Author: ந.குணபாலன்
•2:01 AM

வேறை வேலையத்தவன்!


வேறை வேலையத்தவன்!
விசரன்!
புத்தி கெட்டு உப்பிடிக் 
கூத்தடிக்கிறானே!
நல்ல படிப்பு!,
நல்ல வேலை!,
நல்ல வாகனம்!,
இல்லையெண்டாமல் இருக்க 
நல்ல வீடும் வாங்கிச் 
சேர்த்தென்ன சீலைக்கு?
சேமணை!
பார்க்கப் பார்க்க 
பத்திக்கொண்டு வருது.

இவனோட்ட வயசுப்  பெடி எல்லாம் 
அவனவன் 
தாய்தேப்பன் 
கைகட்டின பக்கம்
கலியாணங்கட்டிறான்.

இல்லாட்டில் 
காதல் பண்ணிறன்,
கத்தரிக்காய் விக்கிறன் எண்டு
தாய்தேப்பனை 
தாக்காட்டிப் பார்த்திட்டு
ஏலாக்கட்டத்திலை
எடுத்தெறிஞ்சிட்டு
சடங்கு செய்யிறான்.

தாரம் இவளெண்டு 
ஒருத்தியை பெருமையோடை
தெருவிலை காட்டித் திரியிறான்.
வரியம் ஒண்டுரெண்டு
வரமுன்னம் 
தவ்வல் ஒண்டைக்
கையிலை காவிப் 
பவனி வாறான் பார்!

வைரவருக்கு வாய்ச்ச நாய்வாகனம் மாதிரி
எனக்கெண்டு உது வந்து வாய்ச்சுது.
கறுமம் பிடிச்ச பிள்ளை.
முறையாய் ஒருத்தியை கலியாணம் கட்டி
முத்து முத்தாய் பிள்ளை பெத்து
கண்ணிலை ஒத்தி வளக்காமல்
கண்டநிண்ட நாயை
கொண்டுவந்து குளிப்பாட்டி
தின்னுறதுக்கு தீன் குடுத்து
எட நாசங்கட்டுக்கு
உடுப்பும் மாட்டி
தானே பெத்தது மாதிரி
தேனொழுக 
குஞ்சன் எண்டு கூப்பிட்டுச்
செல்லம் கொண்டாடிறான்.

வேலைவிட்டு வீட்டை வந்தால்
நில்லாமல் அதுக்குப்
பின்னாலை ஒரே ஓட்டம்.
பீயள்ளுறான் பை கொண்டுதிரிஞ்சு!
ஐயோ!
பீயள்ளுறான் தெருநீட்டுக்கு!
பரிசு கேடு உவன் ஒருத்தனாலை!
என்ரை வமிசம் இவனாலை 
எப்பிடி வளருமோ?

Author: ந.குணபாலன்
•3:33 PMபொன்னுக்குட்டி! 2
Levande norsk 6. skuleår பொத்தகத்திலிருந்து

நொர்ஷ்க்(நோர்வேஜியன்மூலம்:JACOB  B.BULL                                
தமிழாக்கம்.குணபாலன்


கதைக்களம்மலையும்,வயலும்,காடும்,கடலும்அருகருகே காணப்படும்
வடபுலவழி(NOR(TH) WAY) ஆன நோர்வே நாடு.
கதைக்காலம்ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே..


                                                  பாறாங்கல்லைப்போல் கனக்கும் நெஞ்சுடன் வீட்டினுள்ளே சென்றேன். யுகான்னெசு படுத்திருக்கும் அறைக்குள்ளே ஒரு சத்தமும் காட்டாமல் உள்ளிட்டேன். அப்பா இடைக்கிடை நுனிக்காலில் அங்குமிங்கும் நடை பயில்வதும், நாற்காலியில் கொஞ்ச நேரம் இருப்பதுமாக இருந்தார். அம்மா அழுதழுது களைத்துப் போய் அந்தச் சின்னக் கட்டிலில் ஒரு பக்கம் சரிந்து கிடந்தா. அந்த அரையிருட்டான அறையிலே அந்தக் குறுகிய மெல்லிய மூச்சானது சீரில்லாது இருந்தது பயத்தைத் தந்தது "ஐயோ! இதென்ன கறுமமாய்க் கிடக்கு" என்று பரிதவிக்க வைத்தது.ஒவ்வொரு தரமும் இருமல் கிளம்பி யுகான்னெசை உலுப்பும் போதும் பதகளிப்போடு அம்மா எங்கள் முகங்களை மாறிமாறிப் பார்ப்பா. 

ஓவியர் யாக்கோப் ப்றட்லாண்ட்
Jacob Bratland  1859 - 1906 (நோர்வே)
அப்பா தன் நடையை ஒருக்கால் நிற்பாட்டினார்.கை மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார். பின்னேரம் அஞ்சரை காட்டினது.
"சாமம் பன்னிரண்டு அளவிலை வந்திடுவினம் எண்டு எதிர்பார்க்கிறன்" என்று கிசுகிசுத்தார்.
"இப்ப நேரம் என்ன?" அம்மா கேட்டா.
"அஞ்சரையாகுது"
"நல்லாப்  பிந்திப் போடுமே? இன்னும் எம்மளவு நேரம் கிடக்கு மணி பன்னிரண்டு ஆகிறதுக்கு"அம்மா அழுதா.
"ஐயோ! இந்தக் கறும காண்டத்தைப் பார்க்க என்னாலை ஏலாது" என் மனம் மூச்சு முட்டிப்போய் அந்த அறையை விட்டு வெளியேறும்படி என்னை ஏவியது. துக்கம் தொண்டையை அடைக்க;எங்கே போகின்றேன்,என்ன செய்கிறேன் என்று யாருமே குழப்பாத எனது தனிமை உலகத்தை நாடித் தஞ்சம் அடைந்தேன்.

இது கடவுளின் ஒரு மோசமான , நடக்கக்கூடாத , தேவையில்லாத ஒரு திருவிளையாடல் என்று எனக்குப் பட்டது. சிலநேரம் பொன்னுக்குட்டியும் இன்னும் தீல்டால் வரை கூடப் போய்ச் சேர்ந்திருக்காதோ? அப்படி என்றால் இனி மேட்டுக்காட்டுப்பிட்டி  இருக்கிறது; அருவிப்பிட்டியும் இருக்கிறது. இரண்டும் பொறுத்த ஏற்றமான பாதை.இவைகளை எல்லாம் தாண்டித்தான் தீன்சேத்துக்கு போக வேண்டும்.

பயனில்லாத வேலை தான் என்றாலும்; நான் திரும்பவும் வெளி முற்றத்திற்கு வந்து காற்றில் வரும் சத்தங்களை கூர்ந்து கேட்டேன். புயல் இன்னும் சரிவர விட்டபாடாயில்லை. வாயைப் பிளந்தபடி ஒலிகளை பிரித்து அடையாளம் காண முயன்றேன்.
"ஆ! அதென்ன? மணிச்சத்தமே?சீச்சீ! சலங்கைச் சத்தமாய் இல்லை."
என்றாலும் காற்றிலே ஒருவிதமான வினோதமான மெட்டு ஒன்று மிதந்து வருவது போல கேட்டது. பணிய(கீழ்) கிராமமான பெர்க்செத் பக்கமாகவும், வடக்காலேயும்   நாய்களின் குரைப்புக் கேட்குமாப் போல கிடந்தது. ஆனால் சலங்கைச் சத்தம் மட்டும் கேட்கவில்லை.

"ஆ! அந்த வினோதமான மெட்டு திரும்பவும் கேட்குதே! என்னது?என்னது?மணிச்சத்தமே? ஓமோம்! சலங்கைச் சத்தமே தான். ஆனால் ஒரு குதிரையின்ரை 
ஓட்டத்துக்கும்,குளம்படியின்ரை தாளத்துக்கும்ஏத்த மெட்டாயில்லை.....
முன்னை பின்னை கேட்டறியாத...... ஒருவித புது இசையாக இருக்குதே..... காத்துவெளி முழுக்க மெள்ள மெள்ள பரவுதே!வெடிச்சு சிதறுதே!அது எங்கடை சலங்கைதான்!எங்கடை பொன்னுக்குட்டியின்சலங்கை தான்!" 

நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு மேட்டுப் பக்கமாக காட்டுப்பாறைப் பாதையை உற்றுப் பார்க்கிறேன். அப்போது காட்டின்,மலைப் பாறைகளின் மறைப்புக்களை தடைகளை உடைத்துக் கொண்டு சலங்கை சத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. 
"சொய்ங்" "சொய்ங்" "சொய்ங்" "சொய்ங்"   
"பங்கை பார்! பங்கை பார்! எங்கடை ஆக்கள் தான் வருகினம்!எங்கடை ஆக்கள் தான் வருகினம்! எங்கடை பொன்னுக்குட்டி தன்ரை  பழுப்புவெள்ளைநிற பிடரிமயிர் பறக்கப் பாய்ஞ்சு பாய்ஞ்சு வருது.கர்த்தருக்கு தோத்திரம்.கர்த்தருக்கு தோத்திரம் " 
நான் சடுதிமுட்டாகத் திரும்பி வீட்டினுள்ளே ஓடினேன். மெத்தைப் (மாடி) படிகளில் தடக்கி விழுந்து எழும்பி மூச்சு இழுக்க அம்மாவிடம் கட்டிலடிக்கு ஓடிப் போனேன். 
"அம்மா பொன்னுக்குட்டி வருது"
"என்னப்பு சொல்லுறாய்?" அம்மா விறுக்கென்று எழும்பினா.
"பங்கை கேளுங்கோ! பங்கை கேளுங்கோ! சலங்கைச் சத்தம் கேட்குது எல்லே ?" என் பரபரப்பு அப்பாவுக்கு பிடிபடவில்லை.
"அதைப் பற்றியே யோசிச்சுக் கொண்டு இருந்தநீ எல்லே ராசா?  அதுதான் உனக்கு அப்பிடிக் கேட்டிருக்கும்" என்றார். நான் சொன்னதை நம்ப முடியாமல் அம்மா,அப்பா இருவருமே சாளரத்தினருகே
சென்றனர்.நானும் நெருக்கியடித்துக்கொண்டு சாளரக் கண்ணாடியிலேமுகத்தை வைத்தேன்.
"பாருங்கோ! பாருங்கோ! தலைவாசலுக்கை வண்டில் நுழையுது."
"இயேசுவே! நன்றி! கர்த்தாவே நன்றி!"என்று தத்தம் நெஞ்சிலே இருவரும் சிலுவைக்குறி இடவும், நானும் என்னெஞ்சில் இட்டுக் கொண்டேன்.
"ஓம் குஞ்சன்!" அப்பா என் தலையைத் தடவினார்.
"நம்பேலாமல் கிடக்கு! காலமை ஆறு மணிக்கு வெளிக்கிட்டு இப்ப பின்னேரம் ஆறு மணிக்கிடையில் திரும்பி வாறதெண்டால் .... எல்லாம் கர்த்தரின்ரை புதுமை தான்" என்று தன்பாட்டில் சொன்னபடி; கஞ்சி போட்டு மடித்த தன் வெள்ளைக் கழுத்துப் பட்டியை சரிசெய்தபடி, தொப்பியையும் கையிலெடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே போனார்.

கீழே தலைவாசலிலே, வேர்வை பொங்க,வாயில் எச்சில் நுரைக்கப் பொன்னுக்குட்டிநின்றது. வாயினால் வடிந்த வீணீரும், நாசித்துவாரங்களில் உள்ள மயிர்நுனிகளில், வெளிவந்த மூச்சுக் காற்றும் ஆலியாகி..., சிறு சிறு முத்துக்களாகி...,மணியாகித் திரண்டு இருந்தது. நான் பொன்னுக்குட்டியின் கிட்டப் போனேன். தலையை மேலும் கீழும் ஆட்டியது. கடிவாளத்தை சப்பிக் கொண்டிருந்தது. கால்களை மாறி மாறி ஊன்றியது.முதுகை வளைத்துநெளிவு எடுத்தது. மேல் உளைவை அதன் அசைவுகள் எடுத்துக் காட்டின.  உந்த சுழற்றி அடிக்கிற வடந்தைப் புயலிலே..., சீரில்லாத ஏற்ற இறக்கப் பாதையிலே..., உந்த இரண்டு முழு ஆம்பிளைகளையும் கதழ்வண்டியில் ஏற்றிக்கொண்டு...,நூறு கட்டையை..., பன்னிரண்டு மணி நேரத்துக்குள் ஓடிக் கடக்கிறது என்றால்..., சும்மா என்ன விளையாட்டுக்காரியமே? 

அப்பா தலைவாசல் படலை வரை வந்து பரிகாரியாரை வரவேற்றார். பரிகாரியாருடனே அவருக்கே உரிமையான மருந்துமணமும் சூழ வந்தது. பரிகாரியாரை தம்பி படுத்திருக்கும் மெத்தை அறைக்கு மேலே அனுப்பிவிட்டு பொன்னுக்குட்டியின் கிட்ட அப்பா வந்தார்.வேர்த்துப்போனதலையைக்,கழுத்தை உருவிவிட்டார். பொன்னுக்குட்டி தனக்கு வழமை போல் கிடைக்கும் சீனிக்கட்டியை தேடி அப்பாவின் கையை மணந்து,மணந்து பார்த்தது. அப்பா அது பற்றி துப்புரவுக்கு அயர்த்துப் போனார். நான் குதிரைமாலுக்குள் ஓடிப்போய் சீனிக்கட்டியை எடுத்து வந்து தீற்றினேன்.

"சவுக்காலை அடிச்சநீயே ஊலா?" இரக்கத்துடன்அப்பா கேட்டார். 
"தேவரீர் சொன்னதாலை அடிச்சது தான். பாவம் வாயில்லாச் சீவன்" சேணத்தை அவிழ்த்தார் ஊலா. அவர் குரலில் குற்றவுணர்வு தெரிந்தது. அக் குற்றவுணர்வு இப்போது அப்பாவின் முகத்திலும் தொற்றிக் கொண்டது. அப்பாவின் சங்கடத்தைச் சமாளிக்க வேண்டி;
"வேறை என்ன செய்யிறது? ஒரு உசிர் இஞ்சாலையோ அங்காலையோ எண்டு இழுத்துப் பறிச்சுக் கொண்டு கிடக்கேக்கை. வேறை வழியில்லை....." என்று ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு பொன்னுக்குட்டியை குதிரைமாலுக்குள் கூட்டிச் சென்றார். 

மெய்தான். யுகான்னெசுவின் உயிர் இவ்வுலகுக்கோ, அவ்வுலகுக்கோ என்று இழுத்துப் பறித்துக் கொண்டு தானே இருந்தது? மைக்கா நாள் மத்தியான நேரம் பரிகாரியார் ஊருக்குத் திரும்பினார். யுகான்னெசுவுக்கு காய்ச்சல் விட்டுவிட்டது. இருமலும் குறைந்து போனது. பரிகாரியாரை பயணம் அனுப்பும் போது அப்பா உணர்ச்சிவசப் பட்டுப்போனார். 
"எங்கடை பிள்ளை தப்பிப் பிழைச்சதற்கு முதலிலை கர்த்தருக்கும், அடுத்தபடியா உங்களுக்கும் தான் பரியாரியார் நாங்கள் நன்றி சொல்ல வேணும்." பரிகாரியாரின் வலக்கையைத் தன் தன் இரு கைகளாலும் சிறைப் பிடித்துத் தன் நன்றியை அப்பா தெரிவித்தார்.  
"சீச்சீ! என்னை விட்டிட்டு நீங்கள் பொன்னுக்குட்டியைத் தான் கொண்டாட வேணும். ஒரு மணி நேரம் நான் வரப் பிந்தி இருந்தாலும் நிலைமை கை பறிஞ்சு போயிருக்கும்." என்றபடி தன் மேலை முழுவதும் மூடி ஓநாய்த்தோல் மேலங்கியை அணிந்து கொண்டு வெளிக்கிட்டார்.
"சரி.பின்னை வாற கிழமை வந்து பார்க்கிறன்."
"போயிட்டு வாங்கோ பரியாரியார்" அப்பா விடை கொடுத்தார். கதழ்வண்டியை இப்போது கருமன் என்ற குதிரை இழுத்தது. 
ஓவியர்:Fritz Thaulow (1847-1906)நோர்வே
                                                                          
  
                                                            இது நடந்து ஒரு இரண்டு நாள் போயிருக்கும்.அது ஒரு வெள்ளிக்கிழமை. அப்பா தன் பணிமனை அறைக்குள் இருந்தார். அடுத்த சனிக்கிழமை கோயிலிலே ஒரு கலியாணச் சடங்கு. அந்தச் சடங்குக்கேற்ற தோத்திரங்கள்,பாடல்கள், பொருத்தமான வேத வசனங்கள் என்று மாப்பிள்ளை,பெண்பிள்ளையின் விருப்பப்படிமுதலே ஆயத்தப் படுத்தி வைத்து இருந்தார்.அதைவடிவாக, சீராக இறகுப்பேனையால் மைக்கூட்டில் தொட்டுத் தொட்டு திறமான தாள்களில் படி எடுத்துக் கொண்டு இருந்தார். ஊலா பாதிரிமாளிகைக்கு வந்தார். பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்றார். எழுத்து வேலையில் மூழ்கி இருந்த அப்பா நிமிர்ந்தார். தன் மூக்குக் கண்ணாடியைக் கொஞ்சம் கீழிறக்கி விட்டு, அந்த இடைவெளிக்கு ஊடாலே ஊலாவைப் பார்த்தார்.
"என்ன ஊலா? என்ன சங்கதி?"
"பொன்னுக்குட்டியின்ரை நிலைமை தான் சரியாயில்லை தேவரீர்!" ஊலா தன் முரட்டு விரல்களைப் பினைந்த படி நின்றார். 
"ஏன்? என்ன பிரச்சனை பொன்னுக்குட்டிக்கு?" அப்பா முகம் வெளிற இருக்கையை விட்டு எழுந்தார்.
"சளிச்சுரம் பிடிச்சுப் போட்டுது" பலமில்லாத குரலில் ஊலா சொன்னார்.
"வாயில்லாச் சீவனைப் போட்டு நல்லாத் தான் வாட்டியிருக்கிறாய் போலை" அப்பாவின் குரல் அதட்டுமாப் போலிருந்தது. ஊலா கிளம்பிய எரிச்சலை மறைக்க தெண்டித்துத் தோலால் ஆனா தன் தொப்பியை திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஆற்றேலாமல் திருப்பிச் சொன்னார்.
"ஒண்டில் பாதிரியாரின் பிள்ளை இல்லாட்டில் குதிரை எண்டொரு நிலைமை எல்லே இருந்தது.இல்லையே தேவரீர்?"
"குறை நினையாதை ஊலா. நான் பிழையாய்ச் சொல்லீட்டன்" என்று அப்பா பிழையை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டார்.
"மிருக வைத்தியருக்கு உடனடியா ஆளனுப்பன்"
"ம்.... மிருக வைத்தியர் வந்திட்டார்"
"என்னவாம்? என்ன சொல்லுறார்?"
"தன்னாலை ஏலும்ஆனதைச் செய்யிறன் எண்டுறார்"

அப்பா மேலங்கியை மாட்டிக் கொண்டார். ஊலாவுக்குப் பின்னாலே போனார். குதிரைமாலில் பொன்னுக்குட்டி நின்ற நிலைமை கண் கொண்டுகாண முடியாத ஒரு கொடுமையாகக் கிடந்தது. கால் நாலும் உதறி நடுங்கினது. கொடி தொங்கிப் போன மாதிரி தலை தொங்கி இருந்தது. செவி இரண்டும் மடிந்து கிடந்தது. பளிச்சென்று இருக்கும் அதன் வடிவான கண்ணிரண்டும் பொலிவில்லாமல் கிடந்தது. உபாதியில் தடக்கி வரும் மூச்சும், இடைக்கிடை இருமலும் தும்மலுமாக அது போராடிக் கொண்டு இருந்தது.

யுகான்னெசு வருத்தத்தில் விழுந்து ஆறாம் நாள். தன்னுடைய சுகயீனம் குறைந்து அமைதியாக இப்போது நித்திரை கொள்ளத் துவங்கி இருந்தான். அவனுடைய வருத்தம் தெளியத் தெளிய; அவனது உயிர் காக்கப் பாடுபட்ட பொன்னுக்குட்டியின் நிலைமை வரவரத் தேய் பிறையானது. கம்பளிப்போர்வையால் போர்த்தினார்கள்...., மேலைக்,காலை உரஞ்சித் தேய்த்தார்கள்...., கடுங்கோப்பி பருக்கினார்கள்..., தெரப்பந்தைலத்தைப்(turpentine) பூசிவிட்டார்கள்...,
எந்தவொரு கைவைத்தியமும் மிச்சம் வைக்கப் படவில்லை. ஒவ்வொருநாள் காலையிலும் ஊலா முந்தின இரவில் பொன்னுக்குட்டியின் நிலைமை எப்படி இருந்தது என்று தகவல் தருவார். பாதிரிவளவில் பாதிரியார் முதற் கொண்டு பணியாளர் வரை எல்லாருமே பொன்னுக்குட்டி வருத்தத்திலே கிடந்தது உத்தரிப்பதைக் கண்டு மனவருத்தப் பட்டனர்.

கடவுளே! பெருமானே! என்று இப்போது யுகான்னெசுஒழுங்காகச் சாப்பிட , நடமாட வெளிக்கிட்டுவிட்டான்.ஆனால்சுகயீனத்தின் சுவடு இன்னும் பாதிரிவளவைவிட்டுப் போனபாடாய் இல்லையே. பாதிரிவளவில் நடமாடுகின்ற சனம் எல்லாம் ஒரு சத்தம் சலார் இல்லாமல் இயங்கினது; பொன்னுக்குட்டிக்கு அமைதி வேண்டும் என்பதற்காக. யுகான்னெசுஒரு சனிக்கிழமை தான் வருத்தம்என்று வந்து படுக்கையில் விழுந்தவன். சனியோடு சனி எட்டு நாள்.......,மைக்கா நாள் ஞாயிறு ஒன்பதாம் நாள். அன்றைக்கு காலை நான் படுக்கையால் எழும்பக் கொஞ்சம் பிந்திவிட்டது. காலையுணவுக்கு சாப்பாட்டறைப் பக்கம் வந்தேன். நான் சொன்ன காலை வந்தனத்துக்கு அம்மா,அப்பாவின் பதில் வந்தனங்கள் வழமை போல இல்லை. எனக்கு அது உறைக்கவும் இல்லை . என்னுடைய தியானம் முழுக்க பொன்னுக்குட்டியிடம்.கதியில் சாப்பிட்டுவிட்டு, ஓடிப்போய் ஒருக்கால் பொன்னுக்குட்டியை பார்க்க வேண்டும்.

காலைச் சாப்பாட்டின் பின் என் இரண்டு காலும் தன்னிட்டவாரம் குதிரைமாலுக்குள் உள்ளிட்டது.வடந்தைக்காலத்து வீரியமற்ற சூரியனின்கிரணம் மாலின் சாளரக் கண்ணாடி ஊடாக சரிந்து விழுந்து உள்ளே வெளிச்சத்தைக் கூட்டத் தெண்டித்தது.குதிரைமாலுக்கே உரிய மூக்கடைக்கும் சூடான குதிரைச்சிணி அடித்தது.மருந்து கலந்து சேர்த்து வைத்த புல்லைப்பெருங்கண்ணி சிறுசிறு சீறல்களுடன் சாறு ஒழுக, தின்றது கருமன் தண்ணீர் வாளிக்குள் மூக்கை நுழைத்து சிந்தி அடித்தது. சாம்பன் வெளியிலே கோயிலுக்கு கதழ்வண்டியை இழுத்துப் போக ஆயத்தம். ஓடிப்போய் பொன்னுக்குட்டியின் தொட்டியைப் பார்த்தால்....,நெஞ்சு "திடுக்" என்றது.
"பொன்னுக்குட்டி அங்கினை இல்லையே? ஐயோ! அந்த வடிவான இளமஞ்சள் நிற முகம் எங்கை?" போக்காட்ட முடியாத ஒரு பயம் என்னுள் பரவியது. கொஞ்சம் தள்ளி மாலின் நடுவிலே..., அங்கே...., அங்கே..., நீட்டி விறைத்துப் போய்ப் பொன்னுக்குட்டி வெறும் நிலத்தில் விழுந்து கிடந்தது.சதிரம் விறைக்க விறைக்க ஆரோ குளிர் நீரை என்னுடைய மேலில் அள்ளி அள்ளி வார்த்தது போல் கிடந்தது.
"பொன்னுக்குட்டி" என் குரல் அடைத்தது.
"பொன்னுக்குட்டி! செல்லம்!"
பொன்னுக்குட்டி ஒரு மறுமொழியும் சொல்லவில்லை. தலையைத் தூக்கி என்னைப் பார்க்கவில்லை. ஒரு ஆட்டம் அசைவு இல்லாமல் கிடந்தது. எதுவுமே நடக்காதது போல் பெருங்கண்ணி தன்பாட்டில் புல்லைத் தின்னும் ஒலி கேட்டது. கருமன் பலமாகத் தரையில் காலூன்றுதலும் கேட்டது.

துக்கம் தாங்க ஏலாமல் குரையை வைத்துக்கொண்டு வீட்டினுள்ளே ஓடினேன். வாசல் நிலையருகே உதறின உதறலில் காலணி இரண்டும் ஒவ்வொரு திக்கில் பறந்தது.ஆரையும் பார்க்காமல், எதையும் கவனிக்காமல் "வதவத" என்று மெத்தைப் படியேறி எனது அறைக்குள் "பொத்" எனக் கட்டிலில் விழுந்தேன். அம்மா மெல்ல உள்ளே வந்தா. என் தலையை, முதுகைத் தடவினா.
"பொன்னுக்குட்டியைப் போய்ப் பார்த்தநீயோ அப்பன்?" எந்த வகையில் என்னை ஆறுதல் படுத்தலாம் என்று தெரியாமல் அம்மா என்னைக் கேட்டா. 
"பொன்னுக்குட்டி செத்திட்டுது அம்மா.அது இப்ப உசிரோடை இல்லை"
"ம். தெரியும். இரா முழுக்க சேடம் இழுத்துக் கொண்டு கிடந்திருக்கு. வெள்ளாப்பிலை ஒரு நாலு நாலேகால் அளவிலை போய்ச் சேர்ந்திட்டுது ஊலா வந்து எழுப்பினவர். அப்பா போய் குருசு நெத்தியிலை வைச்சுச் செபம் சொல்லி முடிக்கவும் எல்லாம் அடங்கிப் போச்சாம்." அம்மாவும் கலங்கிக் கலங்கிச்  சொல்லி முடித்தா.

கோயிலுக்குப் பூசைக்கு அன்று அப்பா மட்டுமே தானே கதழ் வண்டி ஓட்டிப் போனார். தம்பியைச் சாட்டி அம்மா போகவில்லை. நானிருந்த நிலைமையைக் கண்டு வா என்று கூப்பிட அப்பா உன்னவில்லை. பணியாளர்களும் ஒருத்தரும் போகவில்லை.எல்லாருக்கும் சரியான துக்கம். அப்பாவுக்கும்
அன்றைக்கு வீட்டோடு நிற்கத்தான் விருப்பமாய் இருந்திருக்கும். என்ன செய்வது?பாதிரியார் அவர் இல்லாமல் பூசை எப்படி நடக்கும்?

குதிரைமாலில் பணியாளர் எல்லோரும் வந்து கூடினர். இரண்டு பேர், மூன்று பேராகக் கூடிக் கூடி பொன்னுக்குட்டியின் வீரதீரங்களைப் பற்றிக் கதைத்தனர். இடையிடையே அமைதியும் நிலவியது. ஒருமாதிரித் தன் கண்ணீரைக்கட்டுப்படுத்தின அம்மா குதிரைமாலுக்குள் வந்தா.
பொன்னுக்குட்டியின்முகத்தை தடவினா.
"கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, பொன்னுக்குட்டி! எப்பவும் உன்னோடை அவர் இருப்பாராக. நீ எங்களுக்குக் காலத்தால் செய்த உதவிக்கு எல்லாம்; எங்களாலை ஒரு உபகாரமும்திருப்பிச் செய்ய ஏலாமல் போச்சே." என்று அமைதியான குரலில் அழுத்தமாகச் சொன்னா. கொஞ்ச நேரத்தில் பணியாளர் மெல்லக் கலைந்து போயினர். 

அங்கே ஏதுமே பறையாமல்,எதுவும்செய்யாமல் நின்றது ஊலா மட்டுமே. பொன்னுக்குட்டியின் வெறுமையான தொட்டியை , சாலையை, சுவரை,கூரையை மாறிமாறி வெறித்துப் பார்த்தார். அம்மாவுக்கு அவரின் மனநிலை விளங்கினது.
" நீ கொஞ்ச நேரம்  வெளியாலை வாவன் !ஊலா"வாசல் வரை வந்த அம்மா திரும்பிக் கேட்டா.
"என்னாலை இப்பிடியே விட்டிட்டு வரேலாமல் கிடக்கு" சடக்கென்று மறுமொழி வந்தது. பார்த்தால்...,அந்த மல்லாமலை போலிருக்கும் நடுத்தர வயதான ஆண்பிள்ளை;செருமிச் செருமி அழுதார். அம்மாவாலும் திருப்பி ஏதும் கதைக்க முடியவில்லை. அந்தச் செல்லப்பிராணியின் பிரிவை அம்மாவாலும் தாங்க முடியவில்லை.
அதுவும் அவவின் ஆசைமகனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் எல்லோ பொன்னுக்குட்டி தன் உயிரை பலி கொடுத்திருக்கிறது? நினைக்க,நினைக்க அம்மாவுக்குத் துக்கம் தொண்டையைஅடைத்தது . 
"உதுதான் நடக்க வேணும் எண்டு விதி ஊலா" ஊலாவின் தோளை அம்மா ஆறுதல் சொல்லித் தடவினா.
"ம். உதுதான் விதி" என்று திருப்பிச் சொன்னார் ஊலா. அம்மா போய்விட்டா. இப்போது மாலிலே பொன்னுக்குட்டியின் நெருங்கிய கூட்டாளிகளான நானும், ஊலாவும் மட்டுமே தனித்து நின்றோம். ஈரலிப்பான குதிரைமாலின் சாலையில் நான் முழங்காலில் அமர்ந்தேன். பொன்னுக்குட்டியின் தலையை தடவினேன்.
"என்ரை செல்லம்! செல்லப் பொன்னுக்குட்டி!" ஊலா என்னையும், பொன்னுக்குட்டியையும் பார்த்தபடி நின்றார்.

திடீரென கோயிலின் மணிக்கூட்டம் பலத்த சத்தமாக ஒலித்தது. என் சிறு பராயத்துக் கற்பனையிலே; பரமண்டலத்திலே கர்த்தரின் அருகே பொன்னுக்குட்டி வந்து விட்டது போலவும், அது வளர்ந்து வளர்ந்து வானவெளி முழுக்க நிறைந்ததுபோலவும், அதன் கழுத்துச் சலங்கையின் நாதத்தால் எட்டுத் திக்கும் நிரம்பியது போலவும் எனக்குப் பட்டது. ஆனால் அது மேட்டு(upper) இசுத்திரண்டால் மலையின் கோயில் கோபுரத்து உச்சியில் உள்ள மணிக்கூட்டம் எழுப்பும் சத்தம்;மனசிலே ஏக்கத்தைத் தீண்டி வைக்கும்  சத்தமே தான்.

   

                                                            (நிறையும்)


உள்ளிடுதல்- உள்ளேசெல்லுதல்
வெளிக்கிடுதல்- புறப்படுதல், தொடங்குதல்
கறுமம்>கருமம் >கன்மவினை>துன்பம்
பரிதவிப்பு-துயருறுதல்
பதகளிப்பு-பதற்றம்
உலுப்பு-குலுக்கு
பேச்சுவழக்கில்>கறும காண்டம் - கொடுமையான துன்பம் 
அகராதியில் >கருமகாண்டம்- முற்பிறப்புத் தீவினையால் உண்டாகும் 
நோய்களையும்,தீர்வுகளையும் கூறும் நூல் 
பொறுத்த-கடுமையான
பங்கை-அங்கே
சடுதிமுட்டு-உடனடி
மேல்- உடல்
சதிரம்>சரீரம் ,உடல்
உளைவு-வலி
துப்புரவுக்கு-துப்புரவாக-சுத்தமாக
அயர்த்துப் போதல்-மறந்து போதல்
இஞ்சாலையோ அங்காலையோ- இங்கேயோ அங்கேயோ
இழுத்துப் பறிச்சுக் கொண்டு-ஊசலாடிக் கொண்டு
கிடக்கேக்கை<கிடக்கை +இல் (க்)+ஏ<கிடக்கையில்க்கே<கிடக்கையிலே 
மைக்கா நாள் -மறுநாள்
கை பறிஞ்சு போதல்-கை மீறிப் போதல்
திறமான தாள்-தரமான காகிதம்
பினைதல்-பிசைதல்
ஆற்றேலாமல்- (மனதை)ஆற்ற +ஏலாமல் 
சொல்லீட்டன்= சொல்லி+இட்டேன் -சொல்லி வைத்தேன் -சொல்லிவிட்டேன்
உபாதி-வேதனை
உத்தரித்தல் -வேதனை படுதல்
சத்தம் சலார்- சந்தடி,இரைச்சல்
தன்னிட்டவாரம்=தன்+இட்ட+வாரம்
>தான் விரும்பிய விருப்பம்(படி) >தன்னிச்சையாக 
தொட்டி-stall
போக்காட்ட> போக்கு+ஆட்ட>போக்கு+துரத்த >போக்கித் துரத்த-அகற்ற
குரையை வைத்தல்-ஒலியை வைத்தல்,கதறி அழுதல்
சேடம்-சாகும் தறுவாயில் வரும் சுவாச இழுப்பு
உன்னவில்லை- நினைக்கவில்லை
சாலை-தரை 
மல்லாமலை> மள்ளா+மலை >மள்கா(த)+ மலை>
குறையாத மலை>அசையாத மலை  
தீண்டி- தொட்டு 

Author: ந.குணபாலன்
•3:28 PM

                                                               

                                                

                                                           பொன்னுக்குட்டி!
Levande norsk 6. skuleår பொத்தகத்திலிருந்து

நொர்ஷ்க்(நோர்வேஜியன்மூலம்:JACOB  B.BULL                                
தமிழாக்கம்.குணபாலன்


கதைக்களம்மலையும்,வயலும்,காடும்,கடலும்அருகருகே காணப்படும்
வடபுலவழி(NOR(TH) WAY) ஆன நோர்வே நாடு.
கதைக்காலம்ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே.


பாதிரிவளவு 

அந்த நாளைகளில் எங்கள் தகப்பனார் இசுத்திரண்டால் கோயிற்பற்றிலே பங்குத்தந்தையாக இருந்தவர்பணிய (lower) இசுத்திரண்டால் கிராமத்திலே ஒரு பெரிய பாதிரிவளவு இருந்ததுஎன்னுடைய சின்னவயசுப்பராய காலத்திலே நாங்கள் அங்கே குடியிருந்தோம். பாதிரிவளவிலே பெரியதொரு பாதிரிமாளிகைபணியாளர் குடிமனைகால்நடைக் கொட்டாரம்குதிரைமால்கொல்லுப் பட்டறைகலப்பை முதலிய கருவிகள் வைக்கும் கொட்டில்கூரை உச்சியில் மணியுடன் தானியக் களஞ்சியம் எனப் பல கட்டடங்கள்இருந்தன.

கால்நடைக் கொட்டாரம் தானியம்இறைச்சி வற்றல்கள்பதப்படுத்திய பழப்பாகு முதலியவை 
சேமித்து வைக்கப்படும் களஞ்சியம்கால்நடைக் கொட்டாரத்திலே ஒரு பத்துப் பன்னிரண்டு பசுஇரண்டு நாம்பன் மாடு,கிடாயும் மறியுமாக ஒரு இருபது மட்டில் கம்பளியாடு , இரண்டு,மூன்று சாவல் ,ஒரு பதினைந்து பேட்டுக்கோழிஏழெட்டு பன்றி என்றுநிறைந்து இருக்கும்பாதிரிவளவிற்கு சேருமதியான கமத்து நிலத்தில் வேலைக்கும்மற்றவெளி வேலைகளுக்கும்என்று நாலு குதிரை இருந்தது.

அந்தக் குதிரைகளில் பொன்னுக்குட்டியும் ஒன்றுபொன்னுக்குட்டிபாதிரிவளவில் பாதி செல்லப்பிள்ளைபாதி செல்வாக்கின் சின்னம்யாரென்றாலும் பொன்னுக்குட்டியை தொட்டுத்தடவி மேலைத்தேய்த்துமெருகூட்டலாம்தீன் கொடுக்கலாம்ஆனால் பாதிரிவளவின் தலைமைப் பணியாளான ஊலா யோன்சன் மட்டுமே பொன்னுக்குட்டியைத் தொட்டுச் சேணமிடவோவண்டியிற் பூட்டவோ முடியும்குதிரைச்சவுக்கு அதன் மேலிலே பட்டதேயில்லைஊலாவுக்கு அதில் இட்டமேயில்லைஅடங்காப் பிடாரியானகுதிரைக்குத்தான் சவுக்கடி தேவையாம்ஊலா சொல்லுவார்.

தெருவாலேவழியாலே இன்னொரு குதிரைவண்டி பொன்னுக்குட்டிக்கு முன்னாலே முந்தியடித்துக் கொண்டுபோகட்டும் பார்ப்போம்பொன்னுக்குட்டி விடமாட்டாதுபாதிரிவளவில் வளர்ந்த பொடியன்களான எங்களுக்குக் குதிரைவண்டிச் சவாரி என்றால்அதுவும் பொன்னுக்குட்டி வண்டி இழுக்குமென்றால் பிறகுஎன்னத்தை பறைவான்ஒரே புளகமும்பெருமிதமும் தான்குறிப்பாக நத்தார்க்காலத்து நடப்பைப் பற்றிச்சொல்லவேண்டும்நத்தார்க்காலம்வடந்தைக்காலம் (winter). சிந்து (snow) பெய்து அனைத்துமேவெண்மையாக இருக்கும்கூதிர்காலத்தில் இலையாடை களைந்து தவக்கோலம் கொண்ட மரவகையும்பிறத்தியார் முன்னே ஆடை மாற்றவே விரும்பாத தேவதாரு(pine) மரவகையும் வெண்ணிறத்தில் சிந்து ஆடைஅணிந்து தேவதைகளாக மாறியிருக்கும்வீடுவாசல்வழிவாய்க்கால்கோயில்குளம் என்று எங்கேபார்த்தாலுமே சிந்து படிந்து வெண்மையாக இருக்கும்கதழ்வண்டிகளை (sledge) குதிரைகள் இழுக்கும்.

ஓவியர்: எட்வார்ட் முங்க் (Edward Munch)
1912

நத்தார்ப் பூசை முடிய அனேகமாக மற்ற எல்லோரும் வெளிக்கிட்ட பின்னே பாதிரிவளவின் வண்டியைஇழுத்துக்கொண்டு பொன்னுக்குட்டி கிளம்பும்முன்னாலே ஒரு பத்துப்பன்னிரண்டு கதழ்வண்டியும்குதிரையும்போய்க்கொண்டிருக்கும்சும்மா விடுமே பொன்னுக்குட்டிசும்மா காற்றுப் போலே கடுகதியில் பறக்கும்ஆடைக்குள் மறையாத முகத்தை வடந்தைக்குளிரைச் சேர்த்துக் காற்று அறைந்து உரஞ்சும்ஊசியாகிக்குத்தும் குளிர்காற்றுப் பட்டுக் கண்ணிலிருந்து வடியும் கண்ணீர் கீழிறங்காமல் பின்னே காதை நோக்கிச்சிதறும்செவிமடல் விறைத்துச் சிவக்கும்காற்றாகிக் கடுகி விரையும் கதழ்வண்டியைத் தன் கட்டுக்குள்வைத்திருக்கும் முயற்சியில் அந்தக்குளிரிலும் பொடியாக வேர்வை அரும்ப ஒரு அரசனின் கம்பீரத்துடன் ஊலாயோன்சன் வண்டியைச் செலுத்துவார்பாதிரிவளவின் வளைவிலே ஆலியாக(ice) இறுகி உறைந்துபோயிருக்கும் துரவைத் தாண்டும்போது "முக்கால்வாசி ஊரை இண்டைக்கும் வெண்டாச்சுஎன்று கூவுவார்.

பொன்னுக்குட்டி சின்னப் பிள்ளைகளுடன் நல்லாக அணையும்.எனக்கு நேரே இளையவனான யுகான்னெசு மீதுபொன்னுக்குட்டிக்கு தனிப் பட்சம்யுகான்னெசு கிட்டப் போனால் காணும்அவன் தலையை உடம்பைமணக்கும்நக்கும்.அவனும் பொன்னுக்குட்டியின் கழுத்தைக் கட்டிப் பிடிப்பான்உடம்பைத்தேய்த்துமெருகூட்டுவான்தீன் கொடுப்பான்கொஞ்சிக் கொஞ்சி செல்லம் பொழிவான்கதைப்பான்.பொன்னுக்குட்டியும் சின்னஞ்சிறிய சீறல்கள் தலையாட்டல்கள் எல்லாம் போட்டபடி ஏதோஒருவகையில் அவனுடன் கதைக்கும்மற்றும்படி சிலநேரம் அவன் பிடரிமயிரைவாலை பிடித்து இழுத்துபண்ணும் அரியண்டம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்.காலத்தின் கணக்கும் ; பொன்னுக்குட்டியின்விதியை யுகான்னேசுவுடன் முடிச்சுப் போட்டிருந்தது அப்போதுஆருக்குத்தான் தெரியும்?
                                                
அந்தமுறை வடந்தைக்குளிர் கடுமையாக வாட்டி வதைத்ததுஅடுத்துத் தொடுத்து மாசக் கணக்கிலேவடந்தைக் குளிர் மறை எண் நுப்பது நுப்பத்தஞ்சுக்கிடையில் ஊசாடிக் கொண்டிருந்ததுபாதிரிவளவின்வேலியை அண்டி அற்புதமானதொரு சிற்றருவி பாய்கிறதுகொஞ்சம் ஒரு பா (plate) போலநீட்டிக்கொண்டிருக்கும் பாறையும்அதிலே வழியும் அருவியும் ஒரு கனவுலகத்தைக் காட்டும்கூரையாகஅமைந்த பாறையும் பாதுகாப்பானதாக இருந்தது.வழமைபோல் வடந்தைக்காலத்தில் சிற்றருவியும்ஆலியாகி(ice) உறைந்து போனதுமேலிருந்து கீழே பாய்ந்து உறைந்த அருவி ; அற்புதமானதூண்களாக.....,சுவராக......,தொங்குதிரையாக.....,தோரணங்களாக....,
மாயமானதொரு பளிங்கு மாளிகையாக....,பலவிதமான தோற்றங்களை எங்கள் மனக் கூத்துக்களுக்குஏற்றபடிகாட்டும்நாங்களும் மாயமந்திரக் கதைகளின் பாத்திரங்களாக மாறி விளையாடுவோம்அம்மா வந்துஅதட்டிக் கூப்பிடும் வரை;நேரகாலம் தெரியாது...,விறைக்கும் குளிர் உறைக்காது..., வேளைகாலத்தோடுமெல்லப்பரவும் இருட்டும் வெருட்டாதுஆலியாகிப் பளிங்காகி உறைந்துபோன ஆற்றுப்படுக்கையும் பலவிதக்கதைகளைப் பறையும்.ஆற்றுப் படுக்கையை உற்று ஊடுருவிப்  பார்த்தால் கருமையாக மருமங்கள் நிறைந்தநீரோட்டத்தையும் ஆழத்தில் காணலாம்கீழே காது வைத்துக் கேட்டால் செவிகளிலே தன் மன ஆழத்தின்மருமச் சங்கதிகளைஅது மெல்ல ஓதும்.எனக்குப் பத்து வயசு.யுகான்னேசுக்கு அப்போது ஐந்து வயசுஒரு பல் விழுந்துவிட்டதுபள்ளிக்குப் போகும்பராயம் வந்து விட்டது என்று அம்மா அடிக்கடி சொல்லுவாகோடை முடிய பள்ளியிலே சேர்க்கலாம் என்றுஅப்பா சொன்னார்ஆற்றுப் படுக்கையில் விளையாடப் போய்த்தான் யுகான்னெசுக்குட்டி வருத்தம் தேடிவந்தான்நுப்பத்தொன்பது நாற்பதிலே அனல் பறக்கக் காய்ச்சல்முட்டுத் தடிமன்மூச்சு கொறகொற என்றுஇழுக்க இருமல்.... ஐயோஉது வேறொன்றுமில்லை . ஊருக்குள்ளே பாலர்விருத்தர் என்று இன்னார் இனியார்என்று பாராமல் படுக்கையில் போட்ட பயங்கர வருத்தமேதான்சில வயசு போன சனங்களையும் பரலோகம்அனுப்பின சளிச்சுரம் தான் அது ஒரு பரிகாரியை அவசரத்துக்குப் பிடிக்க வேண்டுமென்றாலும் , ஐம்பது கட்டைதூரத்தில் இருக்கும் தீன்சேத்துக்குத் தான் போக வேண்டும்.

யுகான்னெசுக்குட்டி வருத்தத்தில் விழுந்து மூன்றாம் நாள்இருள் விலக விருப்பமில்லாமல் பொழுதை இறுக்கிகட்டிப் பிடித்திருக்கும் வடந்தைப் பருவத்துக் காலை நேரம்அன்றைக்கு என்று பார்த்து ஆலிக்கட்டிகளைஅறைந்து வீசியபடி சுழிக்காற்றுடன் புயல் அடித்ததுஅப்பா பதற்றத்துடன் ஊலாவின் குடிமனைக்குள்நுழைந்தார்ஊலா காலைத்தீனைத் தின்று முடிக்கவில்லை.
"ஊலாநீ இப்ப உடனடியாப் பரியாரியாரைக் கூட்டிவர வெளிக்கிடு"
கதவினருகேயே நின்றபடி அப்பா சொன்னார்.
"நிலைமை என்ன மோசமே தேவரீர்?" ஊலா கேட்டார்.
"ஓம் கொஞ்சம் பயப்படும் படியாத்தான் கிடக்கு"
ஊலா கடைசி மூன்று வாய் சாப்பாட்டையும் அவதியவதியாகத் திணித்தார்கரண்டியைக் கையால் துடைத்துவிட்டு எழுந்தார்.
"இப்ப வெளிக்கிட்டு எப்ப மட்டிலை திரும்புவாய் ஊலா?" அப்பா கவலையுடன் கேட்டார்.
"சொல்லத் தெரியேல்லை.போகவர நூறுகட்டைக்குக் குறையாமல் ஓட்டம்வடந்தைக்காலத்திலைவழமையாகவே தீன்சேத்துக்குப் பாதை உதவாதுபத்தும் பத்தாததுக்கு இண்டைக்கு எண்டு பார்த்துஆலிப்புயலும் சுழட்டி அடிக்கிதுஎன்று இழுத்தார் ஊலா.
"அப்பிடி எண்டால் நாளைக்கு வெள்ளாப்புக்கு முன்னம் வரேலாதுஇல்லையே?"அப்பாவின் முகத்தில் பயம்அப்பியதுஊலா ஒரு நுணுத்தம் (நிமிடம்யோசித்தார்பிறகு ஒரு தெளிவுக்கு வந்து;
"பொன்னுக்குட்டியைக் கூட்டிப் போவம் தேவரீர்!" என்று அப்பாவின் மனதை ஆறுதல் படுத்தத் தெண்டித்தார்அப்பா நாலு எட்டு நடந்தார்நெற்றியைத் தடவிக் கொண்டார்;
"அப்ப இரவைக்கு முன்னம் வந்திடலாமே ?" என்று கேட்டார்.
"என்னாலை ஏலுமான மட்டிலை வலு கெதியிலை வரத் தெண்டிக்கிறன்என்று ஊலா கம்பளியும் தோலுமானவெளியாடைகளை பக்குவமாக அணிந்து கொண்டார்.
"ஓமடாப்பாஉனக்குப் புண்ணியமாப் போடும்சுறுக்கா வரப்பார்ஒரு உசிரைக் காப்பாத்திற காரியமெல்லே?" கெஞ்சுவது போல கேட்டார் அப்பா
"தேவரீர் கவலையை விடுங்கோகர்த்தர் காப்பாத்துவார்"

ஊலா குதிரைமாலில் இருந்து  பொன்னுக்குட்டியைக் கூட்டிவந்தார்மற்றப் பணியாளர் பாரம் குறைந்தகதழ்வண்டியைக் கொண்டு வந்தனர்வண்டியிலே பொன்னுக்குட்டியை ஊலா பூட்டினார்சலங்கை மாலையும்கழுத்துமாக என்றைக்குமில்லாத பொலிவும்செந்தலிப்புமாக பொன்னுக்குட்டி இருந்ததுஅதன் கருவிழிகள்அழகாகப் பளபளத்தனஅப்பா திரும்பவும் அவதியாக வெளியே ஓடிவந்தார்.
"நிலைமை எக்கச்சக்கமாகப் போய்க்கொண்டிருக்கு ஊலாஎம்மளவுக்குக் கெதியா வண்டிலை ஓட்டேலுமோஅம்மளவுக்குக் கெதியா ஓட்டு"   
"சரி தேவரீர்!" ஊலா மூக்கணாங்கயிற்றைப் பற்றினார்.
"கொஞ்சம் பொறு ஊலா!" அப்பா குதிரைமாலுக்குள் ஓடிப்போய்ச் சவுக்கை எடுத்து வந்து நீட்டினார்.
"இண்டை மட்டுக்கு இதைப்பாவிவாற பாவம் என்னை வந்து சேரட்டும்"
"தேவை எண்டால் பார்ப்பம்"என்ற ஊலாவின் குரலில் எரிச்சல் தெரிந்ததுபொன்னுக்குட்டியை அப்பாதடவினார்நானும் முகத்தோடு முகம் வைத்து தலையை,உடம்பைத் தடவி பயணம் அனுப்பினேன்.
"ம்சுறுக்காப் போய் சுறுக்காத் திரும்பி வாங்கோகர்த்தர் உங்களோடை துணை வருவார்சிலுவைக்குறிஇட்டு வாழ்த்தி அனுப்பினார் அப்பாவண்டி வெளிக்கிடவும் மணி ஆறு அடிக்கவும் சரியாக இருந்தது .

அன்றைய பொழுது ஒரு சுமையான நீண்ட பொழுதாக வீட்டிலிருந்த எங்களுக்கும்வடந்தைப் புயலையும்பாராது வெளியே சென்ற ஊலாவுக்கும் பொன்னுக்குட்டிக்கும் ஆகிப் போனதுவருத்தத்தின் அகோரத்தில் தம்பியுகான்னெசு வாடிய கொடிபோலத் துவண்டு போய்க் கிடந்தான்நேரம் போகப்போக ஆபத்து அதிகரிப்பதைஎன் பெற்றோர் முகங்கள் காட்டினஅதை விளங்கிக் கொள்ளக் கூடிய பராயந்தான் எனக்கும்அச்சம்என்னைப் பிடித்து உலுப்பியதுமனத் திரையில் பல பயங்கரப் படங்கள் விரிந்தனஇழவுவீடு...,சவக்காலை..., சவ அடக்கம்..., பரியாரியார்..., மருந்துக் குளிகைகள் குடிநீர்..., யுகான்னெசுவின் கூத்து குழப்படி..., அம்மாவின்சிரிப்பு..., எல்லாமே வந்து போயின.

இப்படியான பற்பல நினைவுகளிலும் அல்லாடியபடி வெளியே வந்தேன்புயல் பின்னேரம் நாலு மணியின் மேலேகொஞ்சம் குறைந்ததுஆனாலும் அடிக்கடி ஆலிக்கட்டிகளை வாரியடித்துச் சேட்டை விட்டபடிஇருந்தது.குளிருக்குத் தலையைக் காதுகளைப் பாதுகாக்கும் கம்பளிக் குல்லாயும் இல்லாமல் , செவிமடல்இரண்டும் குளிரில் விறைத்துப் பகபக என எரிய.., கண்ணால் வழிந்த கண்ணீர் கன்னத்தில் உறைய.., எனக்குஎதுவும் உறைக்கவில்லை.காதிரண்டும் பொன்னுக்குட்டியின் சலங்கைச் சத்தத்தை நாடித் தவித்தன.
"பொன்னுக்குட்டி இரவுக்கு வந்திடும்...இரவுக்கு வந்திடும்..." என்று இடைக்கிடை மென்மையாகத் தவழ்ந்தகாற்று காதிலே ஓதுவது போலே இருந்ததுஏதாவது அற்புதத்தை நடத்தி என் தம்பியைப் பிழைக்கவைக்கும்படி கர்த்தரை மன்றாடியபடி நின்றேன்.
                                                                                                                                       (தொடரும்)கால்நடைக் கொட்டாரம்-farm house
நாம்பன்-காளைமாடு
கமத்துநிலம்-விவசாயநிலம் 
மேல்-உடம்பு
மெருகூட்டல்-polish  செய்தல் 
தீன்-உணவு 
புளகம்-புளுகம்,மகிழ்ச்சி
என்னத்தைப் பறைவான்?-என்னத்தைச் சொல்வது?

தமிழ் ஆர்வலர்,ஆய்வாளர் இராம.கி அவர்களின் பரிந்துரைப்படி 
வடந்தை-winter
சிந்து-snow
ஆலி-ice
கதழ்வண்டி-sledge 
நுணுத்தம்-நிமிடம் 

துரவு-சிறு நீர்நிலை,குட்டை
அணையும்-சேரும்
பட்சம்-அன்பு
அரியண்டம்-தொந்தரவு
மாசக்கணக்கிலே  -மாசங்களாக 
மறை எண் -minus எண் 
நுப்பதுமுப்பது
பா-plate 
வேளைகாலத்தோடு-நேரம் முந்தி
செல்லம் பொழிவான் - ஆசையாக அன்பாக கதைப்பான் 
பாலர் விருத்தர் -பிள்ளைகள் முதியோர்
இன்னார் இனியார்-வேண்டாதவர் வேண்டியவர் 
பரிகாரி-வைத்தியர்
கட்டை-ஆங்கில அளவு முறையில் மைல்
வருத்தம்-நோய் 
எப்ப மட்டிலைஎந்நேரம் அளவில் 
தெண்டித்தல்-முயற்சித்தல்
இரவைக்கு-இரவுக்கு
வெள்ளாப்பு-அதிகாலை 
செந்தலிப்பு-செந்தளிப்பு,செழிப்பு 
சுறுக்கு-விரைவு
கெதியாக-கதியாக,விரைவாக
பாவி-பிரயோகி
கால்நடைக் கொட்டாரம்-farm house
நாம்பன்-காளைமாடு
கமத்துநிலம்-விவசாயநிலம் 
மேல்-உடம்பு
மெருகூட்டல்-polish  செய்தல் 
தீன்-உணவு 
புளகம்-புளுகம்,மகிழ்ச்சி
என்னத்தைப் பறைவான்?-என்னத்தைச் சொல்வது?