Author: சினேகிதி
•7:57 AM
கனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு
எப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.



நான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ஆய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..

இந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.

இதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பிட்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.

தென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.

மற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.

கொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.

மே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.



வீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.

இந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.

மீண்டும் வருகிறேன்.
|
This entry was posted on 7:57 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On August 14, 2010 at 11:08 AM , நிலாமதி said...

பேச்சு வழக்கில் எழுதிய கதை அழகாயிருக்கு கூடவே என் கிராமத்து வாசனையும்.

 
On August 14, 2010 at 3:20 PM , yarl said...

வணக்கம் சிநேகிதி,
எனக்கும் மரங்கள், பூக்கண்டுகள் எண்டால் சரியான விருப்பம். பப்பா பழதிண்ட அருமை எங்களுக்கு ஊரில இருக்கேக்கை தெரியேலை ஆனால் இப்ப சாப்பிட எவ்வளவு ஆசையாய் இருக்கு. குண்டுமல்லிகை, ஊசி மல்லிகை, பவளமல்லிகை, முல்லை எல்லாம் இப்பயும் மூக்குக்கை மணக்குது. அசோகா மரம், பொன்னி மரம், போகன் விலா எல்லாம் பக்கத்துக்கு வீட்டுக்காரரோட போட்டிகெல்லே வைக்கிறது ? நல்ல பதிவு சிநேகிதி. வாழ்த்துக்கள். படங்களும் நல்லாயிருக்கு.
அன்புடன் மங்கை

 
On August 15, 2010 at 1:22 AM , யசோதா.பத்மநாதன் said...

:)ஒருமாதிரி வெளிக்கிட்டிட்டா!பிராக்கு கூடிப் போச்சுது போல?

குடிகாரன் பூ எண்டு ஒரு பூ இருக்கு.நீண்ட தண்டாக வந்து நுனியில் 5 இதழ் கொண்ட பூ அது.வெள்ளையிலிருந்து கடும் பிங் நிறம் வரை பல நிறங்களில் கொத்துக் கொத்தாகக் கொடியில் பூக்கும்.வாசமில்லை. ஆனால் நல்ல அழகு.

அதை விட நந்தியாவட்டை,நித்திய கல்யாணி, பொன் நொச்சி,நாலுமணிப் பூ, செவ்வந்தி,சீனியாஸ்,கோழியாஸ் எண்டு ஒரு வகை(குறோட்டன் மாதிரி இது மென்மையான ரகம்)அந்தூரியம் இப்பிடியும் கொஞ்சம் பூ வகை ஊர் மண்ணில் பிரசித்தம்.

பூக்களோட சினேகிதியின்ர எழுத்து வாசமும் நல்லா இருக்கு.

 
On August 15, 2010 at 3:59 AM , வர்மா said...

வேப்பமிலை,மல்லிகை,அறுகம்புல் எல்லாம்காசுகுடுத்து வாங்கிறநிலையிலை இருக்கிறம். மரங்களைப்பற்றி நினைக்கவே கவலையாயிருக்கு.
அன்புடன்
வர்மா

 
On August 15, 2010 at 1:48 PM , yarl said...

கனகாம்பரம், வாடாமல்லிகை, எக்சோரா இவை மூன்றையும் மறக்கேலாது.

 
On August 17, 2010 at 12:37 PM , சினேகிதி said...

வணக்கம் நிலாமதி அக்கா.பேச்சு வழக்கில் எழுதிப்போட்டா பிரச்சினையில்லைத்தானே இலக்கணப்பிழை எல்லாம் பார்க்கத்தேவையில்லை.உங்கட கிராமத்து வாசனையா :)

வணக்கம் யாழ் மங்கை.
போகன் விலா என்றது கடுதாசி மரம்தானே? அசோகா மரம் ஏன் பிடிக்கும்? பொன்னி என்றது பொன்னிச்சிப் பூ? எனக்கும் அது பிடிக்கும்.

 
On August 17, 2010 at 12:41 PM , சினேகிதி said...

அணேய் மணியாச்சி பிராக்குக் கூடித்தான் போச்சு என்னண செய்றது. உனக்கென்னண தெரியும் எனக்கெவ்வளவு வேலையிருக்கு.குடிகாரன் பூப்படம் போடணை பார்ப்பம். அந்தூரியம் சீனியாஸ் கோழியாஸ் எல்லாம் இங்கையிருக்கணை. நந்தியாவட்டை தண்ணில போட்டிட்டு கண்ணில வைக்கிறது கண்வருத்தம் வந்தால்.

வேற என்னாச்சி புதினம்?

 
On August 17, 2010 at 12:43 PM , சினேகிதி said...

வர்மா வாழையிலையும் காசு குடுத்துத்தான் வாங்கிறம் :) இன்டைக்கு தூதுவளையும் கற்பூரவள்ளியும் ஒரு இடத்தில கண்டிட்டு வேண்டிக்கொண்டு வந்தனான் வீட்ட நட்டிருக்கு பார்ப்பம் எப்பிடி வருதெண்டு.

 
On August 17, 2010 at 6:11 PM , Anonymous said...

நல்ல ரசனையுடன் இருக்கிறது பதிவு. தேசி இலையும் அந்த மணமும் மறக்க முடியாது. கூகிளில் (salal leaves) என்று போட்டு விலையைப் பாருங்கள். எவ்வளவு காசுக்கு இந்தத் தேசி இலையையும் சஞ்சீவி(விக்ஸ்) இலையையும் வாங்குகினம் என்று.
சாதாரணமாக எல்லா வீட்டிலையும் இருக்கிற மல்லிகை, முருங்கை அதை விட பலா, மா, கப்பல், காதலி, மொந்தன், இதரை, சீனி வாழை, செவ்வாழை என்று நினைக்கவே ஆசையா இருக்கு. குலை குலையா வீட்டில வச்சு சாப்பிட்டது நினைக்க வாயூறுது. இங்க எல்லாமே கிடைச்சாலும் ஒண்டுமே டேஸ்ட் இல்லை.

 
On August 22, 2010 at 5:03 AM , தினேஷ்குமார் said...

வணக்கம் ஹேமா
ஒரு சிறு பச்சிலங்காடே உங்க தோட்டத்தில் இருந்திருக்கு நீங்க சொல்லச்சொல்ல நான் கற்பனையில் எங்க ஊருக்கே போயிட்டு வந்த்துட்டேன் அருமையான பதிவு
http://marumlogam.blogspot.com