Author: மணிமேகலா
•3:41 AM
தொழில் நுட்பம் வளர்ந்திட்டுது கண்டியளோ? பழைய சாமானுகளையும் சாப்பாடுகளையும் அதின்ர ருசியையும்  காணுறது இனி வலு கஸ்டம்.

’புட்டும் தேங்காய் பூவும் போல’ எண்டு இலங்கையின்ர  கிழக்கு பகுதியில் வாழுற  தமிழ் முஸ்லீம் சனங்களச் சொன்ன பழமொழி இப்பவும் காதில கேட்டுக் கொண்டிருக்கு.

திருவலகை எண்ட உடனம்  நினைவுக்கு வந்தது இந்தத் புட்டு + தேங்காய்ப்பூ கலவை.

புட்டையும் தேங்காய் பூவையும் கலந்து சுடச்சுட சாப்பிடுறது  ஒரு தனி ருசி. அதுக்குள்ள சீனியும் கலந்து சாப்பிடுவினம் சில பேர். இன்னும் கொஞ்சப்பேர் இருக்கினம் வாழைப்பழத்தையும் அதோட  பினைஞ்சு   சாப்பிடுவினம். புட்டும் மாம்பழமும் கூட நல்லாய் தான் இருக்கும்.

இன்னொரு விதமான combination உம் இருக்கு. அது புட்டும் முட்டைப் பொரியலும் அல்லது புட்டும் கத்தரிக்காய் பொரியலும். கொஞ்சப் பேருக்கு புட்டும் மீன் குழம்பும் பிடிக்கும். வேற சிலர் இருக்கினம் அவைக்கு  கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு வேணும். அல்லாட்டில்  சுடச் சுடப் புட்டும் பழைய வெந்தயக் குழம்பும். அதெண்டாச் சொல்லி வேலை இல்லை.

சரி சரி இப்ப ஏன் அதச் சொல்லி உங்களை மருட்டுவான்? அதுவும் அகாலப் பொழுதில; வேற வேற நாடுகளில....

தேங்காய் பூ கலந்து மூங்கில் குழலில அவிக்கிறதும்; பனை ஓலையில இணக்கின நீத்துப் பெட்டியில அவிக்கிறதும்;  அதத் தட்டுவத்தில் கொட்டி விட தனி வாசனை ஒண்டு வாறதும் இன்னமும் பச்சை குத்தின மாதிரி நினைவில நிக்கிது. அது பசிக்காதவையையும் பசிக்கப் பண்ணிப் போடும்.

இப்ப சுளகில புட்டுக் கொழிக்கிறதே மணி ஆச்சிக்கு மறந்து போச்சுது.

பால்ரின் பேணியால குத்தி, சுளகில கொளிச்சு, மணி மணியாக தெரிஞ்சு, பனை ஓலைப்பெட்டியில போட்டு, பிறகு ஒரு சிறங்கை எடுத்து குழலில போட்டு, நுனி விரலுகளால கோலி திருவின தேங்காய் பூவையும்  இடையில போட்டு,  வெள்ளனவே  நீராவி வந்து கொண்டிருக்கிற வாய் ஒடுங்கின புட்டுப் பானையில நெருப்படுப்பில அல்லாட்டில்  அதின்ர பிள்ளையைப் போல இருக்கிற சூட்டடுப்பிலையோ வச்சு ஆவி வந்த பிறகு இறக்கேக்க வாற வாசத்தை சொல்ல ஏலுமே?

நீத்துப் பெட்டிப் புட்டும் அந்த மாதிரித்தான்.

பிறகு உந்த ஸ்டீமர் எண்டு ஒரு சாதி வந்தது அலுமீனியத்தில. ஆனா நாங்கள் எப்பவும் நீத்துப் பெட்டியும் புட்டுக் குழலும் தான்.

இஞ்ச ATBC றேடியோவில சிரட்டைப்பிட்டு என்று வேறு ஒரு சாதியை விளம்பரப்படுத்துகினம். அது என்னவெண்டு தெரியேல்லை.

என்ர தோழி ஒருத்தி ஊருக்குப் போறனெண்டு சொன்ன நேரம் நான் சொல்லி விட்டது என்ன தெரியுமே?  இந்தச் சூட்டடுப்பையும் நீத்துப்பெட்டியையும் மூங்கில் குழலையும்  படம் எடுத்துக் கொண்டு வரச் சொல்லித் தான். நல்ல பிள்ளை எண்ட படியா மறக்காமல் படமெடுத்துக் கொண்டு வந்திட்டாள். எதிர் கால சந்ததிக்கு காட்ட  வேணுமெல்லே!

அடுப்புக்கு வந்த கதி என்ன தெரியுமே?

அது என்னடா எண்டா, நெருப்படுப்பு மண் எண்ணைக் குக்கராகி பிறகு அது மரத்தூள் அடுப்பாகி பிறகு கொஞ்சக் காலத்தால  எரிவாயு அடுப்பாகி இப்ப என்னடா எண்டா  மின்சார அடுப்பாக விளைஞ்சு  நிக்கிது. எதிர்காலத்தில வேணுமெண்டா இருந்து பாருங்கோ  சூரிய அடுப்புக் கூட வந்திடும்.

இப்ப நான் நான் சொல்ல வந்தது இந்த திருவலகையைப் பற்றி.

அரிவாள் மனை மாதிரி இதுவும் ஒரு திணுசு. குசினீக்க பாத்தியள் எண்டா இவை ரெண்டு பேரும் நல்ல சோடி. மாப்பிளை பொம்பிள மாதிரி! ஒராள் வெட்டிப்போடும். ஒராள் குத்திப் போடும்.

அத விடுங்கோ, திருவலகை இருக்கெல்லே, அதில குந்தி இருந்து துருவியால துருவ வேணும். பிறகு  அது கல்வீடு வளர அந்த நாகரிகத்தோட அதுவும் வளர்ந்து மேசையில் பூட்டுற மேசைத் திருவலகை ஆகி, பெம்பிளயளின்ர உடலசைவுகளைக் குறைச்சுப் போட்டுது. தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில எண்டா  திருவலகைக்கே வேலை இல்லாமல் ஏற்கனவே திருவி தேங்காய் பூ பக்கட்டில வந்து Freezer க்குள்ள குளிருக்குள்ள குந்தி இருக்குது; ரெடியா.

நின்று கூட நாங்கள்  இனித் துருவத் தேவையில்லை.

அப்ப உதுகள எல்லாம் இனி பாக்கிறதெங்க?

கிட்டடியில Sydney  Art Gallery க்குப் போயிருந்தனான். நம்புவியளே? அங்க இந்தோனேஷியா  நாட்டில பாவிச்ச ஒரு திருவலகையாம் எண்டு ஒரு திருவலகையைக்  காட்சிக்கு வைச்சிருந்திச்சினம்.

அது தான் இந்தப்படம்.

அதைக் காட்டத் தான் இந்தப் பதிவு.
நல்லா இருக்கெல்லே?

|
This entry was posted on 3:41 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 3, 2014 at 4:49 AM , ந.குணபாலன் said...

கவனம் திருவலையை ஒரு ஓரமாய் பக்குவமாய் வைக்கவேணும்.
கவனயீனமாய் இருந்தால் எக்கணம் காலிலை திருவலைப் பல்லுக் கீறிப் போடும். புண்ணாக்கிச்சுது எண்டால் நெறி கட்டி நடக்கவும் கயிட்டமாய் போடும்.

 
On July 3, 2014 at 6:34 PM , மணிமேகலா said...

:)ஓம் ஓம்.

திருவிப்போட்டு ஓரமா மூலைபக்கமா சாத்தி வச்சிட வேண்டும்.

 
On July 4, 2014 at 7:59 AM , Dr B Jambulingam said...

தங்களின் பதிவை சிகரம் பாரதி மூலமாக
அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

 
On July 5, 2014 at 6:03 PM , மணிமேகலா said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்கள் பகிர்வுக்கும் இணைப்புகளுக்கும்.

சிகரம் பாரதி அவர்களுக்கும் அவை உரித்தாகட்டும்.

 
On April 28, 2016 at 9:39 AM , Pragash said...
This comment has been removed by the author.
 
On April 28, 2016 at 9:44 AM , Pragash said...

தங்களின் படைப்பும், படங்களும் அருமை வாழ்த்துக்கள்.