Author: ந.குணபாலன்
•3:37 PM

கிழிந்த கோமணம்!

4.தசரதன் இழவு!

இராமனை நாட்டில் இருக்க விடாமல்
மரஞ்செறி வனத்திடை முடுக்கிய மன்னன் 
தாரத்தின் தயவில் தவழ்ந்த தசரதன் 
மரணம் கண்டான் மது மாந்திய மயக்கில்.
குழல் நுழை ஓலை கொண்டோடும் தூது கொணர்
இழவு கேட்டு அழுத கண்ணுடைப் பரதனும்,
இளையான் சத்துருக்கன் தானும் இணையாய் 
குலைந்திடு தேன்கூடு கோர்த்திடு குளவியாய் 
விரைந்தனர் வேகமாய் அயோத்தி வீதி நாடி.
கரைந்தனர் கதறினர் ஆங்கொரு பால் தேறி 
இராமன், இலக்குவன், நானும் இல்லாத 
அரமனை கண்டார். உண்மை அறிந்ததும் அரண்டார்.
குரையை வைத்தழுதான் பரதன். "குவலயத்து எமக்கு      (குரையை வைத்தல்-பெருஞ்சத்தமிடல்) 
மாறா மறு வைத்தாயே! மாதாவே! மன்னவர் 
முறையிலை மூத்தவன் இருக்க முதுநாட்டின் 
இறையாதல் இளையவனுக்கு ஒண்ணாதே!
எந்தை சிதை அழலூட்டி, எள்ளிறைத்த பின்னே  
முந்திப் பிறந்தானை மீளழைத்து முடி சூட்ட                                      
சிந்தை கொண்டேன் சீ என்னாதே! தாயே!
வெந்து போன மனதில் வேல் பாய்ச்சாதே!
வேண்டிக் கேட்டேன் வேறுசொல் வேண்டா!"வென
ஆண்டகை பரதன் அன்னை மொழி அகல்வான்.

அகல்வான் அயோத்தி. அடர்வான் கங்கைக்கரை!
புகல் இவன் எங்குற்றா னெனப் பூராயம் பிடிக்கும்
குகன் தடுத்தான். கூச்சலிட்டு வசை பொழிந்தான்.
ஆகா இவன் இராமனுக்குப் புதுத் தம்பி! இல்லையே!?
போகத் தடை போடும் புத்தியிலாக் குகனிடம்
தகவுடன் தான்கொண்ட எண்ணம் தானோத
மகரம் மண்டிடும் கங்கை வெள்ளம் அளாவி                                 (மகரம் - முதலை) 
தென்கரை சேர்ப்பன் தெப்பத்தின் தலைவன்.
மன்னர் குல மாணிக்கம் மாண்புடைப் பரதன்
நன்றி பல நவில்வான். நாடினான் சித்திர கூடம்.

கூடம் கோபுரம் கொண்ட கோயிலில் கூத்துக்காட்டி                   (கோயில்-அரமனை)
மாடம் துயில்வான், மண் குடில் துயில்கையிலே
பாடவறியாப் பாடகன் போல் பரதன் பேச்சிழந்து
பாடறிய இராமன் பாதம் விழுந்து அழும்,
"நாடறிய வந்து நவமணி பொலி முடி சூடு!" கென.
"கேடறியும் எங்களப்பன் கெலித்திருக்க                              (கெலித்தல்-ஆசைப்படுதல்) 
காடகன்று நான் வரேன்! கடுகிச் செல்!" கெனும்
கூறு கேட்ட இராமன் குழறு மொழியால்
சீறும் அழுகையுடன் தந்தை போய்ச் சேர்ந்த                          (வாறு-விதம்) 
வாறு வரைந்த பரதன் வார்த்தை கேட்டு,
"பாறி விழுந் தழுதல் என்னிடம் பார்க்காதே!                          (பாறி-சிதறி) 
நாறிடும் மீனைப் பார்த்திடும் பூனை போல் நாளும்
உன்னாத்தாள் உரை கேட்டான். எனை வைத கோபி!           ( கோபி-கோவக்காரன்) 
அன்னான் அமரன் ஆனால் எனக்கென்ன?
இன்னு மொன்று உரைப்பேன் கேள்!
பன்னிரண்டு ஆண்டு காலம் பார்த்திருக்க
உன்னாத்தாள் பாடையில் ஏறாளோ?
உன்னாணை அவள் உசிரோடு உள்ளவரை
உந்தப் பக்கம் ஒரு கணமும் திரும்பேன்!
வந்தாலும் வாய்ச்சோற்றில் நச்சு வைப்பள்!
சொந்தத் தம்பி கேகயன் தன் சிறை சேர்ப்பள்!
அந்தமிலாவோ பன்னிரண் டாண்டுகள்?
அந்தக் காலம் வருமளவும் வனமே என்னகம்!
வந்த வழி பார்த்துப் போ! வையகத்தில் என்
சொந்தமென்று சொன்னால் இலக்குவனே!"

இலக்குவன் அருகிருக்கும் இறுமாப்பில்
சொலவு கொண்டு சூடிழுத்தான் இராமன்.
நலங்கள் பல நாடும் நற்பண்பினன் பரதன்
நலங்கெடு சொல் நரம்பிலா நாக்குரை கேட்டும்
பிலத்திடைப் புகும் பாம்பென பிறழ்ந்து                                    ( பிலம்-புற்று, பிறழ்தல்-ஒழுங்கின்மை) 
அலம்பினான் அல்லன். அறக்கோல் கைக்கொள்வான்.
மலம்நிறை மனத்தின் இராமன் இன்னும் முழக்கினன்,
"நிலம் போற்ற வேண்டின் என் நைந்த மிதியடி
தலை மேல் தாங்கித் தாயகம் செல்குவை!
அரியணை அவை வைத்து ஆள்குவை!
பரிவுடன் உன்தாய்க்கு நான் வழங்கு பரிசிது"வென.
சரியென்று சம்மதம் வைத்துச் சிரமேல்
தரித்தான் நைந்த மிதியடி, தாயைப் பழித்த தனயன்.          (பன்னாடை- நல்லது கைவிட்டு 
பரதன் இனி இல்லையென்ற நல்ல ஒரு பன்னாடை.                              கெட்டது சேர்ப்பவன்)              

பன்னாடை தான் பரதன் என்றாலும் அவன் 
தன்றலைமேல் தாங்கிய மிதியடி கண்டால்
சின்னாத்தாள் சும்மா தான் சிரிப்பாளோ?
மன்னை கொண்டு மகன் ஒதுக்கி
"என்னுடன் பிறப்பே! எம்பி!" என்று கூவி
மன்னவனாம் கேகயத்தானை மன்றாடி
கொன்று பழி கொள்ள கோலம் கொண்டு
தென்றிசை தேடிக் கரந்தடி திறனுடை                                    (கரந்தடி-sniper) 
வென்றி வேல் வீச்சினரைப் பாய்ச்சுவள்;
என்றே இராமன் அச்சம் கொண்டே
நின்றதனால், நின்ற இடத்துக்கும் பறையாமல்
முன்போல முற்பட்டோம், முடுகினோம்  தண்டகம்.

தண்டகவனம் 

தண்டகக் காட்டிடை தலைப்படும் வேளையில்
ஆண்டும் பல அட்டூழியம் இயற்றும் பெருங்
கொண்டையர் கூட்டம் குழுமியே வந்தார்.
வேண்டுதல் செய்தார் விருந்து வைத்தார்.
ஆண்டவன் தாமெனும் அகந்தை முளை வளர
இராம இலக்குவர் அழி தொழில் இயற்றினார்.
கரந்து கணை தொடுத்துக் காட்டினர் வீரம்.
இராக்கதிரார் இவர் முன்னே தீப் படும் ஈசல்.
இடைசுகம் காணும் சிலமுகம் அச்சம் ஊட்டும்.
"சிரந்துணிக்கக் கேகயன் செலுத்திய சேவகரோ?
உராய்ந்த மானம் உறுத்தக் கேகயன்
அராத்த வந்தால் எடுபடுமோ அவன் முன்;                (அராத்துதல்-வலிந்து சண்டைக்கு வருதல்) 
படைக்கலம் இல்லா பக்குவம் பார்த்து
விடைக்கும் வில் கொண்டு அறுக்கும் ஆற்றல்?"
மடை உடைத்தோடும் மனதின் மயக்கம் 
கடை சுருட்டிக் கக்கம் இடுக்கக் கலைக்க
விடை பெறா வழமையான் விலகினோம் தண்டகம்.
மடை திறந்த வெள்ளமாய் மறுகி வந்தனம் பஞ்சவடி.
இடை நோகும் இருந்தாலும் அக்கணத்தில்
கடையர் எனக் கருதேன் இராமனை இலக்குவனை

சந்திரநகை 

இராமனை இலக்குவனை அவர்தம் 
விரி தோள் வீற்றிருக்கும் வில்லை 
மருங்கில் வந்த மங்கையெனை 
காண்டலும் அருகில் கடுகி வந்தார்,
வண்டூதும் பஞ்சவடி வனம் பற்றிய
கொண்டையர் கூட்டத்து மாந்தர்.
கண்டறியார் கேட்டறிந்த சங்கதியால் 
கணக்குப் போட்டார் திராவிடம் கடிய 
இணங்கிடும் இராம இலக்குவர் இவரே என. 
பின்னே என்னத்தைப் பறைவான்?
உண்ண உணவும், உடையும், குடியிருக்க வீடும் 
தொண்டு செய தோதான ஆளும் தந்து 
வேண்டி நின்ற வேலை வேறே என்னவாம்?
திராவிடர் தேசத்தில் ஆள்குமிக்கும் தவனம்.                        ( தவனம்-ஆசை, தாகம்) 
கரந்தடித்து கொலையாடுதல் இருவர் கவனம்.
பருவத்து நிலவின் பால் ஒளியில் ஓரிரவில் 
ஆரணியத்துப் பொக்கணை ஆர்த்து                                      (பொக்கணை-சிறுகுளம்) 
நீராடி விளையாட நானும் நினைந்த வேளை 
ஆரணங்கு ஒருத்தி அங்குற்றாள் நீராட.
திராவிட இனத் திலகம் இவளென                              (அஞ்சனம்-மை,
ஆரமும், ஆடையும் சொல்லும் அஞ்சனம்.                             மைச்சாத்திரம்,அடையாளம்)  

அஞ்சன சித்திரம் சேர் அழகிய கையள்.

சஞ்சலை இடையினள் சந்திரநகை இவள்.                 (சஞ்சலை-மின்னல்) 
பஞ்சவடி வந்தாள் பாதகத்தி அல்லள்.
அஞ்சன வண்ணனை ஆண்டவனே எனவும் 
அஞ்சுகந் தன்னை அடங்காதாள் எனவும் 
விஞ்சிய கம்பன் விரிபடம் ஒருதரம் பாரீர்!
          விஞ்சி யொளிர் பஞ்சு குளிர் பல்லவ மனுங்க 
          செஞ் செவிய கஞ்ச நிமிர் சீறடிய ளாகி 
          அஞ் சொலிள மஞ்ஞை யென அன்ன மென மின்னும் 
          வஞ்சி யென நஞ்ச மென வஞ்ச மகள் வந்தாள்.
வஞ்சகக் கவியின் கடை வரி தவிர்க்க! 
அஞ்சுகத் தழகு அவ்வளவும் மெய்யே! என் 
நெஞ்சகம் எரிந்தது நேரிழை நேர்த்தியில் 
மஞ்சுகவி மலைமுகடன்ன என் மனதில் மூடம்.             (மஞ்சுகவி-முகில்படியும்) 

மூடம் போடும் மழை முகில் - பயிர்                                   (
மூடம்- ஐயம், மந்தாரம்)
வாடத் தானும் வாடி வடிக்கும் தாரைபோல் 
இடம் பிடி ஈனரையும் தமராக்கி தரைமீது 
இடங் கொடுத்து ஏற்றந் தரவங் குற்றாள்.
உடலற உதிரஞ் சொரி போர் தடுக்க வந்தாள்.
கடன் பட்டேன் அவள் மதிநலம் காணா அந்நாள்.
தடங்கண்ணி ஏதோ உன்னிடத் தளும்பும்.
படங்கீறி ஏதோ என்னிடம் பன்னிடும். 
மடமதி அறிந்தே னல்லேன் மாதரசி மொழி. என் 
இடத் தோள் தொட்டு இழைத்த வீணைப் 
படம் குத்திய பச்சை அஞ்சனம், பாவையின்
இடத்திலும் கண்டேன். எதுவுமே விளங்கேன். 
மடக்கொடி சந்திரநகை தன்மருகியென
மாரோடு எனை இடுக்கி முத்தமிட்டு 
ஒருநேரம் ஓராட்டிய என் அத்தை எனும் 
தடமேதும் அந்நாள் அறிந்திலன் தாரணியில்!

சீதை ஆகின இலங்குதேவி!

தாரணியில் தழைக்கும் இலங்கைத் தீவகத்து 
அரசமகள் ஆவேனாம் பிறப்பில் நான்.  
இராவண்ண ஈசன் எந்தை ஆவான். 
கருநாகமும்,கார்முகிலும், காய்நிலவும் 
விரிகின்ற விடியலும், பலவும் வியப்ப 
விரும்பு வீணையிசை மீட்ட வல்லான். 
கரும்பு மொழி அரசி மண்டோதரி காதலுடன்  
கருக்கொண்டு ஈன்றனள் அவளே என்தாய்.                  
உருக்கொண்டு பூமியில் உதித்திட்ட என்னை  
ஊர் போற்ற உச்சி மோந்து இலங்குதேவி என             (இலங்கு-ஒளிசெய்) 
பேர் வைத்துப் பாராட்டிச் செய்தார் பலசீர்.

பலசீராடும் பாலகியோ பச்சிளங்குழந்தையாய் 

கலைவளர் பிறையாக ஏணை வளர் காலை   
கலையாடும் சாமி கண்ணீரில் கரைந்ததுவாம்.
"தலைமகளாய் தரணி மிசை பெண் பிறந்தபலன்
எள்ளளவும் தகப்பன் தாயுக்கு ஒண்ணாதாம்.
மல்லாமலை அனைய மன்னன் தலை                         (மல்லாமலை< மள்காமலை-அசையாதமலை) 
துள்ளித் துண்டாடி விழுமாம் மண்ணின் மிசை.                                                                          
வள்ளலவன் வாரிசும் வாலிபத்தில் அழிவர்! 
தள்ளி வாழ்ந்தால் தழைக்கும் குலம்" என்றலும்  
எள்ளிநகை செய்தனன் இராவண்ணன் எந்தை.
கொள்ளி சுட்ட கொடுவலி தோய என் தாய்,
அள்ளி எடுத்தாள் அன்புருக்க முத்தமிட்டாள்.
கள்ளமாக என்னைக் கட்டகப் பெட்டகம்                                                                     கட்டகம்- சித்திரவேலைப்பாடு 
வளர்த்தி கண் மழை பெய்து வாழ்த்தி வழங்க                                                                வளர்த்தி-கிடத்தி 
வாங்கினன் வலி கனத்து, கை கனத்து,கனத்த 
மனத்தான் என் மாமன் மாரீசன்.

மாரீசன் மகவுவளர் கட்டகப் பெட்டகந் தனை, 

மார்பொடுக்க மலர்ச் சிரிப்பு மகவின் இதழவிழும். 
மார்வெடிக்குந் துயர் மாமன் மனதழுந்தும். 
தேர்நிலையில் தலைமோதி பின் தெளிந்தான்.
பாரிடம் வாய்பிளக்க பார்த்துத் திகைக்கும் 
வானேறும் தேரேறி வான்வழி ஏகினனே. 
தேனூறும் விதேக நாட்டின் தேவன் சனகன்  
கையூரும் பிள்ளைவரம் வேண்டி விரதம் கைக்கொள, 
நெய்யூற்று வேள்வி நெறிமுறை செய்வன்.
வேட்குஞ் சாலை விளைக்க நிலமதனை 
பட்டிழுக்கும் நுகம் பற்றிக் கோன் 
இட்டமுடன் இழுக்கும் நாள் 
நாளை என்ன....வெள்ளாப்பில்  
கட்டகப் பெட்டகம் வளர் மகவை கண்ணீருடன் 
திட்டமிட்ட திடலில் மாரீசன் இட்டான்.
வல்லோன் மயன் எனும் பெருந்தச்சன் 
வள்ளிசாக இழைத்து வடிவுடன் வடித்த  
வில்லையும் வைத்து விடை பெற்றான்.
முல்லைக் கொடி மறைவில் மனங்கலங்கி 
மூச்சடக்க அழுதான் அறைந்தான் தன்முகம்.

முக மருண்டு முழித்தனன் சனகன்     

நுகம் பற்றி உழும் நேரம் நிலந்தனில்
மக வொன்றின் மணிக்குரல் எழ
அக்களிப்பில் மகவை அள்ளினான் அணைத்தான்.
முக்குளிக்கும் மகிழ்வில் மனசு கூத்தாடும்.
சொக்கிடும் பாடற் சுருதியில் சதிரம் சேர்ந்தாடும்.
பக்கம் அணை பாரியாள் மகவு மடி ஏந்தினாள் .
மகள் பெற்றான் மடை பல வைத்தான்.                                                                           மடை- படையல் 
தகப்பன் ஆயினன் தந்தான் பரிசில்.

பரிசில் பெற்றிடு புலவோர் பலபேர்.

வரிசைகள் ஈட்டிடு வளர் கலைஞர் பல்லோர்.
சாதகம் கணித்து ஆடகம் சேர்ப்போர் பல்லோர்.                                                            ஆடகம்- பொன் 
இவர் நடுவே இளைத்த ஓருருவம் 
தவப்பயன் தானீதென உரைத்த
பலன்படி பாவியேன் இராமன் பத்தினியான 
நலமுறை நாளும் தான் அறிவீர் பாரோரே!

பாரோர் புகழ் மேவு இலங்கை மன்னன் 
"ஆரோ எவரோ என்மகவு கவ்வினர்?
வேரோ டழிப்பேன் விடத்தோர் குல"மென 
ஆறாப் பெரும்பழி கொண்டே அலைந்தான்.
தேறினன் நெஞ்சம், தெரிந்தது தேவியின் தவம். 
கூறான சிந்தை, கூற்றம் தவிர்க்கக் கூறும்.                                                                     கூற்றம்-அழிவு 
நீறான நெஞ்சு நினைக்குந்தோறும் தீயூறும்,
நீரூறும் கண்ணுடையாள் எனை ஈன்றாள்.

(இன்னும் கிழியும்)
|
This entry was posted on 3:37 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: