Author: ந.குணபாலன்
•5:37 PM

                                                                             மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்


துடிப்பு பன்னிரண்டு : கத்துலா!


ஒரு தேவதாரு மரத்துக்குக் கீழை அண்டிரவு நித்திரை கொண்டம். வெள்ளாப்போடை முழிப்பு வந்திட்டிது. முதல் கண் முழிச்சது நான்தான். சுற்றவர எல்லாம் சாம்பல் பூத்த மாதிரி ஒரே பனிப்புகார் மூட்டமாய் கிடந்தது. வியாழரும், வெள்ளியாரும் ஏதோ ஆவி, பேய், பூதம் உலாவினது மாதிரி புகாருக்குள்ளை நிண்டது தெரிஞ்சது. எல்லாமே அமைதியாய் இருந்துது. என்னவோ விளங்கப் படுத்த முடியாத ஒரு ஏக்கமாய்க் கிடந்துது. மனசு ஒண்டுக்கும் ஏவாமல் சோர்வாய்   இருந்துது. பெத்தய்யா வீட்டுக் கணகணப்பான அடுப்படிச் சூட்டை நினைச்சு என்ரை தேகமும், மனசும் தவிச்சது. இனி என்னென்ன கயிட்ட துன்பங்கள் வரக் காத்திருக்கோ எண்டு நினைக்க நினைக்கக் கலக்கமாய் இருந்துது. 

என்ரை மனக் கலக்கம், குழப்பம் எல்லாம் ஒண்டும் அண்ணருக்குக் காட்டக் கூடாது எண்டு தான் நினைச்சன். ஆர் கண்டது, எக்கணம் என்ரை மனநிலையைக் கண்டுபிடிச்சார் எண்டால் திருப்பி அனுப்ப மாட்டார் எண்டது என்ன நிச்சயம்? என்னதான் தலை போகிற ஆபத்து வந்தாலும் இனிமேலும் அண்ணரை விட்டுப் பிறிஞ்சிடக் கூடாது எண்டது என்ரை நினைப்பு. 


என்னை வைச்ச கண் வாங்காமல் கொஞ்ச நேரம் பார்த்திட்டுச் சாதுவாய் ஒரு சிரிப்புச் சிரிச்சார்.

"இப்பவே யோசிச்சுக் கவலைப் படாதை சீனியப்பு! இனி நாங்கள் சந்திக்கப் போற சோதினை, சவாலுகளோடை ஒப்பிடேக்குள்ளை இதெல்லாம் ஒரு தூசு."
ப் ச்!  நல்ல ஆறுதல் தான் சொல்லிறார் இவர் அண்ணர். 

வெய்யில் வெளிச்சம் மரங்களுக்குள்ளாலை ஊடுருவப் பனிப்புகாரும் மெள்ளக் கரையத் தொடங்கிச்சுது. காட்டு மரங்களிலை இருந்த பறவை எல்லாம் பாட வெளிக்கிட்டுது. வெய்யில் வெளிச்சமும், பறவையளின்ரை பாட்டும் சேர்ந்து; மனசிலை இருந்த கவலை, கலக்கம்,குழப்பம், ஏக்கம், சோர்வு எல்லாத்தையும் பனிப்புகாரோடை சேர்த்துக் கரைச்சு போட்டுது. இப்ப பார்த்தால் பெரிய ஆபத்தான காரியம் ஒண்டும் இல்லை எண்ட மாதிரி மனசிலை ஒரு துணிச்சல் வந்துது. 


வியாழரும், வெள்ளியாரும் கூட நல்ல சுவாத்தியமாய் தன்னிட்டவாரம் புல்லு மேய்ஞ்சபடி இருந்திச்சுதுகள். வெளிச்சம் குறைவான குதிரைமாலை விட்டு வெளி வெட்டையிலை விட்டாத்தியாய் நல்ல சாறுள்ள புல்லை மேயிறது அதுகளுக்கு புளுகம் தானே? பார்க்கவே தெரிஞ்சது. 


அண்ணர் மெல்லிசாய் ஒரு சீக்கை அடிச்சவர். அந்தச் சத்தத்துக்கு கட்டுப்பட்டு ரெண்டும் எங்களுக்குக் கிட்ட வந்தது. அண்ணர்  வெளிக்கிட்டுட்டார். இன்னும் கனதூரம் போகக் கிடக்கு  எண்டு நினைக்கிறன். மினைக்கெட நேரமில்லை. 

" கோட்டை மதில் கனதூரத்திலை  இல்லை. பங்கார் அந்த கசல் மரப்பத்தை மதிலை மறைக்குது. தடியன் தொடிக்கியைச் சந்திக்கத்தான் வேணும் எண்டால் நிண்டு மினைக்கெடலாம் தான். ஆனால் எனக்கு அது இட்டமாய் இல்லை. " எண்டு பகிடியும் வெற்றியுமாய் சொன்னார். 

எங்கடை பாதாளச் சுரங்கம் கொஞ்ச கசல் மரங்களுக்கு இடையிலை தான் வந்து வாய் திறக்குது. ஆனால் இப்ப அந்த வாய் தெரியாமல் அண்ணர் செடிகொடியளாலை மறைச்சுப் போட்டார். பேந்து ஒருக்கால் திரும்பி வாற நேரத்திலை அடையாளம் தெரிய வேணும் எண்டு சொல்லி ஒருசில தடிதண்டுகளை வைச்சு மூடி  அடையாளமும் வைச்சிருந்தவர்.


" இந்த இடம் எப்பிடி இருக்கு எண்டதை மறக்கப் படாது. ஞாவகம் வைச்சிரு. அங்கை பார் அந்த பெரிய பாறையும், நாங்கள் படுத்திருந்த தேவதாரு மரத்தடியும். சிலநேரத்திலை நாங்கள் இங்கினை திரும்பி வரக்க கூடும். இல்லாட்டிப் போனால்......" அண்ணர் என்னவோ சொல்ல வெளிக்கிட்டவர் ஆனால் சொல்லி முடிக்காமல் அமைதியாய் விட்டார். நாங்கள் ரெண்டு பெரும் அவரவர் குதிரையிலை ஏறிப் பயணப் பட்டம்.  


அப்ப மரங்களின்ரை தலைப்புக்கு மேலாலை ஒரு வெண்புறா காட்டுறோசாப் பள்ளத்தின்ரை திக்காலை பறந்து போகக் கண்டம். சோபியா அக்கையின்ரை வெண்புறாவிலை ஒண்டாய்த் தான் அது இருக்க வேணும். 

"அது சோபியா அக்கையின்ரை பலோமா தான்." எண்டார் அண்ணர். என்னெண்டுதான் அடையாளம் பிடிச்சவரோ அனக்குத்  தெரியேல்லை.  

சோபியா அக்கையிட்டை இருந்து வியளம் வரும், வியளம் வரும் எண்டு நாங்கள் வெளிக்கிடுகிற வரையும் காத்திருந்தநாங்கள். அதெண்டால் நாங்கள் வெளிக்கிட்ட பின்னாலை எல்லோ வருகுது? அது நிச்சயம் பெத்தய்யாவின்ரை மத்தியாசு வளவுக்குத் தான் போகும். அங்கை குதிரை மாலுக்கு வெளியாலை இருக்கிற புறாக்கூட்டிலை போயிறங்கும். பெத்தய்யா அது கொண்டு வந்த வியளத்தை வாசிச்சு அறிவார். 


"சாய்!  ஒருநாள் முந்தி உந்தப் புறா வந்திருக்கப் படாதே? என்ன வியளம் எண்டதை அறிஞ்சு கொண்டு பயணம் கிளம்பி இருக்கலாம்." அண்ணர் கவலைப் பட்டார். ஆனால் இப்ப தெங்கிலின்ரை அரணக்காறங்கள் எல்லோ அண்ணரைத் தேடுறாங்கள். அதினாலை நாங்கள் இப்பிடித் தப்பியோட வேண்டிக் கிடக்கு. 


அரணக்காறங்கடை கண்ணிலை படாமல் ஆத்தங்கரைக்குப் போறதுக்குக் காட்டுக்குள்ளாலை ஒரு சுத்துப்பாதையிலை போனம்.  அப்ப அண்ணர்,

" கார்ல் குட்டி எக்கணம் நீ அந்தக் கறுமா அருவியைப் பார்க்க வேணும். கனாவிலை கூட அப்பிடி ஒரு அருவியைப் பார்த்திருக்க மாட்டாய்." எண்டவர்.
"  எப்பிடிப் பார்த்திருக்க முடியும்? நான்தான் கண்கொண்டு ஒரு அருவி எப்பிடி இருக்கும் எண்டு இதுநாள் வரை கண்டதில்லையே? அப்பிடி இருக்க என்னாலை எப்பிடி அது பற்றிக் கனாக் கண்டிருக்க  முடியும்?"எண்டு கேட்டன். 

சொல்லப்போனால் நஞ்சியாலா வருமட்டுக்கும் நான் ஒண்டும் பெரிசாய் ஒரிடமும் போய்வந்து, ஒண்டும் கண்டு அனுபவிச்சதில்லை தானே? இப்ப நாங்கள் குதிரைச் சவாரியிலை போற மாதிரி இப்பிடி ஒரு காடு?  ம் கும்!  கிடையாது. இது மாயாசாலக் கதையிலை வாறமாதிரி அடர்த்தியான இருட்டான ஒரு காடு. ஒரு ஒழுங்கான ஒற்றையடிப் பாதை கூட இல்லை. மரங்களின்ரை கிளை,கொப்பு,  கவர் எல்லாம் மேலிலை, முகத்திலை குத்துமாய்ப் போலை கண்டபடி நீட்டிக் கொண்டு இருந்துது. எண்டாலும் உதுக்குள்ளை வளைஞ்சு, நெளிஞ்சு, குனிஞ்சு, நிமிர்ந்து போறது ஒரு பைம்பலான விளையாட்டுப் போலை கிடந்துது. 


வெயில் வெளிச்சம் நேர்கோடாய் , கீறு, கீறாய் மரங்களை ஊடுருவி வந்துது. பறவையளின்ரை கலகலப்பு கேட்டுது. ஈரமான மரத்தின்ரை மணம், குதிரையின்ரை மணம் எல்லாம்  அந்தத் தருணத்திலை மனசுக்கு விருப்பமாய் இருந்துது. எல்லாத்தையும் விட அனக்குப் பிடிச்ச காரியம் அண்ணரோடை  இப்பிடிக் குதிரைச் சவாரி போறதுதான். புதுக் காத்து, மேலுக்கு இதமான குளிர்ச்சி இப்பிடிக் காடு இருந்துது. நேரஞ்செல்ல செல்ல சூடான காத்துக் கிளம்பினது. இண்டைக்கு எக்கணம் நல்ல வெக்கையாய்த் தான் இருக்கப் போகுது எண்டு நினைச்சன். 


இப்ப நாங்கள் காட்டுறோசாப் பள்ளத்தை விட்டுக் கனதூரம் வந்திட்டம். உசந்த மரக்காட்டுக்கு நடுவிலை ஒரு சின்ன வெளி. அதிலை ஒரு சின்ன சாம்பல் நிற வீடு. அதை வீடு எண்டு சொல்லிறதை விட ஒரு சின்னக் கொட்டில் எண்டு சொல்லலாம். நாலு சிவர் இருக்க ஒரேயொரு அறையாய் அமைஞ்ச ஒரு கொட்டில். அடுப்படி, கூடம், படுக்கைஅறை எல்லாமே ஒண்டுதான்.  ஆர்தான் இப்பிடி நட்டநடுக் காட்டிலை இருக்கிறது? புகைபோக்கியாலை புகை போச்சுது. வெளியாலை ஒரு சோடி வெள்ளாடு மேய்ஞ்சு கொண்டிருந்தது. 

" எல்பிரீடா எண்ட ஒரு ஆச்சிதான் இஞ்சை குடியிருக்கிறவ." எண்டு அண்ணர் சொன்னார்.
" கேட்டால் குடிக்க ஆட்டுப் பால் தருவா."

எங்களுக்கு ஆட்டுப்பால் குடிக்கக் கிடைச்சது. களைச்சு விழுந்து வந்த எங்களுக்கு அது திவ்வியமாய் இருந்துது. வாசல்படிக் கல்லிலை இருந்தபடி சாப்பிட்டம். எங்கடை அசம்பியிலை பாண் இருந்தது. எல்பிரீடா ஆச்சி ஆட்டுப்பால்கட்டியும் தந்தவ. வாற வழி வழிய நிறைய காட்டு யூர்குப்பார் பழம் ஆய்ஞ்சு வந்தநாங்கள். வயிறு மெத்தச் சாப்பிட்டம். 


எல்பிரீடா ஆச்சி ஒரு வயசுபோன, நல்ல குணமுள்ள, மொத்தமான கட்டை ஆச்சி.  ஒற்றை ஆளாய் அந்தக் காட்டிலை தன்னந் தனிய சீவிக்கிறா. அவவிட்டை நாலைஞ்சு வெள்ளாடும், கதைக்கப் பேசிறதுக்கெண்டு  சாம்பல் நிறத்திலை ஒரு பூனையும் நிண்டது.

"கடவுள் காக்க. என்னைச் சுற்றி ஒரு மதிலும் இல்லை." எண்டா ஆச்சி. அவவுக்குக் காட்டுறோசாப் பள்ளத்திலை கனபேர் பழக்கமாம். சுற்று மதில் வந்த பின்னாலை அங்கத்தையாலை ஒருத்தரும் போக்குவரத்து இல்லை. அப்ப ஒரு சங்கதியும் தெரிய வராது தானே? ஆரார் உசிரோடை இருக்கினம் , ஆரார் கறுமண்யாக்காவுக்கு அடிமைச் சேவகத்துக்குப் பிடிபட்டுப் போச்சினம், ஆரார் ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்திட்டினம் எண்டு அறிய விரும்பினா. அண்ணரும் சொல்ல வேண்டியதாய்ப் போச்சு. ஆனால் அண்ணர் ஒவ்வருத்தரையும் பற்றி மனவருத்தப் பட்டுத்தான் சொன்னவர். ஆச்சியும் கேட்டு மெத்தக் கவலைப்பட்டவ. 

" இப்பிடியும் ஒரு கெதி வந்துதே காட்டுறோசாப் பள்ளத்துக்கு! உந்தத் தெங்கில் எண்டவன் எண்டைக்குத் தான் போய்த் துலைவானோ? அந்த நாசமாய்ப் போற கத்துலா மட்டுக்கும் அவன்ரை கையிலை இல்லை எண்டால் இம்மளவும் நடந்திருக்குமே?" இடைசுகம் கைத் துண்டாலை கண்ணை மூக்கைத் துடைச்சா. அவ அழுதிருக்க வேணும் எண்டு நான் நினைச்சனான். அனக்கு அதைப் பார்க்க மனசுக்குச் சங்கடமாய் இருந்துது. பின்னை நான் எழும்பிப் யூர்குப்பார் பழம் ஆய்கிற சாட்டிலை அங்காலை எழும்பிப் போட்டன். அண்ணர் கனநேரமாய் இருந்து ஆச்சியோடை கதைச்சவர். பழம் ஆய ஆய என்ரை நினைப்பிலை ஒரு கேள்வி சுழண்ட படி. கத்துலா எண்டது என்னவாய் இருக்கும்? எங்கினை இருக்கும்? 


பேந்து கொஞ்சத்தாலை நாங்கள் ஆச்சிக்குப் போட்டுவாறம் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிட்டம். சூரியன் நடுவானத்திலை நெருப்புப் பந்துபோலை நிண்டது. கடலையை வறுத்த கணக்கிலை வெய்யிலின்ரை காங்கை மனிசரைப் போட்டு வறுத்தது. ஆத்தங்கரை கண்ணிலை பட்டுது. வெய்யில் வெளிச்சத்திலை ஆயிரங்கோடி குட்டிக்குட்டிச் சூரியன்கள் மினுங்கின மாதிரி ஆத்துத் தண்ணி மினுங்கிச்சிது. நாங்கள் நிண்ட இடம் நல்ல உசரம். ஆத்தங்கரை எண்டால் நல்ல குத்தெண்ட பொறிவிலை பணிய இருந்துது. ஆ....கா... என்னதொரு காட்சி! பறணைப் பழங்காலத்து நதிகளின்ரை ஆதிநதி பெருகிப் பாய்ஞ்ச வண்ணம்! கறுமா அருவியை நோக்கி அது சுழிச்சுக் கொண்டு பெருவெள்ளமாய் அடிச்சு வாங்கிக் கொண்டு ஓடின கெதி! பெரிய இடிமுழக்கம் போலை கறுமா அருவியின்ரை இரைச்சல் தூரத்திலை கேட்டுது. 


ஆத்திலை இறங்கிச் சூடு தணிய ஒரு தோய்ச்சல் போடலாம் எண்டு நினைச்சம். குதிரை ரெண்டையும் பக்கத்திலை இருந்த சின்ன வாய்க்காலிலை தண்ணி குடிச்சிட்டு அயலட்டையிலை புல்லு மேயட்டும் எண்டு அவிழ்த்து விட்டம். விடுவிடெண்டு உடுப்புக்களை அவிழ்த்து எறிஞ்சு போட்டு, அந்தப் பொறிவு சரிவான இறக்கத்திலை ஆத்தங்கரைக்கு இறங்கினம். கரையோரத்திலை நிறைய வில்லோ மரம் வளர்ந்து இருந்திச்சுது. ஆத்துக்கு மேலாலை நல்ல பெலமான கொப்புகள் வளைஞ்சு தொங்கிச்சுது. அந்தக் கொப்புகளைப் பிடிச்சபடி தான் தண்ணியிலை தேகத்தை நனைக்க வேணும். கைப்பிடி வழுகிச்சுது எண்டால் ஆத்தோடை போக வேண்டியது தான். 


எப்பிடி மரக்கொப்பைப் பிடிச்சபடி ஆத்துத் தண்ணியிலை தாண்டு எழும்பிறது எண்டு அண்ணர் தான் முதலிலை செய்து காட்டினவர்.       

"கொப்பை இறுக்கிப் பிடிச்சுக் கொள். கைவிட்டாய் எண்டால் கறுமா அருவிக்குத் தான் நினைக்க முன்னாலை போய்ச் சேருவாய்." எண்டு கவனம் சொன்னவர். நானும் என்ரை கைவிரல் மொழி எல்லாம் வெளிறத் தக்கனவாய் மரக் கொப்பை இறுக்கிப் பிடிச்ச படி ஊஞ்சலாடி ஊஞ்சலாடித் தண்ணியிலை தாண்டு எழும்பிக் குளிச்சன். இப்பிடி ஆபத்தும், பைம்பலுமான ஒரு குளியல் நான் ஒருநாளும் குளிச்சதில்லை. கறுமா அருவியை நோக்கித் தண்ணி இழுத்த இழுப்பிலை என்ரை இடுப்பிலை கட்டியிருந்த உள்ளுடுப்பு இழுவுண்டு போயிட்டுது.

பின்னை நான் மரக் கொப்பைப் பிடிச்சு மேலை ஏறிட்டன். அண்ணர் என்ரை கையைப் பிடிச்சு ஏற்றி விட்டார். ரெண்டு பெரும் ஆத்துக்கு மேலாலை இருந்த ஒரு கொப்பிலை இருந்த படி உன்னுயுன்னி ஊஞ்சலாடினம். பார்த்தால் நாங்கள் ஒரு பச்சை வீட்டிலை இருக்க,  தண்ணிக்கு மேலுக்கு அந்த வீடே ஊஞ்சலாடின மாதிரி இருந்திச்சுது. ஆத்து நீரோட்டம் எங்களுக்கு நேரை கீழை குதிச்சுக் கும்மாளம் போட்ட படி ஓடிச்சுது. 

"நான் ஒண்டும் ஆபத்தான ஆறு இல்லை! என்னட்டை வா! வந்து குளி!"     எண்டு எங்களை மயக்கி மருட்டிக் கூப்பிடுமாப் போலை இருந்திச்சுது. நான் கால்விரலுகளை மட்டும் நனைக்க விரும்பினன். நீரோட்டத்தின்ரை பெலம் கால் பெருவிரலிலை தெரிஞ்சது.  அப்பிடியே என்னை உருவி இழுக்குமாப் போலை! 

அப்ப தற்செயலாய் மேலை ஏற்றத்திலை பார்த்தன், பயந்து போனன். நீளம் நீளமான ஈட்டியோடை நாலு பேர் தெங்கிலின்ரை அரணக்காறங்கள் போட்டி போட்ட படி குதிரைச் சவாரியிலை வந்து கொண்டிருந்தான்கள். ஆறு போட்ட இரைச்சலிலை குதிரைக் குளம்படிச் சத்தம் எங்கடை காதிலை விழவே இல்லை. அண்ணரும் அவங்களைக் கண்டிட்டார். அவர் ஒண்டும் பயப்பிட்ட மாதிரி அனக்குப் படேல்லை. எங்களைத் தாண்டி அவங்கள் போகட்டும் எண்டு காத்திருந்தம். ஆனால் அவங்கள் ஆத்தின்ரை போக்குக்கு எதிராய்  எங்களைத் தாண்டி ஒரு கொஞ்சத் தூரம் மேலை போய்க் குதிரையளை நிற்பாட்டிக்  கீழை இறங்கினாங்கள். ஒருவேளை கொஞ்சம் ஆறிப் போகலாம் எண்டு அதிலை இறங்கினவன்களோ? இல்லை வேறை என்னத்துக்காயும் இறங்கினவன்களோ?


"அண்ணர்! என்ன நினைக்கிறீர்? எக்கணம் உம்மைத் தேடி வந்திருப்பாங்களோ?"

"சாய்ச் ...சாய்! உவங்கள் கறுமண்யாக்காவிலை இருந்து காட்டுறோசாப்பள்ளத்துக்குப் போறாங்கள். கறுமா அருவிக்குக் கிட்டவாய் ஒரு தொங்கு பாலம் இருக்கு. அதாலை தான் வாறாங்கள். தெங்கில் தன்ரை அரணக்காறன்களை அநேகமாய் அந்தப் பாலத்தாலை தான் அனுப்பி வைக்கிறவன்."
" வாறது போறது சரி. சரி கணக்காய் இந்த இடம் பார்த்து இறங்காமல் போயிருக்கலாமே?" 
அண்ணரும் நான் சொன்னதைத் தான் நினைச்சவராம். 
"எங்களைச் சந்திக்காமல் போனாங்கள் எண்டால் நல்லது." எண்டார் 

எல்லாமாய் ஆறு பேர் அரணக்காறர் எண்டு எண்ணிப் பார்க்கத் தெரிஞ்சது. ஆத்துப் பக்கம் கைகாட்டி என்னவோ பெலத்துக் கத்திக் குழறினபடி கதைச்சவங்கள். ஆத்தின்ரை இரைச்சலை மிஞ்சி அவங்கடை இரைச்சல் கேட்டது. ஆனால் என்ன சொன்னவங்கள் எண்டு ஒண்டும் முதலிலை விளங்கேல்லை. திடீரெண்டு அவங்களிலை ஒருத்தன் தன்ரை குதிரையை விட்டு இறங்காமல் அந்த எக்கச்சக்கமான பொறிவிலை ஆத்தங்கரையைப் பார்த்து வந்தான். பாவம் குதிரை அது பயந்து பயந்து பெரிய கயிட்டப்பட்டு இறங்கினது. மற்றவங்கள் கத்திக் கத்திக் கூப்பிட்டவங்கள்.

"போகாதை பெர்க்கு! மோட்டு வேலை பார்க்காதை. எக்கணம் ஆத்தோடை குதிரையும் போய்  நீயும் போகப்போறாய்!"

ஆனால் அந்த பெர்க்கு எண்ட வெருளி ஆரின்ரையும் கதையைக் கணக்கிலை எடுத்தால் தானே? அந்த மோடன் திருப்பிக் கத்தினவன்:

" அதையும் ஒருக்கால் பார்ப்பமே! எக்கணம் நான் அந்தப் பிட்டிக்குப் போய் உசிரோடை திரும்பி வரேல்லை எண்டு கண்டால் உண்ணாணை உங்கள் எல்லாருக்கும் கள்ளு வாங்கித் தாறேன்."   அப்பத் தான் ஒண்டைக் கவனிச்சன். அந்த மொக்கு என்ன செய்ய நினைச்சது எண்டதும் அனக்குப் பிடிபட்டுது. கரையிலை இருந்து ஒரு நாலு, அஞ்சு பாகம் தூரத்திலை ஒரு பிட்டி தண்ணிக்கு மேலாலை தலை  நீட்டிக் கொண்டிருந்தது. ஓ ..ஒ அந்தப் பிட்டிக்குப் போய்வரப் போகுதாமோ? மெய் மெய்யாய் இதுக்கு மண்டைக்குள்ளை ஒண்டும் இல்லை. உசிரோடை வராவிட்டாலாம் ...கள்ளு வாங்கிப் பரிமாறுவாராம்....  மற்றவைக்கு முன்னாலை தன்ரை வீரதீரக் கூத்தைக் காட்ட நினைக்குது. 

"ஐயோ உந்த மோடன் என்ன நினைச்சவன்? எதையும் பிடுங்கிப்  பறிக்கிற உந்த வெள்ளத்தைக் குதிரை பாவம் நீந்தித் தாண்டும் எண்டு நினைச்சவனே?" அண்ணர் குதிரையை நினைச்சுக் கவலைப் பட்டவர். பெர்க்கு தன்ரை தலைக் கவசம், கம்பளி மேலங்கி, பாதணி எல்லாத்தையும் உருவிப் போட்டான். ஐயோ கறுமத்தை ! நல்ல வடிவான கறுப்பு நிற இளந்தாரிக் குதிரை. குதிரை பாவம் தடுமாறித் தவிச்சது. சனியன் பிடிச்சவன், குதிரையின்ரை பிடரியிலை ஓங்கிக் குத்தினான். அதைக் கண்டவுடனை  அண்ணரிட்டை இருந்து " அக் " எண்டொரு விம்மல் சத்தம் கேட்டது. 


குதிரையை நிற்க விடாமல் கத்திக் குழறிக் கலைச்சு அடிச்சு ஏவி ஆத்திலை இறக்கிப் போட்டான். அது பாவம் கனைச்சுக் கதறிப் பயந்தபடி ஆத்து வெள்ளத்திலை இறங்கினது. பேந்து அது பாவம் கறுமம் எதிர்நீச்சல் போட தெண்டிச்சு ஏலாமல் தத்தளிச்சது. அதுகும் தன்னாலை ஏலுமான மட்டிலை தெண்டிச்சது. மரணபயம் அதின்ரை கண்ணிலை தெரிஞ்சது. பார்க்கப் பயமாய் பாவமாய் இருந்துது. பெர்க்கின்ரை மரமண்டைக்கு அப்பத்தான் தான் இறங்கினது உசிராபத்தான காரியம் எண்டது  விளங்கினது. 


கரை ஏறுறதுக்கு குதிரையை ஏவி அடிச்சவன். கறுமப் பட்ட சீவன் அது என்ன செய்யும்?  வெள்ளம் எண்டால் கறுமா அருவிக்கு வா வா எண்டு கொற இழுவையாய் இழுத்தது. உந்த பெர்க்கு எண்டவன் தண்ணியிலை அடிபட்டுப் போனால் போகட்டும். அவனுக்கு அது வேணுந்தான். கடவுளே பாவம் அந்தக் குதிரை தப்பி விட வேணும். குதிரையும் பெர்க்கும் எங்கடை திக்கிலை வெள்ளத்திலை அள்ளுப்பட்ட படி வந்தவை. எக்கணம் எங்களைத் தாண்டிப் போச்சினம் எண்டால் பேந்து அங்காலை எட்டிப் பிடிக்கிறதுக்கு ஒரு மரக் கொப்பும் ஆத்துக்கு மேலாலை வளைஞ்ச படி இல்லை. ஒரேயடியாய் போக்கறப் போக வேண்டியதுதான். அந்த மொக்கன் பெர்க்கு மரண பயத்திலை பேய் முழி முழிச்சான்.


அண்ணரைத் திரும்பிப் பார்த்தன், விறைச்சுப் போனன். பயக் கெடுதியிலை "ஐயோ!" எண்டு கத்தினன். இவர் அண்ணர் என்ன காரியத்திலை இறங்கிறார்? தன்ரை கால் ரெண்டாலையும் மரக் கொப்பை இறுக்கிப் பிடிச்ச படி தலைகீழாய் தொங்கினவர். பெர்க்கு அவரை தாண்டி ஆத்து வெள்ளத்தோடை அள்ளுப்பட்டு போகமுன்னம் எட்டி ஒரு கொத்திலை அவன்ரை தலைமயிரைப் பிடிச்சிட்டார். மெள்ள மெள்ள அவனை மேலை இழுத்தவர். கடவுளே! ஒரு மாதிரியாய் அவனும் ஒரு கொப்பிலை தொத்திப் பிடிச்சு ஏறிட்டான். அண்ணரின்ரை கவனம் முழுக்க இப்ப குதிரையிலை.

"பரி! பரி! வா குட்டி! வா குட்டி!" எண்டு ஆதரவாய் கத்திக் கூப்பிட்டார். அது பாவம் தன்னாலை ஏலுமான மட்டிலை கரைக்கு வர தெண்டிச்சது. உந்த வெருளி பெர்க்கு அதின்ரை முதுகுக்குப் பாரமாய் இப்ப இல்லை தான், எண்டாலும் அதாலை ஒண்டும் செய்ய ஏலாமல் தண்ணிக்குள்ளை தாழ வெளிக்கிட்டது. நல்லகாலம் அண்ணர் கடிவாளக் கொடியை எட்டிப் பிடிச்சிட்டார். கடிவாளக் கொடியைப் பிடிச்சுத் தன்னாலை ஏலுமான வரை மூச்சைப் பிடிச்சு இழுத்தவர். வாழ்வோ சாவோ எண்ட இழுபறிப் போராட்டமாய் இருந்துது. 

என்னாலை தாங்க முடியேல்லை. பெர்க்கைப் பார்த்து,

" மரம் மாதிரி நிற்காமல் போய் ஒரு கை குடன். உன்ரை குதிரையைத்  தானே காப்பற்றுறதுக்கு அண்ணர் உந்தப் பாடு படுகிறார்?"எண்டு கத்தினன். அவன் அண்ணருக்குக் கிட்டத் தான் பத்திரமாய் ஒரு கொப்பிலை இருந்தவன். உதவி ஒத்தாசை செய்யப் போறானாக்கும் எண்டு நினைச்சால் அந்த விழுவான், அண்ணருக்குக் கிட்டை குனிஞ்சு,
" பேசாமல் கையை விடு அது போகட்டும். மேலை காட்டிலை ரெண்டு குதிரை மேயுது. அதிலை ஒண்டை நான் பிடிச்சுக் கொண்டு போறன். பேசாமல் விடு." எண்டெல்லோ சொன்னவன் ? கொதி கோவம் வந்தால் மனிசருக்கு இல்லாத பெலம் எல்லாம் எங்கினையோ இருந்து வரும் எண்டு கேள்விப் பட்டிருந்தனான். அது மெய்தான் எண்டதை அப்ப அண்ணரிலை பார்த்தன். பெர்க்கு மோடன் உதவி செய்யாவிட்டாலும் அண்ணர் சமாளிச்சு ஒரு மாதிரி இழுத்துப் பறிச்சுக் குதிரையைக் காப்பாற்றிப் போட்டார். நாலு காலும் பதறி உதற ஒரு பாடாய்க் குதிரை கரையேறி விட்டுது.

பேந்து பெர்க்குக்கு நல்ல பேச்சுக் குடுத்தார்.

"மரமண்டை மாதிரி மேல் வீடு கழண்ட கதை எல்லோ பறையிறீர்? என்ரை குதிரையை நீர் களவெடுத்துக் கொண்டு போறதுக்கோ உம்மை ஆத்து வெள்ளத்திலை இருந்து காப்பாற்றினநான்? ஒரு மனச்சாட்சி, ஒரு வெக்கம் எண்டு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே இப்பிடிக் கதைக்க? " 

உந்தப் பேச்சைக் கேட்டு பெர்க்கு வெக்கப் பட்டிருக்கலாம். நான் அவன்ரை மூஞ்சை எப்பிடி இருந்தது எண்டதைக் காணேல்லை. அவன் ஒண்டுமே பறையேல்லை. எங்களைப் பற்றி ஆர், எவர் எண்ட கதை கிதை , விளப்பம் ஒண்டும் கேட்கேல்லை. ஒரு ஒற்றைச் சொல் நன்றி கூட பறையேல்லை. கால் நடுங்கின படி நிண்ட குதிரையைத் தன்ரை பாட்டிலை பேசாமல்  கூட்டிக் கொண்டு மேலுக்கு நிண்ட தன்ரை கூட்டாளிமாரிட்டை போவிட்டான். கொஞ்சத்தாலை பார்த்தால் எல்லாருமே போவிட்டான்கள்.


நாங்கள் ரெண்டு பேரும் கறுமா அருவியடிக்குப் போனம். என்ன ஒரு பயங்கரமான வடிவு! "கடு பொடு " எண்டு ஒரு விதமான இடிமுழக்கம் போல இரைச்சல்..... வெள்ளைப் புகை கிளம்பின கணக்கிலை தூவானம் ..... அயலட்டை எல்லாம் அந்தத் தூவானம் நனைச்சடிக்க... அதிலை நனைஞ்சதாலை தண்ணி சொட்டச் சொட்ட நிண்ட  மரஞ்செடி, பாசி பிடிச்ச பாறை ....இப்பிடியிருக்க..... கறுமா அருவி போய் விழுகிற அடி எங்கை எண்டு தேடினால்..... அடி வயிறு கூசிக் கொண்டு வந்தது. அது எங்கினையோ கண்ணுக்கு எட்டாத தாழ்ப்பத்திலை இருட்டான பாதாளத்துக்குப் போய் விழுகுது.


கொஞ்சத்தாலை இருட்டத் தொடங்கினது. காற்றுக்கு ஒதுக்காக தூவானம் நனைக்காத ஒரிடம் பார்த்து பாசறைத்தீ மூட்டினநாங்கள். அந்த இராத்திரி நாங்கள் மூட்டின பாசறைத்தீ கணக்கிலை எந்த ஒரு காலத்திலையும், எந்த ஒரு உலகத்திலையும் இன்னுமொரு பாசறைத்தீ நிச்சயமாய் எரிஞ்சிருக்க மாட்டுது. 


அது ஒரு பயங்கரமான இடம். மனசுக்கு ஒரு திடுக்காட்டத்தை தந்துது. அதேநேரம் எந்த ஒரு வானம், எந்த ஒரு பூமி எங்கினையும் இப்பிடி ஒரு நல்ல வடிவான இடத்தைப் பார்க்கேலாது எண்டு நான் நினைச்சன். சுற்றவர இருந்த மலையளும்,வெள்ளம் பெருகிப் பாய்ஞ்ச ஆறும், ஆவேசமாய்க் குதிச்ச அருவியும் எல்லாமே 

பெரீ ஈ ஈ சாய் இருந்துது. அனக்கெண்டால் என்னவோ கனாவிலை மிதக்கிற மாதிரி ஒரு உணர்வு. அண்ணருக்கு சொன்னன்:
"உது ஒண்டும் உண்மை எண்டு நம்பேலாமல் கிடக்கு. உதெல்லாம் எதோ ஒரு பறணைப் பழங்காலத்திலை ஆரோ எவரோ கண்ட கனா ஒண்டின்ரை ஒரு பகுதி. "
அண்ணர் ஒரு புன்சிரிப்பு சிரிச்சார்.

அப்ப நாங்கள் கறுமண்யாக்காவையும், நஞ்சியாலாவையும் ரெண்டாய்ப் பிறிச்ச பறணைப் பழங்காலத்து ஆதித்தொன்ம நதிக்கு மேலாலை தெங்கில் கட்டுவிச்ச தொங்குபாலத்திலை நிண்டம்.  அந்தப் பாலம் கறுமா அருவிக்கு ஒரு சொட்டுத் தூரம் தான் தள்ளி இருந்தது. 


அண்ணரை ஆச்சரியத்தோடை கேட்டன்,

"எப்பிடித் தான் இந்தப் பாலத்தை அதுகும் இப்பிடியொரு படுபயங்கரப் பள்ளத்துக்கு மேலாலை கட்டி முடிச்சவங்கள்?"
"என்னெண்டு எனக்கும் அறிய விருப்பந்தான். உதைக் கட்டி ஒப்பேத்திறதுக்கு முன்னாலை எத்தினை உசிர் பலியாச்சோ? ஆவெண்டு அலறின படி ஆத்து வெள்ளத்திலை விழுந்து அள்ளுப் பட்டு கறுமா அருவியிலை எத்தினை ஆத்துமம் அடங்கிச்சுதோ?" எண்டு சொல்லி அண்ணர் இரக்கப்பட்டவர். உதைக் கேட்க அனக்கு தேகமெல்லாம் பதறினது. அந்த ஆவெண்ட அலறலின்ரை எதிரொலி எல்லாம் மலைச்சிவரிலை பட்டுத் தெறிச்சது மாதிரி அனக்கு கிடந்துது.

தெங்கிலின்ரை தேசத்துக்குக் கிட்ட நாங்கள் வந்திட்டம். பாலத்தின்ரை மறுகரையைப் பார்த்தால்.... அங்கினை ஒரு பாதை வளைஞ்சு, நெளிஞ்சு மலையிலை ஏறிப் போகுது. கறுமண்யாக்காவிலை இருக்கிற அந்தப் பறணைப் பழங்காலத்து ஆதி மலை!

"அந்தப் பாதையைப் பிடிச்சுப் போனால் தெங்கிலின்ரை கோட்டை வரும்." எண்டார் அண்ணர். அனக்கு இன்னும் தேகம் பதறினது. நாளைக்கு என்னெண்டாலும் நடக்கட்டுக்கும், இப்ப இந்த இராப் பொழுது அண்ணரோடை பாசறைத்தீயிலை குளிர் காய்ஞ்சபடி நிம்மதியாய்க் கழியட்டுக்கும் எண்டு நினைச்சன். 

பாசறைத்தீக்குப் பக்கத்திலை போய் இருந்தன். கறுமா அருவியைப் பார்க்கவும் பிடிக்கேல்லை, தெங்கிலின்ரை தேசத்துக்குப் போற பாதையைத் தொடங்கிற அந்தப் பாலத்தைப் பார்க்கவும் பிடிக்கேல்லை. கொழுந்து விட்டெரியிற அந்த நெருப்பையும், படபடத்து மேலை மலையைப் பார்த்துப் பறக்கிற பொறியையும் பார்த்தபடி இருந்தன். பார்க்கப் பார்க்க வடிவாயும் ஒரு வித பயங்கரமாயும் இருந்துது. சொலித்தும் மங்கியும் மாறி மாறி தெரிஞ்ச அந்த நெருப்பு வெளிச்சத்திலை அண்ணரின்ரை வடிவான, இரக்கமுள்ள முகத்தைப் பார்த்தன்; கொஞ்சம் தள்ளி ஓய்வாய்  நிண்ட குதிரை ரெண்டையும் பார்த்தன்.


"முந்தின தரம் நான் மூட்டினதை விட  இந்தத் தரம் மூட்டின பாசறைத்தீ இன்னுந் திறமாயிருக்கு. ஏனெண்டால் அண்ணர் உம்மோடை எல்லோ நானும் இப்ப நிற்கிறன்." எண்டு சொன்னனான். எங்கினைதான் நான் நிண்டாலும் அண்ணரும் என்னோடை நிற்கிறது ஒரு வித பாதுகாப்பு உணர்வைத் தந்தது. பூமி நச்சத்திரத்திலை நாங்கள் சீவிச்ச நாளையளிலை, உந்தப் பாசறைத்தீ  மூட்டிற நடப்புப்  பற்றி கனக்கக் கதை அண்ணர் அனக்குச் சொன்னவர் தானே? அந்தக் கதை எல்லாம் மெய் மெய்யாய் இப்ப அவரோடை சேர்ந்து அனுபவிக்கிறது அனக்கு ஒரு வகையிலை பெரிய புளுகமாய்த் தான் இருக்கு.


"ஞாவகம் இருக்கோ? அண்ணர்! பாசறைத்தீ பற்றி, மாயாசாலக் கதையள் உருவாகின காலங்கள் பற்றி எல்லாம் முன்னை ஒரு நேரம் சொன்னநீர் எல்லே?" எண்டு அண்ணரைக் கேட்டன்.

"ம்! சொன்னநான் தான். ஆனால் இஞ்சை நஞ்சியாலாவிலை இப்பிடியான பயங்கர சூனியக் கதையளும் உருவாகக் கூடும் எண்டு நான் அந்த நேரம் நினைச்சும் பார்க்க இல்லை." எண்டு பெருமூச்சு விட்டார் அண்ணர்.

"இப்பிடியே ஒரு மாற்றமும் இல்லாமல் நெடுகிலும் இருந்திடுமோ?" நான் கவலைப் பட்டன். அண்ணர் கொஞ்ச நேரம் ஒண்டும் பறையாமல் நெருப்புப் பொறியைப் பார்த்த படி இருந்தவர். பேந்து  

" உப்பிடியே நெடுகிலும் கேடுகாலம் மாறாமல் போய்விடாது. கடைசிப்போர் எண்டு ஒண்டு வரும். அதுக்குப் பிறகு, கடலும் கலங்கித் தெளிஞ்ச கணக்கிலை எல்லா தரித்திரியமும் விலகி  நஞ்சியாலாவுக்கும் ஒரு விடிவு காலம் வரும். அப்ப உருவாகப் போகிற கதையள் எல்லாம் நல்ல கதையாய், ஒரு ஆய்க்கினை அவத்தை தராத கதையாய், வடிவான பைம்பல் கதையாய் அமையும். அப்ப பார்த்தால் நஞ்சியாலாவிலை முன்னத்தையைப் போலை வாழ்க்கையை நல்ல மனநிம்மதியோடை வாழலாம்." எண்டு சொன்னார். 

தீ கொழுந்து விட்டு எரிஞ்சது. அந்த வெளிச்சத்திலை அவரின்ரை முகத்திலை எம்மளவு களைப்பும், கவலையும் இருக்குது எண்டு கண்டன்.

"ஆனால் சீனியப்பு! கடைசிப்போர் எண்டது ஒரே கொலை, வெட்டு, குத்து, சாவு, இழவு,செத்தவீடு எண்டு இனி இல்லை எண்ட பயங்கரக் கதையாய்த்தான் அமையப் போகுது. அதை ஒர்வார் தான் கொண்டு நடத்த வேணும்; நானில்லை. என்னதான் போர் எண்டாலும் கொலை செய்யிற அளவுக்கு நானில்லை." எண்டார், அண்ணர்.
"இல்லை அந்த அளவுக்கு நீர் போக மாட்டீர்" மனசுக்குள்ளை நினைச்சன். 

" அது சரி! ஏன் அந்தப் பெர்க்கு எண்டவனைக் காப்பாற்றினநீர்? அது என்ன நமக்கு நன்மை தருகிற காரியமே?" எண்டு கேட்டன்.

" அவனை காப்பாற்றினதாலை எங்களுக்கு நன்மை நடக்குமோ இல்லை தின்மை நடக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னதான் பகையாளி எண்டாலும் உசிராபத்தான நிலைமையிலை இருக்கிறவனைக் காப்பாற்ற வேண்டியது ஒரு மனிசனின்ரை கடமை. இல்லை எண்டால் நான் ஒரு மனிச சென்மம் இல்லை; வெறும் புழுக்கைக்குச் சமம்."
"எண்டாலும் ஒருக்கால் யோசிச்சுப் பாருமன்! தற்செயலாய் அவன் வந்து உம்மைப் பிடிச்சுக் கொண்டு போயிருந்தால்.....?" நானும் விடேல்லை.
"ஓ அப்பிடித்தான் பிடிச்சுக் கொண்டு போயிருந்தாலும், சிங்கநெஞ்சனைத் தானே பிடிச்சுக் கொண்டு போயிருப்பான்? ஒரு புழுக்கையைப் பொறுக்கிக் கொண்டு போயிருக்க மாட்டான் எல்லோ!"

பாசறைத்தீ கொஞ்சம் கொஞ்சமாய் அணைஞ்சு போனது . முதலிலை மங்கல் வெளிச்சத்திலை சுற்று வட்டாரம் எல்லாம் ஒரு மென்மையான, ஆதரவான தோற்றமாய் தெரிஞ்சது. பேந்து எல்லாம் ஒரே மையிருட்டு. ஒரு சின்ன பொறி மினுங்கல் வெளிச்சம் கூட இல்லை. கறுமா அருவியின்ரை பேயிரைச்சல் மட்டும் அந்த மையிருட்டுக்குள்ளை ஒரு பழக்கப் பட்ட துணை போலை கூட இருந்துது. 


அண்ணரை நல்லாய் நெருங்கி ஒட்டினபடி  இருந்தன். ரெண்டு பேரும் அந்த மையிருட்டுக்குள்ளை, பாறைச்சிவரிலை சார்ந்து இருந்து கொண்டு கதைச்சம். அனக்கு அந்தநேரம் ஒண்டுக்கும் பயமிருக்கேல்லை தான், எண்டாலும் என்னவோ சொல்லத் தெரியாத ஒரு குழப்பத்திலை மனசு கிடந்தது அல்லாடினது. நாங்கள் கொஞ்சத்துக்கு எண்டாலும் கண்ணுறங்க வேணும் எண்டு அண்ணர் சொன்னவர். 


அனக்கெண்டால் மனக்குழப்பத்திலை நித்திரையும் பிடிக்கேல்லை, கதைக்கவும் பிடிக்கேல்லை. உந்த மனக்குழப்பம் ஒண்டும் இருட்டை கண்டு கிளம்பேல்லை. ஏதோ என்னவோ வேறை ஒண்டு. என்னெண்டு தான் அனக்கும் பிடிபடேல்லை. இம்மளவுக்கும் அண்ணரும் அனக்குப் பக்கத்திலை தான் இருந்தவர்.


இருந்தாப் போலை எங்களுக்கு மேலாலை கறுமண்யாக்காப் பக்கமாய் ஒரு மின்னல் மின்னினது. மலைச்சிவர் நடுங்க இடி முழங்கினது. எக்கணம் புயல் அடிக்கப் போகுதோ? திரும்பவும் பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம மலையளுக்கு  இடையாலை இடி முழங்கினது. அந்த இடி முழக்கத்திலை கறுமா அருவியின்ரை பேயிரைச்சல் கூட காதிலை விழேல்லை. மாறி மாறிக் கிளம்பின மின்னல் எல்லாம் முந்தினதைப் பிந்தினது கலைச்சுப் பிடிச்ச சீர். இடைக்கிடை தீப்பிடிச்சு எரிஞ்ச மாதிரி மின்னல் தெரிஞ்சது. மின்னல் வராத இடைவெளியிலை பறணைப் பழங்காலத்து இரவு நேரத்து இருட்டு வந்து போர்த்தின கணக்கிலை ஒரே மையிருட்டு.


திரும்ப ஒரு மின்னல் கிளம்பிச்சுது, அனல் தெறிக்க நல்ல வெளிச்சமாய், நாலைஞ்சு நொடி நிண்டு நிலைச்சபடி!  உதென்ன ஒரு வினோதமான மின்னல் வெளிச்சமாய்க் கிடக்குது? அந்த வெளிச்சத்திலை சுற்று வட்டாரம் முழுக்க பகல் வெளிச்சமாய் சகலதும் தெரிஞ்சது. 

அந்த வெளிச்சத்திலை நான் கண்டது கத்துலா! அய்யோ கத்துலா!

                                    ( கொஞ்சம் பொறுங்கோ! பேந்து மிச்சக் கதைக்கு வாறன்.)

சொல்விளக்கம்:
அண்டிரவு- அன்றிரவு 
வெள்ளாப்பு- வெளிச்சம் பரவும் அதிகாலைப் பொழுது 
முழிப்பு- விழிப்பு 
எக்கணம்- எக்கணமும் - எந்த நேரத்திலும் 
சாதுவாய்- மெதுவாய் 
சுவாத்தியம் - மனநிறைவு 
தன்னிட்டவாரம் - தன்விருப்பப் படி 
வெளிவெட்டை < வெட்டவெளி 
விட்டாத்தி< விட்டாற்றி - இளைப்பாறுகை 
மரப்பத்தை< மரப்பற்றை-மரப்புதர் 
சீக்கை- சீழ்க்கை 
பங்கார்< பங்கை பார்- அங்கே பார் 
வியளம்- சேதி, தகவல் 
சாய்! - சே!
மேலிலை< மேலிலே- உடம்பிலே 
வெக்கை- வெப்பம், சூடு 
காங்கை- வெயில் வெக்கை 
திவ்வியமாய்- அமுதமாய் 
மொத்தமான, தொக்கையான - தடித்த 
கட்டை- குள்ளம் 
அங்கத்தையாலை- அங்கிருந்து 
அசம்பி - பயணிகள் தோட்பை 
மெத்த- நிறைய
யூர்குப்பார் பழம் - jordgubbar பழம் - stawberry  பழம் 
தாண்டு < தாழ்ந்து- அமிழ்ந்து 
கைவிரல் மொழி- கைவிரல் கணு, கைவிரல் மூட்டு 
இழுவுண்டு= இழு+உண்டு- இழுபட்டு 
உன்னியுன்னி- உந்தியுந்தி 
மோட்டு வேலை- மூட வேலை
வெருளி- சோளக்கொல்லைப் பொம்மை,
                 தோட்டத்தில் பறவைகளை, மிருகங்களைப் பயப்படுத்தக் கட்டிவைக்கும் பொம்மை, 
                  மூளையற்ற பேயன்  
மோடன்- மூடன் 
பிட்டி- திட்டி 
தெண்டித்தல்- முயற்சித்தல்  
மேல்வீடு கழண்ட கதை - மூளை இல்லாத பேச்சு 
தாழ்ப்பம்- ஆழம்
ஒப்பேத்திறது<  ஒப்பேற்றுவது- செய்து முடிப்பது 
பேந்து< பெயர்ந்து - பின்பு 
அல்லாடினது- அலைந்தது 
பிடிபடுதல்- விளங்குதல், சண்டைபிடித்தால் This entry was posted on 5:37 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: