Author: மணிமேகலா
•5:57 PM
கோவியாதைங்கோ பிள்ளையள்!எல்லாரும் உதில ஒருக்கா இருங்கோ சொல்லுறன்.

உங்களுக்கு நான் இண்டைக்கு ஒரு கதை சொல்லப் போறன். ஓலப் பெட்டி பின்னிற மாதிரி நாங்கள் முந்திப் புழங்கின கொஞ்சச் சொல்லுகள வச்சு ஒரு சம்பவம் பின்னியிருக்கிறன்.அந்தக் காலத்தில இப்பிடித் தான் நாங்கள் தமிழ் கதைச்சனாங்கள்.எங்க நீங்கள் அதின்ர கருத்தச் சொல்லுங்கோ பாப்பம்!


********************************* ******************************


ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் ஒரு பிரகாச நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் அவள்.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகின்ற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அந்தச் சியாமளவல்லி தவள வண்ண சேலையில் சோபிதமாய் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் மட்டும் கொண்டமைந்தது.அதனால் உலூகலம்,முசலம்,வட்டிகை,நவியம்,சூர்ப்பம்,தாம்பு,குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் பொருந்திய பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *********************** *************

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

ஞாட்பு -
சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம் -
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பாவனம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் -
வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -


சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -
This entry was posted on 5:57 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On February 21, 2011 at 3:58 AM , வடலியூரான் said...

கனக்கச் சொல்லுக் கேள்வியே படாதது.எண்டாலும் என்ரை சின்ன முயற்சி.சரியோ தெரியாது.
ஆழி - கடல்
பங்கம் - பாதகம்
மார்க்கம் - வழி, மதம்
பாகசாலை- மடப்பள்ளி
மதுரம் -இனிமை

 
On February 21, 2011 at 12:44 PM , வந்தியத்தேவன் said...

எனே ஆச்சி சில சொற்களுக்கு எனக்கு அர்த்தம் தெரியுமனை ஆனால் கனக்க‌ புதிசாத்தான் இருக்கு உன்னைப்போல வயசுபோனதுகளோட உதையெல்லாம் எப்படியெனை ஞாபகம் வைத்திருக்கிறியள்.

உவ்வளாத்துக்கும் அர்த்தம் சொன்னால் அவர் பெரிய பண்டிதர் தான். யார் சொல்லீனமெண்டு பார்ப்பம் .

 
On February 21, 2011 at 3:01 PM , மணிமேகலா said...

வடலியூராரே!நலமா? ஒரு பதிவொன்று போடுவீர்கள் என்று நினைத்தேன்.காணோம்.பரீட்சைக் காலமோ?

மதுரம் - இனிமை,பாகசாலை - மடப்பள்ளி என்ற இரண்டும் மெத்தச் சரி.

மார்க்கம் என்பது வழி,மதம் என்பது பொருத்தமே ஆனாலும் அக்காலத்தில் நெடுந்தெருவையே மார்க்கம் என்று குறித்திருக்கிறார்கள்.

பங்கம் என்பதும் அவ்வாறே. இப்போது பாதகம் என்ற கருத்தில் அது வழங்கப் பட்டு வந்தாலும் பங்கம் என்று இங்கு குறிப்பிட்டது சேறு என்ற பொருளில்.

சம்பவங்களோடு பொருத்திப் பார்த்தீர்கள் என்றால் ஓரளவு பொருளை கண்டறிய முடியும் என்று நம்புகிறேன்.

உங்களால் இன்னும் பலவற்றுக்குப் பொருள் கண்டறிய முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

வேடிக்கையாகத் தன்னும் முயற்சித்துப் பாருங்கள்.

சரியான விடை கிடைத்தவற்றை அவரவர் பெயர்களோடு பதிவில் போட்டு விடலாம் என்று நினைக்கிறேன். விடுபட்டவற்றை மற்றவர்கள் முயற்சிக்க அது சுகமாக இருக்கும். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 
On February 21, 2011 at 3:05 PM , மணிமேகலா said...

வந்தியத் தேவரே!இஞ்ச வாருமையா!

தெரிஞ்ச அர்த்தங்களச் சொல்லிப் போட்டு போகக் கூடாதா?

முயற்சியும்! முயற்சியும்!!

 
On February 26, 2011 at 10:34 AM , இளையதம்பி தயானந்தா said...

பழம் தமிழைத் தேடி.........
நன்றி மணிமேகலா

ஞாட்பு - போர், நாட்பு என வருகிறபோது மங்கல காரியங்களுக்கு சுபதினம் குறித்தல்
சுரும்பு - வண்டு அல்லது வண்டினத்தை குறிக்கும். இதை வண்டு என்பதை விட வண்டுகளின் ஒலி என்பதே சரி.
கேசவம் - பெண் வண்டு
கோகிலம் - குயில். அது மட்டுமல்ல குரங்கிற்கும் இவ்வார்த்தை பொருந்தும்.
அவந்திகை - கிளி, அவந்தி என்றாலும் கிளி தான்.
கசனம் -

உவளித்து - அளிப்பது என்று அர்த்தப்படலாம்.
படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி
நவநீதம் - கட்டுரையின்படி அவள் 'பட்டர்' கலர். அல்லது பால் வண்ணம் சரியா!! வேறு வகயில் இது மேளகர்த்தாக்களுள் ஒன்று. நவ நிதியத்தையும் நவ நீதம் என்பதுண்டு.
சூழி - சுழியையே சூழி என்று கட்டுரையில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. சூழி என்பது கடல், யானையின் நெற்றி அலங்காரம் ஆகியவற்றைக் குறிக்கும்..
குந்தளம் - தலை முடி
கங்கதம் - சீப்பு
அங்கராகம் - பூசப்படுவன. குறிப்பாக வாசனைத் திரவியம் (அதுசரி 'சென்ற்' போட கண்ணாடி எதுக்கு?). இந்தச் சொல்லுக்கு போர்க் கவசம் என்றும் அர்த்தம் உண்டு.
மாலதி - மல்லிகை. மாலதி அவளின் நினைவுக்கு வந்தது என்ற வசனத்தை சக்களத்தி அவளின் நினைவுக்கு வந்தது என்றும் பொருள் கொள்ளலாம்!! மாலதி என்ற சொல்லுக்கு சக்களத்தி (சின்ன வீட்டுக்காறி) என்றும் அர்த்தம் உண்டு.
மெளவல் - ஒருவகை மலர்? காட்டு மல்லியோ சந்தேகமாய் இருக்கு. சிவாஜி படத்தில் பாடல் எழிதிய வைரமுத்துவை கேட்க வேணும்.

அங்குலி - விரல். கணிசமான அங்கிலி மாலாக்கள் பேசுகின்ற சிங்கள மொழியிலும் விரலை அங்கிலி என்றே சொல்கிறார்கள். புருவ மத்தியையும் அங்குலி என்று சொல்வதுண்டு. தவிரவும் கைவிரல் மோதிரத்தையும் அங்குலி குறிக்கும்.
உகிர் - நகம். உகிர்ப் புறவன் என்றொரு வார்த்தை சீவகசிந்தாமணியில் உள்ளது, இதற்கு அர்த்தம் நகத்தின் மேலணியும் அணிவகை என்கிறது அகராதி.
ஒட்டம் - தெரியவில்லை!! பந்தயப் பொருள் என்ற அர்த்தம் கட்டுரைக்கு பொருந்தாது.
அதரம் - இதழ்கள். உண்மையில் அதரம் என்பது கீழ் உதட்டையே குறிக்கிறது.
அங்கிதம் - அடையாளம், தழும்பு அல்லது வடு.
கிலுத்தம் - முன் கை அல்லது மணிக்கட்டு.
கூர்ப்பரம் - முழங்கை.

சியாமளம் - சிவப்பு என்ற எண்னத்தில் பொம்பிளையை கறுப்பியாக்கியிருக்கு!! சியாமளம் - கருமை அல்லது கரு நீலவண்ணம்.
மஞ்சரி - கட்டுரையின் படி 'மலர் முகம்'. மஞ்சரி = மலர்க் கொத்து
ஞிமிலி - சுஜாதாவின் காந்தளுர் வசந்தகுமாரன் கதையைப் படிக்க தேடுகிறேன்.
வெருகல் -
எகினம் - கட்டுரையின் பிரகாரம் –நாய். நிச்சயமாக கவரிமானாகவோ அன்னமாகவோ இருக்கமுடியாது. படைத்த பிரமனையும் எகினம் என்று சொல்வதுண்டு.

தொடரும்.......

 
On February 26, 2011 at 10:35 AM , இளையதம்பி தயானந்தா said...

பழம் தமிழைத் தேடி.........
பகுதி 2

துந்துளம் - பெருச்சாளி
பிபீலிகை - எறும்பு
நளிவிடம் - தேள்
நிலந்தி -

சாரங்கம் – மான் (கட்டுரையில் சொல்ல வருவது). வீணைக்கும் ராகத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
நேமி – விஷ்ணுவின் சக்கரம்,
சிதகம் - தூக்கணாங்குருவி
சசலம் -
கோமளம் – மென்மை,இளமை ஆகிய சொற்களுக்கு மட்டுமல்ல கறவைப் பசுவுக்கும் இந்த வார்த்தை ஒத்தது.
ஞெள்ளல் – கட்டுரையில் பயன்பட்ட அர்த்தம் தெரியவில்லை. தேடியதில் தெரு,சோர்வு,விரைவு என சில அர்த்தங்கள் கிடைத்தன.
பொற்பு – பொலிவு, அலங்கரிப்பு,அழகு,இயல்பு
போதம் -
பாவனம் – சுத்தம், தூய்மை,உபாயம், ஒருவகை ஆடை
பிங்கலம் – பொன்னிறம் – பொன்னிற அணிகலங்கள். ஆனால் பிங்கலம் என்றதும் நிகண்டுதான் நினனைவில் வருகிறது.
கன்னல் – கரும்பு,சர்க்கரை,கற்கண்டு என்று நீட்டலாம். இனிக்கும் மொழிக்காரி அவ்வளவே. தவிரவும் பாயசத்திற்கும் கன்னல் என்ற பெயருண்டு. கதா நாயகி பேசப் பேச பாயசம் ஒழுகுமோ என்னமோ.

துச்சில் – கட்டுரைப்படி – குடிசைப் பக்கம்.
ஓதம் – வெள்ளம். கடலையும் ஓதம் என்பதுண்டு. அலைப் பெருக்கொலி,சோறு, பெருமை என இதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு.
வரிசை – ஒழுங்கு??
மார்க்கம் - பாதை
விடங்கம் – லிங்கம் – உளி கொண்டு செதுக்காத சிற்பம் குறிப்பாக லிங்கம், அல்லது முகடுகள் கொண்ட வீடுகள்.
மறுகு - வீதி
பாக சாலை – கோயிலின் அடுக்களை !
கபித்தம் – விளா மரம்
சிந்தகம் – புளியமரம்
ஆசினி – பலா (ஈரப்பலா)
குமுதம் - நிச்சயமாக ஆனந்தவிகடன், குமுதமாய் இராது. பாகசாலையில் அதுவும் இருக்கலாம். இது ஆம்பல் மலர்கள். கர்ப்பூரமும் குமுதம் என்று சொல்லப்படுவதுண்டு.
உலூகலம் - உரல்
வட்டிகை – ஓவியத்தோடு தொடர்புடைய வார்த்தை ஆனால் கட்டுரையில் பாத்திரம் ஒன்றைக் குறிக்கிறதா? தெரியவில்லை
நவியம் – கோடாரியாய் இருக்கலாம் புதுமையாய் பாகசாலைக்குள் ஏதிருக்க?
முசலம் – உலக்கை, இது ஒரு போராயுதத்தையும் குறிக்கிறது.
சூர்ப்பம் - சுளகு
தாம்பு - கயிறு
குழிசி –கட்டுரையிபடி இது பானையைக் குறிக்கிறது. ஆனால் இதன் இன்னொரு அர்த்தம்தான் இந்தக் கடைசி வார்த்தைக்கு பொருத்தம்னாது. இவ்வளவையும் கண்டறிய (சிலதை கண்டறிய முடியவில்லை) இதுதான் கிழிந்து போனது- கோவணம்

 
On February 28, 2011 at 2:15 AM , ஃபஹீமாஜஹான் said...
This comment has been removed by the author.
 
On February 28, 2011 at 2:19 AM , ஃபஹீமாஜஹான் said...

மணியாச்சி மணியாச்சி....!!
இங்க வந்து பாருங்கோ.
வராதவங்களெல்லாம் ஈழத்துமுற்றத்துக்கு வந்து அசத்தியிருக்கிறாங்க. பல நாட்கள் முயற்சிசெய்து இவ்வளவு சொற்களுக்கும் பொருள்தேடிக்கொண்டு வந்து சிறப்பித்தமைக்கு
வாழ்த்துக்கள் தயா அண்ணா.(ஆச்சிக்கு ஏதோ கையில வேலயாம்.அதை முடித்துக் கொண்டு உடன வந்திடுவா)

 
On March 1, 2011 at 4:09 PM , மணிமேகலா said...

நன்றி திரு.தயா.

நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும், நேரத்துக்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!

சிட்னி தமிழ் சமூகம் நன்கறிந்த தமிழர் ஒருவரின் அந்தரங்க வக்கிரங்கள் ஊடகங்களில் வெளிப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை. அது தான் வரத் தாமதமாகி விட்டது.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?

அது போகட்டும்.நீங்கள் தமிழ் லெக்‌ஷிகனில் இருந்து பொருள் கண்டறிந்திருக்கிறீர்களோ? இவை எல்லாம் சூடாமணி நிகண்டு என்ற தமிழ் அகராதியில் இருக்கின்றன.பாடல்களாக இருந்த இவற்றுக்கு ஆறுமுக நாவலர் உரை எழுதிப் பதிப்பித்திருக்கிறார். நேரமிருந்தால் நூலகம்.நெற்றில் பதிவிறக்கிப் பாருங்கள்.தமிழ் எத்தனை நுட்பமாக ஒவ்வொரு சிறு விடயத்துக்கும் சொற்களை தனித்துவமாக வைத்திருந்திருக்கின்றது என்று ஆச்சரியப் படுவீர்கள்.

உங்கள் விளக்கங்கள் பெரும்பாலானவை சரி.கீழே விளக்கங்களைத் தருகிறேன்.

மீண்டும் உங்கள் நேரத்துக்கும் முயற்சிக்கும் என் தமிழின் நன்றிகள்.

 
On March 1, 2011 at 4:30 PM , மணிமேகலா said...

ஞாட்பு - போர் (சரி)
சுரும்பு - வண்டு (சரி)
கேசவம் -பெண் வண்டு (சரி)தமிழ் எவ்வளவு நுட்பமாகப் பொருள் கொண்டிருக்கிறது பாருங்கள்!
கோகிலம் - குயில் (சரி)
அவந்திகை - கிளி (சரி)
உவளித்து -சுத்தப் படுத்தி
படிமக்கலம் - முகம் பார்க்கும் கண்ணாடி (சரி)
நவநீதம் - வெண்ணை வண்ணம் (சீஸ்).
சூழி - உச்சி
குந்தளம் - குறிப்பாகப் பெண்ணினுடைய தலைமயிரைக் குறிக்கிறது.
கங்கதம் - சீப்பு (சரி)
அங்கராகம் - முகப் பூச்சு பவுடர் என்றும் பொருள் கொள்ளலாமே!
மாலதி - மல்லிகை (சரி).
மெளவல் - முல்லை,காட்டு மல்லிகை எனப் பொருள் கொள்ளினும் சரியே!(சரி)

அங்குலி - விரல்.(சரி)
உகிர் - நகம்.(சரி, உங்கள் மேலதிக விபரங்களுக்கு மேலும் நன்றி)
ஒட்டம் - குறிப்பாக மேலுதட்டைக் குறிக்கிறது.
அதரம் - கீழ் உதடு (சரி)
அங்கிதம் - வடு (சரி)
கிலுத்தம் - மணிக்கட்டு (சரி)
கூர்ப்பரம் - முழங்கை (சரி)

சியாமளம் - பசுமையான வண்ணம் என்பதே சரி.வேறு இடங்களில் வேறு விதமாகப் பொருள் கொள்ளப் பட்டிருக்கிறதா என்று தெரிய வில்லை.
மஞ்சரி - பூங் கொத்து (சரி)
ஞிமிலி - நாய்
வெருகல் -பூனை
எகினம் - அன்னம்

 
On March 1, 2011 at 4:51 PM , மணிமேகலா said...

துந்துளம் - பெருச்சாளி(சரி)
பிபீலிகை - எறும்பு(சரி)
நளிவிடம் - தேள்(சரி)
நிலந்தி -நுளம்பு

சாரங்கம் – சாதகப் பறவை
நேமி –சக்கரவாகப் பறவை.
சிதகம் - தூக்கணாங்குருவி
சசலம் - முள்ளுப் பன்றியின் முள்
கோமளம் – மென்மை,இளமை (சரி)
ஞெள்ளல் – மேன்மை
பொற்பு – பொலிவு,உங்கள் விளக்கங்களும் சரியே(சரி)
போதம் -அறிவு
பாவனம் – சுத்தம், தூய்மை (சரி)
பிங்கலம் – பொன்னிறம் (சரி)
கன்னல் – கரும்பு(சரி)
துச்சில் –ஒதுக்கிடம்
ஓதம் – வெள்ளம்.(சரி,மேலதிக விளக்கங்கலுக்கு நன்றி)
மார்க்கம் - நெடுந்தெரு
விடங்கம் – வீதியை அலங்கரிக்கும் கொடி
மறுகு - குறுந்தெரு
பாக சாலை –வடலியூரான் சொன்னது சரி.மடப்பள்ளி
கபித்தம் – விளா மரம்(சரி)
சிந்தகம் – புளியமரம்(சரி)
ஆசினி – பலா (ஈரப்பலா)(சரி)
குமுதம் - அடுப்பு.
உலூகலம் - உரல்(சரி)
வட்டிகை – கூடை
நவியம் – கோடாரி(சரி)
முசலம் – உலக்கை,சரி)
சூர்ப்பம் - சுளகு(சரி)
தாம்பு - கயிறு(சரி)
குழிசி –கிடாரம்.நீங்கள் சொன்ன பானை இதுவல்ல.

நீங்கள் குறிப்பிட்ட சொல்லுக்கு வட்டுடை என்று சொல்வதே பொருத்தம்.

நன்றி திரு. தயா.இவை தான் முழுக்க முழுக்க சரியான விடை என்றில்லை.இடம்,பொருள்,சந்தர்ப்பம் கருதி சில சொற்கள் வேறு அர்த்தம் குறித்தும் வரலாம். இது குறிப்பிட்ட சம்பவக் கோர்வையை மையமாக வைத்துக் கூறிய அர்த்தங்களே!

 
On March 1, 2011 at 5:06 PM , மணிமேகலா said...

சொல்லப் படாமல் விடுபட்ட சொற்களுக்கான அர்த்தம் வருமாறு;

கசனம் -கரிக்குருவி. (இது ஒரு துர் சகுனமாக முன் நாளில் பார்க்கப் பட்டது)
தால வரிசை -பனைகளின் வரிசை
குமுதம் -அடுப்பு

சுவேதம் -வியர்வை
தவளம் -வெண்மை
பெளவம் -முத்து

சீசகம் -மூங்கில்
நறுமருப்பு -இஞ்சி
உருளரிசி -மல்லி
சசம் -முயல்

சசி -கற்பூரம்
நேமிநாதம் - தேர் உருளும் ஓசை
சயந்தனம் - தேர்.

இதில் பங்கு பற்றிய எல்லோருக்கும் நன்றி.

 
On March 1, 2011 at 5:13 PM , மணிமேகலா said...

நன்றி பஹீமா!

திரு. தயா 56 க்கு மேற்பட்ட சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கிறார். அது நிச்சயமாக பெரு முயற்சி.