையினால்
இழுத்து ஒலி எடுத்தான் மாரீசன் இராமன்தன்
தழுதழுத்த குரலில், "இலக்குவா! தம்பீ! காப்பாற்று".
பழுத்த இரும்பு சுட்ட தவிப்பில் பாவியேன் நான்,
"கொழுந்தனே! குமாரா! இலக்குவா! கொண்ணன்              கொண்ணன்-உங்கள் அண்ணன் 
விழுந்தான் போல் வீறிட்டானே! வேதனை
அழுந்தியெனை ஆட்டுதே! என்னுயிர் போகுதே!
எழுந்தோடு! எடு வில்! அண்ணனை நாடு!" என
அழும் எனக்கு மனம் எரி புகும் உரை செய்தான்.

செய்தான் சிலவுரை செய்தலும் அஞ்சும் கெட்டேன்.
மெய்யது நடுக்கும் மேன்மை அறுஞ்சொல் கேட்டேன்.
"மைவிழி மைதிலி நின்விழி சுட்ட நாள் முதல்
மெய் சிலிர்த்தேன். மேதினியில் மேன்மை மிகு நின்
கை பிடித்துக் காதல் புரியக் கனாக் கண்டேன்.
மைவண்ணன் முன்பிறந்த உரிமை கொண்டானால்
வைத்தான் கை. வளைத்தான் வில். வரித்தான் நின்னை.
ஐயன் எனை நீ முன்சென்று வளை!என்னும் வாக்குரை
செய்தா னானால் செயல் விளைத்து 
செய்யவள் உன்னைச் சேர்ந்திருப்பேன்.
செய்தவப் பலனின்று அண்ணன் செத்தான் காண்!
வாய் பார்த்த வெருளியாக வாழ்ந்ததும் போதும்.
கைகூடா என் கனவு, இனி நனவாகும் காண்!
ஐயுறாதே பல்லாண்டுத் தவமீது என்னன்பே!"என்றலும்
மெய்விதிர்க்க மெலிந்து மனம் வேகும் அக்கணம்
கையெடுத்த தெய்வம் கருணை செய்தன்ன,
"கைவில்லோடு கடுகி வா! தம்பீ! இலக்குவா!
மெய்யாக விதி முடித்தேன் மாயம் ஒன்றி "னென
மைவண்ணன் மகிழ்ச்சிக் கூவல் காற்றில் மிதக்கும்.

மிதக்கும் கூவல் மீட்டிடும் துணிவு. காமம்
மிதக்கும் இளையான் குரல்வளை யதனை
மிதிக்கும் வன்மம், என் மனம் படர்ந்து 
மிதக்கும் மிண்டும். கலக்கம்
மிதக்கும் அகத்து அழகு இழியவன் முகத்தில்.
மிதக்கும் குரல் வந்த திக்கு நோக்கி,
மிதக்கும் முகிலாய் கால் பின்ன நகர்ந்தான். - வான் 
மிதக்கும் கார்மேக வண்ணன் கால்
மிதிக்கும் பகைத் தோற்றம் மெய் காணவும்,
மிதக்கும் மனப்பயம் மாற்றுத் தேடியும்
மிதக்கும் சிந்தை முந்தி ஓடும். தத்தும்
மிதிக்கும் பாயும் மானதன் தடந்தேடி, ஆசை
மிதக்கும் மனதுடன் சென்ற அண்ணன் மானம்,
மிதிக்கும் நினைப்புடையான் போனான்.
மிதக்கும் மானமுடை மாதர் தம் மனம்
மிதிக்கும் கால்மிதி எனக் கருதுவான்.
மிதக்கும் மானம் மன்ன, சொன்னது மறைப்பள் என
மிதக்கும் அங்கலாய்ப்பில் ஆடும் இலக்குவன்.
மிதக்கும் சங்கையீனம் என் மனசரிக்க, மானம்
மிதிக்கும் அவன் சொல் பறைந்திலனே அற்றைநாள்.

(இன்னும் கிழியும்)