Author: யசோதா.பத்மநாதன்
•6:30 AM
பித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.



இந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்
ப + தோ + க + எனத் தமிழில்  எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்!

முகவரி:

http://www.michaelbackmanltd.com/960.html


தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும்  தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும்  தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.













திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.

மங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.

அவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் (விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப்  பாவிக்கப் பட்டன.

காலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு,  உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த  பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.

சந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி.)
|
This entry was posted on 6:30 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On November 5, 2012 at 2:50 AM , இராஜராஜேஸ்வரி said...

தனித்துவமான தட்டம் !

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

 
On November 21, 2012 at 3:22 AM , Dino LA said...

அருமை

 
On November 23, 2012 at 2:52 PM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி இருவருக்கும்!

 
On November 24, 2012 at 2:11 AM , ந.குணபாலன் said...

துப்பற்பணிக்கம்- அனேகமாக ஒருவர் காய்ச்சல் சத்தி என்று படுத்த படுக்கையாய் இருக்கும் வேளையில் சத்திஎடுக்கும் பொது ஏந்திக் கொள்ளுவதற்காக பாவிக்கப்பட்டது

சேர்வைக்கால்- நிலத்தில் சப்பாணி கொட்டி இருந்து சாப்பிடும் போது சாப்பாட்டுக் கோப்பையை கொஞ்சம் உசத்தி வைப்பதற்காகப் பாவிக்கப் பட்டது. வெற்றிலைத்தட்டத்தின் அளவு இருக்கும்.

இவைகளப் பற்றி அறிவீர்களோ? இவைகளின் படங்களையும் தேடி எடுக்க முடியுமோ?

 
On November 24, 2012 at 6:15 AM , யசோதா.பத்மநாதன் said...

இல்லை நண்பரே! இது பற்றி நான் கேள்விப்பட்டது கூட இல்லை. தயவு கூர்ந்து இவை பற்றி படத்தோடு பதிவு தர இயலுமா?

விக்கிபீடியாவிற்குக் கூட நீங்கள் எழுதலாம். மிகப்பயனுள்ள தகவலாக அது அமையும்.

தயவு செய்க!

நன்றி.

 
On December 14, 2012 at 4:04 AM , வர்மா said...

000000000வெற்றிலைத்தட்டத்தின் இடத்தை ஐஸ் கிரீம் பெட்டிபி டித்துவிட்டது. சில இடங்களில் ஓலைப்பெட்டியிலும் வெத்தலை வைக்கிறார்கள்.துப்பல் பணிக்கம் கேள்விப்பட்டிருக்கிறேன்.கண்டதில்லை.ராஜராஜசோழன் திரைப்படத்தில் சிற்பி எச்சில்துப்பும்போது ராஜராஜசோழன் எச்சில் பணிக்கத்தைப்பிடிப்பார்.

 
On December 16, 2012 at 1:16 AM , யசோதா.பத்மநாதன் said...

கால மாற்றம் வர்மா!

ஏன் நீங்கள் இங்கு ஒரு பதிவும் போடக் காணோம்? ஏதாவது எழுதலாமே?

 
On December 16, 2012 at 11:02 PM , வர்மா said...

ஒரு சில தடங்கல்களினால் தொடர்ந்து எழுதமுடியவில்லை.வெகுவிரைவில் எழுதுகிறேன்