Author: ந.குணபாலன்
•12:16 AM
கிழிந்த கோமணம்!

கனவுத்திரை                                                                                                   

அரை நூற்றாண்டு ஆகிவிட்டதொரு                             விளப்பம்:
திரைப்படம் பார்த்த தியக்கம்!                                 (கோ- அரசு + மணம் - சிறப்பு )
இராமனின் மக்கள்    
இரணைப் பிள்ளைகள் 
இலவன், குசன் என்னும் இளவல்கள்                     ( தியக்கம் - மயக்கம்) 
மரவுரி தரி முனி நடுவில் 
மலர் வனமிசை மலர்ந்து பின்தம்  
மரபினை அறிந்து மகுடம் சூடி
அரியணை ஏறினர். அலங்காரச் செங்கோல்,
சரம் எறி சிலையுடன் ஏந்தினர் பெருவாள்.         ( சரம் - அம்பு, சிலை - வில்)  
                                                                                              
பெருவாள் அறுத்ததுவோ? 
பேதையேன் மனசில் ஒரு வலி. 
அண்ணல்மார் தாயவள்! 
அகிலத் தாயின் சேயவள்!                 
அருமந்த சீதைத்தாயாரின் அவல முடிவு! 
மருந்துக்கும் ஒவ்வா! மனசுக்கும் ஒவ்வா!
வருந்திய மனசில் கண்ணில் களைப்பு ஆள, 
அரவணைத்து பறிந்தது நித்திரை!- கண்விழி           (பறிந்தது - முன்சென்றது) 
அருகணைத்து விரிந்தது கனவுத்திரை!-அதில் 
கருப்பொருளாய்க் காலித்தாள் சீதைத் தாயாள்     (காலித்தல்-தோன்றுதல்,ஒளி வீசுதல்)  

சீதைத் தாயாள் வந்தனள்,
சிரித்த முகம் காட்டினள் அல்லள்.
சினந்து சிவந்த முகம் காட்டினள்.
வாதை உதைத்த சதிரம்,                                       (வாதை - துன்பம் , சதிரம் - உடல்)
வஞ்சினம் உரைத்த வதனம்.
பார்த்திடப் பயம் மிகப் பரந்தது. ஆனாலும்          (பரந்தது - பரவியது)
பேசப்பறைய எனை மனசும் இரந்தது.
பாசம் மிகப், பரவினேன் அவள் சீர்த்தி.                 (சீர்த்தி - மிகுபுகழ்) 

"சீர்த்தி மிக்க சீதையம்மா!
சீலமிகு சீதேவி உமைக் காண 
நேர்த்தி நான் வைத்ததில்லை. ஆனாலும் 
நேரில் உம்மைக் கண்டுவிட்டேன்.
பூர்த்தி யாகாத புதிர் ஒன்றுண்டு!                                                 
பூராயம் பிடிக்க வந்தாயோ என்னாமல்                  (பூராயம் - விடுப்பு, அலர், வம்பு)
ஓர்ந்து உம்மனசின் உள்ளபடி ஞாயத்தை
ஓம்பட்டு உரைத்திடுவீர்! 
ஓலையில் பொறித்திடுவேன்!
உலகத்துக்கும் உரைத்திடுவேன்!" மன 
உயக்க முற்று உழற்று யான்.                            ( உயக்கம்- வருத்தம், துன்பம் )
உரமாகக் கிடைத்தது கிழி.                                     (கிழி - திட்டு)

கிழி கேட்டேன். கிளிமொழி மைதிலியிடம் நல்ல
கிழி தான் நானும் கேட்டேன்.
"கிழித்தாய் போ! உரைத்துக் கிழித்தாய் போ!
பண்டு ஒருகால் எனை
மணங் கொண்டவனை!,
மனம், மானம் கொன்றவனை!
ஞானம், ஒரு ஞாயம் என்ற ஒரு 
பண்புமிலாப் பாதகனை
மாண்பான நாயகனாய்க்   
கொண்டு இராமாயணம் என்றொரு
கோமணம் கொழித்துக் கிழித்தான் போ!- அவன்      ( கோவண்ணம் - அரசுச் சிறப்பு) 
வான்மீகி என்னுமொரு வம்பன்!                                       ( கொழித்து - பாராட்டி)
முன்வந்து முடக்கும் அவன் முழிவியளம்.                (முழிவியளம் - கண்பார்வை, முகராசி)

முழிவியளத்துக்கு ஆகாத மூடன்
முக்காலம் அறிந்தான் போல் முனகியதை,
அழிபழி சொல்லாமல் ஆராயாமல்
அரைகுறையாய்க் கேட்டுச்சில
மழுங்கு எழுத்தின் மாந்தரும்                            (மழுங்கு எழுத்தின் மாந்தர்     
மனம்போன போக்கில் இட்டுக்கட்டி                                      - மூடரான எழுத்தாளர்) 
ஏட்டில் எழுதிக் கிழித்தார் போ!
வழுவாகப் படித்தவரும் வரைவில்லா நடப்பை               ( வரைவு - நெறி,ஒழுங்கு) 
வடிவென்று, வரைவென்று வாசாலமாக
பாட்டில் பாடிக் கிழித்தார் போ!
நாட்டில் பலர் கையொப்பம் எழுதவறியா  
நடப்பிருக்க நளின நாடகமே அரை. 

அரை விசரன் ஆரிய மொழியை
அரை குறையாய்க் கற்ற உங்கள் தமிழன்,
அருகிருந்து எல்லாம் ஆராய்ந்தவனாய்
கார்வண்ணன் கண்ணியம் காவியமாய்ப்
பாவண்ணம் படைத்துக் கிழித்தான் போ! - அவன்
கம்பன் இன்னுமொரு வம்பன். 
பம்மாத்து கதை பாடல் பற்றாதோ? உன்
பங்குக்கு நீயும் பெண்ணாள் நான்
பங்கப் பட்ட பதைப்பெல்லாம்
பழித்து எழுத எண்ணினாயோ? பாதகனே?"
தெளிக்கும் கொதிநீர் அன்ன தேவி சொலவால்,
விழிதிறந்தேன் விளங்கிக் கொண்டேன்
விண்டலம் மேவிய வைதேகித் தாயாரை யான்
கண்டது, கதைத்த தெல்லாமும் கனவே!


கனவு கண்டேன். ஆனால் சீதைத்தாயின்
மனசு கண்டிலனே! கிளை தாவு கவி மனம்           ( கவி-குரங்கு)
தினந்தோறும் தொணதொணக்க
நனவிலே பகற்கனவாடி சீதை
மன மருங்காடி உருவாடும்                  (மன மருங்காடி - empati கொண்டு)
சன்னத்தக்காரன் நான் சாற்றும்       ( empati - பிறர் படு துயரை மனத்தால் உணர்தல்) 
எண்ணத்தை எள்ளாமல் பழிக்காமல்
என்னுரைக்கும் இடம் தந்து ஆராய்வீர்,     (மருங்கு - பக்கம்)
சன்னநாயகம் விட்டு சனநாயகம் தொட்டு.
என்னுரை புன்னுரை ஆயின்
தொன்மத்தின் தோகை சீதையும்                    ( தொன்மம்-புராணம்) 
புன்னுரை பொறுப்பாள் என்றே
உன்னுகின்ற உழறுவாய னேனை               (உன்னுகின்ற-நினைக்கின்ற)
தண்ணளியுடன் பிழை தவிர்த்தே
என்னுரை ஏற்பீரே தமிழ் கூறு மாந்தரே!

மாந்தருள் மாணிக்கம் அன்ன
மாதரசி சீதைத் தாயாருடன்
பாந்தமாக நானும் பகற்கனவு கொண்டாட          ( பாந்தம் - இணக்கம்)
பந்தி பல பாடினார் ஆத்தையார்.

" ஆத்தையரே! தாயாரே! பொறுத்தருள்வீர்!
அடியேன் உம் அல்லல் கண்டு,
விசும்பிடும் மனசுடை விசரன் நான்.                        (விசும்பு-வானம், அழு) 
விசும்பு வண்ண வேந்து இராகவன்
வீணனோ? வெறும் விழலனோ                                                                                         
வீணைக்  கொடியோனைக் கொடியோனை          ( கொடியோனைக் கொடியோனை      
கொன்றழித்த கோன் அன்றோ?                                    - கொடியுடையவனை, தீயவனை)
மன்னவனை நாடாது மாதரசி நீரும் கொண்ட
மன்னை என்ன? மாறாட்டம் என்ன?                        ( மன்னை - கோவம்)
மண்ணைப் பிளக்க வைத்து மறைந்துபோன            ( மாறாட்டம்- மனக்குழப்பம், பைத்தியம்) 
மருமம் என்ன? மாயம் என்ன? என்ன                                    
கருமகாண்டம் இது? காதலிலே                               ( கருமகாண்டம் - துன்பம்)
உருகி ஓடிவந்த உத்தமனை உதறி
உயிரான இரு செல்வரையும் ஒப்படைத்து
உயிர் துறந்த உமது ஓர்மம் என்ன?                          ( ஓர்மம் - நெஞ்சுறுதி)
உரைத்திடுவீர்! ஆத்தையரே! தாயாரே!"
விரும்பி நான் வினாக்குறி வளைத்தேன்.
இராமாயணம் என்று எக்கணம்                                 (எக்கணம்-ஒருவேளை) 
இல்லாத கதை எல்லாம்
இட்டுக்கட்டி இருப்பானோ வான்மீகி?

"வான்மீகி வாய் அலம்பு மாய்மாலம் நம்புவோனே! 
நான்மேவிச் சிலம்பு நடப்பை நம்பினால் நம்பு!                       
பிள்ளை வரம் கேட்கும் விரதம் பிடிக்க        
வேள்வி நிலம் விரும்பி உழுத சனகராசனுக்கு                               
தேள்வைப் பட்ட திரவியமாய் நான் கிடைத்தேனாம்.     ( தேள்வை-தேவை)
சீதை என அழைத்துச் சீராட்டினரே!
பாதம் நோகாமல் பார்த்து வளர்த்தனரே!
பாதகத்தி நான் கொழுமுனை பட்ட போதில்
பாழ்பட்ட ஒரு வில்லும் சேர்ந்தே பட்டதாம். சீதை
ஆள்பட்ட வயசில் ஒருவன் வந்து அந்த
வில்லொடிப்பான் விண்ணாதி விண்ணன்!,
வைதேகியின் கண்ணாளன்! கண்ணன்!
வீணாகிப்போன சாத்திரம் விளக்கினதாம் கேளும்!
கண்டதுக்கும் சாதகம் கணித்து நம்பும்
மண்டை கழன்ற எந்தையும் தாயும் மனம் மறுகும்.         ( மண்டை கழன்ற- மூளையற்ற)
மன்னன் மகவாய் வளர்ந்தேன் நானொரு பூமரம்.

பூமரம் பூத்ததென பக்குவப் பட்டேன் நான்.                  ( பக்குவப்பட்ட-பூப்டைந்த )
பூவினை நாடும் சுரும்பென பூதலத்து மன்னர் பலர்                                              
வில்லொடிப்பேன் சீதையை வதுவை கொள்வேன் என
மல்லாடினர், மாட்டாமல் மானம் ஒடிந்தனரே!
பல்லோரும் பாடுபட்டும் பாழ்பட்ட
வில்லும் ஒடியவில்லை!
விஞ்சியதும் பகையே!
அஞ்சுகத்தின் மண அலங்காரம் 
ஒல்லை வருநாள் என்றோ என  
அல்லாடின எந்தை சனகன், 
அல்லாத கரவு ஒன்று அமைத்தான்! ஆருக்கும்                          ( கரவு- களவு)
சொல்லாமல் பறையாமல் சிறு சேதம் சமைத்தான்,
வில்லுத் தண்டு விடை கொள் பாகத்தில்!
வல்லோன் வரவு சொலக் கரைந்தன காகம்.          ( வல்லோன்-கொடியோன்) 


காகமும் இருந்தது, பனம்பழமும் விழுந்தது!
காகநிறத்துக் காளை மிதிலை நுழைந்தான்.
ஆகா எழுந்தது அருமைக் காட்சி!
அண்ணலும் நோக்கினானாம்!
அவளும் நோக்கினாளாம்!
விளக்குப் பிடித்தவன் கம்பன் தமிழனே தான்!        (விளக்குப் பிடித்தவன்
கேளுங்கள்! கேப்பையில்  நெய் ஒழுகுமாம்.              -களவுக்குத் துணை போனவன்,
விளப்பமாய் கவி விரித்தான், தேன் ஒழுகுமாம்.              எல்லாம் அருகிருந்து கண்டவன்) 
மாயோனின் மறு அவதாரம் எனப்பக்தி
மயக்கம் மீதூர உங்கள் கம்பனும்
தயக்கமின்றிப் புழுகு அவிழ்த்திடும்
அயோத்தியின் அயோக்கியன் இராமன்,
அயோக்கிய இளவல் இலக்குவனுடனே
சுயம்வரம் காண வந்தானாம். கண்டறியாத
சுயம்வரம் காண வந்தானாம் கேட்டீரோ?
காயப்பட்ட வில்லை எடுத்தான், ஒடித்தான்.
காகமும் இருந்தது, பனம்பழமும் விழுந்தது!           ( பாகப் பட்ட-துண்டான) 
பாகப் பட்ட வில்! பங்கப் பட்ட போட்டி!                    ( பங்கம் - குறை,வெட்கம்,கேவலம்)   

போட்டி வென்று பெண் கொளல் வெறும் 
சாட்டுக்கு மட்டும் சுயம்வரம் அன்றோ!
மீட்டிங்கு வந்து மீன்விழி மாதே! எம் மகளே!
மானே! மரகதமே! உன் மனங்கொள்
மணாளனை நீயே தெரிந்து மணமாலை
சூட்டிச் சுயமாய் வரன் கொள் என்றனரோ?
மண்ணாங்கட்டி! மாதரை உடைமையென 
மடக்கும் அடக்கும் மாந்தர்!
பாகம் பண்ணிய பணியாரம், அதன் மனம்
நோகுமென நொடி பொறுத்து நன்னுவராமோ?        (நன்னுவராமோ?-தின்னுவராமோ?) 
தாரகை போல் வாழ்ந்தவளை, பாச மகளை                           
தரமான முறை கண்டு, மனங் கொண்டு                                  
ஒரு சொல் இசைவாகக் கேட்டாரில்லை.                          ( தாரை வார்ப்பு-
தாரமாக, தானமாக, தற்பெருமைச் சின்னமாக - உந்தத்    கைவிடுதல், துன்பம்)
தாரை வார்ப்புக்குத்தான் தம்மகளாய்த்                             (ஓராட்டி-தாலாட்டி)      
தரைமீதில் ஓராட்டிச் சீராட்டி ஓம்பினவராம்!                      (புறந்தருவார் -வளர்த்தவர்)  
புறந்தருவார் புதல்வியை புறந்தரும் வீரியம்!                ( புறந்தருதல்-வெளியாளுக்கு தருதல் ) 

வீரியம் மிக்க வில்லவன் இராமன்தன்
வல்லமையின் வண்மை பாடி
பரிசெனவே எனைக் கொடுத்தார்.
இருந்து எண்ணிப் பார்த்தால்
செருப்புச் சேட்டைதான் அந்நேரம் செய்தார்.
ஒரு விளப்பம் இலா எடுப்பார் கைப்பிள்ளையென
இருந்து விட்டேன், ஏமாப்பும் அறிந்தேன் அல்லேன். 
சடங்கான பிள்ளையெனை இராமனுடன்                              ( சடங்கான-பூப்படைந்த) 
சடங்கு செய்து, தன்னுரிமை ஏதுமற்ற,                                   ( சடங்கு செய்து-மணஞ்செய்து) 
உடைமைச் சடப்பொருளாய்
பரிசாய் எனைக் கொடுத்தனர்.
பரிசு எனைக் கெடுத்தனர்;                                            ( பரிசு கெடுத்தல்-மரியாதை கெடுத்தல்)
பாதம் நோகாமல் பாசமாய் வளர்த்தவர்.
பாரோர் போற்றிடும் பரவிப் புகழ்ந்திடும்
வரிசை இதுவே! வழமை இதுவே! என்றே                             ( வரிசை- சிறப்பு)
வஞ்சி நானும் மண வாழ்வை வரவேற்றேன்!
வஞ்சகம் அறியா வளர்ந்தவள் நானே!
அஞ்சுகமாய் நானும் அடைந்த இடம் அயோத்தி.

                       (இன்னும் கிழியும்)