Author: ந.குணபாலன்
•1:21 PM

என் குறிப்பு : முதலில் இக்கதையின் முதலிரண்டு  அத்தியாயங்களை  மட்டுமே மொழிமாற்றம்   
                            செய்ய நினைத்து, யோனத்தானின் துணிவையும்,உடன் பிறந்தான் மீது கொண்ட 
                            பாசத்தையும்   கருதி, " சிங்கநெஞ்சன்" என தலைப்பு  இடப்பட்டது . இனிமேல்
                           மூலக்கதையைப் போலவே இத் தமிழ் மொழிபெயர்ப்பும்
                           " சிங்கநெஞ்சன் சகோதரர்கள்" எனப் பெயர் பெறுகிறது.
                                                                      
                                                                மூலக்கதை : Bröderna Lejonhjärta


                                                 

                                                   எழுத்தாளர் : அஸ்த்ரி   லிண்ட்கிறேன் , சுவீடன்  
                                                                     (ASTRID   LINDGREN ,     SWEEDEN)
                                                            (14/11-1907 --- 22/01-2002)
                                                ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்
                                                                               ( Ilon Wikeland)
                                                  தமிழாக்கம் :  ந. குணபாலன்
                                                       


                               துடிப்பு 4 : தங்கச்சாவல் !                   
அடுத்தநாள் விடிஞ்சதும், நாங்கள் ரெண்டு பேரும் குதிரை ஓட்டினம். முன்னை பின்னை நான் குதிரையிலை ஏறினதில்லை, ஆனால் என்னவெண்டு கண்டால் நல்ல அனுபவம் உள்ளவன் போலை குதிரை ஓட் டினன். இதென்னடா இது மாயமாய்க் கிடக்கு!?  முன்னை அனக்குச் செய்யத் தெரியாத வேலை எல்லாம் சும்மா தண்ணி பட்ட பாடாய் சுகமாய் செய்ய வருதே!? முன்னை ஏதோ கனகாலம் குதிரை ஓட் டிப் பழகின மாதிரி  மாதிரி அண்ணரோடை  போட்டிக்குக் குதிரை ஓட் டினன் .

அண்ணர் குதிரை ஓட்டின வடிவை எல்லோ பார்க்க வேணும்!  'புராணக் கதைகளிலை வாற கதாநாயகன் மாதிரி' எண்டு ஒரு ஆச்சி சொன்னவ ஞாவகம் இருக்கோ? அவ எக்கணம் அண்ணர்  குதிரையிலை பறக்கிற கோலத்தை கண்டிருக்க வேணும். தான் சொன்னது சரியாய் தான் கிடக்கு எண்டு ஊரெல்லாம் பறை தட்டி இருப்பா.  

-அண்ணர்  சும்மா குதிரையிலை வலு வேகமாக  எதோ ஒரு பறவை ஒண்டு பறந்தது போலை ஒரு பாய்ச்சலிலை பாய்ஞ்சு ஆத்தைத் தாண்டின   விதம்!;
-அப்ப அவரின்ரை பொன்னிறமான தலைமயிர் அலை பாய்ஞ்ச வண்ணம்!;
-உடுத்திருந்த உடுப்புக் கூடி, குதிரைவீரன் போலை அமைஞ்ச  கோலம்!; 
-எல்லாமே புராணக் கதையிலை வாற கதாநாயகன் சாங்கம்  தான்!. 

                        


இஞ்சை குதிரைக்காறன் வளவு வீட்டிலை ரெண்டு பேரை வளர்த்திற அளவுக்கு  ஒரு பெரிய தைலாப் பெட்டி கிடக்கு.  மாயாசாலக் கதையளிலை வாற குதிரைவீரன்மார்  மாட்டியிருக்கிற மாதிரிக்கு  உடுப்பு கனக்க அதுக்குள்ளை  பல அளவிலையும்  கிடக்கு. பூமி நச்சத்திரத்திலை 
இப்பத்தைக் காலத்திலை புழக்கத்திலை இல்லாத பழைய மோடி உடுப்புத்தான். ஆனால் இஞ்சை உப்பிடியான உடுப்புத்தான் இப்பவும் புது மோடியாய் பாவனையிலை  இருக்கிது. அனக்கும் அளவாய் சிலது அமைஞ்சு போட்டிது. அதிலை ஒண்டை நானும் எடுத்து மாட்டினன்.

முன்னம் நான் உடுத்திருந்த கிழிஞ்ச காற்சட்டை எல்லாம் கழட்டி தூக்கி தலையைச் சுத்தி எறிஞ்சாச்சு. இனி எந்தக் காலத்திலையும் அதைக் காணக் கூடாது.  நாங்கள் இருக்கிற இடத்துக்கு ஏத்தபடி, சீவிக்கிற காலத்துக்கு ஏத்தபடி உடுப்பு உடுக்க வேணும் எண்டு அண்ணர் சொன்னவர் எல்லே? இல்லாட்டி செர்ரிப் பள்ளத்துச் சனத்துக்கு   வினோதமான ஆக்களாய் எங்களைப் பார்க்கக் கிடக்குமெல்லோ?  இங்கினை நஞ்சியாலாவிலை  எப்பவும் மாயாசாலக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாம் உருவாகிறதாமாம்  எண்டு அண்ணர் அப்பவே சொன்னவர் எல்லே? இப்ப உந்த உடுப்பு, கோலத்திலை நிற்கிற நேரம், அது ஞாபகம் வந்திச்சு. 

அப்ப அண்ணரைப் பிடிச்சுக் கேட்டன்.;
" அப்பிடி எண்டால் அண்ணர் !, நாங்கள் இப்ப சீவிக்கிற காலம் இஞ்சை நஞ்சியாலாவிலை  சரியான பழங்காலமோ?"
" ஒரு வகையிலை நீ சொல்லுறதும் சரிதான் என்ரை சீனியப்பு! பூமி நச்சத்திரத்திலை இருந்திட்டு வந்த எங்களுக்கு இஞ்சை வந்து பார்க்க இது பறணை  பழங்காலம் போலை கிடக்கு. ஆனால் இங்கினை நாங்கள் சீவிக்கிற இந்தக் காலம் , இங்கத்தைக்கு  புதுக்காலம் எண்டும் சொல்லலாம்" எண்டு அண்ணர் விளப்பம் சொன்னவர். கொஞ்ச நேரம் ஏதோ யோசிச்சார். 
" மெய்தான். ஒரு இளம், புதிய, நல்ல காலம் ; சீவிக்கிறதுக்குச் சுகமான,சுவாத்தியமான காலமிது........."
சொல்லிக் கொண்டு வந்ததைக்  கொஞ்சம் நிற்பாட்டினார். அவரின்ரை கண்ணிரெண்டும் இருண்டுது.
"......இஞ்சை செர்ரிப்பள்ளத்தைப் பொறுத்த மட்டிலை  நல்லகாலந்தான்...." எண்டார். 
"அப்பிடி எண்டால் நஞ்சியாலாவிலை மற்றப் பகுதியளிலை எப்பிடி இருக்கும்?"எண்டு கேட்டன். மற்றப் பகுதியளிலை வித்தியாசமாய் இருக்கக் கூடும் எண்டு சொன்னவர்.

வேறை எங்கினையும் போகாமல், செர்ரிப்பள்ளத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தது எங்கடை அதிட்டம்தான். அண்ணர் சொன்னபடிக்கு இங்கினை நல்ல சுகமான, சுவாத்தியமான காலமாக இருக்கிது. இதை விட சுகமான, சுவாத்தியமான, மனசிலை புளுகம்  தெறிக்க வைக்கிற  ஒரு காலைமைப் பொழுது  அமையாது.


ஒருக்களிச்சுத் திறந்து கிடந்த கண்ணாடி யன்னலுக்குள்ளாலை வந்து தடவிய காலைமை நேரத்து சுகமான வெய்யிலும், காலைப் பொழுதை வரவேற்றுப் பாடின பறவையளின்ரை  சத்தமும் தான் அடுப்படியிலை வாங்கிலை படுத்துக் கிடந்த என்னை எழுப்பினது. கண்ணைக் கசக்கினபடி
 முழிச்சுப் பார்க்க அண்ணர்  சாப்பாட்டு மேசையிலை பால், பாண்  எல்லாம் அனக்கும் எடுத்து வைச்சிட்டு ஒரு அசுகையும் காட்டாமல் நுனிக்காலிலை நடந்து கொண்டிருந்தார். என்ரை நித்திரையைக் குழப்பக் கூடாதாமாம். மளமளவெண்டு காலைத் தீனைத் திண்ட பிறகு முசலுக்கும் தீனைப் போட்டு விட்டுக் குதிரை மாலுக்குப் போனன்.  அண்ணரோடை சேர்ந்து குதிரை மாலைக் கூட்டித் துப்பரவாக்கிகுதிரையளை சீப்பாலை தேய்ச்சுத் துடைச்சு, தீன் குடுத்தன் .

பேந்து கொஞ்சத்தாலை ரெண்டுபேரும் குதிரை ஏறி அதுகளை நடத்திப் போனம். புல்லின்ரை  தலை நுனி எல்லாம் வைர மணி போல காலைப்பனித் துளி . தேனிலையான், தேன் குளவி, கருவண்டு எல்லாம் சங்கீதம் பாடினபடி செர்ரிப்பூக்களை மொய்ச்ச சீர்.  வெள்ளியாரும் இருந்தாப்போலை நாலுகால் பாய்ச்சலிலை ஓடத் துவங்கிச்சுது.  நான் தடுமாறி விழவுமில்லை; பயம் எண்ட ஒண்டு என்னை எட்டிப் பார்க்கவுமில்லை . இப்பிடியான நல்ல அனுபவம் ஒண்டு எப்பெண்டாலும் ஒருதரம் ஒரு முடிவுக்கு வாறது  வழமை தானே? அதையிட்டுக் கூடி எனக்கொரு கவலை ,..பயம்,...ம்கூம் ...வரேல்லை. அப்பிடி நடந்திடுமே?.... அதுகும்  இஞ்சை?... நஞ்சியாலாவிலை?....
செர்ரிப்பள்ளத்திலை?....ஒருக்காலும் நடக்காது !.

புல்லுவெளியிலை வியாழரும் ,வெள்ளியாரும்  எங்களைக் காவின படி போட்டிபோட்டு ஓடிச்சிதுகள் . ஆத்தங்கரைப் பக்கமாய் பாய்ஞ்சு  போய்  முடக்கிலை திரும்பி குதிரையளை   நிற்பாட்டி, கீழை பார்த்தம். பணிய இருந்த வீடுகளிலை இருந்து காலைமை சமையல் நடக்கிறதுக்கு அடையாளமாய் புகை கிளம்பிக் கொண்டிருந்தது. முதலிலை புகை கண்ணிலை பட்டிது , பின்னடிக்கு வீடு வளவுகளும், தோட்டத் தறையளும் தெரிஞ்சிது. சாவலுகள்  கூவினது, நாயள்  குலைச்சுது , ஆடு மாடு கத்தினது. அப்பத்தான் அந்த இடம் முழுக்க கண் முழிச்சு எழும்பின மாதிரி சத்தங்கள் கேட்டுது. 

நாங்கள் நிண்ட இடத்துப் பக்கமாய் ஒற்றையடிப் பாதையிலை , கையிலை ஒரு கூடையோடை ஒரு அக்கை  வந்து கொண்டிருந்தா. அவவை பார்க்க  ஒரு கமக்காறிச்சி மாதிரி ஒரு தோற்றம், ...... கிழவியெண்டுமில்லை, குமரியெண்டுமில்லை  ஒரு இடைப்பட்ட வயசு,.....  வெய்யிலிலை காய்ஞ்சு, மழையிலை நனைஞ்சு கண்டின நிறம்,... பாடுபட்டுவேலை செய்து இறுகின தேகம்,.... மாயாசாலக் கதையளிலை வாற மாதிரி உடுதுணி,....அலங்காரம்..... .

"மெய்தானே யோனத்தான்? தம்பியார் வந்திட்டார்  போலையாக்கும்?" அன்பாய்க் கேட்டா.
" ஓம் அக்கை! நேற்றைக்குப் பின்னேரப் பாட்டுக்கு வந்தவர்." அண்ணரின்ரை குரலிலை பெருமை இருந்திச்சு.
"சீனியப்பு! இவ  வந்து சோபியா அக்கை." அண்ணர் அறிமுகம் செய்தார். 
" ஓம் ! நான்தான் சோபியா! உங்களை கண்டது நல்லதாப் போச்சுது. உங்களட்டை எண்டு தான் வெளிக்கிட்டனான். அப்ப நீங்களே உந்தக் கூடையைக் கொண்டு போங்கோ. "
அண்ணருக்கு உது பழக்கமாக்கும். என்ன ஏது எண்டு ஒண்டும் கேளாமல் கூடையை வாங்கினார்.
" அப்ப  இண்டைக்கு செக்கல் பாட்டிலை தம்பியாரையும்  கூட்டிக் கொண்டு தங்கச்சாவலடிக்கு  வாருமன். மற்றவையளும்  உம்மடை தம்பியாரைப் பார்க்க விரும்புவினம் எல்லே?" எண்டா சோபியா அக்கை. அண்ணரும் ;
"அப்பிடியே செய்வம்" எண்டிட்டு வீட்டுப் பக்கம் வியாழரைச் செலுத்தினார்.

"அதென்னது  தங்கச்சாவல்?" எண்டு அண்ணரைக் கேட்டன்.
"பணிய ஊருக்கை தங்கச்சாவல் எண்டொரு பானகப்பந்தல் இருக்கு..... " 
"பானகப்பந்தலோ? அப்பிடி  எண்டால்?..........."
"அங்கினை பூமி நச்சத்திரத்திலை நாங்கள் இருந்த காலத்திலை கோப்பிக்கடை ஒண்டு எங்கடை பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் இருந்ததெல்லே ?..."
" ஓ ஒ "
"அங்கை ஆக்கள் கோப்பி குடிக்கப் போற மாதிரி; இங்கை பானகப்பந்தலுக்கு குளிர்பானகம், பழக்கூழ் பானகம் , சுடுகஞ்சி பானகம் எண்டு பலவகைப் பானகம் வாங்கிக் குடிக்கிறதுக்கும்; கூடிக் கதைக்க வேண்டின  கதை எல்லாம் கதைக்கிறதுக்கும் ஆக்கள் எல்லாரும் போறது."

அனக்கெண்டால் 
'எப்படா செக்கல் படும்? எப்படா  பானகப்பந்தலடிக்கு போய் மற்ற ஆக்களையெல்லாம் சந்திக்கலாம்? அவையள்  எல்லாம் என்ன மாதிரியான சாதிசனமாய் இருப்பினம்? அவையளின்ரை குணம் குறி எப்பிடி? பெருமை பிடிச்சவையோ? இல்லை அணைஞ்சு நடக்கக் கூடின ஆக்களோ?' எண்டு அறிய ஒரு தவிப்பாய் இருந்திச்சுது.  நஞ்சியாலாவை, செர்ரிப்பள்ளத்தை பற்றி அண்ணர் சொல்லி வைச்சதெல்லாம் அப்பிடியே அச்சொட்டாய் இருக்கோ எண்டு பார்க்க வேணுமெண்ட ஆவல்.அதோடை அப்பிடியே  நாங்கள் குதிரையளிலை சவாரி போற நேரம் அனக்கொரு சங்கதி ஞாவகம் வந்திச்சுது.

"அண்ணர் !, இங்கினை  நஞ்சியாலாவிலை வெள்ளாப்பிலை துவங்கி பொழுதறு மட்டுக்கும்  இல்லாமல், ஏமஞ்சாமமாயும்  பைம்பலும் , பரபரப்புமாய்  கதைகாரியம் எல்லாம் நடக்கும் எண்டு   நீர் அப்ப அந்தநேரம் சொன்னநீரெல்லே? ஞாவகம் இருக்கோ? ஆனால் இஞ்சை பார்க்க எல்லாம் ஒரே அமைதியாய் இருக்கே?" எண்டு கேட்டன்.
"விசர்! நேற்றைக்குத் தானே வந்து இங்கினை மூக்கை நீட்டின  நீ! வந்தது வர முன்னம் உனக்கு ஒரே அவசரம். பரபரப்புக்கும், பைம்பலுக்கும் நேரங்காலம்  வரும் கொஞ்சம் பொறு." அண்ணர் சிரிச்சார். 

அண்ணர்  என்னை வினோதமாய்ப் பார்த்தார். என்னைப் பார்க்க அவருக்கு பாவமாய் இருந்தது போலை.
" ஏன் சீனியப்பு? பொழுது போகாமல் அலுப்படிக்குதோ? நீ என்னட்டை வரேக்கை இன்னதின்னது  இன்னதின்ன படி இருக்கவேணும் எண்டு நான் விரும்பின படி தான் எல்லாம் நடக்குது. இன்னும் பரபரப்பான காரியங்கள் நடக்க வேணும் எண்டு ஆசைப்  படுறியோ?" எண்டு கேட்டார். கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால், நான் வந்தநேரம் தொட்டு இந்தநேரம் வரை பைம்பலும், புளுகமுமாய்த் தானே பொழுது போகுது? 
"இல்லை அண்ணர் சும்மாதான் கேட்டன் . இங்கினை நல்லாய்த்தான் பொழுது போகுது . "

வீட்டுக்கு வந்தவுடனை  சோபியா அக்கை தந்த கூடையை அண்ணர் திறந்தார். உடன் வெதுப்பின பாணும், உடன் கறந்த பாலும், ஒரு சின்னச்சாடி தேனும், சுடச்சுட ரெண்டு சோடி கோதம்பமாத் தோசையும் இருந்துது.
" சோபியா அக்கையோ எங்களுக்குச் சமைச்சுத் தாறது ?"
"ஓம் காலைமைத்தீன் அவதான் சிலநேரங்களிலை கொண்டந்து  தாறவ."
"சும்மாவே தாறவ ?"
"சும்மாதான் தாறவ . இங்கினை செர்ரிப் பள்ளத்திலை எல்லாமே சும்மாதான் கிடைக்கும். அவரவருக்குத் தேவையானதை சும்மாதான் ஒருத்தருக்கொருத்தர் குடுத்து உதவிறது " 
"நீர் சோபியா அக்கைக்கு என்னவும்  குடுக்கிற நீரோ?
"ஓ ! அவவின்ரை ரோசாக்கண்டுப் பாத்திக்கு பசளைக்கெண்டு  குதிரைச்சாணம் குடுக்கிற நான்;   
   பாத்தியைச் சாறிப் பசளை போட்டுப் பராமரிக்கிற நான். இதெல்லாம் சும்மாதான் செய்து   
   குடுக்கிற நான்."
அனக்கு வடிவாக் கேட்காத மாதிரிக்கு மெதுவா இன்னும் சொன்னார்.
"வேறையும் சிலபல வேலையள்  செய்து குடுக்கிற நான்." இப்பிடிச்சொன்னபடியே கூடைக்குள்ளை இருந்து ஒரு சின்னக் கடுதாசிச் சுருளை எடுத்தார். விரிச்சு வாசிச்சார். புருவங்கள் ஏறியிறங்க நெற்றியை சுருக்கினார். அந்தக் கடுதாசிச் சுருளிலை கண்ட சங்கதி அவருக்குப் புறியமில்லாதது எண்டு அனக்குப் பிடிபட்டுப் போச்சு.  அவரும் அனக்கு ஒண்டும் சொல்லேல்லை; நானும் கேட்க விரும்பேல்லை.  சொல்ல வேண்டிய நேரத்திலை அனக்குச் சொல்லுவர்தானே?
                         

இந்த வீட்டிலை கூடத்திலை ஒரு பழம் பறணை அலமாரி  கிடக்கு. முதல்நாள் ராத்திரி அந்த அலமாரியைப் பற்றி அண்ணர் சொன்னவர். ரகசிய இழுப்பறை ஒண்டு இருக்காம்.  அதைத் திருகித்  திறக்கிறதுக்கும் ரகசிய முறை இருக்காம். அனக்கும் அந்த ரகசியத்தைப்  பற்றி அறிய சரியான விருப்பம். 
" பேந்து இன்னொரு தரம் நீ அது பற்றி அறியலாம். இப்ப நீ போய்க் கொஞ்ச நேரம் படுத்து  ஓய்வெடு." எண்டார் அண்ணர்.  

நான் போய் என்ரை வாங்கிலை படுத்தன். அண்ணர்  அலமாரியைத்தைத் திறக்கிறதும், இழுப்பறையைத் திருகித் திறக்கிறதும்  பேந்து அதை  மூடிப் பூட்டிறதும் கேட்டது. என்ன செய்திருப்பார் எண்டு கண்டு பிடிக்கிறது ஒண்டும் பெரிய காரியமில்லை. வேறென்ன செய்திருப்பார்? அந்தக் கடுதாசிச்சுருளை ஒளிச்சு வச்சிருப்பார். பெட்டகத்தின்ரை திறப்பை அடுப்புக்கு மேலை உசரமாய் இருக்கிற தட்டிலை, கிடக்கிற  கையுரலுக்குள்ளை  வைச்சவர்.  

மத்தியானப் பாட்டுக்கு நித்திரையாலை நான் எழும்பினவுடனை ஆத்திலை குளிக்கப் போனம். பாலத்திலை இருந்து ஆத்திலை குதிச்சன் - அனக்கு வந்த துணிச்சலைப் பாருங்கோவன்!. அண்ணர்  தன்ரை மாதிரியே அனக்கும் ஒரு  தூண்டில் தடி செய்து தந்தவர். அனக்கு  ஒரு அளவான பெரிய மீன் பட்டுது. அண்ணருக்கு ரெண்டு சின்ன மீன் பட்டுது . இண்டைப்பாட்டுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு எங்கள் ரெண்டு பேருக்கும் உது காணும்.

நாங்கள் மீனைக் கழுவித் துப்பரவாக்கினம். அடுப்பிலை எண்டால் இரும்புச்சட்டி ஒண்டு ஒரு கொழுக்கி கம்பியிலை   திறந்த நெருப்பிலை தொங்கினபடி இருக்கும். அதிலை தண்ணியும் சிலவகை மூலிகையும் போட்டு மீனை அவிச்சம்.


                           சாப்பிட்ட பிறகு அண்ணர் 
" சீனியப்பு!வா, இலக்குப் பார்த்து அம்பெய்யப் பழகுவம். அது எல்லாரும் பழகியிருக்க வேண்டிய ஒரு கலை"  எண்டு சொன்னார். குதிரைமாலின்ரை  ஒரு பக்கத்து அறையிலை, குதிரைச்சேணம் தொங்க விடுறது. அதுக்குள்ளை ரெண்டு வில்லு இருந்திச்சு. கண்டவுடனை அனக்கு விளங்கிப் போச்சு, ஆர் இதுகளை செய்திருப்பினம் எண்டு. நாங்கள் பூமி நச்சத்திரத்திலை எங்கடை ஊரிலை சீவிச்ச அந்த நாளையிலை அயலட்டைப் பெடிபெட்டை எல்லாம் ஒரு பருவத்திலை   அம்புவில்லு வைச்சு விளையாடும். அந்த அம்புவில்லு செய்த ஆசாரி ஆரெண்டு கண்டால்; உவர் அண்ணர் பிள்ளையார்தான். ஆனால் உந்த ரெண்டு வில்லும் சின்னச்சின்ன விளையாட்டு வில்லாய்  இல்லை. மெய் மெய்யான பெரிய தாக்கமான வில்லு எல்லோ? 

குதிரைமால் கதவிலை ஒரு பலகையைத் தொங்க விட்டம். எப்பிடியெப்பிடி எல்லாம் அம்பை எய்யிறது எண்ட நுணுக்கமெல்லாம் அண்ணர் காட்டித் தந்தவர். வில்லை வளைக்கவும், அம்பைத் தொடுக்கவும், இலக்கு வைக்கவும், அம்பை எய்யவும்  அண்ணரை மாதிரி இல்லாட்டாலும் நானும் பிழை  போகேல்லை ஓரளவுக்கு பிடிச்சிட்டன். அண்டு பின்னேரம் முழுக்க அம்பெய்து பழகின சீர்தான். 

உவர் அண்ணர் ஒரு வினோதமான சீவன் கண்டியளோ!? அவனவன் ஒரு சின்னக் காரியம் செய்து முடிக்கு முன்னம் ஏதோ மலையை தூக்கின மாதிரி புழுகி அடிக்கிற தன்னைப்புளியாய்  இருப்பான் . இவரென்னடா எண்டால் என்னதான் திறமை இருந்தாலும், அதையிட்டு பெருமை பேசாதவர். அதோடை நான் வந்து தன்னை விட திறமைசாலியாக வேணும் எண்டு விரும்பிறவர்.  நான் ஒரே ஒருக்கால் இலக்குத் தவறாமல் அம்பெய்தவுடனை  அவரடிச்ச கூத்தை எக்கணம் நீங்கள் பார்த்திருக்க வேணும்! ஏதோ ஒரு பெரிய போட்டியிலை முதல் பரிசு அடிச்ச மாதிரி ஒரு புளுகம் அண்ணருக்கு!.

செக்கல் படத் துவங்க  தங்கச்சேவலடிக்கு போவமெண்டு அண்ணர் சொன்னவர். வியாழரையும், வெள்ளியாரையும் சீக்கை அடிச்சுக் கூப்பிட்டம். சீக்கைச் சத்தம் கேட்டவுடனை, தன்பாட்டிலை மேய்ஞ்சு கொண்டிருந்த குதிரை ரெண்டும் படலையடிக்கு போட்டிக்கு ஓடி வந்திச்சு. சேணம், கடிவாளம்  பூட்டி குதிரையேறி அன்ன நடையிலை குதிரையளை  நடத்திப் போனம். 

திடீரெண்டு அனக்கு  பயமும், வெக்கமுமாய் வந்துது. அனக்கெண்டால்  பெரிசா ஆக்களோடை புழங்கிப் பழக்கமில்லை தானே? அதுகும் முன்னை பின்னை பார்த்திராத நஞ்சியாலாச் சனம் எல்லே?! உதைப் போய்  அண்ணரிட்டை சொன்னன்.
" எதையிட்டுப் பயப்பிடுகிறாய்? ஆரும் உனக்கேதும் கெடுதி செய்வினம் எண்டோ?" எண்டு அண்ணர் கேட்டார்.
" சீ  அதுக்கில்லை. ஆனால் சிலநேரத்திலை ஆரும் என்னைப் பார்த்து பகிடி பண்ணிச் சிரிப்பினமோ?" எண்டு இழுத்தன். எனக்கே என்ரை கதை விசர்க்கதையாய் கிடந்திது. ஏன் ? என்னத்துக்கு? ஆரும் என்னைப் பார்த்துப் பகிடி விட்டுச் சிரிக்கப் போகினம்? இப்பிடித்தான் அனக்குச் சில நேரம் விசர்நினைவு எல்லாம் வரும்.
"சீச்சீ! அப்பிடி ஒருத்தரும் நடக்க மாட்டினம். ஒண்டு தெரியுமே நான் இனிமேல் உன்னை கார்ல் எண்டுதான் மைக்க ஆக்களுக்கு முன்னாலை கூப்பிடுவன். கார்ல் சிங்கநெஞ்சன்  எண்டு சொல்லிறதுதான் நல்ல அமைச்சலாய் இருக்கு. சீனியப்பு சிங்கநெஞ்சன் எண்டால் சிலநேரம் ஆரும் சிரிக்கக் கூடுந்தான். முதல்தரம்;சீனியப்பு சிங்கநெஞ்சன் எண்டதைக் கேட்டு நீயும் நானும் கூடி, விழுந்து விழுந்து சிரிச்சநாங்கள் இல்லையே?"

மெய்தான். அனக்கு அம்மா, அப்பா வைச்ச பேர் கார்ல்  எண்டது தானே? கார்ல் எண்ட முதல்பெயர் தான், சிங்கநெஞ்சன் எண்ட குடும்பப் பெயருக்கு அமைச்சலாய் இருக்கு. 
"கார்ல் சிங்கநெஞ்சன் " எண்டு அனக்கு நானே சொல்லிப் பார்த்தன்.
 "இதோ, கார்ல் சிங்கநெஞ்சனும், யோனத்தான் சிங்கநெஞ்சனும் குதிரையில் பவனி வருகின்றனர்." எண்டு சொல்லிப் பார்த்தன். கேட்க காதுக்கு ஒரு இதமாய்த் தான் இருந்திது.
" ஆனால் அந்த பழைய நல்ல பேர், என்ரை சீனியப்பு  எண்டது என்னளவிலை மாறாது கண்டியோ?"

பாட்டும், கூத்தும், கைதட்டலும், காலுதைப்பும், சிரிப்பும், கனைப்பும் ஒரே அமளி; தூரத்திலை நாங்கள் வரேக்கையே  அங்கை ஊருக்குள்ளை கேட்டுது. அதைவைச்சு வலு சுகமாய் தங்கச்சாவலைக் கண்டுபிடிக்கலாம். பானகப்பந்தலின்ரை  பெயர்ப்பலகையின்ரை மேலை தகட்டிலை வெட்டிச்செய்த ஒரு தங்கநிற சாவல் காத்தடிக்கிறதுக்கு ஏத்தபடி சுழண்டு கொண்டிருந்துது. மாயாசாலக் கதையளிலை வாற மாதிரி ஒரு கட்டிடம். சின்னச்சின்னக் கண்ணாடி யன்னல்களுக்கு உள்ளாலை இருந்து விளக்கு வெளிச்சம் தெறிச்சிது. அனக்கெண்டால்  பானகப்பந்தலுக்குப் போய்ப் பார்க்க சரியான விருப்பமாய்க் கிடந்துது. ஒருக்காலும் உப்பிடியான இடத்துக்கு நான் போனதில்லை எல்லே? 

முதலிலை  பின் பக்கத்து  முற்றத்திலை செர்ரி மரங்களிலை வியாழரையும், வெள்ளியாரையும் கட்டினம். அங்கை என்னடா எண்டால் இன்னும் கனக்கக் குதிரையள் கட்டி நிண்டது. நஞ்சியாலாவிலை இருக்கிறவைக்கு போக்குவரத்துக்கு குதிரை அவசியம் எண்டு அண்ணர் சொன்னது சரியாத்தான் கிடக்கு.  ஆளுக்கொரு குதிரை வைச்சிருப்பினம் எண்டு  நினைக்கிறன். செர்ரிப்பள்ளத்து சனமெல்லாம் தங்கச்சாவலுக்கு வந்திருக்குப் போலை. 

நாங்கள் வந்தநேரம் பானகச்சாலையிலை  ஆம்பிளைபொம்பிளை, பெடிபெட்டை, குஞ்சு குருமன் எண்டு ஆள்சனம்  நிறைஞ்சு போச்சு. எல்லாரும் கூடிக் கதை கலகலப்பாய்  இருந்திச்சினம். பிள்ளையள் தன்பாடு ; தாய்தகப்பன் தன்பாடு. ஒரு சில தவ்வலுகள்  தாய்தகப்பன்ரை மடியிலை நித்திரை. 
ஓவியர்:இலூன் வீக்கெலான்ட்

நாங்கள் பானகப்பந்தலுக்குள்ளை நுழைஞ்ச உடனை அங்கை இருந்த சனங்கள் பட்ட பாடு! 
"யோனத்தான் வந்திட்டார்" "யோனத்தானும் தம்பியாரும் வருகினம்"எண்டு ஆளாளுக்குப் பண்ணிவிட்ட அமளியைப் பார்க்கவேணும். அந்தப் பானகப்பந்தல்க்காறனைப் பார்க்க; செம்பட்டை  தலைமயிரும், உசந்த திடகாத்திரமான சதிரமும், நல்ல சிரிச்ச மூஞ்சையும் நல்ல வடிவான ஆள்தான். எல்லாரையும் மிஞ்சி பெலமாக் கத்தினார்:
"இதோ சிங்கநெஞ்சன் சகோதரர்கள் இருவரும் வருகின்றார்கள்!"

அவர் அனக்குக் கிட்ட வந்து கையைப்பிடிச்சு தூக்கி மேசை ஒண்டிலை எல்லாரும் வடிவா பார்க்கக் கூடிய மாதிரி நிற்பாட்டினார். அனக்கெண்டால் சரியான  வெக்கமாய்ப் போச்சு.  முகம் மூஞ்சை எல்லாம் தக்காளிப் பழம் போலை சிவந்து போச்சு. அண்ணர் சொல்லிறார்: 
"இது என்ரை ஆசைத் தம்பி. பேர் கார்ல் . கடைசியிலை என்னைத் தேடி வந்திட்டார். நீங்கள் எல்லாரும் என்னிலை எம்மளவு அன்பும் ஆதரவுமாய் இருக்கிறீங்களோ, அம்மளவுக்கு  கார்லிலையும் அன்பாய், ஆதரவாய் இருக்க வேணும் எண்டு விரும்பிறன்."
" பேந்து பின்னை எப்பிடி இருக்கிறதாம்?"
"ஒண்டுக்கும் யோசியாதை யோனத்தான்!" 
"கார்ல் இப்ப நீ எங்களிலை ஒருத்தன் கண்டியோ!"
"சும்மா அந்தப் பெடியை விடுங்கோ! அது பாவம் வந்தது வரு முன்னம்  கரைச்சல்     
   குடுக்காதையுங்கோ!"
எண்டு ஆளாளுக்கு சிலபேர் சொல்லுகினம் . அனக்கெண்டால் எதோ எல்லாம் கனவிலை நடக்கிறது போலை கிடக்கு. 

பானகப்பந்தல்காறன் என்னை திரும்ப மேசையிலிருந்து கீழை இறக்கிவிட்டவர். கொஞ்ச நேரம் என்ரை கையை அவர் விடேல்லை. நல்ல பெலசாலி எண்டது அவர் என்ரை கையைப் பிடிச்ச பிடியிலை தெரிஞ்சிது.
"யோனத்தானைப் போலை நீயும் என்னோடை நல்ல கூட்டாளியாய்ப் பழகலாம் கார்ல். என்ரை பேர் யூச்சி! ஆனால் தங்கச்சாவல் எண்டும் கூப்பிடிறவை. நீ கார்ல் சிங்கநெஞ்சன் எப்பவும் விரும்பின நேரம் எல்லாம் தங்கச்சாவலடிக்கு வரலாம் எண்டதை மறக்க வேண்டாம்." எண்டு பட்சமாய் சொன்னவர் . 

சோபியா அக்கை ஒருபக்கம் ஒரு மேசைக்குப் பக்கத்திலை தனிய இருந்தவ. அண்ணரும், நானும் அவவுக்குப் பக்கத்திலை போய் இருந்தம். அதையிட்டு அவவுக்குத் திறுத்தி எண்டது அவவின்ரை முகத்திலை தெரிஞ்சிது. என்ரை குதிரை பற்றி, எப்பிடிப் போகுது எண்டு விசாரிச்சா. அவவின்ரை தோட்டவேலை செய்ய அண்ணருக்கு ஒரு நாளைக்கு நேரம் இருக்கோ எண்டும் கேட்டா. பேந்து ஒண்டும் பறையாமல் அமைதியாய் இருந்தவ. என்னத்தையோ இட்டுக் கவலைப் படிற மாதிரி அவவைப் பார்க்க இருந்திது. இன்னும் ஒண்டைக் கவனிச்சன். அங்கை இருந்தவை எல்லாம்  ஒருவித மரியாதையோடை அவவைப் பார்த்திச்சினம். எழும்பிப் போகேக்கை அவவைப் பார்த்துத் தலை சாய்ச்சு கனம் பண்ணிச்சினம். என்னவோ ஒரு விண்ணாணம். அனக்கெண்டால் உது என்னெண்டு பிடிபடேல்லை.

எல்லாருமாய் சேர்ந்து கனக்கப் பாட்டுக்கள் பாடினம். சில பாட்டுக்கள் எனக்குப் புதிசு.  நல்ல பைம்பலும், முசிப்பாற்றியுமாய் இருந்திச்சு. எல்லாரும் நல்ல புளுகமும், அக்களிப்புமாய் இருந்தவை தான். எண்டாலும் ஏதோ ஒரு கவலை தொட்ட மாதிரியும், பயம் தொட்ட மாதிரியும்   இடைசுகம் இருந்திச்சினம்; அவ சோபியா அக்கையைப் போலை.

ஆனால் இங்கினை செர்ரிப்பள்ளத்தைப் பொறுத்த மட்டிலை நல்லகாலம் எண்டெல்லோ அண்ணர் சொன்னவர்? பின்னைப் பேந்து என்னத்தை நினைச்சுப் பயப்பிட வேணும்? எல்லாச் சனமும் ஒருத்தரிலை ஒருத்தர் நல்ல பட்சமும், பாசமுமாய்ப் பழகுதுகள். அண்ணரிலை எல்லாரும் யோனத்தான்,யோனத்தான் எண்டு ஒருகூடுதல் வாரப்பாடு.  சோபியா அக்கையிலையும்  எல்லாரும் நல்ல அன்பும், மதிப்புமாய் இருந்திச்சினம் எண்டு நான் நினைக்கிறன்.

நாங்கள் வீட்டுக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டம். பின்னுக்கு முற்றத்திலை கட்டி வைச்ச குதிரையளை அவிட்டம். அப்ப நான் 
" அண்ணர்! சோபியா அக்கையிலை என்ன புதினம் இருக்கு? எல்லாச் சனமும் அவவுக்குத் தலைவணக்கம் செய்யுதே?" எண்டு அண்ணரிட்டை  கேட்டநான் . அப்ப 
"அதுதானே? உந்தச்சனம் எல்லாம் தலையிலை வைச்சுக் கூத்தாடிற அளவுக்கு  சோபியாவிட்டை என்ன புதினம் கிடக்கெண்டு  நமக்குந்தான் கனகாலமாய்ப் பிடிபடுதில்லை."
எண்டு ஒரு அடைச்ச குரல் எங்களுக்கு அருகாலை கொஞ்சம் இருட்டான பக்கம் கேட்டுது. ஆரதெண்டு  முதலிலை தெரியேல்லை.  ஒரு உருவம்  கொஞ்சம் அரங்கி வந்து யன்னல் வெளிச்சத்திலை முகத்தைக் காட்டினது. செம்பட்டை சுறுள் தலைமயிர்,செம்பட்டை குறுந்தாடி மீசையோடை  ஒராள். பானகப்பந்தலிலை இம்மளவு அமளிக்குள்ளையும் அவர் இருந்தவர். அவர் பெரிசாய் மற்றவையளோடை கலகலப்பாய்ப் பழகவில்லை. சொல்லப்போனால் கொஞ்சம் எரிச்சலும் கொதியுமாய்த் தான் இருந்தவர். பாட்டுக்களுக்கும் வாயசைக்கவேயில்லை   அந்த மனிசன். படலையைத் தாண்டிக் குதிரையளிலை வரேக்கை; 
"ஆரிந்த மனிசன்?" எண்டு கேட்டன்.
"அவருக்குப் பேர் கூபர். சோபியா அக்கையிலை என்ன தனிப் புதினம் இருக்கெண்டு அவருக்கே தெரியும்." எண்டு அண்ணர்  சொன்னவர். நாங்கள் வீட்டுக்கு குதிரையளிலை போய்க் கொண்டிருந்தநாங்கள். அது ஒரு இதமான குளிர்ச்சியான இரவு. அப்ப வானம் ஒரு முகில்மூட்டமும் இல்லாமல் வெள்ளி பூத்துக் கிடந்திது. நாங்கள் சீவிச்ச பூமிநச்சத்திரம் எங்கை இருக்கெண்டு தேடினநான். அப்ப அண்ணர் ,
"ம்கும்ம்ம் ... பூமி நச்சத்திரம்.... அது எங்கினையோ கண்ணுக்குத் தெரியாத தூரத்திலை அண்டவெளியிலை அசைஞ்சு கொண்டிருக்கும். உன்னாலை அதைப் பார்க்கேலாது" எண்டு சொன்னவர். உதைக்கேட்க என்னவோ சொல்லத் தெரியாததொரு வெப்பிசாரத்திலை  மனசு  கனத்துப் போச்சு!
                                                  (மனசு ஆறட்டும்,பேந்து சந்திப்பமே?)

  சொற்பொருள் விளக்கம் :

சாங்கம் - தோற்றம் 
வளர்த்துதல் - படுக்க வைத்தல் 
தைலாப்பெட்டி - மரப் பெட்டகம் 
மோடி - நாகரிகம் ,fashion
புளுகம் <புளகம் - களிப்பு 
பறணை - மிகப்பழைய ,புராதன 
அசுகை - சத்தம் 
தீன்- உணவு,சாப்பாடு 
தோட்டத் தறை - தோட்டத் தரை 
அக்கை - அக்கா 
கமக்காறிச்சி < கமக்காரி -உழத்தி 
சாறுதல் - கொத்துதல் 
கண்டின - கண்டிப்போன 
பின்னேரப் பாடு- பின்னேரப் பொழுது 
செக்கல் - வானம் சிவந்து வரும் மாலைப் பொழுது 
பொழுதறு மட்டும் = பொழுது + அறு  மட்டும்  - இருட்டும் வரை 
ஏமஞ்சாமமாயும் - இரவிரவாயும் 
விசர் - பைத்தியம் 
வாருமன் < வாருமேன் = வாரும் +ஏன் - வாருங்களேன் 
வெள்ளாப்பு -விடிகாலை 
பைம்பல் < பம்பல் - களிப்பு, மகிழ்ச்சி 
கோதம்பமா - கோதுமைமா 
புறியமில்லாதது - பிரியமில்லாதது, விருப்பமில்லாதது 
ரோசாக்கண்டு < ரோசாக் கன்று - ரோசாச்செடி 
பின்னை - பின்னே 
பேந்து <பெயர்ந்து - பின்பு 
ஆசாரி - தச்சன் 
பருவம்  - காலம்  ,season
மெய்மெய்யான - உண்மையான, original
தாக்கமான -பலமான 
தன்னைப்புளி -<தன்னைப்புழுகி - தற்பெருமை பேசுபவர் 
மொய்ச்ச சீர் - மொய்த்தபடி 
பழகின சீர் - பழகினபடி 
எக்கணம்<இக்கணம்  - இந்தநேரம்  
எக்கணம் - எந்தநேரத்திலும் 
சீக்கை < சீழ்க்கை 
புழங்குதல் - பழகுதல் 
புழங்குதல், பாவித்தல் - உபயோகித்தல் 
மைக்க -மற்ற 
அமைச்சல் < அமைதல் -பொருத்தம் 
அமளி-இரைச்சல் 
பெடிபெட்டை - சிறுவர் சிறுமியர் 
குஞ்சுகுருமன் - சிறு பிள்ளைகள் 
தவ்வல்- கைப்பிள்ளை
சதிரம் < சரீரம் - உடல் 
மூஞ்சை -முகம் 
பெடி - பையன் 
கூட்டாளி -நண்பன் 
பட்சம் - அன்பு 
திறுத்தி  <  திருத்தி -திருப்தி 
முசிப்பாற்றி = முசிப்பு +ஆற்றி - களைப்பு ஆற்றி  - நகைச்சுவை 
அக்களிப்பு - மிக்க மகிழ்ச்சி 
இடைசுகம் - இடைக்கிடை 
விண்ணாணம் - புதுவிதம் ,பேரறிவு 
பிடிபடவில்லை-- புரியவில்லை 
வாரப்பாடு - அன்பு 
அவிட்டம் < அவிழ்த்தம் - அவிழ்த்தோம் 
அரங்கி - அசைந்து , தள்ளி வந்து 
வெப்பிசாரம் < வெவ்விசாரம் - கடுந்துன்பம் 


This entry was posted on 1:21 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On January 12, 2013 at 7:10 PM , கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!