Author: ந.குணபாலன்
•6:00 AM

இராவண்ணன் வரவு 

அற்றைநாள் இன்னும் பல உற்றன என்னிடத்தே.
புற்றுநோய் போலும் இலக்குவன் புறத்தேகலும்
முற்றிய பாசம் முழுக்கிட என் முன்தோன்றும் ஒருவன்.        
கற்றைப் புரிசடை, கருமலையன்ன திண்டோள்!
ஒற்றி ஒளி தெறிக்கும் கதிருடை ஒன்பது கல்! பாருமே!
பெற்றியுடை மணித்தீவகத்துப் பெருமான் முகம்
ஒற்றி ஒளி தெறிக்கும் கதிருடை ஒன்பது கல்!,
பற்றிக் கழுத்தினைப் படரும் மணியாரம்!
அற்றைப் பொழு தறிந்தேன் பத்துத் தலை
தோற்றிய வண்ணம். தொகை மிகை படு கதை.
பெற்றியுடை இரத்தினத் தீவகத்துப் பெம்மான்!     (பெற்றி-பெருமை) 
ஏற்றும் வீணைக்கொடி இராவண்ணன் இவனன்றோ?!
கொற்றவனின் மணியாரத்துக் கோலம் 
தொற்றி நாம் தொடர்ந்த வழி யாவும் தொகுத்தார்
பொன்றாப் பேராசை பொங்கும் கொண்டையர்.     (பொன்றா-அழியாத)
அன்னதனால் அறிந்தேன் இராவண்ணன் அவனை.
முன்னே கண்டறியா முதல்வன் முன்தோன்றலும்
என்னையும் மீறும் ஒரு ஈடுபாடு ஒரு வாரப்பாடு.      (வாரப்பாடு-பாசம்) 
என்னென்று உரைசெய்வேன் என் உணர்வெலாம்
மன்னும் மிதிலை நகர் மன்னன் மகள் மைதிலி!

மைதிலி மொழி பேசும் மிதிலை இளவரசி நான்.
பதிவீடாம் அயோத்தி படர் அவதி மொழி
பாதியறி பாவை. என் பக்கல் அணைந்து
இதிவீசு இலங்கை மன்னன் இராவண்ணன்     (இதி-ஒளி) 
ஓதிய அவதியின் உச்சரிப்பு உருத்தாலும்
மதி தொட்டது மன்னவன் உரைத்த மொழி.
விதி விளையாட வினை விளைத்த வாக்கு            
பதியவன் பெரு வாழ்வு பாழாகும் என்ன, வயிறு (பதி- ஊர், உறைவிடம், நாற்று, கணவன்,  
பதி பிறந்த பாலகியை பால்குடிப் பருவத்தில்       அரசன், இறக்கு, ஊன்று, ஆவணப்படுத்து)  
பதியன் கன்றாய்ப் பதி விட்டுக் கிளப்பிப் புதுப்
பதி தேடி பதமான பாத்தி நாட்டிப் பதிய வைத்தாள்
பதி வழி காத்திட பெருந்தவம் பூண் பெருந்தேவி
பதி போற்றும் பத்தினி மண்டுதாரி என்தாய். மார்பில்        (மண்டுதாரி=மண்டு+உதாரி
பதி கொண்ட முலைப் பாலூட்டும் பின்னாளில்                     =மிகுதி+கொடையாளி)
மதி கொண்ட முதல் மகவின் முகம் மறவா உறவால்
விதி செய் வினை எண்ணி வேக்காட்டில் விழிநீர்
நதியாடும் நாயகியாள் நல்லாள் என்தாயாள்.
மோதி என் மூளையில் பல சேதி மொய்த்திட,
ஆதி எலாம் அறிந்து நான் அலமர, என்தலை அன்புடன்   (அலமர-மனம்வருந்த) 
கோதி எந்தை கொற்றவ இராவண்ணன்;
மீதி இன்னும் பன்மொழி மிழற்றுவன் காண்!

"காணென் மோனை! இராமன் மேல் நின் காதல்     (மோனை- மகன், அன்பு மிகுதியால்  
வீணென்று நான் விளம்பேன். வினை விளைந்ததே!     பெண் மகவையும் அழைக்கும் 
கண்ணில் வீழ் துரும்புக் கள்ள மனத்து இலக்குவன்!    விளிச்சொல்)        
தூண் என்றான பின் தொடர்வது துன்பமே.
நாண் விலக்கி நயந்து அவன் முகம் நேர்விழியால்
காண்கின்ற பொழுதெல்லாம் கலக்கமன்றோ?
அண்மிக்கும் தோழியர் அருகிருக்கும் அரண்மனையில்
மண்ணின் மாதவமே! மகிழ்வோடு நீ வீற்றிருப்பின்
கண்ணியம் கெட்டான் காமக் கண் நின்னைப்
புண்படுத்தும் பார்வை பூசும் பொழுது அற்பமே.
தண்பொழில் வனம் நடுவே நீவிர் மூவர் தானெனில் 
தண்டனை தான் பொழுதெல்லாம் தாங்குவாயோ?
ஆண்டுகள் பன்னிரண்டும் ஆயின பின்னே
கொண்டல் வண்ணன் கோசலம் ஏகும் நாளில்
மீண்டும் மைதிலி நீ இராமனை மேவு! அதுவரை
தீண்டா  விசும்பிடை திரியும் வானேறு தேரேறி
நீண்ட தென்கடல் நித்திலமன்ன நீர்சூழ் இலங்கை
பண்ணுடைத் தீவு படர்வாய்! பங்கப்படாமல் வாழ்வாய்!    ( பண்-இசை,நீர்நிலை,
கொண்டை ஆரியக் கூட்டம் திராவிடம் தனை வாழ்            வயல்,அலங்காரம் )          
கண்டம் விட்டு அறுக்கும் கருத்தினால் இராமனும்
சண்டைக்குச் சாலவும் சார்கின்றான். நீயென்
மண்டுதாரி தந்த மகள் என்பதனால் மறைப்போம் முன்கதை.

முன்கதை அறிந்தால் முகம் திரிந்து மனம் எரிந்து
உன்னை உடுத்த உடுப்புடன் கலைப்பான் காண்!
இந்த எண்ணம் எனை எதிர் மறிக்க இழியவன் 
சின்னவனின் சிறுமொழி கேட்டும் சரவலுடன்         (சரவல்-சிரமம்) 
உன்னியெழும் சினம் அடக்கி உறைந்து நின்றேன்.
அன்னமே! அப்பன் வீடு இசைந்து நீ ஏகும் சேதி
எந்நாளும் எவருக்கும் எட்டா வகை எடுப்போம்.
வன்மையால் வலிந்து பற்றிப் போனதாக
தன்மை செய்வாம். தாயே நின் கைவளை
மண் சிதறு! மண்ணில் மல்லுக்கட்டிய கோலம் வரை!
என்னுடனே வருக! வானேறு தேர் எழுக! வா மோனை!"
என்னச் சாலும் என் பிறவிக்கு வித்தாம் இராவண்ணன்.
தன்னாலே என்காலும் தந்தை தனைத் தொடரும்.
பின்தங்கும் என் சிந்தை பிரியனைப் பிரிய இடறும்.
வன்சொல் இளையான் வாக்கு நெஞ்சம் வந்து குதறும்.
என்னவனை எண்ணி ஏங்கி கன்னம் வடியும் கண்ணீர்.

கண்ணீர் கலைத்து என் கன்னம் தடவி தாடாற்றி
"பொன்குஞ்சு! நின் பொன்றாக் காதல் அறிவேன்.
என்செயலாம்? ஊழ்வினை தானோ? வந்து உறுத்துமே?
நன்னாள் வந்து விடியும்! நாயகனைச் சேர்க்கும்!
அந்நாள் வரை அரற்றும் நெஞ்சம் ஆறுதல் செய்!
இந்நேரம் வானேறு தேரில் இலங்கை எய்துவோம்!
நின்தாய் நித்தம் நினைந்து நீள்விழி நித்திலம் கொண்டு
கன்னம தில் கீறும் கோட்டுக் கோலம் காண்!
அன்புருவாம் அவள் அன்று தொலைத்த திரவியத்தை
இன்று கண்டு இன்புறுவள். இறுக்கி மார்ப ணைப்பள்!
உன்னிளையார் மூவர் இருக்கின்றார் மோனை!
இன்முகத்து இந்திரசித்தன், அஞ்சான் அதிகாயன்,
என்னுரு அச்சுப் போலும் அச்சுக்குமரன் அறிவாய்.
இன்னும் காணாத உடன்பிறப் புன்னை உரிமை கொள்
தன்மையினால் உள்ளங்கையில் தாங்குவர்!
பன்னிரண் டாண்டுகள் ஒரு பகலெனப் பறக்கும்!
மன்னன் மகன் மருங்கு மாதரசி நீ நெருங்கும் 
பொன்நாள் நாளை வரும்! பொறுமை புழங்கு!"
என்னும் என் தாதை ஆறுதல் தரும் வாக்கு.

முன் காணாத காட்சிகள் சில 

பறக்கும் திராவிடன் 

வாக்கிழந்த நானும் வருத்த முடன் வானேறு தேரில்
ஏக்கமுடன் ஏறும் போதில் "ஏமிலாந்தி! எங்கே        ( ஏமிலாந்தி-திகைத்து நிற்பவன்,  வந்த
போக்கினான் பொழுது மாரீசன் பேயன்!"என                   வேலை மறந்து புதினம் பார்ப்பவன்) 
திக்கெட்டும் கண்ணெறிந்து தேடின தலைவன். 
"எக்கணம் மாரீசன் இங்குத்தை இல்லை ஆக்கும்.       (எக்கணம்-ஒருவேளை, 
இக்கணம் இலங்கை ஏகுவம்!" என்னும் இராவண்ணன்,     இங்குத்தை-இவ்விடம்) 
பக்குவமாய் வானேறு தேரைத் தென்றிசை பரந்தனன்.
நோக்கா நொடிப்போதில் இராமன் வந்தே பின்வளம்  
தாக்கிட மாரீசன், என் தாய்மாமன் தகர்ந்தானாகப்                        ( படகத்தரவம்=
பக்கல் வந்த படகத்தரவம் பிந்திச் சேதி பறையும்.                         படகம்+அத்து+அரவம் 
போக்கும் தென் திசைப் பொன் மாலைப் பொழுதில்         படகம்-பறை, அரவம்-ஒலி)    
தாக்கியது எதுவோ தடக்கியது வானேறு தேர்!
"மொக்கன்! கண்கடை தெரியா மோடன்!
பக்கம் பார்த்துப் பறக்க அறியாப் பதடி!
அக்கு ஒடிந்து நிலம் இழிந்தான் அவனுக்குப்                 ( அக்கு-எலும்பு) 
பக்குவமாய் பரிகாரம் பண்ணிப் பின்னேகுவம்!"
எக்கேடும் எவருக்கும் எண்ணாதான் சொன்னான்.
தேக்கம் உற்ற வானேறு தேர் தரை தொடும்.
பிக்கல் ஈதேதென பார்த்தால் முன் பின்னே
எக்காலமும் காணா அதிசயம் எதிர்கொண்டேன்.
பக்கம் இரண்டிலும் பறவைச் செட்டை தைத்து
திக்கெட்டும் திரியப்பழகும் திராவிடன் ஒருவன்!
நோக்காட்டில் நெளிந்தான். எமை நோக்கி
நக்கல், நளினம் நெளித்தான். நயந்த நல்லுதவி
முக்கரமாய் முற்றிலும் மறுத்த மூர்க்கன்.                 (முக்கரம் - பிடிவாதம்)
கக்கத்தில் இறக்கை பூட்டும் கருடக் குல மாந்தன்.
தக்கோர் நீங்கு தகுதியானைத் தரைவிட்டு
திக்கம் தன் துணையோடு திளைக்கும் தீவகப்                    ( திக்கம்- இளயானை)
பக்கம் பார்த்துப் பறந்தோம் வானேறு தேர்!

வான் அரர்  

தேர் செல்லும் தென் திசையில்
நேர் கண்டேன் இன்னும் சில நெடுமை.           ( நெடுமை - பெருமை)
கார் முகில் கவர்ந்து மழை கறக்கும்
நேர் கொண்ட நெடு மரங்களின் உச்சியில்
நார் கொண்டு நெய்து நல்மனை நாட்டும்
பேர் கண்டு "பேயோ?" என்று பிறழ்ந்தாளை           (பிறழ்தல்-நடுங்குதல்) 
தார் கொண்ட தோளன் என் தகப்பன் 
"ஓர் மோனை!" என ஒப்பிய சொல்லால்.               ( ஓர்-தெளி,ஆராய்) 
"பார் கொண்ட பழந் திராவிடத்தின்
வேர் விட்ட கிளை விளை குலம் ஒன்று.
சேர் கிலார் எம்முடன் சேட்டை மிக்கார்.
மார் கொள் மாறுபாட்டால் மாற்றலரை நாடி,               
தேர் கொண்டு வானேறும் திராவிடம் தெறிக்கும்.   (தெறிக்கும்-சிதறும்) 
ஊர் கொளுத்தி உறவறுக்கும் உன்மத்தர். மழை
வார்க் கும் வானுயர் மரம் பற்றி வாழ்தலின்
ஆர்த்து அமளி செய் கவியின் அரம் காட்டுதலின்
பேர் பெற்றார் வான் அரம் எனவே, பீடுடையார்.                (அரம் - குறும்பு) 
ஆர்க்கும் அடங்காத ஆற்றலுள்ள திராவிடம்
சேர்க்கை யின்றிச் சிதறும் செயல் உடைத்து.
ஆர் எவரும் தேவையில்லை எம்மவரை ஒடுக்க.
நார் உரித்த தடி கொடுத்து நணுகார் கையால்              ( நணுகார்-பகைவர்) 
ஊர் அறிய அடி வாங்கும் எம் திராவிடத்துத் திமிர்."
கார் முகிலினிடை கடியும் இடியாகக் கனன்று
வேர் விட்ட வேதனையச் சொன்னான் வேந்து.


இலங்கை வாழ்க்கை 

வேந்துடன் வானக வெளியூரும் தேரேறிப் 
போந்தேன். பொங்கு கடல் திரைக் கையால்
ஏந்தும், மணி தீவம் ஏற்றும்  இலங்கைத் தீவகம்.
காந்தம் என தாவி வந்து கண்டதும் முத்தம்
ஈந்தா ளில்லை எனை ஈன்ற தாய். மனமது
வெந்தேன். வேல்விழி அவள் வதனம் விடியவில்லை.
பிந்தி மெல்ல விரிந்த புன்னகையில் பிரிந்த துயர்
பந்தி வைக்கும். பாசம் இழுக்கப் பக்கம்
வந்து வாரினாள் வடிந்த காலத்தை வழித்து மடி
ஏந்தும் தவிப்பில் என்தாய். உள்மனசில்
வேந்தனுக்கு வெவ்வினை விளைக்க
வந்தாளென் மகளென்று வருந்தினளாம்.
சந்திர ஒளியினராய் அன்புச் சுடர் வீசு சகசர்          (சகசர் -உடன்பிறந்தார்) 
இந்திரசித்து, அதிகாயன்,அச்சுக்குமரன் எம்பியர்
அந்தரப் பட்டு வந்தாளை எம் அக்கை என
சொந்தங் கொண்டாடி ஒருமனை சோடித்தனர்.

சோடித்தனர் இலங்குபுரி மாநகரத்தார். சோமனை            ( சோமன் - சந்திரன்) 
நாடித்தான் விழா அமைத்தார். நகர் வலம் செய்து
பாடியாடி பகடு மறித்தார். பகடி விரித்தார்.                       (பகடு - எருது) 
தேடிய தேட்டம் வீடு சேர்ந்தது என்று தேறல்                    (தேறல் - மது) 
அடித்துக் கபடி ஆட்டம் ஆடிக் களித்தார்.
வேடிக்கை வினோதம் வேம்பாய்க் கசந்தனவே.             (வெப்பிசாரம்
வெடிக்கும் வெப்பிசாரம் விழிநீர் மடை உடைக்கும்.            <வெவ்விசாரம் - கொடுந்துயர்) 
துடிக்கும் மனசை தூவி தடவும் சொல் தூவும்                    ( தூவி-மயிலிறகு) 
மடி சுமந்த என் மாதா மண்டுதாரி பணித்தலும்
சேடியர் சேர்ந்தார் அலங்காரம் சேர்க்க. சிக்கல்
கூடிய கூந்தலைக் கோதி நறுமணம் கூட்ட.
வாடிய தேகம் மஞ்சள் வருடி வயக்கேடு விலக்க.          ( வயக்கேடு-வலிமை இழப்பு , 
பாடிடும் மாவலி கங்கையின் படித்துறை படிந்தார்.     பொலிவு இழப்பு)          
ஆடிய நீரில் என்ன அழுகையும் அழியவில்லை.
ஓடிய மாவலியும் எனக்காக ஒப்பாரி வைத்தழும்.
நாடிடும் மனம் நிறைந்திடும் என் நாயகன் படம்.

அசோகவனம் 

"படம் வரைந்த மாடத்தில் பதிவாகப் பதியேன்!        (பதிவாக - மனம் ஊன்றி , 
இடம் அமைப்பீர், எனக்கே அசோக வனத்தில்!          பதியேன் - தங்கேன்)   
வடக்கே நான் விட்டு வந்த என் வாழ்முதல்
தடக்கும் வேருடைக் கானகத்திடை தடுமாற
தடங்கண் மை தடவேன். தண் சந்தனம் பூசேன்!
படச்சரம் போதும். பட்டு வண்ணம் வேண்டேன்.                   (படச்சரம்- பழம்புடைவை) 
சுடரொளி மணியாரம் சூடுகிலேன். சுந்தரனிடம்
படரும் மட்டும் பாலாகா, நெய்யாகா,பழமாகும்.
தொடரும் ஆண்டுகள் எம்மளவோ? தொய்விலாக் 
கடமையுடன் காத்திருப்பேன் விரதம்.
அடமீதென எண்ணாதீர்! என் தவமது அறிவீர்!"
திடமான என்னுரை கேட்டு திகைத்தாலும்
உடன்பாடு கொண்டார் என் உறவோர்.
மாடம் ஆனது மங்கை எனக்கும் அசோக மரநீழல்!
உடல் கண்ட பிணியென ஒன்றுவிட்ட தங்கை
உடன் இருந்தாள் திரிசடை எனும் கழிசடை.

கழிசடை காலமெல்லாம் கிணுகிணுக்க தாய்
மொழி அறிந்தேன். மோனத் திருந்தும் செவி
வழி வந்த வார்த்தைகளால் தமிழ் அறிந்தேன்.
தோழி திரிசடை என் துயர் தொடாள். கணவனை
இழிந்து மனம் அழிந்து அசோக வனம் நானும்                 ( இழிந்து-பிரிந்து) 
வாழுங் காலம் வாலையவள் வழியறிந்தேன்.
கொழுவி விட்டுக் கூத்துப் பார்க்கும்
பழிகாரி, பாதகஞ்செய் கெடுமதி அல்லேன்.
வழு மனத்து வஞ்சி இவள் தெளிவள், நல்ல
வழி கண்டு வாழும் வகை காண்பள் என
பழி செய்யப் பிடிக்காமல் பலியாகாமல்
தெளிந்தேன், தெய்வதம் தொழுதேன்.
புளியங் கொட்டை நட்டால் புவியில்
புன்னை மரம் முளைக்குமோ? கிளைக்குமோ?
தன்னை தாழ, தான் அரசாளும் தவனத்து                          ( தன்னை-தமையன்) 
மழித்த தலை விபீசானன் மனங்கொள்                                தவனம்- ஆசை, நினைப்பு) 
களிபெருக்கு கடை மகள் திரிசடை.                                 ( விபு- தலைவன் , 
இழிநிலை இலங்கையர்கோன் அடையவும்,       ஈசானன்-வடகிழக்குத் திசையோன் )
அழியவும், ஆண்மக்களும் ஆவி உதிர்க்கவும்,                   
பழி பாவம் பாராது, பகை அணைந்து, பங்களித்து,
சுழித்த சூழ்ச்சியால் இலங்கை முடி சூடும்
தொழில் தொக்கு நின்ற மனம் உடையவன்.                        (தொக்கு-மறைந்து) 

உடையவன் இல்லெனில் ஒரு முழம் கட்டை ஆம்.
சடை வழித்த சழக்கன் விபீசானன், வெண்கொற்றக்
குடை நீழல் கூர்ந்த இராவண்ணன் எங்கோன்
உடை படும் ஆடியாய் அழிந்திட உள்ளுவான்.
படை உடை படு நாளில் பகைவனுக்கு விருந்தாக
கடை விரிப்பான் காணலர் வந்து களஞ்சியம் கொள்வர்.   ( காணலர்-பகைவர்) 
நடை பெறும் பின்னாள் இந்த நடப்பெலா மெனநான்
முடைந் தேனல்லேன் முன்னாள் என் சிந்தையில்.

(இன்னும் கிழியும்)

This entry was posted on 6:00 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: