Author: ந.குணபாலன்
•8:21 AM

பசந்தத்தின் வரவு பற்றிய ஏக்கம்! 

கவிதை வடிவம்: ஹன்ஸ் ஹில்ட்பக் (Hans Hyldbakk )
இசை வடிவம்: ஹென்னிங் சொம்மர்றூ(Henning Sommerro)
தமிழ் வடிவம் : ந.குணபாலன்
             
நெடிதுயர் மலைச்சுவரில் வெயில் நேர்ந்து வரையும் கோலம்!
பசந்தத்தின் வரவு பார்த்து மனசில் பரவச நதி ஒன்று ஊறும்.                        பசந்தம்-வசந்தம்
ஒடுங்கிய பள்ளத்தாக்கு எங்கும் உலாவும் ஒரு இன்ப இசைக் கோலம்!
இசைந்து வரும் தென்புலக் காற்று மனம் இனிக்க எனை வருடும்.

சூரியத்தூரிகை தடவி மலைகளில் அழகிய கோலங்கள் சூட்டும்!
உருகும் சிற்றோடைகளின் இசை உய்க்க நானும் விரைந்திட வேண்டும்!
கூரிய ஏற்றம் கொண்ட மலைப்பார்வழி குறிவைத்த பாதை காட்டும்.
வரை முடி வளரும் புல் பூண்டு பூக்களின் வாசம் நுகர்வேன் மீண்டும்!              வரை-மலை

 உயிர்க்கும் பசும்புல் வாசம் ஒவ்வொரு பிட்டியும் துளிர்க்கும்! 
 வெயில் மெய் வருட மேயும் கால்நடைகளின் கழுத்து மணி ஒலிக்கும்!
 மயக்கும் பளிங்கின் தெளிவுடை மடுவில் நீந்தி நீராடி களிப்பேன்.      
 உயர்மலை சூழ்ந்து காவல் நிற்க, உகந்து வெயில் குளிப்பேன்.

 ஓவெனைப் படைத்தோய்! என்னதொரு அதிசயப் பொழுது தந்தாய்!
 தூவெண்பனி தரித்த முகடுகள் மீறி தூய் கதிர் நிலம் தொட வைத்தாய்!
 பசந்தம் தூரம் இல்லை! அறிவேன்! அதைப் பாடும் பருவம் படைத்தாய்!
 இசைந்து இன்னொரு கோடை நானும் காண இன்னருள் ஈந்தாய்!

 ஆலி நிலை மாறும், உருகும் இனிய குளிர்பானம் அனைய;                          ஆலி- உறைந்த பனி 
 சிலிர்க்கும் சிற்றோடை சலசலக்க காத்திருக்கும் அறிவேன்.
 இலையுதிர்காலம் இறுதிப் புற்கட்டும் பரண் ஏறிய பின்னே,
 விலையிலாக் கோடை விளைத்த கொடைக்கு நன்றி நவில்வேன்.


இந்தப் பாடல் கவிதை வடிவத்தில் ஹன்ஸ் ஹில்ட்பக் என்பவரால் ஏப்ரல் 1945 இல் இயற்றப் பட்டது. மத்திய நோர்வேயின் வடக்கு மோரை வட்டாரப் பேச்சுவழக்கில் இயற்றப்பட்ட கவிவடிவம். நாசிக்களின் பிடியிலிருந்து நோர்வே விடுபடும் பலமான அறிகுறி தெரிந்த காலம். விடுதலையை விரும்பிய ஒரு உருவகமாக (metaphor)  இக்கவிதை விளங்கியது. 1977 இல் ஹென்னிங் சும்மர்றூ இதற்கு இசைவடிவம் கொடுத்தார். முதலில் அறிமுகமாகி என்னைக் கவர்ந்தது  இசைவடிவமே. பின் கவிதை வடிவமும்  என்னை ஈர்த்தது.

இசைக்கு மொழி தேவையில்லைதான். ஆனாலும் கருத்தும் புரிந்தால் இனிமை தான்.
This entry was posted on 8:21 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On April 13, 2015 at 6:09 PM , Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 
On April 14, 2015 at 1:29 AM , yathavan nambi said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

 
On August 23, 2015 at 9:40 AM , Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/