Author: ந.குணபாலன்
•1:03 PM

ஆய்ஞநேயன் 

சிந்தையில் சீராடும் என் சீராமன் நினைப்பில்
நொந்த ஆண்டு பன்னிரண்டும் நொள்கும் நேரம்,    (நொள்கும்-சுருங்கும்) 
முந்தானை மூக்கொழுகும் நீர் துடைக்கையில்
விந்தையாக திரிசடை விழிமூடி பகற்போது உறங்க;
முந்தி ஒருநாள்;.... வானேறு தேர் ஊர்ந்த முன்னாளில்
கந்தமரம் வளர் திராவிடக் கண்டம் நீங்கிய                    (கந்தம்-சந்தனம்)
அந்தி வளர் பொழுதில் கண்ட ஒருத்தன்! 
உந்தித் தாவி உயர் மரத் துச்சியில் மனை கட்டும்
மாந்தன், திராவிடத்து வான் அரர் மரபின் ஒரு
மைந்தன் முன் வந்தான், மகிழ்வில் மலர்ந்தான்.
முந்தி என் தாதை முறை சொன்ன வகையால்,                (தாதை-தந்தை) 
"குந்தகம் விளைத்து ஊர் கொளுத்தும் கூட்டத்து
வந்தவன் இவன் என்ன வாழ்மானம் வைப்பானோ?"என
கந்தக வெடி பற்ற கடிந்து சிதறும் கற்பார் போல
அந்தரப் பட்டேன், அவன் சிரித்த முகம் கண்டு.
மந்திரம் இல்லை. அவன் கையில் என் மணாளன்
சுந்தரக் கைவிரல் மோதிரம் சுடர்விடக் கண்டேன்.

கண்டேன் கணையாழி காண்டலும்
பெண்ணாள் பொருமினேன். பெருவலி
கொண்டேன். கொன்றானோ இவன் மணங் 
கொண்ட கோமகனை? இராமனை?
செண்டாடும் பந்தாக கிறுதி சேர்ந்து          (கிறுதி-கிறுகிறுப்பு,தலைச்சுற்று) 
தொண்டை அடைத்து தூக்கி எறிந்தது.
தண் தூவல் தடவ தடங்கண் திறந்தேன்.       (தண் தூவல்-குளிர் நீர்த்துளி) 
அண்ணாந்தேன் ஆங்கவன் நின்றான்.            (ஆய்ஞனேயன்=ஆய்ஞன்+ஏயன்,
"அன்னையே நான் ஆய்ஞனேயன்!                     ஆய்ஞன்-ஆராய்பவன், ஏயன் - ஒத்தவன்) 
நின்னை நீங்கிய நாள்முதலாய்
தன்மானம் தனைக்காக்க தலைப்பட்டு
பன்னிரண்டு ஆண்டு பாதை அலைந்து
தென்திசை நாடி வருந் தேவன்
என் ஆண்டான் ஆனான் இராமன்!
உன்னைத் தேடி இங்கு அனுப்பினன்.
தன் மோதிரம் தடயம் தந்தான் காண்!
என் தோளேறு! எவரும் காணுமுன்னம் 
உன்னி எழுந்து மர உச்சி தாவுவேன்.
தன்னால் அலையும் தரங்கம் நடுவே             (தரங்கம்- அலை, கடல்) 
பின்னல் முறித்த பிட்டிகள் தொடரும்            (பிட்டி- மேடு) 
பன்னல் இலா இடிகரைச் சேதுப் பாலம்   ( பன்னல்-நெருக்கம்) 
வன்னி போல் நிலம் வலித்து தத்தி மிதித்து   (வன்னி-குதிரை)    
மின்னல் போல் மிகு வேகம் கொண்டு பாய்வேன்.
மன்னவன் முன்னிலையில் மாணிக்கம் என்ன 
என்னால் இயன்ற உன்னதக் காணிக்கை என்ன 
உன்னைக் கொண்டு சேர்ப்பேன்! உயர்வேன்!
என்னால் ஏலும் காரியம் இது காண்!
நின்று நெடுமூச்சு நீக்காதே! நம்பு
என்னை! இணைவாய் உன் இனியனை "
என்றே அசங்கிய அவதி மொழி பேசினானை
பின்னிய தமிழில் ஒரு பிடி பிடித்தேன் சிலவுரை.

சிலவுரை செப்பினேன் சின்னப் பொடியனுக்கு
"தலைவனின் ஆளாமோ? நீயோ? தளுகு தளுக்காதே!    (தளுகு-பொய் , 
கொலை பாதகக் கூட்டத்தான் நீ!அறிவேன்!                  தளுக்காதே -மினுக்காதே)
வலை போட்டு எனை வளைத்துப் பிடித்து
சிலை ஏந்தும் என் சீராமன் சீர் சிதைக்க
விலை பேசி ஆள்கடத்த வந்தாயோ?
வெள்ளை முகிலேறி வான் தொட்டு விரைந்தாயோ?
மல்லாமலை போல தானிருக்க என் மணாளன்      (மல்லாமலை<மள்காமலை
புல்லுப் பொடி மீசை அரும்பாத பொடியனைக்             -அசையாதமலை) 
கெல்லிவா வள்ளிக்கிழங்கு என கேட்டானாமோ?
நில்லாமல் ஓடிப்போ! நின்றாயானால்
பொல்லாத சீதையின் பேய்க்கோலம் பார்ப்பாய்.
இல்லை ஒருவேளை நீ உத்தமன் ஆனால்
சொல்வது எல்லாம் மெய்யானால் சுணங்காதே
செல்! சென்று என் செல்லன் இராமனிடம்
வில்லொடித்து வென்ற வேல்விழியாளை நெஞ்சில்
தெள்கி ருந்தால் தேடி வந்து தூக்கிப்போ.             (தெள்கு-தெளிவு) 
அல்லெனில் இன்றைய திகதியில் இருந்து
சொல்லி மாசம் ஒன்று சோர மைக்கா நாள்           (மைக்கா நாள்- மறு நாள்) 
வில்லில் விடுபட்ட அம்பென விண்சேரும்
மெல்லியலாள் உயிர் தான். பின்னே 
மெல்ல வந்து மேனியை அள்ளிப்போய்
பெல்லிப் பேய்க்குக் படையல் போடு என்று
சொல்வாய் போ!இந்தச் சூடாமணி சான்று வை!"
கல்மழை போல் நான் கலகலத்து முடிய
சொல்லி வைத்தவளாய் சொருகின கண்
மெல்லத் திறந்து திரிசடை மேலே பார்க்கையிலே
பல்லிளித்த பையலைப் பார்த்தலும் பயந்து               ( பையல்- பையன்) 
கொல்லெனக் குரையை வைத்தாள் "அட்டிட்டாரோ!"

இலங்குபுரி எரிப்பு 

"அட்டிட்டாரோ! தொட்டிட்டாரோ! " என்றவள்      (அட்டிட்டாரோ-(தடை இடும்)காவலரோ!      
போட்ட பேரொலி பொருப்பு போய்ப் பொருத              தொட்டிட்டாரோ - (தடைமீறி) தொட்டவரோ!)   
வட்டமாக ஆங்குற்று வளைந்த அரணத்து வீரர்        (பொருப்பு - மலை , 
கூட்டிச் சென்றார் கோசலையான் தூதனை.             பொருத - பொருந்த, மோத) 
அட்டியின்றி தூதன் என்றறிந்து அரவணைத்தார்.
எட்டத்தில் அங்கே என்ன நடந்ததோ அறியேனே.
நட்ட நடு இரவில் இலங்கைத் தீவகத் தலைநகர்
திட்ட மிட்டு இட்ட தீயில் புகைய திக்கெட்டும்
வெட்ட வெளிச்சம் ஆனதே! ஆரியர் வேள்வி
இட்ட தீயென உடல் பொருள் ஆவி பலி எடுத்து
சுட்டெ ரிந்ததே! நித்திரையில் சுருண்ட சனம்
பட்டெ ரிந்து போனதே! பாவி வான் அரத்தான்
காட்டிய அழிவு இது! கடிந்த கூத்து இது!
மாட்சியுடைப் பெருந்தச்சன் மயன் மனம் வைத்துப்
பூட்டிய தோரணம் பொற்கதவம் புனைந்து 
தீட்டிய மாடம், திக்கம் வளர் தோப்பு, தெருமூடிமடம்   (திக்கம்-இளயானை) 
காட்டமாய்க் கருகியதே எனக் கலங்காதான்.                  (காட்டம்- விறகு)
வாட்டிய தீயினில் வதங்கிய உயிர்களுக்காய்        (வெப்பிசாரம்<வெவ்விசாரம்
வெட்டும் வெப்பிசாரத்தில் வெம்பும் இலங்கையர்கோன்.      - கொடுந்துயர்) 

இலங்கையர்கோன் இரங்கி ஏத்தினான் ஈகத்தாரை.   ( 
தலம் - வீடு,காடு,இடம்,நகரம்,பூமி,
நிலம் நீத்தாரை  முதுமக்கட் தாழி நிறைத்து ஆழ்த்தி                         ஆழம்,கீழ்,இலை,இதழ்,
சலம் பூக் கொண்டு சாரும் தென்புலக் கடன் முடித்தான்.            தலை,உடலுறுப்பு) 
தலந் தொட்டு தரை தொட்டு முழந் தாளிட்டு மக்கள்                  
கலந் தொட்டு கஞ்சி இட்டு கண்ணீர் துடை தூயன்.          
சீலமுடையான் சிந்தை நொந்தான்."என்ன சீலம்பாயுக்கு    (சீலம்-ஒழுக்கம்+  பாய்-சொரி 
குலம் கொண்ட திராவிடன் என நம்பிக் கூட்டினேன்?         சீலம்பாய்=வெட்கக்கேடு)       
குணங் கெட்ட வான் அரம் விளைத்த கோட்டினால்    ( கோடு-கொடுமை) 
பிணஞ் சுட்ட காடாயிற்றே பிறைக்குலத்தார் நகரம்!"
வானேறும் தேர் வல்லான் மனத் திடம் வரைந்தான்.        
"கணம் இது சுட்டி கட்டி எழுப்புவம் எங் கலைநகர்!      பழஞ்சலிப்பு:             
சுணங்குவதில்லை, பிணங்குவதில்லை சுந்தர நிலவின்    நீத்தாரை நினைந்து 
சொலிக்கும் சோதியில் சுழல் பூமி சொக்கி நிற்கும்                நல்லநாள் பெரிய நாட்களின்
வலிந்த கோட்டங்கள் செய்குவம்! வண்ணம் பூசுவம்!      முதல்நாள் மகள்/சகோதரி
பழஞ்சலிப்பு சொல்லி அழுது பலன் இல்லை          /மனைவி தாய் ஒப்பாரி வைத்தல். 70களின்
சழக்கர் வியப்பச் சாதனை செய்து காட்டுவம்." என      பின் மறைந்து விட்ட வழமை)
முழங்கினன் முதுகுல இராக்கதிர் முந்தல் செய் எந்தை.     (முந்தல் செய்-முன்னேற்றும்)   
சுழலும் சில நாள்!சூழும் எழில்! மீளும் நகரத்து முந்தை!   (முந்தை- பழமை, முற்காலம்)  


முந்தைப்பிறவி முந்தூழோ? இல்லை இப்பிறவியில்  
சிந்தை இலாது யான் சீண்டிய பழியோ? அறிகிலேன்.
எந்தையர் நாட்டுக்கு என்னால் இடுக்கண் உற்றதே!
புந்தியிலே புயலடிக்க அல்லாடும் என் மனம் புலம்ப 
அந்தியிலே போர்ப்பறை அறைந்தார்! "எதிரிப்படை 
வந்த"தென! "வந்தான் என் வாழ்முதல்" என்றே 
உந்திடு உவகை எந்தன் உள்ளத்தே உள்ளிடா.
"எந்தெந்த அழிவு எய்திடுமோ இராக்கதிர் இனம்?
முந்தி வந்த மணியோசை ஆகும் மூர்க்கன் ஆய்ஞநேயன்
பந்தி வைத்தான் எரி தழலுக்குத் தலைப் பட்டினத்தை. 
பிந்தி வரும் யானை ஆகும் வான் அரர் படைப் பிரிவு.   
தந்தியதன் தாள் தரையுதைக்கும் வாழையதன் தாராக       (தந்தி-ஆண்யானை, தாள்-பாதம்) 
சிந்தும் சுடர் மணி விளக்கேற்றும் சீர்மிகு இலங்குபுரம், 
கந்தறுக்க வந்தனரோ? கடல் கரைக்க வந்தனரோ?       (கந்தறுக்க-பற்றுக் கோடறுக்க) 
முன்வந்து போர் முனையான் இராமனும் கரந்தடிப்பானோ?"
எந்தையர் நாட்டை எண்ணுங்கால் நெஞ்சம் வெந்தேன். 

இந்தா விபீசானா! இலங்குபுரி இராச்சியம்!

வெந்தேன் பாதியுயிர்! எந்தை குலம் சதியில் வெந்ததே! 
எந்தை பட்டான்! எம்பியர் பட்டனர்!நம்பியோர் பட்டனரே!
சந்து, பொந்து, சுருங்கை, ஒழுங்கை, சகல பாதையும்,
பந்தம் பிடிப்பான் பாதகத்தால் பகை நிறைந்ததே!  (பந்தம் பிடிப்பான்-தன்னலங் கருதி 
பந்தி விரித்தான் விபீசானன் படையல் வைத்தான்.       வலியாரை அணைபவர்)  
சொந்த நாட்டின் மணிச் சுரங்கம், சேர் திரவியம், 
முந்தி வந்து கடை விரித்தான் முதுகுலம் முனிந்தான்.
"இந்தா விபீசானா! இலங்குபுரி இராச்சியம்!" எனத் 
தந்த இராமன் தாள் பணியும் தரங்கெட்ட விபீசானன்! 
மீந்தேன் பாதியுயிர்! மிடுக்குடன் மின்னினான் இராமன்!
"செந்தேனே! உன்னைச் சேராது ஆண்டு பல 
நொந்தேன், நொடிந்தேன் நேரிழை நினைக்கண்ட 
இந்த நேரம் முதல் உயிர்த்தேன். இனி வாழ்வேன்!"
இந்தப்படி இன்னுரை செய்வானோ? நான் இப்படி 
அந்தத் தருணத்தே ஆசைப் பட்டேன் அல்லேன்.
வந்தென்னை வாய் வார்த்தை ஏதும் பறையாது 
நைந்த உடல் இறுக்கி  முத்தவரி நெய்வன் என 
நினைந்த என் மனம் நெருப்பில் சொரி நெய்யாக   மனைந்த புண் -
புனைந்தான் வலி மிகு தீப் புழங்கும் வார்த்தை.          வெளிப்பார்வைக்குத் தெரியாமல் 
மனைந்த புண் மனத்தான் அறைந்தான் அடுத்து!           பெருத்துப் போன புண்) 

"அடுத்தவன் மனை உற்று ஆண்டு பல 
இடுக்கம் இன்றி நீ இருந்த இழுக்கினால்    (இடுக்கம்-துன்பம்,   இழுக்கு- கேவலம்)
அடுக்கும் தீக்குழி அடுத்து, என் பெருமை நேராக்கு! 
மடுக்கும் மானம் சிதையாச் சீதை நீ யென!       ( மடுக்கும்-சேர்க்கும்) 
எடுத்துக் காட்டு! எனக்குற்ற மறு விலக்கு!"
தீயன்ன சொல் மனம் தீய்க்க தேகம் தொய்ய 
மெய்ச் சொல்லோ இல்லை மாயமோ என்செவி 
மொய்த்தது என்னும் கேள்வி மண்டையில் மோத
பைய எழுந்தேன், மனம் படைத்தேன் ஓர்மம்!
பேய்க்கு வாழ்க்கைப் பட்ட பெண்டாட்டி 
பொய்யாது புளிய மரம் ஏறத்தானே வேண்டும்?
செய்து காட்டுவன் அல்லெனில் செத்து மடிவன் என
எய்திய எண்ணம் பெருக மனசும் இறுக்கி 
நெய் பெய்த தணல்சேர் குழி நேர்ந்தேன், நடந்தேன்.
தீயது தொட்ட மெய் தீயாது, மனந்தான் தீய்ந்தது.

தீய்ந்தது மனத்தின் ஆவல். தீயது செய்தான், 
தூய்நிலை கண்டும், கண் தூக்கி நோக்கான்.
சாய்ந்த தன் மானம் சரிசெய்த செருக்கில் 
இயக்கினன் என்னை கைவிரல் அசைவு காட்டி. 
இயமானன் பின்னே ஏகும் நாய் என இழுவுண்டேன்.
நயமுடன் அப்போதும் ஒரு நப்பாசை என்னகத்தே.
"புயலடித்த பின் சேரும் புது அமைதி போலப் போர்த் 
தியக்கம் தீரத் தேவி எனைத் தேடி வருவான்" என      (தியக்கம்-மயக்கம், களைப்பு) 
மயக்கு ஊட்டும் மனசு மறை முழங்கும். இராமன் 
காய்ந்த முகம் காட்டும் சிறு கலக்கம். விபீசானன் 
இயற்றிடும் வெற்றி விழா ஏற்கான். அக்கணமே 
தயங்காது தடக்காது தாயகம் நாடிடும்   
தியானம் தலைப்படத் திரும்புவன் தேசம். 

 சத்துருக்கன் 

தேசம் அணித்தோம் வானேறு தேர் தந்த 
நீச நெஞ்சின் விபீசானன் நியமத்தால்.
பேச மறந்து பேயடித்த முகத்து இராமனும்,
வாசம் கெட்டு வதங்கிய மலராய் நானும் 
நீசன் இலக்குவன் நிலம் நோக்கு முகத்தனும் 
கோசலை நாட்டுக் கோட்டம்  தொட்டோம்.
வாசலில் வந்தவன் வணங்கிடும் பரதன் அல்லன்.
அசைந்து ஆட்டங் கண்ட கோசல நாட்டை 
இசை பெருக்கி ஒழுக்கம் ஓம்பிப் பன்னிரு ஆண்டில்    
வசையறு வாழ்வும், மற வீரமும் வளர்த்த வள்ளல் 
மாசிலா சத்துருக்கன் மன்னவன் ஆனவன்.
ஆசி கேட்டு என்னடி பணிந்து நல்வரவு உரைத்தான்.
பேசிட திறந்த என் வாய் பேசவுமில்லை.
பேசாது பிளந்த வாய் மூடவுமில்லை. 
பாசக்காரத் தம்பி பரதன் எங்கேயெனப் 
பூசல் உண்டான புந்தியில் பலவினா கூத்தாட
வாசம் செய் வளமனை சேர்ந்தேன் மாது.          

மீண்டும் கைகேயி 

மாதெனை நல்வரவு மலர்ந்து நவிலும் கைகேசி.
வாது சில முன் வைத்து வரைந்தனள் வரைமுறை.
"எது நடப்பினும் எமக்கிடர் இல்லையேல் 
பதுமையாய்ப் பாராது நடிக்கும் பாவனை 
உதவாது உன்னத அரச தேவி நினக்கு. 
பதியைப் பாராளும் பெரு நெறியில் 
பதிக்க பல பாடுகள் பழகி பழி கேட்டு 
கொஞ்சிக் கோ மனதைக் கொள்ளை கொண்டு 
கெஞ்சிக் கூத்தாடிக் கலகம் வைத்து 
மிஞ்சினால் மிரட்டி அன்பில் கட்டி 
என்ன ஆட்டம் போட்டாலும் கணவனுக்கு 
சொன்ன கடமை சுட்டும் சொல், செயல், 
என்றும் ஓது! மக்களை ஓம்பு! அதுவே வண்ணம்!"

வண்ணம் கெட்டு வயக்கெட்டு வயசு முதிர்ந்தும் 
திண்ணம் கெடாத திடமனத்துத் தேவி சொல்லவும்; 
எண்ணத்தில் பலபடி உயர்நிலை ஏறினாளை 
கண்மழை சொரிந்து கால்பிடித்து முன்னாளில் 
புண்பட்ட சொல் புரண்டது பொறுத்தருள 
வேண்டியவளின் வேதனை துடைக்கும் தூயள்!
"ஆண்டவனாய் இராமன் அயோத்தி முடிசூடிடுக!
கண்ணியம் காண் சத்துருக்கன் கண் காணிக்க!
அண்ணனின் நைந்த மிதியடி ஆதாரம் எனக் காவி 
மண்ணில் அயோத்தியின் மதிப்பை மிதித்து  
அரியணை ஏற்றிட வந்தான், இழிவென எண்ணாதான்.  
செருப்பு ஆளுமோ? செம்மலிச் சேட்டை எல்லோ? என (செம்மலி<செம்மாளி 
துரத்திய புரட்சியர் விட்டுத் தூர எறிந்த கல்                       -செம்படவர் செருப்பு) 
சிரசினில் பட சிதம்பிய சிந்தை சீரிலாதழிய   
கரவில்லாக் குழந்தையாய்ச் சிந்தை கலைந்தான்
பரதன்; பழி செய்தாயென எனைப் பழித்த என்பிள்ளை! 
புரண்ட உள்நாட்டுப் பகை எனும் புகையின் ஆதி 
ஆராய்வன் சத்துருக்கன் அமைத்தனன் அமைதி."

(இன்னும் கிழியும்)
This entry was posted on 1:03 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: