Author: ந.குணபாலன்
•3:21 AM
                                  

                                                    "அப்பா தேவை"


"VAFFELHJARTE"(WAFFLE  HEART ) என்ற பொத்தகத்திலிருந்து 
 நொர்ஷ்க்(NORWEGIAN) மூலம்: மரியா பர்ர் (MARIA  PARR )
தமிழாக்கம்: ந.குணபாலன் 

மைக்காநாள் அப்பா தன் கோடைகாலக் கட்டுமானத் திட்டத்தை ஆரம்பித்து விட்டார். ஒவ்வொரு கோடைக்கும் இப்படி ஏதாவது ஒரு கட்டுமானத் திட்டம் துவங்கி விடுவார். அது எப்போ பார்த்தாலும் பெரீஈ ஈ சாக கயிட்டமானதாக இருக்கும். அதோடே அது பற்றி எப்பவும் அம்மா தான் முடிவெடுப்பா. "இஞ்சருங்கோ! இந்த முறை இதை இப்பிடிச் செய்ய வேணும்" என்று உலுப்பி எடுப்பா. அப்பாவும் புறு புறுத்துப்   புறு புறுத்துச் செய்து முடிப்பார். இந்த வரியம் வெய்யில்முற்றத்துக்கு  சுற்றிவரக் குந்து கட்ட வேண்டும் என்று சொல்லி விட்டா அம்மா. பக்கத்து வளவு  லேனாவுக்கு அதையிட்டுப் பெரிய திறுத்தி. அப்பத்தானே அந்தக் குந்து மதிலிலே கீழே விழாமல் சமநிலைக்கு நடந்து பழகலாம்.
 ¨
   "நீங்கள் அதை ஒடுக்கமாய்,உசக்க கட்டவேணும்." தன் ஆசையை கட்டளையிடுவது போல லேனா சொன்னாள்.செங்கற் கட்டிகளின்   நடுவே இருந்த அப்பா ஏதோ அனுங்கினார். இந்தக் கோடைகாலத்துக் கட்டுமானத்திட்டம் அவருக்கு விருப்பமில்லை. கோடை காலமென்றால்  வெய்யில்முற்றத்திலே சாய்மனைக் கட்டிலில் வெயில் குளித்தபடி கோப்பியை பருகுவதே அவருக்குப் பேரின்பம். அதற்கு வழியில்லாமல் வரியாவரியம் அம்மா ஒரு வேலை  வைத்துவிடுவா.நானும், லேனாவும் கனக்க நேரம் நின்று கட்டுவேலையைப் பார்க்கவிடாமல் எங்களை வேறே  எங்கேயாவது தள்ளிப் போய் நின்று விளையாடச் சொல்லிக் கலைத்துப் போட்டார்.

    "உனக்கு ஒரு அப்பாவும் இல்லையே?" மூச்சு வாங்கியபடி  கேட்டேன். லேனாவின் வீட்டு வளவுக்கும், பதிந்த மதிலடிக்கும்  வேலிப் பற்றைகளைத் தாண்டி விலத்தி கதியாக ஓடி வந்ததில் மூச்சுப் பறிந்தது
   "ஏனில்லாமல்?" என்றாள் லேனா. இரு கரங்களையும் பக்கவாட்டில் நீட்டியபடி சமநிலை தளும்பாமல் பின்னோக்கி மதிலில் நடந்தாள்.அவளது தேய்ந்த காலணிகள் கடகடவென என்னை விட்டு அகல முயற்சித்தன.
   " பின்னை இப்ப அவர் எங்கை?" லேனாவுக்கு அவர் எங்கே என்று தெரியவில்லையாம். லேனா பிறந்தநேரம் அவர் விட்டுவிட்டு  ஓடிவிட்டாராம் .
   "என்னது விட்டிட்டு ஓடிட்டாரோ?" நான் திகைத்துப் போனேன்.
   "உனக்கென்ன தோட்டம் துலையிலையே?" லேனா எரிந்து விழுந்தாள். என்னை உற்றுப் பார்த்தாள். 
   "அப்பாஎண்டு ஒருத்தர் கூட இருக்கிறதாலை என்ன பலன்?" சீறினாள். எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பலன் என்ன பலன்?...
  "அப்பாக்கள் எண்டால் கனக்கப் பாரமான வேலை செய்வினம். குந்து எழுப்பிக் கட்டிறது...வேறை மற்றக் கட்டு வேலையள்  செய்யுறது...மதில் கட்டிறது ..."    எட லேனா வீட்டுக்கு மதில் இருக்கிறதே! அப்போ மதில் கட்டுகிற கதை எடுபடாது.
  "இன்னும் வேறை என்னவெண்டால்...."
ஒரு அப்பாவை கொண்டு என்னென்ன மாதிரியான வேலையெல்லாம் செய்விக்கலாம் என்று நான் முன்னேபின்னே யோசித்துப் பார்த்ததேயில்லை.  ஏதும் உத்தி தோன்றக் கூடும் என்று எண்ணி, பற்றை வேலிக்கு மேலாலே எங்கள் வீட்டை எட்டிப் பார்த்தேன். அப்பா தான் துவங்கிவிட்ட கோடைகாலத்   திட்டத்தை சினந்து சப்பித் துப்பிக் கொண்டிருந்தார்.அவர் முகம் கொதியில் தக்காளிப்பழம் போலச் சிவந்து கிடந்தது.அவரைக் கொண்டு வேறென்ன செய்விக்கலாம் என்று அத்தருணம் எனக்கு ஒன்றுந் தட்டுப் படவில்லை.
 "ஆ! அப்பாக்கள் அவிச்ச வெண்டிக்காய்  சாப்பிடுவினம்" .


எனக்கோ இல்லை லேனாவுக்கோ ; அவித்த வெண்டிக்காய் என்றால் சுத்த சூனியம். கண்ணிலேயும் காட்டப்படாது. அது சளிபோலே இருக்கும் இல்லையே? மனவருத்தமான காரியம் என்னவென்றால்;எங்கள் வட்டாரமான  கட்டை மற்றில்டாவில்  இருக்கின்ற தோட்டத்துத் தறையிலே பாதிக்கு மேலே விளைவதெல்லாம் வெண்டிக்காயே தான். லேனாவினதும், எனதும் அம்மாக்கள் இருவருமே
  "வெண்டிக்காய் ஒவ்வொருத்தருக்கும் உடம்புக்கு நல்லது..., ஒரு வெண்டிக்காயிலை ஒரு முட்டையின்ரை சத்து இருக்கு...,உடம்புக்கு சத்து வேணுமெண்டால் வெண்டிக்காய் சாப்பிட வேணும்,,," என அலட்டுவார்கள். அப்பா ஒன்றும் பறைய மாட்டார். என் பங்கு வெண்டிக்காயையும் தான் எடுத்துச் சாப்பிடுவார். அம்மாவை அங்காலே எழும்பிப் போக  விட்டுவிட்டு அப்படியே அப்பாவின் தட்டிலே என் பங்கு வெண்டிக்காய் முழுமனையும் வழித்துப் போட்டு விடுவேன்.


நான் சொன்னது லேனாவுக்கு ஒன்றும் மடத்தனமாகப் படவில்லை. குறிப்பாக அந்த வெண்டிக்காய் விசயம் அவளுக்குப் பிடித்துவிட்டது என நினைக்கிறேன்.
மதிலிலே நின்ற லேனாவுக்கு அப்பாவையும் அவரது இந்த ஆண்டுத்திட்டத்தையும் வடிவாகப் பார்க்கக்  கூடியதாக இருந்தது. கொஞ்ச நேரம் ஒற்றைக்காலிலே நின்றபடியே அவரது நடவடிக்கைகளை ஆராய்ந்தாள். கடைசியில் ,
 "ம்கும் " என்றபடி கீழே குதித்தாள்.
                             

 மக்னுசு எனக்கு அண்ணா. மக்னுசு அண்ணா வாங்க மறந்து போன பொருட்களை வாங்குவதற்காக பின்னேரப் பாட்டுக்கு கடைப்பக்கம்  நானும், லேனாவும் போனோம். லேனாவுக்கு அம்மா கடையிலே வேலை செய்கிறா. நாங்கள் போனநேரம் பார்த்து பொருட்களைக் கணக்கெடுப்புச்  செய்து கொண்டிருந்தா.


                                          
  "வாங்கோ மக்கள்" என்று வரவேற்றா. நான் வணக்கம் கூறித் தலையசைத்தேன். லேனா கையசைத்தாள். தேவைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்ததும், கதவிலே தொங்கிய விளம்பரத்துண்டுகளை வாசித்தோம். வழமையாக அப்படி வாசிப்போம். இன்று ஒரு பெரிய விளம்பரத்துண்டு தொங்கியது, எங்கள் கவனத்தை ஈர்த்தது. கிட்டே நெருங்கி வாசித்தோம்.

  "நாய்க்குட்டி விரும்பி வாங்கப் படும்.
 கலப்பினக் குட்டி மிகவும் விரும்பப்படும்.
 அழுக்கின்றி தூய்மையாக இருக்க வேண்டும்."

லேனா திரும்பத் திரும்பப் கனக்கத் தரம் வாசித்துவிட்டாள்.
 "நீயென்ன நாய்க்குட்டி வேண்டப்போறியே?" என்று கேட்டேன்.
 "இல்லை. ஆனா இது இந்த மாதிரி விளம்பரத்துண்டு அப்பாக்களுக்கும்   
   சரிப்பட்டு வருந்தானே?"


மக்னுசு அண்ணா தினசரிப் பத்திரிகைகளில் வரும் துணைவர்/துணைவி  தேவை விளம்பரங்களைப்  பற்றி ஒருக்கால் எனக்கும், லேனாவுக்கும் சொன்னவர். தமக்கு ஒரு காதலனோ, காதலியோ தேவையென்றால்  இப்படியான அறிவித்தல்களைத்தான் தினசரிப் பத்திரிகைகளில்  ஆரும் போடுவிப்பார்களாம். ஒரு அப்பா கிடைக்க வேண்டும் என்றவுடனே  அப்படியான ஒரு விளம்பரத்தைப் பற்றித்தான் லேனா நினைத்துப் பார்த்தாளாம். ஆனால் பத்திரிகை விடயத்தில் ஒரு பாதகமான சங்கதி இருக்கிறது. ஆர் எவர் எல்லாம் அந்த விளம்பரத்தைப் படிக்கிறார்களோ என்று அறிய முடியாது.  ஆரும் ஒரு எத்தன், ஏமாற்றுக்காரன், காடை கடைப்புளி,  அல்லது கட்டுப்பாடு கண்டபடி  வைக்கிற ஒரு பள்ளிக்கூட அதிபர் ... என்று பொருந்தி வரமாட்டாத  சீவன் ஒன்று வீடு தேடி வந்துவிட்டால்?.... அதை விடக் கடையிலே விளம்பரத்தைத் தொங்க விடுவது திறமான வேலை, பாதுகாப்பானதும் கூட. கடைக்கு வந்து போகின்றவர்களில் அநேகமானவரை லேனாவுக்குத் தெரியும். 
  "திறில்லை!" என்று என்னைக் கூப்பிட்டாள்.
  " நீ எழுது.  நீ வடிவாத் தொடுத்தெழுதுவாய் எல்லே?." கடையினுள் போன லேனா கையில் காகிதமும், பேனையுமாகத் திரும்பி வந்து என்னிடம் நீட்டினாள்.  அவளது ஒரு பக்க எலிவால் பின்னல் கொஞ்சம் சொத்தியாக  கிடந்தது. மற்றும்படிக்கு ஒரு முடிவுக்குவந்தது  முகத்தில் உறுதியாகத் தெரிந்தது. எனக்கென்றால் இந்த விளம்பர விடயத்தில் நம்பிக்கையில்லை.
 "என்னத்தை எண்டு எழுதிறது? எப்பிடி எழுதிறது?"கடைக்கு வெளியாலே இருந்த மரவாங்கில் நீட்டி நிமிர்ந்து கிடந்தாள் லேனா. அவள்  மூளையைக் கசக்கித் தனக்குள் யோசித்தது வெளியாலே எனக்கும் கூடிக்  கேட்டது.
     "ம்.. எழுது < அப்பா தேவை > " ஆரம்பித்தாள் அவள்.
நான் பெருமூச்சு விட்டபடி ,
     "லேனா நீ நம்புறியோ?..." என்று இழுத்தேன்.
     " ஒண்டும் பறையாதை. சொல்லுறதை எழுது."நாண்டு கொண்டு நின்றாள்.
நான் தோளைக் குலுக்கிவிட்டு லேனா சொன்னதை எழுதினேன். பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். கடைசியாகச் செருமிக்கொண்டு, தெளிவாகப் பலத்து சொன்னாள்.
    " அன்பானவராக , நல்லவராக, இருக்கவேண்டும்.
      அவித்த வெண்டிக்காய் விரும்பிச் சாப்பிடுபவராக இருக்க வேண்டும்.
      எல்லா நற்குணங்களிலும் பார்க்க இந்த இரண்டும் முக்கியமாகப்
       பார்க்கப்படும்!"
நான் புருவத்தைச்  சுருக்கினேன். இது வாசிக்கக் கொஞ்சம் சரியாக இல்லையே!
       "வெண்டிக்காய் பற்றி கட்டாயம்  சொல்ல வேணுமே லேனா?"
இல்லை. லேனாக்கும் அது நிச்சயம் சொல்ல வேண்டுமோ என்று சரியாகத் தெரியவில்லை..ஆனால் வரப்போகிற அப்பா அன்பானவராக இருக்க வேண்டும். இறுதியாக விளம்பரம் இப்படியாக அமைந்தது:
                                                  
 "அப்பா தேவை!"
   " அன்பு மிகவும் காட்டுபவராகக் கட்டாயம் இருத்தல் வேண்டும்! " 

         "பிள்ளைகளில் பாசம் உள்ளவராக இருத்தல் அவசியம்! "


            விளம்பரத்துண்டின் தலைப்பிலே  லேனாவின் குடும்பப்பெயரையும், தொலைபேசி எண்ணையும் எழுதினோம். நாய்க்குட்டி தேவை விளம்பரத்துக்குக் கீழே நெருக்கமாக அப்பா தேவை விளம்பரத்தை லேனா ஒட்டினாள்.
   "உனக்குச் சரியான கீலா!" என்றேன் நான்.
   "எனக்கொண்டும் கீலா இல்லை. கொஞ்சம் சுறுக்காக சிலபல  காரியங்கள்
     நடக்க வேணுமெண்டு தான் இதைச் செய்கிறன். அம்மளவுந்தான்." மறுமொழிந்தாள் லேனா.
                                                      (தொடரும்)

சொற்பொருள் விளக்கம் :

   மைக்கா நாள்- மறுநாள் 
   கயிட்டம்-கஷ்டம் 
   வரியம்>வருசம்
   வரியாவரியம்>வருசாவருசம் 
வெய்யில்முற்றம்
                                
  வெய்யில்முற்றம்- வெயில் குளிப்பதற்காக வீட்டுடன் சேர்த்து முற்றத்திலே   
                                                கட்டப்பட்டிருக்கும் இடம். 
    குந்து-இடுப்பளவை விட உயராத சுவர்.
    கன, கனக்க= அதிக ,கூடிய 
    தோட்டம் துலையிலையோ?> தோட்டம் தொலைவிலேயோ?- காது கேட்கவில்லையோ?
   தோட்டத் தறை-தோட்ட நிலம்
    சப்பித் துப்புதல்- வசைபாடுதல்
    பின்னேரப்பாடு-மாலைநேரம்
    பற்றைவேலி-புதர்வேலி
   சுத்தசூனியம்-பிடிக்காத விடயம்.
   நாண்டு கொண்டு- தொங்கிக் கொண்டு, பிடிவாதமாக 
    சொத்தி-கோணல்
     கீலா-கோணல் புத்தி   
    அம்மளவும்-அவ்வளவும் 


This entry was posted on 3:21 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: