Author: ந.குணபாலன்
•4:25 PM

சந்திரநகைக்கு நேர்ந்த கொடுமை    


ஈன்றாளை ஒக்க அன்பு முத்தம் ஈந்த 
குன்றாமணி யணி கோதை சந்திரநகை. 
தேன்மொழி யன்ன தேவி நவின்றிடும்    
வாய்மொழி வாய்க்கா தென்வாய். 
தாய்மொழியும் அயற் திராவிடமும் தானறியேன்.
மாய்மாலம் செய்து என் மணாளனை 
மயக்க வந்த திராவிட மாதென 
மயங்கு மென் மனம் உடைத்து மறு.

மறுவிலா மாணிக்கம் மனந்தளராச் சந்திரநகை , 
பொறைகொடு பன்னாளும் என்மனம் 
பொருந்திட புரிந்திட போதனை உற்றாள்.                
புரிந்திடாப் பேதைமை பொறாமை கொண்டு 
அரிகண்டம் இதுவென அல்ல லுற்றேன்.   (அரிகண்டம்-தொந்தரவு) 
தெரியாத் தனமாக இளையானிடம் தேம்பினேன்.
சுரிகுழல் இலக்குவன் சூதுடன் நோக்குவன்.
அரைகுறைத் திராவிடம் அறிந்த நாக்கவன்.
செத்தை மறைப்பில் செருக்கன் தொடவும், (செத்தை-ஓலைவேலி) 
அத்தையும் அவன் செப்பட்டை திருப்பவும், வேலிப்  (செப்பட்டை-கன்னம்) 
பொட்டுக்குள் தென்படக் கண்டேன். 
பொட்டுக் கேடிது பொய்காட்சி யாமோ?   (பொட்டுக்கேடு-வெக்கக்கேடு) 
இரகு வமிசத்துக்கு இவன் இயற்றிட  
இன்னும் என்னென்ன உளவோ சங்கையீனம்?    (சங்கையீனம்-மானக்கேடு) 

ஈனமுடை நெஞ்சத்து இலக்குவன், 
வானம் பூமி வசைபாடும் வலிசெய்தான். 
மான மறத்தி மனமேற்கா வதை யுண்டாள். 
கானக் குயிலின் கானமன்ன குரலாள் 
கணமேதும் கருதாப் போதிலவள் தன் 
எள்ளுப்பூ நாசியும், எழில் தகு செவிகளும் 
வள்ளிக் கொடி யென வாளால் அறுத்தான். 
எள்ளளவும் எண்ணாத அவலத்தை,
பெண்ணாள் பட்டாள், பட்டாள் பாதியுயிர்.
கண்ணால் காண்டலும் கலங்கினேன்.
வெறுத்தாலும் வேம்பெனக் கசந்து 
ஒறுத்தாலும் ஒண்ணித்தில நகையாளை                  (ஒண்ணித்தில நகை
ஒருக்காலும் சிதைக்க ஓம்பட்டேன் அல்லேன்.          -ஒளிவீசும் முத்துச் சிரிப்பு)       
பின்னாளில் பிழை ஒன்றறிந்தேன்.
புன்னெறி இலக்குவன், பேதையேனை 
அண்ணன் அறியாமல் ஆளலாம் என 
கொண்ட எண்ணம் குறித்த பார்வையை 
கண்டநாள் தொட்டு கடிந்தாளை 
சண்டித்தனம் செய்து சாடிட அவன்மதி  
மிண்டின எண்ணம், மிஞ்சின வஞ்சம்.

வஞ்சம் விதைத்த இலக்குவன் செய்தான் 
வஞ்சியின் அங்கம் பங்கம் செய்த கதை. 
கொஞ்சமும் நெஞ்சம்  நாணான் கோணையன்.     (கோணையன்-வக்கிர குணமுள்ளவன்) 
அஞ்சாமல் அரைகுறைத் திராவிடம் 
அறிந்தா னுரைசெய் தான்.
"மஞ்சு தவழ் மலையேறி வா சீதை! நினக்கு 
விஞ்சையர் வியக்கும் தென்னாடு காட்டுவன். 
குஞ்சரம் ஊர் இராக்கதிரார் கோமான்   
அஞ்சுகம் உன்னை அன்புடன் போற்றுவன்.
கஞ்சல் கழிசடைக் கோசல நாட்டானை 
பஞ்சவடி இருக்க விட்டுப் பறையாமல் 
காய் வெட்டி என்னுடன் கடுகி வா வென    (காய் வெட்டி-ஒதுக்கி)  
வாய் வெட்டில் வாசாலக்காரி தன் 
தாய்மொழி அறியா அன்னம் சீதை தடுமாற 
கைபற்றி இழுத்தாள் தென்திசை கடுகவே!
நோய் செயும் நெஞ்சத்தாளை நொடிக்க        (நொடித்தல்-நிலைகுலைதல்) 
கைகால் தவிர்த்துக் கழித்தேன் காது மூக்கு."
தகாதது புரிந்ததைத் தக்கதென நிறுவும் தந்திரி. 
சகாவெனத் தம்பியை சமம் வைத்தானும் 
ஆகாவென ஆர்த்து வருடும் அவன் வதனம்.

கரனது கொலை 

வதனம் சிதைந்து வானதிர அழுத சந்திரநகை,  
துதை விட்டுத் துண்டான அங்கம் கையொடுக்கி,    (துதை- நெருக்கம், சேர்க்கை)           
கோதிலாத் தன் கணவன் கோயில் புக்காள்.    (கோதிலா-குற்றமிலா) 
மதனன் படையன்ன தன் மாது 
வதை பட்டு வந்த கோலம் கண்டு 
சிதையுண் கூட்டின் சிறுகுளவி கொட்டியதன்ன
பதைத்தான் திராவிட நாடு பாலிப்பான் கரன்.
சதை ஒட்டும் சாதனம் பயில் சித்தர் பதம் நாடி               (சாதனம் - கருவி) 
மதிமுகம் நேர் செய மருத்துவம் வேண்டினன். 
கதிகலக்கம் காதல் மனையாள் காண நேர்ந்த
கதை கேட்டான். கேட்டலும் வெடித்து,
சிதை அடுக்கு சினம் பொங்கச் சீறினன். "என் 
மாதின் அங்கம் பங்கம் செய் மதத்தனை, 
சேதனர் சேர்க்காச் சண்டியனை, சோரனை,    (சேதனர்- அறிவுடையோர்) 
சேதித்தல் செய நான் செல்வேன் அல்லெனில்       (சேதித்தல்-அழித்தல்)   
பூதலத்தில் பெண்டிலின் புகழ் காக்காத பிரியன்
கோதிவன், கொண்டவ னல்லன் எனும் பழி சூழ்க!"    (கோது-குற்றம்,சக்கை)  
கொதிக்கும் நோக் கொண்ட கணவன். 

கணவன் கரன் தன் கணம் கூட்டான்.     (கணவன்-தலைவன்) 
"மணங்கொள் மணாளனின் மானம் ஈது.   (கணம் - கூட்டம்) 
இணக்குவ தில்லை கலம்பகம் இதனில்      (கலம்பகம் -கலக்கம்) 
இனியர் என் உறவின் இனத்தர் யாரையு"மென 
மனத்திடை தனித்த முடிவு கண்டான் மன்னவன். 
"காண்டம் படிக்கும் கொண்டையர் குமிந்த 
தண்பொழில் பஞ்சவடி தனைத் தாக்கும்  
சிணியன்ன சிலர் வந்தார் சீலமிலாதார். 
பிணியென்ன நம்மைப் பீடித்தார் அவருடல் 
துணித்து நந்நிலம் தூய்மை செய்குவம்" என்ன 
தன்னந் தனிவழி தாவிப் பஞ்சவடி தலைப்படுவான்,
மணியொலி கிளப்பி செருவில் மருங்கினன்.                            
"மன அறம் அறுந்த மனிதன் எவனோ?
வானமும் மண்ணும் வசை சொல்ல
கானத்து மயிலனை என் காதலியின் 
காதும், மூக்கும் கடிந்த காதகன் எவனோ?
பெண்ணிடம் வீரம் காட்டிய பேடீ! 
ஆண்மகன் தான் நீயெனில் ஒளியாதே! 
முன்வந் தென்னுடன் மோது! மேன்மை கொள்!"
என்ற றைந்தான் சந்தியை அணித்து.

அணித்த மணியொலி அசுகை அறிந்த        (அசுகை<அசைகை-சந்தடி,இரைச்சல்)   
துணிசிலை தூக்கும் இராம இலக்குவர் 
"அணியுடைத்து அரச மகற்கு இதுவும்" எனவும்     (அணி-ஒழுங்கு,முறை,நேர்மை) 
"கணிகன் சொல்லும் காலம் பதுங்கி இருந்து      (கணிகன்-சோதிடர்) 
தணிவோம் தருணம் தேடி அதுவரை 
வணிகத்தார் போலும் வலம் வருதலால்" எனவும்  
கேணிக் கரையதன் கேதக மரத்திடை        (கேதகம் - தாழை) 
தூணியும், சிலையும் தூளியுள் தாழ்த்தார்  (தூளி-புழுதி) 
துணித்தனர், தனியனாய் தாகம் வருத்த 
கேணிநாடிக் கைத்தலம் குழிந்த திருமகனை!

திருமகன் கரனைத் தேடிக் காணார் 
பரந்து தேடல் உற்றார் பரிதவித்தார்.
ஒரு நினைவில் பஞ்சவடி உள்ளிட்டார்.
ஓரமாக உயிரற்ற உருக்கண்டார். ஓலமிட்டார்.       (சாரணர்- தேவரில் ஒரு வகையினர்) 
"சாரணர் வானில் சஞ்சரிக்கும் சதுரர் செய்          ( சதுரன்- திறமையுடையவன்) 
மாரணத்தால் மன்னவன் மாண்டான் காணீர்! (மாரணம்- மந்திரத்தால் கொல்லும் வித்தை) 
வரைமுறை இல்லாப் புழுகுரை வார்த்தார்,
வரைதொடர் சிந்துக்கொச்சின் வடக்கின்      (சிந்துக்கொச்சு=சிந்து+கொச்சு 
புரைசல் வழிப் புகுந்து திராவிடம் படர் நிலம்   சிந்து-பனி, கொச்சு-குஞ்சம் 
பரந்த ஆரியர், கூற்றம் அனைய பாவியர்.    சிந்துக்கொச்சு-இந்துகுஷ்) 
திராவிட மாந்தர் திகைப்பு உற்றார், பேசும் 
இயக்கம் அற்றார், இளைத்த மனத்தினர்.         (புரைசல்-பொத்தல், ஓட்டை) 
தேரதனில் திருவுடல் வளர்த்தித் திரும்பினார் ஊர்.

ஊர் திரும்பிய தலைவன் உலந்த உருக்கண்டு 
சீரதுவும் சிந்தையும் சிதைந்தாள் சந்திரநகை.
"சீர்ப் பட்ட வதனம் சீர்மறவன்றன் காதற் 
பார்வை படாதெனில் பாராதே உலகே"யெனப்
போர்வை முகம் மூடும் தவம் பொறுத்தாள். 
ஆர்முடுகிக் கடுகியது இழவுச் சேதி.                        
நீர்சூழ் இலங்கைத் தீவகத்து நிலவுவான்,  
கார்வண்ண இராவண்ண மன்னவன்  காதினில் 
சேர்ந்தது மைத்துனன் சிதறிய வியளம்.         (வியளம்-சேதி) 
செருமும் குரலைச் செப்பம் செய்து,
பெருகும் விழிநீர் புறங்கை தள்ளி 
ஊர்ந்தனன் வானேறும் தேர் உறுதுயர் சுட.
சீர்கெட்ட கோலம் சிறைப்பட்ட முகம்   
நேர்ந்திட்ட தங்கை நெஞ்சு படுதுயர் 
பார்த்துப் பதறினானை தாடாற்றும் சந்திரநகை.     ( தாடாற்றுதல்-ஆறுதல் படுத்தல்) 

நகை இழந்து திரை நாட்டிய முகத்தினள் 
அகந் திடம் கொண்டு, நாயகன் ஆக்கையை 
இராக்கதிர் திராவிடர் இயற்கையினால் 
தரையிடை முதுமக்கட் தாழியுள் தாழ்த்தனள்.
கருக்குந் துயரம் காங்கை எனக் கடிந்தும்
நிறை கொள் நீத்தார் கடமையும் நிறைத்தாள்.
பொறையில் பூமியைப் பொருந்தும் பண்பினால் 
குறை கடியும் வன்மம் கூராதாள். இயம்பிடும் 
முறையால் முன்பெற்ற மகளின் வாழ் முறை 
அறிந்தன் எந்தை இராக்கதிர் இனத்தரையன்.      (இராக்கதிர்-சந்திரன்) 
மறித்த மச்சினன் மாரீசனை மனதடக்கி 
செறித்தனன் கை, வானேறும் தேர் சேர்ந்து.      (செறித்தனன்-இறுக்கினான்) 
ஊறிய பிள்ளைப் பாசம் உலைக்க, உருக்க 
ஆறாச்சினம் அமர, அன்பு மீற அணுகினன், 
வெறிவண்டு துளை வேய் விளையாடுங் 
காற்றின் கானம் நிறை கானம் பஞ்சவடி.         (கானம்- இசை, காடு) 

பஞ்சவடி பற்றிய பரதேசிக் கூட்டம் 
பஞ்சம் பிழைக்க வந்த பராரிக் கும்பல்
வஞ்சம் செய்து நிலம் வசம் கொள் வம்பலர்;           (வம்பலர்  - புதியவர், வழிப்போக்கர்) 
கண்படின் காரியம் கைகூடாதென 
விண்ணேறும் வானத்தேர் வெற்பிடைக் குழிவில்          (வெற்பு-மலை) 
கண்படா மறைத்தார். கான் மரத்திடை மறைந்தார்.
"விண்ணெனத் தெறிக்கும் வில்லது கொண்டனம்! 
விண்ணர்! வீரர்! நாம் கரந்தடி களத்திலா"மென  
தன்னைப் புழுகி அந்தத் தரங்கெட்ட இராமன்      (தன்னைப் புழுகி -தற்பெருமைக்காரன்) 
வன்மம், வஞ்சகம் வாழும் இலக்குவன் இருபேரும்  
அண்டையில் இருந்தால் அடிபிடியாகும் என 
உன்னிய எந்தை இருவரையும் தெல்லோட்ட        (தெல்லோட்ட-அலைக்கழிக்க) 
பன்னிய ஆணை பணிந்த என் மாமன் மாரீசன்
தொனித்தான் துள்ளித் தாவிடும் மானதுவாக.
இனித்த மான் தின்று இரு திங்கள் ஆயிற்றென
தனித்த எனை தம்பியைக் காவல் வைத்து
குனித்த வில் கொண்டோடின என் கொழுநன்.

இலக்குவனின் ஈன நெஞ்சம் 

கொழுநன் விரைந்தான். கொழுந்தன் இருந்தான்.
பழுதுண்டே இவனும் பக்கலில் இருந்தாலென
அழுத்தும் எந்தை இராவண்ணன் ஆணையினால்
இழுத்து ஒலி எடுத்தான் மாரீசன் இராமன்தன்
தழுதழுத்த குரலில், "இலக்குவா! தம்பீ! காப்பாற்று".
பழுத்த இரும்பு சுட்ட தவிப்பில் பாவியேன் நான்,
"கொழுந்தனே! குமாரா! இலக்குவா! கொண்ணன்    (கொண்ணன்-உங்கள் அண்ணன்) 
விழுந்தான் போல் வீறிட்டானே! வேதனை
அழுந்தியெனை ஆட்டுதே! என்னுயிர் போகுதே!
எழுந்தோடு! எடு வில்! அண்ணனை நாடு!" என
அழும் எனக்கு மனம் எரி புகும் உரை செய்தான்.

செய்தான் சிலவுரை செய்தலும் அஞ்சும் கெட்டேன்.
மெய்யது நடுக்கும் மேன்மை அறுஞ்சொல் கேட்டேன்.
"மைவிழி மைதிலி நின்விழி சுட்ட நாள் முதல்
மெய் சிலிர்த்தேன். மேதினியில் மேன்மை மிகு நின்
கை பிடித்துக் காதல் புரியக் கனாக் கண்டேன்.
மைவண்ணன் முன்பிறந்த உரிமை கொண்டானால்
வைத்தான் கை. வளைத்தான் வில். வரித்தான் நின்னை.
ஐயன் எனை நீ முன்சென்று வளை!என்னும் வாக்குரை
செய்தா னானால் செயல் விளைத்து 
செய்யவள் உன்னைச் சேர்ந்திருப்பேன்.
செய்தவப் பலனின்று அண்ணன் செத்தான் காண்!
வாய் பார்த்த வெருளியாக வாழ்ந்ததும் போதும்.
கைகூடா என் கனவு, இனி நனவாகும் காண்!
ஐயுறாதே பல்லாண்டுத் தவமீது என்னன்பே!"என்றலும்
மெய்விதிர்க்க மெலிந்து மனம் வேகும் அக்கணம்
கையெடுத்த தெய்வம் கருணை செய்தன்ன,
"கைவில்லோடு கடுகி வா! தம்பீ! இலக்குவா!
மெய்யாக விதி முடித்தேன் மாயம் ஒன்றி "னென
மைவண்ணன் மகிழ்ச்சிக் கூவல் காற்றில் மிதக்கும்.

மிதக்கும் கூவல் மீட்டிடும் துணிவு. காமம்
மிதக்கும் இளையான் குரல்வளை யதனை
மிதிக்கும் வன்மம், என் மனம் படர்ந்து 
மிதக்கும் மிண்டும். கலக்கம்
மிதக்கும் அகத்து அழகு இழியவன் முகத்தில்.
மிதக்கும் குரல் வந்த திக்கு நோக்கி,
மிதக்கும் முகிலாய் கால் பின்ன நகர்ந்தான். - வான் 
மிதக்கும் கார்மேக வண்ணன் கால்
மிதிக்கும் பகைத் தோற்றம் மெய் காணவும்,
மிதக்கும் மனப்பயம் மாற்றுத் தேடியும்
மிதக்கும் சிந்தை முந்தி ஓடும். தத்தும்
மிதிக்கும் பாயும் மானதன் தடந்தேடி, ஆசை
மிதக்கும் மனதுடன் சென்ற அண்ணன் மானம்,
மிதிக்கும் நினைப்புடையான் போனான்.
மிதக்கும் மானமுடை மாதர் தம் மனம்
மிதிக்கும் கால்மிதி எனக் கருதுவான்.
மிதக்கும் மானம் மன்ன, சொன்னது மறைப்பள் என
மிதக்கும் அங்கலாய்ப்பில் ஆடும் இலக்குவன்.
மிதக்கும் சங்கையீனம் என் மனசரிக்க, மானம்
மிதிக்கும் அவன் சொல் பறைந்திலனே அற்றைநாள்.

(இன்னும் கிழியும்)
This entry was posted on 4:25 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 9, 2014 at 1:29 AM , Yarlpavanan Kasirajalingam said...

இனிய தொடர்
தொடருங்கள்

 
On July 11, 2014 at 5:02 AM , ந.குணபாலன் said...

நன்றி!