•10:46 AM

பாரீரே! பாரீரே!
இவளைப்
பாரீரோ? பாரீரோ?
ஏழை இவள் இன்னும்
ஏழை ஆயினளே!
ஆயின் என்?
கோழை ஆயினள் அல்லள்!
ஈழமணித் திருநாட்டின்
வளங்களில் ஒன்றென
ஆயினளே!
ஊழ்வினையாய்
உருக்குலைத்த,
எறிகணையின்
வெறித்தனத்தில்;
வாழவேண்டிய தன்
இளந்தாரிப் பிள்ளைகளை,
வாழவந்த மருமக்களை
இழந்தனளே!
ஏழை இவள் இன்னும்
ஏழை ஆயினளே!
ஆயின் என்?
கோழை ஆயினள் அல்லள்!
ஈழமணித் திருநாட்டின்
வளங்களில் ஒன்றென
ஆயினளே!
மிஞ்சி உள்ள
பிஞ்சுகளைப் பேரக்
குஞ்சுகளைத் தன்
மூச்சுள்ள வரை வளர்க்கும்
முடிவுடையாள்! மன
ஓர்மமுடையாள்! இம்
முதியாள்!
ஈழமணித் திருநாட்டின்
வளங்களில் ஒன்றென
ஆயினளே!
ஏலாத வயதினிலும்
இளைய சந்ததியைத்
தழைக்க வைக்குந்
திடமுடையாள்! இப்
புதியாள்!
ஈழமணித் திருநாட்டின்
வளங்களில் ஒன்றென
ஆயினளே!
அளத்தில் மீன்பிடிக்க
அலைகடலில் சவாரி செய்ய,
உயிர்ப்பிழைப்புக்கும்,
வயிற்றுப்பிழைப்புக்கும்,
வழிகாட்டிப் பேரமக்களுக்கு
உளத்திலே உரமூட்டிடும் திட
மதியாள்!
ஈழமணித் திருநாட்டின்
வளங்களில் ஒன்றென
ஆயினளே!
கடல்படு திரவியந் தேடுமிவள்,
கொடும்போர்படு திரவியம்
அல்லளோ? தன்
குலம்படு திரவியங்களைக்
குவலயத்தில்,
வாழ வைப்பள்! தானும்
வாழுவள்!
கொஞ்சும் தமிழ்பாடி, ஒரு
கோடி நூற்றாண்டு! இந்தத்
தமிழ்படு திரவியம்! இவள் ,
தமிழ்பாடுந் திரவியம்!
ஆக்கம்: நடராசா குணபாலன்

0 comments: