Author: ந.குணபாலன்
•3:47 PM

                                                                           மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                       

                                                                         எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                              (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                                  (14/11-1907 --- 22/01-2002)
                                                                    ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                                             ( Ilon Wikeland)
                                                                      தமிழாக்கம் :  ந. குணபாலன்

துடிப்பு 7 : ஆரைத்தான் நம்பிறது?

மலைப்பாதையிலை அந்த நீண்ட பயணத்திலை நான் நானாக இருக்கிறது அதாவது கார்ல் சிங்கநெஞ்சனாக இருக்கிறதெண்டது எப்பிடியாய் இருக்குதெண்டு வெள்ளியாருக்குச் சொல்லிக்கொண்டே போனன். 

"அனக்கெண்டு வந்து அமைஞ்ச காலநேரங்களைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரன் வெள்ளியார்!  கொஞ்சக்காலத்துக்கு முன்னம் பூமிநச்சத்திரத்திலை அம்மாவீட்டிலை ஒண்டுக்குமே இயக்கமில்லாமல் படுத்தபடுக்கையாய் இருந்தநான். அண்ணரைப் பற்றின யோசினை அனக்கில்லையெண்டு நீ நினைக்கப்படாது. அந்தக்காலந்தொட்டு இந்தநிமிசம் வரைக்கும் அண்ணரை ஒரு நிமிசம் கூட நான் மறந்ததில்லை. ஆனாலும் எப்பிடி விளப்பமாய் சொல்லிறது எண்டு தெரியேல்லை. இந்த மாதிரி உனக்கு மேலை இருந்து சவாரிவிட்டபடி போறதும் பிடிச்சிருக்கு. இந்த மலைப்பாதையும் இனி இல்லை எண்ட நல்ல வடிவாய்க் கிடக்கு. இப்பிடியொரு  வடிவான மலைப்பாதையிலை மனசு என்னவோ நிறைஞ்ச மாதிரிக் கிடக்கு. மலைச்சிவரெல்லாம் எதிரொலிக்க கூக்காட்ட வேணும்போலை  கிடக்கு. அப்பிடி ஒரு புளுகமாய்க் கிடக்கு. கொண்ணரில்லாமல் எப்பிடி புளுகமாய் உன்னாலை இருக்க முடியுது எண்டு நீ கேட்பாய். ஆனால் அனக்கு எப்பிடி எண்டு விளப்பம் சொல்லத் தெரியேல்லை. "

மெய்தான்! நல்ல வடிவான இடம்!  அண்ணரும் என்னைப் போலைத்தான் இந்த இடம் வடிவாய்க் கிடக்கெண்டு சொல்லுவர். 

இப்பிடி உசரமான மலையள் ...... 
தெளிஞ்ச தண்ணி நிறைஞ்ச ஏரியள்......
ஆம்பல்பூ பூத்த குளங்கள் ...... 
சீறிப்பாயிற நீரூற்றுக்கள் ...... 
பாடிக் குதிக்கிற அருவியள் ........  
பசந்த காலத்துப் பூக்கள் பூமெத்தை மாதிரி விரிஞ்ச புல்லுவெளியள் ..... 
உந்த நட்டநடு மலைப்பாதையிலை.... 
நான் தான்..... 
அண்ணர்  சீனியப்பு எண்டு கூப்பிடிற கார்ல் ..... 
என்ரை குதிரையிலை இருந்தபடி..... 
பார்த்து இரசிச்சபடி போறன்! எந்த ஒரு உலகத்திலையும் இப்பிடி ஒரு செந்தளிப்பான காட்சியைக் காண முடியுமோ? அனக்கெண்டால் என்னவோ கனாவிலை மிதக்கிற மாதிரிக் கிடக்கு.

எட கறும காண்டத்தை! உந்த அனுபவமெல்லாம் கொஞ்ச நேரந்தான். அண்ணர் சொன்ன மாதிரி பாதை வரவர ஒடுங்கி ஒற்றையடிப்பாதை ஆனது.  வளைஞ்சு நெளிஞ்சு குத்தெண ஏறுது, சட்டெண்டு இறங்குது. இப்பிடியாய் இருக்கு காட்டுறோசாப் பள்ளத்துக்குப் போற பாதையின்ரை இலச்சணம். வரவர பாதை மோசமாகிக் கொண்டு போனது. எங்கினை அடுத்த முடக்கு வரும் எண்டு தெரியாமல் முடக்குகள் வளைஞ்சு வளைஞ்சு திரும்புது. குறுக்கும் மறுக்குமாய் கடும் வளைவுகளோடை,  ஒரு எப்பன் தடுமாறினால், தடக்குப்பட்டால் அதலபாதாளம் தட்டுப்படுமாய்ப்போலை  பொறிவு. பார்க்க தேகமெல்லாம் கூசுது.  என்னெண்டு இதுக்குள்ளாலை மீண்டு வெளியாலை வரப்போறன் எண்டு தெரியேல்லை.  ஆனால் வெள்ளியாருக்கெண்டால் பழக்கமான பாதை போலை! அது தன்ரை பாட்டுக்கு எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் என்னையும் முதுகிலை சுமந்தபடி போனது. 

இருட்டத் துவங்கிச்சுது. நானும் களைச்சுப் போனன், என்ரை குதிரையும் களைச்சுப் போச்சுது. ஒரு அமைதியான ஆற்றங்கரையிலை இறங்கி தாகம் தீர தண்ணி குடிச்சம். வெள்ளியாரும் மேயிறதுக்கு ஏத்த மாதிரி சின்னதாய் ஒரு  புல்லுவெளியும் இருந்திச்சுது.  அந்த இடத்திலை  இரவைக்குத் தங்குவம் எண்டு நினைச்சன்.
" சரி சீனியப்பு! எப்பிடிப் பாசறைத்தீ மூட்டிறது? எப்பிடி அந்தப் பாசறைத்தீயைச்  சுற்றியிருந்து மாயாசாலக்கதை, தேவதைக்கதையளை உருவாக்கிச் சொல்லுறது? என்னமாதிரி  இரவையிலை ஆகாசமே கூரையாய் நித்திரை கொள்ளுறது? எண்டெல்லாம் அறியிறதுக்கு உனக்கு இப்ப நல்ல சந்தர்ப்பம் வாய்ச்சுப் போச்சுது." எண்டு அனக்கு நானே பெலமாய்ச் சொன்னன். 

சுள்ளி விறகெல்லாம் பொறுக்கி ஒரு பெரிய கும்பியாய்ச் சேர்த்தன். பேந்து தீக்கடை கல்லை எடுத்து பொறி பறக்கத் தட்டித்தட்டி ஒரு பாடாய் தீமூட்டிப் போட்டன். சூரியன் தெற்கு நோக்கி திரும்பிற ஜூன் 21ந் திகதியிலை இப்பிடித்தானே பூமி நச்சத்திரத்திலை சனங்கள் பெரீசாய் தீவளர்க்கிறவை! பொறி பறக்க நல்லாய் விறகு கட்டை எரிஞ்சது. அண்ணர்  உப்பிடி பாசறைத்தீ வளர்த்து கூதல் காயிற கதையெல்லாம் முன்னம் அனக்கு கனதரம் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னமாதிரியே இப்பிடி இருந்து சாப்பிடிறதும் ஒருவகையிலை நல்ல சுகமான அனுபவமாய்த் தான் இருக்கு. அசம்பியை திறந்து கொண்டு வந்த பாணையும், தேனையும் எடுத்தன். வத்தல் இறைச்சியை அண்ணருக்கெண்டு  வைச்சிட்டன். அண்ணருக்கு வத்தல் இறைச்சி எண்டால் நல்ல விருப்பம். கூபர் தந்த இறைச்சிதான். காரியமில்லை. ஆர் குத்தினாலும் அரிசி, அரிசிதானே? 

அனக்கு நல்ல புளுகமாய் இருந்திச்சுது. ஏதோ என்ரை பாட்டிலை வாயிலை வந்ததைப் பாடினன்.          
              "என்னுடைய பாண்!  அதில் தடவினேன் தேன் பாணி!
                என்னுடைய நெருப்பு!  அதன் அருகில் எந்தன் இருப்பு!
                என்னுடைய குதிரை! அந்த அருவி கட்டுது திரை! "
                                                                                                                 ..... வேறையொண்டும் பாட வரேல்லை. கனநேரமாய் அப்பிடியே இருந்திருப்பன்.  ஆதி காலந்தொட்டு இந்த உலகங்கள் எல்லாத்திலையும் காட்டுத்தறை வழிய காலங்காலமாய் வளர்க்கப்பட்ட பாசறைத்தீ எல்லாம் எப்பவோ ஒரு பொழுது அணைஞ்சு போயிருக்கும். ஆனால் நான் வளர்க்கிற பாசறைத்தீ இந்தா இஞ்சை இப்ப எரிஞ்சபடி!

என்னைச் சுற்றவர கும்மிருட்டாய்ப் போச்சுது. மலையெல்லாம் கறுத்த உருவங்களாய் தெரிஞ்சது. வலு கெதியாய்த் தான் இருட்டி விட்டிது. என்ரை முதுகுக்குப் பின்னாலை இருட்டாய் இருக்கிறது அனக்கு சம்மதமாய் இல்லை. ஏதோ  ஆரோ பின்னாலை இருட்டுக்குள்ளாலை  பாய்ஞ்சு அமுக்க வருமாப்போலை ஒரு பயம். அனக்கு நித்திரை நித்திரையாய் வந்திச்சுது. இனிக் கொஞ்ச நேரமெண்டாலும் ஒரு கண்ணுறக்கம் கொள்ள  வேணும். வெள்ளியாருக்கும் < நல்லிரவு> சொல்லிவிட்டு, நெருப்பிலை இன்னும் விறகு அள்ளிப் போட்டுவிட்டு, கொண்டு வந்த கம்பளிப் போர்வையை எடுத்துச் சுற்றிப் போர்த்துக் கொண்டு படுத்திட்டன். 

கண்டதை எல்லாம் நினைச்சு என்னை நானே பயப்படுத்த முன்னம் நித்திரையாகி விடவேணும் எண்டு விரும்பினன். தன்னைத் தானே பயப்படுத்தக் கூடிய ஒரு சென்மம், நானறியத் தக்கதாய்  என்னை விட்டால் வேறை ஆருமில்லை. ஆய்க்கினை விழுந்த என்ரை நினைவு  ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத் துவங்கிவிட்டிது. .....அந்தக் கும்மிருட்டுக்குள்ளை ஆராவது என்னைப் பொறி வைச்சு பிடிக்கக் காத்திருக்கிறான்களோ?......தெங்கிலின்ரை  உளவாளிமார் யோனத்தானின்ரை தம்பி எண்டு சொல்லி என்னையும் தேடித் திரியிறான்களோ?....அண்ணரும் அவன்களிட்டைப் பிடிபட்டுச் செத்துக் கனநாள் ஆகியிருக்குமோ?..... ஐயோ! கந்தறுந்த நினைவுகள் வந்து என்ரை மனசைப் போட்டு அறுக்குது. இனி என்னெண்டு நித்திரை கொள்ளுறது? 

நிலாவும் மலையுச்சிக்குப் பின்னாலை இருந்து எட்டிப் பார்த்திச்சிது. வழமையாய் வாற நிலாவைப் போல அனக்குத் தெரியேல்லை. இப்பிடி ஒரு நிலாவெளிச்சம் நான் கண்டதில்லை. சொல்லப் போனால் இப்பிடி மலையுச்சியிலை நிலாவை நான் எங்கினை இதுவரை பார்த்திருக்கிறன்? எல்லாமே ஒரு வினோதமான சுற்றாடலாய் பட்டிது. எல்லாமே ஒண்டில் வெள்ளி நிறமாய், அல்லாட்டில் இருட்டு இணலுகளாய் இருக்கிற வினோத உலகமாய் இருந்திச்சிது. பார்க்கப் பார்க்க நல்ல வடிவாய்த்தான் இருந்திது. எண்டாலும் ஏதோ ஒருவிதமான துக்கம் வழியிற, பயங்கரம் நிறம்பின வடிவு மாதிரிக் கிடக்குது. நிலவு எறிச்ச இடங்கள் வெளிச்சமாய் இருந்தாலும், இருட்டு இணலுக்குள்ளை என்னென்ன ஆபத்து மறைஞ்சிருக்கோ? 

வெளியாலை என்னைச் சுற்றிவரக் கண்ணெறிஞ்சு பார்க்கப் பயமாய்க் கிடந்திச்சிது. போர்வையாலை முகத்தை மூடிக்கொண்டு படுத்தன்.  ஆனால் என்னவோ ஒரு சத்தம் எங்கையோ துலைவிலை கேட்டிச்சிது. மலையளுக்கு அங்காலை இருந்து ஒரு ஊளைச் சத்தம்! நேரஞ் செல்லச்செல்ல இன்னும் கனக்க ஊளைச்சத்தம் கிட்டக்கிட்டவாய் வரத்துவங்கிச்சிது. வெள்ளியார் பயந்து கனைச்சது. அப்ப அனக்கு விளங்கிட்டிது. ஐயோ! உது ஓநாயளின்ரை ஊளையெல்லோ? 

என்னைப்போலை ஒரு துடைநடுங்கி, பயத்திலையே செத்துத் துலைக்கும் தான். ஆனால் வெள்ளியார் பயந்ததைப் பார்த்தவுடனை அதுக்கு தைரியம் சொல்லிப் பாதுகாக்க வேண்டிய என்ரை கடமையை நினைச்சு அனக்கு மனத்துணிவை வரவைக்க தெண்டிச்சன். 
" பயப்பிடாதை வெள்ளியார்! ஓநாயளுக்கு நெருப்பெண்டால் பயம். கிட்ட வராது" எண்டன். எட உந்த விளப்பமெல்லாம் உந்த ஆய்க்கினை விழுந்த ஓநாயளுக்குத் தெரியேல்லைப் போலை! ஏனெண்டால் அதுகள் அந்த சாம்பல் நிற பயங்கரமான சென்மங்கள் கிட்டக்கிட்ட வாறதைப் பார்த்தன். இருட்டு இணலுக்குள்ளாலை  இருந்து நிலா வெளிச்சத்திலை பசியிலை ஊளையிட்டபடி வந்ததுகள். 

நானும் பெலத்து ஊளை வைச்சன். அனக்கு வந்த பயத்திலை அப்பிடி ஒரு ஊளை வைச்சன். அனக்கே காது கன்னமெல்லாம் அடைக்குமாப்போலை  தொண்டை கிழியக் கத்தி ஊளை வைச்சன். ஓநாயளும் கொஞ்சம் பயந்து போச்சுதுகள். ஆனால் கனநேரமில்லை.  திரும்பக் கிட்டவரத் தொடங்கினதுகள். அதுகளின்ரை ஊளையிலை வெள்ளியாரைக் கட்டுப்படுத்திறது கயிட்டமாய் இருந்தது.  அனக்கு தெரிஞ்சு விட்டிது! இனி என்ன? நானும் வெள்ளியாரும் சாகத்தான் போறம். அனக்கு சாகிறது கொஞ்சம் பழக்கம் தான். நான் முன்னையும் ஒருக்கால் செத்தநான் எல்லே? ஆனால் அப்ப நான் செத்தநேரம், எப்படா சாவன் எண்டு ஏங்கியேங்கி விரும்பிச் செத்தநான்.  இப்ப அனக்குச் சாக விருப்பமில்லை. அண்ணரைக் கண்டுபிடிக்க வேணும். அவரின்ரை அன்பிலை, பராமரிப்பிலை சீவிக்க வேணும்! ஐயோ அண்ணர்! எங்கை போட்டீர்? வந்து என்னைக் காப்பாற்றும்!
ஓநாயளும் இன்னும் நெருங்கி வந்ததுகள். அதிலை ஒண்டு,.....மற்ற எல்லாத்தையும் விடப்பெரிசு, .....  பயம் குறைவான ஒரு முறுகம்,..... நயினார் ஓநாயாய் இருக்கவேணும்,.....அது என்னைத்தான் குறி வைச்சு ஊளையிட்டபடி சுத்தினது. அனக்கெண்டால் ரெத்தமெல்லாம் உறைஞ்சு போச்சு. நான் கத்திக்குழறினபடி தணல் விட்டு எரியிற ஒரு கொள்ளியை எடுத்து எறிஞ்சன். நான் கொள்ளியை எறிஞ்சது இன்னும் அதை உசுப்பிப் போட்டுது. அப்ப என்ரை கழுத்தாங்குத்தியிலை வந்து பதியப் போற அதின்ரை பிளந்த வாயையும்,வேட்டைப்பல்லையும்  பார்த்தன். 
"ஐயோ! அண்ணே.........ர் ! என்னைக் காப்பாற்றூ.......ம்!" எண்டு குரையை வைச்சன். அனக்கு மேலை பாய்ஞ்ச ஓநாய் இடையிலை ஒரு கறணம் போட்டுது. 

கடவுள் காக்க! கடவுள் காக்க! என்ன நடந்தது? என்னைப் பார்த்து எடுத்த பாய்ச்சலின்ரை இடையிலை மரண ஓலம் வைச்சுக் கொண்டு ஒரு கறணம் அடிச்சு  <பொதுக்> கெண்டு என்ரை காலடியிலை வந்து விழுந்திது. உசிர்போட்டிது! செத்தே செத்துப்போச்சு! தலையிலை ஒரு அம்பு பாய்ஞ்சு கிடந்திது!

எந்த வில்லில்லை இருந்து இந்த அம்பு பாய்ஞ்சது? ஆர் என்ரை உசிரைக் காப்பாற்றினது? ஒரு பெரிய பாறாங்கல்லின்ரை இணலிலை இருந்து ஒரு உருவம் வெளியாலை வந்தது. பார்த்தால் அது வேறை ஆருமில்லை! கூபர் தான்! எப்பவும்போலை தனக்கே உரிய, மற்றவையளை  சேட்டை பண்ணிற மாதிரி முகபாவத்தோடை நிக்கிறான். என்னதான் இருந்தாலும் என்ரை உசிரைக்  காப்பாற்றினவன் எல்லே?ஓடிப்போய் கட்டிப்பிடிச்சு அவனைக் கண்ட நிம்மதியை , நன்றியைக் காட்ட நினைச்சன்.

"பொறுத்த நேரத்திலை வந்திட்டன் போலை" எண்டான்.
"மெய்தான் கடவுள் காத்த மாதிரி சரியான நேரத்திலைதான் வந்தநீங்கள்"எண்டன் .
"இந்த ஏமஞ்சாமத்திலை, குதிரைக்காறன் வளவிலை வீட்டிலை இல்லாமல் இங்கினை என்ன செய்யிறாய்?" எண்டு கேட்டான்.
அது சரி! நீ என்ன செய்யிறாய் இந்த ஏமஞ்சாமத்திலை? என்ன நரித்தனமான துரோகவேலை பார்க்கவெண்டு இந்த மலைப்பக்கம் வந்து உலாவிறாய்? எட கடவுளே! ஒரு துரோகி வந்து என்ரை உசிரைக் காப்பாற்றவைச்சியே! சொல்லப்போனால் வத்தல் இறைச்சி தந்ததுக்கு மட்டுமில்லாமல், என்ரை உசிரைக் காப்பாற்றினதுக்கும் நன்றியெல்லோ சொல்லவேணும்?

"நீங்கள் என்ன செய்யிறீங்கள்? இங்கினை இந்தச் சாமத்திலை? " எண்டு முறாய்ச்ச படி கேட்டன்.
"நேரை பார்த்தநீ தானே? வேறயென்ன? ஓநாய் வேட்டைதான்!" எண்டான் கூபர்.
"வெள்ளாப்பிலை நீ இந்தப் பக்கமாய் வெளிக்கிட்டதைக் கண்டநான். எந்த ஆபத்துக்குள்ளையும் நீ மாட்டுப்படக் கூடாதெண்டு உனக்குப் பின்னாலை உனக்குத் தெரியாமல் வந்தநான்."

நல்லாத்தான் அளந்து கட்டு. உன்னைத் தட்டிக் கேட்க ஆமான ஆள் இஞ்சை இப்ப ஆர் இருக்கினம்? சோபியா அக்கையிட்டைப் பிடிபடிறநேரம் உனக்கிருக்குது கச்சேரி! என்ரை மனசுக்குள்ளை சொன்னன். வேறை என்ன செய்ய? வெளியாலை சத்தமாய்ச் சொல்லக்கூடிய காரியமே?

"கொண்ணன் யோனத்தானை எங்கினை வைச்சிருக்கிறாய்? எக்கணம் இந்த  நேரத்துக்கு இப்ப இவடத்திலை நிண்டிருப்பான் எண்டால் குறைஞ்சது ரெண்டு ஓநாய் எண்டாலும் விழுத்தியிருக்கலாம்." எண்டு கேட்டான். நான் சுற்றவரப் பார்த்தன். ஓநாய் ஒண்டு கூட   கிட்டக்கிழலைக்கும் இல்லாமல் பறந்திட்டிது. நயினார் ஓநாய் விழுந்தவுடனை மற்றதுகள் தப்பிப் பறிஞ்சிட்டுதுகள். தூரத்திலை மலையளுக்கு அங்காலை அதுகள் தங்கடை நயினாரை நினைச்சு அழுது ஓலம் போடுறது கேட்டது.  

"மெய்யேடா மேனை! எங்கை கொண்ணன் எண்டு சொல்லன்?" குரங்குப்பிடியாய் நிக்கிறான். எட நாசத்தை! நான் பொய்தான் அவிட்டுவிட வேணும். 
"இப்ப கெதியாய் வந்திடுவார். ஒரு கூட்டம் ஓநாயைத் தேடி அந்தா அந்த மலைப் பக்கத்தாலை போனவர்." எண்டு மலையைக் காட்டினன். கூபர் சிரிச்சான். என்னை அவன் நம்பேல்லை எண்டது வெளிவெளியாய்த் தெரிஞ்சது.
"சரி சரி! அது கிடக்க செர்ரிப்பள்ளத்துக்குத் திரும்பிப் போகலாம் வாவன்!" எண்டு கேட்டான். 
"சீ நான் வரேல்லை! அண்ணரைப் பார்த்துக் கொண்டு நிக்கிறன். எந்த நேரத்திலையும் அவர் வரக்கூடும்." எண்டன்.
"ஓகோ! அப்பிடியே ?" எண்டு சொல்லி என்னை ஒரு மாதிரிப் பார்த்தான். அவன்ரை பார்வை அனக்குப் பிடிக்கேல்லை. இடுப்புப் பட்டியிலிருந்து ஒரு கத்தியை உருவினான். என்னட்டை இருந்து பயத்திலை ஒரு அனுங்கல் சத்தம் வந்தது. ஐயோ என்ன செய்யப் போறான்? என்னைக் குத்திக் கொல்லப் போறானோ? ஓநாயளை விட இவன் இன்னும் ஆபத்தானவனாய்க் கிடக்கே! அனக்கு உதறப் பிடிச்சிட்டிது. 

"ஐயோ வேண்டாம்!" எண்டு கத்தினன். 
"ஒண்டும் செய்ய வேண்டாம்" எண்டு கெஞ்சினன்.
" என்னத்தை ஒண்டும் செய்ய வேண்டாம்?" எண்டு துலைவான் கேட்டான்.
"என்னைக் கொலை செய்ய வேண்டாம்." எண்டழுதன்.
கூபருக்கெண்டால்  கிளம்பின கொதியிலை முகம்மூஞ்சை எல்லாம் வெளிறிப் போச்சுது. ஒரு எட்டிலை அனக்குக் கிட்ட வந்தான். நான் அவன்ரை கையிலை ஆப்பிடாமல் இருக்க பின்னடிச்சுப் போய்க்  கீழை விழுந்தன். 
"குட்டிப் பசாசே! என்ன சொன்னநீ?" எண்டு சொல்லி தலைமயிரைக் கொத்தாய்ப் பிடிச்சு என்னை உலுப்பினான்.
"பேய்க்குப் பேன் பார்த்த பேய்! நீ சாகிறதைப் பார்க்க நான் விரும்பியிருந்தால் உன்னை ஓநாய் போட்டுக் குதறட்டும் எண்டு விட்டிருப்பனே?" கத்தியை மூக்குக்கு நேரை நீட்டினான். அப்ப அந்தக் கத்தி எம்மளவு கூரானது எண்டு கண்டன். 
"ஓநாயின்ரை தோலுரிக்கிறதுக்குத் தான் இந்தக் கத்தியைப் பாவிக்கிறநான். உன்னைப் போலை ஒரு பேய்க்குட்டியை கொல்லிறதுக்கில்லை." எண்டு சீறினான். கூபர் என்ரை குண்டியிலை விட்ட உதையிலை போய்க் குப்புற விழுந்தன். பேந்து அந்த ஓநாயின்ரை தோலை உரிச்சான். அதை உரிக்க உரிக்க ஒரே திட்டும் வசையும் தான். உது தான் சரியான நேரமெண்டு நான் விறுவிறெண்டு வெள்ளியாரிலை மூட்டை முடிச்சுக்களோடை ஏறினன். உவன்ரை கண் படாத தூரத்துக்கு நான் போய்விட வேணும். 

"எங்கை போறாய்?" எண்டு உறுமினான்.
"நான் அண்ணரைத் தேடிச் சந்திக்கப் போறன்" எண்டு சொன்னன். அனக்கே என்ரை பயம் குரலிலை கேவலமாய் தெரிஞ்சது.
"போ! போ! மண்டைக்குள்ளை ஒண்டுமில்லாத சிணி ! தனிச்சுப் போய் உன்னை நீயே சாக்காட்டு! நான் வந்து தடுக்கப் போறதில்லை!" எண்டு கத்தினான். என்னெண்டாலும் சொல்லிக்கொண்டு போகட்டன்! அனக்கென்ன? உவனை விட்டு விலகினால் காணும்.

அனக்கு முன்னாலை ஒற்றையடிப்பாதை வளைஞ்சு வளைஞ்சு மலையிலை நிலா வெளிச்சத்திலை ஏறுறது தெரிஞ்சது. அமைதியான நிலவு. ஆனால் கண்ணைக்கூச வைக்காத பகல் வெளிச்சம் போலை எல்லாமே தெளிவாய்த் தெரியுது.  இம்மளவு கயிட்டத்துக்குள்ளையும்  இந்த நிலா வெளிச்சம் நமக்கு வந்து வாய்ச்ச அதிட்டம் எண்டுதான் சொல்ல வேணும். இந்த நிலா வெளிச்சமும் இல்லையெண்டு கண்டால் நம்ம பாடு கதை கந்தல் தான்!

ஏனெண்டால் உந்த நாசம் கட்டின பாதையிலை எங்கினை சரிவு வரும்? எங்கினை வளைவு வரும்? எங்கினை பொறிவு வரும்? எண்டு சாத்திரம் பார்க்கேலாது. திடீர் திடீரெண்டு மூச்சைப் பறிக்குமாப் போலை தேகமெல்லாம் கூச அதளபாதாளம் கண்ணிலை படும். ஏதோ முன்னைபின்னை வெள்ளியார் உந்தப் பாதையெல்லாம் போய்வந்து பழக்கப் பட்ட படியாலை அனக்கு வாய்ச்சுப் போச்சுதெல்லோ? பயங்கரமான வடிவான ஒரு கனாவிலை மிதக்கிற மாதிரிக் கிடக்கு. அப்ப  நான் வெள்ளியாருக்குச் சொன்னன்:
" ஆரெண்டு  நம்பிறாய் இப்பிடியொரு அற்புதக் கனாவைக் கண்டது? அது நானில்லை. வேறையாரோ ஒருத்தர் தான் இப்பிடியானதொரு அற்புதமான, ஆபத்து நிறம்பின அழகான கனாவைக் கண்டு இந்த இடத்தை உருவாக்கி இருப்பினம்!  அது சிலநேரம் கடவுளாய் இருக்கக் கூடும்!"

அனக்கெண்டால் நித்திரை சும்மா கண்ணைச் சுழட்டிக் கொண்டு வந்தது. குதிரையிலை ஒழுங்காய்ச்  சேணத்திலை இருக்கிறதும் பெரிய பாடாய்க் கிடந்தது. எங்கினையும் ஒரு இடத்திலை இரவு தங்கியே தீர வேணும்.
"ஓநாய் இல்லாத இடமாய் பார்க்க வேணும்." எண்டு வெள்ளியாருக்குச் சொன்னன். வெள்ளியாருக்கும் நான் சொல்லிறது சரியாய்ப் பட்டிருக்கும் எண்டு நம்பினன்.


அது கிடக்க, ஆர்தான் இப்பிடி இந்த நஞ்சியாலா மலையிலை உந்த ஒற்றையடிப்பாதையை தடம் பதிச்சு உருவாக்கித் துவக்கினவை? செர்ரிப்பள்ளத்திலை இருந்து காட்டுறோசாப் பள்ளத்துக்குப் போற உந்த மலைப்பாதை பாதையை  இப்பிடி எல்லாம்  அமைய வேணும் எண்டு ஆரவை திட்டம் போட்டவை? அங்கினை திரும்பி, இங்கினை வளைஞ்சு,  குத்தெண சின்னப் சின்னப் பாறைப் பிட்டியளிலை ஏறி, சடாரெண்டு இறக்கமான தாழ்ப்பத்திலை குதிச்சு, பொறிவிலை தடுமாறாமல் தப்பி, சரிவிலை சறுக்காமல் நிமிர்ந்து,......இப்பிடி எல்லாம்  உந்தப் பாதையை அமைக்க  வேணும் எண்ட அவசியம் தான் என்ன? எக்கணம் வெள்ளியார் எக்குத்தப்பி மாறிக் கால் பதிச்சால்......., ரெண்டு பேருமே அதளபாதாளத்துக்குத்தான் பலியாக வேணும்! கார்ல் சிங்கநெஞ்சனும் அவன்ரை குதிரையும் போக்கறப் போன இடம் எங்கை எண்டு எந்தக்காலத்திலும் எந்த ஒரு குருவிக்கும் தெரிய வராது! 

போகப்போக போறபாதை வலு மோசமாகிக் கொண்டு போனது. கடைசியிலை கண்ணைத் திறந்து வைச்சிருக்கவே பயமாய்ப் போச்சுது. பொறிக்கிடங்குக்கு மேலாலை சமநிலை தளம்பாமல் போறமாதிரிக் கிடக்குது. எக்கணம் சமநிலை தளம்பிச்சுது எண்டால் கீழை ஒரு பெரும் பறணைப் பூதமொண்டின்ரை பிளந்த வாய் போலை கிடக்கிற அதளபாதாளந்தான் நம்மை முண்டி விழுங்கும். தப்பித்தவறி அதளபாதாளத்திலை ரெண்டு பேருமே சரியிறது எண்டு கண்டால் அதைக் கண்கொண்டு பார்க்க அனக்கு மனத்தைரியமில்லை. ஆனால் வெள்ளியார் ஒரு கவடு தன்னும் பிழையாய் எடுத்து வைக்கேல்லை. படு பயங்கரப் பாதையை எல்லாம் ஒருமாதிரி சமாளிச்சு மீண்டிட்டிது. அதின்ரை சீரான காலடிச்சத்தம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு வந்திட்டம் எண்ட உணர்வைத் தந்தது. நான் துணிஞ்சு கண்ணைத் திறந்த நேரம் ஒரு சின்ன வெளிக்கு வந்திட்டம். ஒரு பக்கம் ஒரு ஐம்பதாள் உசரத்திலை செங்குத்து மலை, மறுபக்கம் கடும் பொறிவிலை பயங்கரப் பள்ளம். இடையிலை ஒரு சின்னப் பச்சைப் புல்லுவெளி. 

"இந்தா இந்த இடம் சரியாய் இருக்கு. ஓநாய் ஒண்டும் இஞ்சை வரேலாது." எண்டு வெள்ளியாருக்குச் சொன்னன்.  அது மெய்தான். எந்த ஒரு ஓநாயும் அந்த உசரச் செங்குத்து மலையிலிருந்து கீழையிறங்கி வர முடியாது.  கீழை பயங்கரப் பள்ளத்துப் பொறிவாலையும் ஏறி வர முடியாது. அப்பிடியும் அந்த இடத்துக்கு ஒரு ஓநாய் வாறதெண்டால், நாங்கள் வந்த அந்த ஒடுக்கமான பொறிக்கிடங்குப் பாதைவழியாய்த் தான் வரவேணும். அப்பிடி வாறதுக்கு எந்த ஒரு ஓநாய்க்கும் புத்தி இருக்காது எண்டு நம்பிறதுக்குத் தீர்மானிச்சன்.

உண்மையிலையே நல்லதொரு காட்சியைக் கண்டன். அது என்னெண்டு கண்டால் , அந்த செங்குத்தான மலைச்சிவரிலை ஒரு குடைவு. பெரிய பாறாங்கல்லுகள் கூரையாய் அமைய அதையொரு குகை எண்டு சொல்லலாம். அந்தக் குகையிலை இரவைக்குப் பாதுகாப்பாய்த் தங்கலாம். நிம்மதியாய் ஒரு கூரைக்குக் கீழை நித்திரையடிக்கலாம். நமக்கும் முன்னம் ஆரோ அந்த இடத்திலை வந்து தங்கிப் போயிருக்க வேணும். குகை வாசலிலை பாசறைத்தீ வளர்த்த சாம்பலும், எரிஞ்சு கருகின கொள்ளியும் கிடந்திச்சுது. அனக்கு திரும்பவும் பாசறைத்தீ மூட்ட விருப்பந்தான். ஆனால் பொல்லாத கள்ளமும் பஞ்சியுமாய் இருந்திச்சிது. நான் இப்ப ஒண்டும் பறையாமல் படுத்து நித்திரை கொள்ள வேணும்! வெள்ளியாரை கடிவாளத்தைப் பிடிச்சு உள்ளை கூட்டி வந்தன். உள்ளுக்கு நல்ல விட்டாத்தியான இடம் இருந்திச்சிது. 

"உன்னைப் போலை பதினைஞ்சு சீவனுக்கு இஞ்சை இடமிருக்கு" எண்டு வெள்ளியாருக்குச் சொன்னன். வெள்ளியார் ஒரு கனைப்புக் கனைச்சது. ஒருவேளை குதிரைமாலிலை தான் ஆறுதலாய் நித்திரை கொள்ளிற மாடத்தை நினைச்சு ஏங்கியிருக்குமோ? நான் அதுக்குத் தாற கயிட்ட துன்பங்களுக்கெல்லாம் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படிக்கு வெள்ளியாருக்குச் சொன்னன். வெள்ளியாருக்கு தின்னக் கொள்ளைக் குடுத்திட்டு உடம்பை முழுக்க தடவி உருவி விட்டன். அதுக்கு < நல்லிரவு> ரெண்டாம் முறையாய்ச் சொல்லிப்போட்டு நல்ல இருட்டு மூலையாய்ப்  பார்த்துப் போய் போர்வையாலை மூடிக்கொண்டு படுத்திட்டன். கண்டதையும் நினைச்சுத் திரும்பவும் ஒருக்கால் என்னை நானே பயமுறுத்த முன்னம் நித்திரையாகிப் போனன். 

எம்மளவு நேரம் நித்திரை கொண்டிருப்பனோ தெரியேல்லை. சடுதிமுட்டாய் முழிச்சன். அனக்குக் குரலுகள் கேட்டது! குதிரைக் கனைப்புகள் கேட்டது! நான் படுத்திருக்கிற குகைவாசலிலை! பேந்தேன் பறைவான்? என்னை வழக்கமாய்ப் பிடிச்சாட்டிற பயங்கரப் பீச்சல்  பயமெல்லாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டு என்னட்டை திரும்ப வந்திட்டிது. வாசலிலை நிற்கிறவங்கள் ஓநாயை விடவும் ஆபத்தான சென்மங்களோ, ஆர் கண்டது?

"குதிரையளை குகைக்குள்ளை கலை! அப்ப நமக்கு இடம் தாராளமாய் இருக்கும்." எண்டு ஒரு குரல் சொல்லக் கேட்டன். உள்ளை வந்த குதிரையள் வெள்ளியாரைக் கண்டு கனைக்க, வெள்ளியாரும் கனைச்சது. அனக்கெண்டால் காலும் கையும் பதறினது. நல்லகாலம் குதிரையள்  அமைதியாய் விட்டுதுகள். இருட்டுக்குள்ளை கூட்டாளிமார் ஆகிவிட்டினம் போலை. வாசலிலை இருந்தவன்களுக்கு உள்ளை ஒரு பிறத்திக் குதிரையும் நிற்கிறது எண்ட  சங்கதி பிடிபடேல்லை. அவன்கள் தங்கடை பாட்டிலை கதைச்ச படி.

ஆர் இவன்கள்? எங்கினை இருந்து வாறான்கள்? பேயுலாவிற இந்தச் சாமத்திலை இந்த நெளிவு சுழிவான மலைப்பாதையிலை என்ன காரியமாய் வந்தவன்கள்? உதை நான் கண்டறிய வேணும்! பயத்திலை அனக்கு பல்லு தாளம் போட தேகம் நடுங்கிச்சிது. ஒரு ஆயிரம் கட்டை தூரம் எண்டாலும் அந்த இடத்தை விட்டு விலகி இருக்க விரும்பினன். 

ஆனால் நான் இப்பிடி ஒரு பொறிக்கூட்டிலை ஆப்பிட்ட எலிபோலை அங்காலை இஞ்சாலை அரங்க முடியாமல் நிற்கிறன். அதுகும் ஒரு ரெண்டு மனிசருக்குப் பக்கத்திலை ஏதோ என்ரை கூட்டாளிமாருக்குப்  பக்கத்திலை இருக்கிற மாதிரிக்  கிட்டத் தான் இருக்கிறன். ஆனால் உவன்கள் பகையாளியாயும் இருக்கக் கூடும். என்னதான் கயிட்டம் எண்டாலும் ஒண்டில் உவன்கள் கூட்டாளியாய்ச் சேரக் கூடியவன்களோ அல்லாட்டில் பகையாளி எண்டு விலத்தக் கூடியவன்களோ எண்டு அறியவேணும்! குப்பறப்படுத்தபடி  நிலத்தோடை நிலமாய் மெள்ள ஊர்ந்து ஊர்ந்து குரலுகள் கேட்கிற இடத்துக்கு அரங்கினன். குகை வாசல் நடுவிலை சரி கணக்காய்  நல்ல நிலவு எறிச்சது.  அது என்ரை மறைவிடத்திலை நேராய் வந்து பட்டிது. மெள்ள  இருட்டான இணலுக்குள்ளையாய் ஊர்ந்து ஒளிச்சன். அப்பிடியே இருட்டு இணலை விட்டு விலகாமல் மெள்ள மெள்ள குரலுகளுக்குக் கிட்டக்கிட்ட நெருங்கினன். 

அவன்கள் ரெண்டுபேரும் நிலாவெளிச்சத்திலை பாசறைத்தீ வளர்த்துக்கொண்டு கூதல் காய்ஞ்சு கொண்டிருந்தான்கள். முறட்டு மூஞ்சை, கறுப்பாய் இரும்பிலை தலைக்கவசம். முதல்முறையாய் இப்பத்தான் இப்பிடியான கோலத்திலை ஆக்களைப் பார்க்கிறன். எக்கணம் உவன்கள் தெங்கிலின்ரை உளவுப்படைதான்! நான் என்னத்தை இப்ப இந்தநேரம் என் கண்கொண்டு பார்க்கிறன் எண்டு அனக்குத்  தெரியும்! நான் வேறை ஒண்டையும் நம்பேல்லை! உது நிச்சயம் தெங்கிலின்ரை உளவுப்படையே தான்! நஞ்சியாலாவின்ரை பசுமையான பள்ளங்களை, ஊருகளை எல்லாம் பாழடிக்க நினைக்கிற தெங்கிலின்ரை நாசங்கட்டிற கைக்கூலியளிலை ரெண்டு இதுகள் எண்டது அனக்குத் தெளிவாய்ப் போச்சிது.

ஐயோ! உவன்களின்ரை கையிலை பிடிபட்டு வதை படிற நேரம், ஓநாயளின்ரை பல்லுப்பட்டுச் சாகலாமெல்லோ? அவன்கள் மெள்ளத்தான் கதைச்சவன்கள். இருந்தாலும் நானிருந்த மறைவிடத்திலை அவன்கள் கதைச்ச ஒவ்வரு சொல்லும் கேட்டிது.  ஆரிலையோ கோவப்பட்ட மாதிரி அவன்களின்ரை கதை போச்சிது. அதிலை ஒருத்தன் சொன்னவன், 
" இந்த முறையும் உரிய நேரத்துக்கு வராமல் அவன் பேய்க்காட்டினான் எண்டால், அவன்ரை செவி ரெண்டையும் வார்ந்து  போடுவன்." எண்டு. அப்ப மற்றவன் சொன்னான்,
"ஓமோம்! அவனுக்கொரு பாடம் படிப்பிக்க வேணும்! எத்தினை இரவெண்டு வந்து அவனுக்காகக் காத்திருந்து, காத்திருந்து வெறுங்கையாய்த் திரும்பிப் போறதாம்? என்ன உருப்படியான காரியத்தைச் செய்து கிழிச்சவன்? தூதுப்புறாக்களை அம்பாலை  அடிச்சு விழுத்திறது சரிதான். ஆனால் தெங்கில் நயினாருக்கு உந்த நடவடிக்கை காணுமே? சோபியாவை எல்லோ கத்துலாக் குகையுக்குள்ளை பிடிச்சு மறியலிலை போடவேணும் எண்டு தெங்கில் நயினார் விரும்பிறது? உந்தப் பேயன் அதுக்குரிய வழி பண்ணேல்லை எண்டால்..... ஐயோ பாவம்! படாத பாடு படப்போறான்."

அனக்குத் தெரிஞ்சிட்டிது! இவன்கள் காத்திருக்கிற அந்த நரிப்புத்திக்காறன் வேறை ஆர்? கூபர்தானே? 
"அமைதியாய் இரு" எண்டு மனசிலை அவன்களுக்கு சொல்லிக் கொண்டன். 
"இப்ப கொஞ்ச நேரத்திலை ஓநாயின்ரை தோலை உரிச்சு முடிய வருவன். நான் சொல்லிறதை நம்பு! பங்கை பார் பங்கை பார்! மலைப்பாதையிலை உங்களுக்குக் கோள்குண்டணிகாவி  வந்து கொண்டிருக்கிறான். உங்களுக்காண்டி சோபியா அக்கையைப் பிடிச்சுத் தரவெண்டு இருக்கிற பச்சைத் துரோகி!"
நல்லாய்த் தூரத்திலை அந்த இடக்கு முடக்குப் பாதையிலை ஒரு புள்ளிபோலை குதிரையிலை ஒரு உருவம் மறையிறதும் வெளிப்படுறதுமாய் வந்து கொண்டிருந்தது.

அனக்கு வெக்கமும் துக்கமுமாய்ப் போச்சுது. ஏனெண்டு கண்டால் உப்பிடி ஒரு துரோகியை செர்ரிப்பள்ளத்திலை நம்மாள் எண்டு நம்பி இம்மளவு காலமும் உலாவ விட்டிருக்கிறமே எண்டதுதான். என்னதான் இருந்தாலும் இது தருணம் நான் அவன்ரை துரோக வேலையை நேரிலை என்ரை கண்கொண்டு பார்க்கவேணும். அனக்கு ஒரு அத்தாட்சி வேணும்.  ஒருத்தரைப் பற்றி ஐமிச்சப் படலாம் ஆனால் அந்த ஐமிச்சம் சரிதான் எண்டு அத்தாட்சி கிடைக்க வேணும். உந்தத் துரோகியைப் பற்றி ஒருநேரம் சோபியா அக்கையைப்  பார்த்துக் கதைக்கிற நேரத்திலை ,
" உவன் கூபர் எண்டவனை நம்ப வேண்டாம். விலத்தி வையுங்கோ! இல்லையெண்டால் செர்ரிப்பள்ளத்துக்கும், உங்களுக்கும் அழிவுதான்" எண்டு உறுதியாய்ச் சொல்லலாமெல்லோ?  

பயங்கரமான ஒரு நடப்பு நடக்க இருக்கிறதை நினைச்சுக் காத்திருக்கிறது ஒரு கொடுமை தான். துரோகி கூபர்  இந்த உளவாளியளுக்கு என்ன தகவல் கொண்டு வந்திருப்பான் எண்டதை நினைச்ச அளவிலை உதறப்  பிடிச்சது. அங்காலை வெளியிலை பாசறைத்தீ வளர்த்த படி இருக்கிற தெங்கிலின்ரை கைக்கூலியளிலை அனக்கு இருந்த பயம் கூட குறைஞ்சு போச்சிது எண்டு சொல்லலாம். உந்த உளவாளியளிட்டை பிடிபடிறதை விட இந்தத் துரோகி தரப்போற தகவலை நினைச்சுக் கூடுதலாய்ப் பயந்தன்.  அப்ப அந்தா அந்த பாறாங்கல்லைச் சுற்றி  வளைவிலை வந்து கொண்டிருந்தான் துரோகி தன்ரை குதிரையிலை. அனக்குச் சரியான பயம் தான், எண்டாலும் கண்ணெரிஞ்சாலும் கண் வெட்டாமல் அவன் வாற திக்கைக் கூர்ந்து பார்த்தன். நானும் பார்த்தபடி இருந்தன்,தெங்கிலின்ரை கைககூலியளும் பார்த்தபடி இருந்தவன்கள். ஒருத்தருக்கும் எப்ப வந்து சேருவான் எண்டு தெரியேல்லை.

நாங்கள் காத்திருந்தம். தெங்கிலின்ரை கைக்கூலியள் தங்கடை பாசறைத்தீக்குப் பக்கத்திலை, நான் வந்து குகையின்ரை இருட்டு இணலுக்குள்ளை குப்பற நிலத்திலை ஊர்ந்தபடி! நிலவும் குகை வாசலை விட்டுக் கொஞ்சம் அரங்கி விட்டிது. ஒண்டுமே நடந்த பாடாயில்லை! அனக்கெண்டால்  முன்னுக்கு வெளியாலை ஓடிப்போய் குதிச்சு ,
" நாங்கள் காத்திருந்து களைச்சுப் போனம்! ஆடி அசைஞ்சு பவனி நடை போட்டது காணும்! கெதியா இங்காலை வாடா!" எண்டு கத்தவேணும் போலை பொறுமை கெட்டுப்போச்சு. நிலவும், எங்களைச் சுற்றியிருந்த மலையளும், ஏன் அந்தப் பயங்கரமான சாமப்பொழுதும் கூடி மூச்சை அடக்கினபடி அந்தத் துரோகிக்காகக் காத்திருந்திச்சுதுகள். 

அந்தா இப்ப மறையாமல் கொள்ளாமல் தூரத்திலை வாறான். நிலா வெளிச்சத்திலை வடிவாய்த் தெரியிது. அவனைக் கண்டதும்  அனக்கு ரெத்தமெல்லாம் ஓடி உறைஞ்சது.
"கூபர்! என்னெண்டடா உப்பிடி ஒரு துரோகத்தைச் செய்ய உனக்கு மனசு வந்தது?"எண்டு அனக்குள்ளை கேட்டன்.

கண்ணெரிஞ்ச எரிவிலை கண்ணை ஒருக்கால் மூடினன் . அல்லாட்டில் ஒருவேளை பார்க்கப் பிடிக்காமல் கண்ணை மூடியிருப்பனோ? சொல்லத்தெரியேல்லை. உந்தக் கெடுவானின்ரை கூத்தைக்  கையும் களவுமாய் பார்க்க வேணும் எண்டுதானே கனநேரமாய்க் காத்திருந்தநான்? இப்ப ஒருமாதிரி அவன் கிட்ட வந்திட்டான்; அனக்குத்தான் அவன்ரை மூஞ்சையைக் காணப் புறியமில்லாமல் கிடக்கு. கண்ணைத் திரும்ப ஒருக்கால் மூடினன். குதிரைக் குளம்பின்ரை சத்தம் வரவர தெளிவாய்க் கேட்டிது. 

கடைசியிலை அவன் முன்னடிக்கு வந்து குதிரையை நிற்பாட்டினான். அப்பத்தான் கண்ணைத் திறந்து பார்த்தன். எப்பிடி அந்த எளியவன் தன்ரை சொந்தச் சனத்தைக் காட்டிக்குடுக்கிறான் எண்ட துரோகத்தை நானும் என்ரை சொந்தக் கண்ணாலை காணத்தானே வேணும்? 

இதென்ன இடிமாலை?அதொண்டும் கூபர் கிடையாது! அது வந்து...அது வந்து... யூச்சி எல்லோ? உவன் தங்கச்சாவல்! பானகப்பந்தல்க்காறன்! 
                            
                                          ( என்ன தான் நடக்குமோ?)

சொல்விளக்கம்:

இயக்கம் - அசைவு 
கூக்காட்டுதல் - கூவென கத்துதல்
கொண்ணர் < உங்கண்ணர் < உங்கள் அண்ணர் 
செந்தளிப்பு< செந்தலிப்பு - செழிப்பு 
அகரமுதலியில்: கருமகாண்டம் - முற்பிறப்பில் செய்த தீவினையால் ஏற்படும் நோய்களையும்,        
                            தீர்வுகளையும் கூறும் நூல்.
பேச்சுவழக்கில்: கறுமகாண்டம் < கருமகாண்டம்-பெருந்துன்பம்   
அகரமுதலியில்: எய்ப்பு - ஒடுக்க நிலை 
பேச்சுவழக்கில்: எப்பன் < எய்ப்பன் - எள்ளளவு 
அசம்பி, அசம்பை - தோளில் தாங்கும் பை, satchel 
காரியமில்லை - பரவாயில்லை 
ஆய்க்கினை< ஆக்கினை - தண்டனை 
கந்தறுந்த = கந்து+ அறுந்த - பற்றுக்கோடு அற்ற, வாழ்வாதாரம் கெட்ட  
அல்லாட்டில் - இல்லாவிட்டால் 
இணல், நிணல் - நிழல்
தெண்டிச்சன் < தெண்டித்தேன் - முயற்சித்தேன் 
கயிட்டம் - சிரமம் 
முறுகம் - மிருகம் 
கழுத்தாங்குத்தி - கழுத்தடி 
குரையை வைத்தல் - பலத்துக் கத்துதல் 
கறணம் < கரணம் 
பொறுத்த நேரம் - உரிய நேரம் 
ஏமஞ்சாமம்= ஏமம் + சாமம் = இரவு+இரவு - நள்ளிரவு 
அளந்து கட்டு - பொய்யைப் பெரிதாக்கிச் சொல்
வெள்ளாப்பு - அதிகாலை 
ஆமான ஆள் - உரிய ஆள், பலசாலியான ஆள் 
கிட்டக்கிழலை= கிட்டம்+கிழலை=அண்மை+திசை- அருகில் 
நயினார் - தலைவன் 
அவிட்டுவிடு - அவிழ்த்துவிடு 
துலைவான்- தொலைந்து போவான் 
ஆப்பிடாமல் < அகப்படாமல் 
சிணி - கெட்ட நாற்றம் 
நாசம் கட்டும் - அழிவு சேர்க்கும் 
பிட்டி - ஏற்றமான இடம் 
தாழ்ப்பம் - ஆழம் 
எக்குத்தப்பி< இலக்குத்தப்பி 
தறை < தரை 
போக்கற = போக்கு+ அற - போன இடம் தெரியாமல் 
எக்கணம்- எக்கணமும் - எந்நேரேமும் 
எக்கணம் -ஒருவேளை 
பறணை - மிகப் பெரிய 
கள்ளமும், பஞ்சியும் - சோம்பலும், அலுப்பும்  
அகரமுதலியில்: விட்டாத்தி< விட்டாற்றி - இளைப்பாறு 
பேச்சுவழக்கில்: விட்டாத்தி - விசாலமான 
பேய்க்காட்டுதல் - ஏமாற்றுதல் 
வார்ந்து போடுவன் - சீவிப்  போடுவேன் 
பேயன் - மூளைகெட்டவன்  
பங்கை< அங்கை<அங்கே 
கோள்குண்டணிகாவி - இல்லாததும் பொல்லாததும் காவிச் செல்பவன் 
எளியவன்< இழியவன் - கெட்டவன் 
உங்களுக்காண்டி < உங்களுக்காக வேண்டி 
இடிமாலை - கழுத்தைச் சுற்றிய மாலை போலஇடியாக வந்த துன்பம் 


This entry was posted on 3:47 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: