Author: ந.குணபாலன்
•12:00 AM

சத்துருக்கன் விட்ட வெருட்டு 

"அமைதி காணப் பறந்தன ஆண்டுகள்.
சுமை சூழ்கலி நீங்க பற்றாயின சனம்.
எமை வாழ்த்தி ஆதரித்து ஏற்பாயினர்.
அமைந்து வளர்ந்தன அறுபது கலைகளும்.
நுமை நினைந்து நோன்புகள் நோற்றனம்.
தெற்கில் இருந்து தெறித்தது சேதி. 
கற்புடை மகளுனை கடத்தினர் எவரோ.
விற்கொண்டு வீரம் விளைக்காது வீணே 
நறவுண்ட நாட்கள் ஆண்டுகளாக நகர 
கறை வளர்த்தான் இராமன் கணவன் எனும் 
நிறை நீத்தான், நெடும்பழி குலம் சேர்த்தான்.
மறை அறி ஒற்று மாந்தர் ஒற்றவும் ஓங்கி 
இறைத்த குலமானம் அள்ளி மீட்க எண்ணி 
அறைந்த போல் ஓலை அனுப்பின அரசன்.
வரைந்த வரிகள் வகுத்த சேதி கேள்!

கேள் வைதேகி! கேகயத்துப் பேரமகன் 
ஆள் வைத்து இராமனுக்கு அனுப்பிய சேதி:
வாள் கொண்டு வருவேன் வரைமுறை கேட்டு.
கள்வருக்கும் கள்வனாமே அண்ணனே நீயும்?
கள்ளடியும், களவும் நீ கற்ற அரச கலையோ?
அள்ளையூர் காட்டிலே அடியொற்றி வந்தவளை  (அள்ளை-யானை)
வெளியாள் தூக்க வாய் பார்த்த வெருளியோ?
இளித்தபடி இருந்தானோ இலக்குவன்?     (பம்பல் அடித்தல்- சிரித்து 
பலியாக பெண் போக பம்பல் அடிக்கின்றீரோ?    வீண் பொழுது போக்குதல்) 
தோளில் சிலை என்ன சீலைக்குத் தொங்குவான்?  (என்ன சீலைக்குத்   
பன்னிரண்டு ஆண்டு பழமை ஆக                 தொங்குவான்?- என்ன             
இன்னும் மூன்று திங்கள் ஆகும். அதன்           பயனுக்கு தொங்க வேண்டும்?)        
முன்னே மனையாளுடனே முடி சூட வந்திடு!
முன்னவர் மரபுப் பெருமை காக்க முடுகு!
இல்லெங்கில் நின் அசைவு யாவும் அறிய 
அல்லிலும் உன்னைத் தூக்க ஆள் எனக்குண்டு.
கேகயத்து மன்னராம் என் மாமனும் மச்சினனும் 
பாகம் இரண்டிலும் பாதுகாப்பு அளிப்பார்.
வேகம் கிளம்பி வந்தால் உன் விரல் ஒடிப்பேன்.
தாகம் எனக்குண்டு தாயகம் கோசலம் காப்பது!
பரதன் போலெண்ணி என்னைப் பழிக்காதே!
விரதம் கொண்டேன் உன்னை அரியணை வைத்து 
அறங்காத்து அயோத்தி காப்பேன் இது ஆணை!
யோசித்து நட! யோக்கியனாய் இரு! 
யாசித்தாலும், யாரின் காலை நீ பிடித்தாலும் 
மாசம் மூன்று மாளும் முன்னே நாடது நாடு! 
பேசுந் தெய்வப் பெண்ணுடன் வீடது சேர்!

வீடது சேர்! என்று விட்ட வெருட்டு விரட்ட 
காடு நாடெல்லாம் அலைந்தான். கலைந்தான். 
கண்டம் கடந்து கடலும் கடந்து கருத்துடனே 
பெண்ணுனைச் சேர்ந்து பெரும்பழி நீங்கினன். 
விண்ணூரும் வேக வானத்தேரேறி வீடேகினன்.
கண்மணி நீ கருத்தூன்றி காரியம் ஆற்றிட உதவு.
பண்பும், அன்பும் அரச கடமையும் பழக்குவம். 
மண்ணையும், மக்களையும் மதிக்கப் பழக்குவம்.
கொஞ்சமும் நிமிராக் கோணல் எனில்
அஞ்சு விரல் பற்றி ஆட்டும் தோற்பாவை அவனாக  
பஞ்சம், பண்பழிவு நாடதில் பரவாது 
அஞ்சுகம் நீ கோசலம் ஆள்க! அறம் காக்க!
எஞ்ஞான்றும் சத்துருக்கன் நினை ஆதரிப்பன்!"
மஞ்சு பொழி மழையாய் மனம் பொழிந்தாள்.
கொஞ்சம் குழப்பம் கொண்டாலும், உள்ளினேன் 
நெஞ்சகம் பதியும் நேர்மொழி கொண்ட வாய்மொழி.

வாய்மொழி வளம் குறைந்தது இராமன் வசம். 
காய்நகர்த்தும் சத்துருக்கன் கைவண்ணம் 
மாயம் செய்த மாண்பு கோசலம் வாழ்ந்தது.
நேசன் சில திங்கள் நேர்வழி நேர்ந்த நெறியால்  
மாசம் சில மறைய மசக்கை உற்றேன் மாது நான்.
பாசம் கைவிட்டுப் பகை பிடித்த பாதகத்தி    (குரையை வைத்தாள்
கோசலையாள் வந்து குரையை வைத்தாள்.     -சத்தம் போட்டாள், குரை-ஒலி)  
"மாசுற்று மாற்றலர் மனை கண்டு மறைவாக    (மாற்றலர்-பகைவர்) 
பேசிய பன்னிரண்டு ஆண்டின் பெரும்பாகம் 
கூசம் கெட இருந்தவளே! கூறு கெட்டவளே!
இராக்கதிரன் மகளே! ஈனப் பிறவியடி நீ!
ஆரியத்து வேந்தர் குலம் கருவறுக்க 
கருக்கொண்டது யாரெந்தக் கள்வனுக்கு? 
விருத்தி ஆகிடுமோ? விளங்கிடுமோ வமிசம்?
தெருத் திண்ணைக் குந்துரஞ்சித் தேவனமாடுவார் (குந்துரஞ்சுதல்- வம்பு 
சிரித்துப் பகடி பண்ண சீர் சிதைந்த சீதை!                        கதைத்தல்,   குந்து -
நெருப்பில் நீ நடந்து நேர்ந்த சாலம்                                            திண்ணையின் ஒட்டு       
மருந்துக்கும் நான் நம்பேன். மடம் அல்ல நான்.        (தேவனம்-சூதாட்டம்)
ஒருத்தருக்கும் தெரியாமல் ஊர் விட்டோடு!"

ஊர் விட்டோடி உயரப் பறக்கும் பருந்து
இறாய்ஞ்ச வர, ஓடி அஞ்சும் புறாக்குஞ்சு        (இறாய்ஞ்சுதல் - தட்டிப் பறித்தல்) 
உருத்து வந்து காக்கும் தாய்ப் புறவின் உறவை            ( உருத்து-சினந்து) 
தவிப்புடன் தேடுதலாகும் தன்மையால்;
அவிந்த நெஞ்சை ஆறுதல் செய்வன் அன்பனென 
கவிந்த கண்ணீர் கன்னம் வழிய நோக்க, 
குவிந்த முகம் கூம்பிய அகம் கொண்ட 
பாவியின் வாயிலும் பழிச்சொல் வடிந்ததுவே! 
ஆவியை விடவோ என நான் அங்கலாய்க்க   
மேவிய மனத்து ஓர்மம் மேதினியில் நானும் 
காவியம் படைக்கும் காலம் வந்ததென ஓதும். 
அவை கூட்டி சத்துருக்கன் முன் அறைந்தேன்.


மீண்டும் அயோத்தியை நீங்குதல் 

அறைந்தேன் அனல் வீசும் என் எண்ணம்.
"இறை மீது ஆணைஇட்டேன் ஆயத்தோரே! என் 
கரு மீது ஆணையிட்டேன்! கதறி அழ மாட்டேன்!
நிறை அழிந்தவளோ? நிலம் தூற்ற நடந்தவளோ?
அறிவீர் இன்னாள் நீவிர் எவரும் என் ஆரம்பம்! 
இராக்கதிர் இனம் பிறந்து இடம் பிரிந்து 
ஆரியர் குல சனகன் மகளாய் ஆனவள் நான்!
பிறப்பால் நான் இலங்கையின் இலங்குதேவி!
சீர் மிகு வளர்ப்பால் சீதை, மிதிலாபுரி மைதிலி!
நிறை நீங்கிய சரித்திர மில்லை என்னிரு 
மறுவிலா மனையுடை பெற்றவர் பக்கலில்.
நெருப்பில் நடக்க வைத்தும் நேசம் வைத்தேன்.
அறம்பாடும் சொல் இன்று கோசலை இயற்றிட    (அறம்பாடுதல்-தீயன 
மறுதலிக்கா மன்னன் தாளம் போடுகின்றான்.         விளையப் பாடுதல்,                          
திராவிடம் திமிர் எடுக்க ஆரியம் கருவறுக்க                 திட்டுதல்)        
கருக் கொண்டேன் யாரோ கள்வனுக்கு என்ற 
உரை பொறுத்து உவனுடன் ஒருகணம் உறையேன்!
ஆரியமும், திராவிடமும் எனக்கிரு கண்ணே! 
சிரம் நீங்கிய சிகையான உந்தச் சீராமன் தன் 
தாரம் என்ற தரம் கெட்ட தகுதி விட்டேன். 
பாரமாகப் பெற்றோர் பக்கல் நாடேன்.
விரிகடல் உலகில் வீணான எனக்கும்
ஓரமாக ஒரு பக்கம் எங்கோ இருக்கும்.
கருத்துடன் கோசலத்து வாரிசு கலை வளரும்.
விருத் தெரியும் வயசில் விரும்பி என் மகவுக்கு        (விருத் தெரியும் வயசில் 
உரித்தான முடிசூட ஊர் மீண்டு வருவேன்.                          - விவரம் அறியும் வயசில்) 
வரும் வரை வாழிடம் தேடி ஆளிடம் போக்காதீர்!
எரிசூழ் என் மனதறிந்தீர்! என் அணுக்கம் தவிர்ப்பீர்!"   (அணுக்கம்-நெருக்கம்) 
தறைந்தேன் ஆணை. தவிக்கும் சத்துருக்கன்                (தறைதல்- ஆணியடித்தல்) 
கவிந்த மழைக் கண்ணுடன் விடை தந்தான்.
அவிந்த என் மனச றிந்தான். அடியொற்றி எவரும் 
குவிதல் கடிந்தான். காத்தான் கோசலைநாடு.


இலகூர் வாழ்வு 

கோசலைநாடு விட்டும் கோவம் விடாது 
வாசகம் எதுவும் எவர்க்கும் வாய்விடாது 
பழங்கதை மீட்டிப் படுத்தும் நினைவினால்  
கழனி விளைக்கும் கங்கைக் கரையும் 
தளர்ந்த திராவிடத் தென்னாட்டுத் தறையும்      ( தறை-தரை) 
விலக்கி விண்ணின் விளக்கம் படுக்கும் 
படுவான் திசை வழி தேடிப் படர்ந்தேன்.
நெடுநாள் நடந்து நல்லவரும், நன்மரமும்
கடும் பசி களைவரால், பெறுமாசம் நெருங்கவும்;  
இடுகடை ஒப்பது, இலகூர் அணைந்தேன்.       (இடுகடை-கொடையாளியின் 
இரவி ஆறு அளையும் கரையோ ரஞ்சில                                  வீட்டு வாசல்)   
ஈரநெஞ்சினர் குசாணர் எனை ஆதரித்தாரால்.    (இலகூர்-லாகூர்) 
கரந்து ஆங்கு றைந்தேன் கனகாலம்.
இராமாயணம் முழுப்பொய் இசை முழக்கும். 
வாசம் செய்ய வரை குடில் வழங்குவானாம்......   (வரை-மூங்கில்) 
பாசமுடன் வான்மீகிதன் பரிவைப் பாராட்டும்,
வேடம் அறியாத வெருளி உலகம்.
நாடகமாக நான் வாழ்ந்த வாழ்வின் 
பூடகம் புரிந்தவர் இலர் ஆங்கே.
புற்று வளர்த்த புழுகன் வான்மீகி அறியேன்.
வெற்றி வீரனாய் இராமனை வேண்டி அவன் 
பற்றி இழுத்த கதை, பாடல் ஏதும் அறியேன் 
திராவிடர் பொலிவைச் சிதைத்துத் திரித்து 
அரக்கர்,வானரர், இராக்கதிர் மாந்தர் என்ற
கருத்து உண்மை மறைத்து, கபடம் உரைத்த 
பெருங் கொண்டையர் பேச்சினால் 
"வான்வெளி மேவும் விஞ்சையன் மனையாள் யான். 
முன்னொரு நாள் முனியொருவள் முனிந்த சாவம்; 
இந்நாளில் தனித்த பிள்ளைத்தாய்ச்சியாக ஏங்க, 
வந்தேன் விரதம் வளர்க்க, ஐராவதிக் கரை  
வளர்வேன், வளர்ப்பேன் மகவு, என்றலையில் 
அளந்த அளவு அமையும் காலம் வரை" என்ன 
வழங்கிய என் வாய்மொழி வளர்த்தது அமைதி.

அமைதி சூழ ஆதரிக்கும் குசாணர் வாழ்த்தில் 
குமைந்த மனம் குளிரப், பிறந்த குருத்து ஒன்றல்ல! 
இமை போலும் இரணை மகனார் எழுகை!
இலகூர் எழுந்தானால் இலவன் என்றும்,
கலக்க முடன் வந்தாளை கைசேர்த்த அன்புக் 
குலமுடை குசாணர் நன்றியால் குசன் என்றும் 
இலக்கணமாய்ப் பெயர் இயற்றி அழைத்தேனே.
இராவாய்ப் பகலாய் இரு மதலையும் ஒலிக்கும்   
சிணுங்கலில் பால் சிந்தும் மாரணைத்து பாலூட்டி 
சாணைச்சீலை மாற்றி, நீராட்டிச் சந்தனம் பூசி,
ஓராட்டும் பாடல் வழி ஒழுக்கநெறி உரைத்துப்    
பாராட்டி வளர்த்தேன் என்னிரு பாலகரை,
இரவி ஆறாடும் இலகூரார் ஆதரிப்பாரால்.

ஆதரிப்பாரால் ஆங்கே நானுமென் இளவல்களை   
ஓதலும்,எழுத்தும் அறியும் பருவத்தே கல்வியுடன் 
சாதனம் இன்னும் சாற்றிடும் கலைகள் பயிற்றும்           (சாதனம் - கருவி
ஆசானிடம் பாடம் சொல்ல அண்ணித்திட 
மாசங்கள் ஆண்டுகளாய் மறுகியோடிய காலம். 
ஆசறு கலை அறுபத்தினான்கும் எய்தியரால் 
பாசமுடன் என் பதின்மவயதின் பிள்ளைகளை 
ஆசி பெய்து அன்பு முத்தம் ஈந்து உரை செய்தேன்.
குசாணர் குலத்துக் குறைவிலா அன்புக் கூட்டின்  
வசப்பட்டும், விஞ்சைப்பெண் என்ற வாய்மொழி விடாது, 
பேச மறுத்த பெயர்ந்த காலம், பிறப்பின் பின்புலம்,  
தேசம் அகன்ற தெளிந்த என் சிந்தையின் திடம், 
பதினேழு ஆண்டில் படர்ந்த சூளுரை, விளம்பி 
சாதிக்க வேண்டிய சரித்திரம் சொன்னேன்.
பதின்மப் பருவத்து அரத்தம் பொங்கப் பதைத்தார். 
கொதி யடக்கிக் "கோக்குலத் துக்காம் நோன்பு 
பதிவிடும் பழி உணர்வு விடுத்து, பரந்தாங்கே 
பதிவிடும் மக்கள் தமை மண்ணில் ஓம்புதலே!
தடம் தவறாச் சத்துருக்கன் தான் வழி நடத்த 
கோடாது கோசலத்துக் கோவென நாளும் ஆள்வான் 
முடி துறக்கும் காலம் இராமனுக்கும் முதிர்ந்தது!
மரபு வழி மணிமகுடம் இலவன் சூடி அரசு காக்க   (பிறங்குதல்-சிறத்தல்)
அறங் காத்து குசன் அருகிருக்க அயோத்திதன்                 பிறங்கல்-அரசன்    
பிறங்கிடும் பிறங்கல் பிறங்கடையீர்! பெருகிடுவீர்!            பிறங்கடை-         
நிறைந்து வாழ்வீர்! நீடு வாழ்வீர்! நிலவுலகில் மாதோ!"    வழித்தோன்றல்) 
என்வாக்கில் வலி கண்டார். எல்லை கண்டோம்,           (நத்தும்-விரும்பும், 
நன்மனத்துச் சத்துருக்கன் நத்தும் கோசலை நாடு.                               மதிக்கும்) 


தந்தை சொல் காப்பான்! 

நாடு நாடும் நம் மூவர் வரவைப்  
பாடு பார்த்துப் பறைந்த பறை. 
கொடி பறக்கும் கோட்டம் நீங்கி 
கோட்டி வந்து கும்பிட்ட ஒருவன்                           (கோட்டி-கோபுரவாசல்) 
அறிமுகம் செய்து அன்பு பெய்தான்.  
அருஞ்செல்வன் ஆவான் இவன்
அறக்காவலன் சத்துருக்கன் அரசி   
சுருதகீர்த்தி தந்த சுந்தரகீர்த்தி. 
அரமனை அழைத்து அசதி போக்கி 
கோடி உடுத்தி கொண்ட பசி நீக்க 
தேடிய என் விழித் தேடுதல் கண்டு 
அடங்கிய குரலில் அமைந்த வாறின்                        (வாறு-வரலாறு) 
படம் வரைந்தான். பொங்கிய பால்      
தண்ணீர் ஆலி தொடத் தானடங்கும்.                       (ஆலி-துளி) 
என்னுள் எரிவளர் தீயும் அவிந்து போகும்.
மின்னாமல் முழங்காமல் மினைக்கெடாமல் 
இன்னார் இனியார் என்னப் பாராமல்   
பன்னிப் பரவிய கோதாரி வருத்தம்  
கொன் றொழித்தது கோக்குலத் திலும்.
பலியான இராமன், பின் படர்ந்தார்  
தலைமுறை தழைக்கப் பிறந்த தனயர்.
பழியறியாப் பரதனும் தன் பரிசு கெட்டு                   (பரிசு-பெருமை) 
கெலித்த சிந்தையால் கெடுதல் பட்டான்.              (கெடுதல்-விபத்து) 
குலத்துக் குதவா இலக்குவன் குடிமாறி  
வலம்சேர் வான் அரர் வாழிடம் வளர்ந்தான்.           (வலம்-வலிமை, படை)
நல்லான் சத்துருக்கனும் நானில வாழ்வகலப்   
பொல்லா நோய் கண்டு போய்ச் சேர்ந்தான்.
மன்பதை காக்க மன்னவன் ஆயினன்,
மண்ணை நேசிக்கும் மகன் சுந்தரகீர்த்தி!

சுந்தரகீர்த்தி இன்னும் சொல்லுவான்,
அந்திம காலத்தில் அப்பனின் ஆசை.
என்று நான் திரும்பி வந்தாலும் எதிர்கொண்டு 
அன்புடன் என்னை அழைத்து ஆதரித்து  
என்மகனே எழில் மகுடம் ஏந்தும் 
முன்னுரிமை முதிசம் கொண்டானால் 
சொன்ன சொல் சோர்விலாது செய்க வென 
சத்துருக்கன் சாக்கிடையில் சாதிக்க சொன்ன     (சாக்கிடை- மரணப் படுக்கை) 
வித்தை விதைக்க விரும்பும் வீரமகன்.

விட்டுக் கொடுத்தல் 

வீரமகனின் மனம் விளையும் நல்லெண்ணம், 
சிரந்தாழ்த்தி சீராளன் சீராள, மனம் வாழ்த்தும். 
சிந்தையில் ஓர் எண்ணம் சிறைகொள்ள 
ஏந்தல்கள் என்னிரு மக்களையும் அணைத்து 
உந்திய என் எண்ணம் உரைத்தேன்.
"அரசனாம் சுந்தரகீர்த்தி தன் அறம்வளர்  
தரத்தால் அயோத்தியின் தலைவன் ஆயினன்!
மரபின் உரிமை மகுடம் உமக்கே ஆயினும் 
முன்பின் அறியாப்புது முகங்களாம் உம்மை 
மன்னரென ஏற்க மக்கள் மயங்குவர்.
நன்னெறிச் சுந்தரகீர்த்தியே நம்மாள் என 
உன்னிடும் உண்மையில் ஊறு செய்ய வேண்டா.
இலங்குதேவி எனை இகழ்ந்த இராமனைக் கண்டு 
இலக்கணம் ஈட்டும் இனியா ருமைக் காட்டி 
இலக்கினை நான் எய்தியதும் நிறுவிட,  
எண்ணிய என்னாசை இல்லாதொழிந்தது.
அன்பிசை பாடிடும் குசாணரை அணைந்து 
கண்ணியமாக வாழும் கருத்தால் சொல்வேன்.
என்னிரு மக்காள்! இது எமக்கழகில்லை! 
வந்த வழி திரும்பி இரவியாறு வழியும் 
இலகூர் இணைவோம். இனிது வாழ்வோம். 
நிலத்தில் நீதி நிலவிட நித்தம் செய்வோம்"

"செய்வோம் என்ற என் சொல் செயலாக்கும் 
மெய்வல்லார் என் மக்கள், என் மனசறிவார். 
பெய்த அன்பால் அறத்தால் பின்னாளில் 
எய்தினர் இணங்கிய இலகூர்த் தலைமை.  
இயற்றினர் இனிக்கும் குடும்பம் காதலில் 
நயமும், நலமும் நாடோறும் பெருகவே!
இயக்கம் கெட்டு நானும் இளைத்து வாடி 
வயோதிபம் வந்திட என் மன வரைவு காட்டித் 
தாயகமாம் இலங்கைத்தீவகம் தன்னில் என் 
போக்கும் ஆவியின் பின் பொய்யான மெய்யை,
ஆக்கைதனை முதுமக்கட் தாழியிடைப் 
பக்குவமாய்ப் புதைக்க பரிந்துரைத்தேன்.
தக்கபடி தாழியில் என் ஆக்கை தாழ்த்த தளம் 
சீதாவாக்கை ஆகுஞ் சீர் இலங்கைத் தீவகத்தில்.
ஏதோ வாழ்ந்தால் போதுமென ஏமாளியாய் 
மாது நானும் வாழ்ந்து மாளவில்லை.
சாதிக்க நினைத்தேன் சமைத்தேன் என்வழி. 
கோதுடைக் கோசலை இராமன் கோவண்ணம்             (கோது-குற்றம்) 
பாதியாய்க் கிழிந்த பக்குவம் அறிந்தாயோ?"
அதிரும் தன் மனசு ஆற்றுவார் சீதைத் தாயார்.

சீதைத்தாயார் சாற்றிடும் சீரிய வாய்மொழி 
பேதையேன் புந்தியில் மதிப்பை பெருக்கும்.
சிதைந்த வாழ்வு, சிதையாச் சிந்தை 
வாதை தரும் வார்த்தைகளை வழிகாட்டும் 
பாதையின் படிக்கட்டாய் பணித்த பண்பினள்! 
மேதினியில் மேன்மை மேவும் மாண்பினள்!  
அரைகுறையாய் அறிந்த சில சேதி அடுக்கி 
வரைந்தேன் என்னுடை வளத்திற்கு, சீதைப்
பிராட்டிதன் மனமருங்கில் பேருரை பிறந்ததென!
பெண்ணின் பெருமை எலாம் பேசும் நாம் 
புண்படுத்தி அவர்பல புன்மை பட்ட பின்னே 
மாண்புடை மாதரசி கற்புக்கரசி என்போம்.
மண்ணில் மசியாத மங்கையரை மாசு சொல்வோம்.
கண்ணிரண்டு கொண்டும் ஒரு கண்ணில்
வெண்ணெயும் மறு கண்ணில் வெஞ் சுண்ணமும் 
காணும் கலைத் திறன் காலமெலாம் களையோம். 
கோணாத கற்பு நெறி கோதையர் மட்டுக்கோ?
காணும் சுரி உழக்கிக் களியாடிப் பின் 
கண்ட வெள்ளத்தில் கால் கழுவும் 
ஆணுடை அகங்காரம் என்றுமே அலங்காரமோ?
கணியின் கண்ணால் உலகைக் காணும் காலமிது! 
பிணியான பெண்ணடிமை பீடித்த மனங் கழுவி 
உணர்க! உயர்க! பெண் பங்கு உலகில் அரை! 
               
(அரை நூற்றாண்டு    ஆகிவிட்டதொரு 
திரைப்படம் !.....)        

(சாத்து சாத்து கிழிஞ்சது காணும்)

கார் முகில் கவர்ந்து மழை கறக்கும் நேர் கொண்ட நெடு மரங்களின் உச்சியில்
நார் கொண்டு நெய்து நல்மனை நாட்டும் வான் அரர் வழி வந்தவரோ? 

korowai-tree-house-0

korowai-tree-house-8


This entry was posted on 12:00 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 15, 2014 at 4:12 PM , Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவுகள்
தொடருங்கள்
தொடருகிறேன்

 
On July 15, 2014 at 11:25 PM , ந.குணபாலன் said...

நன்றி ஐயா!