Author: ந.குணபாலன்
•1:31 PM

                             ஊரவர் கவலை! 

                                                                
                                                 எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                ( ASTRID LINDGREN, SWEEDEN )
                                                                   (14/11-1907 --- 22/01-2002)
                                                        ஓவியம்: பியோர்ன் பெர்க், சுவீடன் 
                                                                    ( Björn Berg , SWEEDEN)  
                                                                     (17/09-1923 ---- 14/07-2008)
                                                                       தமிழாக்கம்: ந.குணபாலன் 
மேப்பிள் பிட்டி ஏமில் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ?  பூனைக்கலட்டி வளவு, மேப்பிள்பிட்டி, சின்னான்காமம் என்ற முகவரியில் வசித்த அந்த ஏமில் பொடியனைத் தெரியுமோ? என்னது தெரியாதோ? ஒன்று மட்டும் உங்களுக்குத் திடமாகச் சொல்லுவேன். பூனைக்கலட்டி வளவுக்கார சனங்களினுடைய ஏமில் என்கிற துடுதுடுத்தவன் அடிக்கிற கூத்துக்களைப் பற்றி அறியாதவர் யாருமே மேப்பிள்பிட்டியில் கிடையாது. வரியம் 365 நாளும் ஏமில் செய்கின்ற தறுகுறும்புகளைப் பற்றிக் கண்டும், கேள்விப் பட்டும் ஆற்ற மாட்டாமல் ஒருமுறை அவனைப் பிடித்து அமேரிக்கா அனுப்பவும் யோசித்தார்கள். அமேரிக்காவுக்குப் புகைக்கப்பலில் போவது என்றால் இலேசுப்பட்ட காரியமில்லை. கனக்கக் காசு வேண்டும்.மெய் மெய்யாக, மேப்பிள்பிட்டிச் சனங்கள் ஏமிலை அமேரிக்கா அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக காசும் தெண்டிச் சேர்த்தார்கள். அந்தக் காசை ஒரு முடிச்சாக்கி ஏமிலின் தாய் அல்மாவிடம் கொடுத்தார்கள்.
" ஏமிலை அமேரிக்கா அனுப்பி வைக்க இந்தக் காசு போதும் எண்டு  நினைக்கிறம்."என்று இரக்கத்துடன் கூறினார்கள். ஏமிலை அமேரிக்கா அனுப்பி வைத்தால் மேப்பிள்பிட்டியில் அமைதி ஏற்படும் என்று அவர்கள் நினைத்தார்கள்.  

அது மெய்தான், ஆனால் ஏமிலின் அம்மாவுக்கு வந்த கோவத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! பொல்லாத கொதி வந்து காசுமுடிச்சை கீழே தட்டி விட்டா. காகக் கூட்டத்தில் கல்லெறி விழுந்தது போல அனைவரும் ஓடி விட்டார்கள்.
" மெய் மெய்யா ஏமிலைப் போல ஒரு நல்ல பிள்ளையை நீங்கள் ஒருத்தரும், எங்கையும் காண முடியாது. இப்படித் துடினமான ஏமில் தான் எங்களுக்கு வேணும். அவனிலை நாங்கள் எல்லாரும் நல்ல பட்சமாத்தான் இருக்கிறம்" என்று கத்தினா.
லீனா, பூனைக்கலட்டி வளவின் வேலைக்காரப் பெண் வாய் சும்மா கிடவாமல் சொன்னாள்:
"நாங்கள் கொஞ்சம் அமேரிக்காக்காறரையும் நினைச்சுப் பார்க்க வேணும். அவங்கள் எங்களுக்கு ஒரு கெடுதியும் செய்ததில்லை. அப்படி இருக்க ஏன் ஏமிலை அங்கே அனுப்பி அவங்களை உபத்திரவம் செய்ய வேணும்?"

அப்போது அல்மா, லீனாவை முழுசி ஒரு பார்வை பார்த்தா. லீனாவுக்கும் தான் மோட்டுத்தனமாக என்னவோ சொல்லிவிட்டது பிடிபட்டது. தடக்கித் தடக்கி கதையை மாற்ற தெண்டித்து,
"ஓம்.....ஆனால்...... பயங்கரமான பூமி நடுக்கமாம்.....மேரிக்காவிலையாம்.... எண்டு வீமாபுரி .........  தாளிகையிலை போட்டிருக்காம்...... அங்கே போனால் ஏமிலுக்கும் தானே கூடாது...... எண்டு  சொல்லவாறன்...." என்றாள். அவளுக்குக் கதை கொன்னை தட்டினது.
"உச்! லீனா! போ! மாட்டுக் கொட்டிலுக்குப் போய்ப் பாலைக்கற! அதுதான் நீ விளங்கிச் செய்யிற வேலை." அதட்டினா ஏமிலின் அம்மா.

பால்வாளியை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குப் போய் லீனா பாலைக் கறக்கத் துவங்கினாள். பால், சர்ர்ர்!, சர்ர்ர்! என்று சீறி நுரைத்தபடி வாளிக்குள் சேர்ந்தது. லீனாவுக்குக் கோவம் வந்தால் கடுமையாக வேலை செய்வாள். ஆனபடியால் அப்போதும் வலு கதியாக பால் கறந்தாள். ஏதோ புறுபுறுத்தாள்.
"கொஞ்சம் எண்டாலும் ஒரு நீதி, ஞாயம்  இருக்க வேணும். சகல துன்பங்களையும் அமேரிக்காக்காறங்கள் தானோ தாங்க வேணும்? வேணுமெண்டால் ஒண்டு செய்யலாம். ஒண்டைக் குடுத்து இன்னொண்டை வாங்கலாம். நான் பார், அவங்களுக்கு `இதோ உங்களுக்கு ஏமில்! வதிலுக்கு இவ்விடம் பூமிநடுக்கத்தை அனுப்பி வைக்கவும்! ´ எண்டு ஒரு கடிதம் எழுதிறன் பார்"

ஆனால் லீனா சரியான புழுகி. சின்னான்காமத்தில் எவரும் லீனாவின் கையெழுத்தை வாசிக்க முடியாது! அம்மளவு மோசமான கிறுக்கல் எழுத்து. நிலைமை இப்படியாக இருக்க,  அமேரிக்காக்கடிதம் எழுத லீனா பொருத்தமானவள் தானோ? அப்படி ஒரு அமேரிக்காக்கடிதம் எழுத வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற ஆள் ஏமிலின் அம்மா தான். எழுதுவது என்பது அவவுக்கு ஒரு கலை! ஏமில் அடிக்கின்ற கூத்துக்கள், பண்ணுகின்ற அட்டகாசங்கள் எல்லாவற்றையும் எழுதி வைப்பது அவவின் வழக்கம். அப்படி எழுதி வைக்கின்ற பொத்தகத்தை மேசையின் இழுப்பறைக்குள் பூட்டி வைப்பா.

" இப்படி எழுதி வைக்கிறதாலே என்ன பலன்?" புறுபுறுப்பார் ஏமிலின் அப்பா அந்தோன்.
"..... உவன் பொடியன் அடிக்கிற கூத்துக்கள் காணாது எண்டு அதைப்போய் எழுதி பேனையையும் , மையையும், பொத்தகத் தாளையும் வீணாகச் செலவழிக்கிறாய். அதையும் ஒருக்கால் யோசிச்சுப் பார்! நாலு காசு மிச்சம் பிடிக்கப் பழக வேணும்."
ஆனால் அல்மா அவரது கதையை ஒரு கணக்கில் எடுப்பதில்லை. நாள்தோறும் ஏமிலின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதி வைப்பா. ஒருநேரம் எதிர்காலத்தில் ஏமில் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிப்பான்....., தான் அடித்த கூத்துக்களைப் பற்றி எல்லாம் கனதூரம் சிந்தித்துப் பார்ப்பான்....., ஏன் தன் தாயாருக்கு இம்மளவு வேளைக்கு நரைத்தது என்று ஆராய்ந்து உணர்வான்...., அதன்மேல் அவவில், தலை நரைத்த தன் அம்மாவில் இன்னும் கூடுதலாக அன்பாக இருப்பான்...., என்றெல்லாம்  அல்மா நினைத்தா.

ஏமில் ஒரு தறுதலை என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது! அல்மா, ஏமிலை ஒரு நல்ல பிள்ளை என்று சொன்னதும் மெய்தான்! களங்கமில்லாத நீலக் கண்களும், தேவதை போன்ற இளமஞ்சள் வண்ணத் தலைமயிரும் உள்ள குணசாலியான பொடியன் ஏமில் என்று ஒரு ஞாயமான முறையில் உண்மையைத்தான் அல்மா அந்த நீலநிற மட்டை போட்ட பொத்தகத்தில் எழுதி வைத்தா.


" நேற்று ஏமில் நல்ல பிள்ளையாக இருந்தான்." என்று அவ பொத்தகத்தில் யூன் மாசம் 27ந் திகதி குறித்து வைத்தா.

" நாள் முழுக்க ஒரு குழப்பமும் இல்லை. " சங்கதி என்ன என்று கண்டால், தம்பிப்பிள்ளையார் நல்ல காய்ச்சலில் ஒன்றுக்கும் இயக்கம் இல்லாமல் படுத்த படுக்கை தான்.

ஆனால் மைக்காநாள் இருபத்தெட்டாந் திகதி, காய்ச்சல் கொஞ்சம் குறைந்ததும், ஏமிலின் கூத்துக்கள் பொத்தகத்தில் பல பக்கங்களை நிரப்பி எழுதும் படிக்குக் கூடுதலாக அமைந்தன. நாம்பன் மாடு மாதிரிப் பலம் அந்தப் பொடியனுக்கு! கொஞ்சம் வருத்தம் சுகமாகின உடனே அவனது அட்டகாசம் துவங்கி விட்டது.


"உலகத்திலே வேறு எந்த ஒரு இடத்திலையும் இப்படி ஒரு குழப்படிக்காரப் பொடியனைக் காணேலாது" லீனா புறுபுறுப்பாள். இத்தறைக்கு உங்களுக்கு, லீனாவுக்கு ஏமிலைப் பெரிதாகப் பிடிக்காது என்பது விளங்கியிருக்கும். லீனாவுக்கு ஈடாவில் நல்ல பட்சம். அது ஏமிலின் தங்கச்சி. நல்ல பதுமையான பிள்ளை; சொல்லுவழி கேட்டு நடக்கும் பிள்ளை.


ஆனால் கமத்துவேலையாள் அல்பிறெட், அவனுக்கு ஏமில் மீது நல்ல வாரப்பாடு. ஏனென்று தெரியவில்லை, ஏமிலுக்கும் அல்பிறெட்டோடு நல்லாக வழி போகும். அந்தந்த நாளுக்குரிய வேலை நேரம் முடிந்ததும் அல்பிறெட்டும் ஏமிலும் நன்றாகப் பம்பல் அடிப்பார்கள். அவசியமான பல வேலைகளை அல்பிறெட், ஏமிலுக்கு பழக்கிக் கொடுப்பான். குதிரைக்குச் சேணமிடுதல், நீச்சல், ஏரியில் மீன் பிடித்தல், சாணை பிடித்தல், புகையிலைத்தூளை மேல் சொண்டுக்குள் அதக்குதல்.... வந்து.... அந்த கடைசியாக சொன்னது ஒன்றும் அவசியமான வேலையில்லை. புகைத்தல் போன்ற ஒரு கெட்ட பழக்கம்தான். அல்பிறெட் செய்வதெல்லாம் தானும் செய்து பார்க்க வேண்டும் என விரும்பின படியால் தான் புகையிலைத்தூளை மேல்சொண்டுக்குள் அதக்க வெளிக்கிட்டான். ஒரேயொருதரம் மட்டுந்தான் ஏமில் அதைச் செய்து பார்த்தவன். எப்பிடி இருக்கும் என்று அறிவதற்காகச் செய்தவன். கொஞ்ச நேரத்தில் தலை கிறுகிறுக்க வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. காறாப்பித் துப்பின பின் இனிமேல் அதை மணந்தும் பார்ப்பதில்லை என முடிவெடுத்தான்.


அல்பிறெட் மரத்தில் ஒரு துவக்குச் செய்து ஏமிலுக்குக் கொடுத்தான். அந்த மரத்துவக்குத்தான் ஏமிலின் பெரிய திரவியமான சொத்து. அடுத்து ஒரு நலங்கிப்போன தாழ்வாரத்தொப்பி(caps). எப்போதோ ஒருமுறை ஏமிலின் அப்பா அந்தோன் நகரத்துக்குப் போய்வந்த வேளை  ஏமிலுக்காக வாங்கி வந்தார். தான் ஏன் அதை வாங்குகின்றேன்?, அதை வைத்து என்ன செய்யப் போகின்றேன் என்று ஒரு யோசனையும் இல்லாமல், சும்மா ஒரு எழுந்தமானத்திற்கு வாங்கி விட்டார். பெயர்ந்து தான் யோசித்தார் அநியாயத்துக்குக் காசு செலவழித்து விட்டேனே என்று. சரி போன புத்தியை ஆனை கட்டி இழுக்க முடியாது என்று சொல்லி அதை கொண்டு வந்து ஏமிலுக்குக் கொடுத்தார்.


ஏமில் அந்தத் தொப்பியைக் கழற்றி வைப்பது அருமை. நித்திரை கொள்ளும் போதும் கூட தொப்பியுடனேயே நித்திரை கொள்ளுவான். நல்ல பாவனை, அதனால் தொப்பி கொஞ்சம் கிழிசல் கண்டது. ஆனாலும் ஏமில் அதனைக் கைபறிய விடுவதில்லை.

" என்னுடைய வாக்கு என்றென்றும்  என்னுடைய  துப்பாக்கிக்கும், என்னுடைய தொப்பாக்கிக்கும் (தொப்பி)  உரித்தானது" என்று தேர்தல் பிரசாரம் செய்பவன் போல சின்னான்காமத்து பேச்சுவழக்கில் சொல்லுவான். படுக்கையிலும் அவனுடைய துப்பாக்கியும், அவனுடைய தொப்பாக்கியும் அவனுடன் கூடவே இருக்கும்.

அது கிடக்க, ஆரார் பூனைக்கலட்டி  வளவில் வசித்தனர் என்று உங்களுக்குத் தெரியுமோ? ஏமிலுக்கு அப்பா அந்தோன், அம்மா அல்மா, தங்கச்சி ஈடா, கமத்துவேலையாள் அல்பிறெட், வேலைக்காரப்பெண் லீனா, அத்துடன் ஏமில் என்கின்ற ஏமில்.இன்னும் ஒரு ஆளைப் பற்றியும் நாங்கள் மறக்காமல் குறிப்பிட வேண்டும். வற்றல் மாயா என்கின்ற ஒரு மெலிந்த வயசான கிழவி.  அருகிலுள்ள காட்டில் இருந்த ஒரு  குடிலில் வசித்து வந்தா. ஏழை ; புருசன் , பிள்ளை, சகோதரம் என்று ஆருமற்ற தனியாள். கனகாலத்துக்கு முந்தி ஒருநாள் இல்லாக் கொடுமையில் ஒரு கடையில் வற்றல் இறைச்சி களவெடுக்கப் போய்ப் பிடிபட்டுப்போனா. அன்றிலிருந்து வற்றல் மாயா என்று பட்டப் பெயர் வந்தது. அந்தப் பட்டப்பேர் வந்து கனகாலம். வயசு போன சனங்களுக்குத் தான் அந்தப் பட்டப்பேரின் காரணம் தெரியும். அநேகமான மற்ற ஆட்களெல்லாம் அவவின் மெலிந்த, வயக்கெட்ட தோற்றத்தால் தான் அந்தப் பெயர் வந்ததாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஏன் எப்பவோ நடந்த கதையெல்லாம் இப்போது கிளறி அந்தப் பாவப்பட்ட மனிசியை வருத்துவான்?
வற்றல் மாயா பூனைக்கலட்டி வளவிற்கு அடிக்கடி வந்து போவா. சில நாட்களில் அடுப்படியில் கனக்க வேலைகள் இருக்கும், கொண்டாட்டம், நல்ல நாள் பெருநாள் என்றால் பலகாரம் செய்யும் வேலை நிறைய இருக்கும். அல்லது வீடு வாசல் தூசு தட்டிக் கழுவுகின்ற பெரிய வேலை இருக்கும். அப்படியான நேரங்களில் ஒரு கை உதவிக்கு என்று வருவா. சாப்பாடும், மற்றும் படி கோதுமைமா, பாண், இறைச்சி வற்றல், மரக்கறி, பழங்கள், பலகாரம் என்று எது அந்த நேரம் மேலதிகமாக உள்ளதோ அது கூலியாக கிடைக்கும்.

வற்றல் மாயா ஏமிலுக்கும், ஈடாவுக்கும் பயங்கரக் கதைகள் சொல்லுவா. பேய், பிசாசுக்கதைகள், ஆவிக்கதைகள், குறளிப் பேய்களின் அட்டகாசம், சூனியக்காரர்கள் ஏவி விடும் சாவங்கள் என்று இரவு நித்திரையைக் கெடுக்கும் கதைகளைச் சொல்லுவதில் அவவுக்கு ஒரு வகை சுகம், சந்தோசம்.  அது அவவுக்கு ஒரு கலை என்றும் கூடச் சொல்லலாம். கொலைகாரர்களையும், பெருங் கொள்ளைக்காரர்களையும் பற்றியும் கூட கதைகள் அளப்பா.


ஆனால் இப்போது உங்களுக்கு அவன் ஏமிலுடைய கூத்துக்களைப் பற்றிக் கேட்க ஆவலாக இருக்கும். காய்ச்சல், வருத்தம் என்று அவன் படுக்கையில் விழாத நாட்களில் அவனது திருகுதாளக் கூத்துக்கள் எப்படி இருக்கும் என்று அறிய விரும்புகின்றீர்கள், இல்லையே? சரி, ஏதாவது ஒருநாளைப் பொறுக்கி எடுத்துப் பார்ப்பமே? ஓம்! யூன் 28ந் திகதியை ஏன் எடுக்கப் படாது?

               
                                                   (தொடரும்)

சொல்விளக்கம்:

வரியம் - வருசம், வருடம்
தெண்டுதல் - இரத்தல், நேர்த்திக்காகத் தெண்டுதல்,
                   பொதுக்காரியங்கள் செய்வதற்காக பணவுதவி கேட்டுப் போதல்
ஆற்ற மாட்டாமல் - தாங்க மாட்டாமல்
துடினம் - துடியாட்டம்
பட்சம், பற்று, வாரப்பாடு - அன்பு
நன்றாக வழி போகும் - நல்ல ஒற்றுமை
மோட்டுத்தனம் - மூடத்தனம்
தெண்டித்தல் - முயற்சித்தல்
தாளிகை - நாளிதழ்
கொன்னை தட்டினது - திக்கினது
வதில் - பதில்
இயக்கம் - தென்பு
மைக்காநாள் - மறுநாள்
நாம்பன் மாடு - காளை மாடு
குழப்படி, புரளி(பிரளி) - குறும்பு
இத்தறைக்கும் - இந்நேரம்
பதுமையான - அமைதியான
பம்பல் - களிப்பு, மகிழ்ச்சி
முசிப்பாற்றி = முசுப்பு+ ஆற்றி = இளைப்பு+ஆற்றி - களிப்பு, மகிழ்ச்சி
பகடி(பகிடி) - கேலி
சாணை பிடித்தல் - கத்தி முதலிய ஆயுதங்களைக் கூர் தீட்டுதல்
சொண்டு - உதடு
அதக்குதல் - குதப்புதல்
வெளிக்கிட்டான் - துவங்கினான், புறப்பட்டான்
காறாப்பி - காறி
நலங்கி - நைந்து

This entry was posted on 1:31 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On November 20, 2014 at 1:44 AM , Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

 
On November 20, 2014 at 9:51 AM , ரூபன் said...

வணக்கம்
வாசிக்க வாசிக்க திகட்டவில்லை அருமையாக உள்ளது தொடருங்கள் அடுத்த பதிவுக்கா காத்திருக்கேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
On November 23, 2014 at 10:27 PM , ந.குணபாலன் said...

நன்றி!நன்றி! இன்னும் சில தறுகுறும்புகள் வரும்.
அன்புடன்
ந.குணபாலன்