Author: ந.குணபாலன்
•4:15 PM

கிழிந்த கோவண்ணம்! 

திருமணத்தின் பின்னே 

தாய்வீடு நான் விட்டு இராமன் 
தாரமாக வந்தபின் ஓயாது என் 
வாய் இராமனின் வண்மை பாடும். 
வாள்தடங்கண் அவன் வரவு தேடும்.
பாயல் கொள்ள மட்டுமன்றிப் 
பகற்போது தனிலேயும்                            
மாயன் அருகணைய மனம் நாடும்.
மையல் மலர்ப் பாம்பென தலை மீறும். 
கணவனே கண்கண்ட தெய்வம் என 
காதல் கண்மூட, மூர்க்கமிகு காளையவன் 
இணக்கமிலா எளியோரை வாட்டுவதுவும் 
இரக்கமிலா இழி பழி இயற்றுவதும் 
வணங்கப்பெறும் கோக்குலத்தோர் 
வழக்க மென்றிருந்தேன்.
வழக்காடும் ஏழையோர்  பட்ட 
வாழ்மானம் ஞாயம் எதுவும்              (வாழ்மானம்-துன்பம், கேடு) 
விளங்க நான் விரும்பேன். 

விரும்பேன் கைகேசி விளம்பல் 
கரும்பினும் இனிய என் கண்ணாளனை  
வெறுக்கும் கைகேசி வேம்பென.
வேறாக்கி வைத்தாள் தன்னிரு மகவை.
கூறாக்கிக் குலப் பெயரைச் 
சேறாக்கும் இராம இலக்குவனை 
சேராதார் பரத சத்துருக்கன்.
மாறாத நேர்வழி கண்டு கேகய நாடாளும் 
மாமன் வீட்டில் தன் மக்கள் அறமோதி உறைகென,
அறங் காக்க எண்ணிய அன்னை கைகேசி. 
குறுக்காலே போகும் பிள்ளைப் பாசம்   
குருடாக்க, உள்ளது உணராள் கோசலை.
மறித்த பாசத்தால் மகனிற்காக ஞான்றும் 
மல்லுக்கட்டும் மூடத்தீ மனத்தினாள்.
ஆர்தான் குத்தினால் என்ன? தனக்கு  
அரிசி ஆனால் காணும் என்பள் சுமித்திரை.
காரியம் ஆக்கக் கருதினால் ஆருக்கும் 
காரியம் செய்யவும் கலங்கா மனத்தினள்.
செக்குடன், சிவலிங்கமும் ஒன்றென
செல் வழி ஆயா நாய் ஒப்பாள்
சேர்பலம் சார்ந்து சாற்றும் செல்லம்.            (செல்லம்-கொஞ்சற்பேச்சு) 

செல்லம் பொழிந்தேன். சீராட்டினேன் என்         (செல்லம் பொழிதல்
செல்லன் இராமன் சீமானை,கோமானை!           - அன்பை மிகையாகக் கொட்டுதல்)              
கல்லைக் கட்டிக் கிணற்றுள் வீழ்ந்த போலும் 
காமம்,காதல் எனும் வெந்நீரிடை தாழ்ந்தேன். 
தாழ்ந்தும் மூச்சுத் தடக்கவில்லை. ஆனால் 
பொல்லாப் பொறாமை எனை வாட்டும்,
போக்கற்ற சக்களத்திப் போட்டியால்.
வில்லவன் இராமன் ஏக பத்தினி விரதன்?......
விசர்க் கூட்டம் விரிவாய்ச் சொல்லும்.
சொல்லுவார் சொன்னால், கேட்பாருக்கு?......
சோற்றுக்குள் முழுப் பூசணிக்காயினை 
சொல்லாமல் சோடித்து மறை செய்தார்.

மறை செய்த மாயக் கதை கேளீர்!
மன்னன் மகனுக்கு மனைவியராய் 
முறை செய்து இன்னும் பெண் பிடித்தார்.
முதுகுல மன்னர் முறைமையாம்.
பிறைநுதல் பெண்ணாள் பிரபாவதி 
இறையன்பு எண்ணாள் இரதிநிபா, 
சிறைவண்டுக் கண்ணாள் சீர்தமா என 
முறையான போட்டிக்கு இன்னும் 
மூன்று பேர் முந்தி விரிக்க முந்திவர,
பொறை கொண்டு எதுகாலும் போகலாம்?
போமிடம் எல்லாம் நானும் போதலால்,
நறையுண் வண்டென, நாணது விலக்கி 
நம்பி அவனை, நானும் தொடரும் நிழல்.

நிழல் இலா நீறாகும் வனாந்தரம்.
நிழல் இலா நீராகும் என் மன அந்தரம்.
அழலான தாபம் மெழுகான என் தேகம்.
அழல் அள்ளித்தரு இராமன் ஆக்கினையால் 
அழலான துன்பில் மெழுகான அயோத்தியர் தேகம்.
அழல் பெருகு உலையாகும் கைகேசி உள்ளம்.
மழை பெய்து மண் குளிர்ந்து பயிர் 
விளைய வேண்டு மெனில் வீணனை 
கலைவு காட்டிக் காட்டுக்கு துரத்த 
வலை போடும், வகை தேடும்,         ( கழையாடும்-நிதானத்துடன் கயிற்றில் நடக்கும்)
கழையாடும், கவலும் கைகேயி மனம்.                                                                

கைகேயி மனம்!

மனங் கொண்ட நாட்டு மக்கள் தாம் படும் மிடி          (மிடி - வறுமை) 
மணங் கொண்ட தசரதன் தன் மிடாக் குடி              (மிடா- பானை) 
இணையான சக்களத்தியர் இளக்காரம் 
குணங் கெட்ட இராமன் தன் குறளை         (குறளை-தீயசொல்) 
இணங்கிப் பின்னேகும் இலக்குவன் கயமை.
பிணந் தின்னும் பேயாம் பிரதானியர். இவர் நட்டே 
பிணங்கி மனம் நொந்து பிழை கடியும் கைகேசி.
இணங்கி இதம் சொல்லி மதியாற்றும் மந்தரை 
இது நடுவில் இல்லையால் எக்கணமோ 
சிணுங்கு மனம் சிதற விசர் சேர்ந்திருக்கும்.
சீரான செங்கோல் பாராள வேண்டுமென 
காணும் கணம் யாவும், கணவனுடன் கொல்லுப்பாடு    (கொல்லுப்பாடு- சண்டை) 
காணும், அவள் கண்டாள் கடைசியில் ஒரு வழி!

"வழியேகும் தூது விடுப்பேன், தாய் 
வழியாகும் கேகயம் வரைசூழ் நாடு.                             (வரை-மலை) 
பழி துடைக்கப் படையனுப் பிங்கு, 
பாசமிகு என் உடன் பிறந்தோயென!
அழி தவிர்ப்பின் என் அறிவுரை கேள் கணவா!                         
அடர் கானகம் இராமனவன் அடுக்கவும்,
விழியாகும் பரதன் முடிசூடவும் விதி செய்!
விளையாட்டு இனிமேலும் வேண்டா!"
கிழிபடும் நாட்டின் கேவலம் தாளாள்;
அழிபழி அட்டிய நாட்டதன் செல்வம் ஒரு 
வழி வந்து வளர்ந்து வளம்பெற வேண்டின் 
ஒழுக்கம் ஓம்பும் உத்தமன் ஒருத்தன் 
பழுதிலாப் பன்னிரு ஆண்டு காலம் 
மழுங்கிடா மாண்புடன் ஆண்டிட வேண்டுமென 
எழுந்திடு சிந்தை உள்ளகத் திருத்தி 
மொழிந்தாள், முழிந்தாள், முறுகினாள்.
"வழிமுறை வாரிசு இராமனே ஆயினும் 
வலி என்ன எனக்கு? மது வார்த்திடு போதும். 
வழி வந்த ஆதனம் தன் சீதனம் ஆகு நாடென
விழிகளில் சினத்துடன் கோசலை வந்திடின்   
கழி கொடு கண் நகையாளை கடிவேன்.
பழி பாவமில்லாப் பரதனே ஆள்வான்.
பாவாய் நின்வாய் இனிக்கும் பாகாய்."

பாகாய் பிசினாய் கசிந்தனன் பரதன் தாதை-தன் 
பாடுக்குப் பங்கம் வாராமல் தடுப்பன் வாதை.
மேக வண்ணனை மேவி அழைத்தான். ஊர் 
மேயும் வேலை முடித்து இராமன் மெள்ள வந்தான்.
"ஆகக்கூடி ஒரு பன்னிரு ஆண்டுகள் நீயும் 
ஆனைக் காட்டிடை ஊர்ந்து அயர்க!        (அயர்தல்- விரும்புதல்,
இகழாச் சிறப்பின் பரதன் அரசு ஏற்க!         விளையாடுதல்,வழிபடுதல்)                                
அல்லெனில் ஆனையும் தேரும் ஓங்கிய 
கேகயன் படை வரும்! கேளிரும் கைவிட 
அவலம் நிகழ்ந்திடும்! அட்டாதுட்டித் தனம் தரு 
பாகம் உனக்கும் பாதலச் சிறைதான் பார்!
பறையாமல் கானகம் செல்"லென 


காடு புகுதல் 

செல்லென அரிக்கும் அச்சம் செறிதர,                      (செல்-கறையான்) 
செருமுக நேர்மை நாளும் சேராதான், 
வில்லுடன் வெளிக்கிட்டான் "விடை கொடு" என,
விட்டால் இவன் பற்று என்மேல் விலகிடுமே!  
மல்லுக்கட்டும் சக்களத்தி மாதர் இங்கு 
மலிந்தார். அம்மட்டோ? மந்தரை, கைகேசியிடம்  
மல்லாய் கொண்டு மன்றாடவோ மானம் விட்டு?        (மல்லாய்-பிச்சைப்பாத்திரம்) 
மாள முடியாது இவரோடு மாரடித்து.
அல்லாடிப் பன்னிரு ஆண்டுகள் வீணே 
அழகுறும் இளமைச் சுகம் அழிப்பதுவோ?
தொல்லை நோக்கேன். தோகை நானும் இராமன் 
தோள் படர்வேன்,தொடர்வேனென 
அல்லாடும் மனதைக் காதலும் காமமும் 
அழைக்க உலைந்தேன் அவன் பின்னே இழுபட்டு!

இழுபட்டு வந்தான் இளையவன் இலக்குவன் 
இராமன் இணையிலாது எதைத்தான் கலக்குவன்?
அழுது பின் வரு மக்கள் ஆருமில்லை.
ஆனதெல்லாம் கோசலை புலம்பல் மட்டே.
அழுதா னல்லன் அப்பன் தசரதன். அவனுக் கென்? 
அவன் உண்டிக்குப் பழுதுண்டோ?
கொழுகொம்பு படரும் கொடி நிறை 
கோகிலம் பாடும் கானகம் புக்கோம்.

புக்கோமைப் புகலிடம் தந்தார் பூச்சூடும் 
புரிசடைக் கொண்டைக் கூட்டத்தார்.
முற்காலம் இருவரும் பகை முறித்த முறை 
மிக்கலும் அறிந்தார். மிசை தந்தார். மலர் நாடும்     (மிசை-உணவு) 
மிஞிறென மொய்த்தார் இராமனை.                (மிஞிறு- தேனீ) 
"விற்கொண்டு முன்போலே கரந்தடிக்கும் 
வீச்சுக் காட்டி வீழ்த்திடுக எம்பகை!
பாற்கஞ்சி தலைக்கொண்டு பலதேவை யாவும் 
படைத்திடுவோம் பாலித்திடு எமையே."
வேற்கொண்டு நேர்மைப் போர் நேர்ந்து 
வெல்லாதார் வேண்டி நின்றார் வீணர்.

வீணரிடை "கேகயத்தான் ஏவிடும் வேவினர்,              (வேவு-உளவு) 
காணலர் தம்முடைக் கோலம் காட்டாது                    (காணலர்-பகைவர்) 
மாணவராகவும் மாறிவரக் கூடும்" என்ன இராமன்       
கோணல் மனத்தில் குலைப்பன் அடிக்கும்.           (குலைப்பன்- குளிர் காய்ச்சலால் 
பாணம் கொண்டு பம்பல் அடித்து                                       வரும் நடுக்கம்)          
வீணாகச் சின்னாளை விலக்கின இராமன் 
"காணாக் கங்கையின் தென்பால் ஏகுவம்.
பாணர் இயங்கு பாதை பரந்து ஆங்கே 
ஆறலைக்கும் கள்வரை ஆளறியாமல் அழித்து 
நாறடித்து, நாடுமாறும் வாய்பகரத்தார் வசம் 
நறவும், கூலமும், நகதியொடு திறையெனப்            (நறவு, கூலம், நகதி-கள், 
பெறுவம். பெயர்ந்து நம் ஏவல் யாவும்                            தானியம்,பொன்கட்டி)                       
சுறுக்காய் செய்ய சூதருடன் அவர்தம் சுந்தர                    (சூதர்-பாணர்,
விறலியரை வினை விதிப்போம் " என்றலும்           விறலியர்- பாணப்பெண்டிர்)  
ஒன்றார் அறியா வண்ணம் ஒதுங்கிடம் தேடி             (ஒன்றார்- பகைவர்) 
நின்ற இடத்துக்கும் பறையாது நடையைக் கட்டி 
சென்றனம் விரிதிரை புனல் பெருகு கங்கைக்கரை.


குகன்

கங்கைக்கரைக் காவல் புரப்பான் குகன்
கொண்டைக்காரர் தம் கூட்டுக்காரன். 
பங்கமின்றிப் பரிசல் கொண்டு அக்கரை 
போக்கிடும் தொழிலன். நாளும் ஆரியச்  
சங்காத்தம் நாடும் சங்கத்து நாயகன்.        (சங்காத்தம் - கூட்டு, நட்பு)
சங்கதி பல சாரும் கங்கைச் சாரல். 
எங்கதி பற்றியும் அறிந்த வண்மையால் 
பொங்கு பரிவுடன் புது நட்பு நாடி 
வங்கி குலுங்க வணங்கி வரவு சொல்வான்.
தங்கலுக்குத் தன்னகம் தகுந்த தெனும் 
தங்கருத்தைத் தகவுடன் தந்தானால் 
"எங்கள் தம்பியடா நீயும் ஐயா! 
நாங்கள், பரதனும் மாமனும் நாடாத் தென்கரை  
சங்கடம் இன்றிச் சார்ந்திட உதவு.
எங்களைத் தேடும் எதிரிகள் வந்தால்,
கங்கையில் அவர்களைக் கரைப்பாய்" என்னச் 
செங்களம் சேர்ந்து செம்மை செய்யான் செப்ப
எங்கள் தம்பி எனுஞ் சொல்லில் எடுபட்ட 
மங்கல் மதிக்குகன் மண்டையை ஆட்டும்.  

ஆட்டும் கங்கை வெள்ளம் ஆடும் அம்பி.                (அம்பி-தெப்பம், தோணி) 
கூட்டம் சேர் குகன் அற்றை நாள் ஓம்பி,   
ஆட்டக்காரன் இராமனுக்கு ஆயினன் எம்பி. 
பாட்டுக்கு நூலில் ஆடும் பாவை அந் நம்பி.
கூட்டம் கூடும் தென்கரை கூட்டிச் சேர்க்கும்.                  
மூட்டம் போடும் முகில் அன்ன இராமனும் 
காட்டம் போடும் கனல் அன்ன இலக்குவனும்    (சாட்டம் - அசைவு, ஆட்டம்)
நாட்டம் கொண்டு நானும் நல்ல விடைகூற        (சால்பு-தன்மை)                   
வாட்டம் போடும் கச்சான் காற்றில் வாடிச்           (கட்டுக்கொடி-நிறைய முச்சைகளும்,                
சாட்டம் போடும் கட்டுக்கொடி தன் சால்பின்       மிகநீளமான வாலும், கொண்ட ரு
பாட்டம் போட்டு ஒருபாடு அழும் குகன்.                     வகைப் பட்டம்)                          
நீட்டம் நாம் போம்வழி; நிலம் நீச்சு, வயல் வரப்பு      ( பாட்டம்-ஒரு தடவையில் பெய்யும் 
தோட்டம் துலை துரவு பலதும் தாண்டும்.                                          மழை)    


சித்திரகூடம் 

தாண்டும் தடம் அடிக்கடி திராவிடத் தோற்றம்.            (தடம்-பாதை) 
நோண்டும் ஐயம் கொண்டு நொடியார் தேற்றம்.  (நொடியார் தேற்றம்-பழிக்காதவர் உறுதி) 
ஆண்டும் இடைசுகம் ஆரியர் மாற்றம்.           (இடைசுகம்-அங்கொன்றும்,இங்கொன்றுமாக) 
பாண்டம் பாடையில் படுக்கும் நாளதுவரை,             (பாண்டம்-உடல்)                                                
வேண்டுவதும் விளைவதும் யாதெனும் வினா,                                                
தோண்டும் ஆவல் திராவிடம் தொக்க, தொற்ற, 
தீண்டும் பொன் பொருள் தீனியும் தண்டிக்               (தண்டி-பெற்று) 
காண்டம் வாசிக்கும் கலைபயில் கூட்டம்.
மாண்புடை சித்திரகூட மலையவர் தவிக்க
காண்பதைக் கவர்ந்திடும் ஆரியக் கூற்றம்.          (கூற்றம்-கொடும்பகை, யமன்) 

கூற்றம் அனைய ஆரியக் கூத்தினர்.
சாற்றும் உரை தமக்கே சாதகமாக்கும் 
பெற்றியுடைப் பெருங்கொண்டைப் பாதகர்          (பெற்றி-இயல்பு) 
ஏற்றம் உடை சித்திரகூட மலையது கவர்ந்தார்.
தோற்றம் கண்டார். இருவர் தோள் கண்டார்.
வீற்றிருக்கும் வில் கண்டார். வெவ்வினை அறிவார்.
பற்றுடன் பலாக்கனி மொய்கும் இலையான்  என 
சுற்றினார், சுழன்றார், சொன்னார் தம் வரம்.
"ஆறலைப்பார் எம் தென்றிசை எல்லை 
அடுத்து வளர் பாலை அணுகுவர்.
நாடு மாறும் வாய்பகரத்தாரும் நலிய               (வாய்பகரம்-வியாபாரம்) 
பாடு படுத்தும் ஆறலைப் பாவியர் அவரால் 
தெற்காலே நகர்ந்த நம் நகர்வு தேங்கியதே 
தேவநாகரி தெரியா இராக்கதிர் நாடு  வீங்கியதே!  (இராக்கதர்>இராக்கதிர்-சந்திரன்) 
முற்காலம் நீவிர் முனிந்த தீரம் அறிவாம்.
விற்கொண்டு மறைந்து வினை முடிக்கும்  
வேலையில் வெற்றி கொள்வீர்! வேள்வாக                (வேள்வு- பரிசு, பரிசம்) 
நெற்சோறும், நெய்யூறு ஊனும், நறவும்,                   (நறவு-கள்) 
நேர்ந்திடுவோம் இன்னும் பல நுமக்கே" எனக் 
கேட்குநர் பெருங்கொண்டையர் கெலியினர்.         (கெலி-பேராசை) 
வேட்கையுடன் விரல் அசைத்தார் இருவர்.
விரும்பிய வேலை அவர் கை விரலில் சுழலும்.

சுழலும் உலகம் சூழ்ச்சிகள் பயிலும். 
பழகும் பண்பினரைப் பதி விட்டுத் துரத்தியே,
உழலும் மாந்தர் உறைவிடம் தமதாக்கும்   
அழகிது காண்பீர்! ஆறலைக்கும் கூட்டம்            (ஆறலை-வழிப்பறி) 
ஆரென ஆய்ந்து உன்னுவராயின் காண்பீர்!
ஊழாக வந்து உருத்து இடம்பிடிக்கும் ஆரியத்தார்,
பாழாக பதி குலைக்க உரியவர் பரதேசி ஆனார்.
வீழாத இராக்கதிர் வீரரை கரவிலே விழுத்தும் 
தாழாத பேராசை தவண்டை அடிக்க             (அகரமுதலியில்:தவண்டை அடித்தல்-  
ஆளான இராக்கதிர் நாட்டு திராவிடர்                                          ஒருவகை நீச்சல்,              
வாழாத வழி காண வேண்டினர் இராமனை.        பேச்சுவழக்கில்: அலைமோதுதல்) 


(கிழியல் நீள்கின்றது)
This entry was posted on 4:15 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 6, 2014 at 5:24 AM , Jeevalingam Kasirajalingam said...

சிறந்த கவிதை
தொடருங்கள்

 
On July 6, 2014 at 10:56 AM , ந.குணபாலன் said...

நன்றிகள் பல.