Author: ந.குணபாலன்
•4:35 AM
                                                            மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                        எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்


துடிப்பு பதினஞ்சு : தெங்கிலின்ரை கதி!

 


இறுதிக்கட்ட விடுதலைப் போரும் வெடிச்சது. பலரும் காத்திருந்த மாதிரி! அண்டைக்கு எண்டு பார்த்துக் காட்டுறோசாப் பள்ளத்திலை புயல் காத்து அடிச்சது. கனக்க மரங்கள் பாறிப் பிரண்டு போச்சுது. இன்னும் கனக்க மடங்கி முறிஞ்சு போச்சுது. ஒர்வார் நயினாரும் புயல் ஒண்டு பற்றிக் கதைச்சவர் தான்.......
"விடுதலைப் போர் ஒரு புயல்காத்துக் கணக்கிலை அடிக்கப் போகுது. அது ஆள்குமிப்புக் காறரை எல்லாம் முறிச்சு அடுக்கும்; மரங்களை முறிச்சு விழுத்திற புயல் காத்து கணக்கிலை. அது சுழிக்காத்தைப் போலை எங்களைப் பிடிச்ச அடிமைத் தனத்தை எல்லாம் சுழட்டி எறிஞ்சு எங்களை திரும்பவும் விடுதலையாக்கும்!"

பெத்தையாவின்ரை அடுப்படியிலை வைச்சு இப்பிடிச் சொன்னவர். களவு களவாய் அரணக்காறங்களுக்கு  ஒழிச்சு பதுங்கி, ஒருத்தர் ரெண்டு பேராய் ஆக்கள் வந்து போனவை. அண்ணரையும், நயினாரையும் கண்கொண்டு பார்க்கிறதுக்கும், நயினார் சொல்லிறதைக் கேட்கிறதுக்கும் எண்டு வந்தவை.

" நீங்கள் ரெண்டு பேருந்தான் எங்கடை நம்பிக்கையும், எங்கடை ஆறுதலும்" ஆபத்தான காரியம் தான் எண்டாலும் இருட்டின பிறகு பார்த்துப் பதுங்கி வந்தவையள். 
"சின்னப்பிள்ளையள் மாயாசாலக் கதை கேட்க ஆசைப் படுகிற மாதிரி, இவையள் நயினாரின்ரை விடுதலை உரையைக் கேட்க ஆசைப் பட்டு வருகினம்." எண்டார் பெத்தையா. 

ஒர்வார் நயினாரின்ரை விடுதலை உரையைக் கேட்ட நேரந்தொட்டு சனங்களின்ரை நினைப்பிலை இறுதிக்கட்ட விடுதலைப் போர் மட்டுந்தான். உதொண்டும் விசித்திரம் இல்லை. ஒர்வார் நயினார் மறியல் உடைச்சு தப்பிட்டார் எண்டு தெங்கில் அறிஞ்ச பிறகு அவன் செய்யிற கொடுமை, ஆய்க்கினை எல்லாம் இன்னும் இன்னும் கூடிப் போச்சுது. காட்டுறோசாப் பள்ளத்து சனத்தை வருத்திறதுக்கு ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாய் ஒரு சாட்டு சொல்லுவான். அதினாலை சனங்கள் அவனை இன்னும் கூடுதலாய் வெறுத்ததுகள். ஒளிவு மறைவிலை ஆயுதங்களும் செய்ததுகள். 

செர்ரிப்பள்ளத்திலை இருந்தும் அடிக்கடி விடுதலைப் போராளிகள் உதவிக்கு வந்து சேர்ந்தினம். சோபியா அக்கையும், கூபர் ஐயாவும் ஒரு தொகை ஆக்களோடை எல்பிரீடா ஆச்சியின்ரை வீட்டுக்குக் கிட்டவாய் காட்டுக்குள்ளை முகாம் அமைச்சு இருந்தவை. சோபியா அக்கை இடைசுகம் இரவு நேரத்திலை நிலக்கீழ் சுரங்கப் பாதையாலை வருவா. பெத்தையா வீட்டு அடுப்படியிலை தான் அவவும், நயினாரும், அண்ணரும் போர்த் திட்டங்களைப் பற்றிக் கலந்து முடிவெடுக்கிறது. 

அப்ப நான் அடுப்படி வாங்கிலை படுத்து இருப்பன். அங்கைதானே அனக்குப் படுக்கை! ஒர்வார் நயினாரும் அண்ணரும் ஒளிச்சுப் பதுங்கி இருக்கிறதும் சுரங்கவாய் வந்து திறக்கிற அந்தக் கள்ளஅறையிலை  தான். சோபியா அக்கை அங்கை வாற நேரமெல்லாம் என்னை கண்டவுடனை,
"இந்தா உந்தப் பெடி கார்ல் தான் என்னைக் காப்பாற்றினது. நான் ஒழுங்காய் நன்றி உமக்கு சொன்னநான் தானே கார்ல்?"
ஒர்வார் நயினாரும் என்னைக் காட்டுறோசாப் பள்ளத்தின்ரை கதாநாயகன் எண்டு புளுகுவார். அனக்கு ஆற்று வெள்ளத்திலை அள்ளுண்டு போன யூச்சியின்ரை அவலப் பட்ட கோலம் ஞாவகம் வர, அழுகை தான் வரும்.

சோபியா அக்கை காட்டுறோசாப் பள்ளத்துக்கு தேவையான பாண், தேன், பால் எல்லாம் மலைப்பாதையாலை வண்டில் வண்டிலாய் கொண்டுவந்து , களவு களவாக சுரங்கப் பாதை வழியாலை கடத்திக் கொண்டு வந்து தந்தவ. பெத்தையாவும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு அசம்பிக்குள்ளை வைச்சு ஒளிச்சு மறைச்சு களவு களவாய் ஒவ்வரு வளவிலையும் குடுத்திட்டு வருவார். ஒரு சின்னத் துண்டு பாணைக் கண்டு சனங்கள் இம்மளவு புளுகப் படுங்கள் எண்டு நான் நினைச்சுப் பார்த்தும் இருக்கேல்லை. பெத்தையாவோடை கூடிப்போன நேரத்திலை எல்லாம் என்ரை கண்ணாலையே இதைப் பார்த்தன். அதோடை சனங்கள் இறுதிக்கட்ட விடுதலைப் போரையும் பற்றி, அது எப்ப வரும் எண்டு தவனப்பட்டுக் கதைக்கிறதையும் கேட்டன்.

இறுதிக்கட்ட விடுதலைப் போரைப் பற்றி நினைச்சவுடனை அனக்கு வயிற்றைக் கலக்கும். இருந்தாலும் அது எப்ப வரும் எண்ட ஆவல் அனக்கும்  தொட்டிட்டுது. எப்ப வரும் எப்ப வரும் எண்டு கனநாள் காத்துக்காத்து இருக்கிறது விசர் பிடிக்கச் செய்யும் எண்டு அண்ணர் சொன்னவர். அதோடை ஆபத்துமாம். 
" கன நாள் இப்பிடி மறைவு களவாய் இருக்கச் சரிப்பட்டு வராது." அண்ணர் ஒர்வார் நயினாருக்குச் சொன்னவர்.
"விடுதலைக்கனவு இலேசிலை நொருங்கி போகவும் கூடும்"

அண்ணர் சொன்னது மிச்சம் சரி. பின்னை என்ன? ஆராவது ஒரு அரணக்காறனுக்கு ஒரு சின்ன ஐமிச்சம் தொட்டிருந்தாலும் எல்லாமே கவிண்டு போடும். ஆராவது ஒருத்தன்ரை புலனுக்கு தன்னும் சுரங்கவழி தெரிய வந்திருந்தால்?..... அல்லது வீடுகளுக்கை திடீர்ச் சோதினை எண்டு பூந்து ஆராய நினச்சு ..... அண்ணரும், ஒர்வார் நயினாரும் ஒளிச்சிருக்கிற கள்ள அறையை கண்டு பிடிச்சாங்கள் எண்டால்?..... எல்லாத் திட்டமும் நாசமாயும் போயிடும். அனக்கு நினைக்கவே குலைப்பன் அடிச்சது. 

எங்கடை நல்லகாலமாக்கும்; அரணக்காறங்கள் எல்லாம் அந்தக் கொஞ்ச நாளும் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருந்தவங்கள். ஒரு சின்ன அறிகுறியைத் தன்னும் உணருகிற பக்குவம் அவங்களுக்கு இருந்திருக்கும் எண்டால், உந்தப் புயல் காற்றாகச் சுழட்டி அடிக்கப் போற விடுதலைப் போரைப் பற்றி எச்சரிக்கையாய் இருந்திருப்பாங்கள். அவங்கள் அதைக் கனாவிலும் கூட நினைச்சுப் பார்க்கேல்லை.

இறுதிக்கட்டப் போருக்கு முதல்நாள் நான் வாங்கிலை படுத்த படி உழட்டிக் கொண்டிருக்கிறன். அனக்கு நித்திரை வரேல்லை. வெளியிலை காற்று சுழட்டியடிக்கத் துவங்கி விட்டுது. அனக்கு ஒரே பயமும், யோசினையும், கவலையும். விடிய வெள்ளாப்பிலை போர் துடங்க வேணும் எண்டு முடிவெடுத்தாச்சு. ஒர்வார் நயினாரும், பெத்தையாவும், அண்ணரும் போர்த் திட்டங்களைப் பற்றிக் கதைச்சவையள். நான் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு படுத்துக் கிடந்தநான். நயினார் தான் கூடுதலாய்க் கதைச்சவர். கதைக்கக் கதைக்க அவரின்ரை கண் ரெண்டும் பழம் போலச் சிவந்து போச்சுது. எப்படா பொழுது விடியும், சண்டையைத் துவங்கலாம் எண்ட   தவனத்திலை இருந்தவர். 

என்னென்ன படி எங்கெங்கை சண்டை நடக்கும் எண்டு அவையள் கதைச்சதை வைச்சு அறிஞ்சன். பெருங்கதவத்தையும்,  பெருந் தோணித்துறைக் கதவத்தையும் காவல் காக்கிற காவலாளியளை முதலிலை கொல்லிறதாம். பேந்து பெருங்கதவத்தாலை சோபியா அக்கையயும், பெருந் தோணித்துறைக் கதவத்தாலை கூபர் அய்யாவையும் அவரவரின்ரை விடுதலைப் போராளிக் கும்பலையும் உள்ளிட வைக்கிறதாம்.

"ஒண்டில் நாங்கள் விடுதலையை வெண்டெடுக்க வேணும் இல்லை செத்து மடிய வேணும்!" எண்டார் நயினார். முதலிலை காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்கிற தெங்கிலின்ரை எளியபடை அழிக்க வேணும்.
செய்தி அறிஞ்சு தெங்கில் கத்துலாவோடை ஊருக்குள்ளை உள்ளிட முன்னம் ரெண்டு பெருங் கதவங்களையும் சாத்திப் பூட்டிவிட வேணும்.
ஏனெண்டால் கத்துலாவை எந்த ஆயுதத்தாலையும் வெல்ல ஏலாதாம்.
அதை பட்டினி போட்டுத் தான் சாகடிக்கலாமாம். 

"ஈட்டியோ, அம்போ,வாளோ எதுகுமே அதைத் தாக்கி அதின்ரை தேகத்திலை தைக்காது" எண்டார் ஒர்வார் நயினார்.
"அதோடை அதின்ரை மூக்காலை சீறுற அனலிலை ஒரு பொறி தப்பித் தவறி பட்டாலும்,ஒண்டில் ஒரு மனிசர் செத்துப் போடுவினம்; அல்லாட்டில் அழுந்தி இழுபட்டுச் சாவினம். கொஞ்சம் கொஞ்சமாய் பொறி பட்ட இடத்திலை இருந்து பாரிசவாதம் குத்தின கணக்கிலை  சதிரம் விறைக்க வெளிக்கிட்டு சிரசிலை அடிக்க ஆள் மண்டையைப் போடும்."

" கறுமண்யாக்காவிலை  தெங்கில் கத்துலாவைத் தன்ரை  கைவசம் பக்குவமாய் வைச்சிருக்கிறான் எண்டால் காட்டுறோசாப் பள்ளத்துக்கு விடுதலை கிடைச்சும் என்ன பலன்?" எண்டு என்ரை மனசிலை பட்டதைக் கேட்டன்.
" கத்துலாவைக் காட்டி பயமுறுத்தி பழையபடி கொடுமைப் படுத்த மாட்டானோ?"
"அதுதான் அந்த மாதிரிப் பெலப்பான அச்சறுக்கையான சுற்றுமதில் ஒண்டை காட்டுறோசப் பள்ளத்தைச் சுற்றவர தெங்கில் கட்டி வைச்சு
இருக்கிறான் எல்லோ கார்ல்?" எண்டு ஒர்வார் நயினார் என்னை கேட்டவர்.
" பெருங்கதவம் ரெண்டையும் இழுத்து பூட்டினால் அவன்ரை பறவை வேதாளம் கூட கால்நடையிலை வந்து உள்ளிட ஏலாது. அதின்ரை  சங்கிலிப் பூட்டைக் கட்டைக் கழட்டி அதைத் தன்னிட்டவாரம் பறக்கிறதுக்கும் அவன் விடுறதில்லை. எங்களிலை இரக்கப்பட்டு முன்னேற்பாடாய் இப்பிடி எல்லாம் செய்து வைச்சிருக்கிறான் எல்லே?" அவரின்ரை குரலிலை ஒரு நக்கல் நளினம் தெரிஞ்சது.

தெங்கிலைப் பற்றி மேற்கொண்டு நான் கவலைப் பட வேண்டாமாம். ஏனெண்டால் நாளைக்கு செக்கல் படுகிற நேரம், ஊருக்குள்ளை கிளம்பின கலம்பகம் தெரியிறதுக்கு முன்னுக்கு தெங்கிலின்ரை கோட்டைக்குள்ளை அண்ணரும், சோபியா அக்கையும், இன்னும் ஒரு கும்பல் போராளிகளும் மெள்ள உள்ளிடப் போகினமாம். அவன்ரை மெய்க்காவல்காரன்களை முதலிலை அம்மிப் பிடிக்கிறதாமாம். பேந்து உடனடியாய் தெங்கிலை மடக்கிப் பிடிக்கிறதாமாம். பேந்து கத்துலாவை அப்பிடியே கட்டி வைச்சுப் பட்டினி போட்டுச் சாகடிக்கிறதாமாம். 
"கத்துலாவைக் கொல்லிறதுக்கு வேறை வழியில்லை" எண்டார் ஒர்வார் நயினார்.

பேந்து கூடிய கெதியிலை தெங்கிலின்ரை அரணக்காறர் எல்லாரையும் அகற்றி காட்டுறோசாப் பள்ளத்தை விடுதலை செய்ய வேணும் எண்டு திரும்பவும் கதைச்சவர். அப்ப அண்ணர் கேட்டவர்,
"அகற்றுறது எண்டால் என்ன கொல்லிறதோ?"
"ஓம் பின்னே? நான் வேறை என்னத்தை சொல்லப் போறன்?" எண்டு கேட்டார் நயினார்.
"ஆனால் என்னாலை ஆரையும் கொலை செய்யேலாது" எண்டார் அண்ணர்.
"உங்களுக்குத் தெரியும் நயினார். நான் உங்களுக்கு ஒருக்கால் சொல்லி வைச்சனான்"
"உனக்கு நேரடியாய் உசிராபத்து எண்டு வந்தாலும் கூடி, கொலை செய்ய மாட்டியே?" எண்டு சாதுவான எரிச்சலோடை கேட்டார் நயினார்.
"என்ரை உசிர் போறதெண்டாலும் இன்னொரு ஆளைக் கொல்ல  மாட்டன்!" திடமாக அண்ணர் சொல்லிப் போட்டார்.

அண்ணரின்ரை மனசை நயினாராலை விளங்கிக் கொள்ள முடியேல்லை. பெத்தையாவுக்கும் அது பிடிபடேல்லை.  
"இப்பிடியே எல்லாரும் நினைச்சால்...." எண்டு இழுத்தார் நயினார். அவரின்ரை குரலிலை ஏமாற்றமும் திறுத்தியீனமும் இருந்தது.
"எந்தக் காலத்திலையும் அடக்குமுறையும் அதிகார வெறியும் தான் எங்கினை பார்த்தாலும் ஆட்சி செய்யும்" அப்ப என்னாலை அண்ணரை விட்டுக் குடுக்கேலாமல் போச்சுது.
"எல்லாருமே என்ரை அண்ணரைப் போலை அன்பானவையாய், இரக்கமுள்ளவையாய் இருப்பினம் எண்டு கண்டால், அடக்குமுறை, அதிகார வெறி எண்ட கதைக்கே இடமில்லை தானே?!" எண்டு சொன்னநான்.

அதுக்கு மிஞ்சி நான் ஒண்டும் பறையேல்லை. கொஞ்சத்தாலை பெத்தையா வந்து,
" ஒரு எல்லுப்பலை நேரமெண்டாலும் கண்ணை மூடி நித்திரை கொள் குஞ்சன்" எண்டு அன்போடை போர்வையாலை போர்த்தினவர். அப்ப 
"அனக்கெண்டால் சரியான பயமாய்க் கிடக்கு பெத்தையா" எண்டு சொன்னன். பெத்தையா என்ரை ரெண்டு சொக்கையும் தடவி,
"எனக்குந்தான் குஞ்சன்!" எண்டவர்.

                        


அண்ணர் ஒரு சத்தியம் செய்து குடுக்க வேண்டியதாய்ப் போச்சுது. தான் ஆயுதம் எடுத்து சண்டை செய்யா விட்டாலும் காரியமில்லை; ஆனால் சண்டை செய்யிறவையின்ரை மனத்திலை ஊக்கமும், திடமும்  வாறதுக்காக சண்டை நடக்கிற இடமெல்லாம் குதிரையேறிப் போய் உலாவி வரவேணுமாம். 
"காட்டுறோசாப் பள்ளத்துச் சனம் உன்னைத் தங்கடை கண்ணாலை  நேரை பார்க்க வேணும்." எண்டார் ஒர்வார் நயினார்.
"சனங்கள் எங்கள் ரெண்டுபேரையும் காணவேணும்" எண்டு பெருமூச்சு விட்ட அண்ணர்,
"அது நான் செய்ய வேண்டியது எண்டால் செய்யத்தான் வேணும்" எண்டு சம்மதிச்சார். ஆனால் அந்த மங்கலான மெழுகுதிரி விளக்கு வெளிச்சத்திலை அவரின்ரை முகம் வெளிறினதை கண்டன். 

நாங்கள் கத்துலாக் குகையிலை இருந்து தப்பி ஓடி வந்த நேரம் காட்டுக்குள்ளை எல்பிரீடா ஆச்சியின்ரை வீட்டடியிலை வியாழரையும், வெள்ளியாரையும் விட்டிட்டு வந்தநாங்கள். இறுதிக் கட்டப்போர் நாளண்டு அதுகளைக் கூட்டிக் கொண்டு சோபியா அக்கை பெருங்கதவத்துக்கு வாறதெண்டு முற்கூட்டியே சொல்லி வைச்சது. நான் என்ன செய்ய வேணும் எண்டும் சொல்லி வைச்சாச்சு.
நான் ஒரிடத்துக்கும் அரங்காமல் எல்லா அமளியும் ஓயுமட்டும் பெத்தையா  வீட்டிலை இருக்க வேணுமாம். அண்ணர் சொல்லிப் போட்டார். நான் மட்டுக்கும் தன்னந்தனிய பெத்தையா வீட்டிலை காத்திருக்க வேணும்! அண்டிரவு ஒருத்தரும் ஒரு சொட்டு நித்திரையும் கொள்ளேல்லை. மறுநாள் பொழுதும் விடிஞ்சது.

ஓம் மைக்கா நாள் இறுதிக் கட்டப் போரும் துவங்கினது. என்ரை நெஞ்சு பட்டபாடு! நெஞ்சுக்கை சரியாய் நொந்தது. நான் சென்ம சென்மாந்தரத்துக்கும் போதுமான அளவுக்கு காயப் பட்டவையும் சாகிறவையும் அலறின அலறலையும் கேட்டன், பீச்சியடிச்ச அரத்தத்தையும் கண்டன். பெத்தையாவின்ரை மத்தியாசு வளவின்ரை பின்பக்கம் பெரிய சண்டை நடந்தது. அண்ணர் , வியாழரிலை அங்கையும் இங்கையும் பறக்கிறதைக் கண்டன். புயல்காத்தும் விட்ட சீரில்லை. அண்ணரின்ரை தலைமயிர் காத்திலை அப்பிடியும் இப்பிடியும் அலைஞ்சது. அவரைச் சுற்றவர ஒரே சண்டை......ஒரே கலாதி..... பகையாளியை வெட்டிச் சரிக்கிற வாள்,....  குத்திப் பிடுங்கிற ஈட்டி,.... சரக்,சரக்கெண்டு பாய்ஞ்சு தைக்கிற அம்பு மழை,..... மரண ஓலம்....
அண்ணர் செத்தார் எண்டால் நானும் செத்துப் போவன் எண்டு நான் வெள்ளியாருக்குச் சொன்னன். 

நான் அனக்குத் துணைக்கு வெள்ளியாரை அடுப்படிக்குள்ளை கூட்டிக் கொண்டு வந்து வைச்சிருந்தநான். நான் இது பற்றி ஆருக்குமே சொல்ல நினைக்கேல்லை. என்னாலை தனிய இருக்கேலாது. வெள்ளியாரும் யன்னலோரம் நிண்டபடி வெளியாலை நடந்த வெட்டுக் குத்தெல்லாம் பார்த்தபடி. வியாழரிட்டை போறதுக்கோ இல்லை என்னைப் போலை பயந்தோ  தெரியேல்லை இடைசுகம் கனைச்சது. 

நான் கொண்ட பயத்துக்கு ஒரு அளவு கணக்கில்லை......பயம், பயம், பயம். சோபியா அக்கையின்ரை ஈட்டிக் குத்திலை வெட்டார் செத்தான். ஒர்வார் நயினாரின்ரை வாள்வீச்சிலை கட்டாரும், தடியன் தொடிக்கியும் சரிஞ்சான்கள். வேறையும் கனக்க அரணக்காறர் சாக்காட்டுப் பட்டவன்கள். எல்லாக் கலாதியும் இப்பிடி நடக்க அண்ணர் வியாழரிலை அங்கையும் இங்கையும் பாய்ஞ்ச சீர். அவரின்ரை முகம் வரவர இன்னும் இன்னும் கூடுதலாய் வெளிறினது. அதைப் பார்க்கப் பார்க்க அனக்கு இன்னும் நெஞ்சுக்கை நொந்தது. 

கடைசிக் கட்டமும் வந்தது! கனக்க விதமான அலறல் சத்தமெல்லாம் நான் அண்டைக்குக் காட்டுறோசாப் பள்ளத்திலை கேட்டநான் தான். ஆனால் உசிரைக் மொட்டைக் கத்தியாலை அரியுமாப் போலை பயம் குடுக்கிற ஒரு உறுமல் சத்தம் ஒண்டு கிளம்பினது. அப்ப அந்தப் புயல் காத்தையும் மிஞ்சி ஒரு போர்க்கொம்பு ஊதின சத்தமும், பெரிசாய் ஆரோ எச்சரிக்கை செய்யிறதுக்குக் கூவின குரலும் கேட்டது.
"கத்துலா வருது!"

அந்தப் பயங்கர உறுமல் சத்தம் திரும்பக் கேட்டது. எல்லாரும் பயப்படுகிற கத்துலாவின்ரை பசி வந்த ஓலம் அது! ஓங்கின வாளும், தூக்கின ஈட்டியும், நாண் ஏத்தின வில்லும் அம்பும் நிலத்திலை விழுந்தது. சண்டை போட்ட  விடுதலைப் போராளியள் மேற்கொண்டு சண்டை போட முடியாமல் திகைச்சுப் போய் நிண்டினம். புயல் காத்தின்ரை ஊளையும், தெங்கில் கையிலை இருந்த போர்க்கொம்பின்ரை முழக்கமும், கத்துலாவின்ரை உறுமலும் மட்டும்  கேட்டது.தெங்கில் கைகாட்டின ஆக்களை எல்லாம் கத்துலா தன்ரை நச்சு அனல் மூச்சாலை சுட்டுப் பொசுக்க வெளிக்கிட்டது.

அவனும் கையைக் காட்டினான், காட்டினான், அந்த வன்மமும் கொடுமையும் நிறம்பின மூஞ்சை குரூரமான ஒரு திறுத்தியிலை இருண்டு போய்க் கிடந்தது. எல்லாமே நாசமாய்ப் போச்சுது. காட்டுறோசாப் பள்ளத்தின்ரை அழிவு காலம் வந்திட்டுது! அனக்கு உதுக்கு மேலை எதையுமே பார்க்கப் பிடிக்கேல்லை. என்ரை அண்ணரை மட்டும் எங்கை எண்டு பார்க்க வேணும். மத்தியாசு வளவு வேலியோடை அவர் நிண்டவர். புயல் காத்துக்கு தலைமயிர் அலைபாய வெளிறின முகத்தோடை சத்தம் காட்டாமல் வியாழரிலை இருந்தவர். 

"அண்ணேர்!" நான் கத்திக் கூப்பிட்டன்.
"என்ரை ஆசை அண்ணேர்! உம்மடை சீனியப்புவை ஒருக்கால் பாருமன்!" நான் பதகளிச்சு, அவலப்பட்டு கூப்பிட்டது அவரின்ரை செவியிலை  ஏறினால் தானே? குதிரையை ஒரு தட்டுத் தட்டி ஏவி விட்டார். வியாழரும் அம்பு போலப் பாய்ஞ்சது. அண்ணரைப் போலை நிலத்துக்கும், வானத்துக்கும் இடையில வேறை ஆராலையும் இப்பிடி மின்னல் வேகத்திலை குதிரையோட்ட முடியாது. எட இதென்ன ஆய்க்கினை!? தெங்கிலைக் குறி வைச்செல்லோ வியாழர் பாயுது!? தெங்கிலை இலக்கு வைச்சுப் பாய்ஞ்ச அண்ணர் அவனைத் தொட்டுத் தாண்டிப் போயிட்டார் . < ஐயோ! என்ன கறுமம் ? என்ன நடக்கப் போகுதோ?> அனக்கு நெஞ்சு வாயுக்குள்ளாலை வெளியாலை வருமாப் போலை கிடந்தது. நெஞ்சு இடிச்ச இடி காதுக்குள்ளை ` புடும் ! புடும்!´ எண்டு கூவின சீர்!

போர்க்கொம்பு திரும்ப முழங்கினது. என்ன அதிசயம்! என்ரை அன்ணரெல்லோ இப்ப அதை ஊதினவர்! அண்ணர் என்ன செய்தவர் தெரியுமே? தெங்கிலை நெருங்கிப் போய்  அவன்ரை கையிலை இருந்த போர்க்கொம்பை எட்டி இழுத்து அறுத்துக் கொண்டு வந்திட்டார். அதைப் பெரீசாய் ஊதினார். தனக்கு இப்ப புது இயமானன் எண்டது கத்துலாவுக்கு விளங்கிட்டுது. 


எல்லா அமளியும் சடாரெண்டு நிண்டது. எட அடிச்ச புயல் காத்துக் கூட கொஞ்சம் ஓய்ஞ்சது! எல்லாரும் என்ன நடக்கப் போகுதெண்ட காத்துக் கொண்டு நிண்டவை. தெங்கில் எண்டால் சரியான கோவத்திலை "அட்டிட்டாரோ? தொட்டிட்டாரோ?" எண்டு ஓலம் வைச்ச படி தன்ரை குதிரையிலை குதிச்சுக் கொண்டு இருந்தவன். கத்துலாவை ஏவி விடபார்த்தவன். கத்துலா இன்னும் தன்ரை சொல்லுக் கேட்கும் எண்ட நினைப்பு அவனுக்கு. தனக்கும் அவனுக்கும் முன்னை பின்னை ஒரு தொட்டுதொடசலும் இல்லாத மாதிரி  பறையாமல் கத்துலா நிண்டது. அவனும் காத்துக் கொண்டு நிற்கிறான், கத்துலாவும் காத்துக் கொண்டு நிற்குது.... ஒருக்கால் அண்ணர் போர்க்கொம்பை முழங்கினவர். கத்துலா உறுமின படி தெங்கிலுக்கு மேலை ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சது. ஒருவேளை தன்னைத் துலங்கிலை போட்டு வருத்தினதை நினைச்சுப் பழி வாங்கிச்சுதோ? 

"தெங்கிலுக்கும் ஒரு முடிவு காலம் வரும்" எண்டு அண்ணர் முன்னை ஒருக்கால் சொன்னவர். அது மெய்யாய்ப் போச்சுது. எத்தினையோ சனம் ஆவெண்டு அலறி உசிர் விட்ட பாவம்,..... எத்தினையோ சனம் நெருக்குவாரப் பட்டு, சதிரம் நொந்து உசிர் விட்ட நேரத்துச் சாவம்....,  எத்தினையோ அழுந்தி துன்பப் பட்ட சனமெல்லாம் அறம்பாடி வடிச்ச கண்ணீர்.....  எல்லாத்துக்கும் சேர்த்து தெங்கிலுக்கு உப்பிடி ஒரு அழிவுகாலம் அமைஞ்சது!

                            ( ஐயோ உந்தக் கத்துலாச் சிணியை வைச்சு என்னெண்டு தாக்காட்டுறது?)

சொல்விளக்கம்:
கனக்க- நிறைய, பல 
பாறிப் பிரண்டு< பாறிப்புரண்டு - வேரோடு சாய்ந்து 
ஆள்குமிப்பு - ஆக்கிரமிப்பு
கணக்கிலை< கணக்கிலே, கணக்காக- மாதிரியாக  
அடுப்படி - சமையலறை 
மறியல் - சிறை 
ஆய்க்கினை< ஆக்கினை - துன்பம் 
சாட்டு சொல்லுதல் - காரணம் கூறுதல் 
இடைசுகம் - இடைக்கிடை 
பெடி- பையன் 
புளுகுதல் - புகழ்ந்து கூறுதல் /
புளுகுதல் < புழுகுதல் - பொய்யாகப் பெருமை பேசுதல் 
புளுகம்< புளகம் - மகிழ்ச்சி 
அள்ளுண்டு = அல்லு+ உண்டு - அள்ளுப்பட்டு 
அசம்பி- பயணிகள் தோளில் காவும் பை 
மிச்சம் சரி- மிகவும் சரி 
ஐமிச்சம் - சந்தேகம் 
கவிண்டு< கவிழ்ந்து 
குலைப்பன் அடித்தது - நடுக்கம் எடுத்தது 
உள்ளிட - உள்நுழைய 
எளியபடை < இழியபடை - கெட்ட படை 
உழட்டுதல்< உழற்றுதல் - வருந்திப் புரளுதல் 
வெள்ளாப்பு - இருட்டு வெளிக்கும் நேரம் 
செக்கல்- வானம் சிவக்கும் மாலை நேரம் 
தவனம்- தாகம் , ஆவல் 
பாரிசவாதம் - பக்கவாதம் 
மண்டையைப் போடுதல் - இறத்தல் 
அச்சறுக்கை - பாதுகாப்பு 
தன்னிட்டவாரம்= தன் + இட்டம் + வாரம் - தன் + விருப்பம் + உரிமை - தன்விருப்பத்துக்கு 
அம்மிப் பிடித்தல் - எதிர்பாராத நேரம் திடீரெனப் பாய்ந்து பிடித்து அடக்குதல் 
சாதுவான - மெதுவான 
பெலப்பு< பலப்பு - பலமான 
எல்லுப்பலை< எள்ளுப்போலே- எள்ளளவு 
சொக்கு - கன்னம் 
அரங்காமல் - நகராமல் 
அமளி, கலாதி, கலம்பகம் - சண்டை 
மைக்கா நாள் - மறு நாள் 
புயல் விட்ட சீரில்லை - புயல் விட்ட பாடில்லை 
அட்டிட்டாரோ? தொட்டிட்டாரோ? - அழித்து விட்டாரோ? தொட்டு விட்டாரோ?
தொட்டுதொடசல் - தொடர்பு 
அறம்பாடுதல் - திட்டிச் சாபம் இடுதல்
சிணி - கெட்ட நாற்றம், உபத்திரவம் தருவது 
தாக்காட்டுறது < தாற்காட்டுகின்றது= தால் + காட்டுகின்றது 
    - நாக்கு காட்டுகின்றது - ஆறுதற் கதை சொல்லி
                                               - வெருட்டி 
                                                - ஏதாவது சொல்லி - கோபத்தை
                                                                                   - அழுகையை - சமாளிக்கின்றது
                                                                                                            - அடக்குகின்றது 


This entry was posted on 4:35 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: