Author: ந.குணபாலன்
•3:42 PM

                                                                          மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்

துடிப்பு 9 : தடியன் தொடிக்கி! 

சிலசில நேரங்களிலை அக்களிப்பிலை நான் என்னையே மறந்த தருணங்களும் இருக்கு. பூமி நச்சத்திரத்திலை நாங்கள் சீவிச்ச நாளையளிலை வரியாவரியம் சூரியனின்ரை வடதிசைப் புறப்பாட்டைக் கொண்டாடிற திருநாள் வடந்தைக் காலத்திலை டிசம்பர் 21ந் திகதி வரும். அப்ப ஒருதரம் அண்ணர் கனகாலமாய்க் காசு சேர்த்து ரெண்டு பேர் இருந்து சிந்திலை சறுக்கி விளையாடத் தக்க கதழாசனம் ஒண்டு வாங்கி அனக்கு திருநாள் பரிசாய்த் தந்தவர்.


கதழாசனம் - toboggan  

அந்தத் தரம் ஒருக்கால் இப்பிடித்தான் அக்களிப்பிலை என்னை நானே மறந்து போனநான். பேந்து அண்ணரை நஞ்சியாலாவிலை ஆத்தங்கரையிலை கண்ட நேரம் ஒருக்கால். மற்றது குதிரைக்காறன் வளவுக்கு வந்த முதல்நாளிலை அண்ணரோடை சேர்ந்து அனுபவிச்ச அந்த மாயாசாலக்கதையிலை சீவிச்ச மாதிரியான அற்புத இரவு. ஆனால் அந்த அக்களிப்பான முந்தின தருணங்கள் எல்லாம் இப்ப நான் பெத்தய்யா மத்தியாசு வீட்டு இரகசிய அறையிலை நிலத்திலை நித்திரையாய்க் கிடந்த அண்ணரைக் கண்ட அக்களிப்புக்கு சமமில்லை. ஆரும் இம்மளவுக்குப் புளுகப் படேலுமே? என்ரை உசிரே புளுகத்திலை கெக்கட்டம் விட்டு பெருஞ்சிரிப்பாய்ச் சிரிக்குதே!

நான் அண்ணரை ஓடிப்போய் தொடேல்லை, எழுப்பேல்லை, அவரைக் கண்ட புளுகிலை கத்திக் கூத்தாடவுமில்லை. பறையாமல் போய் அவருக்குப் பக்கத்திலை படுத்தன், நித்திரையாய்ப் போனன். எம்மளவு நேரம் நித்திரை கொண்டிருப்பனோ தெரியாது. ஒருவேளை ஒருநாள் பொழுது முழுக்கவும்  இருக்குமோ? கண்ணை முழிச்சுப் பார்த்தால் அண்ணர் அனக்குப் பக்கத்திலை இருந்தார். என்னைப் பார்த்துச் சிரிச்சபடி இருந்தார். அவர் சிரிக்கேக்கை அப்பிடி ஒரு கருணையான முகத்தை வேறை எங்கினையும், எந்த ஒரு சீவனிலையும் ஒருத்தர் பார்க்க முடியாது. நான் அவரின்ரை சொல்லுவழி கேளாமல் இங்கினை வந்தது அவருக்குப் பிடிக்காமல் இருக்கும் எண்டு நான் நினைச்சன். சிலநேரம் உதவி எண்டு தான் கத்திக் குழறினதையும் மறந்து போயிருக்கக் கூடும். ஆனால் என்னைக் கண்டது ஆளுக்கு வலு புளுகம் எண்டது வெளிவெளியாய்த்  தெரிஞ்சது. நானும் அண்ணரைப் பார்த்துச் சிரிச்சன். கொஞ்சநேரத்துக்கு ஒண்டுமே பறையாமல் ஆளையாள் பார்த்துச் சிரிச்ச சீர்தான்!


"உதவி எண்டு கத்தினநீங்கள் எல்லோ?" எண்டு கடைசியிலை நான்தான் அமைதியைக் குழப்பினன். அப்ப அண்ணரின்ரை முகச் சிரிப்பு நிண்ட இடத்துக்கும் பறையாமல் ஓடி ஒளிச்சிட்டுது. 
"ஏன் கத்தினநீங்கள்?"எண்டு கேட்டன். அதைப் பற்றி நினைக்கவே அவருக்குப் பிடிக்கேல்லை போலை. அந்த நினைப்பே அவருக்கு நோக்காட்டைக் குடுத்திருக்க வேணும். என்ரை கேள்விக்கு மறுமொழி சொல்ல விரும்பாதது போலை மெள்ள,
" நான் அந்த அறுந்த கத்துலாவைக் கண்டநான். அது செய்ததையும் கண்டநான்."எண்டு சொன்னார்.

அதுக்கு மேலை கத்துலா எண்டதைப் பற்றிக் கேட்டு அவருக்கு அரியண்டம் குடுக்க நான் விரும்பேல்லை. ஆனால் கத்துலா எண்டது என்ன மாதிரியான சென்மம் எண்ட கேள்வி என்ரை மனசுக்குள்ளை இருந்தது. ஆனால் எல்லாத்தையும் விட அண்ணருக்கு கனக்கப் புதினங்கள் சொல்ல இருக்கெல்லோ? முதல் காரியமாய் யூச்சியைப் பற்றி சொல்ல வேணும்! அண்ணராலை உந்தக் கதையை நம்ப முடியேல்லை. அழுவாரைப் போலை அவரின்ரை முகமெல்லாம் வெளிறிப் போச்சுது.

"ஐயோ! யூச்சியோ? இல்லையில்லை நம்பேலாமல் கிடக்கே? யூச்சியோ? அருளாசிப் பூனைபோலை இம்மளவு காலமும் நடிச்சவனோ?" அண்ணரின்ரை கண்ணிலை கண்ணீர் அரும்பிச்சிது.  
"சோபியா அக்கைக்கு உடனடியாய் வியளம் சொல்லி அனுப்ப வேணும். அவவின்ரை புறா பியாங்கா இஞ்சை தான் இப்ப நிற்குது. இண்டைக்கு மைம்மல் பட பியாங்காவை கடிதம் வைச்சுப் பறக்க விடவேணும்."எண்டு அண்ணர் சொன்னார். 

ஓ! அதுதானே பின்னை? சோபியா அக்கையின்ரை புறா! வெண்பனி வண்ணப்புறா!நான் கத்துலாக் குகைக்கு அனுப்புப் படாமல் இருக்கிறதுக்கு இந்தப் பியாங்கப் புறாதான் காரணம் எண்டது பற்றி அண்ணருக்குச் சொன்னன். 

"இது ஒரு அதிசயந்தான்.காட்டுறோசாப் பள்ளத்திலை வீடான வீடு எல்லாத்தையும் விட்டிட்டு நேரை சரி கணக்கா அண்ணர் நீர் இருக்கிற வீடு தேடி வந்தனே!? அந்தநேரம் பார்த்து பியாங்கா வெளியாலை என்ரை கண்ணிலை படாமல் இருந்திருக்கும் எண்டால், பெத்தய்யா வீட்டையும் தாண்டிப் போயிருப்பன் தான்." எண்டு சொன்னன்.
"பியாங்கா! பியாங்கா! சரியான தருணத்திலை நீ அப்பிடி வெளியாலை நிண்டதுக்கு, உனக்கு மெத்தப் பெரிய உபகாரம் " எண்டு அண்ணர் பியாங்காப் புறாவுக்குத் தன்ரை நன்றியைச் சொன்னவர். அண்ணருக்கு மிச்சக் கதையளைக் கேட்கிறதுக்கு அப்ப நேரமில்லை. தலைக்கு மேலை முக்கியமான வேலை இருந்தது. கைவிரல் நிகத்தாலை சிவரைச் சுறண்டினவர். ஏதோ எலியொண்டு சிவர்ப்பலகையை அறுத்த மாதிரிச் சத்தம் கேட்டது.

கனநேரம் பிடிக்கேல்லை. பெத்தய்யா வந்து தட்டியைத் திறந்து உள்ளை எட்டிப் பார்த்தார். 

"குட்டியர் சீனியப்புவும் மூசி மூசி நித்திரை...." எண்டு பெத்தய்யா தொடங்கினார். அண்ணர் அவரை இன்னும் கதைக்க விடாமல்,
"மத்தியாசப்பு!...இல்லை நானும் இனிப் பெத்தய்யா எண்டு சொல்லுவம். எனக்கொரு உதவி செய்யுங்கோ பெத்தய்யா! பியாங்காவை உடனடியாய்க் கொண்டு வாங்கோ! இண்டைக்கே மைம்மல் பொழுதுக்கு தகவல் அனுப்ப வேணும்!" எண்டு  அண்ணர் கெஞ்சிற குரலிலை கேட்டார். இன்னும் ஒண்டைக் கவனிச்சன். முன்னை அனக்கு எண்டு சொல்லிறவர். இப்ப மற்றவையள் கனபேர் சொல்லிற மாதிரி எனக்கு எண்டிறார்.

பெத்தய்யாவுக்கு ஏன் அவசர அவசரமாய் பியாங்காவை அனுப்பி வைக்க வேணும் எண்டு விளப்பம் சொன்னார். பெத்தய்யாவுக்கு யூச்சியின்ரை துரோக வேலையைப் பற்றியும் சொன்னார். அப்ப பெத்தய்யா வழக்கமாய் வயசு போன ஆக்கள் தலையாட்டுமாப் போலை தலையாட்டி மிச்சம் கவலைப் பட்டவர்.

"யூச்சி! ம். ஆரோ செர்ரிப்பள்ளத்தானின்ரை திருவிளையாடல் தான் இது எண்டு நான் நம்பினதும் சரியாத்தான் போச்சிது. அவனாலைதான் இண்டைக்கு ஒர்வாருக்கு கத்துலாக்குகையிலை மறியல் இருக்க வேண்டிய இந்த நிலைமை. என்ரை கடவுளே! இப்பிடியும் சிலமனிசரைப் படைச்சியே!" எண்டு புலம்பினவர். பேந்து தட்டியை மூடிட்டு பியாங்காவைக் கொண்டு வரப் போட்டார். 

நல்லதொரு கள்ள அறைதான் இது. கதவுமில்லை, யன்னலுமில்லை.  வாறதுக்கும் போறதுக்கும் ஒரே வழி சிவரோடை சிவராய்க் அடையாளம் தெரியாமல் அலமாரிக்குப் பின்னாலை இருந்த தட்டி ஒண்டு தான். ஒரு மெத்தை கிடந்திது, மற்றும்படிக்கு ஒரு தளபாடமுமில்லை; அது வைக்கிற அளவுக்கு இடமுமில்லை. மாட்டுக்கொம்பிலை செய்த ஒரு விளக்கு ஒண்டுதான் ஒரளவுக்கு  கும்மிருட்டைப் போக்காட்டினது. அந்த வெளிச்சத்திலை ஒரு மெல்லிய தாளிலை அண்ணர் சோபியா அக்கைக்குக் கடிதம் எழுதினவர்.


" காலகாலத்துக்கும் சாபத்துக்கு உள்ளான துரோகி  தங்கச்சாவல் யூச்சி. வலு சுறுக்காக அவனுக்கொரு வழி செய்யவும். தம்பி என்னிடத்திலே."


" என்னைத் தேடி வெளிக்கிட்டுக் காணாமல் நீ போய்விட்டாய் எண்ட தகவலை  நேற்றைக்குச் செக்கல் நேரம் பியாங்கா தான் கொண்டு வந்தது." எண்டார் அண்ணர். 

"சோபியா அக்கை அனக்கெண்டு மரக்கறிக்கஞ்சி கொண்டு வந்திருப்பா. நான் அடுப்படிச் சிவரிலை எழுதின விடுகதை எல்லாம்  பார்த்தவவோ? என்னவோ?" எண்டு கவலைப் பட்டன்.
"என்ன விடுகதை?" எண்டு அண்ணர் கேட்டார்.

கனா வரும்  - ஒரு குரல் வரும்!
வான் வண்ண வரை வரை 
விரை என மனதின் உரை 
சினம் தரும் வினாத் தேடும்  
                                                         விடை காண விடை தாரும்!   
  எண்டு அண்ணருக்கு நான் எழுதின முதல் விடுகதையைச் சொன்னன்.
" சோபியா அக்கை பதட்டப்படக் கூடாதெண்டு தான் எழுதினநான்."
அண்ணர் சிரிச்சார்.
"பதட்டப்படக் கூடாதோ? நல்லாய்த்தான் நீயும் சொல்லுவாய்! என்னைத்தேடி உந்த நஞ்சியாலா மலையளிலை நீ திரியிறாய் எண்டதைக் கேட்டு என்ரை மனசு அமைதியாய் இருந்திருக்கும் எண்டு நீ நம்பிறியே? சோபியா அக்கையும் நல்லாய் யோசிச்சிருப்பா." எண்டு சொன்னார். அனக்கு வெக்கமும் துக்கமுமாய் முகம் வாடிப் போச்சிது. 

என்ரை முகம் வாடினதைக் கண்டவுடனை அண்ணர் என்னச் சமாதானப் படுத்தினவர்.

"துணிச்சல்காற என்ரை சின்ன சீனியப்பு! எம்மளவு வடிவாய்க் கவிதை கணக்கிலை விடுகதை எழுதி இருக்கிறாய்! நீல மலைப்பக்கம் எண்டதை நல்ல வடிவாய் வான் வண்ண வரை வரை எண்டு ...ஆ! எங்கினை இதை எல்லாம் எழுதப் படிச்சநீ?" எண்டு என்னைக் கேட்டார். 
"எல்லாம் உங்களிட்டை இருந்து தான். நீங்கள் அனக்கு எம்மளவு கதையள் , கவிதையள்  சொல்லி இருக்கிறீங்கள்!" எண்டன். 
"என்ன மாதிரித் துணிஞ்சு இம்மளவு தடையளையும் தாண்டி வந்திருக்கிறாய்!துணிச்சல்காற என்ரை சின்ன சீனியப்பு! அங்கினை நஞ்சியாலாவிலை இருக்கேக்கையும் நன்மையையும், அதிட்டமும் உன்ரை பக்கந்தான்; இங்கினை வந்தவுடனையும் இன்னும் கூடுதல் நன்மையையும், அதிட்டமும் தான்." எண்டு அண்ணர் என்னைப் புழுக அனக்குக் கொஞ்சம் வெக்கமாயும் இருந்திச்சுது. ஒருத்தர் என்னைத் துணிச்சல்காறன் எண்டு சொன்னது அதுதான் முதல்தரம்! அப்ப நான் நினைச்சநான் என்னெண்டால் இப்பிடியே தொடர்ந்தன் எண்டால் சிங்கநெஞ்சன் எண்ட பேருக்கும் பங்கமில்லை! யூச்சிப்பூச்சி என்னைப் பற்றி சேட்டைக் கதை ஒண்டும் உரைக்கவும் இடமிராது!

அடுப்படிச்சிவரிலை இன்னும் எழுதி வைச்ச மற்ற விடுகதையும் அனக்கு ஞாவகம் வந்திச்சிது. அண்ணரிட்டை அது பற்றி சொன்னநான்.

                                                                 பரி வெண்மை நாடும் 
நாடி செம்மை ஆகும் 
பல உண்மை ஆயும் 
பத்திரம் வாயும் நீயும் !

"நாடி செம்மை எண்டு குறிப்பாய் எழுதினது சட்டெண்டு கூபரைத்தான் நினைக்க வைக்கும். அது பிழைதான் கார்ல்!" எண்டு அண்ணர் சொன்னவர். கூபர் என்னை ஓநாயளிட்டை இருந்து காப்பாற்றின கதை எல்லாத்தையும் சொன்னநான். அதுக்கு அண்ணர் தான் சென்ம சென்மத்துக்கும் கூபருக்குத் கடமைப் பட்டவர் எண்டு சொன்னவர். 


காட்டுறோசாப் பள்ளத்திலை செக்கல் பொழுதாகி மைம்மல் ஆனது. பியாங்காவை அனுப்பி வைக்க வேணும்! பெத்தய்யாவின்ரை மத்தியாசுவளவிலை இருந்து பார்த்தால் பணிய இறக்கத்திலை இருந்த வீடுகளிலை எல்லாம் விளக்குகள் மினுமினுக்கத் துவங்கினது. சும்மா வெளிப் பார்வைக்குத் தான் அமைதியும், நிம்மதியுமாய் எல்லாமே இருந்தது. வீடுகள் வழிய சனங்கள் 

- இரவுச்சாப்பாடு தின்னுங்கள், 
- ஒருத்தரோடை  ஒருத்தர் கதை பறைஞ்ச படி இருக்குங்கள், 
- பிள்ளையளுக்கு விளையாட்டுக் காட்டி, பாட்டுப் பாடி,    
   மாயாசாலக் கதையள் சொல்லி சுகம்பெலமாய் இருக்குங்கள் 
எண்டு; உள்ளூர் நடப்புத் தெரியாத பிறத்தியார் ஒருத்தர் பிழையாய்  நினைக்கக்கூடும். ஆனால் உள்நடப்பு அப்பிடி இல்லை எண்டது எங்களுக்கெல்லோ தெரியும்! சனங்கள் ஒண்டும் கலகலப்பாயும் இல்லை. நிம்மதியாயும் இல்லை. அதுகளுக்கு ஆனவாகிலை தின்னுறதுக்கும் ஒண்டுமில்லை. அதுகளுக்கு கண்ணீரும், கவலையும் தான் பாதிச் சாப்பாடு! இந்தத் துன்பதுயரங்களை எல்லாம் மறக்காமல் இருக்கிறதுக்குத் தான்; தெங்கிலின்ரை அரணக்காறர் வாளும் வேலும் வைச்சுக் கொண்டு கோட்டை மதிலிலை உலாவிறாங்கள். எங்களுக்கு எந்த நேரமும் இதை ஞாவகப் படுத்தின மாதிரி .

பெத்தய்யா வீட்டு யன்னலிலை வெளிச்சமில்லை. ஆக்கள் குடியில்லாத வீடு கணக்கிலை வீடு இருட்டாய் இருந்துது. நாங்கள் வீட்டுக்கு வெளியாலை நிண்டம். பெத்தய்யா வீட்டு முடக்கிலை  காவலுக்கு நிண்டார். அவரின்ரை கையிலை ஒரு கொம்பு விளக்கு. நானும் அண்ணரும் பியாங்காவோடை மெள்ள மெள்ள  காட்டுறோசாப் பத்தைக்குள்ளை பூந்தம். இப்பிடிப் பத்தை பெத்தய்யாவின்ரை மத்தியாசு வளவைச் சுற்றி இருந்தது. அனக்கு காட்டுறோசாப்பூ பிடிச்சது. அதின்ரை வாசமும் பிடிச்சது. மூக்கு அடைக்கிற கடும் வாசமில்லை, அளவான வாசம். அப்ப என்ரை மனசிலை ஒரு நினைவு ஓடிச்சிது. இனி எப்பெண்டாலும் இந்தக் காட்டுறோசாப்பூ வாசம் மணக்கிற நேரத்திலை; இப்ப நானும், அண்ணரும் இப்பிடி காட்டுறோசாப் பத்தைக்குள்ளை ஊர்ந்து ஊர்ந்து கோட்டை மதிலுக்கு அருகிலை வந்ததும், என்ரை நெஞ்சு படக்கு படக்கு எண்டு இடிக்கிறதும் ஞாவகம் வரும். கோட்டை மதிலிலை தெங்கிலின்ரை அரணக்காறர் <அசுகை ஏதும் தெரியுதோ?> எண்டு  

கண்ணும் கருத்துமாய் காவல் நிண்டவங்கள். ஒருவேளை தங்கடை  கண்ணிலை சிங்கநெஞ்சன் தட்டுப் படக்கூடும் எண்டு எதிர்பார்த்து இருந்தவன்களோ?

அண்ணர் தன்ரை முகத்திலை கரிபூசி, ஒரு குல்லாயையும் இழுத்துக் கண்ணை மறைச்ச மாதிரி போட்டிருந்தார். அவரைப் பார்த்து  யோனத்தான் எண்டொருத்தர் சொல்ல மாட்டினம். எண்டாலும் ஒவ்வரு முறையும் மறைவிடத்தை விட்டு வெளியை வந்து நடமாடிறது உயிருக்கு ஆபத்தான வேலையெல்லே? அண்ணர் பெத்தய்யா வீட்டிலை, தான் ஒளிச்சிருக்கிற அந்த இரகசிய அறையைக் குடைவு எண்டு தான் சொன்னவர். அந்த ஊரிலை காட்டு முசல், பகல் நேரத்திலை ஒளிச்சிருக்கிற பொந்தைக் குடைவு எண்டுதான் சொன்னவையள். ஒரு, நூறாள் அண்ணரை இராப்போலாய்  தேடித் திரியிறாங்கள் எண்டு நான் அறிஞ்சதை அண்ணருக்குச் சொன்னநான். 

" நல்லாய்த் தேடட்டும்" எண்டார் அண்ணர். தானே தன்ரை கையாலை பியாங்காவை அனுப்பி வைக்க வேணும் எண்டு சொன்னவர். பியாங்கா பறந்து போகேக்குள்ளை ஆரின்ரை கண்ணிலையும் படாமல் பறந்தது எண்டது தனக்கு உறுதியாய் தெரிய வேணுமாம். 

கோட்டை மதிலிலை உலாவின அரணக்காறங்கள் அவனவனுக்குரிய  பகுதியைக் காவல் காத்தாங்கள். மத்தியாசு வளவின்ரை பின்பக்கம் இருந்த பகுதியிலை தடியன் ஒருத்தன் இடம் வலமாய் உலாத்தின சீர். அவன்ரை கண்ணிலை படாமல் இருக்கத் தெண்டிச்சம். பெத்தய்யா விளக்கை ஆட்டிச் சைகை காட்டிறது எண்டது பேச்சு. பெத்தய்யா சொன்னவர்,

"நான் விளக்கைப் பணிய வைச்சிருந்தன் எண்டால் நீங்கள் மூச்சு வெளியிலை விடப்படாது. அப்ப தடியன் தொடிக்கி உங்களை நல்லாய் நெருங்கி வந்திட்டான் எண்டது அருத்தம். விளக்கை உசத்திப் பிடிச்சால் அவன் அங்காலை மதில் திரும்பிற முடக்கிலை நிக்கிறான், அங்கை நிக்கிற மற்ற அரணக்காறனோடை  நிண்டு அலட்டிறான் எண்டு அருத்தம். அப்ப பார்த்து நீங்கள் பியாங்காவை பறக்க விடுங்கோ!" எண்டு.

நாங்களும் அப்பிடியே சைகை அடையாளம் பார்த்துப் பியாங்காவைப் பறக்க விட்டம். 

"பறந்து போட்டுவா! என்ரை பியாங்கா! பத்திரமாய்ப் போட்டுவா! நஞ்சியாலாவின்ரை நீலமலையைத் தாண்டி செர்ரிப்பள்ளத்துக்குப் போட்டுவா! பத்திரம்! யூச்சியின்ரை அம்புக்குப் பத்திரம்!" எண்டு அண்ணர் பிரியாவிடை சொன்னவர். அனக்கு ஒரு ஐமிச்சம்! பியாங்காவுக்கு மனிசரின்ரை கதை விளங்கியிருக்க வேணும். அண்ணரின்ரை கதையைக் கேட்டிட்டு பியாங்கா அவரைக் கவலைப்பட வேண்டாம் எண்டு சொல்லுமாப்போலை  தன்ரை சொண்டை அவரின்ரை சொக்கிலை வைச்சது. அதுக்குப் பிறகு தான்  பறந்து போச்சுது. அந்த அரையிருட்டு வானத்திலை பியாங்காவின்ரை வெள்ளை நிறம் பளிச்சிட்டது. மதிலுக்கு மேலாலை பியாங்கா பறக்கேக்கை தடியன் தொடுக்கியின்ரை கண்ணிலை பட்டிடுமோ எண்டு பயந்தன். ஆனால் அவன் காணேல்லை. மற்ற கூட்டாளி அரணக்காறனோடை கதையிலை ஆள் ஐக்கியம். அதினாலை  தடியன் தொடிக்கிக்கு ஒண்டும் கேக்கவுமில்லை, ஒண்டையும் அவன் காணவுமில்லை. 

பெத்தய்யா விளக்கைப் பணிய இறக்கவுமில்லை. பியாங்கா கண்ணிலை இருந்து மறைஞ்ச உடனை அண்ணரைப் பிடிச்சுக் கொற இழுவையாய் இழுத்தன். வலு சுறுக்கிலை அவரைக் குடைவுக்குள்ளை பத்திரமாய் கொண்டு போய் விட வேணும் எண்டு அந்தரப் பட்டன். ஆனால் அண்ணருக்கு எண்டால் எந்த ஒரு அந்தரமும் இல்லை, விருப்பமும் இல்லைப் போலை. அது, அளவான குளிர்ச்சியும், சுவாத்தியமான காத்தும் வீசின ஒரு நல்ல  மைம்மல் பொழுது. அனக்கு விளங்கினது தான்; அவருக்கு ஏன் விருப்பம் இல்லையெண்டு. பின்னை? மூச்சடைக்கிற மாதிரியான அந்த குடைவுக்குள்ளை  ஓடிப்போய் அடையிறதுக்கு அண்ணருக்கு விருப்பம் இருக்குமே? பூமிநச்சத்திரத்திலை வருத்தக்காறனாய் அடுப்படிக்குள்ளை அடைஞ்சு கிடந்த அனக்கேல்லோ மற்ற ஆக்களை விட இது கூடுதலாய் விளங்கும்! 


முழங்காலைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு  அண்ணர் புல்லிலை இருந்தபடி பணிய ஊருக்குள்ளை இருந்த வீடுகளிலை இருந்து வந்த விளக்கு வெளிச்சங்களைப் பார்த்து இரசிச்சுக் கொண்டிருந்தார். அமைதியாய் இருந்தவர். தன்ரை முதுகுக்குப் பின்னாலை உலாத்தின தெங்கிலின்ரை அரணக்காறன்களைப் பற்றி எதுவித் கவலையும் படாமல் இரவு முழுக்க அங்கையே இருக்கப் போறதெண்டு தீர்மானிச்சவரோ?

"ஏன் இதிலை இருக்கிறீர்?" எண்டு கேட்டன்.
"ஏனெண்டால் எனக்கு இப்பிடி இருக்கிறது விருப்பம். மைம்மலுக்கை இந்த ஊரைப் பார்க்க விருப்பம். குளிர்ச்சியான காத்து என்ரை முகத்தைத் தடவிறது விருப்பம். இளஞ்சிவப்பு நிறக் காட்டுறோசாப்பூ வாசம் மணக்கிறது விருப்பம். அது கோடைகாலம் கெதியாய் வருகுது எண்டதைச் சொல்லுது எல்லோ?" எண்டு சொன்னவர்.
"அனக்கும் இப்பிடியே இருக்கத்தான் விருப்பம்" எண்டன்.
"காட்டுறோசாப் பள்ளத்துச் சனத்துக்கும் இது தான் விருப்பம். இதை விடப் பெரிசாய் வேறை ஒண்டுக்கும் சனம் ஆசைப் படேல்லை. அப்பிடியிருக்க அவையளை அமைதியைச் சீவிக்க விடாமல் தெங்கில் எண்ட கொடியவன் ஏன் எல்லாத்தையும் அழிச்சு அட்டகாசம் பண்ணிறான்?" எண்டு சொல்லிக் கவலைப் பட்டார். அதுக்கு என்னத்தைப் பறையிறது எண்டு அனக்குப் பிடிபடேல்லை.
"சரி வா இனி உள்ளுக்கை போறது தான் நல்லது." எண்டு கூப்பிட்டார்.

எதுக்கும் முதல் தடியன் தொடிக்கி நிக்கிற இடத்து நிலைவரம் பற்றி அறிய வேணும். அதுக்குப் பெத்தய்யாவின்ரை திக்கிலை  பார்த்தம். இப்ப இருட்டிப் போச்சு. பெத்தய்யாவின்ரை உருவம் தெரியேல்லை. ஆனால் விளக்கு வெளிச்சம் மட்டும் தெரிஞ்சது. இனிப் பெத்தய்யாவுக்குக் கிட்ட ஓடுவம் எண்டு வெளிக்கிட, அந்த நேரம் எண்டு பார்த்து கொம்புவிளக்கு சடக் கெண்டு கீழை இறங்கினது. நாலுகால் பாய்ச்சலிலை குதிரையள் வாற சத்தம் கேட்டுது. வந்த குதிரையள் பெத்தய்யாவுக்குக் கிட்ட வர வேகத்தைக் குறைச்சு நிண்டிட்டிதுகள். அதிலை வந்தவங்கள் பெத்தய்யாவோடை கதைக்கிறது கேட்டுது. அண்ணர் என்னை முதுகில் பிடிச்சுத் தள்ளி,

"ஓடு! பெத்தய்யாவிட்டை ஓடு!" எண்டு கிசுகிசுத்து அவசரப் படுத்தினார். தானும் காட்டுறோசாப் பத்தைக்குள்ளை பதுங்கினார். நான் பயந்து நடுங்கினபடி விளக்கு வெளிச்சத்தை குறி வைச்சுப் போனன். 

"வெளியாலை நல்ல சுவாத்தியமாய்க் கிடக்கு. காத்து வாங்குவம் எண்டு வெளியை வந்து நிக்கிறன்." எண்டு பெத்தய்யா சொல்லிக் கேட்டுது.

"சுவாத்தியமாய் இருக்கோ?" எண்டு ஒரு அதட்டலான குரல் கேட்டுது.
"பொழுது பட்ட பிறகு வெளியிலை உலாத்தினால் மரண தண்டனை எண்டது உனக்குத் தெரியாதோ?"
"கீழ்ப்படிவு எண்டது என்னெண்டு தெரியாத பெத்தய்யாக் கிழவா! எங்கை உன்ரை பேரப்பெடி?" எண்டு கேட்டது இன்னொரு குரல்.
"இஞ்சை நிக்கிறான்." எண்டார் பெத்தய்யா, நான் இப்ப அவருக்குக் கிட்டவாப் போயிட்டன்.  அதிலை வந்த குதிரைக்காறங்கள் ஆரெண்டு அனக்குத் தெரிஞ்சிது. அது என்ரை நேற்றைய கூட்டாளிமார், கட்டாரும், வெட்டாரும் தான்!

"இண்டைக்கு இரவுக்குத் தாங்கள் பெரியவர் நீலமலைப் பக்கம் நிலா வெளிச்சத்தை அனுபவிக்கப் போகேல்லையாமோ?" எண்டு நக்கலாய்க் கேட்டான் வெட்டார். 

"அது சரி நுள்ளான் உன்ரை பேரைக் கேக்க மறந்து போச்சு. உன்ரை பேரென்ன?" எண்டும் கேட்டான்.
"என்னை எல்லாரும் சீனியப்பு எண்டு கூப்பிடுறவை." எண்டு துணிஞ்சு சொன்னன். என்ரை உண்மையான பேர் தெரிஞ்சது மூண்டு பேர். ஆரெண்டால் அண்ணர், பெத்தய்யா, நான். சோபியா அக்கைக்குக் கூடத் தெரியாது. யூச்சிப்போச்சிக்கும் தெரியாது.
"சீனியப்புவோ? சரி. சீனியப்பு நாங்கள் ஏன் இப்ப இஞ்சை வந்தனாங்கள் எண்டு நீ நினைக்கிறாய்?"  எண்டு கட்டார் கேட்டான். அனக்கெண்டால் என்ரை கால் ரெண்டும் திடீரெண்டு இல்லாமல் போன மாதிரிப் பயம் வந்திச்சுது. வேறை என்னத்துக்கு? என்னைக் கொண்டுபோய் கத்துலாக் குகையிலை அடைக்கிறதுக்குத் தான்! வேறை எதை நான் நம்ப?

"பார்த்தியே? இரவு நேரங்களிலை தெங்கில் நயினாரின்ரை கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் சனங்களெல்லாம் நடக்கினமோ எண்டு கண்காணிக்கத் தான். உன்ரை பெத்தய்யாவுக்கு இதை விளங்கிக் கொள்ள ஏலாமல் கிடக்கு. நீயெண்டாலும் கொஞ்சம் விளங்கப் படுத்து.  பொழுது பட்ட பின்னாலை வீட்டுக்கு வெளியிலை வாறதை நீயும் உன்ரை பெத்தய்யாவும் நிப்பாட்டுங்கோ! இல்லையெண்டால் துன்பம்தான்!" எண்டு கட்டார் புத்தி சொன்னான்.

"ஒண்டு ஞாவகம் இருக்க வேணும்! நாங்கள் வாறபோற  நேரங்களிலை நீ இருக்க வேண்டிய இடத்திலை இல்லையெண்டு கண்டால்.... உன்ரை பெத்தய்யா அறளை பேர்ந்த கிழவன் சாகிறதும் ஒண்டுதான், இருக்கிறதும் ஒண்டுதான். ஆனால் நீ சின்னப்பொடியன். இன்னும் எம்மளவுக்கு வாழ வளர வேண்டிய பொடியன். முழு ஆம்பிளையாய் வளர்ந்து தெங்கில் நயினாரின்ரை படையிலை சேர்ந்து சேவை செய்ய வேணும். இல்லையோ?" எண்டு வெட்டார் பினாத்தினான்.

ஓமோம். தெங்கிலின்ரை அறுதல் படையிலை சேர வேணுமாமோ? அதிலும் காட்டிப் பேசாமல் செத்துப் போகலாம்! மனசிலை நினைச்சன் ஆனால் ஒண்டும் வெளியிலை சொல்லேல்லை. உவங்களுக்குக் கதை சொல்லிச் சீண்ட உது சந்தர்ப்பம் இல்லை. அண்ணரின்ரை நிலைமை தெந்தட்டிலை இருக்கு எண்டதை நினச்சு அனக்கு சீவன் போற பயமாய்க் கிடந்திச்சு. அவங்களை அங்கத்தையாலை கெதிப்பண்ணிப் போக்காட்ட நினைச்சு, 

"ஓம். நீங்கள் சொன்னபடி செய்யிறன்." எண்டு சொன்னன். 
"நல்லது. நாளைக்குக் காலைமை பெருந்தோணித்துறைக்கு எல்லாரும் வரவேணும். காட்டுறோசாப் பள்ளத்தின்ரை காவலர் தெங்கில் நயினார் பறணைப் பழங்காலத்து ஆதித் தொன்ம நதியிலை தன்னுடைய தங்கப் படகிலை படை பரிவாரங்களோடை பவனி வந்து பெருந்தோணித்துறையிலை இறங்குகிறார்." எண்டு ஒரு விதமான செட்டுக்  கதை கதைச்சான்.  

போக வெளிக்கிட்டவன் ஒருக்கால் குதிரையை நிப்பாட்டி,

"இதை ஒருக்கால் கேள் கிழடா!" எண்டு பெத்தய்யாவைப் பார்த்துக் கத்தினான். ஒருகால் வீட்டுக்கையும், மறுகால் வெளியாலையுமாய் நிண்டார் பெத்தய்யா. 
"பொன்னிற தலைமயிரும், நீலக்கண்ணுமாய் நல்ல வடிவான ஒரு கடுக்கண்ட வயசுப் பெடியன் ஒருத்தன் சிங்கநெஞ்சன் எண்டு பேர்....தெரியுமோ அவனை? எங்கினையும் கண்டநீயோ?" எண்டு வெட்டார் கேட்டான். நான் பெத்தய்யாவின்ரை கையைப் பிடிச்சுக் கொண்டு நிண்டனான். அவரின்ரை நடுக்கம் கையிலை தெரிஞ்சது. ஆனால் வலு அமைதியாய்,
"சாய். அப்பிடி ஒரு சிங்கநெஞ்சனையும் நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை."  எண்டு சொன்னவர்.
" கண்டதில்லையோ? சரி! அப்பிடி ஒருத்தனைக் காணிற நேரம், அவனை ஒளிச்சு மறைச்சு வைக்கிற ஆளுக்கு என்ன தண்டனை எண்டது ஞாவகம் இருக்க வேணும். மரணதண்டனை! உனக்குத் தெரியுந்தானே?"எண்டு கட்டார் சொல்லிப் போட்டுப் போயிட்டான்.

" இஞ்சை இருந்தால் மரணதண்டனை, அங்கை அரங்கினால் மரணதண்டனை. உதைத் தவிர வேறை எண்ணம், நினைவு எதுகுமே இவங்கடை மண்டைக்குள்ளை இல்லை." எண்டு பெத்தய்யா புறுபுறுத்தார். குதிரைக் குளம்படிச் சத்தம் இப்ப துப்பரவாய்க் கேட்கேல்லை. பெத்தய்யா கொம்பு விளக்கைத் தூக்கிப் பிடிச்சார். அண்ணர் அடுத்த நொடியிலை வந்திட்டார். அவரின்ரை முகத்திலை, கையிலை எல்லாம் காட்டுறோசா முள்ளுக் கிழிச்சுப் போட்டுது. கடவுளே எண்டு பாரதூரமானதாய் ஒண்டுமில்லை. அண்ணரின்ரை முகத்திலை பியாங்காவைப் பத்திரமாய் அனுப்பி வைச்ச திறுத்தி இருந்திச்சிது. 


முதல் வேலையாய் குதிரைமாலுக்குப் போய் குதிரையளைத் தீன் குடுத்துப் பராமரிச்சம். வியாழரையும் வெள்ளியாரையும் ஒண்டாய்க் கண்டது  மனசுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்தது. ரெண்டும் ஒண்டோடை ஒண்டு தலையை நெருக்கமாய் வைச்சபடி நிண்டதுகள். தாங்கள் என்னென்ன சம்பவங்களுக்கை மாட்டுப் பட்டது , மீண்டது எண்டு தங்கடை மொழியிலை வளமை பறைஞ்சதாக்கும்! நான் அதுகளுக்குக் கொஞ்சம் கொள்ளுக் குடுத்தன். அண்ணர் என்னை முதலிலை தடுத்தவர், பேந்து 

"சரி காரியமில்லை. இந்த ஒரு தரம் மட்டும் குடு. இங்கினை காட்டுறோசாப் பள்ளத்திலை சனங்கள் குதிரைக்குக் கொள்ளுக் குடுக்கிறதை கைவிட்டிட்டிதுகள். புல்லு மட்டுந்தான் குடுக்கிறது. கொள்ளெல்லாம் மனிசருக்கே அருந்தலான சாப்பாடாய்ப் போச்சுது." எண்டார்.


கொஞ்சத்தாலை பெத்தய்யா வீட்டு அடுப்படியிலை இருந்து மூண்டு பெரும் இராச்சாப்பாடு சாப்பிடத் தொடங்கினம். குடைவின்ரை தட்டி திறந்த படி  கிடந்திது. ஏதும் குழப்பம் எண்டால் சட்டெண்டு அண்ணர் ஓடி ஒழிக்க வேணுமெல்லோ? பெத்தய்யா ஒரு சருவச்சட்டியிலை கோதுமைக் கஞ்சி கொண்டு வந்து சாப்பாட்டு மேசையிலை வைச்சார். 
"இண்டைக்கு இதுதான் சாப்பிட இருக்குது. கூடுதல் பாகம் தண்ணிதான், எண்டாலும் சூடாயிருக்குது." எண்டு சாதுவான கவலையோடை சொன்னவர்.  அப்பத் தான் ஞாவகம் வந்தாப்போலை நான் கொண்டு வந்த அசம்பி எங்கை எண்டு பார்த்தன். அதுக்குள்ளை என்னென்னெல்லாம் இருக்கு எண்டது ஞாவகம் வந்திச்சுது. நான் அசம்பியைத் தேடி எடுத்து சோபியா அக்கை தந்த பாண், கூபர் அய்யா தந்த வத்தல் இறைச்சி எல்லாத்தையும் வெளியாலை எடுத்தன். அதுகளைக் கண்ட அவாவிலை ரெண்டு பேரின்ரை நாலு கண்ணும் பளிச்சிட்டுது. நான் கொண்டு வந்தது அவையளுக்கு பெருநாள் சாப்பாடு போலை இருந்தது. அனக்கு அதையிட்டு நல்ல மனத் திறுத்தி. ஒண்டுமே பறையாமல் பெத்தய்யாவும் அண்ணரும் சாப்பிட்டினம் சாப்பிட்டினம் சாப்பிட்டபடியே இருந்திச்சினம். பாவம் எத்தினை நாளுக்கு முன்னம் நேர்சீராய் சாப்பிட்டவையோ? கனநேரம் ஒரு கதைபேச்சும் இல்லை. கடைசியிலை அண்ணர்,
"சாப்பிட்டு வயிறு மெத்திறது எண்டதே கிட்டத்தட்ட எனக்கு மறந்து போச்சுது." எண்டு சொன்னார்.

காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்கிறதை இட்டு அனக்கு வரவரக் கூடுதல் திறுத்தியாய் இருக்குது. சரியான காரியம்தான் செய்திருக்கிறன் எண்டு மனசுக்கு ஆறுதலாய் இருந்திது. குதிரைக்காறன் வளவிலை இருந்து வெளிக்கிட்ட நேரந்தொட்டு  பெத்தய்யா வீடு வந்தது வரை நடந்த நடப்பு எல்லாத்தையும் ஒழுங்காய் அண்ணருக்குச் சொன்னன். கட்டாரும், வெட்டாரும் எப்பிடி என்னைக் கூட்டி வந்து பெத்தய்யா வீட்டிலை விட்டவங்கள் எண்டதை எல்லாம் சொன்னன். அண்ணர் திரும்பத் திரும்ப கட்டார், வெட்டார் பற்றின கட்டத்தைப் பற்றித் தான் கேட்டுக்கேட்டுச் சிரிச்சார். நானும் அண்ணர் சிரிப்பார் எண்டு நினைச்சநான் எல்லே? பெத்தய்யாவும் சிரிச்சவர்.


"உவங்கள் ஒண்டும் பெரிய புத்திசாலியள் இல்லை. ஆனால் தாங்கள் பெரிய அறிவாளியள் எண்டு தங்களுக்கை ஒரு நினைப்பு." எண்டு பெத்தய்யா சொல்லிச் சிரிச்சார்.

"நானே அவங்களை ஏமாத்திப் போட்டனே! என்னைப் பற்றின முழு விவரமும் தெரிஞ்சிருப்பான்கள் எண்டால்? தாங்கள் தேடித் பிடிக்க வேண்டிய சிங்கநெஞ்சனின்ரை தம்பிக்காறன், காட்டுறோசாப் பள்ளத்துக்குள்ளை நுழையிறதுக்கு தாங்களே உதவி ஒத்தாசை செய்திருக்கிறாங்கள்." எண்டு நானும் சொல்லிச் சிரிச்சநான்.

அப்ப எனக்கு ஒரு கேள்வி மனசுக்குள்ளை வந்தது. அதைப் பற்றி இதுவரை நான் யோசிச்சே பார்த்ததில்லை.

"அது கிடக்க, அண்ணர் எப்பிடிக் காட்டுறோசாப் பள்ளத்துக்கை உள்ளிட்டநீர்?" எண்டு ஆவலாய்க் கேட்டன். அண்ணர் சிரிக்க வெளிக்கிட்டார். 
"பாய்ஞ்சு வந்து உள்ளிட்டநான்." எண்டார்.
"வியாழரோடை பாய்ஞ்சநீரே?"
"ஓம், பின்னை? என்னிட்டை வேறை ஒரு குதிரையும் இல்லையே!"
நான் அண்ணர் வியாழரோடை தடையளை தாண்டினதெல்லாம் முன்னை பார்த்திருக்கிறன் தான். ஆனால் உந்த கோட்டை மதிலை எப்பிடி அண்ணரையும் காவினபடி வியாழர் பாய்ஞ்சு தாண்டி வந்து இருக்கும்? நம்பிறது கயிட்டமான காரியம்.
"நாங்கள் உள்ளிட்ட நேரம் மதில் முழுசாய்க் கட்டி முடிஞ்ச பாடில்லை. ஒரு பக்கம் கட்டின குறையாய்க் கிடந்தது. அந்த இடத்தாலை தான் பாய்ஞ்சு உள்ளிட்டநாங்கள். எண்டாலும் ஓரளவுக்கு உசரம். வியாழர் கெட்டிக்காறன் அரும்பொட்டிலை சமாளிச்சுப் போட்டுது."எண்டு விளப்பம் சொன்னார்.


"அது சரி அப்ப அரணக்காறங்கள் ஒருத்தரும் காணேல்லையோ?"

அண்ணர் கையிலை வைச்சிருந்த பாணிலை ஒரு கடி கடிச்ச படி திரும்பச் சிரிச்சார்.
" ஒரு கும்பல் அரணக்காறங்கள் எங்களைக் கலைக்க வெளிக்கிட்டான்கள். வியாழரின்ரை பின்பக்கம் அம்பொண்டு சாதுவாய்த் தைச்சுப் போட்டுது. ஆனால் நாங்கள் தப்பீட்டம். ஒரு நல்ல இரக்க குணமுள்ள ஒரு கமக்காறன் என்னையும், வியாழரையும் தன்னுடைய கால்நடைக் கொட்டாரத்துக்குள்ளை வைக்கோல் கத்தையளுக்குப் பின்னாலை ஒளிச்சு வைச்சவர். இருட்டின பிறகு பெத்தய்யா வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டவர். இப்ப உனக்கு உள்ள கதை எல்லாம் தெரியும்." எண்டு சொல்லி முடிச்சார்.
"உள்ளபடியான முழுக்கதை இன்னும் இருக்கு, முடியேல்லை. உனக்குத் தெரியாது சீனியப்பு!, இங்கினை ஊருக்குள்ளை சனங்கள் யோனத்தானையும், குதிரையையும், அந்த மயிர்க்கூச்செறிய வைக்கிற குதிரைப் பாய்ச்சலையும் பற்றி பாட்டுகள் இயற்றிப் பாடுதுகள்.  தெங்கில் கொடுங்கோலன், காட்டுறோசாப் பள்ளத்தைப் பிடிச்சு எங்களை எல்லாம் அடிமைப் படுத்தின பிறகு நடந்த ஒரேயொரு நன்மையான காரியம் உது மட்டுந்தான். 
யோனத்தான்! அதிட்ட யோகத்தான்!
மானத்தான்! விடுதலை காணத்தான்!
வானத்தால் வந்த தேவன்தான்!
வானத்தில் பரி ஒன்று பறக்குமோ?
வானத்தில் அவன் பரி பறக்குமே!
இப்பிடி யோனத்தானைப் பற்றி எல்லாரும் பாடுகினம். நானும் யோனத்தானின்ரை வரத்து எங்களுக்கு ஒரு விடிவைக் கொண்டு வரும் எண்டு நம்பிறன். இதுதான் முழு நடப்பும் சீனியப்பு!"எண்டு அண்ணரைப் பற்றிப் பெருமையாய்ச் சொன்னார் பெத்தய்யா. 

"இன்னும் ஒரு இரகசியம் இருக்கு சீனியப்பு. அதைத் தன்ரை வாயாலை பெத்தய்யா சொல்ல மாட்டார். தற்பெருமை அடிக்கிற ஆள் அவரில்லை. ஒர்வார் கத்துலாக் குகையிலை மறியலிலை  இருக்க  காட்டுறோசாப் பள்ளத்திலை ஆராம் விடுதலை இயக்கத்தை இரகசியமாய்க் கொண்டு நடத்திறதாம்?  வேறை ஆர்? பெத்தய்யா தான்!  உண்மையிலையே பெத்தய்யாதான் விடுதலை காண வந்த தேவன் கண்டியோ!" எண்டு அண்ணர் தன்ரை பங்குக்குப் பெத்தய்யாவைப் பற்றிச் சொன்னார். 
"சாய்!சாய்!. என்னைப் போய்ப் புழுகிக் கொண்டு. அவன் வெட்டார் சொன்ன கணக்கிலை நான் கிழவன்  சாகிறதும், இருக்கிறதும் ஒண்டுதான்." எண்டு பெத்தய்யா சொன்னார்.
"இப்பிடிச் சொல்லாதையுங்கோ பெத்தய்யா! நீங்கள் இப்ப அனக்குப் பெத்தய்யாவாய் ஆகிவிட்டியள் எல்லோ? அனக்காக நீங்கள் கனகாலம் சீவிக்க வேணும்" எண்டு சொன்னன்.
"சரி சரி! அதுக்காக எண்டாலும் உசிரோடை இருக்கிறன். ஆனால் போராட்டத்தை தலைமை தாங்கி  நடத்திறதுக்கு எனக்கு வயசு போட்டுது. வேறை ஆரும் இளந்தாரியள் தான் முன்னுக்கு வந்து பொறுப்பெடுக்க வேணும். " பெத்தய்யாவிட்டை இருந்து ஒரு  பெருமூச்சு பறிஞ்சது.
"ஒர்வார் மட்டும் இஞ்சை இப்ப இருந்திருந்தால்...இப்ப அவர் கத்துலாக் குகையிலை அடைபட்டுக் கிடக்கிறார். கத்துலாவுக்கு எண்டைக்கு அவரை பலி குடுப்பாங்களோ?" எண்டு அழுவாரைப் போலை புலம்பினார் பெத்தய்யா. 

அதைக் கேட்ட அண்ணரின்ரை முகம் வெளிறிப் போச்சுது. 

"அதையும் ஒருக்கால் பார்ப்பம். இப்ப நாங்கள் நடவடிக்கையிலை இறங்க வேணும். உனக்கு ஒரு சங்கதி தெரியாது சீனியப்பு. இந்த வீட்டிலை இராவிலை சாமம் சாமமாய் நாங்கள் வேலை செய்யிறது, பகல் நேரம் முழுக்க நித்திரை கொள்ளுறது. வா எப்பிடியெண்டு உனக்குக் காட்டிறன்." அண்ணர் என்னைக் கூப்பிட்டார். தட்டிக் கதவுக்குள்ளாலை தவண்டு குடைவுக்குள்ளை அதுதான் அந்த இரகசிய அறைக்குள்ளை பூந்தார். நானும் பின்னாலை போனன். அண்ணர் தான் படுத்திருந்த மெத்தையைச் சுறுட்டி ஒரு பக்கம் வைச்சார். தளத்திலை ரெண்டு பலகை, தொட்டவுடனை கையோடை வந்திச்சுது. அதுகளை அரக்கி வைச்சார். எட! உள்ளுக்கை இருட்டாய் கிடங்கு போலை கிடக்கே! 
"இங்கைதான் என்ரை நிலத்தடிச் சுரங்கப் பாதை தொடங்குது." எண்டு அண்ணர் விபரிச்சார். 
"எங்கை போய் முடியிது?" ஓரளவுக்கு என்னாலை யோசிச்சுப் பிடிக்க முடிஞ்சாலும் கேட்டன்.                     
"கோட்டை மதிலுக்கு வெளியாலை காட்டுக்குள்ளை தான் முடிய வேணும். இன்னும் ரெண்டு இராப்பொழுது முழு மூச்சாய் வேலை செய்தால் தேவையான அளவு தூரம் தோண்டி முடிச்சிடலாம். அவசரப் பட்டு இடை நடுவிலை தடியன் தொடுக்கியின்ரை மூக்குக்கு நேரை சரி கணக்காய் போய் வெளியாலை எழும்பி நிக்கக் கூடாது." எண்டு சொல்லிவிட்டு சுரங்கத்துக்குள்ளை தவண்டு போனார்.

உள்ளை போன அண்ணர் வருமட்டும் நான் கனநேரமாய்க் 

காத்திருந்தன். ஒரு பெரிய கூடை நிறம்ப மண்ணோடை வந்தார். மேலை நிண்ட என்னை, அந்தக்கூடை மண்ணைத் தூக்கிப் பெத்தய்யாட்டை குடுக்கச் சொன்னார்.  தட்டியைச் சுறண்டிப் பெத்தய்யாவைக் கூப்பிட்டு மண் கூடையைக் குடுத்தன்.
"வாய்ச்சுப் போச்சு.என்ரை தோட்டத்துக்கு இன்னும் நல்ல மண் கிடைக்குது. என்னட்டை மட்டும்  கடலை, அவரை விதை இருந்து நானும் அதை நட்டு வளர்த்தன் எண்டால் .... பசி பட்டினி எண்டது காட்டுறோசாப் பள்ளத்திலை இராது " எண்டார் பெத்தய்யா.
"ஓமோம்  நல்லாய் நம்பிக் கொண்டிருங்கோ! உங்கடை தோட்டத்திலை பத்துப் பறை கடலை விளைஞ்சால் ஒன்பது பறை கடலையை அந்த நாசமாய்ப் போற தெங்கில் பிடுங்கிப் போடுவான் எண்டது மறந்து போச்சோ?" எண்டு அண்ணர் கேட்டார். பெத்தய்யாவுக்குக் காத்து இறங்கிப் போச்சுது. பெரிய பெருமூச்சோடை 
"ம்......என்ன செய்வம்? தரித்திரியம் பிடிச்ச தெங்கில் இருக்கிற வரை காட்டுறோசாப் பள்ளத்து சனத்துக்குப் பசியும் பட்டினியும் தான் எண்ட எழுத்தாய்ப் போச்சே."எண்டு பெத்தய்யா கவலைப் பட்டார்.

இப்ப நான் கதவடியிலை காவலுக்கு நிக்க, பெத்தய்யா மண் கூடையைக் கொண்டு போய் தோட்டத்திலை கொட்டிப் போட்டு வரவேணும். இருட்டுக்கை எந்தொரு சின்ன அசுகை தெரிஞ்சாலும் ஆபத்தானது.  அப்பிடி ஏதும் தெரிஞ்சால் நான் உடனடியாய் சீக்காய் அடிச்சு எச்சரிக்க வேணும் எண்டு அண்ணர் சொன்னவர். அனக்கும், அண்ணருக்கும் தெரிஞ்ச மெட்டு ஒண்டு. அது அனக்கு சீக்காய் அடிக்கத் தெரியும். அண்ணர்தான் பழக்கித் தந்தவர். அப்ப நாங்கள் பூமி நச்சத்திரத்திலை அம்மா வீட்டிலை இருந்தநாங்கள். படுக்கையிலை நித்திரை வர முன்னம் அடிக்கிறநாங்கள். அண்ணர் திரும்பச் சுரங்கத்துக்குள்ளை போய்விட்டார். பெத்தய்யா அலமாரியை அரக்கி தட்டிக் கதவை மறைச்சு விட்டார். 

"ஒண்டு மட்டும் வலு கவனம் சீனியப்பு! யோனத்தான் குடைவுக்குள்ளை இருக்கிற நேரமெல்லாம் அலமாரியை அரக்கி தட்டிக் கதவை மறைச்சு வைக்காமல் ஒருக்காலும் இருந்திடப் படாது. தெங்கில் விழுவான் பிடிச்சு வைச்சிருக்கிற நாட்டிலை இருக்கிற நீ  இதை உன்ரை  மூளையிலை உறைக்கிற மாதிரி ஞாவகம் வைச்சிருக்க வேணும்." எண்டு பத்திரம் சொன்னார்.
"பெத்தய்யாவாணை ஒருக்காலும் மறக்க மாட்டன்."எண்டு சத்தியம் பண்ணினன். அடுப்படியிலை அரை இருட்டாய் இருந்தது. ஒரு சின்ன விளக்கு மட்டும் அடுப்படி மேசையிலை எரிஞ்சது. அதையும் ஊதி அணைச்சார் பெத்தய்யா.
"இராநேரம் எண்டது இருட்டாயே காட்டுறோசாப் பள்ளத்திலை இருக்கட்டும். இரவுக்கும் இப்ப கனக்கக் கண் முளைச்சிட்டுது.  எல்லாத்தையும் வேவு பார்க்க வேணும் எண்டு அலையுது." எண்டார் பெத்தய்யா.

மண் கூடையோடை இருட்டுக்குள்ளை போனார். என்னெண்டுதான் ஒண்டிலையும் தடக்குப் படாமல் போய்வாறாரோ எண்டு திகைப்பாய் இருந்துது.நான் கதவடியிலை காவலுக்கு நிண்டபடி. கும்மிருட்டுத் தான் தேவை எண்டு பெத்தய்யா நினைச்சது பிழையில்லை. வீட்டுக்குள்ளை இருட்டு, வெளியாலை இருட்டு, காட்டுறோசாப் பள்ளம் முழுக்க இருட்டு,  வானம் கூட இருட்டாய்த் தான் இருந்தது. ஒரு வெள்ளியும் இல்லை, நிலாவுமில்லை. கரியை அரைச்சுப் பூசி விட்ட மாதிரி இருட்டு இருந்துது. பெத்தய்யா சொன்னது போலை இரவுக்குக் கனக்கக் கண் முளைச்சிருந்தாலும், இப்பிடியான கரியிருட்டிலை ஒண்டையும் வேவு பார்க்கேலாது எண்டது ஒரு ஆறுதல்.


அந்தக் கதவடியிலை தனிச்சு நிக்கிறது கவலையும், தனிமையுமாய் ஏன் பயமாயும் கூட இருந்தது. ஒவ்வரு நிமிசமும் போகப்போக அந்தரம் அந்தரமாய் இருந்தது. பெத்தய்யா திரும்பி வர மாட்டாரோ? இருட்டுக்குள்ளை பெத்தய்யா போன திக்கை உத்து உத்துப் பார்த்தன். இப்ப இருட்டாய் இல்லையோ? கவனிச்சுப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சமானது போலை கிடந்தது. அல்லாட்டில் என்ரை கண் இருட்டுக்குப் பழகி விட்டுதோ? அப்ப நான் கவனிச்சன். நிலா கருமுகிலைக் கிழிச்சுக் கொண்டு மெள்ளத் தலை காட்டினது. ஐயோ! இந்த நேரம் பார்த்து நிலவெறிச்சுது எண்டால் நிலைமை படு  மோசமாய்ப் போடுமே! பெத்தய்யா கெதியிலை வந்திட வேணும் எண்டு கடவுளை மண்டாடினன். நல்லகாலம் கொஞ்சம் இருள் அங்கினை இங்கினை இருக்கு. ஒரு அவசர ஆபத்துக்கு ஓடி ஒளிக்கலாம் .  ஆனால் கொஞ்சம் பெத்தய்யா பிந்திப் போட்டார். நிலா பளீர் எண்டு மிச்சம் வெளிச்சமாய் எறிச்சது. வெள்ளிப் பாலாறு ஒண்டு காட்டுறோசாப் பள்ளத்திலை பாய்ஞ்ச மாதிரி கிடந்திது. 


அந்த நிலா வெளிச்சத்திலை நான் பெத்தய்யாவைக் கண்டன். தூரத்திலை மண்ணைக் கொட்டிப்போட்டு வெறுங் கூடையோடை  காட்டுறோசாப் பத்தையளுக்குள்ளாலை வந்து கொண்டிருந்தார். நான் அவசர அவசரமாய் சுற்றவரப் பார்த்தன். ஐயோ! அப்ப அவன் தடியன் தொடிக்கியைக் கண்டன். கோட்டை மதிலிலை இருந்து கயித்து ஏணியிலை அனக்கு முதுகு காட்டினபடி கீழை இறங்கிக் கொண்டிருந்தான். பயம் தொட்டிட்டிது எண்டால் ஒருத்தர் சீராய் ஒரு சீக்காய் அடிக்க முடியுமே? ஒருமாதிரி மெட்டுப் பிடிச்சு சீக்காய் அடிச்சன். பெத்தய்யா ஒரு பல்லி ஓடி ஒளிச்ச மாதிரிப் பத்தையுக்கை  பதுங்கினார். தடியன் தொடிக்கி அனக்குக் கிட்ட வந்தான். 

"என்னத்துக்கு சீக்கை அடிக்கிறாய்?" எண்டு உறுமினான்.
"அது...வந்து... இண்டைக்குத்தான் முதல் முறையாய்...சீக்காய் அடிக்கப் பழகினநான். அனக்கு முந்திச் சீக்காய் அடிக்க தெரியாமல் இருந்தது. இப்ப அனக்கு நல்லாய் சீக்காய் அடிக்க வருது....கேட்க விருப்பமே?" எண்டு ஒரு மாதிரி உளறி வைச்சன்.
"பொத்து வாய். மூச்சுக் காட்டப் படாது. சீக்காய் அடிக்கிறதுக்குத் தடை இருக்கோ இல்லையோ தெரியேல்லை. தடை இருக்கும் எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டால் தெங்கில் நயினாருக்கு உதெல்லாம் பிடிக்காது. அது சரி ஏன்?  கதவு சாத்தி வைக்க வேணும் எண்டு உனக்குத் தெரியாதோ?" எண்டு என்னை அதட்டினான்.
"தெங்கிலுக்கு கதவு திறந்த படி இருக்கிறது பிடிக்காதோ?" எண்டு சீண்டிக் கேட்டன். என்ரை விசார்த்தனமான துணிச்சலை இப்ப நினைக்க அனக்கே திகைப்பாய் கிடக்கு. 
"புழுக்கையா! முதலிலை மட்டு மரியாதையாய்க் கதைக்கப் பழகு. தெங்கில் நயினார் எண்டு சொல்ல வேணும். தெங்கில் எண்டு மட்டு மரியாதை இல்லாமல் நீ கூப்பிடிறதுக்கு அவரென்ன உன்ரை வீட்டு வேலைக்காறனே?" எண்டு சீறினான்.
"அது கிடக்கட்டும். நான் சொல்லிறபடி நீ இப்பசெய்ய வேணும். எனக்கு இப்ப ஒரு பெரிய கிண்ணி நிறையத் தண்ணி குடிக்க வேணும். கோட்டை மதிலிலை காவலுக்கு நிண்டு நிண்டு ஒரு மனிசன் தாகத்திலை தவிக்க வேண்டிக் கிடக்கு."எண்டு கட்டளை இட்டான்.
எக்கணம் இவன் வீட்டுக்குள்ளை வந்தான் எண்டால், பெத்தய்யா வீட்டிலை இல்லை எண்டதைக் கண்டுபிடிச்சிடுவான். பேந்தென்ன? கந்தறுந்தவார் சாமத்திலை வெளியிலை நடமாடினது எண்டு சொல்லி  பெத்தய்யாவைக் கொலை செய்து போடுவாங்கள்.

" இதிலை ஒரு சொட்டு நேரம் நில்லுங்கோ. கொண்டு வாறன்." எண்டநான். அந்தக் குறுடு தடவிற இருட்டிலை அடுப்படிக்குள்ளை வதவத எண்டு ஒரு மாதிரி ஒண்டிலையும் தடக்குப் படாமல் ஓடிப்போய் கிண்ணியிலை தண்ணியை வார்த்தன். தண்ணிக் கிண்ணியை  எடுத்துக் கொண்டு திரும்பினன்.  அனக்குத் திக் கெண்டு போச்சுது. அந்த அறுவான் அந்த இருட்டிலை என்ரை முதுகுக்குப் பின்னாலை நிக்கிறான்.

"விளக்கைக் கொளுத்து. இப்பிடியொரு எலிப்பொந்து உள்ளுக்கை எப்பிடி இருக்கு எண்டு பார்க்க வேணும்." எண்டான். அனக்குக் கையெல்லாம் உதறப் பிடிச்சிது. கை நடுங்க நடுங்க ஒரு மாதிரி விளக்கைக் கொளுத்தினன். தண்ணியை வாங்கி மடமட வெண்டு குடிச்சான். இன்னுமொருக்கால் வாங்கிக் குடிச்சுப் போட்டுக் கிண்ணியை கீழை விட்டெறிஞ்சான். பேந்து ஐமிச்சத்தொடை தன்ரை சின்னப் பண்டியின்ரை கண்ணாலை சுற்றவரப் பார்த்தான். இந்தா இப்ப கேட்கப் போறானே எண்டு நினைக்க முன்னம் கேட்டான்.
"இந்த வீட்டிலை இருக்கிற அந்த மத்தியாசுக் கிழடன் எங்கை போட்டான்?"

நான் மூச்சுக் காட்டேல்லை. என்னத்தைப் பறையிறது எண்டு தெரியேல்லை.

"கேட்கிறது காதிலை விழேல்லையோ? எங்கை மத்தியாசு?" திரும்பவும் கேட்டான். 
"பெத்தய்யா நித்திரை."  ஏதாவது நானும் சொல்லத் தானே வேணும்.
"எங்கை படுத்திருக்கிறான்?"
அடுப்படிக்குப் பக்கத்திலை ஒரு சின்ன அறை. அதுக்குள்ளை பெத்தய்யாவின்ரை கட்டில். ஆனால் அனக்குத் தெரியும் பெத்தய்யா கட்டிலிலை இல்லையெண்டு! இருந்தாலும் என்னையறியாமல் "அங்கை" எண்டு அறைக்கதவைச் சுட்டிக் காட்டினன். பயத்திலை குரல் கீச்சிட்டிது. அந்தக் கீச்சுக் குரலைக் கேட்க அனக்கே சரியான கேவலமாய் இருந்தது. தடியன் தொடிக்கி நக்கல் சிரிப்பொண்டு சிரிச்சான்.
"உனக்குப் பிடிபடாமல் பொய் சொல்ல தெரியேல்லை. பொறு பொறு  உன்ரை பொய்யும் மெய்யும் இப்ப பிடிபடும்."
தான் ஏதோ சாதனை செய்த மாதிரி அவனுக்கொரு கிளுகிளுப்பு. நான் பொய் சொன்னதையும், பெத்தய்யா வீட்டிலை இல்லாததையும்  தான்கண்டு பிடிச்சது எண்டு காட்டிக் குடுக்க; பெத்தய்யாவுக்கு மரணதண்டனையும், அனக்கு அடிமைச்சேவகமும், தனக்குப் பதவி உயர்வும் கிடைக்கும் எண்டு நினைச்சிருப்பானோ? 


"விளக்கைத் தா!" எண்டு கேட்டு வாங்கினான்.  எல்லாத்தையும் போட்டது போட்ட படி விட்டிட்டுப் பறந்தோடிப் போய் பெத்தய்யாவையும் ஓடி உயிர் தப்பச் சொல்ல வேணும் எண்டு நினச்சன். ஆனால் பிந்திப் போச்சுது. பயத்திலை கால் ரெண்டும் ஆணி அடிச்ச மாதிரி நிலைகுத்திப் போச்சுது. வயித்தைப் பிரட்டினது. தடியன் தொடிக்கிக்கு என்னைப் பார்க்கப் பார்க்க சேட்டையாய் இருந்திச்சுது. அவனுக்கு ஒரு அவசரமுமில்லை. என்ரை அவத்தையைப் பார்த்து இரசிச்ச படி நிண்டான். அனக்கு இன்னும் இன்னும் பயம் வரட்டுக்கும் எண்டு நேரத்தை இழுத்தடிச்சான். ஒரு கணக்கிலை பார்த்து இரசிச்சது காணும் எண்டதன் மேலை என்னைப் பார்த்து,

" வாடி ராசன்! எனக்கு அந்த மத்தியாசுக் கிழடன் எங்கை படுத்து நித்திரை கொள்ளிறான் எண்டு  ஒருக்கால் காட்டடி ராசன்!" எண்டு நக்கல் நளினமாய்ச் சொன்னான். அறைக்கதவை உதைஞ்சு திறந்து, என்னைக் கழுத்தைப் பிடிச்சு உள்ளை தள்ளி விட்டான். நானும் கதவு நிலையிலை தடக்குப் பட்டு போய் விழுந்தன். என்னை இழுத்துத் தூக்கி விளக்கைப் பிடிச்சு முகத்தைப் பார்த்தான். 
"வாய் திறந்தால் பொய் பொய்யாய் சொல்லிற நரிக்குட்டி! காட்டடா கிழடனை!" எண்டு வசை பாடினபடி விளக்கை உசத்திக் கட்டில் இருந்த இருட்டு மூலையை கண்ணை இடுக்கிப் பார்த்தான். 

இந்த அமளியுக்குள்ளை பெத்தய்யாவின்ரை கொதி கிளம்பின குரல் அதட்டிக் கொண்டு வந்தது,

"ஆரடா அவன் அறுவான்? மனிசரை சாமம் ஏமத்திலை போய்  நித்திரைப் பாயிலையும் நிம்மதியில்லாமல் போட்டு வதைக்கிறது?" எண்டு! அனக்கு நான் காணுறது கனாவோ எண்டு ஐமிச்சமாய் கிடந்தது. பெத்தய்யாவை திகைச்சுப் போய்ப் பார்த்தன். பெத்தய்யா என்னைப் பார்த்து இரகசியமாய் கண்ணடிச்சார். அப்பத்தான் அனக்கு நெஞ்சுக்கை தண்ணி வந்திச்சிது. அவர் படுக்க போற நேரம் போடுற சட்டையைப் போட்டிருந்தார். நித்திரையாலை எழும்பி வந்தவர் போலை தலைமயிரும் குழம்பிக் கிடந்தது. யன்னல் சாதுவாய்த் திறந்து கிடந்தது. யன்னலுக்கு வெளிப் பக்கமாய் கூடையும் கண்ணிலை பட்டிது. மெய் மெய்யாய் பெத்தய்யா பல்லியின்ரை இனம் போலை! 

தடியன் தொடிக்கியின்ரை மூஞ்சை போன போக்கைப் பார்க்க பாவமாய் கிடந்தது. ஒரு மனிசன் தான் பிழை விட்டிட்டன் எண்டு வெக்கப் பட்டதை நான் அதுவரை கண்டதில்லை. பெத்தய்யாவை கண் முழி தெறிக்க வாய் பிளந்தபடி பார்த்தான்.

"நான் கொஞ்சம் தண்ணி குடிக்க வந்தநான்" எண்டு தடுமாறினான்.
"தண்ணீர் குடிக்க வந்தநீரோ? ஓமோம் நீர் சொல்லிற பொய்யை நம்பித்தானே தீரவேணும்? நானென்ன ஒரு விளப்பமும் இல்லாத விழுபேயனே? எனக்குத் தெரியாதே உங்கடை தெங்கில் உங்களுக்கு வைச்ச சட்டம்? காட்டுறோசாப் பள்ளத்து சனங்களிட்டை தண்ணிவெந்நி வாங்கிக் குடிக்கப் படாது. நஞ்சு வைச்சுக் கொலை செய்து போடுங்கள் எண்டு உனக்கு உத்தரவு இருக்கு. அப்பிடி இருக்கேக்கை நீ இஞ்சை வந்து தண்ணி குடிச்சு, உன்ரை கேடு காலத்துக்கு நீ திண்ட உங்கடை சாப்பாடே உனக்கு ஒத்துக் கொள்ளாமல் போய், நீ கிடந்து உத்தரிக்க, நாங்கள் தான் நஞ்சு கலந்த தண்ணி தந்து கொல்லப் பார்த்தது எண்டு எங்களுக்குத் தானே கழுத்துக்குக் கத்தி வரும்? இன்னொரு தரம் தாகம், தண்ணி எண்டு சொல்லிக் கொண்டு வந்தாய் எண்டால் உண்மையிலையே நஞ்சு வைச்ச தண்ணி தான் தருவன். நஞ்சு வைக்காமல் இருந்து வீணாய் சாகிற நேரம், நஞ்சை வைச்சிட்டு சாகலாந்தானே?" 

பெத்தய்யா பொரி பொரி எண்டு பொரிஞ்சு தள்ளினார். அனக்கு என்ரை காதிலை விழுந்தது எல்லாத்தையும் நம்பேலாமல் கிடந்தது.
ஒருவேளை இப்பிடித்தான் தெங்கிலின்ரை அரணக்காறங்களோடை கதைச்சுப் புழங்க வேணுமோ? தடியன் தொடிக்கி ஒண்டும் திருப்பிச் சொல்லமாட்டாமல் தொண்டையைச் செருமினபடி தன்ரை காவல் பகுதிக்கு, கோட்டை மதிலுக்குப் போனான்.
                                  (அண்ணரை எங்கை காணேன்?)
சொல்விளக்கம்:

தமிழ் ஆர்வலர், ஆய்வாளர் இராமகி அவர்களின் வளவின் (valavu.blogspot.com) பரிந்துரைப்படி;
வடந்தை - winter
சிந்து - snow
அரணம் - military
கதழ்வண்டி - sledge - சிந்தில் குதிரை இழுக்க வழுக்கிச் செல்லும் மனிதர்கள் பயணம் செய்யும் வண்டி
மேலுள்ள சொல்லை அடியாக வைத்து உருவாக்க முயன்ற சொல்:
கதழாசனம் - toboggan -  சிந்தில் வழுக்கி விளையாடும் கருவி

அக்களிப்பு - மனமகிழ்ச்சி

புளுகம்< புளகம் - மகிழ்ச்சி
கெக்கட்டம் - ஆரவாரம்
நோக்காடு - நோய், துன்பம்
அரியண்டம் < அரிகண்டம் - தொல்லை
அருளாசிப் பூனை- (எலிக்கு) ஆசி அருளும் பூனை
மைம்மல் < மைமல் - இருள் பரவும் நேரம்

தவண்டு< தவழ்ந்து
சீக்காய்< சீழ்க்கை

பத்தை < பற்றை - புதர்
பூந்தம் < புகுந்தோம்
இராப்போலாய்< இரவுபகலாய்
சொண்டு - பறவையின் அலகு , உதடு
சொக்கு - கன்னம்
கொற இழுவை - விடாப்பிடியாக இழுத்தல்
அந்தரப் படுத்தல் - அவசரப்படுதல்
சுவாத்தியம் - இன்பம்
நுள்ளான் - சிற்றெறும்பு
அறளை பேர்ந்த < அறளை பெயர்ந்த - வயோதிபத்தில் வரும் மறதி நோய் ( alzhimer) பிடித்த
பினாத்துதல் - அலட்டுதல்
தெந்தட்டு - சமநிலை, balance
செட்டு - தற்பெருமை
அருந்தல்- அருமை
இளந்தாரி - இளைஞர் 
ஒரு சொட்டு - ஒரு கொஞ்சம் 
அமளி - ஆரவாரம் 
விழு பேயன் - முழு முட்டாள் 
அரும்பொட்டு - மட்டுமட்டு

This entry was posted on 3:42 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: