Author: ந.குணபாலன்
•1:39 PM

எடியேய் என்ரை  மோனை!
என்னெடி  பிள்ளை இந்தக் கோலம்?
ஏனெடி மோனை இந்தக் கேவலம்?
கண் நிறைஞ்சு நீ 
வாழ வேணுமெண்டு தானே
காதல் எண்டு காட்டினவனைக்
கலியாணம் கட்டி வைச்சநான் நான்?
ஆனா இப்பிடியோ... நீ...,
கண் நிறைஞ்சு...?
காணுமடி! இந்தக்
கிலிசை கெட்ட சீவியம்.


இப்பிடி 
ஓராறு  கண்ணீர்
கண்ணாலை வடிய,
கண்டல் அடிகாயம் 
மேலிலை பதிய,
வெக்கம், வேதினையிலை
மனசும் ஒடிய,
என்ரை பிள்ளை நீ படுற
வாழ்மானத்தை  
கண் நிறையக் கண்டிட்டனடி!
காணுமடி மோனை எனக்கு இது.
இந்தச் சென்மம் நான் எடுத்ததுக்கு!

எத்தினை நாள் கூத்து உது?
ஏனிதைப் பொத்தி மூடினாய்?
எங்களட்டையும்  மறைச்சாய்?
அதென்ன அடி வாங்கி   நிற்கிறாய்?
அது கிடக்க...,
உன்னட்டை ஒரு கேள்வி : 
எப்பெண்டாலும் உன்னைத்
தப்பித் தவறித் தொட்டு
அடிச்சிருப்பமே உன்ரை 
அப்பனும் ஆத்தையும்?
கூடப் பிறந்தவை
கோவத்திலை ஒருக்கால் தன்னும்
தட்டி இருப்பினமே? 
குட்டி இருப்பினமே?
எங்கடை வீட்டிலை;
சீதேவி, செல்வவதி எண்டு
செல்லம் பொழிஞ்சு கொண்டாடி
இருந்த உன்னை...; வடுவா!
இவனொருத்தன் வருத்திறதோ?
வெப்பிசாரமாய்க் கிடக்கடி.


பிரியன் எண்டு சொல்லி ஒரு
பேயன்  வந்து என்ரை
அருமந்த பிள்ளை உன்னை  
அடிப்பனோ?  உன்ரை
அப்பன் எண்டு நானும் அதை
பார்த்துக் கொண்டிருப்பனோ?
கட்டிக் குடுத்திட்டால் என்ன?;
சீட்டு எழுதிக் குடுத்திட்டனே?,
அடிமை எண்டு?... ,
அடிச்சு ஆய்க்கினை பண்ண?


இரங்காதை!,
இவன் தரவழிக்கு .
இறங்காதை!,
உன்ரை மதிப்பை விட்டு.
இரத்தம்,நரம்பு,தசையாலான;
மனிசப்பிறவி பிழை விடுந்தானே?
மன்னிச்சு மறந்து வாழ்ந்தால்
மணவாழ்க்கை நிலைக்கும்
எண்டால்... எப்பிடி?எப்பிடி?
ஊருலகம் பார்த்தது பாதி
பாராதது பாதியாய்;
கோவம் கொதி வாற நேரம்
அவர் கைநீட்டுவராம்;
பாவப் பட்ட சென்மம் நீ 
வாங்கித் தெளிவியாம்.
தேவையே இந்தத்
தரங் கெட்ட சீவியம்?

கட்டினவனை விட்டிட்டுவந்தால்
பொட்டுக்கேடாய் போயிடும் எண்ட
வீணான வறட்டுக் கவுரவம் விடு!
கண்ணகியின்ரை  தங்கச்சியாய்
கணவனே கண்கண்ட தெய்வம் எண்ட
விண்ணாணம் விழல் ஞாயம்
உண்ணாணை உனக்கது வேண்டாமடி!

கல்லானாலும் கணவன்
புல்லானாலும் பிரியன் எண்டு
பேய்க்கதை பழங்கதை பறையாதை ! 
மூலைக்கை முடங்காதை!
ஓராறு கண்ணீர் வடிக்காதை!
முகத்தைத்  துடை!
ஒழும்பி வெளியாலை வா!
தாலி வேலி எண்ட
தடக்கி விழுத்திற கதை வேண்டாம்!
வேலியே பயிரை மேயுமெண்டால்?
வெட்டியெறி தாலியை!


தனக்குச் சமமாய்த்
தாரத்தை மதிக்கத் தெரியாத
தரம் கெட்டவனை
ஆதாரம் உன்ரை வாழ்க்கைக்கு
எண்டு கிடக்காதை.
தன்மரியாதையை கெடுக்காதை.
சங்கடப் படாதை!
உந்த  எளியவன்ரை  
சங்காத்தம் உதவாது!


பிரியன் எண்டு
வந்து வாய்ச்சவன்
உரிமை கொண்டு 
தன்தன் பெண்டிலை  
வந்து கைதொட்டால்,
வாரப்பாடோடை எல்லே
வந்து தொட வேணும் ?
ஆத்திரத்தோடை 
அடிக்கிறதுக்கென்ன
ஆடோ? மாடோ? தன்னைப்
பெத்து வளர்த்தவையிட்டை  
பாத்துப்  பழகினவனே?
அதுக்கு அவன் வேறை
ஆளைப் பார்க்கட்டு.
உது சரிப்பட்டு வரா.
பொம்பிளைக்கு கைவைக்கிறது,
ஆம்பிளைக்கு வீரமில்லை. 
பெண்டில் எண்டு வந்தவளை
பட்சம் இல்லாமல், மதிக்காமல்
பாடு படுத்திறவனை   உந்த
மோட்டுச் சென்மத்தை 
விட்டெறி உன்ரை  மனசை விட்டு!

படிச்ச படிப்பு உன்னை
அடி ஆய்க்கினைக்குப்
படிஞ்சு போகச் சொல்லிச்சே?
மடிசுமந்து பெத்ததாய் உன்னை
மனியன்காறன்   செய்யிற கொடுமைக்கு
மடங்கிப் போகச் சொன்னவவே?
படிஞ்சு போ! பாசத்துக்கு,பண்புக்கு.
மடங்கிப்போ! மதிப்புத் தாற மனசுக்கு.


கொப்பன் நான் கோத்தைக்கு
எப்பெண்டாலும் அடிச்சநானே?உன்ரை
பேரன்மார் கூடஒருநாளும் தங்கடை
பெண்டில்மாருக்கு   கைவைச்சதில்லை.
அங்கினை சொந்தநாட்டிலை கூட
எங்கடை வமிசத்திலை
எவனுமே  மனிசியை வதைச்சதில்லை.
பெண்ணுரிமையைப் பாடமாய்
படிப்பிலையும் சேர்க்கிற
இங்கினை நீ பிறந்து வளர்ந்து
எங்கை? எப்பிடி? இந்த
கோதாரியிலை போற
கொள்கைகளை பிடிச்சநீ நீ?


திரைப்படமும்,திரைநாடகமும்
உரைச்சு வைச்ச பாடமோ உது?
மடச்சி உதெல்லாம்
படங்காட்டுற யாவாரியளின்ரை
மோட்டுத் தனமெடி.
கூட்டிக்குறைச்சு  கூத்துக்காக
போட்டுக்காட்டுற படமெடி!
ஒரு அம்பது அறுவது  சனம்
ஒருமிச்சு கால்கையாட்டி
ஒரே மாதிரி குண்டியாட்டி,
எங்கத்தைக் கோயிலிலை
கூத்து ஆடுது? கும்மி அடிக்குது?
ஆள், இடம் பாராமல்
மெய்மெய்யாக 
ஆர் ஆடிப் பாடுகினம் காதல் வந்தால்?
உந்தப் பொய்நடப்பு   எல்லாம்
உதவாது வாழ்க்கைக்கு.

விரும்பி நீயாகப் பிடிச்ச
மாப்பிளையை
விட்டிட்டு வந்தால்
வில்லங்கமாய் ஊருலகம்
நாக்குவளைக்கும் எண்டு
நாணப் படாதை!
கனக்கக் கதைக்கும் எண்டு 
கவலைப் படாதை! 
உதுக்கெல்லாம் பயந்து
ஊமையாய்க் கிடக்காதை!
உனக்கு முதலிலை நன்மை செய்!
ஊருலகம் பேந்து நன்மை சொல்லும்!

படிச்சநீ   நீ எல்லே?
பெருமையோடை
தனிச்சு நிண்டு
தரத்தோடை 
வாழ்ந்து காட்டு! மன
உரத்தோடை ஓர்மத்தோடை
சீராகச் சீவிச்சுக் காட்டு!
அடிச்சவனை விட்டிட்டு  
வாணை ஆச்சி!
படிச்ச படிப்புனக்குப்
படியளக்கும்!
கிடைச்ச வேலையுனக்கு
கைகுடுக்கும்!
அப்பன்  எண்டு என்னிலை கூட  நீ;
தங்கி வாழத் தேவையில்லை!
துணிஞ்சு வாடா!,
என்ரை ராசாத்தி!-கண்ணீரைத்
துடைச்சிட்டு  வாடா!,
என்ரை பொன்னுக்கண்டு!
அப்பன் நான் உன்னை ஆதரிக்க
எப்பவும் ஆயித்தம்.


வாய்க்குமடா  என்ரை வண்ணமயில்!
உனக்கொரு நல்ல வாழ்க்கை!
வந்தமையுமடா என்ரை தங்கக்கிளி!,
நல்லதொரு எதிர்காலம்!
தேய்பிறையும் திரும்பாதோ?
தேன் நிலவைப் பொழியாதோ?
மற்றவைக்குக் கெடுதியைக்,
கனவிலையும்  
உன்னாத உன்ரை நல்ல
மனசு மாதிரி நல்லது நடக்கும்.
தன்மானம் தாண்டு போகாமல்
தலை நிமிர்ந்து வாழு நீ!
பிறத்திச் சனமும்
பெருமையோடை நிமிர்ந்து பார்க்க
பளிச்செண்டு வழி காட்டுற
வெளிச்சமாய் இரு!
வெள்ளாப்பும், விடியலும்,
எல்லாமே உன்ரை கையிலைதான்!


சொல்விளக்கம்

மோனை,மேனை > மகனே
மகளையும், பெண்பிள்ளைகளையும்   அன்பு மிகுதியில் மகனே என்பது சங்ககாலத்தும் நிலவிய வழக்கம். வாடா,போடா என்று செல்லம்பொழிவதும்  
அப்படித்தான்.அதுபோல எடி, வாடி, போடி என்று ஆண்பிள்ளைகளைச் சொல்வதும்.

கிலிசை  கெட்ட >கிரிசை கெட்ட- கிரியை கெட்ட =செய்கை  கெட்ட-மானம் கெட்ட
ஓராறு  கண்ணீர்-ஆறு போல வழியும்  கண்ணீர்
கண்டல் அடிகாயம்- கன்றிய அடிகாயம்
வாழ்மானம்- அவமானம்
சென்மம்-பிறவி
உன்னட்டை-உன்னிடத்தே  
கூடப்பிறந்தவை<கூடப்பிறந்தோர்
பெத்து வளர்த்தவையிட்டை<பெற்று வளர்த்தவர்களிடம்
செல்லம் பொழிஞ்சு< செல்லம் பொழிந்து- செல்லம் கொடுத்து
தன்னும்<தானும்
வெப்பிசாரம்>வெவ்விசாரம்-கடுந்துன்பம்
பிரியன்>புரியன்>புருசன்-கணவன்
மனியன்காறன்<மனுசன்காரன் -புருசன்
பெண்டில்=பெண்டு+இல்-மனையாள்
மனிசி-மனைவி  
கட்டிக் குடுத்தல்-கலியாணம் செய்து கொடுத்தல்
பேயன்-மூளை கெட்டவன்
தரவழி-வகை
கைநீட்டுதல்,கைவைத்தல்-அடித்தல்
வாங்கித் தெளிதல்- அடி வாங்குதல்
பொட்டுக்கேடு- வெட்கக்கேடு
எளியவன்< இழியவன்< இழிந்தவன்
சங்காத்தம்-தொடர்பு
வாரப்பாடு-அன்பு
பட்சம்-அன்பு
மோட்டுச் சென்மம்- மூடப் பிறவி
கொப்பன்<உங்கப்பன்<உங்கள்  அப்பன் -உங்கள் தகப்பன்
கோத்தை<உங்காத்தை<உங்கள் ஆத்தை -உங்கள் தாய்
எப்பெண்டாலும்<எப்ப என்றாலும்
விண்ணாணம்<விஞ்ஞானம்-பேரறிவு
உண்ணானை<உன்னாணை
விழல் - வீண்
ஞாயம்- நியாயம்
பேய்க்கதை- மூளைகெட்ட கதை
பறையாதை<பறையாதே,-சொல்லாதே
மூலைக்கை< மூலைக்குள்
ஒழும்பி<எழும்பி
அங்கினை <அங்ஙனம்=அவ்விடத்தே
இங்கினை<இங்ஙனம்=இவ்விடத்தே
எங்கத்தை<எங்குத்தை< எங்குத்த< எங்குற்ற=எங்கு+உற்ற=எங்கு அமைந்த
கோதாரி- epidemic
உரைச்ச< உரைத்த-மனதில் படியும்படி சொன்ன
யாவாரி<வியாபாரி
மெய்மெய்யாக  -உண்மையாகவே
நாக்கு வளைத்தல்- வம்பு பேசுதல்
பேந்து<பெயர்ந்து(பெயர்ந்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்>தேவாரம்), பிறகு,பின்பு
படிச்சநீ < படித்தநீ -கல்வியறிவு பெற்றநீ
ஓர்மம்-உறுதி
எடேய்!எடியேய்! என்பது  இளையவர்களை விளிக்கும் சொல்.
எணேய்! என்பது  முதியவர்களையும்; 
அன்பு மிகுதியில் இளையவர்களையும்   விளிக்கும் சொல்.
வாணை=வா+எணேய்
பொன்னுக்கண்டு< பொன்னுக்கன்று-பொன்கன்று 
உன்னாத- நினைக்காத
தாண்டு<தாழ்ந்து, அமிழ்ந்து
பிறத்திச் சனம்<புறத்திச் சனம்-  உறவினர் அல்லாதாவர்
வெள்ளாப்பு-அதிகாலை  


This entry was posted on 1:39 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On July 4, 2011 at 3:43 AM , ஹேமா said...

மகளின் வேதனை கண்டு தைரியமூட்டும் ஒரு அப்பா.சாதரணமா வீட்ல அப்பா சொல்றதுபோலவே இருக்கு.நிறைய எம் வழக்குமொழிச் சொற்களைக் கோர்த்து எழுதினது இன்னும் மெருகேறியிருக்கு !

 
On July 9, 2011 at 4:48 AM , மணிமேகலா said...

தந்தை மகள் பந்தம் வாஞ்சையோடு வெளிப்பட்டிருக்கிறது.

ஊர் சொற்களால் அது வெளிப்படும் போது அது மேலும் அழகும் ஆழமும் பெறுகிறது.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

(முதல் எழுதிய பின்னூட்டம் முழுவதுமாக எழுதப் படாமலே பிரசுரமாகி விட்டதால் அதனை அழித்த நேர்ந்து விட்டது.)

 
On July 19, 2011 at 1:44 PM , விசரன் said...

//விரும்பி நீயாகப் பிடிச்ச
மாப்பிளையை
விட்டிட்டு வந்தால்
வில்லங்கமாய் ஊருலகம்
நாக்குவளைக்கும் எண்டு
நாணப் படாதை!
கனக்கக் கதைக்கும் எண்டு
கவலைப் படாதை!
உதுக்கெல்லாம் பயந்து
ஊமையாய்க் கிடக்காதை!
உனக்கு முதலிலை நன்மை செய்!
ஊருலகம் பேந்து நன்மை சொல்லும்!//

மிக அருமையான வரிகள், குணா. உங்கள் கவிதையில் பதார்த்தம் இருக்கிறது. பூடகமான சில விடயங்களும் எனக்குப் புரிவது போலிருக்கிறது.... அது நான் விசரன் என்பதனாலாயுமிருக்கலாம்.

 
On July 22, 2011 at 4:32 PM , Anonymous said...

சீவிய உரித்து வைத்து சீதனமாக வீடுவளவு பெண்மக்களுக்கு கொடுப்பது யாழ்ப்பாணத்தார் வழக்கம்.
வருகின்ற மருமகன் தம் மகளை சந்தோசமாக வைத்திருக்கிறானோ என்று கண்காணிப்பில் வைத்திருப்பதற்கோ?