Thursday, August 4, 2011

பின் தங்கிய சிறுமியிடமிருந்து.....




மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!


ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்



வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்











எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்



நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும்
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை


கற்றுத் தாருங்களெனக்கு


கொம்புகளும் விசிறிகளுமாகப்
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
வீற்றிருந்தவாறு
தீராச் சிக்கல் தரும்
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்


எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்



நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால்
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?


என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?

ஃபஹீமாஜஹான்
2011.02.21

6 comments:

  1. நோர்வே நாட்டில் குழப்பமான பிள்ளைகளுக்காக புறம்பான கல்விச்சாலைகள் அமைத்துப் பிரித்து வைக்கும் முறையை நீக்கி, அனைவருமே சமம் எல்லோருக்கும் ஒரே பள்ளிக்கூடம் என்பதும், "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதும் அடிக்கடி ஆட்சிக்கு வரும் நோர்வேத் தொழிலாளர் கட்சிக் கொள்கை. அதன்படிக்கு இப்படியான பிள்ளைகளையும் அரவணைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமைவான பாடத்திட்டத்தின் படி கல்வி அளிக்கப் படுகிறது.எனது பணிகளில் அப்படியான பிள்ளைகளையும்
    வழிநடத்திச் செல்வதும் அமைகிறது. எனவே எனக்கு இந்தக் கவிதை நன்றாகப் பிடிக்கிறது.

    ReplyDelete
  2. பஹீமா! நீங்கள் கட்டாயம் அமீர்கானின் இயக்கத்தில் உருவான “tAAre zameen Par என்ற ஹிந்திப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படமும் கூட.

    ReplyDelete
  3. வாருங்கள் ந.குணபாலன் அவர்களே,
    "மேசைமீது உருண்டோடும் பென்சிலை
    "ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
    என்னுலகத்தைச் சரிசெய்தபின்
    எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
    எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
    உங்களால் முன்வைக்கப் படுகின்ற
    வினாக்களைச் செவியுற்று
    வெகுவாகக் குழம்புகிறேன்
    கரும்பலகையின் இருண்மைக்குள்
    கண்ணெறிந்து தோற்கிறேன்"
    என்ற வரிகள் வகுப்பறையொன்றில் நான் கண்ட சிறுமியொருத்தி பற்றிய நேரடிப் பதிவு.

    "இப்படியான பிள்ளைகளையும் அரவணைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமைவான பாடத்திட்டத்தின் படி கல்வி அளிக்கப் படுகிறது"
    இங்கு அத்தகைய விஷேட திட்டங்கள் இல்லை என்பதும் வளங்கள் குறைந்த பின்தங்கிய பள்ளிக் கூடங்களிலேயே இத்தகைய பிள்ளைகள் அதிகம் இருப்பதும் எமக்கிருக்கும் பிரதான சவால்.
    பாடசாலைக் கற்பித்தலின் போது பின்தங்கிய பிள்ளைகளுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி கேட்கப்பட்டாலும் எமது நாட்டுக் கல்வித்திட்டத்தின் படி பின்தங்கிய பிள்ளைகளுக்கான விஷேட நடைமுறைகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை.

    தாங்கள் கூறியபடி நோர்வே நாட்டில் நடைமுறைப்படுத்துவதைப்போல இவர்களுக்காக அமையப்பெற்ற பாடத்திட்டங்களும் பரீட்சைகளும் இருப்பின் எமது பள்ளிக்கூடங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்.

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாருங்கள் மணிமேகலா,
    "நீங்கள் கட்டாயம் அமீர்கானின் இயக்கத்தில் உருவான “tAAre zameen Par என்ற ஹிந்திப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்"

    பார்த்தேன் பார்த்தேன்.
    பரிசு கிடைத்த சந்தர்ப்பத்தில் அந்தச் சிறுவன் ஆசிரியரைக் கட்டிணைத்துக் கொண்டு அழும்போது பார்த்துக் கொண்டிருந்த என் கண்ணிலும் கண்ணீர்.

    எனது பாடம் கணிதமாக இருப்பது தான் பள்ளிக்கூடத்தில் எனக்குள்ள மிகப் பெரிய துயரம் :(

    நன்றிகள் மணிமேகலா.

    ReplyDelete
  5. கிண்ணியா எஸ்.பாயிஸா அலிAugust 12, 2011 at 2:07 AM

    பிள்ளைகளையும் அரவணைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமைவான பாடத்திட்டத்தின் படி கல்வி அளிக்கப் படுகிறது.எனது பணிகளில் அப்படியான பிள்ளைகளையும்
    வழிநடத்திச் செல்வதும் அமைகிறது.

    வகுப்பறையொன்றில் நான் கண்ட சிறுமியொருத்தி பற்றிய நேரடிப் பதிவு.



    மிகவும் பின் தங்கிய பாடசாலைகளில் கற்பிக்கும் என் போன்றோர் எதிர்கொள்ளும் அநேகமான பிரச்சனைகளே சகோதரி பஹீமாவுடையதும் என்பது புரிகிறது.
    இங்கு பின்தங்கிய பிள்ளைகளுக்கான விஷேட நடைமுறைகள் எதுவும் நடைமுறையில் இல்லை.இடைவிலகலைக் கட்டுப் படுத்துவதும் எப்படிஎனவும் தெரியவில்லை.இதே உணர்வோடு எழுதப் பட்டதே எனதுஇக்கவிதைகளும்.சகோதரி பஹீமாவுக்கும் சகோதரர் குணபாலனுக்கும் என் வாழ்த்துக்கள்.

    1.கடைசி இருக்கை


    மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்
    சிறு உடைசல்களோடுமாய்
    எல்லா வகுப்பறைகளுக்குள்ளும்
    உட்கார்ந்திருக்கிறது
    ஒரு கடைசி இருக்கை.
    எண்ணெய் வரண்டும் செம்மை கலைந்துமான
    பரட்டைத் தலையோடும்......
    சொட்டுநீலம் சீராய் பரவிடாத
    சுருக்கம் கலைந்திடாத சீருடையோடும்...

    நிறமுதிர்ந்தும் பளபளப்பு கரைந்ததுமான ஷூக்களோடும்....
    பாதிசோகமும் மீதிமுரட்டுப் பிடிவாதமுங் கலந்த
    முகமணிந்தபடியுமாய்....
    எப்போதுமேயதில் புதைந்திருக்கிறான்
    அக்கதிரையின் சொந்தக்காரன்.
    இதுவரை அணையாதெரிந்த
    இனவன்முறையின் ஏதாவதொரு கிளைத்தீயிலோ
    இல்லையேல் வேறெத் தழலிலுமோ
    பொசுங்கிப்போன தம் வாழ்வெண்ணியே
    பேதலித்துக் கிடக்கிறாளோ
    அவனது விதவைத்தாய்.

    கூரையில் மிதக்கும்
    நிறைவேறாக் கனவுகள் யாவையுமே
    ஒரேயொரு அதட்டலுக்குள்
    புதைத்தவாறே பதகளிப்போடு
    கிளரத் தொடங்குவான்
    ஸிப்பறுந்த தனது புத்தகப்பையை
    குடியிருப்பிலிருந்தும்
    மிகத்தூரமாய் முளைத்திருக்குமொரு
    எல்லைப்புறக்குடிசைபோலவே
    எல்லா செயற்பாடுகளிலும்
    தன் சகபாடிகளை விட்டும்
    ஒதுங்கியே நிற்கிறான் அல்லது
    ஒதுக்கப் பட்டிருக்கிறானவன்.

    இவ்வாறே
    ஒவ்வோர் பாடவேளையிலும்
    பின்னூட்டலுக்கும் விசேட பரிவுக்குமான
    தன்னிலைப்பாட்டினை
    மருளும் விழிகளினூடே
    ஒழுகவிட்டபடி
    அன்பையும் கருணையையும்
    அவாவி நிற்குமோர்
    பிஞ்சு இதயத்தை
    எப்போதுமே சுமந்தபடி
    எல்லா வகுப்பறைக்குள்ளும்
    உட்கார்ந்திருக்கிறது
    ஒரு கடைசி இருக்கை
    கிழிந்த சிப்புடனோ அல்லது
    பொத்தான் அறுந்த சட்டையுடனோ.

    கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
    2009.04.02





    2.கருஞ்சுவரில் குழாய் வரைந்து..


    ஆவலை மின்னவிட்டவாறே
    இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.
    எப்போதும் போலே
    எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு

    முழுமைக்கான கரகோஷங்களுக்காய்
    நடனமாடிய விரல்களிலிருந்தே
    எனை நோக்கியும் நீள்கின்றன
    சுட்டு விரல்கள்

    இனியுமென்ன
    சுரண்டித் தெரியும்
    கடைக் கத்தரிக்காய் ஆகிற்றென்
    கற்பித்தல்.

    இல்லாத இடைவெளி வேண்டி
    கிளறப் படுகின்றன
    ஆவணக் கோப்புகள்.

    துவக்க வருஷத்தின்
    பேறு கால விடுமுறை நாட்களோ
    இல்லை
    நிறைந்து
    முந்தானைக்கு மேலாயும் கசிந்த
    செல்லக் குழந்தையின் கதறல்

    துடைத்த நிமிஷத் துளிகளோ
    மிகப் பெரும் நேரத் திருட்டாய்
    உணரப் படுகிற
    இக்காலங்களுக்குள்
    கணக்கில் வருவதேயில்லை
    அதற்கான பதிலீடுகள்.

    உண்ணப் படாமலேயே குவிந்தழுகும்
    பணக்கார வீட்டுச் சமையலறைபோலே
    பல ஆய்வறைகள்
    தூசித்துத் தூங்கையிலே

    கருஞ் சுவரில் குழாய் வரைந்து……
    காற்றிலேதான் செய்துவித்த
    பரிசோதனைகள் யாவுமே
    பயணப் பட்டிருக்குமா
    பரீட்சை விடைத்தாள் வரைக்குமென்ற
    வினாவுக்கு மட்டும்
    யாரிடமுண்டு விடை.

    இது எனக்கான நேரம்
    இரைச்சலாய் மேலெழும் கோபமாயோ
    இல்லை
    கண்ணீராய் வழியும் சாபமாயோ
    பதிலை எதிர்பார்த்திருந்த
    பதட்டமான கணங்களுக்குள்
    மிக மௌனமாகவே
    மீட்டிக் கொண்டிருக்கிறேன்
    பேரறியா அந்தச் சீனக் கவிஞனின் வரிகளை..
    நான் கேட்கிறேன் -மறக்கிறேன்.
    நான் பார்க்கிறேன்- உணர்கிறேன்
    நான் செய்கிறேன்- விளங்கிக்கொள்கிறேன்.....

    கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
    2009.01.13

    ReplyDelete
  6. கிண்ணியா பாயீஸா அலி, உங்கள் ’கடைசி இருக்கை’ என்ற கவிதை மிக அருமையாக இருக்கிறது.சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.

    உண்மையில் பிளிந்த சோகத்தை சாறாக்கி நெய்யப்பட்டிருக்கிறது கவிதை.

    உங்கள் கவிதைகளை இங்கு வந்து பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

    ReplyDelete