Author: ந.குணபாலன்
•5:35 AMசின்னப்பொடியன் இவனுக்கு 
அன்பு என்றால் என்னவென்று
அடையாளம் காட்டும் 
இனிய பெற்றோரே!
இவனது  செய்கை,
இவனது அடம்,
இவனது சேட்டை,
இவன் தரும் கரைச்சல்கள்......
சில நேரங்களில்
சலிக்க உங்களைச் செய்யும்.
சில  வேளைகளில்
சினம் கொள்ள வைக்கும்.
என்னவாக இருந்தாலும் ...
இவன் ஒரு சின்னப்பொடியன் .....
இவன் உங்களின் பிள்ளை இல்லையே?
 
சின்னஞ்சிறிய இந்தக்
கால்களின் தடங்களும்,
கைகளின் பதிவுகளும்......
பின்னொரு நாளில்
எண்ணிப் பார்க்கையிலே
புன்சிரிப்பைச் சுமந்து தரும்!


காலக்  கண்ணாடியில்
கடக்கும் இந்தக் காலங்களை
மனக் கண்ணோரம் இனிதே
மீட்டிடும் போதினிலே....
இமையோரம் களிப்போடு
கசியும் கண்ணீரும்,
இதழோரம் இழையோடும்
இனிய புன்முறுவலும்;
போட்டிக்கு வாராவோ?


உங்கள் பாதுகாவலிலும், பரிவிலும்,
தங்கி வளரும் தவ்வல் இவன்.
தான்,தனக்கு,தனது என்று மட்டுமே
நினைக்க இவனுக்கு வருகிறதே!
தன்னைச்சுற்றியே எல்லாம்
என்றே இவனுக்கு தெரிகிறதே!
தன்னலமே முன்னணியில்
தலையாட்டும் பருவம்
இன்றையநாளில் இவனதன்றோ?
இவனை வளரும்  வழிகாட்டி
முன்னேற்றிட வேண்டிய   
இவனது உலகத்தின் முதல் உறவே!
இவன் புரளி குழப்படிகளுக்குத்
தண்டனையாக உடல்வலியை
தயைசெய்து தந்திட வேண்டாமே!


 பிடிவாதத்துக்கு
அடி மருந்தாக அமைந்திடாதே!
அடி ஒரு கணக்கில்
பழக்கமான ஒரு
நட்பாகிடவும் கூடும்.
சொன்ன சொல் மாறாமல்
தன்னிலை தளும்பாமல்
வகுத்திடும் எல்லைகள்
வளர்த்திடும் கொள்கைகள் இவனைத்
தடுமாற்றம் இன்றி
நடமாட வைக்கும்.


அரியண்டம் தாங்கேலாமல்
ஒருகணம் அடித்து;
அழுத கண்ணீர் கண்டு
மறுகணம் அன்பால் துடித்து;
இளகும் உங்கள் மனமும்,
தளரும் கொள்கை வேலிகளும்;
தான் செய்வதே சரி
என இவனை எண்ணிடப் பழக்கும்.


அடியும் திட்டும் இவனை
சரி பிழை பற்றி ஆராயும் அறிவற்ற,
அடிக்கு அடங்கும் அடிமையாக
வசைக்கும், வாய்ச்சாலத்துக்கும்
வசைந்து போகும் வீணனாக,
ஆக்கிடாதோ? அதுவோ உம் ஆசை?


பிள்ளையார் பிடிக்க
உள்ளத்தால் உள்ளுகின்றீர்!
குரங்காக அது
உரு மாறுவது சிலநேரம்.
பிள்ளைமனம் பற்றி
எள்ளளவும் எண்ணாமல்
பிள்ளைவளர்ப்பில் அடித்தல் என்பது
பின்னிப்பிணைந்தது என்றே
பிழையாக உன்னுகின்றீர்!
பிள்ளை என்றாலும்  இந்தப்
பிஞ்சு நெஞ்சுக்கும்
வெக்கமும், துக்கமும் உண்டன்றோ?
நொந்த உடலும்,வெந்த மனமும்;
சிந்தையில் கசப்பை பதிந்திடாதோ?
எந்த நாளிலும் எண்ணும் போதெல்லாம்
எரிச்சலைக் கொதியை கிளப்பிடாதோ?


பிந்திவரும் காலத்தில்
பெற்றோருடன் தனக்கிசைந்த
சீவியம் இதனை இவன்
சிந்திக்கும்  போதினிலே
ஆவியும் அகமும் மகிழ்வுற இவன்
அசைந்திட வேண்டும்.
இன்பத்தின் நினைவில்
இசைத்திட வேண்டும்!
இவன் தன் எண்ணங்களும்
உங்கள் ஆசைகளும் ஒன்றாக
இசைந்திட வேண்டும்!
இசைவீரோ?
இவன் பிறவிக்கு உறவான
இனியோரே!
This entry was posted on 5:35 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On September 14, 2011 at 11:12 PM , V.N.Thangamani said...

அருமையான பதிவு...
வாழ்க வளமுடன்.
அன்போடு
www.vnthangamani.blogspot.com
www.indians-meditation.blogspot.com

 
On November 15, 2011 at 2:18 AM , அம்பாளடியாள் said...

அருமையான கவிதைப் பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு ......