Author: ந.குணபாலன்
•9:33 PM
                                 பொன்னுக்குட்டி!(தொடர்கிறது)
                            
                            
 Levande norsk 6.skuleår பொத்தகத்திலிருந்து
நொர்ஷ்க்(NORWEGIAN) மூலம்: JACOB B.BULL
தமிழாக்கம்: ந.குணபாலன்
                                                        
கதைக்களம்  :  மலையும்,வயலும்,காடும்,கடலும், அருகருகே காணப்படும் 
            வடபுலவழியான (NOR(TH)WAY)நோர்வே நாடு 
                                   கதைக்காலம்: ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே.


                                                  


பாறாங்கல்லைப்போல் கனக்கும் நெஞ்சுடன் வீட்டினுள்ளே சென்றேன். யுகான்னெசு படுத்திருக்கும் அறைக்குள்ளே ஒரு சத்தமும் காட்டாமல் உள்ளிட்டேன். அப்பா இடைக்கிடை நுனிக்காலில் அங்குமிங்கும் நடை பயில்வதும், நாற்காலியில் கொஞ்ச நேரம் இருப்பதுமாக இருந்தார். அம்மா அழுதழுது களைத்துப் போய் அந்தச் சின்னக் கட்டிலில் ஒரு பக்கம் சரிந்து கிடந்தா. அந்த அரையிருட்டான அறையிலே அந்தக் குறுகிய மெல்லிய மூச்சானது சீரில்லாது இருந்தது பயத்தைத் தந்தது "ஐயோ! இதென்ன கறுமமாய்க் கிடக்கு" என்று பரிதவிக்க வைத்தது.ஒவ்வொரு தரமும் இருமல் கிளம்பி யுகான்னெசை உலுப்பும் போதும் பதகளிப்போடு அம்மா எங்கள் முகங்களை மாறிமாறிப் பார்ப்பா. 

ஓவியர் யாக்கோப் ப்றட்லாண்ட்
Jacob Bratland  1859 - 1906 (நோர்வே)
அப்பா தன் நடையை ஒருக்கால் நிற்பாட்டினார்.கை மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார். பின்னேரம் அஞ்சரை காட்டினது.
"சாமம் பன்னிரண்டு அளவிலை வந்திடுவினம் எண்டு எதிர்பார்க்கிறன்" என்று கிசுகிசுத்தார்.
"இப்ப நேரம் என்ன?" அம்மா கேட்டா.
"அஞ்சரையாகுது"
"நல்லாப்  பிந்திப் போடுமே? இன்னும் எம்மளவு நேரம் கிடக்கு மணி பன்னிரண்டு ஆகிறதுக்கு"அம்மா அழுதா.
"ஐயோ! இந்தக் கறும காண்டத்தைப் பார்க்க என்னாலை ஏலாது" என் மனம் மூச்சு முட்டிப்போய் அந்த அறையை விட்டு வெளியேறும்படி என்னை ஏவியது. துக்கம் தொண்டையை அடைக்க;எங்கே போகின்றேன்,என்ன செய்கிறேன் என்று யாருமே குழப்பாத எனது தனிமை உலகத்தை நாடித் தஞ்சம் அடைந்தேன்.

இது கடவுளின் ஒரு மோசமான , நடக்கக்கூடாத , தேவையில்லாத ஒரு திருவிளையாடல் என்று எனக்குப் பட்டது. சிலநேரம் பொன்னுக்குட்டியும் இன்னும் தீல்டால் வரை கூடப் போய்ச் சேர்ந்திருக்காதோ? அப்படி என்றால் இனி மேட்டுக்காட்டுப்பிட்டி  இருக்கிறது; அருவிப்பிட்டியும் இருக்கிறது. இரண்டும் பொறுத்த ஏற்றமான பாதை.இவைகளை எல்லாம் தாண்டித்தான் தீன்சேத்துக்கு போக வேண்டும்.

பயனில்லாத வேலை தான் என்றாலும்; நான் திரும்பவும் வெளி முற்றத்திற்கு வந்து காற்றில் வரும் சத்தங்களை கூர்ந்து கேட்டேன். புயல் இன்னும் சரிவர விட்டபாடாயில்லை. வாயைப் பிளந்தபடி ஒலிகளை பிரித்து அடையாளம் காண முயன்றேன்.
"ஆ! அதென்ன? மணிச்சத்தமே?சீச்சீ! சலங்கைச் சத்தமாய் இல்லை."
என்றாலும் காற்றிலே ஒருவிதமான வினோதமான மெட்டு ஒன்று மிதந்து வருவது போல கேட்டது. பணிய(கீழ்) கிராமமான பெர்க்செத் பக்கமாகவும், வடக்காலேயும்   நாய்களின் குரைப்புக் கேட்குமாப் போல கிடந்தது. ஆனால் சலங்கைச் சத்தம் மட்டும் கேட்கவில்லை.

"ஆ! அந்த வினோதமான மெட்டு திரும்பவும் கேட்குதே! என்னது?என்னது?மணிச்சத்தமே? ஓமோம்! சலங்கைச் சத்தமே தான். ஆனால் ஒரு குதிரையின்ரை 
ஓட்டத்துக்கும்,குளம்படியின்ரை தாளத்துக்கும்ஏத்த மெட்டாயில்லை.....
முன்னை பின்னை கேட்டறியாத...... ஒருவித புது இசையாக இருக்குதே..... காத்துவெளி முழுக்க மெள்ள மெள்ள பரவுதே!வெடிச்சு சிதறுதே!அது எங்கடை சலங்கைதான்!எங்கடை பொன்னுக்குட்டியின்சலங்கை தான்!" 

நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு மேட்டுப் பக்கமாக காட்டுப்பாறைப் பாதையை உற்றுப் பார்க்கிறேன். அப்போது காட்டின்,மலைப் பாறைகளின் மறைப்புக்களை தடைகளை உடைத்துக் கொண்டு சலங்கை சத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. 
"சொய்ங்" "சொய்ங்" "சொய்ங்" "சொய்ங்"   
"பங்கை பார்! பங்கை பார்! எங்கடை ஆக்கள் தான் வருகினம்!எங்கடை ஆக்கள் தான் வருகினம்! எங்கடை பொன்னுக்குட்டி தன்ரை  பழுப்புவெள்ளைநிற பிடரிமயிர் பறக்கப் பாய்ஞ்சு பாய்ஞ்சு வருது.கர்த்தருக்கு தோத்திரம்.கர்த்தருக்கு தோத்திரம் " 
நான் சடுதிமுட்டாகத் திரும்பி வீட்டினுள்ளே ஓடினேன். மெத்தைப் (மாடி) படிகளில் தடக்கி விழுந்து எழும்பி மூச்சு இழுக்க அம்மாவிடம் கட்டிலடிக்கு ஓடிப் போனேன். 
"அம்மா பொன்னுக்குட்டி வருது"
"என்னப்பு சொல்லுறாய்?" அம்மா விறுக்கென்று எழும்பினா.
"பங்கை கேளுங்கோ! பங்கை கேளுங்கோ! சலங்கைச் சத்தம் கேட்குது எல்லே ?" என் பரபரப்பு அப்பாவுக்கு பிடிபடவில்லை.
"அதைப் பற்றியே யோசிச்சுக் கொண்டு இருந்தநீ எல்லே ராசா?  அதுதான் உனக்கு அப்பிடிக் கேட்டிருக்கும்" என்றார். நான் சொன்னதை நம்ப முடியாமல் அம்மா,அப்பா இருவருமே சாளரத்தினருகே
சென்றனர்.நானும் நெருக்கியடித்துக்கொண்டு சாளரக் கண்ணாடியிலேமுகத்தை வைத்தேன்.
"பாருங்கோ! பாருங்கோ! தலைவாசலுக்கை வண்டில் நுழையுது."
"இயேசுவே! நன்றி! கர்த்தாவே நன்றி!"என்று தத்தம் நெஞ்சிலே இருவரும் சிலுவைக்குறி இடவும், நானும் என்னெஞ்சில் இட்டுக் கொண்டேன்.
"ஓம் குஞ்சன்!" அப்பா என் தலையைத் தடவினார்.
"நம்பேலாமல் கிடக்கு! காலமை ஆறு மணிக்கு வெளிக்கிட்டு இப்ப பின்னேரம் ஆறு மணிக்கிடையில் திரும்பி வாறதெண்டால் .... எல்லாம் கர்த்தரின்ரை புதுமை தான்" என்று தன்பாட்டில் சொன்னபடி; கஞ்சி போட்டு மடித்த தன் வெள்ளைக் கழுத்துப் பட்டியை சரிசெய்தபடி, தொப்பியையும் கையிலெடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே போனார்.

கீழே தலைவாசலிலே, வேர்வை பொங்க,வாயில் எச்சில் நுரைக்கப் பொன்னுக்குட்டிநின்றது. வாயினால் வடிந்த வீணீரும், நாசித்துவாரங்களில் உள்ள மயிர்நுனிகளில், வெளிவந்த மூச்சுக் காற்றும் ஆலியாகி..., சிறு சிறு முத்துக்களாகி...,மணியாகித் திரண்டு இருந்தது. நான் பொன்னுக்குட்டியின் கிட்டப் போனேன். தலையை மேலும் கீழும் ஆட்டியது. கடிவாளத்தை சப்பிக் கொண்டிருந்தது. கால்களை மாறி மாறி ஊன்றியது.முதுகை வளைத்துநெளிவு எடுத்தது. மேல் உளைவை அதன் அசைவுகள் எடுத்துக் காட்டின.  உந்த சுழற்றி அடிக்கிற வடந்தைப் புயலிலே..., சீரில்லாத ஏற்ற இறக்கப் பாதையிலே..., உந்த இரண்டு முழு ஆம்பிளைகளையும் கதழ்வண்டியில் ஏற்றிக்கொண்டு...,நூறு கட்டையை..., பன்னிரண்டு மணி நேரத்துக்குள் ஓடிக் கடக்கிறது என்றால்..., சும்மா என்ன விளையாட்டுக்காரியமே? 

அப்பா தலைவாசல் படலை வரை வந்து பரிகாரியாரை வரவேற்றார். பரிகாரியாருடனே அவருக்கே உரிமையான மருந்துமணமும் சூழ வந்தது. பரிகாரியாரை தம்பி படுத்திருக்கும் மெத்தை அறைக்கு மேலே அனுப்பிவிட்டு பொன்னுக்குட்டியின் கிட்ட அப்பா வந்தார்.வேர்த்துப்போனதலையைக்,கழுத்தை உருவிவிட்டார். பொன்னுக்குட்டி தனக்கு வழமை போல் கிடைக்கும் சீனிக்கட்டியை தேடி அப்பாவின் கையை மணந்து,மணந்து பார்த்தது. அப்பா அது பற்றி துப்புரவுக்கு அயர்த்துப் போனார். நான் குதிரைமாலுக்குள் ஓடிப்போய் சீனிக்கட்டியை எடுத்து வந்து தீற்றினேன்.

"சவுக்காலை அடிச்சநீயே ஊலா?" இரக்கத்துடன்அப்பா கேட்டார். 
"தேவரீர் சொன்னதாலை அடிச்சது தான். பாவம் வாயில்லாச் சீவன்" சேணத்தை அவிழ்த்தார் ஊலா. அவர் குரலில் குற்றவுணர்வு தெரிந்தது. அக் குற்றவுணர்வு இப்போது அப்பாவின் முகத்திலும் தொற்றிக் கொண்டது. அப்பாவின் சங்கடத்தைச் சமாளிக்க வேண்டி;
"வேறை என்ன செய்யிறது? ஒரு உசிர் இஞ்சாலையோ அங்காலையோ எண்டு இழுத்துப் பறிச்சுக் கொண்டு கிடக்கேக்கை. வேறை வழியில்லை....." என்று ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு பொன்னுக்குட்டியை குதிரைமாலுக்குள் கூட்டிச் சென்றார். 

மெய்தான். யுகான்னெசுவின் உயிர் இவ்வுலகுக்கோ, அவ்வுலகுக்கோ என்று இழுத்துப் பறித்துக் கொண்டு தானே இருந்தது? மைக்கா நாள் மத்தியான நேரம் பரிகாரியார் ஊருக்குத் திரும்பினார். யுகான்னெசுவுக்கு காய்ச்சல் விட்டுவிட்டது. இருமலும் குறைந்து போனது. பரிகாரியாரை பயணம் அனுப்பும் போது அப்பா உணர்ச்சிவசப் பட்டுப்போனார். 
"எங்கடை பிள்ளை தப்பிப் பிழைச்சதற்கு முதலிலை கர்த்தருக்கும், அடுத்தபடியா உங்களுக்கும் தான் பரியாரியார் நாங்கள் நன்றி சொல்ல வேணும்." பரிகாரியாரின் வலக்கையைத் தன் தன் இரு கைகளாலும் சிறைப் பிடித்துத் தன் நன்றியை அப்பா தெரிவித்தார்.  
"சீச்சீ! என்னை விட்டிட்டு நீங்கள் பொன்னுக்குட்டியைத் தான் கொண்டாட வேணும். ஒரு மணி நேரம் நான் வரப் பிந்தி இருந்தாலும் நிலைமை கை பறிஞ்சு போயிருக்கும்." என்றபடி தன் மேலை முழுவதும் மூடி ஓநாய்த்தோல் மேலங்கியை அணிந்து கொண்டு வெளிக்கிட்டார்.
"சரி.பின்னை வாற கிழமை வந்து பார்க்கிறன்."
"போயிட்டு வாங்கோ பரியாரியார்" அப்பா விடை கொடுத்தார். கதழ்வண்டியை இப்போது கருமன் என்ற குதிரை இழுத்தது. 
ஓவியர்:Fritz Thaulow (1847-1906)நோர்வே
                                                                              
  
                                                            இது நடந்து ஒரு இரண்டு நாள் போயிருக்கும்.அது ஒரு வெள்ளிக்கிழமை. அப்பா தன் பணிமனை அறைக்குள் இருந்தார். அடுத்த சனிக்கிழமை கோயிலிலே ஒரு கலியாணச் சடங்கு. அந்தச் சடங்குக்கேற்ற தோத்திரங்கள்,பாடல்கள், பொருத்தமான வேத வசனங்கள் என்று மாப்பிள்ளை,பெண்பிள்ளையின் விருப்பப்படிமுதலே ஆயத்தப் படுத்தி வைத்து இருந்தார்.அதைவடிவாக, சீராக இறகுப்பேனையால் மைக்கூட்டில் தொட்டுத் தொட்டு திறமான தாள்களில் படி எடுத்துக் கொண்டு இருந்தார். ஊலா பாதிரிமாளிகைக்கு வந்தார். பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்றார். எழுத்து வேலையில் மூழ்கி இருந்த அப்பா நிமிர்ந்தார். தன் மூக்குக் கண்ணாடியைக் கொஞ்சம் கீழிறக்கி விட்டு, அந்த இடைவெளிக்கு ஊடாலே ஊலாவைப் பார்த்தார்.
"என்ன ஊலா? என்ன சங்கதி?"
"பொன்னுக்குட்டியின்ரை நிலைமை தான் சரியாயில்லை தேவரீர்!" ஊலா தன் முரட்டு விரல்களைப் பினைந்த படி நின்றார். 
"ஏன்? என்ன பிரச்சனை பொன்னுக்குட்டிக்கு?" அப்பா முகம் வெளிற இருக்கையை விட்டு எழுந்தார்.
"சளிச்சுரம் பிடிச்சுப் போட்டுது" பலமில்லாத குரலில் ஊலா சொன்னார்.
"வாயில்லாச் சீவனைப் போட்டு நல்லாத் தான் வாட்டியிருக்கிறாய் போலை" அப்பாவின் குரல் அதட்டுமாப் போலிருந்தது. ஊலா கிளம்பிய எரிச்சலை மறைக்க தெண்டித்துத் தோலால் ஆனா தன் தொப்பியை திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஆற்றேலாமல் திருப்பிச் சொன்னார்.
"ஒண்டில் பாதிரியாரின் பிள்ளை இல்லாட்டில் குதிரை எண்டொரு நிலைமை எல்லே இருந்தது.இல்லையே தேவரீர்?"
"குறை நினையாதை ஊலா. நான் பிழையாய்ச் சொல்லீட்டன்" என்று அப்பா பிழையை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டார்.
"மிருக வைத்தியருக்கு உடனடியா ஆளனுப்பன்"
"ம்.... மிருக வைத்தியர் வந்திட்டார்"
"என்னவாம்? என்ன சொல்லுறார்?"
"தன்னாலை ஏலும்ஆனதைச் செய்யிறன் எண்டுறார்"

அப்பா மேலங்கியை மாட்டிக் கொண்டார். ஊலாவுக்குப் பின்னாலே போனார். குதிரைமாலில் பொன்னுக்குட்டி நின்ற நிலைமை கண் கொண்டுகாண முடியாத ஒரு கொடுமையாகக் கிடந்தது. கால் நாலும் உதறி நடுங்கினது. கொடி தொங்கிப் போன மாதிரி தலை தொங்கி இருந்தது. செவி இரண்டும் மடிந்து கிடந்தது. பளிச்சென்று இருக்கும் அதன் வடிவான கண்ணிரண்டும் பொலிவில்லாமல் கிடந்தது. உபாதியில் தடக்கி வரும் மூச்சும், இடைக்கிடை இருமலும் தும்மலுமாக அது போராடிக் கொண்டு இருந்தது.

யுகான்னெசு வருத்தத்தில் விழுந்து ஆறாம் நாள். தன்னுடைய சுகயீனம் குறைந்து அமைதியாக இப்போது நித்திரை கொள்ளத் துவங்கி இருந்தான். அவனுடைய வருத்தம் தெளியத் தெளிய; அவனது உயிர் காக்கப் பாடுபட்ட பொன்னுக்குட்டியின் நிலைமை வரவரத் தேய் பிறையானது. கம்பளிப்போர்வையால் போர்த்தினார்கள்...., மேலைக்,காலை உரஞ்சித் தேய்த்தார்கள்...., கடுங்கோப்பி பருக்கினார்கள்..., தெரப்பந்தைலத்தைப்(turpentine) பூசிவிட்டார்கள்...,
எந்தவொரு கைவைத்தியமும் மிச்சம் வைக்கப் படவில்லை. ஒவ்வொருநாள் காலையிலும் ஊலா முந்தின இரவில் பொன்னுக்குட்டியின் நிலைமை எப்படி இருந்தது என்று தகவல் தருவார். பாதிரிவளவில் பாதிரியார் முதற் கொண்டு பணியாளர் வரை எல்லாருமே பொன்னுக்குட்டி வருத்தத்திலே கிடந்தது உத்தரிப்பதைக் கண்டு மனவருத்தப் பட்டனர்.

கடவுளே! பெருமானே! என்று இப்போது யுகான்னெசுஒழுங்காகச் சாப்பிட , நடமாட வெளிக்கிட்டுவிட்டான்.ஆனால்சுகயீனத்தின் சுவடு இன்னும் பாதிரிவளவைவிட்டுப் போனபாடாய் இல்லையே. பாதிரிவளவில் நடமாடுகின்ற சனம் எல்லாம் ஒரு சத்தம் சலார் இல்லாமல் இயங்கினது; பொன்னுக்குட்டிக்கு அமைதி வேண்டும் என்பதற்காக. யுகான்னெசுஒரு சனிக்கிழமை தான் வருத்தம்என்று வந்து படுக்கையில் விழுந்தவன். சனியோடு சனி எட்டு நாள்.......,மைக்கா நாள் ஞாயிறு ஒன்பதாம் நாள். அன்றைக்கு காலை நான் படுக்கையால் எழும்பக் கொஞ்சம் பிந்திவிட்டது. காலையுணவுக்கு சாப்பாட்டறைப் பக்கம் வந்தேன். நான் சொன்ன காலை வந்தனத்துக்கு அம்மா,அப்பாவின் பதில் வந்தனங்கள் வழமை போல இல்லை. எனக்கு அது உறைக்கவும் இல்லை . என்னுடைய தியானம் முழுக்க பொன்னுக்குட்டியிடம்.கதியில் சாப்பிட்டுவிட்டு, ஓடிப்போய் ஒருக்கால் பொன்னுக்குட்டியை பார்க்க வேண்டும்.

காலைச் சாப்பாட்டின் பின் என் இரண்டு காலும் தன்னிட்டவாரம் குதிரைமாலுக்குள் உள்ளிட்டது.வடந்தைக்காலத்து வீரியமற்ற சூரியனின்கிரணம் மாலின் சாளரக் கண்ணாடி ஊடாக சரிந்து விழுந்து உள்ளே வெளிச்சத்தைக் கூட்டத் தெண்டித்தது.குதிரைமாலுக்கே உரிய மூக்கடைக்கும் சூடான குதிரைச்சிணி அடித்தது.மருந்து கலந்து சேர்த்து வைத்த புல்லைப்பெருங்கண்ணி சிறுசிறு சீறல்களுடன் சாறு ஒழுக, தின்றது கருமன் தண்ணீர் வாளிக்குள் மூக்கை நுழைத்து சிந்தி அடித்தது. சாம்பன் வெளியிலே கோயிலுக்கு கதழ்வண்டியை இழுத்துப் போக ஆயத்தம். ஓடிப்போய் பொன்னுக்குட்டியின் தொட்டியைப் பார்த்தால்....,நெஞ்சு "திடுக்" என்றது.
"பொன்னுக்குட்டி அங்கினை இல்லையே? ஐயோ! அந்த வடிவான இளமஞ்சள் நிற முகம் எங்கை?" போக்காட்ட முடியாத ஒரு பயம் என்னுள் பரவியது. கொஞ்சம் தள்ளி மாலின் நடுவிலே..., அங்கே...., அங்கே..., நீட்டி விறைத்துப் போய்ப் பொன்னுக்குட்டி வெறும் நிலத்தில் விழுந்து கிடந்தது.சதிரம் விறைக்க விறைக்க ஆரோ குளிர் நீரை என்னுடைய மேலில் அள்ளி அள்ளி வார்த்தது போல் கிடந்தது.
"பொன்னுக்குட்டி" என் குரல் அடைத்தது.
"பொன்னுக்குட்டி! செல்லம்!"
பொன்னுக்குட்டி ஒரு மறுமொழியும் சொல்லவில்லை. தலையைத் தூக்கி என்னைப் பார்க்கவில்லை. ஒரு ஆட்டம் அசைவு இல்லாமல் கிடந்தது. எதுவுமே நடக்காதது போல் பெருங்கண்ணி தன்பாட்டில் புல்லைத் தின்னும் ஒலி கேட்டது. கருமன் பலமாகத் தரையில் காலூன்றுதலும் கேட்டது.

துக்கம் தாங்க ஏலாமல் குரையை வைத்துக்கொண்டு வீட்டினுள்ளே ஓடினேன். வாசல் நிலையருகே உதறின உதறலில் காலணி இரண்டும் ஒவ்வொரு திக்கில் பறந்தது.ஆரையும் பார்க்காமல், எதையும் கவனிக்காமல் "வதவத" என்று மெத்தைப் படியேறி எனது அறைக்குள் "பொத்" எனக் கட்டிலில் விழுந்தேன். அம்மா மெல்ல உள்ளே வந்தா. என் தலையை, முதுகைத் தடவினா.
"பொன்னுக்குட்டியைப் போய்ப் பார்த்தநீயோ அப்பன்?" எந்த வகையில் என்னை ஆறுதல் படுத்தலாம் என்று தெரியாமல் அம்மா என்னைக் கேட்டா. 
"பொன்னுக்குட்டி செத்திட்டுது அம்மா.அது இப்ப உசிரோடை இல்லை"
"ம். தெரியும். இரா முழுக்க சேடம் இழுத்துக் கொண்டு கிடந்திருக்கு. வெள்ளாப்பிலை ஒரு நாலு நாலேகால் அளவிலை போய்ச் சேர்ந்திட்டுது ஊலா வந்து எழுப்பினவர். அப்பா போய் குருசு நெத்தியிலை வைச்சுச் செபம் சொல்லி முடிக்கவும் எல்லாம் அடங்கிப் போச்சாம்." அம்மாவும் கலங்கிக் கலங்கிச்  சொல்லி முடித்தா.

கோயிலுக்குப் பூசைக்கு அன்று அப்பா மட்டுமே தானே கதழ் வண்டி ஓட்டிப் போனார். தம்பியைச் சாட்டி அம்மா போகவில்லை. நானிருந்த நிலைமையைக் கண்டு வா என்று கூப்பிட அப்பா உன்னவில்லை. பணியாளர்களும் ஒருத்தரும் போகவில்லை.எல்லாருக்கும் சரியான துக்கம். அப்பாவுக்கும்
அன்றைக்கு வீட்டோடு நிற்கத்தான் விருப்பமாய் இருந்திருக்கும். என்ன செய்வது?பாதிரியார் அவர் இல்லாமல் பூசை எப்படி நடக்கும்?

குதிரைமாலில் பணியாளர் எல்லோரும் வந்து கூடினர். இரண்டு பேர், மூன்று பேராகக் கூடிக் கூடி பொன்னுக்குட்டியின் வீரதீரங்களைப் பற்றிக் கதைத்தனர். இடையிடையே அமைதியும் நிலவியது. ஒருமாதிரித் தன் கண்ணீரைக்கட்டுப்படுத்தின அம்மா குதிரைமாலுக்குள் வந்தா.
பொன்னுக்குட்டியின்முகத்தை தடவினா.
"கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, பொன்னுக்குட்டி! எப்பவும் உன்னோடை அவர் இருப்பாராக. நீ எங்களுக்குக் காலத்தால் செய்த உதவிக்கு எல்லாம்; எங்களாலை ஒரு உபகாரமும்திருப்பிச் செய்ய ஏலாமல் போச்சே." என்று அமைதியான குரலில் அழுத்தமாகச் சொன்னா. கொஞ்ச நேரத்தில் பணியாளர் மெல்லக் கலைந்து போயினர். 

அங்கே ஏதுமே பறையாமல்,எதுவும்செய்யாமல் நின்றது ஊலா மட்டுமே. பொன்னுக்குட்டியின் வெறுமையான தொட்டியை , சாலையை, சுவரை,கூரையை மாறிமாறி வெறித்துப் பார்த்தார். அம்மாவுக்கு அவரின் மனநிலை விளங்கினது.
" நீ கொஞ்ச நேரம்  வெளியாலை வாவன் !ஊலா"வாசல் வரை வந்த அம்மா திரும்பிக் கேட்டா.
"என்னாலை இப்பிடியே விட்டிட்டு வரேலாமல் கிடக்கு" சடக்கென்று மறுமொழி வந்தது. பார்த்தால்...,அந்த மல்லாமலை போலிருக்கும் நடுத்தர வயதான ஆண்பிள்ளை;செருமிச் செருமி அழுதார். அம்மாவாலும் திருப்பி ஏதும் கதைக்க முடியவில்லை. அந்தச் செல்லப்பிராணியின் பிரிவை அம்மாவாலும் தாங்க முடியவில்லை.
அதுவும் அவவின் ஆசைமகனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் எல்லோ பொன்னுக்குட்டி தன் உயிரை பலி கொடுத்திருக்கிறது? நினைக்க,நினைக்க அம்மாவுக்குத் துக்கம் தொண்டையைஅடைத்தது . 
"உதுதான் நடக்க வேணும் எண்டு விதி ஊலா" ஊலாவின் தோளை அம்மா ஆறுதல் சொல்லித் தடவினா.
"ம். உதுதான் விதி" என்று திருப்பிச் சொன்னார் ஊலா. அம்மா போய்விட்டா. இப்போது மாலிலே பொன்னுக்குட்டியின் நெருங்கிய கூட்டாளிகளான நானும், ஊலாவும் மட்டுமே தனித்து நின்றோம். ஈரலிப்பான குதிரைமாலின் சாலையில் நான் முழங்காலில் அமர்ந்தேன். பொன்னுக்குட்டியின் தலையை தடவினேன்.
"என்ரை செல்லம்! செல்லப் பொன்னுக்குட்டி!" ஊலா என்னையும், பொன்னுக்குட்டியையும் பார்த்தபடி நின்றார்.


திடீரென கோயிலின் மணிக்கூட்டம் பலத்த சத்தமாக ஒலித்தது. என் சிறு பராயத்துக் கற்பனையிலே; பரமண்டலத்திலே கர்த்தரின் அருகே பொன்னுக்குட்டி வந்து விட்டது போலவும், அது வளர்ந்து வளர்ந்து வானவெளி முழுக்க நிறைந்ததுபோலவும், அதன் கழுத்துச் சலங்கையின் நாதத்தால் எட்டுத் திக்கும் நிரம்பியது போலவும் எனக்குப் பட்டது. ஆனால் அது மேட்டு(upper) இசுத்திரண்டால் மலையின் கோயில் கோபுரத்து உச்சியில் உள்ள மணிக்கூட்டம் எழுப்பும் சத்தம்;மனசிலே ஏக்கத்தைத் தீண்டி வைக்கும்  சத்தமே தான்.

   

                                                            (நிறையும்)


உள்ளிடுதல்- உள்ளேசெல்லுதல்
வெளிக்கிடுதல்- புறப்படுதல், தொடங்குதல்
கறுமம்>கருமம் >கன்மவினை>துன்பம்
பரிதவிப்பு-துயருறுதல்
பதகளிப்பு-பதற்றம்
உலுப்பு-குலுக்கு
பேச்சுவழக்கில்>கறும காண்டம் - கொடுமையான துன்பம் 
அகராதியில் >கருமகாண்டம்- முற்பிறப்புத் தீவினையால் உண்டாகும் 
நோய்களையும்,தீர்வுகளையும் கூறும் நூல் 
பொறுத்த-கடுமையான
பங்கை-அங்கே
சடுதிமுட்டு-உடனடி
மேல்- உடல்
சதிரம்>சரீரம் ,உடல்
உளைவு-வலி
துப்புரவுக்கு-துப்புரவாக-சுத்தமாக
அயர்த்துப் போதல்-மறந்து போதல்
இஞ்சாலையோ அங்காலையோ- இங்கேயோ அங்கேயோ
இழுத்துப் பறிச்சுக் கொண்டு-ஊசலாடிக் கொண்டு
கிடக்கேக்கை<கிடக்கை +இல் (க்)+ஏ<கிடக்கையில்க்கே<கிடக்கையிலே 
மைக்கா நாள் -மறுநாள்
கை பறிஞ்சு போதல்-கை மீறிப் போதல்
திறமான தாள்-தரமான காகிதம்
பினைதல்-பிசைதல்
ஆற்றேலாமல்- (மனதை)ஆற்ற +ஏலாமல் 
சொல்லீட்டன்= சொல்லி+இட்டேன் -சொல்லி வைத்தேன் -சொல்லிவிட்டேன்
உபாதி-வேதனை
உத்தரித்தல் -வேதனை படுதல்
சத்தம் சலார்- சந்தடி,இரைச்சல்
தன்னிட்டவாரம்=தன்+இட்ட+வாரம்
>தான் விரும்பிய விருப்பம்(படி) >தன்னிச்சையாக 
தொட்டி-stall
போக்காட்ட> போக்கு+ஆட்ட>போக்கு+துரத்த >போக்கித் துரத்த-அகற்ற
குரையை வைத்தல்-ஒலியை வைத்தல்,கதறி அழுதல்
சேடம்-சாகும் தறுவாயில் வரும் சுவாச இழுப்பு
உன்னவில்லை- நினைக்கவில்லை
சாலை-தரை 
மல்லாமலை> மள்ளா+மலை >மள்கா(த)+ மலை>
குறையாத மலை>அசையாத மலை  
தீண்டி- தொட்டு 
          

                                                                        
This entry was posted on 9:33 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On April 21, 2011 at 2:11 AM , போளூர் தயாநிதி said...

உங்களின் நீண்ட சிறுகதை படிக்க அவளை தூண்டுவதாக உள்ளது ஆனால் நேரம் இன்மை எம்மை நெறிப்படுத்துகிறது . மீண்டும் வந்து எல்லாவற்றையும் விரிவாக படிக்கிறேன் . உளம் கனிந்த பாராட்டுகள் .

 
On April 22, 2011 at 3:22 AM , மணிமேகலா said...

குணபாலன் அவர்களே! 2 விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

1.உங்களிடம் இருக்கின்ற மொழிப்புலமை.ஈழத்தமிழரின் புலப் பெயர்வின் பின் ஈழத் தமிழ் எழுத்துலகில் வந்த மாற்றங்களுக்குள் முதன்மையானது புதியதொரு புலம்பெயர் சமூக உருவாக்கம், புதிய தமிழ் சொற்களின் பாவனை,சமூக மாற்றுச் சிந்தனைகள்,மற்றும் கதைக் களம்.-உங்களிடம் இருக்கின்ற மொழிப் புலமையினால் அங்கிருக்கும் இலக்கிய உற்பத்திகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் அதே வேளை அந் நாட்டு மொழியில் நம் கருவூலங்களையும் அறிமுகப் படுத்தலாம். அது சர்வதேச தரத்துக்கு தமிழை; சமூக வாழ்வை அதன் தாற்பரியங்களை உயர்த்தி வைக்கும்.நம்மை யார் என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்தும்.(கலாசார பண்பாட்டு பரிவர்த்தனை)

2. நாம் அறிகின்ற புதிய மொழிகளில் இருக்கின்ற இலக்கிய வளங்களை தமிழுக்கு அறிமுகப் படுத்துவது. உதாரணமாக பிரித்தானியரால் நாம் சிறுகதை வடிவத்தைப் பெற்றது மாதிரி, யப்பானிடம் இருந்து ஹைக்கூவைப் பெற்றது மாதிரி புதிய அந் நாட்டு மொழிகளுக்கு மட்டுமாக இருக்கும் சிறப்பான இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப் படுத்துவது.

புலம் பெயர்ந்த அநேகர் (அதிலும் இரு மொழிப் புலமையோடு கலைஞர்கள் மிகக் குறைவு)புலம் பெயர் இலக்கியத்தில் பல பிரிவின் வேதனையைப் பதிவதிலும் தம்மை நிலைப் படுத்துவதிலுமாகக் காலம் கடந்து போய் விட்டது. இனி நாம் இப்படியான விடயங்களிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

உங்களைப் போன்றவர்களால் அது முடியும்.

ஈழத்து முற்றம் அதற்கொரு சிறந்த களாமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

உங்களிடம் இருந்து இப்படி ஏதாலும் ஒன்றை எதிர்பார்க்கலாமா?

(கதைக்கான பின்னூட்டம் தனியாக வருகிறது)

 
On April 22, 2011 at 3:40 AM , மணிமேகலா said...

களம் புதிது,கதா பாத்திரங்கள் புதிது,சொல்லாடல் புதிது.- தமிழுக்கு புதியதான ஓரறிமுகம்.

மொழிபெயர்ப்பில் உங்களுக்கான தனித்துவமும் யாழ்ப்பாணத் தமிழ் வாசமும் இருக்கிறது.

எந்த இடத்திலும் முறிந்து போகாத லாவக ஓட்டமும் கதையை அழகாக நகர்த்திச் செல்கிறது.

கதை ஆழமான ஒரு கருவை மையப் படுத்தி இருக்கிறது. பிரபஞ்சத்தின் அவிழ்க்க முடியாத ஒரு ரகசியத்தின் முடிச்சு அது.

அதே நேரம் சகல ஜீவராசிகளுக்குமான மொழி அன்பு என்பதையும் அதன் பலத்தையும் கதை அழகாகச் சொல்லிச் செல்கிறது.

குறிப்பாகப் படங்களுக்கும் பாராட்ட வேண்டும்.

புதியதொரு அறிமுகம் ஈழத்து மண்ணுக்கு!

தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

 
On April 22, 2011 at 5:58 AM , ந.குணபாலன் said...

உங்கடை ஊக்கம் தாற கருத்துக்களுக்கு ஆயிரம் நன்றி. நான் வாசிச்ச நோர்வே மொழி பொத்தகங்களில் என்ரை மனசிலை பதிஞ்ச கதைகளிலை இது ஒண்டு. இதை எங்கடை பேச்சுவழக்கிலை எழுத விரும்பினன்.

தன்பாட்டிலை நாங்கள் புழங்கிற பல சொல்லுகள் , சுத்தமான தமிழ்ச் சொல்லுகள் வழுவோடை இருக்கு. உதாரணமாக மல்லாமலை.

அகரமுதலியை(அகராதி) ஆராய்ஞ்சு பார்த்தால்

மல்குதல் -நிறைதல்,செழித்தல்,அதிகமாகுதல்.

மல்லல் -மிகுதி,வளம்,வலிமை,பொலிவு,அழகு,செல்வம்,

அப்பிடி எண்டால் மல்லா> மல்லா(த )> வளமில்லாத,வலிமையில்லாத ... எண்டு வருமே?

மள்குதல் - குறைதல்... அப்பிடிப் பார்த்தால்

மள்காத>மள்ளா- குறையாத

மள்கா>மள்ளா >மல்லா எண்டு மாறியிருக்கும்

மல்லாமலை- குறையாத மலை, தேய்ந்து குறுகாத மலை, அசையாத மலை

எண்டு வரக்கூடும் .இது என்ரை கருத்து.

பா-plate இதை ஒருநேரம் ஒருவீட்டிலை சொல்லக் கேட்டனான். வயசான படிப்பு குறைஞ்ச(ஆ??)

சனங்கள் இந்தச் சொல்லைப் பாவிச்சினம். படிச்ச நாங்கள் எண்டால் plate எண்டுவம் hood எண்டுவம்.அகரமுதலியிலும் பா எண்டதுக்கு ஏத்தபடி

பரப்பு எண்டு ஒரு கருத்து இருக்கு. இப்பிடி கனக்க நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் இருக்கு. பழசுகளின்ரை கிழட்டுக் கதை,கொச்சைக் கதை எண்டு எடுத்தெறியாமல் ஆராய வேணும்,பாவிக்க வேணும் இது என்ரை ஆசை.

 
On April 23, 2011 at 4:59 AM , மணிமேகலா said...

’காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை ...’என்ற தேவாரத்தில் மல்கி என்பது நீங்கள் சொன்னது மாதிரி நிறைந்து என்ற அர்த்தத்திலேயே பாவனையில் இருந்திருக்கிறது.(கி.பி.6ம் நூற்றாண்டு தேவாரத்திருப்பதிகத் தமிழ்)

திருப்பாவையும் திருவெம்பாவையும் இன்னுமொரு அழகு தமிழைச் சொல்லும்.- அவை பாரதத்தமிழ்.

’பா’ என்ற சொல் இன்னும் நம்மிடையே பாவனையில் இருக்கும் சொல் தான். என் பெற்றார் அதைப் பாவிக்கக் கேட்டிருக்கிறேன்.’பாவில ஏறி எக்கணம் விழப் போயாய்’என்று சொன்ன ஞாபகம்.(எக்கணம் என்பது இக்கணம் என்பதன் மருவு ஆக இருக்கலாம்.)

இன்னும் எத்தனியோ அழகு சொற்கள் உண்டு.

உங்கள் தமிழுக்கு தமிழ் விளக்கம் பார்த்த பின் தமிழை இன்னும் உன்னிப்பாய் கவனிக்கத் தோன்றுகிறது.