Author: சஞ்சயன்
•12:32 AM
எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிகக் கண்டிப்பாக இருந்தார்.

நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.

தான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ? அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.
முதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்து
இரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது
மூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.

அப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது  கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலையிடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.

அப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஓருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரிவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குடித்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ?

அப்பா யாழ்ப்பாணம் வருத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரிய வேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.

வரும் வழியெங்கும் அரிசி மூட்டையை விட்டு விலகமாட்டார். அவரோ துக்கி இறக்குவார். சுண்ணாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.

அப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மூன்று மணிபோல் சைக்கிலில் ஒரு கலன் ஒன்றறை கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய்? என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவன கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிலை உருட்ட முடியாமல் உருட்டிக்‌கொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார்.  அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிலுக்கு அடிக்கடி காற்றுப் போகத்தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிலுக்கு காற்று தேவையா என்ன?

இதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும்  (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ?

அப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு  ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

அப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு  எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.

ஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த மாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்”   என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட,  இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.

இன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை  ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.

மாலை ரயில் நிலையத்து போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிலை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.

பின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ”ஓம்”, ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுதாம் என்றும்  சொன்னாராம், அத்துடன் ”அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம்” என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.

அப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் பின் அப்பா இறந்துபோனார். அவரின் போதனைகளும், கோவங்களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.
|
This entry was posted on 12:32 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On May 7, 2011 at 1:27 AM , Anonymous said...

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

 
On May 7, 2011 at 3:12 AM , பனித்துளி சங்கர் said...

இதயம் கனக்கத் தொடங்கிவிட்டது பதிவை வாசித்து முடிக்கும்போளுது .

 
On May 7, 2011 at 9:47 AM , Muruganandan M.K. said...

சுவார்ஸமான பதிவு. அவருக்குள் இருந்த மறுபக்கத்தை நினைத்துப் போற்றத் தோன்றுகிறது. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆண்டுகள் கடந்தபோதும்.

 
On May 9, 2011 at 1:44 AM , தனிமரம் said...

காலம் கடந்து சரி தந்தையின் அருமை உணர்ந்திருக்கிறீர்கள். அழகான பதிவு.

 
On May 16, 2011 at 10:40 PM , எஸ் சக்திவேல் said...

நல்ல பதிவு :-) . உங்கள் அப்பாவை அப்படியே கண் முன்னே கொண்டுவந்தீர்கள்.