Friday, October 22, 2010

உமக்கு அவ்வளவு "விளப்பம்" இல்லை


"தம்பி! உமக்கு இதில் அவ்வளவு விளப்பம் இல்லை, பெரியாக்கள் கதைக்கேக்க இடையில வராதையும்"

ஊர்ப்பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் பாய்ந்து முந்திரிக்கொட்டையாய் நாமும் ஏதாவது கருத்துச் சொல்ல விழைந்தால் அந்தப் பெரியவர்களிடம் இருந்து கிட்டும் விமர்சனம் இப்படியாக இருக்கும்.

விளப்பம் என்பதற்கு குறித்த விடயம் குறித்த ஆழமான அறிவு, அல்லது அந்த விஷயம் பற்றிய பின்புலம் தெரிதல் போன்றதான ஒத்த கருத்துக்களைச் சொல்லலாம்.

"இதில எனக்கு அவ்வளவு விளப்பம் இல்லை, என்னை விட்டுடுங்கோ"
இப்படியான மறுமொழியை சாதாரணமாக நம்மூர் ஆட்களிடம் கேட்கக்கூடியதாக இருக்கும். அதாவது
ஏதாவது சிக்கல் தரக்கூடிய சமாச்சாரம் என்றால் அதில் ஏதாவது அரைகுறையாகக் கருத்துக் கூறப்போய் ஏன் சிக்கலில் மாட்டவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடாக அது அமையும்.

அதே சமயம் "இந்த விஷயத்தில் எனக்கு நல்ல விளப்பம் " இப்படியான எதிர்க்கருத்தாக அமையும் சொல்லாடல்களைப் பேச்சுவழக்கில் காண்பது அரிது. அதற்குப் பதிலாக
"எனக்கு இதைப்பற்றி நல்லாத் தெரியும்" என்பதான சொல்லாடலே பதிலீடாகப் பாவனையில் இருக்கின்றது.

ஈழத்தில் பரவலாகப் புழங்கும் விளப்பம் என்ற சொற்பதத்தை மலையாளிகள் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தவர் இந்தச் சொல்லைத் தம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்துகின்றார்களா என்பதை தமிழகத்து நண்பர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.

14 comments:

  1. எளப்பம் --- எளக்காரம் அபப்டிங்கற ரீதியில பயன்படுத்துவாங்க எச்சாம்பிள் என்ன தம்பி உனக்கு என்னைய பார்த்தா ரொம்ப எளப்பமா போச்சா/எளக்காரமா போச்சான்னு :)

    ஆனா விளப்பம் - இல்லையே!

    ReplyDelete
  2. ஆயில்யன்

    சரி வேறு எங்காவது தமிழகத்து ஊர்களில் பயன்படுத்தி இருக்கிறார்களா பார்ப்போம்

    ReplyDelete
  3. "விளக்கம் இல்லை" என்ற சொல் தான் மருவி "விளப்பம் இல்லை" என்று வந்திருக்குமோ ?

    ReplyDelete
  4. மாயா

    உங்கள் விளக்கம் பொருந்துவதாகத் தான் இருக்கு ;)

    ReplyDelete
  5. விளம்புற புத்திக்கூர்மைய விளப்பமென்டு சொல்வினம்.. எங்கட ஊர்ல, ”ஒனக்கு வேய்க்கானம் பத்தாதுறா இராசா... கொஞ்சம் வெலகி நில்லு” என்டும் சொல்வினம்...

    எழுதைக்கே, வியாக்கியானம் எண்டும் எழுதிவினம் நம்மாட்கள்.... எனக்கு இருக்குற விளப்பம் காணுமா, காணாதா... சொல்லுங்க பாப்பம்?!

    ReplyDelete
  6. மாயா சொன்னது போல் விளக்கம்; விளப்பமாக மருவிவிட்டது போல் உள்ளது.
    விளம்புதல், விளம்பு....எனும் சொல்- பதிலிறுத்தல் எனும் கருத்தில் உண்டு.

    ReplyDelete
  7. பயன்படுத்திக் கேட்டது இல்லை. .. மற்றவர்கள் பதில் நல்ல விவரங்கள் தருகிறது.

    ReplyDelete
  8. தமிழகத்து நண்பர்கள் என்ன சொல்லினம் எண்டு நானும் இதை கூர்ந்து கவனிக்கிறன்:))))
    அன்புடன் மங்கை

    ReplyDelete
  9. பழமை பேசி நண்பா

    உங்கள் வரவு பதிவுக்கு முக்கியமாகப்படுகின்றது. உங்க விளப்பம் காணும் ;)


    யோகன் அண்ணா

    மேலதிக விளக்கத்தை விளப்பமாகத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  10. கன்னியா குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ( விளவங்கோடு தாலுகா - கேரளா எல்லை ) இன்னும் விளப்பம் என்னும் வார்த்தை பேச்சு வழக்கில் உள்ளது.
    நன்றி
    அருண்

    ReplyDelete
  11. day, enakku oru doubt that most of the jaffna people are kerrala valli thondralkal because our accents are similar with malayallikal. our olds used the word that parayirathu insted of kathaikirathu.

    ReplyDelete
  12. வாங்க முத்துலெட்சுமி

    மாயவரம் பகுதியில் நம்மூர் பேச்சுவழக்கு அதிகம் இல்லைப் போல

    மங்கை அக்கா, வாங்கோ

    வணக்கம் அருண்

    பிரயோசனமான தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றி


    சுடரகன்(?) சிவா முருகையா

    கேரளத்தவர்களுக்கும் எமக்கும் மொழி ரீதியாக மிகுந்த நெருக்கம் உண்டு தான் எப்படி என்பது தான் தெரியவில்லை

    ReplyDelete
  13. சிலதுக்குஎப்பிடித்தான்விளக்கமாச்சொன்னாலும்விளங்காது.

    ReplyDelete
  14. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது எங்கள் ஊர்.என் தாயார் அடிக்கடி இளக்காரம் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு.. பேச்சு வழக்கில் அது எளக்காரம் என்று உச்சரிக்கப்படுகிறது. ஏழைகள் என்றால் சபையில் இளக்காரம் தான் என்பதுபோன்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete