Author: ந.குணபாலன்
•4:04 AM
                      மேப்பிள்பிட்டி ஏமில்!- ஒரு அறிமுகம் 
                                       
                                         
                                                         மூலக்கதை :"Emil i Lönneberga"
                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                 (Astrid Lindgren, Sweeden)
                                                         (14/11-1907 --- 22/01-2002)
                                                  ஓவியம்: பியோர்ன் பெர்க், சுவீடன் 
                                                                (Björn Berg , Sweeden
                                                                    (17/09-1923 ---14/07-2008)
                                                             தமிழாக்கம்: ந.குணபாலன் 


மேப்பிள்பிட்டி என்கின்ற இடத்தில் ஏமில் என்கின்ற பொடியன் ஒருத்தன் இருந்தான். சரியான துடினம். சரியான பிடிவாதம். அவன் உங்களைப் போன்ற ஒரு சாதுவான பிள்ளை இல்லை. பார்த்தால் வலு சாது. அவன் வாயைத் திறந்து குரைய வைக்கும் முன்னம், இந்தப் பொடியனோ? குழப்படிகாரனோ? என்று கேட்பீர்கள். அப்பிள் பழம் போன்ற உருண்டை முகம்; நீலநிற வட்டக் கண்கள்; வெளிர் மஞ்சள் நிற தலைமயிர். ஒட்டு மொத்தமாக அவனது உருவம் ஒரு அமைதியான தோற்றம் காட்டும். முதல் தரமாக அவனைப் பார்ப்பவர்களுக்கு ஒரு தேவனைப் போல தெரிவான். ஆனால் வெளித்தோற்றத்தை வைத்து ஆளை மட்டுக்கட்டி விடாதீர்கள். அஞ்சே அஞ்சு வயசு மட்டும், ஆனால் ஒரு அளவான நாம்பன் மாட்டுக் கன்றினுடைய பலம் அவனுக்கு!

ஏமில்; பூனைக்கலட்டி வளவு, மேப்பிள்பிட்டி, சின்னான்காமம் என்ற முகவரியில் வசித்து வந்தான். சின்னான்காமத்துப் பேச்சுவழக்கில் தான் கதைப்பான். அதற்கு அவன் ஒன்றும் செய்யேலாது. சின்னான்காமத்துச் சனங்கள் எல்லாருமே சின்னான்காமத்துப் பேச்சுவழக்கிலேயே கதைப்பார்கள். மற்ற மாவட்டத்து மக்கள் எல்லோருமே தொப்பி என்று சொல்வதை, ஏமில் மற்றைய சின்னான்காமத்துக்காரர் மாதிரியே தொப்பாக்கி என்று சொல்லுவான். அந்த அவனுடைய தொப்பாக்கி, ஒரு தாழ்வாரத் தொப்பி(caps). தாழ்வாரம் கறுப்பு நிறம், மிச்சம் முழுக்கக் கருநீல நிறமான தொப்பி. பெரிதாக அதை ஒரு வடிவான தொப்பி என்று சொல்லேலாது. அந்தத் தொப்பியை ஏமிலுக்கு அப்பா அந்தோன் ஒருதரம் பட்டணம் போய் வந்த போது வாங்கி வந்தார். ஏமிலுக்கு அந்தத் தொப்பியில் நல்ல பிடிப்பு. எட! இராத்திரி படுக்கைக்குப் போகின்ற நேரத்திலும் அவனுக்கு அவனுடைய தொப்பாக்கி வேண்டும். ஏமிலுக்கு அம்மா அல்மா தொப்பியுடன் ஏமில் படுப்பது பிடிக்காமல் ஒருநாள் அதை எடுத்து உள்வாசலில் மேலங்கிகள் வைக்கும் தட்டிலே வைக்கப் போனா. அப்போது அந்த இராத்திரி நேரத்தில் முழு மேப்பிள்பிட்டியுமே எடுப்படத் தக்கதாக ஏமில்,
" என்னுடைய தொப்பாக்கி எனக்கு வேண்டும்" என்று ஒரு காட்டுக் கத்தல் போட்டான்.

மூன்று கிழமையாக நல்ல நித்திரையில் கூட அவன் தன் தொப்பியை வழுகி விழ விடவில்லை. கொஞ்சம் சரவலான காரியம் தான். ஆனாலும் அவனது பிடிவாதம் அப்படி. எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் ஏமில் தான் நினைத்ததை சாதித்தது. அதையிட்டு அவனுக்கு நல்ல மனநிறைவு. அம்மா நினைத்தபடி நடக்காமல் ஏமில் தான் விரும்பின படியே சாதித்தான். இப்படித்தான் ஒரு தரம் நத்தார் நேரம், மரக்கறி உணவு உடல் நலத்துக்கு உகந்தது என்ற போதும், மசித்த பச்சைக் கடலையைத் தின்ன மாட்டேன் என்று நாண்டு கொண்டு நின்றான்.
"அப்படியானால் இனி எந்தக் காலத்திலும் மரக்கறி சாப்பிட மாட்டாயோ?" என்று ஏமிலுக்கு அம்மா அல்மா கேட்டா.
"ஏன்? நான் சாப்பிடுவேன் தானே!" என்றான் ஏமில்.
"ஒழுங்கான மரக்கறி என்றால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்." மெள்ள ஆள்காட்டாமல் எழுந்து போய்  நத்தார் மரத்துக்கு அருகில் போய்க் குந்தி இருந்தான். நத்தார் மரமாக ஒரு தேவதாரு மரம் அலங்காரமாக கூடத்தில் நின்றது. அதன் ஊசியிலைகளை ஏமில் நன்னிப் பார்த்தான். ஊசியிலைகளின் நுனி வாயிலே குத்த நொந்தது. அத்துடன் சுவையாகவும் இல்லை. அவனுக்கு அது பிடிக்கவில்லை.

இப்பிடி ஒரு பிடிவாதக் குணம் ஏமிலுக்கு. சகல காரியங்களும் தான் தான் தீர்மானிக்க வேண்டும். அம்மா, அப்பா, பூனைக்கலட்டி வளவு என்ற அளவில் மட்டும் இல்லை, மேப்பிள்பிட்டி ஊர் முழுமனையுமே அவன் தீர்மானப்படி நடக்க வேண்டும் என்பது அவனது நினைப்பு. பெற்ற தாய்தகப்பன் அவனுடைய நினைப்புக்கு ஒருதரம் இல்லாவிட்டாலும் இன்னொருதரம் ஓம்படக்கூடும். ஆனால் மற்ற மேப்பிள்பிட்டிச் சனத்துக்கு என்ன தலையெழுத்தே, அவன் போடுகின்ற தாளத்துக்குக் கூத்தாட?

"பாவம் உந்த பூனைக்கலட்டி வளவுச் சனம்! ஒரு வம்புதும்புக்கும் போகாத அந்த சாதுவான சனத்துக்கு என்று பார்த்து இப்படி ஒரு அடங்காத பிள்ளை ஒன்று வந்து பிறந்திருக்கு! உந்தப் பெடி ஒருக்காலும் உருப்படாது கண்டீரோ!" என்று ஏமிலைப் பற்றி புறணி சொன்னார்கள். சொன்னது மட்டுமில்லை நம்பவும் செய்தார்கள். ஆனால் பிற்காலத்தில் ஏமில் எப்படியெல்லாம் உருப்பட்டு வருவான் என்று அறியக் கூடிய தன்மை, அவர்களுக்கு அந்த நேரத்தில் இருந்திருக்குமானால் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏமில் வளர்ந்து பெரிய ஆள் ஆகி கிராமசபைத் தலைவராக எல்லாம் வருவான் என்று அந்த நேரத்தில் ஆர்தான் கனவு கண்டது?

ஆனால் நாங்கள் இப்போது ஏமிலின் சிறுவயதுப் பராயத்து நடப்புகள் என்ற மட்டில் நிற்போம். அந்த நாட்களில் பூனைக்கலட்டி வளவு என்ற கமத்திலே, மேப்பிள்பிட்டி என்ற கோயில்பற்றிலே, சின்னான்காமம் என்ற மாவட்டத்திலே ; அப்பா அந்தோன் சிவேன்சொன், அம்மா அல்மா சிவேன்சொன், தங்கச்சி ஈடா ஆகியோருடன் ஏமில் வசித்து வந்தான். பூனைக்கலட்டி வளவிலே வசித்த இன்னும் இருவரைப் பற்றியும் சொல்லவேண்டும். ஒருவர் கமத்துப் பணியாள் அல்பிறெட், மற்றவர் வேலைக்காரப்பெண் லீனா. ஏமில் சின்னப் பொடியனாக இருந்த அந்த நாளைகளிலே இப்படியாக கமத்துப் பணியாளரும், வேலைக்காரப் பெண்களும் மேப்பிள்பிட்டி முழுவதில் மட்டுமில்லை, நாடு முழுக்க இருந்தார்கள்; எல்லாக் கமங்களிலும் பணி புரிந்தார்கள். கமத்துப் பணியாளர் குதிரைகளை, நாம்பன் மாடுகளைப் பராமரிப்பது, கமத்துவேலைகள் செய்வது, வைக்கோலைப் பாதுகாப்பாக கிட்டங்கியில் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்தார்கள். வேலைக்காரப் பெண்களோ என்றால் பால் கறந்தார்கள், உடுப்புக்களை தோய்த்தார்கள், சமையல் செய்தார்கள், சின்னக் குழந்தைகளை ஓராட்டினார்கள், அவர்கள் அழுகின்ற நேரங்களில் ஓடிப் போய் இடுக்கினார்கள்.

அந்தப் பூனைக்கலட்டி கமத்துவளவிலே ஆரார் வசித்தது என்று ஒருக்கால் இப்போது பார்ப்போம். அப்பா அந்தோன், அம்மா அல்மா, குட்டிபிள்ளை ஈடா, அல்பிறெட், லீனா, குதிரை இரண்டு, நாம்பன் மாடு இரண்டு, பசுமாடு எட்டு, பன்றி மூன்று, கம்பளியாடுகளில் மறி பத்து, கிடாய் இரண்டு, சாவல் ஒன்றுக்குப் பேட்டுக்கோழி ஒரு பதினைஞ்சு, ஒருநாய், ஒரு பூனை அத்தோடு உவன் உந்த ஏமில்.


பூனைக்கலட்டி ஒரு வடிவான சின்னக்கமத்துடன் சேர்ந்த வீடு வளவு. ஒரு ஏற்றமான பிட்டியில் அப்பிள் மரங்கள் ஒரு பக்கமும் செர்ரி மரங்கள் மறுபக்கமும் நிற்க நடுவிலே அரத்தச் சிவப்புச் சாயம் பூசின வீடு இருந்தது. அத்துடன் குதிரைமால், கால்நடைக் கொட்டாரம், களஞ்சியம், ஆயுதசாலை, பணியாளர் குடிமனை, தச்சுப்பட்டறை என்று பெரிதும் சிறிதுமாக சில கட்டடங்கள் இருந்தன. சுற்றவர வயல் காணி, தோட்டக்கை, புல்லுத்தறை, பின்பக்கமாக ஒரு குளம், பெரிய காடு என்று இருந்தது. ஏமில் என்ற ஒருத்தன் மட்டும் இல்லை என்று கண்டால் அந்தப் பூனைக்கலட்டி வளவில் ஒரு சத்தஞ்சிலார் இல்லாமல் அமைதியாக இருந்திருக்கும்.

" உவன் ஏமில் பொடியன் ஒரே புரளி. சரியான கூத்துக்காரன்" என்பாள் லீனா.
" சும்மா இருந்தாலும் அவன் உள்ள இடத்தில் கூத்தும் குழப்பமும் தான். இப்படி ஒரு பிள்ளையை நான் வேறெங்குமே கண்டதில்லை."
ஏமிலுக்கு அம்மா ஒருநாளும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டா.
"எந்த ஒரு குழப்பமும் ஏமிலுக்கு இல்லை. இன்றைக்கு அவன் மெதுவாக ஈடாவைக் நுள்ளி விட்டவன், கோப்பிக்கு என்று வைத்த பாலைக் கைதவறித் தட்டி விட்டவன், அம்மளவுந்தான். ...........ஓ கோழிக்கூட்டைச் சுற்றிப் பூனையைக் கலைத்துக் கொண்டு ஓடினவன், அது மெய்தான்! ஆனால் என்றாலும் இன்றைக்கு அவன் சாது போல நல்ல பொடியனாக இருக்கிறான்."

ஏமில் ஒன்றும் மற்றவர்களை அடித்து ஆய்க்கினை செய்யும் ஒரு பொடியன் இல்லை. அப்படி நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடாது. அவனுக்கு ஈடாவில் நல்ல வாரப்பாடு, பூனையில் நல்ல விருப்பம். ஈடாவைக் கொஞ்சமாகக் நுள்ள வேண்டி வந்தது. இல்லை என்றால் அவள் கையில் வைத்திருந்த பாணி பூசின பாண்சீவலைத் தந்திருக்க மாட்டாள். பூனையைக் கலைத்தது எல்லாம் ஒரு விளையாட்டுத் தோழமையில் தான். சும்மா பூனையைப் போல கதியாக தன்னாலும் ஓட ஏலுமோ என்று சோதித்துப் பார்க்கத் தான். பாவம் அது அந்தப் பூனைக்குத் தான் விளங்காமல் போய்விட்டது.

அன்றைக்கு மார்ச்சு மாசம் ஏழாந்திகதியில் ஏமில் சாது போல நல்ல பொடியனாக இருந்த அன்றைய நாளிலே செய்ததெல்லாம் ஈடாவைக் கொஞ்சம் நுள்ளினதும், கோப்பிக்கு வைத்த பாலைக் கைதவறித் தட்டிவிட்டதும்,  பூனையைக் கலைவு காட்டினதும் மட்டுந்தான். ஏமிலின் வாழ்க்கையில் வேறு சிலபல நாட்களில் நடந்த  சிலபல நடப்புக்களைப் பற்றி  இப்போது சொல்கின்றேன் கேளுங்கள். லீனா சொன்ன கணக்கிலே, ஏமில் தன்பாட்டில் சும்மா இருந்தாலும் அவன் உள்ள இடத்தில் கூத்தும் குழப்பமும் தான்.

                                                  (தொடரும்)
சொல்விளக்கம்:
துடினம் - துடியாட்டம்
சாது - அமைதி
குரையை வத்தல் - கத்துதல்
மட்டுக்கட்டுதல் - அடையாளம் காணுதல்
நாம்பன் மாடு - காளை மாடு
எடுபடத் தக்கதாக - கேட்கத் தக்கதாக
சரவல் - சிரமம்
நாண்டு கொண்டு - பிடிவாதமாக
ஆள்காட்டாமல் - ஆரும் அறியாமல்
நன்னுதல் - விருப்பமில்லாமல் கொஞ்சமாக தின்னுதல்
முழுமனையுமே - முழுவதுமே 
ஓம்படுதல் - ஓம் எனச் சம்மதித்தல்
பெடி , பொடியன் - சிறுவன்
புறணி - குறை
கிட்டங்கி - களஞ்சியம்
உடுப்பு தோய்த்தல் - சலவை செய்தல்
ஓராட்டுதல் - தாலாட்டுதல்
இடுக்குதல் - கவ்வுதல், தூக்குதல்
கோயில் பற்று - parish
கிடாய் - கடா, ஆணாடு
மறியாடு - பெண்ணாடு
சாவல் - சேவல்
குதிரைமால் - குதிரை இலாயம்
கால்நடைக் கொட்டாரம் - கால்நடைகளை அடைக்கும் பெரிய கொட்டில் வீடு
தோட்டக்கை - தோட்டக்காணி
புல்லுத்தறை - புற்றரை


சிறுகுறிப்பு:
கோடைகாலத்தில் புல்லு வளர்த்து அறுத்து வேலி போலத் தொங்கவைத்துக் காற்றில் காயவைத்து வடந்தைக் காலத்துக்கு ஆடு, மாடு, குதிரைக்குத் தீனாக சேர்த்து வைப்பார்கள்.


                                                                   

                                                                           சத்தஞ்சிலார்= சத்தம்+ சிலார் = ஒலி + குழப்பம்
சத்தஞ்சிலார் இல்லாமல் - குழப்பமான சத்தமில்லாமல்
புரளி, குழப்படி - குறும்பு
ஆக்கினை - துன்பம்
கதியாக - வேகமாக
கணக்கிலே - மாதிரியாக

Author: ந.குணபாலன்
•2:50 AM
                                                                  மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)

துடிப்பு பதினேழு : நானும் வருவன்!


இல்லை! அண்ணர் கத்துலாவைக் கொலை செய்யேல்லை! அதை அதின்ரை சென்மப்பகையாளி கறுமாதான் கொலை செய்தது. கத்துலாவும் சும்மா இருந்த பாடில்லை. கறுமாவைக் கத்துலா கொலை செய்து போட்டுது. அதை நாங்கள் கண்டநாங்கள். அண்ணர் யோனத்தானும், நான் தம்பி கார்லும் அதைக் கண்டநாங்கள். அந்தக் காட்சியை நாங்கள் எங்கடை கண்ணாலை கண்டநாங்கள். பறணைப் பழங்காலத்து மாயாசாலக்கதை முறுகங்கள் ரெண்டும் ஒண்டையொண்டு அழிச்சதைக் கண்டநாங்கள். கறுமா அருவி போய் விழுகிற தாழ்ப்பத்திலை அதுகள் ரெண்டின்ரையும் வாழ்வோ, சாவோ எண்ட  போராட்டத்தை எங்கடை கண்கொண்டு கண்டநாங்கள். 

கத்துலா ஒரு காட்டுக்கத்தலோடை அருவித்தண்ணியிலை தாண்டு மறைஞ்சு போச்சுது. எங்களாலை முதலிலை அதை நம்ப முடியேல்லை. மெய்மெய்யா அது காணாமல் போட்டுது எண்டதை நம்பப் பெரிய கயிட்டமாய் இருந்திச்சுது. கத்துலா தாண்ட இடத்திலை அருவித்தண்ணி விழுந்து நுரை நுரையாய்ப் பொங்கிச்சுது. வேறை ஒண்டுமில்லை. கத்துலா எண்டது இல்லை.

ஆனால் கொஞ்ச நேரத்திலை அந்த ஆனைகொண்டான்  பாம்பைக் கண்டம். நுரை வெள்ளத்துக்கு உள்ளை  இருந்து தன்ரை பச்சை நிறத் தலையை வெளியாலை நீட்டி வாலாலை தண்ணியை அடிச்சது. ஓ! என்ன பயங்கரமான ஒரு தோற்றம்! ஒரு பெரீய ஆனைகொண்டான் பாம்பு! ஆத்தின்ரை அகலம் இருக்கும்! சரியாய் ஒரு நுப்பது முழ நீளம்!.... எல்பிரீடா ஆச்சி சொன்ன கணக்குத் தான்!

எல்பிரீடா ஆச்சி சின்னப்பிள்ளையாய் இருந்த நாளையிலை கேள்விப் பட்ட மாதிரியேதான்! கத்துலாவை மாதிரியே கறுமாவும் மாயாசாலக் கதை  முறுகம் தான். கத்துலாவை மாதிரியே விறுத்தம் கெட்ட ஒரு கொடுவினை செய்யிற முறுகம். அதின்ரை தலை எல்லாப் பக்கமும் சுழண்டு என்னத்தையோ தடவினது. கத்துலாவைக் கண்டது. தாழத்திலை இருந்து கத்துலா மிதந்து வந்தது.  கறுமா ஒரு பயங்கரக் கூச்சலோடை கத்துலாவுக்கு மேலை பாய்ஞ்சு அதைச் சுத்து சுத்தெண்டு சுத்தி நெருக்கி இறுக்கினது. கத்துலா தன்ரை நச்சு அனல் மூச்சைச் சீறியடிக்கப் பார்த்தது. ஆனால் கறுமா சுத்தி இறுக்கின இறுக்கத்தாலை எடுத்த மூச்சு வெளியை போக மாட்டாமல் அதின்ரை நெஞ்சாங் கூட்டுக்குள்ளை தடக்குப் பட்டுப் போச்சுது. அப்ப கத்துலா பாய்ஞ்சு ஒரு கடி கறுமாவைக் கடிச்சது. கறுமாவும் விட்டபாடாயில்லை. அதுகும் கத்துலாவை பாய்ஞ்சு ஒரு கொத்து கொத்தினது.ரெண்டுமே ஒண்டையொண்டு கொலை செய்யிறதுக்காக கடிக்குது, கொத்துது; கொத்துது, கடிக்குது.

அதுகள் ரெண்டுமே எப்படா இந்தக் கலம்பகம் கிளம்பும்?, எப்படா எதிரியைக் கொல்லலாம்? எண்டு பறணைப் பழங்காலம் தொட்டு இதுநாள் வரைக்கும் காத்திருந்த மாதிரி மரணச் சண்டை. அருவி நடுவிலை ஒண்டையொண்டு கடிக்குது, கொத்துது, தங்கடை பயங்கரமான தேகங்களோடை முட்டுது, மோதுது, பிரளுது, உறுளுது....  ஒவ்வரு கடிக்கும் ஒருக்கால் கத்துலா உறுமினது. ஆனால் கறுமா சத்தமில்லாமல் நச்சுப் பல்லாலை கொத்தினது. கறுப்பு நிற பறவை வேதாள அரத்தமும், பச்சைநிற ஆனைகொண்டான் பாம்பு அரத்தமும் அருவித் தண்ணியின்ரை பால்வெள்ளை நிற நுரையை ஒரு அருக்குளிக்கிற நிறத்துக்குப் பழுதாக்கினது.

எம்மளவு நேரமாய் ரெண்டும் சண்டை போட்டதுகள்? அனக்குத் தெரியேல்லை. அந்த ஒற்றையடிப் பாதையிலை நிண்டபடி ஒரு ஆயிரம் வரியகாலம் அந்த மாயாசாலக்கதை முறுகங்கள் ஆவேசமாய் போடுற இறுதி மரணச் சண்டையைப் பார்த்துக் கொண்டு நிண்டிருப்பனோ? 

ஒரு நீண்ட நெடிய போர் அது. ஒருமாதிரி அந்தச் சண்டையும் ஒரு முடிவுக்கு வந்தது. காது, கன்னம் எல்லாம் கிழியுமாப் போலை கத்துலா வீறிட்டுக் கத்தினது. அது அதின்ரை மரணஓலம் தான். பேந்து அமைதியானது. கறுமாவின்ரை தலையைக் காணேல்லை. ஆனால் கத்துலாவைச் சுத்திப் பிடிச்ச அதின்ரை தேகத்தின்ரை பிடி விடுபடேல்லை. ரெண்டின்ரை தேகமும் ஒண்டாய்ப் பிணைஞ்ச படி பாதாளத்திலை தாண்டுபோனது. கறுமா இனிமேல் இல்லை எண்டால் கத்துலாவும் இனிமேல் இல்லை. இப்பிடியான  பயங்கரமான நஞ்சுள்ள மாயாசாலக்கதை முறுகம் ரெண்டு எந்தவொரு காலத்திலையும் இருந்ததேயில்லை எண்ட மாதிரி ஒரு தடமும் இல்லாமல் அழிஞ்சு போச்சுதுகள். அதுகளின்ரை நச்சு அரத்தத்தை அந்தப் பெரிய அருவியின்ரை வெள்ளம் அடிச்சுக் கழுவிக் கொண்டு போனது. இப்ப அருவித்தண்ணியின்ரை நுரை திரும்பவும் பால்வெள்ளை நிறமானது. பறணைப் பழங்காலத்து ஆதி நாளையிலை இருந்த மாதிரி எல்லாமே தன்ரை இயல்பான நிலைமைக்குத் திரும்பினது.

எல்லா அமளியும் ஓய்ஞ்சு போனாலும் அந்த ஒற்றையடிப் பாதையிலை நாங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சுப் பறிய நிண்டம். கடைசியிலை அண்ணர் சொன்னவர்,
"நாங்கள் இங்கத்தையாலை வெளிக்கிட வேணும்! கெதியாய்! இருட்டப் போகுது. எனக்கு இங்கினை கறுமண்யாக்காவிலை இராத் தங்கிப்போக இட்டமில்லை."

பாவங்கள்! எங்கடை வியாழரும், வெள்ளியாரும். எப்பிடி அதுகளை எழுப்பி நாலு காலிலையும் நிற்க வைச்சம்?, எப்பிடி அங்கத்தையாலை போனம் எண்டு சொல்லத் தெரியேல்லை. எப்பிடியோ கறுமா அருவிக்கு ஒரு சொட்டுத் தள்ளி மேலாலை இருக்கிற தொங்குபாலத்தைக் கடந்தம். பாலத்தை கடந்து மறுகரை நிலத்தைத் தொட்டவுடனை குதிரை ரெண்டும் ஒரு அடிகூட மேற்கொண்டு எடுத்து வைக்க மாட்டாமல் கீழை நிலத்திலை விழுந்து படுத்திட்டுதுகள். எங்களைப் பத்திரமாக நஞ்சியாலாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது தங்கடை கடமை எண்ட மாதிரியும், அந்தக் கடமை முடிஞ்சுது எண்ட மாதிரியும், இதுக்கு மிஞ்சி ஒண்டும் ஏலாது எண்ட மாதிரியும் இருந்ததுகள். 

"நாங்கள் எங்கடை பழைய இடத்திலை பாசறைத்தீயை மூட்டுவம்" எண்டார் அண்ணர். அவர் சொன்ன இடத்திலை அந்தப் பாறையடியிலை தான் வந்து முன்னம் பாசறைத்தீ மூட்டின நேரம்  கத்துலாவை முதல்முதலாய் பார்த்தது. அதை நினைக்க அனக்குக் கைகால் எல்லாம் நடுங்கினது. அந்த இடம் விட்டு மேற்கொண்டு எங்களாலை போக முடியாமல் போச்சுது. 

குதிரையளுக்கு முதலிலை தண்ணி காட்ட வேணும் ,பேந்து நாங்கள் கால் மேல்  கழுவலாம் எண்டு நினைச்சன். குதிரையளுக்கு பெரிய இலையிலை தண்ணி கோலி வந்து குடிக்க வாயுக்குக் கிட்டக் குடுத்தன். அதுகள் தண்ணியை மணந்தும் பார்க்கேல்லை. அம்மளவுக்குக் களைப்பு அதுகளுக்கு. அனக்குப் பயமும் கவலையுமாய்ப் போனது. 
"அண்ணர்! குதிரையளுக்கு என்னவோ சரியில்லை. தண்ணி குடுக்கக் குடிக்காதுகளாம்"எண்டு சொன்னநான்.
"நித்திரை கொண்டு எழும்ப எல்லாம் சரிவரும் எண்டு நினைக்கிறீரே?"  
"ஓம்! எல்லாம் ஒரு கண் நித்திரை கொண்டெழும்பச் சரியாய்ப் போகும்." எண்டார் அண்ணர். நான் வெள்ளியாரைத் தடவிக் குடுத்தன். அது கண்மூடிப் படுத்திருந்தது.
"இப்பிடி இண்டையப்பொழுது உனக்கும் அமைஞ்சு போச்சு வெள்ளியார்! ஆனால் நாளைக்குக் காலமை எல்லாமே சரியாகி விடும். அண்ணர் சொன்னவர்" 

நாங்கள் பாசறைத்தீ மூட்டினம். மறக்க வேணும் மறக்க வேணும் எண்டு என்னதான் மனசாலை விரும்பினாலும் அந்தக் கறுமம் பிடிச்ச கறுமண்யாக்கா கண்ணுக்கு எட்டின தூரத்திலை தெரிஞ்சது. எங்களுக்குப் பின்னாலை செங்குத்தான மலைச்சிவர். பகல் நேரம் புயல் அடிச்ச பிறகு கொஞ்ச நேரம் வானம் வெளிக்க வெய்யில் அடிச்சது எல்லோ? அந்த  வெய்யில் வெக்கை இப்ப நல்ல இதமான சூடாய் இருந்தது.  எங்களுக்கு  முன்னாலை கிடுகிடு எண்ட தாழ்ப்பத்துக்கு கறுமா அருவி "கடு, பொடு" எண்டு கடும் இரைச்சலோடை நுங்கும் நுரையுமாய்ப் பாய்ஞ்சது. இஞ்சை இருந்து பார்க்க பணிய பள்ளத்திலை பாலம் வந்து பொருந்துகிற இந்தப் பக்கத்துத் தறை வடிவான பச்சைநிற துண்டு நிலமாய் தெரிஞ்சது. அதுகும் தாழ்ப்பத்திலை இருந்து செங்குத்தாய் எழும்பின பாறைச்சிவர் விளிம்பிலை தான் இருந்தது. 


அந்தச் செக்கல் நேரம், பறணைப் பழங்காலத்து ஆதி மலையளின்ரை மலையிலை இருந்தபடி, கீழை கண்ணுக்குத் தெரியாத தாழ்ப்பத்திலை கறுமா அருவியாய் மாறி ஓடிச் சொரியிற பறணைப் பழங்காலத்து ஆதி நதிக்கு மேலாலை பாசறைத்தீ மூட்டி குளிர் காய்ஞ்சம். அனக்கு சரியான அசதியாய் இருந்தது. இப்பிடியும் ஒரு நீண்ட , மனப்பாரமான நாளை நான் அனுபவிச்சதே இல்லை. காலமை வெள்ளெணத் துவங்கி செக்கல் பட்டுப் பொழுதறு மட்டும் கண்டு அனுபவிச்சதெல்லாம் அரத்தம், மரணஓலம், கொலை! இதுவரை எவருமே படக் கூடாத பயங்கர அதிர்ச்சி ஒண்டு இருக்கும் எண்டு அண்ணர் ஒருக்கால் சொல்லி வைச்சவர். அப்பிடியான பயங்கர அதிர்ச்சியைத் தானே நாள் முழுக்க போதும் போதும் எண்ட அளவுக்குப் பட்டாச்சுது. இறுதிக் கட்டப் போர் நாள்! நீண்ட நெடிய துன்பமான நாள்! அப்பாடி ஒருமாதிரி அதுகும் ஓய்ஞ்சு போச்சுது.


ஆனால் துக்கம் எண்டதுக்கு இன்னும் முடிவில்லை. பெத்தையாவை நினைச்சு நான் துக்கப் பட்டன். மூட்டின நெருப்புக்குப் பக்கத்திலை இருந்த அனக்கு பெத்தையாவின்ரை நினைவுதான். அண்ணரைக் கேட்டன்,

"பெத்தையா இப்ப எங்கை?"
"அவர் இப்ப நஞ்சிலிமா எண்ட இடத்திலை இருப்பார்" எண்டார் அண்ணர். 
" நஞ்சிலிமா எண்ட இடத்தைப் பற்றி நான் அறிஞ்சது இல்லையே?"
" இப்ப அறிஞ்சு கொள்ளன்!" எண்டார் அண்ணர்.
"ஞாவகம் இருக்கே? அண்டைக்கு ஒருநாள் காலமை  செர்ரிப்பள்ளத்தை விட்டு நான் வெளிக்கிடிற நேரம், நீ சரியாய் பயப்பட்டநீ எல்லே? அப்ப என்ன நான் சொன்னநான்? ஞாவகம் இருக்கோ? 
`நான் திரும்பி வராமல் போனால், பேந்து ஒரு காலம் நஞ்சிலிமாவிலை சந்திப்பம்´ எண்டு. இப்ப பெத்தையா அந்த நஞ்சிலிமாவிலை தான் இருக்கிறார்."

பேந்து நஞ்சிலிமாவைப் பற்றின கதை சொன்னவர். கனக்க நாளைக்குப் பிறகு இப்பத்தான் அனக்குக் கதை சொல்லிறதுக்கு அவருக்கு நேரம் வந்திருக்குது. அதுக்கு எங்கை இம்மளவு நாளும் நேரம் கிடைச்சது? ஆனால் இப்ப அதுக்கு நேரம் வந்தது. பூமி நச்சத்திரத்திலை நாங்கள் சீவிச்ச காலத்திலை என்ரை படுக்கை விளிம்பிலை இருந்த படி அனக்கு அண்ணர் கதை சொல்லிறவர் எல்லே? அதுதான் ஞாவகம் வந்தது. 


"நஞ்சிலிமாவிலை,....நஞ்சிலிமாவிலை,....." அண்ணர் மேற்கொண்டு சொல்லிக் கொண்டு போனார். அவரின்ரை குரல் புறாவின்ரை இறகாலை தடவுமாப் போலை காதுக்கும், மனசுக்கும் இதமாய் இருந்தது.

" அங்கினை இன்னும் பாசறைத்தீ வளர்க்கிற, மாய மந்திர தேவதைக் கதையளின்ரை காலம் தான்."
"ஐயோ பாவம் பெத்தையா! ஒருக்காலும் மெய் மெய்யாய் வரக்கூடாத, நடக்கக் கூடாத மாயாசாலக் கதையளுக்கை திரும்ப மாட்டுப் பட்டுப் போனார்" எண்டு கவலைப் பட்டன். 

ஆனால் அண்ணர் சொன்னவர், அங்கினை நஞ்சிலிமாவிலை எதுவித பயங்கரமான முறுகங்களும் சீவிக்கிற பேய்பசாசுக் கதையள் இல்லையாமாம். எல்லாரும் பகிடியும், பொளிப்புமாய் விளையாடிக் கொண்டு இருப்பினமாம். சனங்கள் விளையாடுறதும் தானாம், வேலை செய்யிறதும் தானாம். எந்த உதவியும் ஒருத்தருக்கொருத்தர் செய்யிறதுக்காக எல்லா வகையான வேலையையும் செய்வினமாம். எந்த நேரமும் ஆட்டம், பாட்டு, விளையாட்டு, மாயமந்திரக் கதை சொல்லிறது எண்டிருக்குமாம். சிலசில நேரங்களிலை சின்னப் பிள்ளையளைக் கொஞ்சம் பயமுறுத்தி பைம்பல் பார்க்கிறதுக்கு பயங்கரமான மாயாசால முறுகங்களின்ரை கதை, மற்றது தெங்கில் போலை கொடுவினை செய்யிறவங்கடை கதை எல்லாம் அவிட்டு விடுவினமாம். பிள்ளையளின்ரை பயந்த மூஞ்சையளைக் கண்டு சிரிப்பினமாம். 

"என்ன பயமாய் இருக்கோ?" எண்டு கேட்பினமாம். 
"உது சும்மா உங்களுக்குப் பயம் காட்டுறதுக்கு சொன்ன புழுகுக் கதை. இப்பிடியெல்லாம் ஒருக்காலும் நடந்ததில்லை. எங்கடை உலகத்திலை நடக்கப் போறதும் இல்லை" எண்டு சொல்லுவினமாம்.

பெத்தையாவும் நல்ல சுகம் பெலமாய் நஞ்சிலிமாவிலை இருப்பராம். அவர் பால்பள்ளம் எண்ட ஊரிலை ஒரு பழைய வீடு வளவிலை அதுக்கும் மத்தியாசு வளவு எண்டு பேர் வைச்சு இருக்கிறாராம். நஞ்சிலிமா உலகத்திலை இருக்கிற எல்லா ஊரையும் விட நல்ல வடிவான ஊராம் பால்பள்ளம்! 

"பெத்தையாவின்ரை அப்பிள் தோட்டத்திலை பழம் பிடுங்கிற காலம் வந்திட்டுது" எண்டார் அண்ணர். 
" பாவம் அவருக்கு வயசான காலத்திலை ஒரு கையுதவி வேணும். ஏணி வைச்சு ஏறிப் பழம் பிடுங்கிற அளவுக்கு அவராலை ஏலாது எல்லோ?"

" நாங்களும் அங்கினை போக வேணும் எண்டு அனக்கு சரியான விருப்பமாய்க் கிடக்கு " நஞ்சிலிமாவைப் பற்றிக் கேட்கக் கேட்க சரியான ஆசையாய்  கிடந்தது. அதோடை பெத்தையாவைப் பிறிஞ்ச ஏக்கம் என்னைப் போட்டு வதைச்சது.

"மெய்தான். அங்கினை போகக் கிடைச்சது எண்டால் பெத்தையாவோடை சீவிக்கலாம். மத்தியாசு வளவிலை,..... பால்பள்ளத்திலை,..... நஞ்சிலிமாவிலை,...... " அண்ணரின்ரை கண்ணிலை ஒரு கிறக்கம் தெரிஞ்சது. 

"அங்கினை நாங்கள் இருப்பம் எண்டு கண்டால் எங்கடை பொழுது எப்பிடி அமையும் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோவன் அண்ணர்!" எண்டு கேட்டன்.

"ஓ! அங்கினை எல்லாமே நல்லபடியாய் அமையும்!" எண்டார் அண்ணர். 
"காடு வழிய, தோப்பு வழிய குதிரையோடி உலாத்தலாம். விரும்பின இடத்திலை இறங்கிப் பாசறைத்தீ மூட்டலாம். நஞ்சிலிமாவின்ரை ஊருகளைச் சுற்றி காடு, தோப்பு எல்லாம் நிறைய இருக்கும். நடுக்காட்டிலை சின்னச்சின்ன பொக்கணை இருக்கும். நல்ல தெளிஞ்ச, கரும்பு போலை இனிக்கிற தண்ணி இருக்கும். நிறைய தாமரை, அல்லிப் பூக்கள் பூத்து இருக்கும். ஒவ்வரு இராவும் ஒவ்வரு பொக்கணைக் கரையிலை பாசறைத்தீ மூட்டி கூதல் காயலாம். கனக்க நாள் வெளியாலை இப்பிடி நடமாடி உலாத்திக் கொண்டு விரும்பின நேரம் வீட்டுக்கு மத்தியாசு வளவுக்கு வரலாம்."

"வந்து பெத்தையாவுக்கு பழம் ஆய உதவி செய்யலாந்தானே!" எண்டு சொன்னன் நான்.

"ஆனால் ஒண்டு! அப்பிடியெண்டால் சோபியா அக்கை செர்ரிப் பள்ளத்தையும், ஒர்வார் நயினார் காட்டுறோசாப் பள்ளத்தையும் உம்மடை உதவி இல்லாமல் தாங்களே பராமரிக்க வேணும் எல்லோ?"
"ஏன் செய்ய மாட்டினமோ?" எண்டு கேட்டார் அண்ணர்.
"ஏன் அவையள் என்ரை உதவியிலை இனிமேல் தங்கியிருக்க வேணும்? தன் தன் ஊரை தான் தானே அவை நிர்வாகம் செய்வினம்."
பேந்து அவர் ஒரு கதையும் பறைய இல்லை. ரெண்டு பேருமே  அமைதியாய் இருந்தம். அனக்குச் சரியான களைப்பாய் இருந்தது. மனசு அக்களிப்பாய் இல்லை. எங்கினையோ கண்காணாத இடத்திலை  இருக்கிற நஞ்சிலிமாவைப் பற்றி இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறது ஒண்டும் பெரிய உற்சாகம் தாறதாய் இல்லை.

வரவர இருள் கூடிப் போனது. மலை எல்லாம் இன்னும் இன்னும் கறுத்துப் போனது. வானத்திலை கறுப்பாய் பெரிய பறவையள் காற்றோட்டத்திலை வழுக்கினபடி வட்டம் அடிச்சது. அதுகள் நெஞ்சைப் பிழியுமாப் போலை குரல் குடுத்தது. அதைக் கேட்கக் கேட்க மனசிலை வெப்பிசாரம் இன்னும் பாறைக் கனமாய் கனத்துப் போனது. கறுமா அருவியின்ரை ஓவெண்ட அலறலைக் கேட்க சினம் சினமாய் கிடந்தது. மறக்க நான் விரும்பின எல்லாத்தையும் அது ஞாவகப் படுத்தினது. துன்பம்! துயரம்! துக்கம்! கொடுவினை! ஓ! எந்தக் காலத்திலையும் அனக்கு இனி மனசு நிறைஞ்ச, ஒரு மறு இல்லாத அக்களிப்பு எண்டது வந்து வாய்க்காதோ?


நான் அண்ணரோடை போய் ஒட்டிக்கொண்டு இருந்தான். பாரிலை முதுகைச் சாத்தினபடி அமைதியாய் இருந்தார். பாசறைத்தீ வெளிச்சத்திலை அவரின்ரை முகம் இன்னும் வெளிறின படியே இருந்தது. தேவதைக் கதையிலை வாற இளவரசன் சாங்கம் தான். எண்டாலும் முகம் வெளிறிப் போன, களைச்சுப் போன தேவதைக் கதை இளவரசன்! அண்ணரும் பாவம்! அவருக்கும் மனசெல்லாம் வெப்பிசாரமாய் இருந்தது. அவரின்ரை கவலையை மாத்தி புளுகம் கிளம்பிற மாதிரி என்னாலை ஏதும் செய்ய முடிஞ்சுது எண்டால்..... 


இப்பிடியே கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்க அண்ணர் என்னவோ சொல்ல வெளிக்கிட்டார்.

"சீனியப்பு! உன்னோடை ஒரு காரியம் நான் பறைய வேணும்."
என்னை அறியாமல் ஒரு பயம் அனக்குள்ளை கிளம்பினது. முன்னை பட்ட அனுபவம். இப்பிடி ஏதாவது சொல்ல வெளிக்கிட்டார் எண்டால் நிச்சயமாக உது மனசு ஆறாத துக்கத்துக்குத் தான் அடிகோலும். 
" என்ன காரியம் பறையப் போறீர்?" எண்டு கேட்டன். அவர் என்ரை சொக்கைத் தடவினார்.
"நான் சொல்லிறதைக் கேட்டுப் பயப்பிடாதை சீனியப்பு!.......ஒர்வார் நயினார் ஒண்டு சொன்னவர் ஞாவகம் இருக்கோ? கத்துலாவின்ரை நச்சு அனல் மூச்சிலை இருந்து வாற ஒரு பொறி காணும் ஒருத்தரைச் சாக்காட்டும் இல்லாட்டில் பாரிசவாதம் குத்தி விழுத்தும் எண்டு சொன்னவர் ....ஞாவகம் இருக்கோ?"
"ஓ! சொன்னவர் தான் அதுக்கென்ன இப்ப? அது பற்றி ஏன் இப்ப பறைவான்?" எண்டு நான் கேட்டன்.
"பறையத்தான் வேணும் ஏனெண்டால்...." எண்டு இழுத்தார்.
"நாங்கள் தப்பியோடி வாறநேரம் கத்துலாவின்ரை ஒரு பொறி எனக்குப் பட்டிட்டுது."

அண்டைக்கு முழுநாளும் படு பயங்கரத்திலையும், சென்மத்துக்கும் மறக்காத துக்கத்திலையும் இந்த மனசும்,நெஞ்சும் தவிச்ச தவிப்பும், பட்ட பாடும் ..... ஆனால் அழுகை மட்டும் இதுவரை வரேல்லை. இப்ப அனக்கு அழுகை வெடிச்சுப் பீறிட்டுக் கொண்டு வந்தது.
"ஐயோ! அண்ணர்! என்னைத் தனியாய் தவிக்க விட்டிட்டு  திரும்பவும் நீர் சாகப் போறீரோ?" அப்ப அண்ணர் சொன்னவர்,
"எனக்குச் சாகிறதுக்குப் புறியமில்லை. ஆனால் நான் இருக்கிற நிலைமையிலை அதுதான் சரியான வழி. ஏனெண்டால் என்னாலை இனி வரவர அசைய முடியாமல் போகும்."

கத்துலாவின்ரை பொறி பட்டதாலை வரப்போற கொடுமை துன்பம், உத்தரிப்பு பற்றி எல்லாம் விளப்பமாய் சொன்னவர். அந்த நாசமாய்ப் போன கத்துலாவின்ரை நச்சு அனல் மூச்சுப் பொறி ஒண்டில் ஒருத்தரைச் சாக்காட்டும் இல்லாட்டில் இன்னும் வருத்தி, உத்தரிக்க வைக்கும். அது ஒருத்தரிலை நோயெதிர்ப்புத் திறனை அழிக்கும். பட்ட இடம் தொட்டு பாரிசவாதம் துவங்கும். பொறி தாக்கினது உடனடியாய் தெரிய மாட்டுது. கொஞ்சம் கொஞ்சமாய் அது தன்ரை குணத்தைக் காட்ட வெளிக்கிடும்.


"பார் சீனியப்பு! இப்ப என்னாலை கையைத்தான் தூக்க அசைக்க முடியுது" எண்டார் அண்ணர்.

"இன்னும் கொஞ்சத்திலை அதுகும் வழங்காமல் போயிடும்." 
"தன்ரை பாட்டிலை எல்லாம் குணப்படும் எண்டு நீர் நம்ப இல்லையோ?" நான் அழுதன்.
" இல்லை சீனியப்பு! இஞ்சை இருக்கும் வரை உது எந்தக் காலத்திலையும் குணப்படாது! நஞ்சிலிமா போய்ச் சேர்ந்தன் எண்டால் தான் எல்லாம் குணப்படும்." எண்டு அண்ணர் சொன்னார். 

ஐயோ! அண்ணராலை மட்டும் நஞ்சிலிமா போக முடியும் எண்டால் .... இப்ப அனக்கு ஒரு சங்கதி ஓடி வெளிச்சது. ஐயோ அவர் என்னை விட்டிட்டுப் போக எல்லோ விரும்பிறார்? இப்பிடித்தானே என்னை விட்டிட்டு நஞ்சியாலா போனவர்?

"இன்னொருதரம் உது நடவாது!" நான் கத்தினன்.
"என்னை விட்டிட்டோ? என்னை விட்டிட்டு நீர் நஞ்சிலிமாவுக்குத் தனிச்சுக் கிளம்ப முடியாது!"
"அப்ப?என்னோடை வாறதெண்டு சொல்லிறியோ?" எண்டு கேட்டார்.
" பின்னை என்னவாம்? என்னெண்டு நீர் நினைக்கிறீர்?" எண்டு சாதுவான எரிச்சல் கிளம்பக் கேட்டன்.
" நீர் எங்கினை போறீரோ அங்கினை நானும் வருவன் எண்டு நான் முன்னமே சொல்லி வைச்சநான் தானே?" எண்டு படபடத்துச் சொன்னன். 
"ஓமோம்! நீ சொன்னநீ தான்! அது எனக்குப் பெரிய ஆறுதல் தான் எண்டாலும்..." எண்டு இழுத்தார்.
"அங்கினை போறது ஒண்டும் சுகமான காரியமில்லை! சரியான கயிட்டம்!" கொஞ்சத்துக்கு அமைதியாய் இருந்தார். பேந்து,
"ஞாவகம் இருக்கே? நானும் நீயும் யன்னலாலை குதிச்சது? எங்கடை வீடு பத்தியெரிஞ்ச அந்தப் பயங்கரமான நடப்பு? குதிச்ச குதியிலை உன்னை விட்டிட்டு நான் ஒருமிக்க நஞ்சியாலாவுக்கு வந்தது?" எண்டு கேட்டவர் . அனக்குப் பழைய  நினைவு எல்லாம் நேற்றுத்தான் நடந்த மாதிரி ஞாவகம் வந்து துக்கம் தாங்க முடியேல்லை. 
"பின்னை? என்னாலை அதெல்லாம் இலேசிலை மறக்க ஏலுமே?" நான் அழுதன்.
"இப்பிடி ஒரு கேள்வி என்னைப் போய்க் கேட்கிறீர்? நீர் என்னைப் பற்றி என்னத்தை நினைக்கிறீர்? அந்தநாள் தொட்டு இந்தநாள் வரைக்கும் அந்த நினைப்பு என்னை வந்து வருத்தாத நாளில்லை."

"ஓம் குஞ்சன்! நீ அந்த நினைப்பு வந்து அடிக்கடி பயப்பிடிறது எனக்கு அது நல்லாய்த் தெரியும்." என்ரை சொக்கை திரும்பத் தடவினவர். பேந்து சொன்னவர்,

"இன்னும் ஒருக்கால் அந்தா அந்தப் புல்லுத்தறையிலை இருந்து கீழை பாதாளத்துக்கு ரெண்டு பெரும் குதிப்பமோ எண்டு யோசிக்கிறன்."
"அப்ப ரெண்டு பேருமே செத்துப் போடுவம்" எண்டு சொல்லிப் போட்டு நான் கேட்டன்,
"அப்பிடி எண்டால் நஞ்சிலிமாக்கு போய்ச் சேர்ந்திடுவமே?"
"நிச்சயமாய் போய்விடுவம்" எண்டு சொன்னவர்,
"பாதாளத்திலை நிலத்திலை போய் விழ, நஞ்சிலிமாவின்ரை வெளிச்சம் தெரியும். நஞ்சிலிமாவின்ரை ஊர் வழிய காலைமை நேரத்து வெய்யில் பட்டுத் தெறிக்கும் . ஏனெண்டால் இப்ப அங்கினை எழுவானிலை சூரியன் எழும்பிற நேரம்!" எண்டும் சொன்னார். 

"கா, கா, கா! அப்பிடியெண்டால் நேரடியாய் நஞ்சிலிமாவுக்கு குதிச்சு இறங்க வேண்டியதுதான்" கன காலத்துக்குப் பிறகு முதல் முறையாய் கெக்கட்டம் விட்டுச் சிரிச்சன்.

"ஓ. எம்மளவு கெதியிலை கீழ்நிலத்தைத் தொடுகிறமோ, அம்மளவு கெதியிலை பால்பள்ளம் போற பாதையைக் காணுவம். வியாழரும், வெள்ளியாரும் எங்களுக்காக காத்துக் கொண்டு நிற்குங்கள். வேறையொண்டும் நாங்கள் செய்ய தேவையில்லை. பறையாமல் சேணத்தைக் கட்டி குதிரையேறிப் பறக்க வேண்டியது தான்."
" அப்ப அங்கினை போனவுடனை உமக்கு பாரிசவாதம் போய் கைகால் எல்லாம் வழங்க வருமோ?" எண்டு கேட்டன்.
"ஓ! அங்கினை போனவுடனை எந்த வகையான வருத்த துன்பமும் போய் நான் குணப்பட்டிடுவன். நீயுந்தான் சீனியப்பு! எல்லா மனவருத்தமும் போயிடும். மனசு நிறைஞ்சு அக்களிப்போடை இருப்பாய். காட்டுக்கு நடுவாலை போற பாதையிலை வெய்யில் வெளிச்சம் மினுங்க பால்பள்ளத்தைப் பார்த்த படி குதிரையிலை நானும் நீயுமாய்ப் போறதை நினைச்சுப் பார். என்ன சொல்லிறாய்?" எண்டு கேட்டார்.

"எல்லாம் நல்லம் எண்டு நினைக்கிறன்" எண்டு திரும்பச் சிரிச்சன்.

"பிள்ளையை கிணத்து மிதியிலை வளர்த்தி விட்டு வந்தவள் கணக்கிலை  நாங்கள் அவசரப் பட்டு ஓட வேண்டியதில்லை. இட்டப் பட்டால் ஏதாவது ஒரு பொக்கணையிலை இறங்கி நீந்திக் குளிக்க வேண்டியது தான். பெத்தையா புளிக்கஞ்சி காய்ச்சி முடிக்க முன்னம் போய் குதிப்பம் கண்டியோ!" எண்டு அண்ணர் சொன்னார்.
"நாங்களும் வந்திட்டம் எண்டு அவர் சரியாய்ப் புளுகப்படுவார்" எண்டு சொன்ன அனக்கு சடுதியாய் வந்து தலையிலை ஓங்கி அறைஞ்ச மாதிரி ஒரு ஐமிச்சம் வந்தது. அண்ணர் மெய்மெய்யாய்த் தான் வியாழரும், வெள்ளியாரும் எங்களுக்காக அங்கை காத்து நிற்கும் எண்டு நம்புறாரோ? 

"குதிரை ரெண்டும் பங்கை நித்திரை கொள்ளுது. அப்ப எப்பிடி அதுகள் நஞ்சிலிமாவிலை வந்து எங்களுக்காகக் காத்திருக்கப் போகுதுகள்?" எண்டு கேட்டன்.

"அதுகள் ஒண்டும் நித்திரையாய் இல்லை சீனியப்பு! அதுகள் இத்தறைக்குச் செத்துப் போச்சுதுகள்! கத்துலாவின்ரை நச்சுப் பொறி அதுகளையும் தீண்டிப் போட்டுது. அங்கை கிடக்கிறது அதுகளின்ரை வெறும் கூடு மட்டும் தான். நான் சொல்லிறதை நம்பு! அதுகள் எங்களுக்காக நஞ்சிலிமாவிலை காத்துக் கொண்டு நிற்குங்கள்." எண்டார். 

"அப்ப மினைக்கெடாமல் போவம் வாரும். அதுகளைக் கனநேரம் காக்க வைக்கப் படாது." எண்டு அவசரப் படுத்தினன். அண்ணர் என்னைப் பார்த்து பரிதாபமாய் சிரிச்சார். 

" நான் கெதியாய் வரேலாது சீனியப்பு. சொல்லப் போனால் உன்ரை உதவி இல்லாமல் நான் அரக்கக் கூட முடியாது. காலெல்லாம் மரத்துப் போய் ஏலாவாளியாய்ப் போனன். மறந்திட்டியோ?" எண்டு கேட்டார். அவரின்ரை குரலிலை ஒரு களைப்பு, ஒரு துக்கம் தெரிஞ்சது. நான் என்ன செய்ய வேணும் எண்டது அனக்குப் பிடிபட்டது.

"அண்ணேர்! நான் உம்மை என்ரை முதுகிலை தூக்கிறன். நீர் அனக்காக முன்னம் செய்ததை நான் இப்ப உமக்காகத் திருப்பிச் செய்யிறன். அதுதான் ஞாயம் கண்டீரோ!" எண்டு சொன்னன்.

"ம்....ஞாயமும், ஞாயமில்லாததும்!"எண்டு அண்ணர் பெருமூச்சு விட்டார். 
"அது கிடக்க. உன்னாலை ஏலுமே சீனியப்பு சிங்கநெஞ்சன்? என்ரை பாரத்தைத் தாங்குவியே? பயப்பிட மாட்டியே?"   எண்டு கேட்டார். நான் போய் பாதாள விளிம்பை எட்டிப் பார்த்தன். ஒரே கும்மிருட்டாய் இருந்தது. பாலம் வந்து பொருந்திற அந்தப் புல்லுத்தறை ஒண்டுமே தெரியேல்லை. ஆனால் கண்கடை தெரியாத தாழ்ப்பம் எண்டு நினைக்க மூச்சு நிண்ட மாதிரிக் கிடந்தது. ரெண்டு பேருமே ஒருமிக்கக் குதிப்பம் எண்டு கண்டால் நஞ்சிலிமாவுக்கு உடனடியாய் போய்ச் சேருறது நிச்சயம். ரெண்டைத்தா ஒருத்தர் எண்டாலும் சாகாமல் கிடந்து பயந்தபடி, செத்துப் போன மற்றவரைப் பற்றி ஏங்கி அழுது கொண்டு இருக்கத் தேவையில்லை.

ஆனால்....  குதிக்கிறது எண்டது?.....அது ரெண்டு பேருமாய்ச் சேர்ந்து செய்யிற காரியம் இல்லையே. நான் எல்லோ தனிச்சு இறங்க வேணும்? நஞ்சிலிமாவுக்குப் போறது கயிட்டமான காரியம் எண்டு அண்ணர் சொன்னவர். இப்பத்தான் அவர் சொன்னதின்ரை நயநட்டம் விளங்குது. என்னாலை மனசு துணிஞ்சு குதிக்கேலுமே? ஒருதரம் ஒரேயொரு தரம் எண்டாலும் அனக்கு அந்தத் துணிவு எண்டது வருமே?

< இப்ப மட்டும் நீ துணிஞ்சு குதிக்கேல்லை எண்டு கண்டால்...> அனக்கு நானே உறுக்கிச் சொன்னன்,
நீ ஒரு புழுக்கைக்குச் சமன் எல்லோ? > 

அண்ணரிட்டை திரும்பி வந்தன். 

" நான் துணிஞ்சிட்டன் !" திடமாய்ச் சொன்னன்.
" ஐயோ என்ரை குஞ்சன்! துணிச்சல்காறன்! என்ரை சீனியப்பு!" எண்டு தொண்டை அடைக்க நன்றியோடை என்னைப் பார்த்தவர். 
" அப்ப நாங்கள் காரியத்திலை இறங்குவம்." எண்டார்.
" கொஞ்சநேரம் உம்மைக் கட்டிப்பிடிச்சபடி இருக்க வேணும்" என்ரை ஆசையைச் சொன்னன்.
"சரி. ஆனால் கனக்க நேரம் இருந்து மினைக்கிட வேண்டாம்" எண்டு சொன்னார்.
"இல்லை. பாசறைத்தீயும் நூரட்டும். என்ரை பார்வைக்கு ஒண்டுமே தெரியாத அளவுக்கு வெளிச்சம் இல்லாமல் போகட்டும்"   எண்டன்.

அண்ணரைக் கட்டிப்பிடிச்சன். அவர் மெய் மெய்யாய் எம்மளவு பெலசாலி, எம்மளவு குணசாலி  எண்டு நினைச்சன். அவரோடை இருக்கு மட்டுக்கு எந்த ஆபத்தும், துன்பமும் என்னைத் தீண்டாது! பாசறைத்தீயும் நூர்ந்தது! நஞ்சியாலாவின்ரை காடு மேடு, பள்ளம் பிட்டி, மலை முகடு, ஆறு கரை, தோட்டம் துரவு, வயல் வாய்க்கால், மரம் மட்டை, பத்தை பறுகு, எல்லாமே எல்லாமே மையிருள் பூசி அழிச்சாச்சுது.  அண்ணரின்ரை கை ரெண்டும் என்ரை கழுத்தைச் சுற்றிப் பிடிச்சது. அவரின்ரை மூச்சு என்ரை காதோடை உரஞ்சினபடி பறிஞ்சது.  என்ரை ரெண்டு கையையும் பின்வளமாய் வளைச்சு அவரின்ரை நாரியை சுத்திப் பிடிச்சன். தம்பிடிச்சு முக்கித் தக்கி தூக்கினது பாதி இழுத்தது பாதியாய் நடந்தன். பாவம் அண்ணருக்குத் தான் கால் ரெண்டும் வழங்க முடியாமல் போச்சே! ஒரு கூர்குறிப்புக்கு தடவித் தடவிப் பாதாளத்து  விளிம்புக்கு வந்திட்டன். அவரின்ரை நெஞ்சு ஒரே சீராய் அடிச்ச அடியை  என்னாலை உணர முடிஞ்சது. <ஐயோ என்ரை ஆசை அண்ணர்! உமக்கு இருக்கிற துணிச்சல் ஏன் அனக்கு வருகுதில்லை?>


அனக்கு பாதாளத்தின்ரை தாழ்ப்பம், அது சடாரெண்டு சரிஞ்சு இறங்கிற இடம் ஒண்டும் கண்ணுக்குத் தெரியேல்லை. எண்டாலும் அனக்குத் தெரியும் அது அங்கை தான் இருக்குது! இருட்டிலை ஒரேயொரு கவடு எட்டி வைச்சால் காணும்! எல்லாமே முடிஞ்சிடும்! நாங்களும் போய்ச் சேர வேண்டிய இடம் போய்ச் சேர்ந்திடுவம்! வலு கெதியிலை அது நடக்கும்!


"சீனியப்பு சிங்கநெஞ்சன்!" அண்ணர் அன்பாய்க் கூப்பிட்டார்.

"பயமாய் இருக்கோ குஞ்சன்?"
"இல்லை......ஓம், அனக்குப் பயமாய் தான் இருக்குது. எண்டாலும் நான் இதைச் செய்யிறன். அண்ணர்! நான் செய்யிறன் இனி எந்தக் காலத்திலையும் நான் பயப்பிட மாட்டன்......நான் பயப்பிட மாட்டன்..... நாஆ ஆஆன்....பயப்பீஈஈடஅஅ.... மாஆஆ ட்....டேஏ  ...ன்ன்...!"
                                                
                                    

"ஓ! நஞ்சிலிமா! அண்ணேஏஏஏஏர்! அனக்கு வெளிச்சம் தெரியுது!  அனக்கு வெளிச்சம் தெரியுது!"     


                                                        (இனி ஒரு பிறிவு இல்லை)   

சொல்விளக்கம் :
பறணை - மிகப் பழைய, புராதன  ;  முறுகம்< மிருகம் 
தாழ்ப்பம், தாழம் - ஆழம் , தாண்டு < தாழ்ந்து, மூழ்கி 
கயிட்டம் - சரவல், சிரமம் ; விறுத்தம் - அழகு ; அருக்குளிக்கிற - அருவெருக்கிற
கொடுவினை - கொடுமை ; கலம்பகம் - சண்டை  ; அரத்தம் - இரத்தம் 
அனக்கு < எனக்கு 
அமளி - சண்டை, இரைச்சல்  ; மூச்சுப் பறிய - மூச்சு இரைய 
சொட்டு - துளி, ஒரு கொஞ்சம் 
கறுமம் < கருமம் - பாவம், பாவ வினைப்பயன் ;      பணிய - கீழே 
வெள்ளாப்பு, வெள்ளென - வானம் வெளுக்கும் அதிகாலை 
செக்கல் - வானம் சிவக்கும் மாலை
வெளிக்கிடுதல் - அலங்காரம் செய்தல், புறப்பட ஆயத்தம் செய்தல் , துவங்குதல் 
பேந்து < பெயர்ந்து -பின்பு ;        கணக்கு - மாதிரி, அளவு 
கன, கனக்க - நிறைய, அதிக , பல  ; கனம், கனதி - பாரம் , கனத்து - பாரமாகி  
பகிடி< பகடி - பரிகாசம்  
பொளிப்பு < பொழிப்பு ;  பொளிப்பு- பகிடிக் கதை விடுதல், 
பொழிப்பு - பொருள்/கருத்து கூறுதல் 
பைம்பல் < பம்பல் - களிப்பு, மகிழ்ச்சி  ;     அக்களிப்பு - மனமகிழ்ச்சி 
அவிட்டு< அவிழ்த்து  ;     மூஞ்சை - முகம் 
புழுகு - பொய்  ; புளுகு, புளுகம் < புளகம் - மகிழ்ச்சி 
சுகம்பெலம் < சுகம்பலம் - நல்ல ஆரோக்கியம்  ; பிறிஞ்ச < பிரிந்த 
சொல்லுங்கோவன்= சொல்லுங்கோ+ அன் (சொல்லுங்களேன்)
ஊர்வழிய - ஊர்கள் தோறும் ;  பொக்கணை - சிறுகுளம் , பொக்குள், தொப்பூழ் 
பழம் ஆய - பழம் பறிக்க, பழம் பிடுங்க;   அவை, அவையள் <  அவர்கள் 
வெப்பிசாரம் < வெவ்விசாரம்=வெம்மை+விசாரம் - கடுந்துன்பம்   
சினம் - எரிச்சல் ;    மறு - குறை;    பார் - பாறை  ;      சாங்கம் - சாயல் ;      சொக்கு . கன்னம் 
சாக்காட்டும்=சா+காட்டும் - சாகச் செய்யும் ;     (பாரிசவாதம்) குத்தி -தாக்கி 
பறைவான்? - பறைய வேண்டும்? ;    பறைதல், கதைத்தல் - பேசுதல் 
புறியமில்லை - பிரியமில்லை 
குணம் - இயல்பு ; குணப்படுதல் - இயல்புநிலை அடைதல் , நோய் நீங்குதல் 
ஓடி வெளிச்சது< ஓடி வெளித்தது , பிடி பட்டது - புரிந்தது.
ஒருமிக்க - ஒரேயடியாக, ஒன்றாக ;      (புல்லுத்)தறை -(புல்லுத்)தரை 
எழுவான் - கிழக்கு , படுவான் - மேற்கு 
கெக்கட்டம் - வாய்விட்ட சிரிப்பு ;       (கைகால்)வழங்குதல் - இயங்குதல், அசைதல் 
அரக்க- மெல்ல அசைய , சிரமப்பட்டு அசைய ; 
ஏலாவாளி - ஏலாமை ஆளி , இயலாமை ஆளி - திறன் இழந்தவர் 
ரெண்டைத்தா ஒருத்தர் - இரண்டு பேரில் ஒருவர் ;          நாரி- இடுப்பு 
உறுக்கி - அதட்டி ;       நூர் - அணை;        குணசாலி - நல்ல குணம் உள்ளவர் 
தம்பிடிச்சு < தம்பிடித்து - மூச்சைப் பிடித்து ;       கவடு - காலடி 


என்னுரை 

இக்கதையை வாசித்த, மொழிபெயர்க்க தெண்டித்த நேரமெல்லாம் 
என் மனசில் பல சிந்தனைகள் அல்லாடின. 
இன்பம், துன்பம், பெருமை, நன்றியுணர்வு என பல உணர்ச்சிகள் முட்டி மோதின.

விரும்பியும், விரும்பாமலும் அடக்குமுறைக்கும், கொடுங்கோலுக்கும்
முழுவதுமாக அல்லது குறையாக தங்கள் உடல் பொருள் ஆவி மூன்றையும் 
பலி கொடுத்த, பறி கொடுத்த மனித மாணிக்கங்கள்!

தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வாழ வேண்டிய கட்டாயத்திலும்,
தன் அடையாளங்களை விட்டுவிடாமல்
மொழி, சமயம், கலை, கலாச்சாரம் என்பவைகளைக் கட்டிக் காத்தபடி,
எதிர்நீச்சல் போடும், மனிதம் மன்னும் மண்ணின் மக்கள்!

ஏழேழ் பிறவிக்கும் பற்று வைக்கத்தான் கடன் பட்ட நெஞ்சம் விரும்புகின்றது. 
மனித மாணிக்கங்களுக்கு மனம் நிறைந்த அஞ்சலிகள்! நன்றிகள்!
மனிதம் மன்னும் மண்ணின் மக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

நல்லதொரு கதையைத் தந்த அஸ்த்ரி லிண்ட்கிறேன் அம்மையாருக்கும் மனமார்ந்த அஞ்சலிகள்!