Author: ந.குணபாலன்
•2:55 PM

                                                                      மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்


துடிப்பு 8: பெத்தய்யா மத்தியாசு! 

யூச்சி! வேறை ஆருமேயில்லை! அனக்கு உது சமிபாடு அடையக் கொஞ்ச நேரம் பிடிச்சது. ஆர் எவரோடையும் அன்பாய் பரிவாய் கலகலத்துக் கதைக்கிற; வடிவான செந்தாடியும், செம்பட்டைச் சுறுள் முடியும், செந்தளிப்பான எங்கடை யூச்சி! அண்ணர் என்னை விட்டிட்டுப் போன கவலையிலை நான் தவிக்க, அனக்கு விசுக்கோத்துப் பலகாரங்கள் தந்து ஆதரிச்ச யூச்சியோ இந்தத் துரோகி? அனக்கு சரியான வெப்பிசாரமாய்க் கிடந்தது.

இப்ப இவன் யூச்சி எண்டவன், அனக்கு கொஞ்சம் தள்ளிப்  பாசறைத்தீயைச் சுற்றி இருக்கிறான்! தெங்கிலின்ரை கைக்கூலியளோடை தானும் ஒரு கைக்கூலியாய் ! யூச்சி அவன்கள் ரெண்டு பேரையும் கட்டார், வெட்டார் எண்டு பேர் சொல்லிக் கூப்பிட்டவன்.  ஏன் வரப் பிந்திப் போச்சிது எண்டு சொன்னான்.

" உவன் கூபர் இண்டிரவு மலையிலை ஓநாய் வேட்டைக்கெண்டு வெளிக்கிட்டவன். அவனைப் பார்த்துப் பதுங்கித்தான் வரவேண்டிக் கிடந்தது." யூச்சியின்ரை விளப்பத்தைக் கேட்டாலும் கட்டார், வெட்டாருக்கு எரிச்சல் தீரேல்லை. 
"கூபர் எண்டவனைப் பற்றி மறந்திட்டீங்களே?கத்துலாக் குகையிலை சோபியாவை மட்டுமில்லை, உவனையுந்தான் நீங்கள் பிடிச்சு அடைக்க வேணும். ஏனெண்டால் தெங்கில் நயினாரை அவனுக்குந்தான் பிடிக்காது." எண்டு சொல்லி அவன்களின்ரை எரிச்சலைக் குறைக்கத் தெண்டிச்சவன்.
"அதுக்கு ஏதாவதொரு நடவடிக்கை நீதான் எடுக்க வேணும்." எண்டு வெட்டார் சொன்னான்.
"ஏனெண்டால் செர்ரிப்பள்ளத்திலை நீ ஒருத்தன் தான் எங்கடை ஆள், இல்லையே?" எண்டு கட்டார் கேட்டான்.
"ஓமோம்"எண்டான் யூச்சி.

அவன்கள் ரெண்டு பேரையும் தாடாத்தி பண்ணி மனங்குளிர வைக்க யூச்சி  நினைச்சான். ஆனால் அவன்களிட்டை உவன்ரை பருப்பு அவிஞ்ச பாடாயில்லை. கட்டார், வெட்டாருக்கும்  யூச்சியைப் பிடிக்கேல்லை எண்டது தெளிவாய்த் தெரிஞ்சது. பின்னை? என்னதான் உதவி ஒத்தாசை கிடைச்சாலும் ஒரு துரோகியை எந்த ஒரு பகையாளியும்  மனசாலை விரும்பி சேர்க்க மாட்டான் தானே? காரியம் முடியக் கழட்டி விட்டிடுவான்.

யூச்சியின்ரை நல்லகாலம் அவன்ரை செவியை கட்டார், வெட்டார் இந்த முறை வார்ந்து விடேல்லை. ஆனால் இன்னொரு காரியம் செய்தவன்கள். கத்துலாச் சின்னத்தை யூச்சியின்ரை நெஞ்சிலை குறி சுட்டான்கள். 
" தெங்கில் நயினாரின்ரை படையிலை இருக்கிற சகலரும் கத்துலாக்  குறியோடை இருக்க வேணும். நீ எதிரியளுக்குத்தான் ஒரு துரோகி! ஆனால் தெங்கில் நயினாரின்ரை படையாள் தானே? உன்னைப் பற்றி அறியாத நம்மடை உளவாளியள் ஆராவது, செர்ரிப்பள்ளத்துக்கு வாற நேரத்திலை உன்னை நம்மாள் எண்டு அடையாளம் காணுறதுக்கு கத்துலாக் குறி உன்னிலை இருக்க வேணும்." எண்டான் வெட்டார்.

"அதெண்டால் மெய்தான்!" எண்டு தலையாட்டினான் யூச்சி. மேலங்கியையும், சட்டையையும் கழட்டி வெறும் மேலைக் காட்ட ஏவினான்கள். கத்துலாச் சின்னமுள்ள சூட்டுக்கோலை நெருப்பிலை காய்ச்சினான்கள். அது சிவந்த பிறகு எடுத்து யூச்சியின்ரை நெஞ்சிலை குறி சுட்டான்கள். சிவந்த சூட்டுக்கோல் நெஞ்சிலை பட யூச்சி வேதினை தாங்கேலாமல் அலறினான்.
"இப்ப அறிஞ்சு கொள்! இனி காலகாலத்துக்கும் நீ தெங்கில் நயினாரின்ரை ஆள்! சோபியாவுக்குச் செய்யிற மாதிரி தெங்கில் நயினாருக்கெதிராய் துரோகம் பண்ணவும் முடியாது."

நான் நஞ்சியாலாவுக்கு வந்த பின்னாலை இதுவரை அனுபவிச்ச இரவுகளிலை இதுதான் தாங்கிறதுக்குக் கயிட்டமான நீண்ட இரவாய்ப் போச்சு. எல்லாத்தையும் விடக் கேவலம் என்னெண்டால், ஒண்டும் மேற்கொண்டு செய்யேலாமல் இஞ்சை இருந்தபடி, யூச்சி செர்ரிப் பள்ளத்திலை தன்ரை நடப்புக்களை நரிவேலையளைப் பற்றி புழுகித் தள்ளிறதை கேட்டுக் கொண்டிருக்கிறது தான். வலு சுறுக்காய்  சோபியா அக்கையையும், கூபர் அய்யாவையும் மாட்டிவைக்க ஒரு திட்டம் வைச்சிருக்கிறானாம்.

"கூபர் அய்யா! ஐயோ! அந்த மனிசனைப் போய் துரோகி எண்டு நினைச்சனே! அது மனிசன் சோபியா அக்கையிலை தன்ரை  திறுத்தியீனத்தை வெளிவெளியாய்க் காட்டினாப்போலை நரி நயவஞ்சகன் எண்டு நம்பினனே! அந்தாள் அக்கறையோடை வந்து விசாரிச்சது, வத்தல் இறைச்சி தந்தது, எல்லாத்துக்கும் மேலாலை உசிரைக் காப்பாற்றினது. ஐயோ!, மட்டு மரியாதை இல்லாமல் சீறிக் கதைச்சுப் போட்டன். என்னைச் செருப்பாலை அடிக்க வேணும். " என்ரை மனசுக்குள்ளை பலதையும் நினைச்சு என்னிலை நானே கோவப்பட்டன்.

"ஆனால் இதுக்குப் பின்னணியிலை ஆர் இருக்கிறதெண்டு ஒரு பொடிப்பிள்ளைக்கும் தெரிஞ்சிடக் கூடாது. செர்ரிப்பள்ளத்திலை நான் தெங்கில் நயினாரின்ரை கையாள் எண்டது இரகசியமாய் இருக்க வேணும்." எண்டு யூச்சி சொன்னான். 

"பார்ப்பம், பார்ப்பம்! எத்தினை நாளைக்கு நீர் உந்த இரகசியத்தைக் காப்பாற்றுறீர் எண்டு. எக்கணம் நான் உம்மடை கதைகாரியங்களை அவிட்டு விடிறநேரம் செம்பட்டை மயிர்த்தலையா!, உம்மடை முகம்மூஞ்சை வெளிறிப் போற போக்கை நானுந்தானே பார்க்கப்போறன்?" மனசுக்குள்ளை சொல்லிக் கொண்டன். 


ஆனால் அவன் அந்த யூச்சி எண்ட நயவஞ்சகன் இன்னும் ஒண்டு சொன்னான். அதைக்கேட்டு நெஞ்சுக்கூட்டை விட்டு என்ரை நெஞ்சு வெளியாலை பாய்ஞ்ச மாதிரித் திடுக்கிட்டுப் போனன். 

" அது கிடக்க, அந்தப்பொடியன் யோனத்தான் சிங்கநெஞ்சன் இன்னும் தன்னிட்டவாரம் காட்டுறோசாப்பள்ளத்திலை திரியிறானோ? இல்லை அவனைப் பிடிச்சிட்டீங்களோ?"

கட்டாருக்கும், வெட்டாருக்கும் உந்தக் கேள்வியை யூச்சி போய்க் கேட்டது புறியமாயில்லை எண்டது அனக்கு விளங்கினது. பின்னை?, ஒருத்தன் தன்ரை பிழையை மறைக்கிறதுக்காக மற்றவன்ரை பிழையைச் சுட்டிக் காட்டிறதை எவன் விரும்புவான்?

"அவன்ரை அடையாளங்களைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறம்."எண்டு கொஞ்சம் எரிச்சலான குரலிலை வெட்டார் சொன்னவன். 
"ராவும்போலும் ஒரு நூறுபேர் அவனைத் தேடினபடிதான். காட்டுறோசாப்பள்ளத்திலை எல்லாவீடுகளையும் தலைகீழாய்ப் பிரட்டித் தேடப்போறம். தெங்கில் நயினாரும் எப்படா அவன் பிடிபடுவான் எண்டு காத்திருக்கிறார்."

"எனக்கு விளங்குது. அந்தக் கடுக்கண்ட வயசு சிங்கநெஞ்சன் மைக்க ஆக்களை விட ஆபத்தானவன் எண்டு நான் அப்பவே உங்களுக்குச் சொன்னநான். ஏனெண்டால் உண்மையிலையே அவன் ஆள் ஒரு சிங்கன் தான்."எண்டு யூச்சி சொன்னான்.


"ஓ...ஓ! அனக்கு உதைக் கேட்கப் பெருமையாய் இருக்குது. அண்ணரை  ஒரு சிங்கன் எண்டு உந்த துரோகியே சொல்லிறானே! அதோடை ஒரு பெரிய ஆறுதல் என்னெண்டால் அண்ணர் சாகேல்லை! உசிரோடை இருக்கிறார்! " ஆனால் யூச்சி அண்ணரைக் காட்டிக்குடுத்துச் செய்த துரோகத்தை நினைக்க நினைக்க அனக்கு கோவமும் அழுகையுமாய் இருந்திச்சிது.


ஐயோ! அண்ணரின்ரை இரகசியமான காட்டுறோசாப்பள்ளப் பயணத்தைப் பற்றி  என்னெண்டு மணந்து பிடிச்சவன்? என்னெண்டு தெங்கிலுக்கு வியளம் சொல்லி அனுப்பினவன்? இவன் செய்த துரோகத்தாலை நூறுபேர் அண்ணரைப் பிடிக்கவெண்டு இரவுபகலாய்  அலையிறான்கள். எக்கணம் அண்ணர் அவங்கடை கையிலை பிடிபட்டார் எண்டால் தெங்கிலிட்டை கொண்டுபோய் ஒப்படைப்பான்கள்.


ஆனால் இப்ப அண்ணர் உசிரோடை இருக்கிறார்! அதோடை பகையாளியிட்டை பிடிபடாமல் இருக்கிறார்! ஆனால் ஏன் என்ரை கனாவிலை வந்து உதவி கேட்டுக் கத்தினவர்? அனக்கு குழப்பமாய் இருந்தது. ஏன் உதவிக்குக் கத்தினவர் எண்டு எப்பிடி அறியிறதாம்?


ஆனால் அங்கை நிலத்தோடை நிலமாய் ஊர்ந்தபடி யூச்சி சொல்லிற கதையளைக் கேட்க கனக்க புதினங்கள் பிடிபடுது. 

" அவன் அந்தக் கூபர் எண்டவனுக்கு சோபியாவிலை சரியான பொறாமை. தன்னை நயினாராய்த் தெரிவு செய்யாமல், சோபியாவைப் போய் செர்ரிப்பள்ளத்துச் சனம் நாச்சியாராய்த் தெரிவு செய்ததிலை ஆளுக்குச் சரியான மன்னை. திறமான வில்லாளி எண்டால் போலை தான் மட்டும் தான் எல்லாத்திலையும் விண்ணன் எண்டு ஒரு எண்ணம் அவனுக்கு."எண்டு யூச்சி சொன்னான்.

எடக் கடவுளே! அதுதானோ சங்கதி? `சோபியாவிலை அப்பிடி என்ன புதினம் இருக்கு?´ எரிச்சலாய் எங்களிட்டை கூபர் அய்யா கேட்டதெல்லாம் இந்தப் பொறாமைக் குணத்தாலை தானோ? பொறாமை இருந்தாலும் துரோகம் செய்யாத ஒரு  நல்ல மனிசன் அந்தாள். இப்ப செர்ரிப்பள்ளத்திலை யூச்சியின்ரை துரோகம், வஞ்சகம் எல்லாமே அனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன் தானே செய்ததாகச் சொன்ன வேலையெல்லாம் தொட்டுத்தொட்டு நான் பட்ட அனுபவங்களை நினைச்சுப் பார்க்கப் பொருந்தி வந்தது. எம்மளவு பிழை நானும் செய்து போட்டன். வெளித்  தோற்றத்தை வைச்சு என்னமாதிரி மனிசரைப் பிழையாய்க் கணக்குப் போட்டநான் . ஐயோ பாவம்! கூபர் அய்யா! இரக்கப்பட்டு , இறைச்சி வத்தல் தந்து, பாதுகாப்புக்குப் பின்னாலை வந்து, ஓநாயைக் கொலை செய்து, என்ரை உசிரையும் காத்த மனிசனுக்கு " மெத்தப் பெரிய உபகாரம்" எண்டு ஒரு ஒற்றைச்சொல்லு நன்றி கூடச் சொல்லாமல், நான் போய், என்னைக் கொல்ல  வந்தவர் எண்டு குற்றம் சாட்டினால்; ஒரு மனிசர் கோவப்படாமல் பின்னையென்ன கொஞ்சவே போகினம்? 

"கூபர் அய்யா ! நான் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கோ!" 
எண்டு இன்னொருதரம் நான் அவரைப் பார்க்கிற நேரம் என்ரை பிழையெல்லாம் பொறுக்கும்படி கேட்க வேணும்.

யூச்சி தனக்குள்ளை திறுத்தி பட்டாலும், குறிசுட்ட கொதிவலி  தாங்கேலாமல் இடைக்கிடை "ஆய்!ஊய்!" எண்டு அனுங்கினான். ஒவ்வரு தரமும் இப்பிடி அவன் அனுங்கிற நேரம்,

"அந்த உணர்வு இருக்க வேணும்! தெங்கில் நயினாரின்ரை ஆள் எண்ட உணர்வு எப்பவும் இருக்க வேணும்." எண்டு கட்டார் எண்டவன் ஏதோ மந்திரம் போலை ஓதினான். 

அந்தக் கத்துலாச் சின்னம் எப்பிடி இருக்குமெண்டு பார்க்க அனக்கு விருப்பந்தான். ஆனால் அது எம்மளவு பயங்கர உருவமாய்க் கிடக்கோ? அதைக் கண்கொண்டு பார்க்கத் தான் வேணுமோ? பேசாமல் விடுவம். 


யூச்சி இன்னுந்தான் இன்னின்னதைத் தான் செய்தது, இனிமேலும் இன்னின்னதைச் செய்யப் போறது எண்டு அளந்து கட்டிக் கொண்டிருந்தான். திடீரெண்டு சொன்னான்,

"சிங்கநெஞ்சனுக்கு ஒரு தம்பிக்காறன் இருக்கிறான். அவனிலை  அண்ணன்காறன் இந்த நஞ்சியாலாவிலை மற்ற எல்லாத்தையும் விட சரியான பாசம் வைச்சிருக்கிறான்." எண்டு. அப்ப நான் சத்தங் காட்டாமல் அண்ணரை நினைச்சு ஏங்கி அழுதன்.
"அந்தச் சின்னப்பொடியனை வைச்சு சோபியாவை வலு சுகமாய் மடக்கிப் போடலாம்."
"சரியான மோடனடா நீ. உதை எப்பவோ செய்திருக்கலாமே?"எண்டு கட்டார் சீறினான்.
"தம்பிக்காறன் ஒருத்தன் இருக்கிறான் எண்டால் அவனை பிடிச்சு வைச்சுக் கொண்டு எவ்வளவு சுகமாய் அந்தச் சிங்கநெஞ்சனை அவன் ஒளிச்சிருக்கிற இடத்தை விட்டு வெளியாலை வர வைச்சிருக்கலாம். தன்ரை பொந்துக்குள்ளாலை இருந்து வெளியாலை அவன் வாறபோற நேரங்களிலை எப்பிடியும் தம்பியாரைப் பிடிச்சு வைச்சிருக்கிறம் எண்டு அறிவான் தானே? "
"தம்பிக்காறன் பிடிபட்டிட்டான் எண்டு கண்டால் தன்பாட்டிலை வெளியாலை வருவான்தானே? என்ரை தம்பியை விட்டிட்டு என்னைப் பிடிச்சு வைச்சிரு எண்டு கட்டாயம் சொல்லிக் கொண்டு வருவானெல்லோ? உண்மையிலை தம்பியிலை அன்பு பாசம் எண்டால் எந்தக் கயிட்டத்திலை இருந்தும் அவனைக் காப்பாற்ற வருவான் தானே? அவனிலை ஒரு துரும்பும் கூட விழ விடமாட்டான் எல்லே?" எண்டு வெட்டார் சொன்னான். 

இப்ப என்னாலை அழேலாத அளவுக்குப் பயமாய்ப் போச்சுது. யூச்சியின்ரை கையிலை ஆப்பிட்டால் நம்மை சுறுட்டித் தன்ரை கமக்கட்டுக்குள்ளை இடுக்கிப் போடுவான். ஆத்தே மலை மாதிரி எல்லோ அவன்ரை பெரிய சதிரம்? 

"நான் வீட்டை போன உடனை பார்க்கிற முதல் காரியம் அதுதான். அந்தக் கார்ல் பொடியனை தந்திரமாய் ஏமாற்றிக் கடத்திறது ஒண்டும் பெரிய காரியமில்லை. கொஞ்சம் விசுக்கோத்துப் பலகாரங்களைக் காட்டினால் காணும். அப்பிடியே கையோடை கார்ல்ப் பொடியனைக் காப்பாற்றப் போவம் வா எண்டு சொல்லி சோபியாவையும் தந்திரமாய் மடக்கிப் போடலாம்."எண்டு பெருமை அடிச்சான் யூச்சி.

"சோபியாவை உன்னாலை பேய்க்காட்டேலுமே? அவள் உன்னைவிட மூளைசாலி எல்லோ?அவளை உன்னாலை மடக்கேலும் எண்டு நம்பிறியே?" எண்டு சீண்டினான் கட்டார்.

"ஓ! அதொரு சின்னக் காரியம். அவளுக்கு ஆர் உந்த நடப்புகளின்ரை பின்னணியிலை இருக்கிறது எண்டது விளங்கவே விளங்காது. என்னை அவள் முற்றுமுழுதாய் நம்பிறாள்." எண்டு யூச்சி கெக்கட்டம் விட்டுச்  சிரிச்சான்.  
" வலு சுறுக்காய் உங்கடை கையிலை சோபியாவையும், சின்னச் சிங்கநெஞ்சனையும் ஒப்படைப்பன். தெங்கில் நயினார் தன்ரை படையளோடை செர்ரிப்பள்ளத்துக்குள்ளை  வெற்றியோடை நுழையேக்குள்ளை எனக்கு எத்தினை வெள்ளைக்குதிரை பரிசாய் தருவார்?" பேராசைப் பட்டுக் கேட்டான்.

" சோபியாவைப் பிடிச்சால் பதினைஞ்சு வெள்ளைக்குதிரை எண்டு பேச்சு. மற்றும்படிக்கு நீ வேலை கொண்டோடிற திறமையிலை தங்கி இருக்கு இன்னும் மேலதிகமாய் எத்தினை வெள்ளைக்குதிரை உனக்குத் தரலாம் எண்டது." எண்டு வெட்டார் ஆளுக்கு ஆசை காட்டினான்.
"அதையும் ஒருக்கால் பார்ப்பம். யூச்சிப் பூச்சி! நீர் வீட்டை போய் கார்ல்ப் பொடியனை  ஏமாற்றி மடக்கப் போறீரோ? கார்ல்ப் பொடியன் தான் குதிரைக்காறன்  வளவிலை இல்லையே! என்ன செய்யப் போறீர்?" இப்பிடி நினைக்க, இம்மளவு கயிட்ட துன்பத்திலையும் மனசிலை புளுகம் கிளம்பிச்சுது. நான் அங்கினை இல்லையெண்டு கண்டு பிடிக்கிற நேரம் யூச்சிப் பூச்சி ஏமாந்து வெக்கிப் போடுவார். அப்ப பதினைஞ்சு வெள்ளைக்குதிரைக்கு மாறாய் பதினைஞ்சு குதிரைச் சவுக்கடி கூடக் கிடைக்கலாம்.

யூச்சி இன்னும் அலட்டி முடியேல்லை.

"சின்னக் கார்ல் சிங்கநெஞ்சன் ஆள் பறவாயில்லை. ஆனால் சிங்கநெஞ்சன் எண்ட பேர் தம்பிப்பிள்ளையாருக்குப் பொருத்தமே இல்லை. தொட்டதுக்கெல்லாம் வெருண்டு  பயப்பிடிற சென்மத்தை வேறை எங்கினையும் பார்க்கேலாது. சிங்கநெஞ்சன் எண்டில்லாமல் முயல்நெஞ்சன் எண்ட பேர்தான் ஆளுக்கு அமைச்சலாய் இருக்கும்."

உதைக் கேட்க அனக்கு பொல்லாத வெக்கமுந் துக்கமுமாய்த் தான் கிடக்குது. எண்டாலும் அது அனக்குத் தெரிஞ்ச உண்மைதானே? என்னாலை எந்தக்காலத்திலையும் ஒரு மனத்துணிவுள்ள ஒரு மனிசப் பிறவியாய் மாறேலாது. இன்னும் எத்தினை சென்மம் வரை இப்பிடி ஒரு பயந்தான் பீச்சியாய் இருக்கப் போறனோ? அண்ணருக்கு சிங்கநெஞ்சன் எண்ட பேர் பொருந்தின மாதிரி அனக்கு பொருந்தி வராது. அதைப் போய் இந்த யூச்சி எண்டவனும் சொல்லிப் பகிடி பண்ணிற அளவுக்குக்  கேவலமாய்ப் போய்விட்டனே! நான் கட்டாயம் நிச்சயமாய் துணிவை மனத்திலை வளர்க்க வேணும். ஆனால் நான் இப்ப இருக்கிற பயக்கெடுதியிலை எப்பிடி துணிவைக் கைவசப் படுத்த எண்டு தெரியேல்லை. 


ஒருமாதிரி யூச்சியின்ரை அலட்டல் முடிஞ்சிது. அவிழ்த்து விடிறதுக்கும் வேறை கதை ஒண்டுமில்லாமல் போய்விட்டுதாக்கும். 

" சரி, இனி நானும் நடையைக் கட்ட வேண்டியதுதான். ஊருக்குள்ளை ஆரும் நித்திரையாலை எழும்ப முன்னம் வெள்ளாப்போடை வீட்டுக்குப் போய்ச் சேர வேணும்." எண்டு குண்டி மண்ணைத் தட்டிக் கொண்டு எழும்பினான்.
"அந்தச் சின்னப்பொடியனை வைச்சு சோபியாவை மடக்கிறதை  முதல்காரியமாய்ப் பார்."எண்டு கட்டாரும்,வெட்டாரும் படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சான்கள்.
"என்னை நீங்கள் நம்பலாம். ஆனால் ஒண்டு அந்தச் சின்னப் பொடியனை பிடிச்சுத் தாற நேரம் அவனை ஒண்டும் வதைச்சுப் போடாதையுங்கோ! என்னவோ அவனையிட்டுச் சொல்லத் தெரியாத ஒரு சின்னப் பயம்."

ஓ! அப்பிடியுமே? மெத்தப் பெரிய உபகாரம்! உந்தப் பயமிருக்கிறதை நானும் சாதுவாய்க் கவனிச்சிருக்கிறன் தான்; எண்டு எனக்குள்ளை சொன்னன். 

"காட்டுறோசாப் பள்ளத்துக்கு வியளம் கொண்டு வாறநேரம் உள்ளை நுழையிறதுக்கு உரிய  குறியீட்டுச்சொல்லு ஞாவகமோ? இல்லை எண்டால் உசிரோடை உள்ளை பூரமாட்டாய்" எண்டு வெட்டார் கேட்டான்.
"சகல அதிகாரங்களும் வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே!" எண்டு மறுமொழி சொன்னான் யூச்சி. 
ஓகோ! உதுதானோ உங்கடை குறியீட்டுச்சொல்லு? இப்ப அனக்கும் அது தெரியும்! 

யூச்சி குதிரையிலை சேணம் கட்டி ஏறினான். வெளிக்கிட ஆயித்தம்,

"யூச்சி! செர்ரிப்பள்ளத்து நயினார்!"எண்டான்.
"எல்லாம் வெண்ட பிறகு என்னைத்தான் செர்ரிப்பள்ளத்துக்கு நயினார் ஆக்கிறதெண்டு  தெங்கில் நயினார் வாக்குத் தந்தவர், மறந்திட மாட்டாரெல்லே?"
"தெங்கில் நயினார் எதையும் மறக்க மாட்டார்." எண்டு கட்டார்  சொன்னான். யூச்சி குதிரையிலை ஏறிப் போய்விட்டான். வந்த வழியாலையே திரும்பிப் போனான். அவன் போறதை பார்த்தபடி கட்டாரும், வெட்டாரும் இருந்தான்கள். 
"உங்கை போறவர் இருக்கிறாரே!, எக்கணம் செர்ரிப்பள்ளம் தெங்கில் நயினாரின்ரை கைவசம் வந்தவுடனை உவரைக் கத்துலாவுக்கு  பிடிச்சுக் குடுக்க வேண்டியதுதான்." எண்டு வெட்டார் சொன்னவன்.

அவன் சொன்ன பாணியைப் பார்த்தால்; 
"ஐயோ பாவம் யூச்சி! கத்துலாவின்ரை கையிலை என்ன வதை பட்டுச் சாகப் போறானோ" எண்டு ஒரு பச்சைத் துரோகி எண்டாலும் யூச்சியை நினைக்கக் கறுமமாய் இருந்துது. கத்துலா எண்டது மனிசரைத் தின்கிற ஒரு பயங்கரமான சென்மமாய் இருக்குமோ?

வெளியை பாசறைத்தீயும் அணைஞ்சு போச்சுது. கட்டாரும், வெட்டாரும் எப்படா கிளம்புவான்கள் எண்டு நானும் காத்துக்கொண்டு இருந்தன். அவன்கள் என்ரை கண்ணை விட்டு மறைய வேணும் எண்டு ஏங்கினதிலை நெஞ்சு நோக வெளிக்கிட்டது. பொறியிலை மாட்டின எலி எப்படித் தப்பலாம் எண்டு பரிதவிச்ச மாதிரி நானும் தவிச்சன். அவன்கள்  குகைக்குள்ளை வந்து குதிரையளைப் பிடிக்க வருமுன்னம் அதுகளை ஏதாவது ஒரு வழியாலை வெளியிலை போக்காட்டினால்; தப்பிறதுக்கு  சந்தர்ப்பம் இருக்குது எண்டு நினைச்சன். அப்பிடி நடந்திச்சுது எண்டால்; கட்டாரும், வெட்டாரும்  யோனத்தான் சிங்கநெஞ்சனின்ரை தம்பிக்காறனை எம்மளவு சுகமாய்ப் பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் தங்களுக்கு இருந்தது எண்டதை அறியாமல் போவான்கள் .


ஆனால் கட்டார் சொன்னதைக் கேட்டன்,

"வா. கொஞ்சத்துக்குக் குகையுக்குள்ளை போய் நித்திரையடிப்பம்."எண்டு.
"சரி என்ரை பாடு கதை கந்தல் தான். எல்லாம் ஒண்டுதான் உவன்களிட்டை இருந்து தப்பிற வழியை யோசிச்சு, பதகளிச்சு நெஞ்சு நோகுது. மனசும்,உடம்பும் களைச்சுப் போச்சுது. பேசாமல் பறையாமல் பிடிபட வேண்டியது தான். என்னவோ நடக்கிறதை கண்டுகொள்ள வேண்டியதுதான்." எண்டு மனசுக்குள்ளை நினைவு ஓடிச்சிது.
"சீ ! ஏன் இப்ப போய் நித்திரையடிக்க வேணும்? இந்தா இன்னும் கொஞ்சத்திலை விடியப் போது. எனக்கு உந்த மலையைப் பார்த்துப் பார்த்துச் சீ எண்டு போச்சு. வா பேசாமல் காட்டுறோசாப் பள்ளத்துக்குப் போய்ச் சேருவம்." எண்டு சொன்னான் வெட்டார். கட்டாரும்,
" சரி உன்ரை விருப்பம். போய்க் குதிரையளை வெளியாலை கொண்டு வா." எண்டு வெட்டாரை ஏவினான்.

சிலசில நேரங்களிலை உண்மையிலையே ஒரு பெரிய ஆபத்தைச் சந்திக்கிற சந்தர்ப்பங்களிலை நம்மை அறியாமலே நம்மைப் பாதுகாக்கிற வழியைப் பார்ப்பம். நான் ஒரே பாய்ச்சலிலை குகையின்ரை கடும் இருட்டான பகுதிக்குப் போய் நிலத்தோடை நிலமாய் அசுகை ஒண்டும் காட்டாமல் படுத்திட்டன். ஒரு சின்னப் பிராணி தன்னைப் பிடிக்கவாற பெரிய முறுகத்துக்கு ஒளிச்சுப் பதுங்கின மாதிரி. வெட்டார் குகை வாசலுக்குள்ளை வந்ததைக் கண்டநான். மறுநிமிசம் அந்த மையிருட்டுக்கை எங்கினை நிற்கிறான் எண்டது தெரியேல்லை. காலடிச்சத்தம் மட்டும் கேட்டிது. அதே போதும் மனிசர் திடுக்காட்டத்திலை சாகிறதுக்கு. அவன் என்னைக் காணேலாது போனாலும் எக்கணம் என்ரை நெஞ்சு அடிக்கிற சத்தம் கேட்டிடுமோ எண்டு பயந்தநான். அந்த மாதிரி என்ரை நெஞ்சு தாளம் போட்டது.


அவன் வந்து குதிரையளைப் பிடிச்சிருக்க வேணும். அதுகள் கனைச்சதுகள். வெள்ளியாரும் தான். ஒரு ஆயிரம் குதிரையளோடை கூடி நிண்டாலும் வெள்ளியாரின்ரை கனைப்புச் சத்தம் அனக்குப் புறிம்பாய்த்  தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வெட்டாரின்ரை மோட்டு மூளையிலை மூண்டாவதாய் ஒரு குதிரை நிற்கிற சங்கதி தட்டுப்படேல்லை. குகை வாசலுக்குக் கிட்டவாய் நிண்ட ரெண்டு குதிரையளையும் கூட்டிப் போனான். நல்லகாலத்துக்குத் தப்பித் தவறித் தன்னும் வெள்ளியாரைத் தொடேல்லை. 


நானும் வெள்ளியாரும் தனிச்சுப் போன மறு நிமிசம் பாய்ஞ்சு போய் வெள்ளியாரின்ரை நாடியைத் தடவினன். 

"நல்ல பிள்ளை! வெள்ளியார்! மூச்சுக் காட்டாமல் இரு." எண்டு என்ரை மனசுக்குள்ளை கெஞ்சிக் கேட்டன். எக்கணம் வெள்ளியார் ஒருதரம் என்னைக் கண்ட திறுத்தியிலை கனைக்க,  அது வெளியிலை நிற்கிற கொலைகாறப் படைக்குக் கேட்டிச்சுதெண்டால், எல்லாமே பிழைச்சுப் போடுமெல்லோ? வெளியாலை மற்றக் குதிரையள் ரெண்டும் கனைச்சுப் "போட்டுவாறம்" எண்டு வெள்ளியாருக்குச் சொல்லிச்சிதுகள். வெள்ளியார் புத்திசாலி. நிலைமை விளங்கி ஒண்டும் பறையாமல் இருந்தது.

கட்டாரும், வெட்டாரும் தன்தன் குதிரையளிலை ஏறினவுடனை என்ரை மனசு கொண்ட நிம்மதியை வாயாலை சொல்லேலாது. அப்பாடா உந்த சிலந்தி வலையிலையிருந்து ஒரு பாட்டிலை இனித் தப்பலாம் எண்டு நம்பினநான். அப்ப வெளியாலை குதிரையிலை ஏறின வெட்டார் ,

"என்ரை தீக்கடைக் கல்லை எங்கினையோ விழுத்திப் போட்டன். கொஞ்சம் பொறு தேடியெடுத்து வாறன்." எண்டு குதிரையை விட்டு இறங்கினான். பாசறைத்தீயைச் சுற்றிச் சுற்றித் தேடினான்.
"இங்கை காணேல்லை. குகையுக்குள்ளை ஒருக்கால் தேடிப் பார்ப்பம்."எண்டு சொல்லிக்கொண்டு குகைக்குள்ளை வந்தான். அனக்கெண்டால் அஞ்சும் கெட்டு, அறிவும் கெட்டுப் போச்சுது.

என்னைச் சுற்றின சிலந்திவலை இறுகி தேகத்தை முறுக்கிப் பிழிஞ்ச மாதிரிக் கிடந்தது. அந்த குறுக்காலை போற தீக்கடை கல்லை தேடி உள்ளை வந்த வெட்டார் நேரை போய் வெள்ளியாரின்ரை காலிலை தடக்குப் பட்டான். பொய் சொல்லிறது கூடாது எண்டு அனக்குத் தெரியுந்தான். எண்டாலும் உசிருக்குப் பாதிப்பு வரேக்குள்ளை பொய் சொல்லக்கூடாது எண்ட வாக்கியம் உதவிக்கு வராது. ஆபத்துக்குப் பாவமில்லை. அதோடை அந்த அறுவான் வெட்டாருக்கு பெரிய உலக்கைக்குத்தி மாதிரி கையும்,காலும்.


முன்னம் ஒருக்காலும் என்னை இப்பிடி முறுக்கி ஆரும் பிடிச்சதில்லை.

நொந்த நோவிலை அனக்குப் பயத்தை விடக் கோவம் கோவமாய்த் தான் வந்தது. அனக்கே என்னை நம்பேலாமல் கிடந்தது. உவன்களுக்கு உள்ளது ஒண்டும் உரைச்சிடப் படாது. நல்லாப் பொய் புழுகு அவிழ்த்து விட வேண்டியதுதான்.
"எம்மளவு நேரமாய் ஒளிச்சிருந்து எங்களை வேவு பார்த்தநீ?" எண்டு சீறிக்கொண்டு குகைக்கு வெளியாலை தள்ளிவிட்டான். 
"இரவு இஞ்சை தான் நித்திரை கொண்டனான்." எண்டன். வெளியிலை வந்தவுடனை காலைவெய்யில் கண்ணைக்கூச வைச்சது. அப்பத்தான் நித்திரை குழம்பி எழும்பினவன் மாதிரிக் கண்ணைப் புளிந்திப் புளிந்திப் பார்த்தன். 

"ஓகோ! நித்திரையாமோ?" நக்கலடிச்சான் வெட்டார். 

"நாங்கள் இரா முழுக்க பாடினதும் கதைச்சதும் ஒண்டுமே உனக்குக் கேட்கேல்லை எண்டு சொல்லுறியோ? பொய் சொல்லாதை!" எண்டு என்னை உறுக்கினான். என்னை மாட்டிற மாதிரித் தான் ஒரு கேள்வி கேட்டுவிட்டன் எண்டு அவனுக்கு ஒரு நினைப்பு. உவனுக்கு மேலாலை நான் அவிழ்த்து விடவேணும்.
"நித்திரையிலை கனாவிலை ஆரோ பாடின மாதிரித்தான் கிடந்திச்சுது." அவனை நம்ப வைக்க தெண்டிச்சன் . 

அப்ப கட்டாரும், வெட்டாரும் ஆளையாள் பார்த்தான்கள். நான் நித்திரையிலை எதையும் கேட்கேல்லை எண்டு நம்பினான்கள். எண்டாலும் அதாலை பெரிசாய் உதவியில்லாமல் போச்சுது.

" உனக்குத் தெரியுமோ இந்த வழியிலை நடமாடிற ஆளுக்கு மரணதண்டனை எண்டு?" எண்டு வெட்டார் கேட்டான். நான் ஒண்டுமே தெரியாத மொக்கன் மாதிரி, மரணதண்டனை பற்றியோ, வேறை என்னத்தையும்  பற்றியோ அறியாத மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு,
"நான் நிலாவெளிச்சத்தை இரசிக்க எண்டு தான் வந்தநான்." எண்டு அனுங்கினநான். 
"அதுக்கு உன்ரை உசிரைப் பணயம் வைச்சு வந்தநீயோ குள்ளநரி?" எண்டு வெட்டார் சொல்லிவிட்டு,
"எங்கை நீ இருக்கிறநீ? காட்டுறோசாப் பள்ளத்திலையோ? அல்லாட்டில் செர்ரிப்பள்ளத்திலையோ?" எண்டு கேட்டான்.

"காட்டுறோசாப் பள்ளத்திலை" எண்டு சொன்னநான். ஏனெண்டால் செர்ரிப்பள்ளம் எண்டு சொன்னால், சிலநேரம் யோனத்தானின்ரை தம்பி கார்ல் எண்டு என்னை அடையாளம் பிடிக்கக் கூடும் எல்லோ?

நான் ஆரெண்டு இவன்கள் அறியிறதைக் காட்டிலும் நான் செத்துப் போகலாம்.
"கொப்புகோத்தையின்ரை பேரென்ன?"எண்டு அதட்டினான்.
"நான் பெத்தய்யாவோடை இருக்கிறநான்."எண்டன்.
"பெத்தய்யாவுக்கு என்ன பேர்?"
"பெத்தய்யா தான்! நான் அவரைப் பெத்தய்யா எண்டுதான் சொல்லிறநான்" எண்டு ஒரு பேய்க்கொத்து போலை மறுமொழி சொன்னநான். 
"காட்டுறோசாப் பள்ளத்திலை எங்கினை இருக்கிறான் உன்ரை பெத்தய்யா?"
"ஒரு ...சின்ன...வெள்ளை நிறமடிச்ச...வீட்டிலை." செர்ரிப்பள்ளத்திலை இருக்கிற மாதிரி காட்டுறோசாப் பள்ளத்திலையும் வெள்ளை நிறமடிச்ச வீடுகள் இருக்குந்தானே?

"அந்தப் பெத்தய்யாவையும், வெள்ளை வீட்டையும் எங்களுக்கு நீ காட்டவேணும். ஏறு உன்ரை குதிரையிலை" எண்டு என்னை வெட்டார் ஏவினான். அவரவர் குதிரையளிலை ஏறி மூண்டு பேரும் போனம். சரி கணக்காய் நஞ்சியாலாவின்ரை மலையளுக்குப் பின்னாலை சூரியனும் கிளம்பினது. வானம் நெருப்புப் பிடிச்சது போலை சிவந்து கிடந்தது. இப்பிடி ஒரு வடிவான, தாக்கமான, பயமுறுத்திற மாதிரியான காலைப்பொழுதை நான் கண்டு அனுபவிச்சதில்லை. அனக்கு முன்னும் பின்னுமாய் இந்த ரெண்டு எளியபடையும் இல்லையெண்டால் அந்த காலைநேரக்காட்சியை கண்டு நான் ஆகா!  ஓகோ! எண்டு கத்தியிருப்பன். 


பாதை முன்னையைப் போலவே இடக்கு முடக்காய் இருந்தது. ஆனால் கொஞ்சத்தாலை ஒரு சீராய் இறக்கத்திலை போச்சுது. காட்டுறோசாப்பள்ளம் நெருங்கி விட்டிது எண்டது தெரிஞ்சது.. எண்டாலும் என்ரை கண்ணுக்கு முன்னாலை விரிஞ்ச காட்சியை முதலிலை நம்ப முடியேல்லை. செர்ரிப்பள்ளத்தைப் போலை காட்டுறோசாப்பள்ளமும் நல்ல வடிவாய்க் , காலைமை நேரத்து வெய்யிலிலை சின்னச்சின்ன வீடு வளவுகளும் காட்டுறோசாப்பூ  பூத்த பச்சை வெளியளுமாக தென்பட்டது. மேலை இருந்து பார்க்க இளஞ்சிவப்பு நுரையும், பச்சை அலையும் போலை ..... காட்டுறோசாப்பள்ளம் எண்ட பேர் நல்ல பொருத்தமாய்த் தான் பார்க்க இருந்திச்சுது.


ஆனால் இந்த ஊருக்கு கட்டாரும், வெட்டாரும்  இல்லாமல் நான் வந்திருக்கவே முடியாது. ஏனெண்டால் காட்டுறோசாப்பள்ளத்தைச் சுற்றவர உசரமாய் கோட்டை மதில் இருந்திச்சுது. தெங்கில் எண்டவன் அங்கத்தையில் சனத்தை போட்டு வருத்தி உதைக் கட்டுவிச்சவன். ஏனெண்டால் அந்தச் சனமெல்லாம் தனக்குக் காலகாலத்துக்கும் அடிமைச் சேவகம் செய்ய வேணும் எண்டு பிடிச்சு வைச்சிருக்கிறான். உதைப் பற்றி அண்ணர் அனக்குச் சொல்லி வைச்சவர் தானே?


நான் எப்பிடி உந்தக் கட்டுக்காவலை மீறி வெளியாலை வந்தநான் எண்டு இந்த ரெண்டு பேயன்களும் இதுவரை கேட்க வெளிக்கிடேல்லை. இனியும் ஒருக்காலும் கேட்கக் கூடாது எண்டு கடவுளை வேண்டிக் கேட்டன். அப்பிடிக் கேட்டான்கள் எண்டால் என்னத்தை எண்டு மறுமொழி சொல்ல? அதுகும் குதிரையிலை சவாரி விட்டபடி கோட்டைக்காவலுக்குத் தப்பி எப்படி ஒருத்தர் வெளியாலை போக முடியும்?இரும்புத் தலைக்கவசம் போட்ட தெங்கிலின்ரை படையாக்கள் அந்தக் கோட்டை மதிலிலை உலாவினபடி காவலுக்கு நிண்டான்கள். அதுமாதிரியே கோட்டைக் கதவுகளுக்கும் பெலத்த காவல் இருந்தது. செர்ரிப்பள்ளத்திலை இருந்து கிளம்பின பாதை சரி கணக்காய் அந்த வாசலிலை வந்து முடிஞ்சது.


முந்தி இந்த மதிலுமில்லை, கதவுமில்லை, கட்டுப்பாடுமில்லை. சனங்கள் தன்னிட்டவாரம் எங்கினையும் போய்வந்து கொண்டிருந்ததுகள். இப்பெண்டால் தெங்கிலின்ரை படை மட்டும் உந்தக் கட்டுக்காவல் உள்ள கோட்டைக் கதவாலை போகவர முடியும். வெட்டார் தன்ரை வாளாலை கதவைத் தட்டினான். அப்ப அந்தக் கதவிலை இருந்த ஒரு சின்னத் தட்டிக்கதவு திறந்தது. பூதம் போலை ஒரு தலை வெளியாலை எட்டிப் பார்த்தது. 

"குறியீட்டுச்சொல்லு " எண்டு கத்தினது. கட்டாரும்,வெட்டாரும் போய் அவன்ரை காதிலை அதை இரகசியமாய் ஓதினான்கள். நான் கேட்கக் கூடாது எண்டாக்கும். உது தேவையே? அனக்குந்தான் உவையின்ரை குறியீட்டுச்சொல்லு தெரியுமே? 
< சகல அதிகாரமும், வரந்தரும் தெங்கில் நயினார் ஒருவருக்கே >

தட்டிக்கதவிலை இருந்தவன் என்னைக் கண்டான்,கேட்டான்;

"அந்தா அவன்? என்ன இது? ஆரவன்?"
"அவனொரு மொக்கன். மலையிலை பிடிச்சம். ஆனால் முழு மொக்கன்  இல்லை. உம்மடை  வாசலுக்குள்ளாலை நேற்று ராத்திரி போயிருக்கிறான். தலைமைக்காவலர் அதுக்கென்ன சொல்லுறாராம்? உம்மடை ஆக்களை ராத்திரி என்ன மண்ணாங்கட்டிக் காவல் செய்தவை எண்டு போய்க் கேளும்." எண்டு சீண்டினான் வெட்டார். கதவடியிலை இருந்தவனுக்குக் கொதி கிளம்பினது. கதவு திறந்தது. தலைமைக்காவலன் திட்டிக்கொட்டி வசை பாடினான். கட்டாரையும், வெட்டாரையும் உள்ளை விடுவானாம், ஆனால் என்னை விடமாட்டானாம். 
"கத்துலாக்குகையுக்குள்ளை உவனை விட்டிட்டு வாங்கோ. அதுதான் உவனுக்கு ஏற்ற இடம்" எண்டான். ஆனால் இவன்கள் ரெண்டுபேரும் நாண்டு கொண்டு நிண்டு என்னையும் ஒருமாதிரி உள்ளை கூட்டி வந்தான்கள். ஏனெண்டால் நான் அவன்களுக்கு உண்மையைத்தான் சொன்னநான் எண்டு ஒம்பிக்க வேணுமாம். நான் மெய்யோ பொய்யோ பறையிறன் எண்டு கண்டு பிடிக்கிறது அவன்கள் தெங்கிலுக்குச் செய்ய வேண்டிய கடமையாம், ரெண்டுபேரும் சொல்லிச்சினம்.

வெட்டாரும், கட்டாரும் முன்னுக்குத் தங்கடை குதிரையளிலை போகப் பின்னுக்கு வெள்ளியாரிலை நானும் வால்பிடிச்சபடி, வேறென்னத்தைச் செய்யவாம்? அப்ப நான், ஒருக்கால் அண்ணரைக் கண்டால் என்னமாதிரிக் கட்டாரும் வெட்டாரும் நான் காட்டுறோசாப் பள்ளத்துக்குள்ளை  வாறதுக்கு உதவி செய்தவன்கள் எண்டதைச் சொல்லிச் சிரிக்க வேணும் எண்டு நினைச்சன். அதைக் கேட்டால் கட்டாயம் அண்ணராலை சிரிப்படக்கேலாது. நினைக்க சிரிப்பு வந்தாலும் நான் சாதுவாய்த் தன்னும் சிரிக்காமல் போனநான். எக்கணம் இந்தநேரம் போய் பல்லைக்காட்டினால் என்ன நடக்கும்? இப்பநான் முதல் காரியமாய் ஒரு வெள்ளை வீட்டையும் அங்கை இருக்கிற ஒரு பெத்தய்யாவையும் கண்டுபிடிக்க வேணுமெல்லோ? இல்லையெண்டால் கத்துலாக் குகைக்குத்தான் போகவேணும்.


"நீ முன்னாலை போய் பாதைகாட்டு. நாங்கள் பின்னுக்கு வாறம். பெத்தய்யாக் கிழவனோடை  கட்டாயம் ஒரு கதை கதைக்க வேணும்." எண்டு வெட்டார் சொன்னான். நான் வெள்ளியாரைத் தட்டிவிட அதுகும் கோட்டைமதிலுக்கு உள்ளாலை சுற்றியோடின ஒரு பாதையிலை நடையைக் கட்டினது. செர்ரிப்பள்ளத்தைப் போலை இங்கினையும் கனக்க வெள்ளைநிற வீடுகள் கிடக்குது. எதையுமே சுட்டிக் காட்ட அனக்குத் தைரியமில்லை. ஏனெண்டால் அங்கினை ஆர் குடியிருக்கிறதெண்டு அனக்கெப்பிடித் தெரியுமாம்? நானும் சும்மா ஒரு வீட்டைக்காட்டி,

"இஞ்சை தான் பெத்தய்யா இருக்கிறார்" எண்டு சொல்லப்போக; அவன்களும் உள்ளைபோய் ஆராய்ஞ்சால் ஒரு அப்புக்கிழவரையும் காணக் கிடையாது. தப்பித்தவறி ஒரு அப்புக்கிழவரும் அங்கை இருந்தாலும், முன்னைபின்னை பார்த்திராத அனக்கு தானே தான் பெத்தய்யா எண்டு சொல்ல விரும்புவரே?

எக்கணம் நான் எக்கச்சக்கமாய்த் தான் உவன்களின்ரை கிடுக்கிப் பிடியிலை ஆப்பிட்டிட்டன்.  பயத்திலை அனக்கு  வேர்த்து ஒழுகிச்சுது. 
பெத்தய்யா பற்றிப் புழுகித் தள்ளுறது அப்ப வலு சுகமாய் இருந்தது. இப்ப பார்த்தால் அதொண்டும் புத்திசாலித் தனமான காரியமாய்ப் படேல்லை. வீடுகளுக்கு வெளியாலை சனங்கள் ஏதாவது வேலையாய் இருந்திச்சுதுகள். ஆனால் ஆரும் பெத்தய்யா எண்டு சொல்லத்தக்க சாங்கமாயில்லை. என்ரை நிலைமை வரவரப் பரிதாபமானதாகிப்  போனது. அங்கத்தையில் சனத்தைப் பார்க்கவும் பயமாய்க் கிடந்தது. ஆக்கள் வெளிறு வெளிறெண்டு வெளிறி, வயக்கெட்டு, நராங்கி, ஒரு அக்களிப்பில்லாமல் இருந்திச்சுதுகள். இங்கத்தையில் சனங்களோடை ஒப்பிட்டுப் பார்த்தால் செர்ரிப்பள்ளத்துச்சனம் நல்லாய்ப் போந்து பொலிஞ்ச, கலகலப்பான சனம். ஆனால் ஒரு கதை, எங்களுக்கு செர்ரிப்பள்ளத்திலை தெங்கில் எண்ட பரதேசியின்ரை நெருக்குவாரமும் இல்லை, ஆரும் எங்களை அடிமை கொள்ளவுமில்லை, அவரவரின்ரை சீவியத்தைக் கெடுக்கவுமில்லை. 

நான் வெள்ளியாரிலை சவாரி போறன் போறன் போய்க்கொண்டே இருந்தன். கட்டார், வெட்டாரின்ரை பொறுமைக்கும் எல்லை இருக்குந்தானே? நானும் ஏதோ உலகத்தின்ரை எல்லைவரை போக வேண்டி இருக்குமாப் போலை போய்க் கொண்டிருந்தன். 

"இன்னும் கனதூரம் இருக்கோ?" எண்டு வெட்டார் உறுக்கினான். 
"இல்லை கொஞ்சத்தூரந்தான்."எண்டு சொன்னன். ஆனால் நான் என்னதைச் சொன்னநான், என்னத்தைச் செய்தநான் எண்ட எந்த நினைப்பும் அனக்கு இல்லை. அம்மளவுக்குப் பயந்து போய் ஏதோ முறுக்கிவிட்ட ஒரு பாவைப்பிள்ளை போலை இயங்கினன். கத்துலாக் குகைதான் என்ரை நினைப்பு முழுக்க. 

ஆனால் ஒரு அதிசயம் நடந்திச்சிது! நம்பினால் நம்புங்கோ! ஒரு சின்ன வெள்ளை வீட்டுக்கு வெளியிலை, வீட்டுச் சிவரோடை இருந்த ஒரு வாங்கிலை ஒரு அப்புக்கிழவர் இருந்தபடி புறாக்களுக்கு தீன் குடுத்துக் கொண்டிருந்தவர். சிலநேரம் அங்கை அந்த ஒரு வெண்பனி வண்ணப்புறாவை நான் கண்டிராமல் விட்டால் துணிஞ்சு அந்தக் காரியத்தைச் செய்திருக்க மாட்டன் தான். அந்த ஒரு வெண்பனி வண்ணப்புறா அனக்கு அந்தநேரம் ஒரு விதமான துணிச்சலைத் தந்திச்சுது. 


அனக்குக் கண்ணாலை ஓராறு கண்ணீர் வழிஞ்சது. இப்பிடியான வெண்பனி வண்ணப்புறாக்களை நான் சோபியா அக்கையிட்டை தானே பார்த்தநான்? கனகாலத்துக்கு முந்தி பூமி நச்சத்திரத்திலையும் 
அனக்கு ஆறுதல் சொல்லவும் ஒரு வெண்பனி வண்ணப்புறா வந்ததெல்லே? நான் அப்ப ஒரு கீலா வேலை பார்த்தன். வெள்ளியாரை விட்டுக் குதிச்சு, ஏலுமானவரை கெதியாய் அந்த அப்புக்கிழவரிட்டை ஓடினன். அவரின்ரை கழுத்தைக் கட்டிப் பிடிச்சு,
" என்னைக் காப்பாற்றுங்கோ! நீங்கள் என்ரை பெத்தய்யா எண்டு சொல்லுங்கோ!" எண்டு கிசுகிசுத்தன்.இரும்புத் தலைக்கவசம் போட்டுக்கொண்டு என்னோடை வந்த இந்த எளியபடையைக் கண்டளவிலை என்னை அவர் எக்கணம் தள்ளி விடப் போறார் எண்டு நினைச்சன். அனக்காக ஏன் அவர் பொய் சொல்லி மாட்டுப்பட்டுக் கத்துலாக் குகையிலை போய்க் கவிழ வேணும்? ஆனால் அவர் என்னைத் தள்ளி விடேல்லை. அவரின்ரை அன்பும் ஆதரவுமான கை எந்த துன்பமும் அண்டாமல் என்னைக் காப்பாற்றத் தெண்டிச்ச மாதிரி, அவர் என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சார். 

"என்ரை குஞ்சன்!" எண்டு பெலமாய் கட்டாருக்கும், வெட்டாருக்கும்  கேட்கத் தக்கதாய் கதைச்சார்.
" எங்கினை இம்மளவு நேரமும் உலாத்திக் கொண்டு வாறாய்? வெடிவால் முளைச்சு வீட்டிலை இருக்கேலாமல் கிடக்காமோ? இப்ப என்ன குழப்படி செய்ததெண்டு , இப்பிடி அரணக்காறன்களோடை வந்தநீ?"

ஐயோ! பாவம்! என்ரை பெத்தய்யா! கட்டாரும்,வெட்டாரும் அவரைப் போட்டு திட்டி வசை பாடினான்கள். பேரப்பொடியனைக் கட்டுப்பாடாய் வைச்சு வளர்க்கத் தெரியாது, நஞ்சியாலாவின்ரை காடுமலையெல்லாம்  ஒரு காடேறி மாதிரி பொறுப்பில்லாமல் உலாத்த விட்டது, எக்கணம் பேரப்பிள்ளையே இல்லையெண்டு போடும், அது, இது எண்டெல்லாம் சொல்லி; போட்டுக் கிழி கிழியெண்டு கிழிச்சான்கள். அவங்கடை  தோத்திரப் பாடல் எல்லாம் முடிஞ்சு ஒரு பாட்டிலை தங்கடை குதிரையளிலை ஏறிப் போகத் துவங்கினான்கள். பணிய இறக்கத்திலை கறுத்தப் புள்ளியள் மாதிரி அவங்கடை தலைக்கவசங்கள்  மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தம்.


அப்ப பேந்து நான் அழப்பிடிச்சன். என்ரை பெத்தய்யாவின்ரை அணைப்பிலை கிடந்து குலுங்கிக் குலுங்கி அழுதன். முந்தின இரவு துன்பமான நீண்ட பாரமான இரவு ஒரு மாதிரி முடிஞ்சிட்டிது. என்ரை பெத்தய்யாவும் என்னைப் பேசாமல் அழ விட்டிட்டார். அவர் என்னைத் தன்ரை மடியிலை வைச்சு ஆட்டினார். மெய்மெய்யாவே அவர் என்ரை பெத்தய்யாவாய் இருக்கக் கூடாதோ எண்டு ஏக்கமாய்ப் போச்சு. அழுத இடைவெளியிலை அதைக் கேட்டும் போட்டன். 

"அதுக்கென்ன? நான் உனக்கு பெத்தய்யாவாய் இருந்திட்டுப் போறனே! ஆனால் எனக்குப் பேர் மத்தியாசு. உன்ரை பேரென்ன?" எண்டு கேட்டார். 


"கார்ல் சிங்க.." எண்டு சொல்லத் தொடங்கினநான் ஆனால் 

`சடக்´ கெண்டு நிற்பாட்டினன். ஏனெண்டால் என்ரை பெயரைச் சொல்லிக்கொண்டு காட்டுறோசாப்பள்ளத்திலை திரியிறது ஒண்டும் புத்திசாலித்தனமான காரியமில்லை.
"என்ரை பெத்தய்யா! என்ரை பேர் இரகசியமாய் இருக்கவேணும். இப்போதைக்கு என்னைச் சீனியப்பு எண்டு கூப்பிடுங்கோ அது காணும்." எண்டன். 
"சரி சீனியப்பு!" எண்டு கொஞ்சம் சிரிச்சார் பெத்தய்யா. 
"உள்ளை போய் அடுப்படியிலை இரு.நான் உன்ரை குதிரையை மாலிலை கொண்டுபோய்க் கட்டிப்போட்டு வாறன்." எண்டு சொன்னவர். நானும் உள்ளை போனன். 

ஒரு ஏழை வீட்டு அடுப்படியாய்  அது இருந்தது. ஒரு மேசை, நாலு கதிரை, ஒரு சின்ன அடுப்புமேடை. அதோடை ஒருபக்கச் சிவரோடை ஒரு பெரிய பறணை அலுமாரி! பெத்தய்யா மத்தியாசு உள்ளை வந்தார். அப்பநான் சொன்னன்,

" இப்பிடி ஒரு பெரிய பறணை அலமாரி எங்கடை வீட்டிலையும் அடுப்படிக்குள்ளை ஒரு சிவர்ப்பக்கமாய் இருக்கு. அங்கை எங்கடை செர்ர் ..."சொல்லி முடிக்காமல் நிற்பாட்டினன்.
"அங்கை உங்கடை செர்ரிப்பள்ளத்திலை!" எண்டு சொல்லி முடிச்சார் பெத்தய்யா. நான் திடுக்கிட்டுப் போய் முழிசிக் கொண்டு நிண்டன். ஐயோ! என்னையறியாமல் உளறிப் போட்டனே! 

ஆனால் பெத்தய்யா மேற்கொண்டு ஒண்டும் பறையேல்லை. யன்னலடிக்குப்  போய்க் கனநேரமாய் வெளியாலை பார்த்துக் கொண்டிருந்தார். பேந்து ஒருத்தரும் கிட்டக்கிழலைக்கும் இல்லை எண்டு கண்டு அனக்குக் கிட்ட வந்து கிசுகிசுத்தார்,

"உந்த அலமாரியிலை ஒரு தனிப் புதினம் இருக்கு சீனியப்பு! கொஞ்சம் பொறு காட்டிறன்." அவர் தன்ரை தோளை முட்டுக்குடுத்து அலமாரியை அரக்கினார். பின்னுக்குச் சிவரோடை சிவராய் அடையாளம் காணேலாத அளவுக்கு ஒரு தட்டிக்கதவு இருந்தது. பெத்தய்யா தட்டிக்கதவைத் திறந்தார். உள்ளை ஒரு சின்ன இரகசிய அறை! அந்த அறைக்குள்ளை நிலத்திலை நித்திரையாய் ஒரு உருவம்! ஆண்டவனே! பெருமானே! அது என்ரை அண்ணரெல்லோ? 
                         
                                                ( பேந்து சந்திப்பம்)

சொல்விளக்கம்:
வெப்பிசாரம்< வெவ்விசாரம் - கொடுந்துன்பம் 
தாடாத்தி< தாடாற்றி < தாடையாற்றி=தாடை+ஆற்றி= மோவாய் தடவி
                - கோவம் குறைப்பித்து, ஆறுதல் படுத்தி
திறுத்தியீனம்<திருத்தியீனம் - திருத்தியின்மை
தன்னிட்டவாரம்=தன்+இட்டம்+வாரம்= தன் +விருப்பம்+விருப்பம் - தன் விருப்பப்படி
புறியம்< பிரியம் - விருப்பம்
ராவும்போலும்< இரவும்பகலும்
பிரட்டி< புரட்டி
கடுக்கண்ட வயசு < கடிக்கண்ட வயசு = கடி+கண்ட+ வயசு =விளக்கம் அறிந்த வயசு - பதின்மவயசு
மைக்க - மற்ற
சுறுக்காய்< சுருக்காய் - விரைவாய்
வியளம் - சேதி, தகவல்
பிடிபடுதல் - அகப்படுதல், புரிந்து கொள்ளுதல், சண்டை பிடித்தல்
மன்னை - கோவம்
விண்ணன் - கெட்டிக்காரன்
இன்னின்னது =இன்ன+இன்னது - இப்படி இப்படியானது
கமக்கட்டு < கமுக்கட்டு - அக்குள்
இடுக்குதல் - கவ்வுதல், தூக்குதல்
பயந்தான் பீச்சி - பயத்தில் மலம் சலம் கழிப்பவன் , பயந்தாங்கொள்ளி
கறுமம் < கருமம் - பாவம்
அசுகை < அசைகை - அசைவு, சத்தம்
புறிம்பாய் < புறம்பாய்
மோட்டு மூளை - மூட மூளை
நாடி - மோவாய்
குறுக்காலை போற < குறுக்காலே போகின்ற - கெட்டழிந்து போகின்ற
புளிந்தி< பொளிந்து - பிளந்து
கண்ணைப் புளிந்தி < கண்ணைப் பொளிந்து - கண்ணைச் சிறுகத் திறந்து
பேச்சுவழக்கில்: மொக்கன் - மூடன்
                           பேய்க்கொத்து - பேய்க்குத் தாளம் போடுபவன்  - மூடன்
                           கொப்புகோத்தை < உங்கப்பு உங்காத்தை - உன் தந்தை தாய்
நாண்டுகொண்டு - பிடிவாதம் பிடித்து
ஒம்பித்தல் - நிரூபித்தல்
சாதுவாய் - மெதுவாய்
சாங்கம் - சாயல்
வயக்கெட்டு= வயம்+கெட்டு - வலிமை கெட்டு
நராங்கி < நரங்கி - மெலிந்து
அக்களிப்பு - மனமகிழ்ச்சி
செந்தளிப்பு < செந்தலிப்பு  - செழிப்பு
போந்து பொலிஞ்ச < பொந்தி பொலிந்த= உடல் செழித்த
பரதேசி - பிறத்தியான்
நெருக்குவாரம் < நெருக்கவாரம் - ஆக்கினை,தொந்தரவு
கீலா- விசர்
குழப்படி - குறும்பு, கலகம்
அரணம் - காவல், military
கிழித்தல் - திட்டுதல்
அரக்குதல் - மெதுவாகத் தள்ளுதல்


This entry was posted on 2:55 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: